Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்

போரில் வெற்றி முரசம் முழங்கும்

புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்"

இப்படியாக உத்தேச தமிழீழத்தின் உதயத்தைப் பற்றிய பூரண நம்பிக்கையைத் தரும் கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைத் தனது மதுரக்குரலால் மக்களுக்கு எடுத்துக் கூறி வருபவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். 1960 களில் தமிழ்நாட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நமது கவிஞர் சாசி ஆனந்தன் அவர்கள் காலஞ்சென்ற சி. பா. ஆதித்தனார் அவர்களது தலைமையில் இயங்கிய 'நாம் தமிழர்' இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இயங்கிய காலத்தில் அவரால் இயற்றப்பட்ட கவிதைகளுக்கு தேனிசை செல்லப்பா அவர்கள் இசைவடிவம் கொடுத்து மேடைகள் தோறும் பாடி தமிழக மக்கள் மத்தியில் தமிழ் உணர்வையும் விழிப்புணர்ச்சியையும் வளர்த்து வந்ததோடு ஈழத்தமிழர்களது அபிலாஷைகளையும் இசைவடிவில் எடுத்துச் சொல்லலானார். தமிழகத்தின் கிராமங்கள், நகரங்கள் தோறும் தேனிசை செல்லப்பா அவர்களது நாவசைவில் காசி ஆனந்தன் பாடல்கள் நாத வடிவாகப் பிரவாகிக்கலாயிற்று.

"மறவர் படைதான் தமிழ்ப்படை - குல

மானம் ஒன்றுதான் அடிப்படை

வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர்

வெல்வார் என்பது வெளிப்படை"

இந்தப் பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் பிரபல்யமாகக் காரணமாக இருந்தவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். அறுபதுகளில் தமிழகத்தில் பிரபலமான இப்பாடல் எழுபதுகளில் தமிழ் ஈழத்திலும் பிரபலமடையலாயிற்று. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு விசுவாசம் தெரிவிக்க மறுத்து கவிஞர் காசி ஆனந்தன் தனது அரச பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து ஈழத்து அரசியல் மேடைகளிலும் மேடைப் பேச்சுகளுக்கான முன்னோடி ஒலிபெருக்கி அறிவித்தல்களிலும் இப்பாடல் இடம்பிடித்துக்கொண்டது.

எழுபதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப் போராளிகள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற பெயரில் விடுதலை ஸ்தாபனத்தை உருவாக்கிய போது அந்த ஸ்தாபனத்தை அக்காலகட்டத்தில் 'புலிப்படை' என்று சுருக்கமாக அழைக்கும் வழக்கம் இருந்தது. கவிஞர் காசி ஆனந்தனின் பாடலில் வரும் "வெறிகொள் தமிழர் புலிப்படை" என்ற வரிகளைப் படித்த இலங்கையின் இரகசிய பொலிசார் சி. ஐ. டி. பஸ்தியாம்பிள்ளை போன்றவர்கள் கவிஞரை விசாரணைக்குட்படுத்திய போது கவிஞரிடம் "நீ புலிப்படைக்காகத் தானே இப்பாடலைப் பாடினாய்" என்று மிரட்டிய போது கவிஞர் காசி ஆனந்தன் கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடலான

"கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா!'"

என்ற பாடலைச் சுட்டிக்காட்டி "நான் பாடியமையால் புலிப்படை என்ற தீவிரவாத அமைப்பு உருவானதா? அல்லது தீவிர அமைப்பு உருவான பின்னால் நான் பாடினேனா?" என்று பதில் கேள்வி எழுப்பினார். கவிஞர் காசி ஆனந்தன் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடலுக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களது இப்பாடலையும் இது போன்ற வேறு தமிழ் உணர்ச்சிப் பாடல்களையும் பாடியமைக்காக தேனிசை செல்லப்பா அவர்களோ தமிழகப் பொலிசாரால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே கைதாகி விசாரிக்கப்பட்டார். ஈழத்தமிழர் உரிமைக்குக்குரல் கொடுத்தமைக்காக தமிழக அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரேயே ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுத்தமைக்காகத் தேனிசை செல்லப்பா அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

நாம் தமிழர் இயக்க ஸ்தாபகரும் முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகருமான சி.பா. ஆதித்தனார் அவர்கள் தான் செல்லப்பாவுக்கு தேனிசை செல்லப்பா என்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தார்.

