Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஒரு மாத இடைவெளியில் 15 வயது நிரம்பிய இரண்டு பதின் வயது பெண்கள் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

கடந்த சில நாட்களுக்குள் 18 வயதுகூட நிரம்பாத வீட்டுப் பணிப் பெண்கள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில், பல்லாவரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் மகனும் மருமகளும் தன்னைக் கடுமையாக்க கொடுமைப்படுத்தியதாக ஒரு இளம்பெண் அளித்த வாக்குமூலம், தமிழ்நாட்டையே அதிரவைத்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதேயான அந்த பட்டியலினத்துப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கேட்கும் யாரும் பதறிப்போய்விடுவார்கள். தனக்கு நடந்த கொடுமைகளை அந்தத் தருணத்தில் பிபிசி-யிடம் பகிர்ந்திருந்தார் அந்தப் பெண். 12-ஆம் வகுப்பையே முடித்திருந்த அந்தப் பெண்ணுக்கு இரண்டே நாட்களில் கொடுமைகள் ஆரம்பித்தன.

“இரண்டு நாட்களிலேயே எனக்கு கடுமையான வேலைகள் கொடுத்தனர். ஒரு நாள் அவர்கள் மும்பைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று இரவு 2 மணி வரை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பிறகு தான் தூங்கினேன். காலையில் உணவும் தயார்செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், என்னால், 7 மணிக்குத்தான் எழுந்திருக்க முடிந்தது. அதற்கு என்னை கடுமையாகத் தாக்கி, அசிங்கமாகத் திட்டினார்கள்,” என்று கூறியிருந்தார்.

 

இதேபோல, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்காக, 10 மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் கூறியிருந்தார்.

“ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்” என்று தெரிவித்த அந்தப் பெண், பொங்கலுக்காக வீட்டிற்கு வந்தபோது, காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், எம்.எல்.ஏவின் மகனையும் மருமகளையும் கைதுசெய்தனர்.

இந்த விவகாரத்தில், காயம்பட்ட பெண் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து தப்பிவிட்டார். ஆனால், இதேபோல துன்புறுத்தப்பட்ட எல்லோருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதுபோன்ற விஷயங்கள் தொடரவே செய்கின்றன. சில சமயம் இளம்பெண்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது.

இது தொடர்கதையாக இருப்பதற்கு என்ன காரணம்? இது யாருடைய தோல்வி?

இரண்டு மாதங்களில் இரண்டு கொலைகள்

கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும், வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட 18 வயதுகூட நிரம்பாத இரு பெண்கள் தாங்கள் வேலை பார்த்த இடங்களிலேயே கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஒரு கொலை பெங்களூருவிலும் ஒரு கொலை சென்னையிலும் நடந்திருக்கிறது.

முதல் சம்பவம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்தில் சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் ஒரு சிறிய பாலம் இருக்கிறது. இந்தப் பாலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும் அங்குவந்த சங்ககிரி காவல்துறையினர், அந்தப் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வந்ததைக் கண்டறிந்தனர். அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, பாலிதீன் கவரால் முகம் மூடப்பட்டு, பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது.

அந்தப் பெண் யார் என்பது அடையாளம் தெரியாத நிலையில், சடலத்தோடு கிடைத்த சூட்கேஸை வைத்தும் புலனாய்வு நடந்தது. அந்த சூட்கேஸ் இரு நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் வாங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 
தொடரும் சிறு வயது பணிப் பெண்களின் கொலைகள்: வேண்டியது என்ன?
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட அஷ்வினி பாடீல் மற்றும் கார்த்திக் சந்திர சாகு

பெங்களூருவில் கொல்லப்பட்ட சிறுமி யார்?

இதற்குப் பிறகு, பெங்களூரில் இருந்து சங்ககிரிக்கு வந்த வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஓசூருக்கும் சங்ககிரிக்கும் இடையிலான சிசிடிவி பதிவுகள் ஆராயப்பட்டன. அதில் ஒரு கார் காவல்துறையின் கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு, அந்தக் காரின் உரிமையாளர் யார் என்ற விவரங்களைத் தேடியதன் முடிவில், ஒடிசாவில் பதுங்கியிருந்த அபினேஷ் சாகு அக்டோபர் 26-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

இதற்குப் பிறகுதான் கொலைசெய்யப்பட்ட பெண் குறித்த தகவல்கள் வெளிவந்தன. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, கொலைசெய்யப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். 15 வயதான அந்தச் சிறுமி, அபினேஷ் சாகுவின் தந்தை கார்த்திக்சந்திர சாகு நடத்திய ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்துவந்தார்.

