Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மரணம்" என்றால் உண்மையில் என்ன?" / பகுதி : 01
 
 
"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா"
[பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்]
 
மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பி வராத இடம் ஒன்றிற்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத மனவேதனையை அளிக்கிறது.
 
ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி,
ஏழையாக இருந்தாலும் சரி,
ஆணாக இருந்தாலும் சரி,
பெண்ணாக இருந்தாலும் சரி,
அழகாக இருந்தாலும் சரி,
அழகற்றவனாக இருந்தாலும் சரி
 
- அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி. ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விடயம் [சம்பவம்]. ஆனால் யாரும் அதிலிருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது.
 
உணர்வு பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் நாம் ஒரு நாள் இறப்போம் என எமக்கு தெரிந்திருந்தாலும், பொதுவாக நாம் எமது மரணத்தைப் பற்றி சிந்திப்பதில் எந்த ஆர்வமற்றும் மனமின்றியும், எதோ நாம் இந்த உலகில் சதாகாலமும் வாழ்வோம் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் ஆன்மீக விழுமியங்களை விட பொருள் உடைமையிலும், புகழிலும், மக்கள் செல்வாக்கிலும் உடல் ஆறுதலை தரும் புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சியிலும் நாம் திளைக்க - அதற்கு தலையாய முக்கியம் கொடுத்து - எமது நேரத்தையும் சக்தியையும் அதை அடைவதற்காக செலவழிக்கிறோம்.
 
எனக்கு, எனது இருப்புக்கு என்ன நடக்கும் என்ற பயமும் அல்லது இடர்கள் துன்பங்கள் தாண்டி தப்பி பிழைத்து தொடர்ந்து வாழ்வோமா என்ற பயமும் தான் இயற்கையை பார்த்து மனிதன் பயந்ததற்கும், கடவுள் என்ற ஒன்று தோன்றியதற்கும் காரணமாய் இருக்க முடியும்.
 
மரணத்தைப்பற்றி ஆழமாக அலசும் பொழுது ஒரு முக்கிய கேள்வி முதலில் எமக்கு பிறக்கிறது. அதாவது "ஏன் உயிர்கள் முதற்கண் மரணமடைகின்றன?"
 
எமது அனுபவத்திலும் எமது அறிவியலிலும் இருந்தும் நாம் தெரிந்து கொண்டது, என்னவென்றால், பல இறப்புக்கள் உண்மையில் தடுக்கக் கூடியவை. ஆனால் அப்படி தடுப்பதற்கு, முதலில் மக்கள் ஏன் இறந்தார்கள் / இறக்கிறார்கள் என்பதற்கான நடைமுறைகளை அல்லது காரணங்களை நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எனவே நோய், அடி முதலானவற்றால் உண்டாகும் காயம், மனித உடலின் வளர்ச்சி மற்றும் முதுமை போன்றவற்றினை நாம் விரிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
 
ஜெபம், பிரார்த்தனைகள் யார் செய்தாலும் மரணத்தைத் தடுக்க முடியாது. என்றாலும் இறுதியில், அனைவரும் இறந்து விடுகிறார்கள் என்பதே உண்மை !
 
பைபிள் இதற்கு சுருக்கமாக ஒரு விடையை தருகிறது. அதாவது, கடவுளின் "நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்"
[ஆதியாகமம் 2:17]
 
என்று கட்டளையை, நம்முடைய முன்னோர்களும் முதல் மனிதர்களுமான ஆதாமும் ஏவாளும். தெரிந்தும் கீழ்படியாமற் போனபடியால் அவர்கள் கடவுளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்கள். அதுமாத்திரமல்ல, ஆதாமும் ஏவாளும் தம் பாவ இயல்பை நமக்கும் தந்துவிட்டார்கள். இப்படியாக, ஓரே மனிதனால் பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே வந்தது போல, எல்லா மனிதர்களும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று. என்று ரோமர் 5:12 குறிப்பிடுகிறது.
 
