Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா

 
05.jpg

பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில்    மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே  கூரைகளின்  மேல்  தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

ஜனவரி மாதத்தின் வெளிர்  காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதையில், திரு. மொரிசோ சோகமாகத்  தன் கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டு வெறும்  வயிற்றுடன், நடந்து கொண்டிருந்தார், அவர்  ஒரு மணிப்பொறியாளர் ஆனால் இருக்கும் சூழ்நிலையில் வீட்டுப் பறவையானவர், அவர் நடந்துகொண்டிருக்கையில் தன் நதிக்கரைத் தோழன், திரு. சொவாழையைக் கண்டு, அவர் முன் போய் நின்றார்.

போருக்கு முன்பு, மொரிசோ ஒவ்வொரு  ஞாயிற்றுக்கிழமையும்,   ஒரு கையில் மூங்கில்  பிரம்பும், முதுகில் தகர டப்பாவுடனும் விடியற்காலையில் மீன்பிடிக்கக் கிளம்பிவிடுவார். அவர் அர்காண்தாய்க்கு ரயிலேறி கொலொம்பில்  இறங்கி, நடந்தே, மறந்த் என்ற தீவை அடைவார். அந்தக் கனவு  இடத்தை அடைந்தவுடன்,  அவர் மீன் பிடிக்க ஆரம்பித்துவிடுவார், இருட்டாகும்வரை மீன் பிடித்துக்கொண்டிருப்பார்.

 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மொரிசோ, திரு. சொவாழையைச் சந்திப்பார், சொவாழ் குட்டையான, தடித்த, வேடிக்கையான மனிதர். அவர்  “நோத்ர் தாம் லொரத்” என்ற தெருவில் வாழ்ந்துவந்தார். அவரும் மீன் பிடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர்கள் இருவரும், அடிக்கடி, அரை நாள் பொழுதை, பக்கத்து பக்கத்தில், கையில் தூண்டிலுடன், கால்களை ஆற்றின் மேல் தொங்கவிட்டுக் கழிப்பர். இவ்வாறு, அவர்கள் இருவரும் அவர்களின் நட்பை வளர்த்திருந்தனர்.

ஒன்றாகக் கழித்த பொழுதுகளில், சில சமயங்களில், அவர்கள் பேசிக்  கொண்டதே  இல்லை. ஆனால், சில சமயங்களில் அரட்டையடித்தே நேரத்தைக் கழிப்பர். அவர்கள் இருவரும் தங்களைப்பற்றி வார்த்தைகளால் பகிர்ந்துகொள்ளாமலே ஒருவர் மற்றவரை நன்கு புரிந்துவைத்திருந்தனர், அவர்களின் ரசனைகளும், உணர்வுகளும் நன்றாக ஒத்துப்போயின.

ஒரு வசந்தகாலத்தின் காலையில்,   பத்து மணியளவில், இளஞ்சூரியன் அமைதியான ஆற்றின் மேல் ஏறி, மூடுபனியை நீரோடையோடு நகர்த்தி, உற்சாகமான இரண்டு மீனவர்களின் முதுகில், பருவகாலத்தின் கதகதப்பைப் படரச்செய்தது,  மொரிசோ சில சமயங்களில் தன் நண்பனிடம், “அட! எவ்வளவு இதமாக இருக்கிறது!” என்று கூறுகையில், சொவாழும், “உண்மைதான், இதைவிட இதமானதொன்று எனக்குத் தெரியாது” என்பார். இதுவே அவர்களின் புரிதல் மற்றும் ஒத்த ரசனைகளுக்கான சான்று.