தமிழ் நாட்டின் திருநெல்லி மாவட்டத்தைச் சேர்ந்த தேனிசை செல்லப்பா அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள வானொலி நிலையங்களிலும் தூரதர்ஷன் தொலைக்காட்சியிலும் பிலிப்பைன்சிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

பல்துறை ஆற்றல் பெற்ற செல்லப்பா அவர்கள் பால வயதில் பிரபல திரைப்பட நடிகரும் நாடகக் கலைஞருமான நடிகவேள் எம். ஆர். எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்களிலும் நடித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் தளபதி மாத்தயா மற்றும் பேபி ஆகியோரைத் திரு. செல்லப்பா 1981 ஆம் ஆண்டு சென்னையில் சந்தித்து அவர்களுக்கு அறிமுகமானதோடு நெருங்கிய நண்பருமானார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கிடைத்த தொடர்பானது தேனிசை செல்லப்பா அவர்களது பாடல்களை ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியது. 1981 ஆம் ஆண்டில் சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி தலைவர் அஜித் மாத்தயா அவர்களின் அயராத முயற்சியால் திரு. செல்லப்பா அவர்களது தமிழீழ விடுதலை பற்றிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு நாடாவில் வெளியிடப்படலாயிற்று. அக்காலகட்டத்தில் இவ்வாறாக பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொள்வதற்கு ஆயிரம் ரூபா மட்டுமே செலவாகியது. பின்னர் தேனிசை செல்லப்பா அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் 'தமிழீழக் கீதங்கள்', 'புயல்கால ராகங்கள்', 'அந்நியர் வந்து புகல் என்ன நீதி' ஆகிய ஒலிப்பதிவு நாடாக்களுக்கு குரல் கொடுத்தார். இந்த ஒலிப்பதிவு நாடாக்களில் கவிஞர் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பாடல்களை அவர் இசைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தமையால் இந்திய வானொலியும் இந்திய தொலைக்காட்சியும் இவரை முற்றாக புறக்கணிக்கலாயின. ஆனால் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகின்றார்.

தூரதர்சன் காட்சி வானொலி ஒளிபரப்பாகாத குக்கிராமங்களில் அவரை நேரில் பார்க்க முடிகிறது. இந்திய வானொலியை செவிமடுக்காத தமிழக கிராமத்து மக்களது செவிகளில் எல்லாம் அவரது குரல் கேட்கிறது. இன்று அவர் பாடாத நகரங்களோ கிராமங்களோ தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படியாக அவர் பாடல்கள் எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் கருத்துக்களை தமிழக மக்களுக்கு இசைவடிவில் எடுத்துச் சொல்லும் ஊடகமாக இன்று அவர் விளங்குகின்றார்.

உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் இன்று தேனிசை செல்லப்பாவின் குரல் கணீரென்று ஒலிக்கின்றது. அன்று வண. பிதா தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியத் தூதுவராக தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் சென்று வந்ததைப் போல் இன்று தமிழ் இசைத் தூதுவராக உலகை வலம் வந்து இவரது குரல் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இவரது குடும்பமே ஒரு இலட்சியக் குடும்பம். இன்று மேடைக் கச்சேரி என்றால் திரைப்படப் பாடல்களையும் துள்ளிசைப் பாடல்களையும் தான் காணமுடிகிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் இவரும் இவரது இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் கிராமம் கிராமாகச் சென்று துவிச்சக்கர வண்டியில் தமிழ் உணர்ச்சிப்பாடல்களை மட்டுமே பாடிவருகிறார்கள். இவர்கள் செய்கின்ற பணி புனிதமான விடுதலைப் பணியாகும்.

ஈழம் வருகின்ற இவர்கள் இலங்கையில் தமிழ் மண்ணில் எட்டு மாவட்டங்களிலும் தலா இரண்டு சங்கீதக் கச்சேரிகள் வீதம் பதினாறு கச்சேரிகள் செய்யவுள்ளார்கள். தேனிசை செல்லப்பா குழுவினரோடு தற்போது தமிழகத்தில் பிரபல்யமாகிவரும் சுவர்ணலதாவும் வருகின்றார். இந்த இசைக்குழுவினருக்கு முழுத் தமிழினமும் கடமைப்பட்டுள்ளது. இவர்களது முதல் இசைக்கச்சேரி எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முழுத் தமிழினமும் திரண்டு வந்து இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதே இவர்கள் செய்து வரும் தமிழீழ விடுதலைப் பணிக்கு சிறந்த கைமாறாகும். பன்னிரண்டு ஆண்டுகளின் பின் யாழ். முற்றவெளி மைதானம் தேனிசை செல்லப்பா குழுவினரின் தேனிசை மழைக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டாண்டில் மலரும் குறிஞ்சிமலரைப் போல் பன்னிரண்டு ஆண்டுகளின் பின் முற்றவெளியில் ஓர் இசைமலர் மணம் வீசுகின்றது.

தலைவர் பிரபாகரன் மீது அளவு மீறிய பேரன்பும் பெரும்பற்றும் கொண்டவர் தேனிசை செல்லப்பா அவர்கள். இவர் 1983இல் பாடிய பாடல்களில் தலைவர் பிரபாகரனுக்கு பிடித்த பாடல் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்ற பாடலாகும்.

நன்றி: ஈழநாதம்-1990.04.22

https://tamileelamarchive.com/article_pdf/article_ee9cbcbbaf7938994b0cbe8b92440aaa.pdf (பக். 11)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.