Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் 2024 : மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் – நிலாந்தன்!

spacer.png

December 1, 2024

நான்கு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் திண்ணை விருந்தினர் விடுதியில் ஒரு தூதரகத்தின் இரவு விருந்தில் கலந்து கொண்டேன். எனது மேசையில் மூத்த ஊடகவியலாளர்கள் இருவரும் ஊடக முதலாளி ஒருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் கட்சி ஒன்றின் முக்கியஸ்தரும் அமர்ந்திருந்தார்கள். எங்களோடு இருந்து கதைத்துக்கொண்டிருந்த ஒரு ராஜதந்திரி என்னைப் பார்த்துச் சொன்னார் ” எல்லா ஈழத் தமிழர்களின் மனதிலும் ஒரு நாடு என்ற கனவு உண்டு” இப்படிக் கூறிவிட்டு அருகில் இருந்த அந்தக் கட்சிப் பிரமுகரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சொன்னார் “இதோ இவருடைய தலைவர் அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவரிடமும் அந்தக் கனவு உண்டு”

ஆம். அந்தக் கனவு எல்லா ஈழத் தமிழர்களிடமும் இருப்பதால்தான் அந்தக் கனவைக் கட்டியெழுப்பிய தியாகிகளை அவர்கள் எல்லா இடர்களின் மத்தியிலும் நினைவு கூர்கிறார்கள்.

இம்முறை மாவீரர் நாளையொட்டி போலீசார் கடந்த ஆண்டுகளில் செய்வதைப் போல நீதிமன்றத்திற்கு போய் தடை உத்தரவுகளை பெற்றுக் கொண்டு வரவில்லை. எனினும் அம்பாறையில் போலீசார் சில நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவுப் பொருட்களுக்குத் தடை என்று அறிவித்திருந்த போதிலும், பெரும்பாலான சிறிய மற்றும் பெரிய தமிழ்ப் பட்டினங்களில் மாவீரர்களின் பாடல்கள் அனைத்தும் ஒலிக்கவிடப்பட்டன. உட்கிராமங்களில் மக்கள் கூடும் இடங்களிலும் பாடல்களைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அடர் மழை பொழிந்தது. வெள்ளம் பெருகி சில இடங்களில் பாதைகளை மூடியது. புயல் வரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது. எனினும் மழை விட்டிருந்த இடையூட்டுக்குள் மக்கள் துயிலுமில்லங்களை நோக்கிக் குவிந்தார்கள். குடைகளின் கீழே சுடர்களை ஏற்றினார்கள். ஆம். அவர்கள் தமது தேசக் கனவைக் கட்டியெழுப்பப் புறப்பட்டவர்களை ஒரு தேசமாக நினைவு கூர்ந்தார்கள்.

“அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம்தான்” என்று மிலன் குந்ரோ- Milan Kundera- கூறுவார். நினைவுகளின் போராட்டம் அல்லது மறதிக்கு எதிரான போராட்டம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசமாகத் திரள்வதன் ஒரு பகுதி. நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதி.

தமிழ் மக்கள் எதை எதை மறக்கவில்லை? அல்லது மறக்கக் கூடாது?

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் தங்களைத் தியாகம் செய்தவர்களை மறக்கக்கூடாது. அதேசமயம் அந்த தியாகியின் இழப்பால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களையும் மறந்துவிடாதிருக்க வேண்டும். தியாகிகளின் வீட்டில் அடுப்பு எரிகின்றதா? அந்தத் தியாகியின் வீட்டுக்கூரை மழைக்கு ஒழுகுகின்றதா? அந்த தியாகியின் முதிய பெற்றோர் இப்பொழுது யாரோடு இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள்? அந்த தியாகியின் மனைவி இப்பொழுது எங்கே? அவருடைய வருமான வழி என்ன? அந்த தியாகியின் பிள்ளைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? போன்ற எல்லா விடயங்களையும் மறந்துவிடாமல் கவனிக்க வேண்டும்.