இலையுதிர் காலத்தின், அந்திப்பொழுதில், அணையும்  சூரியன்  ஆகாயத்தை இரத்தக்கறையாக்கி, செந்நிற மேக  பிம்பங்களை நீரின் மேல் வீசி, நதி முழுவதையும்  அடர் சிவப்பாக்கி, கீழ் வானத்தைப் பற்றவைத்து, இரு நண்பர்களையும்  நெருப்பாகச்  சிவக்கச்செய்து, ஏற்கனவே சிவந்திருந்த மரங்களுக்குப் பொன்முலாம் பூசிக்கொண்டிருந்த வேளையில், குளிர்கால சிலிர்ப்பின் அசைவுடன், திரு. சொவாழ் புன்னகையோடு  மொரிசோவைப் பார்த்து, “அட! என்ன ஒரு ரம்மியமான காட்சி!” என்றார், அதற்கு மொரிசோவும் ஆச்சரியதொனியில், தன் மிதவையிலிருந்து கண்களை அகற்றாமல், “மரங்கள் நிறைந்த அகன்ற பாதைகளைவிடச் சிறப்பாக இருக்கிறதல்லவா?” என்றார்.

மொரிசோவும் சொவாழும் தங்களைப் பார்த்துக்கொண்டவுடன், உற்சாகமாகக் கைகுலுக்கிக்கொண்டனர், முற்றிலும் கடினமான சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொண்டதில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். திரு. சொவாழ், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி, “என்னவெல்லாமோ நடக்கிறது !” என்று முணுமுணுத்தார். மொரிசோவும் மிகுந்த வருத்தத்துடன், “எல்லாம் நேரம் ! இன்றுதான் ஆண்டின் முதல் அழகான நாள் போல் இருக்கிறது.” என்று புலம்பினார்.

உண்மையில், வானம் முழுவதும் நீலமாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் இருந்தது.

அவர்கள் நினைவுகளோடும், சோகத்தோடும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தார்கள். மொரிசோ மீண்டும், “ம்ம்ம், மீன் பிடித்தல்? என்ன  அழகான நினைவுகள்!” என்றார்.

திரு.சொவாழ் அவரிடம், “நாம் மீண்டும் எப்போது அங்கு செல்வோம்?” என்று கேட்டார்.

அவர்கள் இருவரும் சிறிய மதுக்கூடத்திற்குள் நுழைந்து ஒரு அப்சிந்தை குடித்தனர், பின் அவர்கள் மீண்டும் ஒன்றாக நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

மொரிசோ திடீரென்று நடப்பதை நிறுத்தி: “இன்னொன்று குடிக்கலாமா?” என்றார். அதற்கு திரு.சொவாழும், “உங்கள் விருப்பம்” என்று இசைந்தார். அவர்கள் இன்னொரு மதுபான விடுதிக்குள் நுழைந்தனர்.

அவர்களின் காலி வயிற்றை மதுபானம் நிரப்பியதால், இருவரும் மிகவும் மயங்கிய நிலையிலிருந்தனர். மிதமான வானிலை நிலவியது. மெல்லிய தென்றல் அவர்களின் முகத்தை வருடியது.

வெதுவெதுப்பான காற்று திரு. சொவாழையை முழு போதையில் ஆழ்த்தியது, அவர் சட்டென்று, “நாம் அங்கு சென்றால் என்ன ?”

– எங்கே?

– மீன்பிடிக்கத்தான்.

– ஆனால் எந்த இடத்திற்கு?

– பிரெஞ்சு புறக்காவல் படையின் முகாம் கொலொம்பிற்கு பக்கத்தில் தான் உள்ளது. எனக்கு கர்னல் தியுமுலீனை தெரியும்; நாம் எளிதில் தாண்டிச் செல்ல அனுமதி கிடைத்துவிடும்.

மொரிசோ ஆர்வத்தில் பதறினார், “கண்டிப்பாக வருகிறேன்,” பின் அவர்கள் இருவரும் தங்களுடைய பொருட்களை எடுத்துவரப் புறப்பட்டார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இருவரும் ஒன்றாக நெடுஞ்சாலையில் நடந்து, கர்னல் இருந்த இடத்தை வந்தடைந்தனர். அவர், அவர்களின் கோரிக்கையைக் கேட்டுச் சிரித்து, அவர்களின் நப்பாசைக்கு அனுமதி அளித்த பின், அனுமதிச் சீட்டோடு இருவரும்  நடக்க ஆரம்பித்தனர்.

