Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது.

போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது.

போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார்.

நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது.

ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு.

எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”.

இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர்.

குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும். 

புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர்.

போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது.

மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின.

புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது.

ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது. 

அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது.

போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது.

மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது.

அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின.

இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார்.

மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன. 

இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின.

தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன.

பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின.

போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள்.

இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர்.

பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன.

மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது. 

சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர்.

ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது.

மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது.

குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும்.

அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள்.

போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. 

இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும்.

உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர்.

வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார்.

திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது.

உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார்.

தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.

கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர்.

பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள். 

( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்)

இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது.

மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது.
உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது.

“எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்”

என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம்.

https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவப் பிரிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.