குறிப்பாக “எல்லாருக்கும்” என்ற வார்த்தை மூலம் நாம் எல்லோரும் பாவிகள் நாம் அனைவரும் ஓருநாள் மரிக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகிறது. மேலும் "நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்ட படியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" என ஆதியாகமம் 3:19 கூறுவதையும் கவனத்தில் கொள்க.
 
ஒரு வாதத்துக்கு, நாம் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினராக இருப்பதால், அவர்களின் தலைவிதியில் நாங்கள் பங்கு கொள்ளலாம். அதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஏன் விலங்குகள், பறவைகள் இறக்க வேண்டும்? அவைகளின் சந்ததியினர் அறிவின் மரத்திலிருந்து சாப்பிட்டார்களா ? என்னை இது குழப்புகிறது ? உங்களுக்கு எப்படி ?
 
உண்மையாகவே, மரணம் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது. காலகாலமாக ஒவ்வொரு முக்கிய சமயங்களும் தத்துவங்களும், ஆன்மீக கருத்துகளும், இந்த மர்மத்தை கண்டு பிடிக்க முயன்றன. ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு, முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இணைத்த ஒன்று இதுவாகும். இங்கு பணக்காரனோ ஏழையோ, ஒரே மாதிரியான முடிவை மரணத்தில் அடைகிறார்கள். கருப்பனோ வெள்ளையனோ, இருவரும் எந்த வேறு பாடும் இன்றி பிணக்குழிக்குள் போகிறார்கள். பெருஞ் செல்வாக்கும் சக்திமிக்கவர்களும், எளிய அடக்க முள்ளவர்களும் இந்த உலகத்தை விட்டே கடைசியில் போகிறார்கள்.
 
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"
[குறள்: 339]
 
இந்த நிலையற்ற வாழ்க்கையில், உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு [சாக்காடு-இறப்பு]. இந்த கருத்தை வலியுறுத்தும் பாடல்களை நாலடியார், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்றவற்றிலும் நாம் பார்க்கலாம்.
 
"இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு."
[நாலடியார் 302]
 
நொடிப் பொழுதில் மாய்தற்குரிய இப்பிறவியின் பொருட்டு மானக் குறைவான இரத்தல் செயலைச் செய்து உயிர் பிழைத்தல் ஆகாது என்கிறது. இங்கும் “விழித்திமைக்கும் மாத்திரையன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு” என்கிறது நாலடியார்.
 
"பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்".
[ஆதிரை பிச்சை இட்ட காதை: 84-90 / மணிமேகலை]
 
இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்றும் கூறுகிறது. இங்கும் “பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது” என்கிறது மணிமேகலை. மேலும் சுந்தரர் தேவாரம், “உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி” என்கிறது.
 
உண்மையில் இறப்பு என்றால் என்ன?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 "மரணம்" என்றால் உண்மையில் என்ன?" தொடரும்
334122248_718505229924581_1954629643860354597_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jpaPTkfIxgIQ7kNvgFWYDpn&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Aw45Dru68lfjzp6rcJS-TbR&oh=00_AYBZBkdrOHHc8VcoAh0T9jhzI4Tw7lw1sMcBHXpCONlBkQ&oe=67169904 333880716_162259952901655_8479393810369673427_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ksT_PWx50L4Q7kNvgF5zwi0&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=Aw45Dru68lfjzp6rcJS-TbR&oh=00_AYDAXKIWT5xW7E5PJzztx0XCW5SpgUQQSvpscn1Ykj87cg&oe=6716B2BC 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"மரணம் என்றால் உண்மையில் என்ன?" / பகுதி : 02
 
 
மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளைவிப்பது. மனிதன் மறக்க விரும்புவது, ஆனால் அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது. பிறந்த கணத்திலிருந்து பயணம் அதை நோக்கித்தான் நகர்கிறது. எதிர்காலத்தில், அடுத்த வினாடியில் எதுவெல்லாம் நடக்க வேண்டும் மென்று ஆசைப் படுகிறோமோ, திட்டமிடுகிறோமோ, உழைக்கிறோமோ, அவையெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். ஆனால் நம்மைக் கேட்காமலேயே நமக்கு நிச்சயமாக நடக்கப்போவது மரணம் மட்டுமே! அது மட்டுமல்ல, அது எப்போது வரும், எப்படி வரும் என்பது கூட நமது அறிவிற்கு எட்டாததாகவே எப்போதும் இருக்கிறது.
 