விரைவிலேயே அவர்கள் முகாமைத் தாண்டி, கைவிடப்பட்ட  கொலொம்பை கடந்து, சேன் நதியை நோக்கி இறங்கும் திராட்சைத் தோட்டத்தின் விளிம்பை அடைந்தபோது, மணி பதினொன்று இருக்கும்.

அதன் எதிரே, அர்கெண்ட்டெயில் என்ற கிராமம், மயானம் போல் காட்சியளித்தது. ஒரிஜெமோன் மற்றும் சண்ணுவாஸின் உயர்ந்த தோற்றம் நாட்டையே ஆக்கிரமிப்பதுபோல் இருந்தது. நாந்தேர் வரை நீண்டிருந்த பெரும் சமவெளி, ஒன்றுமில்லா செர்ரி மரங்களாலும், காய்ந்த பூமியாலும் மொட்டையாகவும், வெறுமையாகவும் இருந்தது.

திரு.சொவாழ், தன் விரலால் மலை உச்சியைக் காட்டி, “பிரஷியர்கள் அதன்  மேல் தான் இருக்கிறார்கள்” என்று முணுமுணுத்தார். அந்த பாலைவன ஊரின் முன் ஒரு விதமான கவலை இரண்டு நண்பர்களையும் முடக்கியது.

“பிரஷியர்கள்!”, அவர்களை அங்குப் பார்த்ததுகூட இல்லை, ஆனால் இந்தக் கண்ணுக்குத் தெரியாத, அதீத பலம் கொண்டவர்கள், ஒரு மாத காலமாக, பாரிஸைச் சுற்றி, பிரான்சின் அழிவிலும், கொள்ளையிலும், கொலையிலும், பசியிலும் உணரப்பட்டார்கள். மேலும், இந்தக் கண்ணுக்குத் தெரியாத, வெற்றி வீரர்கள் மேல், வெறுப்போடு சேர்ந்து ஒரு குருட்டுப்பயமும் பற்றிக்கொண்டது.

மொரிசோ திக்கியவாறு, “ஒருவேளை! நாம் அவர்களைச் சந்தித்துவிட்டால் ?”

சொவாழ் எல்லா சோகத்தையும் மீறி, பாரிசிய கேலியோடு, “சந்தித்தால்! நாம் அவர்களுக்கு வறுத்த மீன்களைக் கொடுக்கலாம்” என்று பதிலளித்தார்.

ஆனால் அவர்கள், அடிவானத்தின் அமைதியால் பயமுறுத்தப்பட்டு, ஊருக்குள் அடியெடுத்து வைக்கத் தயங்கினார்கள்.

ஒருவழியாக, சொவாழ், “போகலாம் வாருங்கள், ஆனால் நாம் கவனமாக இருக்கவேண்டும்” என்றார். பின், அவர்கள் திராட்சைத் தோட்டத்தில் இறங்கி, தரையோடு ஊர்ந்து, இலைகளால் தங்களை மறைத்து, திறந்த கண்களுடனும், தீட்டிய காதுகளுடனும் தொடர்ந்தார்கள்.

அவர்கள் நதிக்கரையை அடைய இன்னும் ஒரு துண்டு நிலத்தைக் கடக்கவேண்டியிருந்த நிலையில் அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள், அவர்கள் கரையை அடைந்தவுடன், நாணல்களால் தங்களை மறைத்துக்கொண்டார்கள்.

