Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தி  கூறிய மாற்றங்கள் சரிவருமா?; சறுக்குமா?

கந்தையா அருந்தவபாலன்

முன்னைய ஆட்சியாளர்களின் பலவீனங்களை மூலதனமாக்கி மாற்றங்களைத் தருவோம் என்ற நம்பிக்கையை மக்களிடத்து விதைத்து ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியினர் தாங்கள் கூறியதைப் போல மாற்றங்களை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை அவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனையுந்தாண்டி அவர்கள் கூறியவாறு மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தாலும் பிரச்சினை. முனையாவிட்டாலும் பிரச்சினை. ஏனெனில் மாற்றத்துக்காக தங்களால் கொண்டுவரப்பட்டவர்களால் மாற்றமேற்படுத்தப்படாதவிடத்து அவர்களை மாற்றுவதற்கும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்கவை நாட்டு மக்கள் தெரிவுசெய்து இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகிறது. இந்த ஒருமாதகால இடைவெளியில் அதுவும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அதற்கான தேர்தலுக்கும் நாட் குறிக்கப்பட்டு, ஜனாதிபதியையும் உள்ளடக்கிய மூன்று பேரை மட்டும் கொண்ட ஒரு காபந்து அமைச்சரவையையும்  கொண்டு புதிய ஜனாதிபதியினால் பெரிதாக  எதையும் செய்வது கடினம். எனினும் புதிய அரசாங்கத்தின் சில முன்மாதிரியான செயற்பாடுகள், நிவாரணங்கள், அறிவிப்புகள் நம்பிக்கை தருவனவாக இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்களை எவ்வளவுதூரம் இவ்வரசாங்கம் வழங்கும் என்பதில் நிச்சயமற்ற ஒரு நிலை இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளான ஊழல்கள், அதிகார முறைகேடுகள், ஈஸ்டர் குண்டு வெடிப்பு உட்பட சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விசாரணைகள், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மற்றும் மன்னார் காற்றாலை உட்பட வெளிநாட்டு முலீடுகளை மறுபரிசீலனை செய்தல், அரச செலவுகளை மட்டுப்படுத்தல், அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவதை நிறுத்துதல்,வாழ்க்கைச் செலவுக் குறைப்பு உட்பட்ட  மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குதல், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக மக்கள் எதிர்பார்க்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பதில் தெளிவற்ற ஒரு நிலையே தென்படுகிறது. இதற்கு  நாடாளுமன்றத் தேர்தல் ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் அதற்குப் பின்னர்கூட சாத்தியப்படுமா என்பது கேள்விக்குரியதொன்றாகவே தென்படுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 115 -120 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நாடாளுமன்றத்தின் அறுதிப் பெரும்பான்மைக்குப் போதியதாகும். தேர்தலின் பின் வேறு சில கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்தோ அல்லது வெளியிலிருந்தோ ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்தவகையில் சட்டவாக்க அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் வந்தாலும்கூட சில முக்கிய விடயங்களில் அரசாங்கம் எதிர்பார்ப்பதுபோல இலகுவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான களநிலைமைகள் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

முக்கியமாக அரசு செலவுகளைக் கட்டுப்படுத்துதல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அடிப்படையானதொன்றாகும். இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? தேசிய மக்கள் சக்தியினர் கூறுவது போல அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமோ, ஜனாதிபதியின் வாகனங்களை குறைப்பதன் மூலமோ, அரசியல்வாதிகளின் பாதுகாப்புப் பணியாளரைக் குறைப்பதன் மூலமோ, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களைக் குறைப்பதன் மூலமோ சாத்தியப்படக்கூடியதொன்றல்ல. இவை நல்ல விடயங்கள் என்றாலும் ஜனரஞ்சக அரசியலுக்கு பெரிதும் உதவலாமேயொழிய அரச செலவைக் குறைப்பதற்கு யானைப் பசிக்கு சோளப்பொரி போலவே இருக்கும்.

இலங்கையின் வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2021 இல் அதியுச்சமாக 11.7 ஆக இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின்கீழ், ரணில் ஆட்சிக்காலத்தில் வரியதிகரிப்பு, அடிப்படை நுகர்வுப்பொருட்களான எரிபொருட்கள், மின்சாரம் போன்றவற்றின் விலையதிகரிப்பு, அரச மானியங்களில் குறைப்பு போன்ற பல்வேறு கடினமான சீர்திருத்தங்களின் மூலம் அப்பற்றாக்குறை 2023 இல் 8.3 வீதமாக குறைக்கப்பட்டது. எனினும் இப்பற்றாக்குறையினளவை 6% -7% க்குக் குறைக்கவேண்டுமென்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை. இது சாத்தியமா? இதுவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளும்  ஒன்றுக்கொன்று முரணானவை. அது வழங்கிய வாக்குறுதிகளில் மக்களுக்கான  வரிக்குறைப்பும் மானியங்களும் முக்கியமானவை. ஆனால் இவை அரச வருமானத்தைக் குறைத்து செலவைக்கூட்டுமாகையால் வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும்.

