Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?" / பகுதி: 01
 
 
அண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019 என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, "வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150 இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்" / "Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone " என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தமிழர் பகுதியில், நடந்துள்ளதாகவும் எடுத்து காட்டுகிறது. ஏன் தமிழர்கள் கூடுதலாக தற்கொலை செய்கிறார்கள்? என்ற என் கவலையின் தேடுதலே இந்த கட்டுரையாகும்.
 
முதலில் நாம் தற்கொலை என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்களே உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை தற்கொலை எனலாம். இது அநேகமாக மக்கள் தமது வலி அல்லது துன்பத்தில் [pain or suffering] இருந்து தப்பிக்க வேறு மாற்று வழிகள், அந்த கணத்தில் தெரியாத நிலையில், சடுதியாக கடைபிடிக்கும் ஒரு வழி என்றும் கூறலாம். ஆனால் எல்லோரும் அப்படி என்று நாம் அறுதியாக கட்டாயம் கூறமுடியாது. தற்கொலை மூலம் இறந்த மக்கள் பொதுவாக நம்பிக்கையற்ற தன்மை, விரக்தி மற்றும் உதவியின்மை [feelings of hopelessness, despair, and helplessness] போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றது, தற்கொலையை ஒருவரின் ஒரு தார்மீக பலவீனம் அல்லது அவரின் ஒரு ஒழுக்க குறைபாடு [a moral weakness or a character flaw] என்றும் கூறமுடியாது.
 
ஒருவர் தன்னுயிரை தானே மாய்துகொள்வதையும் கொலை என்று அர்த்தம் தொனிக்க தற்கொலை என்றே நாம் இன்று கூறுகிறோம். அது போலவே, The Oxford English Dictionary முதல் முதல் suicide என்ற சொல்லை 1651 இல் சேர்த்து கொண்டாலும், அந்த சொல்லை மிகவும் வெறுப்புடன் பொதுவாக பார்க்கப்பட்டு, பலர் தமது அகராதியில் அதை போடாமல் சொல்லகராதியில்[vocabulary] மட்டும் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக “self-murder”, “self-killing”, and “self-slaughter” என்ற வார்த்தைகளை, அன்று பாவித்தனர். ஏன், 2450 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க நாட்டின் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் (Socrates) கூட "மனிதன் என்பவன் கடவுளின் உடைமைகளில் ஒன்று, எனவே ஒரு மனிதன் தன்னை கொல்ல முடியாது" / "a man, who is one of the god’s possessions, should not kill himself " என்று வாதாடுகிறார்.
 
என்றாலும் பிளாட்டோ [Plato] மற்றும் அரிஸ்டோட்டல் [Aristotle] தற்கொலை சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது திருவள்ளுவரும் "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்"[969]. என உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள், அதாவது தற்கொலை செய்வார்கள், என்று அதற்கு ஒரு பெருமையே சேர்க்கிறார். அது மட்டும் அல்ல , தமிழரின் அன்றைய கலாச்சாரத்தில் வடக்கிருத்தல் என்று போற்றப்படும் ஒரு செயலையும் காண்கிறோம்.
 
வடக்கிருத்தல் பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த ஒரு பழக்க வழக்கமாகும். ஊருக்கு வெளியே ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணா நோன்பிருந்து தமது உயிரை சில காரணங்களுக்காக துறப்பர். இப்படி இறந்தோருக்கு அன்று நடுகல் இட்டு, அவரின் மன உறுதியை பெருமைப் படுத்தும் முகமாக, அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடுவதும் உண்டு. உதாரணமாக, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு புறநானூறு 66 ,
 
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே."
 
களிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ?
 
என்று தற்கொலைக்கு ஒரு புகழாரம் சூட்டுகிறது. அதேபோல இன்றும் தன்னுயிரை தான் ஈயும் சான்றாண்மை தற்கொடையாம் என்று தற்கொலையை தற்கொடை என்று சில சந்தர்ப்பங்களில் புகழ் பாடுவதையும் தமிழர் கலாச்சாரத்தில் நாம் காணுகிறோம். இவைகளை இளம் பருவத்தினர் தொலைக்காட்சியிலோ, திரை அரங்கிலோ அல்லது பத்திரிகை அல்லது புத்தக வாயிலாகவோ பார்த்து இருப்பார்கள், உளவியல் எச்சரிப்பது இவையும் அவர்களின் தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகவும் அமையலாம் என்று.
 
நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும், அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும் கூறும், அவளின் புகழ் பாடும் நாட்டுப்புறக் கதை, தமிழரின் மத்தியில் சர்வசாதாரணமாக புழங்குவதுடன், அவளுக்கு கோயில் அமைத்து சிறு தெய்வமாக திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் வழிபடுவதையும் காண்கிறோம்.
 
அது மட்டும் அல்ல தமிழர்களுடன் தொடர்புடைய மாயன்கள் தற்கொலைக்கு என, ‘இக்ஸ்டாப்’ (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தவுடன் தற்கொலையை தப்பானதாக மாயன்கள் கருதவில்லை. எனினும் நான் முழுக்க முழுக்க இவையையே தமிழர்களை கூடுதலாக தற்கொலைக்கு தூண்டும் காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு இது ஒரு தென்பை, வலிமையை, பயமின்மையை கட்டாயம் கொடுத்து இருக்கும்.
 
தற்கொலை என்பது திடீரென, ஒருவர் எடுக்கும் சாவுக்குரிய அபாயகரமான முடிவு அல்லது ஒரு செயல் என்றும் மற்றும் தூண்டுதலின் பங்கே இப்படியான சோகமான விடயங்களில் முக்கியமான ஒன்று என்றும் [The role of impulsiveness is one of the saddest things about suicide] அடிக்கடி விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், தங்களைக் கொல்ல முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் அவ்வாறு செய்ய முதலே திட்டமிடுகின்றனர் என்றும் மனக்கிளர்ச்சி அல்லது உந்துதலே என்று வரையறுக்கப் படுபவை கூட, அவர்கள் முயற்சி செய்வதற்கு முன்பு அப்படியான எண்ணம் அவர்களிடம் இருந்ததாகவும் ஒரு 2007 ஆண்டு ஆஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது. ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு செயல் வடிவத்தை , வலிமையை அதிகமாக உந்துதல்களே கொடுத்து இருக்க வாய்ப்பு அதிகம்.
 
இவை ஒரு வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான காரணம். ஏனேன்றால் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது , தமிழர் சமுதாயம் ஒரு கொள்கைக்காக , நோக்கத்திற்காக தம் உயிரை விட்டவர்களுக்கு நடுகல் வைத்து வணங்கியதையும், அவர்களை சிறு தெய்வமாக்கியதும் மற்ற சமூகங்களில் காண்பது அரிது. அது மட்டும் அல்ல, அந்த பண்பாட்டிற்கு, குறிப்பாக ஈழத்தில் 1980 க்கு பிறகு மீண்டும் உயிர் கொடுத்து இன்று அந்த கலாச்சாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது வேறு எங்கும் காண்பது அரிது. எனவே இவைகள் கட்டாயம் தமிழர் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தற்கொலை - தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? என்பதை புள்ளிவிபரங்கள் மற்றும் அதற்கான இன்றைய காரணங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
 
உலக தற்கொலைத் தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதியை சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அறிவித்து உள்ளது. நாமும் எம்மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணத்தை ஓரளவாவது புரிந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம், சிறிது நேரம் ஒதுக்கி, தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முயலுவோம் !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
57441820_10213940980741409_3376984187566292992_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=kCGVpDpkkMoQ7kNvgG_IDTD&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AJ8kaztsBJScM0o7KMnIQFC&oh=00_AYDG-qZdD4JNyzP5H4RJLDil3l7PUD6gcdds_mi7mfsy1Q&oe=6756AD45
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?" /  பகுதி: 02
 