மொரிசோ தன் காதுகளை நிலத்தில் வைத்து, தங்களைச் சுற்றி யாராவது நடமாடிக் கொண்டிருக்கிறார்களா என்று சோதித்தார் . அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நம்பிக்கை வந்தவுடன் மீன் பிடிக்கத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கு எதிரில், கைவிடப்பட்டிருந்த மறெந்த் என்ற தீவு அவர்களை மறைத்திருந்தது. அங்கிருந்த சிறிய உணவு விடுதியும் மூடப்பட்டு, பார்ப்பதற்கு, பல வருடங்கள்  திறக்கப்படாமல் இருந்தது போல் தோன்றியது.

சொவாழ் முதல் இரையை எடுத்தார், மொரிசோ இரண்டாவதைப் பிடித்தார், ஒவ்வொரு முறையும் அவர்கள் தூண்டிலைத் தூக்குகையில், அதன் முனையில் ஒரு முட்டாள் கெண்டை மீன் மாட்டித் துடித்தது,“உண்மையிலேயே அது ஒரு அற்புதமான மீன் வேட்டை.”

அவர்கள் தாங்கள்  பிடித்த மீன்களை நேர்த்தியாக, இறுக்கமாகப் பின்னப்பட்ட வலையில் இடும்பொழுது, அவை, அவர்களின் பாதங்களை நனைத்தது. அது அவர்களுக்கு ஒரு உண்மையான சந்தோஷத்தைக் கொடுத்தது, அந்த மகிழ்ச்சியை நீங்கள் நீண்ட காலமாக இழந்து  மீண்டும் அனுபவிக்கும்போதுதான் தெரியும். 

கதிரவன், தன் வெப்பத்தை அவர்களின் தோள்களுக்கிடையில் பாய்ச்சிக்கொண்டிருந்தான்; அவர்களால் வேறு எதையும் கேட்கவும், யோசிக்கவும்  முடியவில்லை; அவர்கள் உலகத்தைப் பொருட்படுத்தாமல், ஆழ்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, திடீரென நிலத்துக்கடியிலிருந்து வந்ததுபோல் தோன்றிய   பெரும் சத்தம் பூமியை உலுக்கியது. பீரங்கி மீண்டும் வெடித்தது.

மொரிசோ, தன் தலையை இடப்பக்கம் திருப்பி, கரையைத் தாண்டிப் பார்த்தபோது, சற்று முன் வெடித்த வெடியின்  புகை ஒரு வெள்ளை கொக்கைப் போல், வலேரின் மலையின் பெரிய புறவடிவத்திற்குமுன்    இருந்தது.

மீண்டும் உடனடியாக, இரண்டாவது  புகை மண்டலம் கோட்டையின் உச்சியிலிருந்து கிளம்பியது; சிலநொடிகளுக்குப் பிறகு திரும்ப படாரென குண்டு வெடித்தது.

மற்ற குண்டுகளும் தொடர்ந்து வெடித்தபோது, அந்த மலை நொடிக்கு நொடி இரைத்த  மரண மூச்சு, மெதுவாக, அமைதியாய் இருந்த வானத்தில் எழுந்து, மலைக்குமேல் புகைமேகத்தை உருவாக்கியது.

திரு.சொவாழ் தன் தோள்களை உயர்த்தி, “மீண்டும் தொடங்கிவிட்டது” என்று கூறினார்.

மொரிசோ, தன் மிதவையின் இறகுகள் மூழ்குவதைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். பின், அங்கு சண்டைபோடும் வெறிபிடித்தவர்களுக்கு எதிராக ஒரு சாதுவான  மனிதனின் கோபத்துடன், “தங்களையே இப்படிச் சாகடித்துக்கொள்ளும் இவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்” என்று புலம்பினார்.

திரு.சொவாழ், “இவர்கள் மிருகங்களைவிட மோசமானவர்கள்”  என்றார்.

ஒரு சிறிய மீனைப் பிடித்திருந்த மொரிசோ, “அரசாங்கங்கள் இருக்கும் வரைக்கும் இப்படிதான் இருக்கும்” என்றார் .