2000 ஆம் ஆண்டில் புட்டபர்த்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்துக் கொள்ளும் சாய்பாபா, "நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று உறுதிபட ஆருடம் கூறினார். அதன் பின் பலமுறை அவர் ஆருடம் கூறி வந்துள்ளார். ஆயினும் அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே பல வார காலம் கடும் நோய்வாய்பட்டு, தீவிர சிகிச்சை பலனளிக்காமல், ஏப்ரல் 24 , 2011 இயற்கை எய்தினார். கடவுள் அவதாரம் எடுத்தவருக்கே தன் 'இறப்பு' அல்லது அவர் பாணியில் 'அவதாரத்தை முடித்துக் கொள்ளும் நாள்' தெரியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடவுளின் அவதாரம் என சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிய அவர் ஏன் இந்த உலகை விட்டு மறையப்போகிறோம் என்பதை முன் கூட்டியே சரியாக கூற முடியவில்லை? மற்றும் வேடிக்கை என்னவென்றால், அவரது கை பட்டு மற்றவரின் நோய் தீர்க்க தெரிந்த அவருக்கு அவரது உடல்நலம் பேண நவீன மருத்துவ வசதி தான் வேண்டியிருந்தது என்பதே ? எனவே, உண்மையில் இறப்பு என்றால் என்ன?
 
மூச்சு நிற்பது இறப்பா ? இல்லை, இதயத் துடிப்பு நிற்பது இறப்பா ? இல்லை, மூளை சிந்திக்காமல் நிற்பது இறப்பா ? இல்லை, இரத்த ஓட்டம் நிற்பது இறப்பா ? இல்லை, மேற்கூறியவற்றில் ஏதாவது, ஒன்றுக்கு மேற்பட்டவை நிற்பது இறப்பா ? அல்லது எல்லாமே நிற்பது இறப்பா ? இல்லை, இவற்றை விட வேறு பல காரணங்கள் இருக்கின்றனவா? பொதுவாக இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை, சாதாரண மக்களாகிய‌ நாம், மரண‌‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?
 
மருத்துவ அறிவியலின் படி, மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போவதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம். மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள். அதை நாம் "மருத்துவச் சாவு" (Cardiac death / Clinical death) என்றும், "மூளைச் சாவு"(brain death / Cerebral death) என்றும் குறிப்பிடுகின்றோம்.
 
மருத்துவச் சாவுக்கும் [கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த்] மூளைச் சாவுக்கும் [செ‌ரிபர‌ல் டெ‌த்] உள்ள வித்தியாசம் மிக மிக சிறிதே. உண்மையில், ஒரு சில முக்கியமான, தீர்மானிக்கிற நிமிடங்களே இவை இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் ஆகும். மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும். அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன. இதயம் நின்று போய்விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இக் கால வரம்பிற்குப் பிறகு, ஆக்ஸிஜன் [பிராணவாயு] பற்றாக் குறையால் மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுகிறது. இதையே மூளைச் சாவு என்கிறோம். மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது. இ‌ப்போது தா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது. எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.
 
சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் 30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் சராசரியாக 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மூப்படைதல் ஒரு உயிர் வேதியியல் செயன்முறையாகும் [biochemical process].அதனால் மனிதன் அதனை குறுக்கிடு செய்து எப்படி அதை இன்னும் தாமதமாக்கலாம் என்பதை வருங்காலத்தில் அறிவான் என நாம் நம்பலாம்.
 