அந்தப் பெண்ணை தன் வீட்டில் வேலை செய்வதற்காக அபினேஷ் சாகு பெங்களூருவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துவந்தார். அங்கு அந்தச் சிறுமி சரியாக வேலைசெய்யவில்லை என்று கூறி, அந்தத் தம்பதி சிறுமியை தொடர்ந்து துன்புறுத்திவந்துள்ளனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று அஸ்வினி பாடீல் பூரிக் கட்டையால் சிறுமியைத் தலையில் தாக்கியதில் அந்தச் சிறுமி இறந்துவிடவே, சடலத்தை ஒரு சூட்கேஸில் வைத்து, சங்ககிரிக்கு அருகில் அவர்கள் வீசிவிட்டுப்போனது தெரியவந்தது. இப்போது அந்தத் தம்பதி, நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

 
இளம் வயது பணிப்பெண்கள் படுகொலை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக 15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்திய முகமது நிவாஸ்

சென்னையில் நடந்த கொடூரம்

இரண்டாவது சம்பவம்:

நவம்பர் 1-ஆம் தேதியன்று சென்னை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டில் இருந்து 15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், சடலமாகக் கிடைத்த அந்தச் சிறுமி தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் 2023-ஆம் ஆண்டு முதல், முகமது நிவாஸ் என்பவருடைய குழந்தையைப் பராமரிப்பதற்காக சென்னையில் வசித்துவந்தார் என்பதும் தெரியவந்தது.

இதற்குப் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டில் வசித்துவந்த முகமது நிவாஸ், அவருடைய மனைவி நாசியா உள்ளிட்ட ஆறு பேரைக் கைதுசெய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், முகமது நிவாஸ் - நாசியா தம்பதியின் ஆறு வயது மகனைப் பார்த்துக் கொள்வதற்காக, தஞ்சாவூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு 15 வயதுச் சிறுமியை 2023-ஆம் ஆண்டு அழைத்துவந்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நாசியா அளித்த வாக்குமூலத்தில், சரியாக வேலை பார்க்கவில்லையென அந்தச் சிறுமியை தானும் தன் கணவர் நிவாஸ் மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் அடித்துத் துன்புறுத்திவந்துள்ளதாகத் தெரியவந்தது.

அக்டோபர் 31-ஆம் தேதியன்று அந்தச் சிறுமியை முகமது நிவாஸ் தம்பதியும் அவர்களுடைய நண்பரான லோகேஷ் - அவருடைய மனைவி ஜெயசக்தி உள்ளிட்டோரும் கடுமையாகத் தாக்கியதில் அந்தச் சிறுமி உயிரிழந்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாசியா அளித்த வாக்குமூலத்தில், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பாக எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார் என்ற பகுதி படிப்பவர் யாரையும் பதறவைக்கும்.

இதைற்குப் பிறகு முகமது நிவாஸ், அவரது மனைவி நாசியா, லோகேஷ், அவருடைய மனைவி ஜெயசக்தி, நிவாஸின் சகோதரி சீமா பேகம், அந்த வீட்டில் வேலை பார்த்துவந்த மகேஸ்வரி உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 
இளம் வயது பணிப்பெண்கள் படுகொலை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, சென்னையில் கொலை செய்யப்பட்ட சிறுமியை பணிக்கு அமர்த்திய முகமது நிவாஸின் மனைவி நாசியா

‘இது சமூகத் தோல்வி’

குழந்தைகளைக் கண்காணிப்பதில் ஒட்டுமொத்த அமைப்பும் அடைந்திருக்கும் தோல்வியைத்தான் இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன, என்கிறார் குழந்தைகளின் உரிமைக்காகச் செயல்படும் தோழமை அமைப்பின் தேவநேயன்.

"தமிழ்நாட்டில் குழந்தைகளைக் கண்காணிக்கப் பல்வேறு பொறிமுறைகள் உள்ளன. தஞ்சாவூரைச் சேர்ந்த 15 சிறுமி விவகாரத்தில் எதுவுமே செயல்படவில்லை. 2022-ஆம் ஆண்டில் அந்தக் குழந்தை பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறியிருக்கிறது.

"பள்ளிக் கல்வி முறையைவிட்டு, அந்தக் குழந்தை வெளியேறியது எப்படி யார் கவனத்திற்கும் வராமல் போனது எனத் தெரியவில்லை. இந்தக் குழந்தைக்குத் தந்தை இல்லை. குழந்தை பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய பிறகு, அவருடைய தாயாருடன் கோயம்புத்தூரில் ஒரு வீட்டிற்கு வேலைக்குச் சென்றார்கள். அங்கிருந்துதான், சென்னையில் உள்ள இந்த வீட்டில் வேலை செய்ய குழந்தை அனுப்பப்படுகிறது. அங்கே கொல்லவும் பட்டுவிட்டது.

"ஒரு பெண் குழந்தை பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினால், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறது. ஒன்று, வேலைக்கு அனுப்புகிறார்கள் அல்லது திருமணம் செய்துவைக்கிறார்கள். ஆகவே, படிப்பை இடைநிறுத்தும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்திருந்தால் இது நடந்திருக்காது," என்கிறார் தேவநேயன்.

