Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தவெக - விசிக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/TVK

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது.

அம்பேத்கர் குறித்து 36 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் விஜயுடன் இந்த நூல் வெளியீட்டு விழா மேடையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல்கள், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்புகள் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியது.

திமுக தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, விஜயுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும் திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது.

 

இந்ததச் சூழலில் இன்று (டிசம்பர் 6) இதற்கான விளக்கம் ஒன்றை அறிக்கையாக வெளியிட்ட திருமாவளவன், இந்தப் புத்தக வெளியீட்டு விழா சார்பாக உருவான விவாதங்கள் அனைத்தும் ஒருதலைபட்சமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விழா தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அதோடு, ஒரு நூல் வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் கூறியது என்ன? திருமாவளவன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து த.வெ.க தரப்பு கூறுவது என்ன? தமிழக அரசியலில் இந்த நிகழ்வு எவ்வாறாகப் பார்க்கப்படுகிறது?

எதனால் இந்த சர்ச்சை?

கொள்கைகளும் கோட்பாடுகளும் வேறாக இருந்தாலும் இருவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்பது பல சமயங்களில் மக்கள் பார்த்த ஒன்றாகவே இருக்கிறது.

தவெக - விசிக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL

ஆனால் திருமாவளவன் விஜயுடன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது, விஜயின் விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு பெரும் சர்ச்சையாக மாறியது. அக்டோபர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த மாநாட்டில் தன்னுடைய கட்சியின் அரசியல் எதிரி திமுக என்று கூறினார்.

"பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.கவின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி," என்றார் விஜய்.

பிறகு, கூட்டணி குறித்துப் பேசிய அவர், "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருப்பினும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கும், அதிகாரப் பகிர்வும் கொடுக்கப்படும்" என்று கூறினார்.

ஆனால், இந்த மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்றும், 'அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் ஜனநாயகம், குவித்து வைப்பது அல்ல, இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல" என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் விஜய் தன்னுடைய மாநாட்டில் பேசியது, விசிக உடனான கூட்டணிக்கான அழைப்பாகக் கருத்தப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமாவளவன், தாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக நீடிப்பதாகவும், விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்றும் கூறினார்.

 

அதிருப்தி தெரிவித்த திருமாவளவன்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X

படக்குறிப்பு, விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்றே இந்த புத்தக வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, திருமாவளவன் அதைப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

விஜயின் கட்சி அதிகாரப்பூர்வமாக நிறுவப்படுவதற்கு முன்பாகவே இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் திருமாவளவன் என்பது அவரது அறிக்கையின் மூலம் உறுதியாகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் "விஜய் விழாவில் பங்கேற்க இசைவளித்துள்ளதாகச் சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது" என்று மேற்கோள் காட்டிய திருமாவளவன், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராத சூழலில் ஒரு தமிழ் நாளிதழ் இதைப் பெரிய செய்தியாக வெளியிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், "ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதை அரசியலாக்கியது," என்றும் தன்னுடைய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

"திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் ஐயத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும்தான் இதன் உள்நோக்கமாக இருக்க முடியும்," என்று பெயர் ஏதும் குறிப்பிடாமல் குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர்.

இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் உறுதியானதும், பலர் பல்வேறு ஊகங்களை பரப்பி வருவதாகக் கூறும் அவர், "இவர்களில் பெரும்பாலானோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்ற செயல் திட்டத்தோடு," இருப்பதாகக் குறிப்பிட்டார்.

 

'காய் நகர்த்தும் அரசியல் எதிரிகள்'

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X

திருமாவளவனை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற விகடனின் முடிவை ஏன் யாரும் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்னெழுப்பியுள்ளார்.

மேலும், இதற்குத் தானும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், "உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்க மாட்டேன். அவரை (விஜயை) வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள்," என்று விகடன் பதிப்பகத்திடம் தான் கூறிவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?" என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன்.

 

திருமாவளவனின் முடிவு குறித்து த.வெ.க கூறுவது என்ன?

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,TVK VIJAY/FACEBOOK

படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "கொள்கைகளும் கருத்துகளும் வெவ்வேறாக இருந்தபோதும் இரண்டு வெவ்வேறு தலைவர்கள் ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதும், ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதும் இயல்பான ஒன்று. இந்த நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்காமல் போனது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது," என்று கூறினார்.

"அம்பேத்கரை எங்கள் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கிறோம். இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள் என்று பலரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தொகுப்பே அந்த நூல். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரின் கட்டுரைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தக வெளியீட்டு விழாவை அரசியல் நிகழ்வாகப் பார்ப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்," என்று கூறினார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் திருமாவளன் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தால், அம்பேத்கரின் தியாகங்களும், சமூக நீதி, சமத்துவ அரசியல் கருத்தாக்கங்களும் பல கோடி மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட லயோலா மணி, "கூட்டணி வேறு, கொள்கை வேறு. சூழல் காரணமாகவே திருமாவளவனால் இந்த நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை," என்று மேற்கோள் காட்டினார்.

"திருமாவளவன் சுயம்பாக வந்த தலைவர். அவர் மீது எங்களுக்கு கோபமோ, விமர்சனமோ இல்லை," என்றும் அவர் கூறினார்.

 

இந்த அறிக்கையை எவ்வாறு அணுகுவது?

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,@LOYOLAMANI/X

படக்குறிப்பு, த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி (இடது)

கூட்டணிகளைப் பொறுத்தவரை நிரந்தரமான கூட்டணி என்ற ஒன்று இல்லவே இல்லை எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான கிளாட்சன் சேவியர்.

"புத்தக வெளியீட்டு விழாவை ஒரு அறிவுசார் தளமாகவே பார்க்க வேண்டும். இன்றைய சூழலில், சமகால நிகழ்வுகள் குறித்த ஊடக மற்றும் பொதுமக்களின் நினைவானது ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கக் கூடியது. ஆனால் இந்த நிகழ்வில் திருமாவளவன் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து மௌனித்து இருந்தால் அது தொடர்பாகவும் விமர்சனங்கள் ஏற்படும். இத்தகைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிக்கையாகவே இதை அணுக வேண்டும்," என்று கூறினார்.

மேலும், ஒரு அரசியல் மேடையை இரு தலைவர்கள் பகிர்ந்து கொண்டால் அது கூட்டணிக்கு வழிவகுக்கும் என்று கூறிவிட இயலாது, கொள்கை ரீதியாகப் பல பத்தாண்டுகளாக திருமாவளவன் உறுதியாக இருந்திருக்கிறார் என்றும் சேவியர் குறிப்பிட்டார்.

"திமுகவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதைச் செய்திருக்கலாம். அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, பாஜகவில் இணைந்து, மேலும் சில தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை அவர் உறுதி செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

இந்திய அரசியல் சூழலில் அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு தலைவராக திருமாவளவன் அறியப்படுகிறார். தனது நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த தகவல்களை ஊடகத்திற்கு வெளியிட்டது யார் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இதில் அதிகமாக உள்ளர்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை," என்றும் கூறினார் அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் கிளாட்சன் சேவியர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.