Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"வரன்" 

 

உப்பு கலந்த கடல்காற்றில் செந்நிற பூமியின் வாசனை கலந்த யாழ்ப்பாணத்தின் இதயத்தில், மேல் தட்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதிரழகி, நட்சத்திரங்களுக்குப் போட்டியான அழகு கொண்ட பெண்ணாகக் காணப்பட்டாள். அவள் தன் வீட்டின் நீண்ட பொது அறையில் இருந்த சாளரத்தை ஒட்டி நின்று கொண்டு இருந்தாள். சாளரத்தின் ஊடாக தெரிந்த மேகம் மழை வருவதற்கு அறிகுறியாக சற்று மூட்டமாகக் காணப்பட்டது. அவள் மனதைக் கவர்ந்த அந்த காட்சியை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த அவளின் மனம், பின்னோக்கி நகர்ந்தது. 


கதிரழகி, மூத்த மகளாக, கணனி கற்கையில் இளநிலை பட்டம் பெற்றிருந்தாள். அடுத்து முதுகலை பட்டம், வெளிநாட்டில் ஒன்றில்  பெறவேண்டும் என்பது அவளின் ஆசையாக இருந்தது. ஆனால் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்ய விரும்பி,  "வரன்" தேட ஆரம்பித்தனர். 


" உனக்கு இரண்டு தங்கைகள் உண்டு, மற்றும் அப்பாவும் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறார். நீ முதலிலே திருமணம் செய்தால்த்தான், பின் தங்கைகளுக்கும் "வரன்" தேடலாம். அதை மனதில் வைத்துக்கொள். உன் அழகுக்கும் பண்புக்கும் படிப்புக்கும் வரன் கட்டாயம் தேடியே வரும். என்றாலும் நாம் கட்டாயப்படுத்த மாட்டோம். நாம் தெரிந்து எடுத்தவர்களில், உனக்கு பேசி, கொஞ்சம் பழகிப் பிடித்தவரை ஏற்கலாம்." என்று மகளிடம் கூறினாள். தன் கடமையைச் செய்யும் தாய்க்கு அவள் மறுப்புக் கூறமுடியாது. என்றாலும் தன் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதால், பொருத்தமான வெளிநாட்டு வரனுக்குச் சம்மதித்தாள்.


அவளுடைய குடும்பம் அவளுடைய அழகை மட்டும் வரன் பார்ப்பதில் முதலீடாக வைக்கவில்லை. அவளின் குணம், மற்றவர்களுடன் பழகும் நேர்த்தியான பண்பாடு, தங்கள் குடும்ப அந்தஸ்து இவைகளையும் கருதி அதற்கு நிகரான வரன்களைத் தேடத் தொடங்கினர். 


"அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!"


அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில்,  அங்கே கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அணிந்து யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுபவள் தான் அவள். அதனால்த் தான் தாய் வரன் தேடுவதில் பெரிதாகக் கவலைப்படவில்லை. 


புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே மகளுக்கு பொருத்தமான வரனை காண அவளது குடும்பம் எதிர்பார்த்தது, ஒருவேளை வெளிநாட்டில் வளர்க்கப்பட்ட பொருத்தமான வரன், அவளது திறந்த மனப்பான்மையையும் பாரம்பரியத்திற்கான மரியாதையையும் பகிர்ந்து கொள்வார்கள் என்று கட்டாயமாக நம்பினர். ஆனால் தொலைதூர உறவினர்கள், நண்பர்களிடம் இருந்தும் மற்றும் தரகர்களிடம் இருந்தும் வரன்கள் எனத் தேடத்தொடங்கிய பொழுதுதான், அது நினைத்ததை விட மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் தெரிந்தது.


வரன் தேடி அலுத்துப்போய், தாய் ஒருநாள் மனம் ஓடிந்தவளாக, இயற்கை அழகை வெறுத்து பார்த்துக்கொண்டு நின்றாள்.  மூங்கிலாகிய தோள்களையுடைய பெரிய நிலமகளின் நீலமணிகளையுடைய மலையாகிய அழகிய மார்பில், தொலைவிலிருந்து, இரு பக்கங்களிலிருந்தும் வந்து, அசையும் முத்து மாலையைப் போல அசைந்துக் கூடி, கரையில் இருக்கும் மரங்களை மட்டும் அல்ல, இவளையும் இன்று வருத்தி ஓடுகின்றன காட்டு ஆறுகள்.

"மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று."

தன் மகளின் அழகில், மனம் பறிகொடுத்து வர பல இளைஞர்கள் இருந்தாலும், மேற்படிப்பு படிக்கவேண்டும் என்ற அவளின் ஆசையையும், யாழ்ப்பாண பண்பாடு தொடரவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் ஒருங்கே நிறைவேற்றக்கூடிய வரன் இழுபட்டுக்கொண்டே இருந்தது. 

"அம்பும் அனலும் நுழையாக்
கன அந்தகாரத்து
உம்பர் மழை கொண்டு, அயல்
ஒப்பு அரிது ஆய துப்பின்
கொம்பர், குரும்பைக் குலம்
கொண்டது, திங்கள் தாங்கி,
வெம்பும் தமியேன் முன்,
விளக்கு எனத் தோன்றும் அன்றே.
மருள் ஊடு வந்த மயக்கோ!"

பவளக் கொடி ஒன்று கார்மேகமான கூந்தலை சுமந்து, குரும்பைகள் போன்ற மார்பகத்தை ஏந்தி, திங்களைப் போன்ற முகம் சுமந்து விளக்குப் போல் மென்மையாய் ஒளிரும் உருவமாய் என் முன் இங்கே தனியாக எரிகிறது என்று மகளின் எழிலில் எதிர்பார்த்த வரன்கள் இலகுவாக விழுவார்கள் என்று யோசித்தவளுக்கு இது ஒரு தோல்விதான்!

புலம்பெயர்ந்த தமிழ் மணமகன் தமது முக்கிய மூன்று எதிர்பார்ப்புகளையும் சிறந்ததாக கொண்டு வருவான் என்று நம்பிய கதிரழகியின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் வெளிநாடுகளைத் தேடினர். அவர்கள் ஒரு படித்த தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள, மகளின் மேற்படிப்பிற்கு தடையில்லாத வரனில் முதலில் கவனம் செலுத்தினர். தந்தை சிவகுமாரும் எண்ணற்ற ஓய்வு நேரங்களை தொலைத்தூர உறவினர்களுடன், நண்பர்களுடன் அழைப்புகளில் செலவழித்து, பொருத்தமான ஒருவரைத் தேடினார்.


அவர்களின் முதல் சாத்தியமான ஒருவனாக டொராண்டோவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அனுஷ் அறிமுகமானான். அனுஷ் நல்ல கல்வியுடனும் மற்றும் நிரந்தர வேலையுடனும், பொருத்தமானவராகவும் தோற்றமளித்தான். ஆனாலும், அவர்களின் முதல் உரையாடலின் போது, அனுஷ் பொருத்தமற்றவன் போல் உணர்ந்தனர். அனுஷ் உணர்ச்சிப்பூர்வமாக தன்னை அந்த உரையாடல்களில் ஈடுபடாமலும் அல்லது அதில் இருந்து விடுபட்டவனாகவும் இருந்தான். மேலும் தமிழ் கலாச்சாரத்துடனான அவனது தொடர்பைக் பட்டும் படாமலும் கேட்ட போது, அவன் அதை தவிர்த்து விட்டான்.


சிவக்குமார்: “அனுஷ், யாழ்ப்பாணத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் நீங்கள் எப்படி எங்கள் பாரம்பரியங்களுடன் இணைந்திருக்கிறீர்கள்?”


குமார்: “சரி, எனக்கு முதலில் நேரமில்லை. தவிர, இரண்டாவதாக இந்த மரபுகள் திருவிழாக்களுக்கு நல்லவையாக இருக்கலாம்? ஆனால் அவை உண்மையில் மூன்றாவதாக டொராண்டோவில் என் வாழ்க்கையில் இது முழுமையாக பொருந்தாது என்று கருதுகிறேன்.


இந்த அலட்சிய மனப்பான்மை சிவகுமாருக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. அனுஷின் நற்சான்றிதழ்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவனது பாரம்பரியத்தின் மீதான மரியாதையின்மை கவலைக்குரியது என்பதை அவர் உணர்ந்தார். கதிரழகி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய வேர்கள் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு துணையைத் தான் அவள் விரும்பினாள், அவைகளை கண்டும் கொள்ளாவிட்டாலும்  அதை, நிராகரிக்கும் ஒருவனை அல்ல.


தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைத் தான் அவள் நினைத்தாள். அது திருத்தப்பட்டு, மேம்படுத்தப் படுவதை அவள் எதிர்க்கவில்லை, பண்பாடு என்பது, தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே என்பது அவளுக்கு நன்றாக புரியும். அங்கு ஒரு தொடர்ச்சி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து இன்றுவரை தொடர்கிறது. அதை முற்றாக எறிவது அல்ல என்பதே அவளின் வாதம். 


லண்டனைச் சேர்ந்த மருத்துவர் அகவழகன் மற்றொரு வரனாகும். அவன் மரியாதைக்குரியவன் மற்றும் கவர்ச்சியானவன், ஆனால் அவனது குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் தான் சவாலானவையாக இருந்தன. இரு குடும்பங்களும் சந்தித்து போது, அகவழகனின் தாயார் கணிசமான வரதட்சணைக்கான தனது விருப்பத்தை நுட்பமாக மறைமுகமாக கூறினார், அந்த நடைமுறையை சிவகுமார் மட்டும் அல்ல கதிரழகியும்  வெறுத்தாள்.


"உங்க பையனோடு குடும்பம் நடத்தத் தானே பெண் கேட்கிறீங்க? உங்க மகனும் நல்ல உத்தியோகம், நானும் படித்தவள், பகுதி நேர வேலை செய்துகொண்டு முதுகலை பட்டத்துக்கும் படிக்கப்போகிறேன், எனவே உங்க மகனுக்கு சமனான சம்பளம் கட்டாயம் நான் உழைப்பேன். நீங்களும் வசதியானவர்கள். அப்படி என்றால், ஏன் இந்த வரதட்சணை?" என வெடுக்கென கேட்டுவிட்டாள்.


அகவழகனின் தாயார்: “நாங்கள் பாரம்பரியத்தை மதிக்கிறோம், திருமண ஏற்பாடுகளில் சில விடயங்கள் இயல்பாக வரும். அது தான் வரதட்சணை ... என்று இழுத்தாள்
  

சிவக்குமாரின் குரல் கடினமாகியது. “மேடம், கதிரழகியின் மதிப்பு அவளுடைய குணத்தில் இருக்கிறது, பொருள் செல்வத்தில் இல்லை. நாங்கள் பேரம் பேசவில்லை; நாங்கள் குடும்பத்தைத் தேடுகிறோம்." என உறுதியாகக் கூறினார். 


பல வாரங்கள் தோல்வியடைந்த சந்திப்புகளுக்குப் பிறகு, சிவகுமாரும் அவரது மனைவியும் ஒரு அமைதியான தருணத்தைப் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.


சிவக்குமார்: “ஒருவேளை நாம் தவறான இடங்களில் தேடியிருக்கலாம். வெளிநாடுகளில் உள்ள நம் மக்கள் மாறிவிட்டனர். அவர்களின் மரபுகள், மதிப்புகள் மாறிவிட்டன. தேடலை வீட்டிற்கு கொண்டு வருவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம்." என மனைவியிடம் கூறினார். 


அதன் பிறகு, பல மாத அலுப்பான முயற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் தாயகத்தின் பகிரப்பட்ட வரலாறு, மதிப்புகள் மற்றும் கலாச்சார வேர்களுடன் கதிரழகிக்கு தகுதியான ஒருவரைக் கண்டு பிடிக்க உதவும் என்ற நம்பிக்கையில், யாழ்ப்பாணத்திற்கே தங்கள் தேடலைத் திருப்ப முடிவு செய்தனர். ஆனால் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், யாழ்ப்பாணமும் மாறிவிட்டது. மக்கள் அமைதியான வடுக்களை சுமந்தனர் மற்றும் இழப்பு, பின்னடைவு மற்றும் கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேற்றத்திற்கான உந்துதல் ஆகியவற்றால் எப்போதும் மறுவடிவமைக்கப்பட்டனர். பகிரப்பட்ட வரலாறும் நெகிழ்ச்சியும் உள்ள இந்த மண்ணில் கதிரழகியின் கனவுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவனை கண்டுபிடிக்க மாட்டோமா என்ற தாயின் வேண்டுதல் ஒன்று இரண்டு அல்ல. 