குழந்தைகள் கொல்லப்பட்ட இரு நிகழ்வுகளிலுமே குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த வறுமையில் வாடியிருக்கிறார்கள். குறிப்பாக, தஞ்சாவூரைச் சேர்ந்த குழந்தையின் தாயைப் பொறுத்தவரை, தன் மகளின் சடலத்தை தஞ்சைக்குக் கொண்டுசென்று இறுதிச் சடங்குகள் செய்யக்கூட வசதியில்லை. இதனால், காவல்துறையினரின் உதவியுடன் சென்னையில் உள்ள மின் மயானத்திலேயே சடலம் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுபோல நூற்றுக் கணக்கான குழந்தைகள் வீடுகளில் வேலைசெய்வதாகச் சொல்கிறார் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல அறக்கட்டளையின் முதன்மைச் செயற்பாட்டாளர் ஜோஸபின் அமலா வளர்மதி. "தஞ்சாவூர் குழந்தை இறந்துவிட்டதால், இந்த விவகாரம் வெளியில் வந்திருக்கிறது. இல்லாவிட்டால், அடி - உதையை வாங்கிக்கொண்டு அந்தக் குழந்தை வேலை பார்த்துக்கொண்டேயிருக்கும்," என்கிறார் அவர்.

குழந்தைகளை வேலைக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டங்கள் சரியானதாக இல்லை என்றும் சொல்கிறார் அவர்.

 
தோழமை நிறுவனர் தேவநேயன்

பட மூலாதாரம்,THOZHAMAI

படக்குறிப்பு, குழந்தைகளின் உரிமைக்காகச் செயல்படும் தோழமை அமைப்பின் தேவநேயன்

சட்டம் என்ன சொல்கிறது?

இதுகுறித்து மேலும் பேசிய வளர்மதி, "குழந்தைகளை வேலைக்குப் பயன்படுத்தினால் இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். ஆனால், எவ்வளவோ குழந்தைகள் இப்படி வேலை பார்க்கிறார்கள். காரணம் வறுமைதான். தவிர, 18 வயது நிரம்பியவர்கள் வேலை பார்க்கும்போது இதுபோல துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்,” என்கிறார்.

"பல்லாவரம் விவகாரத்தில் அதுதான் நடந்தது. ஆகவே வீட்டு வேலைக்கு ஆட்களை வைப்பவர்களும் பதிவுசெய்ய வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்," என்கிறார் வளர்மதி.

ஆனால், தேவநேயனைப் பொறுத்தவரை குழந்தை உழைப்பைத் தடைசெய்யும் The Child Labour (Prohibition and Regulation) Act, 1986 என்ற சட்டம் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க போதுமானதாக இல்லை என்கிறார்.

"இந்தச் சட்டம் 14 வயது வரையுள்ள குழந்தைகளை மட்டுமே பாதுகாக்கிறது. 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அபாயகரமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தக்கூடாது என்கிறது சட்டம். அதனால், குழந்தைகள் வீட்டு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள்.

"குழந்தைகள் துன்புறுத்தப்பட்டால், குழந்தைகளுக்கான ஹெல்ப் லைனை நாடச் சொல்கிறார்கள். முன்பு இதில் 12 - 16 பேர்வரை இருப்பார்கள். ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு குறைத்திருப்பதால், தற்போது 8 பேர் வரையே இருக்கிறார்கள்.

"இதனால், உடனடியாக இந்த அலுவர்கள் சென்று குழந்தைகளை மீட்க முடியாது. குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து எத்தனை வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது எனப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்" என்கிறார் தேவநேயன்.

 
ஒரு மாத இடைவெளியில் 15 வயது நிரம்பிய இரண்டு பதின் வயது பெண்கள் கொலை

பட மூலாதாரம்,VALARMATHI

படக்குறிப்பு, தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல அறக்கட்டளையின் முதன்மைச் செயற்பாட்டாளர் ஜோஸபின் அமலா வளர்மதி

எந்த இடத்தில் பிரச்னை?

குழந்தைகளைக் கண்காணிப்பதில் எந்த இடத்தில் பிரச்னை ஏற்படுகிறது என்பது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் (Department of Children Welfare and Special Services) இயக்குநர் ஜானி டாம் வர்கீஸிடம் கேட்டபோது, "இது போன்ற விவகாரங்களில் பள்ளிக் கல்வித் துறை, சமூக நலத் துறை, தொழிலாளர் நலத் துறை என பல்வேறு துறைகளின் கூட்டு நடவடிக்கை தேவைப்படும்,” என்கிறார்.

"பொதுவாக ஒரு குழந்தை பள்ளியிலிருந்து இடைநின்றால், அந்தக் குழந்தை ஏன் விலகியது என்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். வீட்டிற்குச் சென்றும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்தக் குழந்தை விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டிருக்கிறது," என்று தெரிவித்தார்.

இது குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கேட்டபோது, இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்.

"14 வயதுக்கு மேல் சட்டப்படி குழந்தைகள் வேலைக்குச் செல்லலாம் என்றாலும், இதுபோல வேறு ஒரு ஊருக்கு, தனியாக குழந்தைகளை அனுப்பவே கூடாது. இந்த விவகாரத்தில் வறுமையின் காரணமாக இது நடந்திருப்பதாகத் தெரிகிறது. கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது. எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய தொடர் நடவடிக்கைகள் இருக்கும்," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.