Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா?

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

 

செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்ற நிலையில், அப்போதிருந்த நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக்கு வெறும் மூன்று இடங்களே இருந்தன. அந்த நிலையில், எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கவில்லை. அவருக்கு ஆதரவு வழங்கி, பெரும்பான்மையைத் தரக்கூடிய நிலையிலும் எந்தக் கட்சியும் இருக்கவில்லை.

இலங்கையில் புதிய அரசியல் சூழலை உருவாக்க புதிய நாடாளுமன்றம் அவசியம் என்றும், தான் ஜனாதிபதியானால், நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத்தை அமைப்பேன் என்றும் பிரசாரத்தின்போது சொல்லிவந்தார் அநுர குமார திஸாநாயக்க.

அதன்படி தான் பதவியேற்ற அடுத்த நாளே, செப்டம்பர் 24-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை அவர் கலைத்து உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர் 14-ஆம் தேதி நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

 

தேர்தலில் யார் போட்டியிடுகின்றனர்?

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல முனைப் போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அங்கத்துவம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி, கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் நோக்கத்துடன் களத்தில் நிற்கிறது.

ஜனதா விமுக்தி பெரமுனவை தலைமையாகக் கொண்டு 2019-ஆம் ஆண்டு உருவான இந்த முன்னணியில், 21 கட்சிகளும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமாகி ஜன பலவெகய (SJB) என்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியாக களத்தில் நிற்கிறது. இந்தக் கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் களத்தில் இருக்கிறது.

இவை தவிர, எஸ். ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன பலய, ரஞ்சன் ராமநாயகே தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில், இலங்கையில் அமைப்பு ரீதியான பல மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக அநுர குமார திஸாநாயக்க வாக்குறுதிகளை அளித்தார்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அமலில் இருந்தாலும், ஜனாதிபதி விரும்பிய மாற்றங்களைச் செய்ய, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது அவசியம். அதன் காரணமாகவே, ஜனாதிபதி தேர்தலில் இருந்த ஆதரவு அலையின் வேகம் தணியும் முன்பாகவே நாடாளுமன்றத் தேர்தலையும் அநுர குமார திஸாநாயக்க அறிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுக்கும் வகையில் கடும் போட்டியைக் கொடுக்க நினைக்கின்றன.

இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலும் ஜனாதிபதி அங்கத்துவம் வகிக்கும் கட்சியே ஆட்சியை அமைத்திருக்கிறது. ஆனால், அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ஒரு ஸ்திரமற்ற நிலை உருவாகும் என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்.

"அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெறாவிட்டால், வேறு சிறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைக்கப் பார்ப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றால், அது ஒரு ஸ்திரமற்ற நிலையையும் சிக்கல்களையும் உருவாக்கும்" என்கிறார் அகிலன் கதிர்காமர்.

காரணம், இலங்கையில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் மட்டுமே ஜனாதிபதியின் கீழ் வரும் என்று கூறும் அவர் பிற அமைச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டின் கீழ்தான் வரும் என்பதால் முடிவுகளை எடுப்பதில் இழுபறி நீடிக்கும் என்கிறார். இது முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும் என கூறுகிறார் அகிலன் கதிர்காமர்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,UNIVERSITY OF JAFFNA

படக்குறிப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்

ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சியாக இருந்தால்...

நிறைவேற்று ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, இலங்கையின் வரலாற்றில் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் பிரதமர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலை 2001-ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

1999-ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியானார்.

அந்தச் சமயத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய பொது ஜன முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கூட்டணியிலிருந்து விலகியது.

இதற்குப் பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பல கேபினட் அமைச்சர்கள் துணை அமைச்சர்களானார்கள். இதில் அதிருப்தியடைந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர். அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் முடிவெடுத்தனர்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியானார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டார் ஜனாதிபதி. அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்தது. தேசியப் பட்டியலில் 13 இடங்கள் உட்பட 109 இடங்கள் அந்தக் கட்சிக்குக் கிடைத்தன.

இதையடுத்து 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உறவு ஆரம்பத்திலிருந்தே உரசலுடன்தான் இருந்துவந்தது.