திரு.சொவாழ் அவரை, “குடியரசு போரை அறிவித்திருக்காது…” என்று தடுத்தார்.

மொரிசோ அவரைக் குறுக்கிட்டு, “அரசர்களால் நாட்டிற்கு வெளியில்தான் போர், ஆனால் குடியரசில் நாட்டிற்குள்ளேயே போர்”  என்றார்.

பொறுமையாக அவர்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். அரசியலின் பெரிய முடிச்சுகளை ஒரு சாதாரண மனிதனின் அறிவார்ந்த, வரையறுக்கப்பட்ட சரியான காரணங்களைக்கொண்டு அவிழ்த்தனர், தாங்கள் எப்போதுமே சுதந்திரமாக இருக்கப்போவதில்லை என்ற கருத்தில் ஒன்றுபட்டனர். வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்தது, குண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் வீடுகளைச் சிதைத்து, வாழ்க்கையை  நசுக்கி, உயிர்களை அழித்து, பல கனவுகளுக்கும், காத்திருக்கும் சந்தோஷங்களுக்கும், எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, மனைவிகள், மகள்கள் மற்றும் அன்னைமார்களின் இதயங்களிலும் மற்றும் எல்லா இடங்களிலும் முடிவற்ற துயரத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது.

“இவ்வளவு தான் வாழ்க்கை” என்றார் திரு.சொவாழ்.

மொரிசோ  சிரித்துக்கொண்டே “இவ்வளவு தான் மரணம் என்று சொல்லுங்கள்” என்றார்.

அவர்களுக்குப் பின் யாரோ வரும் சத்தம் கேட்டுத், திடுக்கிட்டுத் திரும்புகையில், அவர்களின் தோள்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, தாடியுடன்  நான்கு பெரிய உருவம் கொண்ட ஆட்கள், விநியோக ஊழியர்களைப் போன்ற உடையும், தட்டையான தொப்பியும் அணிந்து, துப்பாக்கி முனையைத் தங்களின் தாடையை நோக்கி   வைத்திருந்தவர்களைக் கண்டார்கள்.

இரு நண்பர்களின்  கையிலிருந்த தூண்டில்கள் நழுவி நதியில் விழுந்தது.

சில வினாடிகளிலேயே, இருவரையும் பிடித்துக்கட்டி, ஒரு படகில் வீசி, நதியைக் கடந்தனர்.

கைவிடப்பட்டதாக நினைத்த விடுதிக்குப் பின் இருபது ஜெர்மானியப் படைவீரர்கள் இருந்தார்கள்.

அங்கு, ஒரு நாற்காலியில் வித்தியாசமான கூந்தல் கொண்டிருந்த அரக்கனைப்போன்ற ஒருவர் அமர்ந்து, ஒரு பெரிய பீங்கான் புகைக்குழாயில்  புகைத்துக்கொண்டிருந்தார். அவர் இரு நண்பர்களிடமும், சிறந்த பிரெஞ்சு மொழியில், “கனவான்களே, நன்றாக மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.

ஒரு படைவீரன் மீன்கள் நிறைந்திருந்த வலைப்பையை பத்திரமாகக் கொண்டுவந்து, அதிகாரியின் காலடியில் வைத்தான். அதிகாரி சிரித்தபடியே, “அட! பரவாயில்லையே !  மீன்பிடி ஒன்றும்  அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால், இதன் பின்னால் வேறேதோ இருப்பதுபோல் தோன்றுகிறதே. நான் சொல்வதைக்   கவனமாகக் கேட்டால், நீங்கள் சிரமப்படத் தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் என்னை நோட்டமிட வந்த உளவாளிகள், உங்களைக் கொண்டுசென்று, குண்டுகளுக்கு இரையாக்கிவிடுவேன். உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த, மீன் பிடிப்பதுபோல் நடித்துள்ளீர்கள். உங்கள் துரதிர்ஷ்டம், என் கைகளில் சிக்கிக்கொண்டீர்கள், என்ன செய்வது, அதுதான் போர்.