யாழ்ப்பாணம் உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்து, நகரம் மெதுவாக உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மீண்டும் கட்டமைக்கத் தொடங்கியது. கட்டிடங்களில் இன்னும் அழிவின் தடயங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கதிரழகியின் குடும்பம் நன்றாக அறியும். யாழ்ப்பாண மக்கள் பல வருடங்களாக கஷ்டங்களை அனுபவித்தனர், இன்றும் அவர்கள் அன்றாட சவால்களை எதிர்கொண்டனர் - வரையறுக்கப்பட்ட வளங்கள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மாறிவரும் சமூகமாக இருக்கிறது. 


முதல் தகுதியுடையவராக, இமையன் என்ற ஒரு பள்ளி ஆசிரியரை கருத்தில் கொண்டனர். இவர் பணிவானவராகவும், மிகுந்த இரக்கமுள்ளவராகவும். மரியாதைக்குரியவராகவும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஆர்வம் கொண்டவன்.  அறிவே சிறந்த எதிர்காலத்திற்கான பாதை என்பது அவனின் வாதம்.


இமையன்: "இங்குள்ள எங்கள் இளைஞர்களின் மனதை வளர்ப்பதில் நான் நம்புகிறேன். யாழ்ப்பாணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தைப் பார்க்கவும், தங்கள் வாழ்வை மீளக் கட்டியெழுப்பவும், அதனால் ஒரு மாற்றத்தைக் தங்களுக்கு கொண்டுவரவும் அவர்கள் தகுதியானவர்கள் என்பதே என் கருத்து" என்றான்.


கதிரழகி அவனது அர்ப்பணிப்பைப் போற்றினாள், ஆனால் அவன் தனது ஊருக்கு அப்பாற்பட்ட வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கும் அவளது ஆர்வத்தை புரிந்துகொள்வானா என்று யோசித்தாள். அவள் அவனது கருணையால் ஈர்க்கப்பட்டாலும், அவனது கனவுகள் யாழ்ப்பாணத்தில் உறுதியாக வேரூன்றி இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதே நேரத்தில் அவளது கனவுகளும் அவளுக்கு முக்கியமாக இருந்தது. அவன் அதைப்பற்றி ஒன்றும் கூறாதது அவளுக்குள் ஐயப்பாடுகளை ஏற்படுத்தியது.


சில நாட்களுக்குப் பிறகு, வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து, அங்கேயே நிரந்தர விரிவுரையாளர் பதவி பெற்ற கமலன் என்ற இளைஞனிடமிருந்து அவளது குடும்பத்திற்கு ஒரு முன்மொழிவு கிடைத்தது, அவன் பொங்கல் விழாவுக்கு, தனது அயலவரின் விவசாயத் தொழிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்யவும், ஊரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவும் வருவதாக அவனின் விவசாய தந்தை அவர்களுக்கு அறிவித்து, அப்பொழுது நேரடியாக மேற் கொண்டு கதைப்போம் என்று கூறினார். 


கமலன் வெளிநாட்டில் இன்று வாழ்ந்தாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்ற ஆழமான உணர்வோடு இரண்டு பண்பாடையும் சமப்படுத்தினான். அவன் முன்னோக்கிச் சிந்திக்கும் மனதைக் கொண்டிருந்ததுடன் அவன் செய்த எல்லாவற்றிலும் அவனது அடிப்படை பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் அவனது வேர்களை நெருக்கமாக வைத்திருந்தான்.


"பண்டே உலகு ஏழினும் உள்ள
படைக் கணாரைக்
கண்டேன்; இது போல்வது ஒர்
பெண் உருக் கண்டிலேனால்;
உண்டே எனின் வேறு இனி
எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள்
இவள் ஆகும் அன்றே."  


முன்னமே பல நாடுகளிலும் இருக்கும் மகளிரைப் நான் பார்த்துள்ளேன்: இவள் போல் ஓர் பெண் அழகை நான் என்றும்  கண்டதில்லை. என் தங்கை மெல்ல என் காதில் கூறிய சாதாரண பெண்களிலிருந்து மாறுபட்ட இந்த எழில் வடிவத்தை கொண்ட, வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய, அந்த இளநங்கை இவளெயென அவன் மனதில் கருதினான். 


அவன் வெளிநாட்டில் படித்ததைப் பற்றியும், தனக்குக் கிடைத்த நண்பர்களைப் பற்றியும், அங்கே தனது வாழ்க்கை பற்றியும் கூறியதுடன், தான் படிப்பிக்கும் பல்கலைக்கழகத்திலேயே மேற்படிப்பிற்கு ஒழுங்கு செய்வதாகவும் கதிரழகி இடம் கூறினான். 