ஏலவே அரசாங்கம் உரமானியத்தை 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், ஓய்வூதியர்க்கான மேலதிக கொடுப்பனவாக 3000 ரூபாவையும் வழங்கத் தொடங்கியுள்ளது. இதுகூட நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் கூறியது போல வரி மறுசீரமைப்பு உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீளாய்வு செய்வது தொடர்பாக எந்தவொரு முயற்சியும் அரசாங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொண்டாலுங்கூட அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தின் பிரயோக வழிமுறைகளில் மாற்றத்துக்கு இணங்கினாலும் கடனுடன் இணைக்கப்பட்ட இலங்கை தொடர்பான அதன் அடிப்படை இலக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்த ஒருபோதும் இணங்காது.

அதேவேளை அந்நிதியத்தின் உதவியைப் புறந்தள்ளி இன்றைய நிலையில் ஆட்சியைத் தக்கவைப்பதும் கடினம். இதனைக்கருத்திற் கொண்டே  சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது இலங்கைக்கு அவசியமானதொன்று என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அண்மையில் கூறியிருந்தார்.

இதனை உறுதிப்படுத்துவதுபோல தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் சிலரது கூற்றுக்கள் அமைந்துள்ளன. அண்மையில் ஜே.வி.பி கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில், “ மக்கள் முறைமை மாற்றத்தை எதிர்பார்த்தனரேயன்றி விலைக் குறைப்பை எதிர்பார்க்கவில்லை” என்று கூறியிருந்தார். அதேபோல அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், ரணில் தலைமையிலான முன்னைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிலிருந்தான அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்ச்சி பற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு, அமைச்சர் விஜித ஹேரத் பதிலளிக்கையில், அது நிதியமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றின் அனுமதி பெறாத அமைச்சரவைத் தீர்மானம் எனவும் அதனால் அவ்வாறு வழங்குவது சாத்தியமற்றதொன்று எனவும் கூறியிருந்தார். இதுதான் இலங்கையின் இன்றைய யதார்த்த நிலைமை. ரில்வின் சில்வா கூறுவதுபோல மக்கள் விலைக்குறைப்பை எதிர்பார்க்கவில்லை என்பதோ அல்லது சம்பள அதிகரிப்பை விரும்பவில்லை என்பதோ யதார்த்தமன்று. உண்மையில் மக்கள் விரும்பிய முறைமை மாற்றத்துக்கான அடிப்படையே அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் வாழ்கைத்தரம் வீழ்ச்சியுமாகும். தங்களுக்கு வளமான வாழ்கையொன்றை அமைப்பதற்குத் தேவையான பொருளாதார,சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் வல்லமையை தற்போதைய அரச கட்டமைப்பும் அதனை வழிநடத்திய முன்னைய ஆட்சியாளரும் கொண்டிருக்கவில்லை என்பதற்காகவே மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களேயன்றி வெறுமனே தலைவர்களை மாற்றுவதற்காகவல்ல.

முன்னைய ஆட்சியாளர்மீது தேசிய மக்கள் சக்தியினர் வைத்த பிரதான குற்றச்சாட்டுகளிலொன்று அரசபடு கடன் பற்றியதாகும். அதாவது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் அளவுக்கதிமாக உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களை பெற்றமையும் ஒரு பிரதான காரணி என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அது உண்மையுங்கூட. ஆனாலும்  ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை முற்றாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தியினர் பின்னர் தேர்தல் வெற்றிக்காக அந்நிதியத்துடனான உடன்படிக்கை தொடரும் என்றும் ஆனால் மக்களைப் பாதிக்கும் நிபந்தனைகளை மீளாய்வு செய்வோம் என்று சமரசம் கண்டனர். இவ்வாறு அரச படுகடனை விமர்சித்த புதிய ஆட்சியாளரின் இன்றைய நிலை என்ன?