நீங்கள் புறக்காவலைத் தாண்டி வந்துள்ளீர்கள், அதைத்தாண்ட உங்களிடம் கண்டிப்பாக அடையாள வார்த்தை இருக்கும், அதை என்னிடம் சொல்லிவிட்டால் நான் உங்களை மன்னித்துவிடுகிறேன்.” என்றார்,

பதட்டத்துடன் இரு நண்பர்களும், இரத்தப்பசையற்று, கைகள் லேசாக நடுங்கிய நிலையில் எதுவும் பேசாமலிருந்தனர்.

அதிகாரி மீண்டும், “இது யாருக்கும் தெரியப்போவதில்லை, நீங்கள் பத்திரமாகத் திரும்பிச்செல்லலாம். இது ரகசியமாகவே இருக்கும். ஆனால், நீங்கள் மறுத்தால் மரணம்தான். சீக்கிரம் முடிவெடுங்கள்.” என்று அவர்களிடம் கூறினார்.

அவர்களோ அசைவின்றி வாயைத் திறக்காமல் அப்படியே இருந்தனர்.

பிரஷியன், மிகவும் அமைதியாக, நதியை நோக்கி கையை நீட்டி, “இன்னும் ஐந்து நிமிடங்களில் இந்த நீரின் அடியில் இருப்பீர்கள் என்பது  நினைவிருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் தான்! உங்களுக்குப் பெற்றோர்கள் இருக்கிறார்கள் தானே?” என்று மீண்டும் கூறினார்.

வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்தது.

இரு மீனவர்களும் அமைதியாக நின்றுகொண்டேயிருந்தார்கள். அந்த ஜெர்மானியன் தனது மொழியில் உத்தரவுகளைப் பிறப்பித்தான். பிறகு, அவன்  கைதிகளின் அருகில் இல்லாதவாறு, தனது நாற்காலியை வேறு இடத்திற்கு மாற்றினான்; ஒரு டஜன் படைவீரர்கள், இருபது அடிகள் முன்னகர்ந்து, துப்பாக்கியைக் காலுக்கருகில் வைத்தனர்.

அதிகாரி மீண்டும், “உங்களுக்குக் கடைசியாக ஒரு நிமிடம் தருகிறேன், அதற்குமேல் இரண்டு வினாடிகூட தாண்டமாட்டீர்கள்.” என்றார்.

பின் அவர் திடீரென்று எழுந்து, அந்த இரண்டு பிரெஞ்சுக்காரர்களின் அருகில் சென்று, மோரிசோவை கையால் பிடித்து, தூரமாக இழுத்துக்கொண்டுபோய், 

தாழ்ந்த குரலில், “சீக்கிரம், அந்த அடையாளச்சொற்களை சொல்கிறாயா? இல்லையா? உனது கூட்டாளிக்கு ஒன்றும் தெரியப்போவது இல்லை, நானும் உங்களை மன்னித்துவிடுவேன்.” என்றார்.

மொரிசோ ஒன்றும் சொல்லவில்லை.

பிரஷிய அதிகாரி திரு. சொவாழையும் இழுத்துக்கொண்டுபோய், அதே கேள்வியைக் கேட்டார்.

திரு.சொவாழும் எதுவும் சொல்லவில்லை.

பின், அவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் பக்கத்தில் வந்து சேர்ந்தனர்.

பொறுமையிழந்த அதிகாரி, தன் கட்டளையைப் பிறப்பித்தார். படைவீரர்கள் அவர்களது துப்பாக்கியை உயர்த்தினார்கள்.