இன்று மக்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனையில் ஒன்று தற்கொலை ஆகும். உதாரணமாக 2016 ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் [World Health Organization] அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 800,000 பேர் உலகில் தற்கொலை செய்கிறார்கள். இது உலகெங்கும் ஏற்பட்ட மொத்த மரணத்தின் 10 வது முக்கிய காரணியாக உள்ளது. இது சுமார் 0.5-1.4% உலக மக்கள் தற்கொலை மூலம் இறக்கிறார்கள் என்றும் வருடத்திற்கு 100,000 நபர்களுக்கு 12 பேர் என்ற வீதத்தில் இருப்பதாகவும் எடுத்து காட்டுகிறது. குழப்பமான இந்த தற்கொலை பிரச்சனைக்கு நாம் ஏதாவது ஒரு பொது "காரணம்" கண்டுபிடித்தால், நாம் ஒரு சிகிச்சையை அதற்கு திட்டமிடலாம் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால் தற்கொலை மரபணு [“suicide gene”] என்று ஒன்றையும் ஆய்வுகள் கண்டுபிடிக்கவில்லை. தற்கொலையானது பல காரணிகளின் ஒரு சிக்கலான எதிர் விளைவு என்பதால் [a complex interaction among many factors], அதை ஒரு மரபணு குறியீட்டிக்கு குறைக்க முடியாது என்பது இன்றைய அறிஞர்களின் வாதம் ஆகும்.
 
தமிழர்களின் தாயகத்தை உள்ளடக்கிய இந்தியாவை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோம் என்றால், இந்தியாவின் பல பகுதிகளிலும் தற்கொலை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாக இருப்பதுடன், இது பெரும்பாலும் பொருளாதார நெருக்கடி, நோய், சமூக அழுத்தங்கள் குடும்ப பிரச்சினைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் தவறான நடத்துதல் [economic distress, illness, social pressures family problems, and ill-treatment by other family members] ஆகியவற்றால் ஏற்படுகிறது என அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. தேசிய குற்ற ஆவண பணியகம் [National Crime Records Bureau] வெளியிட்ட இந்தியாவில் தற்செயலான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் 2012 ["Accidental Deaths and Suicides in India 2012"] என்ற அறிக்கையின் பிரகாரம், இந்தியா முழுவதும் ஆண்டு 2012 இல் 1,35,445 பேரும் ஆண்டு 2010 இல் 1,35,585 பேரும் தற்கொலை செய்துள்ளார்கள் என்றும், அதில் தமிழ் நாடு 16,927 பேருடன் முதல் இடத்தை பிடித்துள்ளதும் தெரியவருகிறது. மேலும் அங்கு சிலர் தற்கொலை செயலை அல்லது பயமுறுத்தலை, தீக்குளித்தல் அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளால் , அரசாங்கத்தின் அல்லது பொது மக்களின் கவனத்தை ஈர்த்து தனிப்பட்ட அல்லது சமூக காரணங்களை நிறைவேற்ற தமது விரக்தியின் இறுதி செயலாக ஈடுபடுகிறார்கள் எனவும் அறிகிறோம். இப்படியான செயல்கள் பண்டைய காலத்திலும் இந்தியாவில் நடைபெற்றதை வரலாறும் புராணங்களும் கூறுகின்றன.இதில் தமிழ் நாடு முதல் இடத்தில் இருக்கிறதாம்.
 
மருத்துவ ஆய்விற்கான இந்திய சபை மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு [the Indian Council for Medical Research and the Ministry of Health and Family Welfare] தயாரித்துள்ள அறிக்கைகளும் 15-39 இடைப்பட்ட வயதினரின் தற்கொலையில் தென் இந்திய முதல் இடத்தில் இருப்பதை உறுதி செய்கிறது. உதாரணமாக இந்த வயதினரின் தற்கொலையில் தமிழ் நாடு முதல் இடத்திலும் கேரளம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. கடுமையான சமூக நெறிகள் ஒரு படித்த, முற்போக்கான இளைஞர்களின் அபிலாஷைகளுடன் மோதுவதும், இளைஞர்களின் உயர்ந்த அபிலாசைகளினால் ஏற்படும் மன அழுத்தமும் [rigid social norms clashing with the aspirations of an educated and progressive youth, as well as the greater experience of stress related to the higher aspirations of youth] முக்கிய பொதுவான காரணமாகிறது.
 
