Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன்

adminDecember 22, 2024
 

spacer.png

தமிழரசுக் கட்சிக்கு 75 வயது. கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழரசுக் கட்சி சாதித்தவை எவை? சாதிக்காதவை எவை ?

இப்பொழுதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளில் பெரிய கட்சி அது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கும் கட்சியும் அது. ஒரு விதத்தில் தாங்களே தலைமை சக்தி என்ற பொருள்பட சுமந்திரன் கூறிக்கொள்வார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் இருந்த ஒரு கட்சி எப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தது? அந்த முடிவுகளின் விளைவாக தமிழ்மக்களுக்கு கிடைத்தவை எவை? கிடைக்காதவை எவை?

இந்தக் கேள்விக்கு ஒரு குறியீட்டுப் பதிலைச் சொல்லலாம். தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அமைந்திருக்கும் வளாகத்தைச் சுற்றிப்பார்த்தால் கட்சியின் நிலையை, கட்சியால் வழி நடத்தப்பட்ட அரசியலின் நிலையை அது குறியீடாக வெளிப்படுத்தும். அந்த சிலையைச் சுற்றியிருக்கும் வளாகம் தொடர்ச்சியாக பராமரிக்கப்படுவதில்லை. பெரும்பாலான காலம் அதைச் சுற்றி பற்றைகள் புல்,பூண்டுகள் மண்டிக் கிடக்கும். அந்த சிலைக்கு ஏறிப்போகும் உலோகப் படிக்கட்டு துருப்பிடித்துக் கிடக்கிறது. அந்த வளாகத்தின் வாசலில் உள்ள கேற், அதன்பூட்டு எல்லாமே துருப்பிடித்துள்ளன. அவ்வப்போது அந்தச் சிலைக்கு மரியாதை செலுத்தச் செல்லும் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அதைக் குறித்த எந்த விவஸ்த்தையுமின்றி அந்தப் பற்றைகளின் பின்னணியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வளாகத்தைச் சுத்தமாக அழகாகப் பேண வேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை? கட்சியின் ஸ்தாபகரின் சிலை, அவரை தந்தை என்று அழைக்கிறோம். ஆனால் அந்த சிலையை ஒரு நினைவிடமாக அதற்குரிய மதிப்போடு பேண ஏன் கட்சியால் முடியவில்லை?

இது ஒரு குறியீடு. கட்சியின் தற்போதைய நிலையைக் காட்ட இது உதவும். தமிழரசு கட்சி தூர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் நிற்கின்றது. கட்சியின் தலைவர் யார் என்பதில் தடுமாற்றம். கடந்த 18ஆம் திகதி வவுனியாவில் நடந்த மத்திய செயற்குழு கூட்டம் கட்சி எந்தளவுக்குச் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதனைக் காட்டியது.

கட்சிக்குள் ஒன்றை மற்றது பிடித்துத்தின்னும் பகைக் குழுக்கள் தோன்றி விட்டன.இந்த குழுக்களுக்கு இடையிலான பகையானது கட்சியின் வெளி எதிரிகளுடன் உள்ள பகையைவிடவும் மூர்க்கமானதாகவும் பழிவாங்கும் உணர்ச்சி மிக்கதாகவும் காணப்படுகின்றது. கடந்த ஆண்டு தமிழரசுக் கட்சியின் 75 ஆண்டுகளில் மிகத் தோல்விகரமான ஆண்டுகளில் ஒன்று. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்திய ஆண்டு.

spacer.png

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சுவரொட்டியில் ஒன்றாகத் தோன்றிய கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளூரில் பிரச்சாரம் செய்யும்பொழுது ஒருவர் மற்றவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள். ஒருவர் மற்றவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். உட்பகை கட்சியை படிப்படியாகத் தின்று கொண்டிருக்கிறது. கட்சி ஒரு கட்டுக்கோப்பான உருகிப்பிணைந்த கட்டமைப்பாக இல்லை. அங்கே கூட்டுணர்வு இல்லை.

ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்குத்தான் அதிக ஆசனங்கள் கிடைத்தன. அதனைக் கட்சி ஒரு பெருமையாகக் கருதுகின்றது. ஆனால் துயரம் என்னவென்றால்,கட்சிக்கு கிடைத்த அதேயளவு ஆசனங்கள் அரசாங்கத்திற்கும் கிடைத்திருக்கின்றன என்பதுதான். அரசாங்கத்தின் துணை வெளிவிவகார அமைச்சரும் திருகோணமலைத் தமிழருமாகிய அருண் ஹெமச்சந்திர அண்மையில் ஒர் ஊடக நேர்காணலில் கேட்கிறார் “தமிழ் தரப்பு என்பது இப்பொழுது யார்” என்ற பொருள்பட. ஏனென்றால் அரசாங்கத்திடம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. தமிழர் தாயகத்தில் மொத்தம் எட்டுப் பேர்.இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் மொத்தம்10 பேர்தான். அர்ஜுனா எந்தப் பக்கம் நிற்பார் என்று தீர்மானமாகக் கூறமுடியாது. எனவே மொத்தத் தமிழ் தேசிய பிரதிநிதித்துவம் பத்தாகச் சுருங்கியுள்ளது. அதனால்தான் அருண் ஹேமச்சந்திர கேட்கிறார்,எது தமிழ் தரப்பு என்று. அதாவது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல என்ற பொருளில்.