கமலன்: “எனக்கு இங்கிலாந்தில் நிரந்தர வதிவிட  வாய்ப்புகள் கிடைத்தாலும் நான் இருக்கும் இடம் யாழ்ப்பாணம் என்று தான்  எண்ணுகிறேன், நாம் இழந்ததை, நாம் எங்கு இருந்தாலும், மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எமக்கு இங்கு வேலை இருக்கிறது. எமது  எதிர்காலத்தை நான் இங்கே பார்க்கிறேன்!" என்று கூறினான்.


கதிரழகியின் உள்ளம் நம்பிக்கையால் துடித்தது. கமலனில், அவள் தேடும் சமநிலையை அவள் உணர்ந்தாள் - பாரம்பரியத்தை மதிக்கும் ஆனால் மாறுவதற்கான திறந்த மனப்பான்மை கொண்ட ஒருவனை,  வேர்களுக்கும் இறக்கைகளுக்கும் இடையிலான நுட்பமான நடனத்தைப் புரிந்துகொண்ட ஒருவனை, அதாவது கடந்த காலத்திற்குக் கட்டுப்படாமல், ஆனால்  அதற்கு மரியாதை செலுத்தும் ஒருவனை,  புதிய தொடக்கங்களுக்குத் மனம் திறந்திருந்தாலும் பழைய நினைவுகளைப் போற்றும் ஒருவனை அவள் கண்டாள். அது மட்டுமா கண்டாள் ? 


"இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!"

’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’


‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’ என்று எண்ணினாள். 


அவர்கள் தொடர்ந்து பேச பேச, தொடர்ந்து சந்திக்க சந்திக்க அவர்களின் தொடர்பு ஆழமானது. கமலனின் மென்மையான இயல்பும் திறந்த மனப்பான்மையும் அவளைக் கவர்ந்தன, அவளுடைய குடும்பமும் அவ்வாறே உணர்ந்ததை அவள் அறிந்தாள்.


ஓர் சில நாட்களின் பின், இரு குடும்பங்களும் மீண்டும் ஒருமுறை சந்தித்தனர், கமலனின் பெற்றோர் முறைப்படி கதிரழகியை மணமகளாக கேட்டனர். இரு குடும்பங்களும் தங்களுக்குள் அர்த்தமுள்ள பரிசுகளை பரிமாறினார். 


"மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்."


நறுமணப் பொருள்களின் நல்வாசத்தோடு வந்து, திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி, பெருமைக் குணங்களை உடைய வெற்றிவீரனான கமலனும், அவன்மீது பேரன்பு கொண்டவளாய், அவனுக்கு இனிய துணையாக ஆகவுள்ள அன்னம் போன்ற கதிரழகியும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள். ஒன்றோடு ஒன்று இணைந்த பேரின்ப வாழ்வு போலவும்  ஒருங்கிணைந்த வாழ்க்கை நெறி போலவும் இருந்தார்கள். அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த கதிரழகியின் தந்தை, தான் தேடிய "வரன்" மணக் கோலத்தில் மகளுக்கு அருகில் இருப்பதைக் கண்டு, தானே இயற்றிய பாடல் வரியை வாசித்தார், அவரது குரல் உணர்ச்சியால் திணறியாது. 


"நம்பிக்கையும் அன்பும் ஒன்று சேர  
இதயங்கள் இரண்டும் கலந்து கொள்ள 
விடியலை உடைக்கும் ஒளிக் கதிர்களாய்
புயல் காலங்களிலும் மலரும் தாமரையாய்  
அண்ணலும் நோக்க அவளும் நோக்க 
ஒன்றாக நீங்கள் நடந்து செல்வீர்களே!" 

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

468773086_10227554686395542_5948592467841750256_n.jpg?stp=dst-jpg_p526x395_tt6&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=qv9GIccbAqQQ7kNvgFadfkO&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=Amne0ASkyI11H7ApjwSmwK0&oh=00_AYCWqIfvog4cjKUtZWcIa3PWZnXcfzf4W7CSFyni4YKAhA&oe=6759D9B2 469548476_10227554686715550_9075586614730080055_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=TETErewtTUgQ7kNvgEucYyt&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=Amne0ASkyI11H7ApjwSmwK0&oh=00_AYC3M8g6Stzz_rjrLBlh_pX5swST4P6P7cpXBAnX-QWZkg&oe=675A0008

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.