பொதுவாக தெற்கு மாநிலங்கள் வட மாநிலங்களை விட அதிகமான கல்வியறிவு பெற்றவை, கல்வி அறிவு அவர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன, எதிர்பார்ப்பு கூடும் பொழுது ஏமாற்றமும் அதிகரிக்கின்றன. எனவே தற்கொலையும் அதிகரிக்கின்றன எனலாம். மற்றது பண்பாட்டு வித்தியாசம் ஆகும். உதரணமாக வட மாநிலத்தார் ஆப்கானியர்கள், மொகலாயர்கள், பிரித்தானியர்கள் [Afghans, Mughals, the British] போன்றவர்களுடன் பல போர்களில் ஈடுபட்டதால், அவர்களின் போக்கில் அதிக ஆக்கிரமிப்பு அல்லது தீவிரம் தெரிகிறது. அதே நேரத்தில் தென் மாநிலத்தார் இப்படி ஒன்றிலும் பெரிதாக ஈடுபடவில்லை. மேலும் சொல்லும் திறமையை அல்லது உணர்ச்சி வெளிப் பாட்டை பார்த்தாலும் வட மாநிலத்தார் தென் மாநிலத்தார்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளனர். எனவே, தென்னிந்திய மக்கள் தங்கள் உணர்ச்சிகளை தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருக்கும் ஒரு போக்கு கொண்டுள்ளனர் எனலாம். ஆகவே அவர்களுக்குள்ளேயே கோபம் மற்றும் ஏமாற்றம் மிகவும் அதிகமாக அதிகரித்து போகும் பொழுது, தம்மை இழக்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் தற்கொலை ஏன் அதிகரித்திருக்கிறது என்பதற்கான ஒரு கோட்பாட்டு ரீதியான [theoretical explanations] வாதத்தை இங்கு காண்கிறோம்.
 
பதிவாளர் பொது அலுவலகத்தின் [Registrar General's office] புள்ளிவிபரங்களின்படி, சுதந்திரம் (1948) அடைந்த காலத்தில் இலங்கையில் தற்கொலை விகிதம் 100,000 மக்களுக்கு 9 ஆகும். அதன் பின் 1970 களில் இது 100,000 க்கு 19 ஆக உயர்ந்தது.1980 களின் மத்தியில், அது மேலும் உயர்ந்து 100,000 க்கு 33 ஆக அடைந்தது. இலங்கையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தற்கொலை வீதம் 100,000 க்கு 15 என முன்னையதை விட குறைந்து இருப்பதை காட்டுகிறது. சில வேறு அறிக்கை 100,000 க்கு 20 எனவும் சொல்லுகிறது. எது எப்படியாயினும் தற்கொலை வீதம் உலக சராசரி வீதத்தை விட அதிகமாகவே இன்னும் இருக்கிறது. வறுமை மற்றும் இழப்புக்களே [Poverty and deprivation] முக்கிய காரணமாகும். வவுனியா, யாழ்ப்பாணம் ஆகியவை மிக உயர்ந்த விகிதத்தில் உள்ள பகுதிகளாக இங்கு காணப்படுகின்றன. இவைகள் தமிழர் தயக்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (~1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் தமிழர்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர்.
 
என்றாலும் சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை 1970 இல் கொண்டு வந்தார்கள்.அரசு நிறைவேற்றிய இந்த முறை தமிழ் மாணவர்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது.அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளையும் பாதித்தது.அவர்களிடையே சடுதியாக ஏமாற்றங்கள் அதிகரிக்க தொடங்கின. எனவே எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் 1970 இற்கு பின் அதிகரிக்க தற்கொலையும் அதிகரித்தன எனலாம். என்றாலும் அவர்களின் வெறுப்பு மற்றும் விரக்தி 1980 இல் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக வெடிக்க, அவர்களின் கவனம் போராட்டம் ஒன்றில் ஒற்றுமையாக திசை திரும்பின, எனவே அவர்கள் தமது மனஅழுத்தங்களுக்கு ஒரு வடிகால் அமைத்து விட்டனர். ஆகவே கட்டாயம் தற்கொலை வீதம் இனி குறையும் என யாரும் எதிர்பார்க்கலாம், அதைத்தான் மேற்கூறிய புள்ளி விபரமும் அத்தாட்சி படுத்துகிறது. ஆனால், யுத்தத்தின் பின் தமிழ் மக்கள் மீண்டும் முன்னைய நிலையையே அல்லது அதைவிட கேவலமான குறைந்த நிலையையே அடைந்தனர், பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அது மட்டும் இல்லை, சில விடயங்களில் முனையத்தை விட பின்தள்ளியே போய்விட்டார்கள். எனவே மீண்டும் தற்கொலை வீதம் கூடும் என்பது வெள்ளிடைமலை. அதைத்தான் புள்ளிவிபரமும் காட்டுகிறது.
 
