Jump to content

தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்? – நிலாந்தன்.


spacer.png

 

மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். அர்ஜுனா அந்த வேட்பாளர் வழங்கிய துண்டுப் பிரசுரத்தால் தன் வாயைத் துடைக்கிறார். அதையும் நேரலையில் விடுகிறார்.

ஒரு சக வேட்பாளரை அந்த மருத்துவர் எப்படி நடத்தியிருக்கிறார் என்பது அவருடைய அரசியல் நாகரீகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் சாவகச்சேரியில் ஒரு கலகக்காரனாக எழுச்சி பெற்றார். தனக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் மிகவும் திட்டமிட்டு கட்டமைத்தார். யூ டியூப்பர்களின் காலத்தில் அது அவருக்கு மிகவும் இலகுவாக இருந்தது.  தனக்கு கிடைத்த பிரபல்யத்தை இப்பொழுது அவர் அரசியலில் எதிர்பார்ப்போடு முதலீடு செய்கிறார். அவருடைய தேர்தல் சின்னம் ஊசி. சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு பலூன் அவர்.  அவருடைய ஊசியே அவரைக் குத்தி வெடிக்கச் செய்துவிடும் என்பதைத்தான் அந்த விருந்தகத்தில் மான் கட்சியின் பெண் வேட்பாளரை அவர் கையாண்ட விதம் நமக்கு உணர்த்துகின்றதா?

அவருக்கு கிடைத்த பிரபல்யத்துக்குக் காரணம் என்ன? சாமானியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சமூக வலைத்தளங்களா? அல்லது, மருத்துவத் துறைக்குள் காணப்படும் விமர்சனத்திற்குரிய அம்சங்களா? அல்லது அந்த விவகாரங்களை அந்த துறை சார்ந்த ஒருவரே வெளியே கொண்டு வந்ததுதான் காரணமா?

இல்லை. இவற்றைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. தமிழ்மக்கள் தங்களுக்காக, தங்களுக்குரிய நீதிக்காகப் போராட யாராவது வரமாட்டார்களா? தங்களுக்காக தன்னைத் தியாகம் செய்ய யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் அதற்குரிய முக்கிய காரணம். அதாவது அதைச் சுருக்கமாகச் சொன்னால், தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று காணப்படுகிறது என்று பொருள்.

அர்ச்சுனாவின் பின்னால் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் வெவ்வேறு தரப்புகள், கட்டமைப்புக்கள் போன்றவற்றை நோக்கி அதிகரித்த எதிர்பார்ப்போடு அவற்றின் பின் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தலைமைத்துவம் அல்லது எதிர்பார்த்த தொடர்ச்சியான காட்சி மாற்றங்கள் நடக்கவில்லை.

தமிழ்மக்கள் பேரவை தோன்றிய பொழுது தமிழ்மக்கள் அதிகம் எதிர்பார்ப்போடு அதை நிமிர்ந்து பார்த்தார்கள். இரண்டு எழுக தமிழ்களிலும் கலந்துகொண்ட அனைவருமே தாமாக வந்தவர்கள்தான். யாரும் வாகனம் விட்டு அழைத்து வரவில்லை.

விக்னேஸ்வரன் மாகாண சபையில் சுமந்திரன் அணியினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது அவருக்கு கிடைத்த ஆதரவு தன்னியல்பானது. யாரும் திட்டமிட்டு ஒழுங்கமைக்காதது. ஆனால் விக்னேஸ்வரன் தனக்கு கிடைத்த ஆதரவையும் அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து தக்கவைக்க முடியாதவராகத் தன்னை நிரூபித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இயங்கா நிலைக்கு அவரும் ஒரு காரணம்.

மாகாண சபையின் காலம் முடிந்த பொழுது சமூக செயற்பாட்டாளராகிய திரு செல்வின் என்னிடம் கேட்டார்… “விக்கி இப்பொழுது என்ன முடிவை எடுக்க வேண்டும்? ஒரு கட்சியை தொடங்கி கட்சி அரசியலை முன்னெடுப்பதா? அல்லது தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்து அதற்கு தலைமை தாங்குவாரா?” என்று. நான் சொன்னேன்…”அவர் மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கத் தேவையான வாழ்க்கை ஒழுக்கத்தையோ அல்லது அரசியல் தரிசனத்தையோ கொண்டவர் அல்ல. அநேகமாக அவர் கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடும்” என்று.

விக்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். ஆனால் அவர் மாகாண சபைக்குள் சுமந்திரன் அணியினால் சுத்திவளைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த கவர்ச்சியும் ஜனவசியமும் இப்பொழுது இல்லை.