இம்மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையிலான 13 நாட்கள் காலப்பகுதியில் அரசாங்கம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் 419 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிரத்ன ஆதாரங்களுடன் குற்றஞ் சுமத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்படி ஒரு மணித்தியாலத்துக்கு 1.34 பில்லியன் ரூபா கடனசுமை நாட்டு மக்களின் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள ஜனாதிபதியின் பொருளாதார, நிதிக்கான மூத்த ஆலோசகர் அனில் ஜயந்த, அரசாங்கம் புதிய கடன் எதையும் பெறவில்லை என்றும் அமைச்சுகளுக்கான செலவுக்கும் முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்களுக்கான கொடுப்பனவுக்குமான வழமையான நிதிச்சேகரிப்பே அது என்றும் வியாக்கியானம் செய்துள்ளார். அரச நிதிக்கருவூலத்தைப் பொறுத்தமட்டில் வட்டியுடனோ அல்லது வட்டியின்றியோ திருப்பிச் செலுத்த வேண்டிய அனைத்துப் பெறுகைகளும் கடனாகவே கொள்ளப்படும்.

அந்தவகையில் அரசு திரட்டும் வரிமூலமான வருமானங்கள், வரி தவிர்ந்த ஏனைய வருமானங்கள், திருப்பிச் செலுத்தவேண்டிய தேவையற்ற உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடைகள் தவிர்ந்த அனைத்துப் பெறுகைகளும் கடன்களாகும். குறித்த ஆலோசகர் கூறுவதுபோல அது வழமையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது கடனல்ல எனக் கூற முடியாது. அதுவுமன்றி வழமையை மாற்றுவதுதானே மாற்றம்.

தேசிய மக்கள் சக்தியினரால் முன்வைக்கப்பட்ட இன்னொரு குற்றச்சாட்டு முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல்கள் பற்றியது. ஊழல்களை அம்பலப்படுத்துவோம். ஊழல்வாதிகளைச் சிறையிலடைப்போம். வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை மீட்டெடுப்போம் போன்றவை புதிய ஆட்சியாளரின் முன்னைய வாக்குறுதிகள். தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து முடிந்தால் நிரூபியுங்கள் என நாமல் ராஜபக்‌ஷ சவால் விடுத்துள்ளபோதும் இதற்கான காத்திரமான முன்னெடுப்புகள் எவையும் இதுவரை புதிய அரசினால் மேற்கொண்டதாகச் செய்திகள் இல்லை. இனிவரும் புதிய அமைச்சர்கள் ஊழல் செய்யாதவராக இருக்கக்கூடும் என்றாலும் அதற்கான உத்தரவாதத்தைக்கூட அனுரவால் வழங்க முடியாதிருக்கும். எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்கும் என்பதை எதிர்காலந்தான் தீர்மானிக்கும்.

இதற்கு நல்ல உதாரணம் பல்வேறு ஊழல்களுக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட விமல் வீரவங்சவும் ஒருகாலத்தில் ஜே.வி.பி.யின் உயர்மட்ட உறுப்பினராக இருந்த ஒருவர் என்பது. இதற்கு மேலாக அரச துறைகளில் புரையோடிப் போய்விட்ட இலஞ்சம், ஊழல் என்பவற்றை இலகுவில் அகற்றிவிட முடியாது.

தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான இன்னொரு வாக்குறுதி சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும்  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை நீதிமன்றில் நிறுத்துவது என்பது.  இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என காவல்துறை மா அதிபர் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அது உண்மையில் முடுக்கிவிடப்பட்டுள்ளதா அல்லது தேர்தலை நோக்காகக் கொண்ட அறிவிப்பா என்பது தேர்தலின் பின்னர்தான் தெரியவரும். எனினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை தொடர்பில் நடவடிக்கை எடுக்க புதிய அரசாங்கம் தயங்குகின்றதா என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது. அண்மையில் இது தொடர்பான ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் ஹேரத் அது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் பன்னிரண்டு பக்கங்களைக் காணவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமைச்சர் கூறுவது பொய். அவ்வாறு எதுவும் காணாமல் போகவில்லை. அவ்விரு விசாரணை அறிக்கைகளின் பிரதிகள் தன்னிடம் உள்ளதாகவும் அரசாங்கம் அதை வெளியிடாவிட்டால் அதனை வரும் திங்கட்கிழமை தான் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு மேலாக இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம், இரகசியம் பேணல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தன்னைக் கைது செய்ய ஆலோசித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். உண்மையில் பக்கங்கள் சில காணாமல் போயிருந்தால் கூட அதைப்பெறுவதில் அதிக சிரமமிருக்காது. நிச்சயமாக விசாரணைக்குழுக்களின் தலைவர்களிடம் அதன் பிரதிகள் இருக்கவே செய்யும் அல்லது தன்னிடம் இருப்பதாக கூறும் கம்மன்பிலவிடம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதைவிடுத்து கம்மன்பில மீது மிரட்டல் விடுக்கவேண்டிய தேவை என்ன? இதனால்தான் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குகிறதா என்ற ஐயம் எழுகின்றது. அவ்வாறானால் அனுரகுமார பலமுறை கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து வாக்குறுதியளித்ததும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வாக்குறுதியளித்ததும் வெறுமனே கத்தோலிக்க மக்களின் வாக்குகளைப் பெறுவதற்குத்தானா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. இதைப்போலவே அதானி குழுமத்தினால் அமைக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்தை இரத்துச் செய்வோம் என முன்னர் கூறியவர்கள் இப்போது உயர்நீதிமன்றம் கூறியதால் மீள் பரிசீலனை செய்வோம் என்கின்றனர். அதிலும் சமரசம் செய்யத் தீர்மானித்து விட்டனர் என்பதுதான் இதன் பொருள்.