2009 மே மாதம் 30 வருடகால யுத்தம் முடிவிற்கு வந்தது, சமாதானம் திரும்பி விட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்கொலை விகிதம் அதன் பின் உயர்ந்து விட்டதையே காண்கிறோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் பேராசிரியர் ஒருவர் [Professor of Psychiatry at Jaffna University] சேகரித்த புள்ளிவிபரங்கள் படி, ஈழ யுத்தம் நான்காவதின் தொடக்கத்தில், அதாவது 2005 இல், யாழ்ப்பாணத்தில், தற்கொலை விகிதம் 100,000 மக்களுக்கு 23 ஆகும். ஆனால் 2006 ல், யுத்தம் தீவிரமடைந்தபோது, அது 20 க்குக் குறைவாகக் குறைந்தது. 2007 மற்றும் 2008 ல், போர் மேலும் மேலும் முன்னேறும் பொழுது, விகிதம் இன்னும் சரிந்து சரிந்து போனது. 2009 இல், போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, தமிழ் சமூகம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தபோது, தற்கொலை விகிதம் கிட்டத்தட்ட 100,000 மக்களுக்கு 15 எனக் குறைந்து காணப்பட்டது. ஆனால் போருக்குப் பிறகு, தற்கொலை விகிதம் திடீர் என அதிகரித்து, 2011 இல் 25 யையும் கடந்தது, சமாதானம் எங்கே என்ற ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. இது 2012 ல் 25 ஐ விட சற்று குறைந்தது, எனினும் 2013 ஆம் ஆண்டில் அது மீண்டும் 2011 இன் நிலைக்கு வந்துவிட்டது, கவலைக்குரிய விடயமாகும். 2002-2004 சமாதான முன்னெடுப்புகளின் போதும் - இராணுவ நடவடிக்கை நிலவிய அந்த காலத்திலும் - தற்கொலை விகிதம், முன்னைய காலத்தை விட அதிகரித்தமை குறிப்பிடத் தக்கது. போரின் போது, பலவிதமான துயரங்கள் மற்றும் அழுத்தங்களின் தாக்கத்தை, அங்கு அன்று நிலவிய ஒரு வலுவான சமூக ஆதரவு அமைப்பு முழுமையாக எந்த கெடுபிடியும் இல்லாமல் இயங்கி அவர்களின் துன்பத்தை தனித்ததுவே இதற்கு முக்கிய கரணம் என ஒரு பத்திரிகைக்கு பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார் [Explaining the phenomenon, Professor told that during the war, frustrations were better managed because there was a strong social support system cushioning the impact of various kinds of traumas and stresses].மேலும் இலங்கை இராணுவ முற்றுகையின் பொழுது, பொதுமக்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒன்றுகூடினர். ஆனால் போருக்குப் பின், சமூக ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவு [social cohesion and social support systems] அமைப்புகள் மெல்ல மெல்ல தேயத் தொடங்கின, எனவே குடும்பங்களும் உடைந்து சிதறத் தொடங்கியதும் தற்கொலை இன்று மீண்டும் அதிகரித்ததிற்கு ஒரு காரணம் எனலாம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
57101636_10213949597236816_7570828578820980736_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=YeGkN726_ZIQ7kNvgEIzYqp&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AHf933fNrXoCREmHGDpKpEW&oh=00_AYDVwtSVCJX8ybjQdhVhYMP3kZI3MH62ZwWphQ-wB1O8xg&oe=675A909B
  • நியானி changed the title to "தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.