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் [Encyclopedia Britannica] முதல் பதிப்பில் இறப்பு என்பது "உயர் உடலில் இருந்து பிரிவது" என சமய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மனித உடலைப் பற்றிய எமது இன்றைய மேலதிக அறிவால், பதினைந்து பதிப்பின் பின், அது முப்பது தடவை நீளமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளி அடையாளங்களான மூச்சு விடுதல், இதய துடிப்பு போன்றவை நின்றாலும் அல்லது இல்லாமல் போனாலும், இன்னும் அந்த நபர் சாகாமல் இருபதற்கு சந்தர்ப்பம் உண்டு என இப்ப மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள். செயற்கை இதயம் [mechanical heart], சுவாசிபதற்கான கருவி [breathing aids] மற்றும் நரம்பு வழி உணவு செலுத்துதல் [intravenous feedings] போன்றவற்றால், மருத்துவர் ஒருவர் நோயாளியை, அவர் ஆழமான எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்க நிலையில் [deep coma] இருந்தாலும், அவரை பல மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ உயிர் உடன் வைத்திருக்க முடியும் என்பதால். இன்று, இறப்பு என்ற சொல்லின் சொற்பொருள் விளக்கத்திற்கு மேலும் சில சேர்க்க வேண்டி உள்ளன. எனவே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மரணம் என்பதற்கு எம்மால் ஒரு விளக்கம் கட்டாயம் இன்று கொடுக்க முடியும். ஆனால், உண்மையான கேள்வி என்னவென்றால், இறந்த பின் எமக்கு என்ன நடக்கிறது? மற்றும் எம்மை விட்டு பிரிந்த அன்பு உயிர்களை, நாம் மீண்டும் காண, சந்திக்க முடியுமா? உதாரணமாக, ஆன்மீக நூலான பகவத் கீதை என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.
 
 
देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥
dehino ’smin yathā dehe kaumāraṁ yauvanaṁ jarā
tathā dehāntara-prāptir dhīras tatra na muhyati
 
"ஆத்மாவிற்கு இவ்வுடலில் எங்ஙனம் குழந்தைப் பருவமும், இளமை பருவமும், முதுமை பருவமும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே, ஆத்மாவிற்கு மற்றொரு உடல் பிறப்பும் இந்த உடல் இறந்த பின் தோன்றுகிறது. எனவே, தீரன் [வீரன்] அதில் கலங்கமாட்டான்" என்று பகவத் கீதை 2.13 அறிவுரை கூறுகிறது. அதாவது, உடல் எப்படி மாறி மாறி வந்தாலும், இந்த மூன்று நிலைகளிலும் எவ்விதம் ஆத்மா மாறாததாக உள்ளதோ, அவ்விதமே உடல் மரணித்து வேறு உடல் கிடைக்கும் போதும் அது எவ்வித மாற்றாத்தையும் அடைவதில்லை என்கிறது.
 
 
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥
jātasya hi dhruvo mṛityur dhruvaṁ janma mṛitasya cha
tasmād aparihārye ’rthe na tvaṁ śhochitum arhasi
 
"பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரண மடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது." என்று பகவத் கீதை 2.27 மீண்டும் அறிவுரை கூறுகிறது. ஆகவே, இறப்பு ஒரு துக்கம் தரும் நிகழ்வு அல்ல. இது எமது இந்த உடலின் பயணத்தின் முடிவு ஆகும். இது ஒரு மாயை, அவ்வளவுதான்.
 
பொதுவாக, மரணத்தில் இருந்து எவருமே தப்ப முடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுப்பதுடன், ஆனால் மற்றவர்களுக்கு: "ஏன், எதற்கு மரணம் இருக்கிறது?", "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?", "எல்லா உயிர்களும் இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன் ஆச்சரியமடைய வைக்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
334800104_591361619279935_513150199171212526_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=SZW_Yasju-wQ7kNvgEmZ-0b&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AcZopqsk3BcSJ2UFSQ77Xb4&oh=00_AYCvLVphEm-LtsspyU-rJ91Crfgl-WQLvxBf4aOCE91AvQ&oe=67195218 334642729_652173683578341_6925593930076573534_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=iMolxXyrXVcQ7kNvgErCqad&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AcZopqsk3BcSJ2UFSQ77Xb4&oh=00_AYBsbpzxz4aDTrtJSC-mTUtFAoXvrhkttyPIK2ugtYPApg&oe=671959DA
 
 
  • நியானி changed the title to "மரணம்" என்றால் உண்மையில் என்ன?"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.