அப்போது, மொரிசோவின் பார்வை, அவரிடமிருந்து சில அடிகள் தள்ளி, புல்வெளியின் மேலிருந்த பையில்  நிறைந்திருந்த இரை மீன்கள் மேல் விழுந்தது. சூரியக்கதிர்கள், தத்தளித்துக்கொண்டிருந்த மீன்களை  இன்னும் மின்னச்செய்தது. தளர்வு அவரை ஆட்கொண்டது, அவர் எவ்வளவு முயன்றும், கண்ணீர் அவர் கண்களை நிறைத்தது.

அவர் திக்கியவாறு, “விடைபெறுகிறேன் திரு. சொவாழ்” என்றார்.

திரு. சொவாழும், “நானும் விடைபெறுகிறேன்” என்றார்.

எதிர்கொள்ளமுடியாத பயத்தால் தலை முதல் கால்  வரை நடுங்கிய இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்.

அதிகாரி, “சுடுங்கள்” என்று கத்தினார்.

பன்னிரண்டு குண்டுகளும் ஒன்றாய் வெடித்தன.

திரு.சொவாழ், தன் மூக்கு தரையில் படும்படி விழுந்தார்.  உயரமான மொரிசோவோ, ஊசலாடி, சுழன்று, தன் நண்பனைத் தாண்டி, முகம் வானத்தைப் பார்த்தபடி விழுந்தவுடன், அவரின் சட்டையைப் பிய்த்துக்கொண்டு நெஞ்சிலிருந்து ரத்தம் வெளியேறியது.

ஜெர்மானியன் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

வீரர்கள் விரைந்து சென்று, கற்கள் மற்றும் கயிற்றோடு திரும்பிவந்து, இரண்டு பிணத்தின் கால்களையும் கல்லோடு சேர்த்துக் கட்டி, தூக்கிச்சென்றனர்.

வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்த நிலையில், இப்போது அது புகையால் புதைக்கப்பட்டிருந்தது.

இரண்டு வீரர்கள் மொரிசோவின் தலை மற்றும் கால்களைத் தூக்கினர், அதேபோல் சொவாழையும்  தூக்கினர். இரண்டு உடல்களையும் ஒரு கனம் வேகமாக ஊசலாட்டித் தூக்கியெறிந்தபோது, முதலில் கற்கள் கால்களைச் செங்குத்தாக மூழ்கச் செய்து, நதியில்  சிற்றலைகளை  உண்டாக்கியது.

சிறிய அலைகள் கரையைத் தொடும்போது நீர் தெறித்து, நுரை தள்ளி, சுழன்று,  சலனமற்றுப் போனது.

கொஞ்சம் இரத்தமும் மிதந்து கொண்டிருந்தது.

அதிகாரி, பொறுமையாக, மென்மையான குரலில், “இப்போது மீன்கள் சாப்பிடும் நேரம்” என்று சொல்லி, கைவிடப்பட்ட விடுதியை நோக்கி நடக்கையில், அவரின் பார்வை புற்களில் கிடந்த, இரை மீன்கள் நிறைந்த வலைப்பையின் மேல் விழுந்தது. அவர் அவற்றை எடுத்து, ஆராய்ந்து,  பின் சிரிப்புடன், “வில்லியம்” என்று ஜெர்மானிய மொழியில் கத்தினார்.

வெள்ளை உடையணிந்த படைவீரன் ஒருவன் ஓடிவந்தான். அந்த பிரஷிய அதிகாரி, சுட்டுக்கொல்லப்பட்ட இரு நண்பர்கள் பிடித்த மீன்களை அவனிடம் தூக்கிப்போட்டு, “மீன்களை உடனடியாக வறுத்துக்கொண்டுவா, இவற்றிற்கு உயிர் இருக்கும்போதே சாப்பிட்டால், மிகுந்த சுவையுடன் இருக்கும்” என்றார்.

பின் அவர் மீண்டும் புகைக்க ஆரம்பித்தார்

https://kanali.in/irandu-nanbargal/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.