இரண்டாவதாக, அந்தத் தியாகியோடு போர்க்களத்தில் நின்றவர்கள், கையைக் காலைக் கொடுத்தவர்கள், கண்ணைக் கொடுத்தவர்கள், இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்கள்,சக்கர நாற்காலிகளில் வாழ்பவர்கள், இப்பொழுதும் படுக்கையில் கிடப்பவர்கள், இப்பொழுதும் உடல் முழுவதும் சன்னங்களைக் காவிக்கொண்டு திரிபவர்கள், என்னவென்று தெரியாத நோய்களைக் காவிக் கொண்டு திரிபவர்கள்…ஆகிய முன்னாள் இயக்கத்தவர்களையும் மறக்கக்கூடாது. இந்த நாட்டிலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தரப்பு -most vulnerable-அவர்கள்தான். அவர்களிற் சிலர் கடந்த 15 ஆண்டுகளாக தேர்தல் கேட்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆறு பேர் வெவ்வேறு கட்சிகளில் தேர்தல் கேட்டார்கள். ஒருவரும் வெற்றி பெறவில்லை. காலை இழந்த ஒரு பெண்ணுக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

அந்த முன்னாள் இயக்கத்தவர்களில் யாருக்குமே தமிழ் மக்கள் வெற்றியைக் கொடுக்கவில்லை. ஏன்? ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் தேர்தல் கேட்கக்கூடாது என்று தமிழ் மக்கள் நம்புகிறார்களா? அல்லது, இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்கு மறதி அதிகமா? அல்லது முன்னாள் இயக்கத்தவர்கள் தேர்தல் அரசியலின் கள்ளச் சூத்திரங்களைக் கற்றுத் தேறவில்லையா? ஒவ்வொரு ஆண்டும் துயிலும் இல்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாருக்கு வாக்காக மாறுகிறது?

தியாகிகளை நினைவு கூர்வது என்பது, அந்த தியாகிகளோடு போர்க்களத்தில் நின்றவர்களை, போராட்டத்தில் தமது இளமையை, தமது வயதுகளை, தமது கல்வியை, அவயவங்களை இழந்தவர்களையும் மறந்து விடாமல் இருப்பதுதான்.

மூன்றாவது,போராடப்போய் சிறை வைக்கப்பட்டவர்களை,காணாமல் ஆக்கப்பட்டவர்களை, அவர்களுக்காகப் போராடும் முதிய அம்மாக்கள் அப்பாக்களை, போரினால் விதவைகளாக்கப்பட்டவர்களை மறந்துவிடாதிருக்க வேண்டும். போர் விதவைகள் கிட்டத்தட்ட 90000 பேர் உண்டு. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது போரினால் யார் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை தூர்ந்துபோனதோ, யாரெல்லாம் மீண்டெழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையை, வாழ வேண்டும் என்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுந்தான்.

நாலாவது, 2009ஐ உடனடுத்த ஆண்டுகளில் நினைவு நாட்களை ஒழுங்குபடுத்தியது அரசியல் கட்சிகள்தான். அவர்களால்தான் அப்பொழுது அதைத் துணிந்து செய்ய முடிந்தது. இப்பொழுதும் நினைவு கூரும் களங்களின் பின் கட்சிகள் உண்டு. நினைவிடங்களில் கூடும் மக்களின் கூட்டுத் துக்கத்தை கொத்து வாக்காக எப்படித் திரட்டுவது என்பது அவர்களுடைய பிரச்சினை. ஆனாலும் மறதிக்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு பங்கு உண்டு. அதே சமயம் அவர்களுடைய அரசியல் முதலீடும் தமிழ் மகாஜனங்களின் மறதி தான்.