அடுத்த விடயம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம். ஜனாதிபதித் தேர்தலின் தொடக்க காலத்தில் அனுரகுமார திசநாயக, தேர்தல் பரப்புரைகளில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக  13ஆம் திருத்தம் பற்றிப் பேசவேண்டாம் என ஏனைய கட்சித் தலைவர்களிடம் கேட்டிருந்தார். பின்னர் தானே 13 ஆம் திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றார். அதேநேரம் 13 ஐ முழுமையாகவா என்பதற்கும் உறுதியான பதிலை அவர் வழங்கவில்லை. பின்னர் புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு என்றார். இவ்வாறு இனப்பிரச்சினை தொடர்பாக தேசிய மக்கள் சக்தித் தலைவர்கள் நேரத்துக்கு நேரம் ஒவ்வொன்றை உச்சரிப்பதன் காரணம் அவர்களிடம் எந்தவொரு தீர்வுத் திட்டமும் இல்லை என்பதைவிட இங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்று அவர்கள் கருதுவதேயாகும்.

அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தேசிய இனப்பிரச்சினையாகப் பார்க்காமல் வெறும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகவே பார்க்கின்றார்கள். இந்த உண்மையை அண்மையில் ரில்வின் சில்வா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழரின் வாக்குகளுக்காக அவ்வப்போது சில இனிப்பு வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தித் தலைவர்கள் உதிர்த்தாலும் அடிப்படையில் அவர்கள் முன்னைய சிங்களத் தலைவர்களிலிருந்து வேறுபட்டவர்களல்லர் என்பதை எதிர்காலம் மேலும் உறுதிப்படுத்தும்.

உண்மையில் ஒரு நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்படாதவரையில் அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முன்னோக்கிய மாற்றங்களும் வெற்றி தரப்போவதில்லை. அதை தேசிய மக்கள் சக்தி உணருமா என்பது தெரியவில்லை.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு  வடக்கு கிழக்கில் ஓரிரு ஆசனங்கள் கிடைக்கக் கூடும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் தமது கொள்கைகளை ஏற்று தம்முடன் இணைந்து செல்லத் தயாராகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்குப் போடுவார்களானால் அதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது.

இவ்வாறுதான் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை வைத்து 18 ஆசனங்களைப் பெற்றபோது கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தேவநாயகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதேபோல 2004 இல் தமிழத் தேசியக் கூட்மைப்பு அதிகூடுதலாக 22 ஆசனங்களைப் பெற்றபோது யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் டக்ளஸும் வெற்றி பெற்றிருந்தார். இக்காலப்பகுதிகளில்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடங்கி உச்ச நிலையை அடைந்தது என்பதே வரலாறு.

முன்னைய ஆட்சியாளர்களின் பலவீனங்களை மூலதனமாக்கி மாற்றங்களைத் தருவோம் என்ற நம்பிக்கையை மக்களிடத்து விதைத்து ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியினர் தாங்கள் கூறியதைப் போல மாற்றங்களை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை அவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனையுந்தாண்டி அவர்கள் கூறியவாறு மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தாலும் பிரச்சினை. முனையாவிட்டாலும் பிரச்சினை. ஏனெனில் மாற்றத்துக்காக தங்களால் கொண்டுவரப்பட்டவர்களால் மாற்றமேற்படுத்தப்படாதவிடத்து அவர்களை மாற்றுவதற்கும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை.

‘சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்

 சொல்லிய வண்ணம் செயல்’ என்ற வள்ளுவன் வாக்கு ஒருபோதும் பொய்ப்பதில்லை.

 

https://thinakkural.lk/article/311030

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.