குறிப்பாக, ரணில் மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகளிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. இது முற்றிக்கொண்டே சென்றது. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகள் முற்றிய நிலையில், 2003 -ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சகம், காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உள்நாட்டு விவகாரங்கள் துறை, ஊடக அமைச்சகம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.

அந்தத் தருணத்தில் அமெரிக்காவில் இருந்த ரணில், நாடு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சு தன்வசம் இல்லாவிட்டால், அமைதிப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்வது கடினம் என்றும் பிரதமரிடம் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பைத் தராவிட்டால் இனி ஜனாதிபதியே நேரடியாக அதில் ஈடுபடலாம் எனத் தெரிவித்தார். பிறகு, இரு தரப்பும் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து, முடிவுகளை எட்டலாம் என தீர்மானித்தனர்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2004 ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மகிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றார்.

இரு தரப்புப் பிரதிநிதிகளும் அமைதிப் பேச்சு வார்த்தை குறித்துப் பேசிவந்த நிலையில், 2004 ஜனவரி 20-ஆம் தேதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி முடிவானது. யாரும் எதிர்பாராத நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார் ஜனாதிபதி.

ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனதா விமுக்தி பெரமுனவும் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 105 இடங்களைப் பெற்று மகிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றார். ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 இடங்களே கிடைத்தன.

இத்துடன் இரு ஆண்டுகளாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வந்தன.

2018-ஆம் ஆண்டிலும் இதுபோல, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, இலங்கையை ஒரு அரசியல்சாஸன நெருக்கடிக்குத் தள்ளியது.

2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரி பால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்குப் பிறகு, அதே ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணிக்கு 106 இடங்கள் கிடைத்தன. இதற்குப் பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் உள்ளடக்கிய தேசிய அரசு ஒன்று அமைக்கப்பட்டது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரி பால சிறிசேன பதவி ஏற்றார்.

ஆனால், விரைவிலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்ற ஆரம்பித்தன. 2018-ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த அபார வெற்றிக்கு, தற்போதைய அரசின் மோசமான செயல்பாடுகளே காரணம் எனக் கூறும் குரல்கள் தேசிய அரசுக்குள்ளேயே எழுந்தன.

இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன.

இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி. ஆனால், இதனை ஏற்க மறுத்த ரணில், தனக்கு இன்னமும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதோடு, நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி சபாநாயகரிடம் கோரினார்.

இதனால், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதிவரை முடக்குவதாக அறிவித்தார் ஜனாதிபதி. நவம்பர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தையே கலைப்பதாகவும் அறிவித்தார்.

இது அரசியல்சாஸனத்திற்கு முரணானது எனக் குற்றம்சாட்டிய ரணில் விக்ரமசிங்க, உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றமும் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து டிசம்பர் 15-ஆம் தேதி மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டிசம்பர் 16-ஆம் தேதி ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்றும், கிடைத்தால் முஸ்லிம், தமிழ் கட்சியைச் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருக்கிறார்

ஆனால், இந்த ஒட்டுமொத்த விவகாரமும் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற நாடுகளும் பல அமைப்புகளும் வழங்கவிருந்த பல கடன்களும் உதவித் திட்டங்களும் இதனால் தடைபட்டன.

ஆனால், இந்த முறை இதுபோல நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். சிவராஜா.

"சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ள கருத்துகளை கவனிக்க வேண்டும். தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்தாலும் முஸ்லிம், தமிழ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். ஆகவே, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், இந்தக் கட்சிகளை வைத்து கூட்டணி அரசை அமைக்க முயல்வார்கள்." என்கிறார் அவர்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே துவங்கி, அடுத்த நாளுக்குள் அறிவிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

கக்கீமுக்கு ..நீதிஅமைச்சு...ரிசாத்துக்கு..கப்பல் வியாபார அமைச்சு... சுமந்திரனுக்கு பிரதமர் பதவி..சிரியருக்கு கால்நடை மாட்டுப்பண்ணை,டக்கியருக்குமீன்பிடி மண் அள்ளுதல்...கிசிபுல்லாவுக்கு முசுலிம் விவகாரம்..நசீருக்கு கிழக்கு காணிவிவகாரம் ரெடி....யாழ் கபிதனாரை தேசியப் பட்டியலில் நியமித்து...கனடிய தமிழ் விவகார அமைசராக்கலம்...😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.