தமிழ் மக்கள் பேரவை ஓய்வுக்கு வந்து சில ஆண்டுகளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி இடம் பெற்றது. அங்கேயும் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். தாமாகத் திரண்டார்கள். அது ஒரு பெரிய எழுச்சி. தூதரகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த எழுச்சி. படைத் தரப்பை முகாம்களுக்குள் முடக்க வைத்த ஒரு எழுச்சி. ஆனால் அது பின்னர் பலூன் ஆகியது. அந்த பேரெழுச்சியின் பெயரால் உருவாக்கப்பட்ட அமைப்பு அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகவில்லை. அந்த அமைப்பின் இணைத் தலைவர்கள் ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் காணப்படுகிறார்கள். ஆனாலும் அது ஒரு பேரியக்கமாக வளர்ச்சி பெறவில்லை.

அப்படித்தான் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி 2 லட்சத்து 26 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற, கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்த ஒரு ஹைபிரிட் கட்டமைப்பை நோக்கி தமிழ்மக்கள் அதிகரித்த எதிர்பார்ப்போடு காணப்பட்டார்கள். ஆனால் சில நாட்களில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பு போட்டியிடவில்லை. பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து வரும் எல்லா தேர்தல்களிலும் கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்கள். இப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். திருக்கோணமலையில் சங்கையும் வீட்டையும் இணைத்தது பொதுச் சபையின் மதத் தலைவர்களில் ஒருவராகிய திருமலை ஆயர்தான்.

எனவே தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு முயற்சித்து இருந்திருந்தால் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம், அதன்மூலம் வாக்குச் சிதறலைத் தடுத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. தமிழ்த்  தேசியப்  பொதுக்கட்டமைப்பு முன்கையெடுத்திருந்தால் அரங்கில் இப்பொழுது தோன்றியிருக்கும் பெரும்பாலான சுயேச்சைகள் அந்த கட்டமைப்புக்குள் வந்திருக்கும் என்பது உண்மை. கட்சிகளுக்குள் உடைந்து வெளியே வருபவர்கள் பொதுக் கட்டமைப்பை நோக்கி வந்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பொதுக் கட்டமைப்பு இப்பொழுது நடைமுறையில் இல்லை. பொதுக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட மக்கள் அமைப்பு நாடாளுமன்றத்  தேர்தலைக் கையாள்வதில்லை என்று முடிவெடுத்தது. இதனால் சங்குக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

 

spacer.png

இப்படியாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு அமைப்புகளின் மீதும் நபர்களின் மீதும் தங்கள் நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள். எதிர்பார்ப்போடு பார்க்கின்றார்கள். யாராவது வந்து மீட்க மாட்டார்களா?  எந்தக் கட்டமைப்பாவது ஒரு காட்சி மாற்றத்தை ஏற்படுத்தாதா? என்று எதிர்பார்ப்போடு அந்த அமைப்பின் பின் அல்லது நபர்களின் பின் செல்கிறார்கள். முடிவில் உற்சாகமெல்லாம் வடிந்து போய்ச் சலித்து அரசியலில் ஆர்வமற்று ஒதுங்கி விடுகிறார்கள்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவ்வாறு தமிழ் மக்கள் சலிப்போடு ஒதுங்கி நிற்கும் ஒரு நிலைமை தோன்றக்கூடும் என்ற பயம் பரவலாக உண்டு. சில கிழமைகளுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில், தேசமாகத் திரள்வோம் என்று நின்ற மக்கள், இப்பொழுது விருப்பு வாக்கு கேட்டுத் தமிழர்களை வாக்காளர்களாகக் கூறுபோடும் கட்சிகளையும் சுயேச்சைகளையும் சலிப்போடும் ஏமாற்றத்தோடும் விரக்தியோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விரக்தி சிலசமயம் அனுர அலையின் பின் மக்களை உந்தித் தள்ளிவிடுமா என்ற பயம் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் உண்டு. இதே நிலைமை திருக்கோணமலையிலோ அம்பாறையிலோ ஏற்பட்டால் என்ன நடக்கும்? புலம்பெயர்ந்து வாழும் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார், திருகோணமலையில் எவ்வளவுதான் வாக்குகள் சிதறினாலும் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக இனமாகச் சிந்தித்து வாக்களிக்கும் ஒரு பாரம்பரியம் அங்குண்டு. அது இனியும் தொடரும் என்று. தொடர்ந்தால் நல்லது.அம்பாறையிலும் அப்படி நடந்தால் நல்லது. வடக்கில்,மீன் கரைந்தாலும் சட்டிக்குள்தான் இருக்கும் என்று நம்புவோமாக.

https://www.nillanthan.com/6943/
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.