2009க்கு முன்பு தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதி தியாகத்துக்குத் தயாராக இருப்பது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படைத் தகுதி பிழைக்கத் தெரிந்திருப்பது. இந்தத் தகைமை வேறுபாட்டுக்குப் பின்னால் உள்ள சீரழிவை தமிழ் மக்கள் மறந்து விடாமல் இருக்க வேண்டும். தமிழ்க் கட்சிகளுக்கு தமிழ் மக்களின் நினைவும் தேவை; மறதியும் தேவை.

spacer.png

தமிழ் மக்களின் மறதியின் மீது அதிகம் வெற்றிகரமாக அரசியல் செய்வது தமிழரசுக் கட்சிதான். கடந்த 15 ஆண்டுகளாக தலைவராக இருந்த சம்பந்தர் ஒவ்வொரு பெருநாள் திருநாளின் போதும் குடுகுடுப்பைச் சாத்திரக்காரனைப் போல அல்லது சுயாதீன திருச்சபையின் போதகரைப் போல அருள் வாக்குக் கூறிக்கொண்டிருந்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும் என்றெல்லாம் கூறினார். எதுவும் வரவில்லை. சம்பந்தரும் இப்பொழுது இல்லை. ஆனால் தமிழ் மக்கள் அதையெல்லாம் மறந்துபோய் இந்த முறை தமிழரசுக் கட்சிக்கே அதிகம் வாக்குகளைக் கொடுத்தார்கள்.

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் மறதியை வைத்து விளையாடுகிறது என்பதனை எப்பொழுதும் சுட்டிக்காட்டுவது, பிரதானமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் மறதிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்பது அந்தக் கட்சிதான். அதே சமயம் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏகபோக வாரிசாக தன்னைக் காட்டிக்கொள்ளப் பார்க்கின்றது. நினைவு நாட்களைத் தத்தெடுக்கப் பார்க்கின்றது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த கட்சியின் செயலாளர் கஜேந்திரன் ஒரு காணொளியில் கூறுகிறார்…. ஏனைய எல்லா கட்சிகளையும் விடவும் சாகத் தயாரான கட்சி தாங்கள்தான் என்று. ஒரு கட்சி தனது மக்களுக்காக சாகத் தயாராக இருக்கிறது என்பதனை யாராவது அந்த கட்சியின் உறுப்பினர் செத்துத்தான் நிரூபிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காகப் போராடி யாரும் அப்படி உயிரைத் துறந்ததாகத் தெரியவில்லை. தன்னை ஏனைய கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தான் மட்டும் சாகத் தயாரான கட்சி என்று முன்னணி கூறிக்கொள்கிறது. ஆனால் 3லட்சத்துக்கும் குறையாத போராளிகளும் மக்களும் உயிரைக் கொடுத்த ஒரு போராட்டத்தை கடந்து வந்த இனம் இது என்பதை அந்தக் கட்சி மறந்து விட்டது. இதுவும் தமிழ் மக்களின் மறதியின் மீது செய்யப்படும் அரசியலே.

இவ்வாறு தமிழ் மக்களின் மறதியின் மீது அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகள், நினைவு நாட்களை வைத்துச் சூதாடுவதைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் மறதிக்கு எதிராகப் போராட வேண்டும். 

எனவே மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசத்தைக் கட்டியெழுப்பிய நினைவுகளைத் தொடர்ந்தும் தேசத்தை பிணைக்கும் நினைவுகளாகப் பேணுவதுதான். நினைவின் பசை கொண்டு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது.

மேலும், இறந்த காலத்தை மறந்து விடாமல் இருப்பது என்பது, இறந்த காலத்திலேயே வாழ்வது அல்ல. காயங்களோடு வாழ்வது அல்ல. துக்கத்தில் உறைந்து கிடப்பதும் அல்ல. மாறாக, இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வது. மகத்தான வீரமும் மகத்தான தியாகமும் எங்கே எப்படித் தோல்வியுற்றன என்பதைக் கற்றுக்கொள்வது. கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் காயங்களை,கூட்டு மனவடுக்களை,கூட்டுத் தோல்வியை, கூட்டு அவமானத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது. அந்த அரசியல் ஆக்க சக்தியை நீதிக்கான போராட்டத்தின் உந்து விசையாக மாற்றுவது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.