தமிழரசியலுக்கு குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலுக்குத் தலைமை தாங்கும் ஒரு கட்சி என்று பெருமை பாராட்டிக்கொள்ளும் ஒரு கட்சியானது இதற்குப் பதில்சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22 ஆசனங்களை கொண்டிருந்தது. அது இப்பொழுது பத்தாகச் சுருங்கிவிட்டது. இது தோல்வி. ஆனால் கட்சிக்காரர்கள் கடந்த தேர்தலில் கிடைத்த அற்ப வெற்றியைக் கொண்டாடுவதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய ஆசனங்கள் குறைந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஒரு தேசமாக தமிழ்மக்கள் மேலும் மெலிந்திருக்கிறார்கள்.

கடந்த மாதத்தின் நடுப்பகுதி வரையிலும் முழு நாட்டிலிருந்தும் வெளியேறியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை விட அதிகம். இதில் எத்தனை பேர் தமிழர்கள்?அவர்கள் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அது தமிழ்த் தேசியவாத அரசியலின் தோல்விகளில் ஒன்று. வாக்காளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தன்னைத் தலைமை தாங்கும் சக்தியாகக் கருதும் தமிழரசுக் கட்சி இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலை;தேசத்தைத் திரட்டும் அரசியலை ஏன் முன்னெடுக்கவில்லை?

மாறாக,கட்சிக்காரர்களே ஒருவர் மற்றவருக்கு எதிராக கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது? மூத்த உறுப்பினராகிய சிவஞானத்தை, இளம் நாடாளுமன்ற உறுப்பினராகிய அர்ஜுனா “நீங்கள் யார்?” என்று கேட்கும் ஒரு நிலைமை தமிழரசியலில் ஏன் தோன்றியது?

spacer.png

இந்த தோல்விகள் அனைத்துக்கும் முழுப்பொறுப்பு முதலாவதாக சம்பந்தர். இரண்டாவதாக சுமந்திரன். மூன்றாவதாக மாவை. நாலாவதாக,இவர்கள் அனைவருடைய செயல்களையும் ஆதரித்த அல்லது தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டு எதிர்க்காமலிருந்த எல்லா மூத்த உறுப்பினர்களும் பொறுப்பு. சிறீதரனும் பொறுப்பு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சித் தொண்டர்கள் சிறீதரனின் கையில் கொடுத்த பொறுப்பை அவர் சரியாகக் கையாளவில்லை. அவர் எதற்கோ தயங்குகிறார்.

இதுதான் 75 ஆவது ஆண்டு முடிவில் கட்சியின் நிலை. கட்சிக்குள் உறுதியான தலைமைத்துவம் இல்லை. கட்சி இரண்டாகி நிற்கிறது. வாக்காளர்களின் இன உணர்வுக்கு நெருக்கமாக ஒரு பகுதி. கொழும்பை நோக்கிச் சாயும் இன்னொரு பகுதி. தமிழரசு கட்சிக்குள் காலாகாலமாக இந்த இரண்டு போக்குகளும் இருந்தன. ஒரு போக்கு வாக்காளர்களுக்கு நெருக்கமாக இருப்பது. இன்னொன்று கொழும்பை நோக்கிச் சாய்வது. இந்த இரண்டு போக்குகளினதும் கலவைதான் தமிழரசுக் கட்சி.

யாழ்.பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் தலைவராக இருந்த கலாநிதி ராமகிருஷ்ணன் சொல்வாராம் “ஒரு பனங்காட்டானைத் தலைவனாகத் தெரிந்தால் அவர் வாக்காளர்களின் சொற் கேட்பார்” என்று. அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பனங்காட்டான் என்று கருதியது யாழ்ப்பாணத்தவர்களை மட்டுமல்ல. தன் வாக்காளர்கள் மத்தியில் வீடு வாசல், சொத்துக்களைக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதியைத்தான். கொழும்புமையத் தமிழ்த் தலைமைகளுக்கு எதிராகவே அவர் அவ்வாறு கூறுவாராம்.

இந்த இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதை இட்டுநிரப்பி கட்சியின் தலைமைப் பீடத்தை நிர்வாகித்து வந்தன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையிலான மோதல் கட்சியை உருக்குலைத்து விட்டது. இது ரெண்டாயிரத்தி ஒன்பதுக்குப் பின்னரான தமிழ் கூட்டு உளவியலின் விளைவு.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் சுமந்திரன் கட்சிக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டார். அந்த தோல்வியை அவர் நாகரீகமாக ஏற்றுக்கொண்டது போல வெளியில் காட்டிக்கொண்டார். ஆனால் அவர் அந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ளவில்லை என்பதைத்தான் பின்வந்த நடவடிக்கைகள் நிரூபித்தன. ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்தார்கள்; ஆண்டின் முடிவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள். கட்சிக்குள் தலைமைப் போட்டியை அவர் கையாண்ட விதத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்ல என்பதை அந்தத் தீர்ப்புக் காட்டியதா?

ஆனால் இரண்டு தோல்விகளையும் அவர் ஜீரணித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.அவற்றிலிருந்து அவர் கற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் கடந்த 18ஆம் திகதி வவுனியாவில் நடந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அதைத்தான் உணர்த்துகின்றது. அதாவது கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில் நிற்கப்போகிறது என்று தெரிகிறது. மருத்துவர் சிவமோகனும் புதிதாக ஒரு வழக்கைப் போட்டிருக்கிறார்.

எனவே கடந்த 75 ஆண்டுகளையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி ஒரு வெற்றி பெறாத கட்சிதான். அது கட்சியாகவும் தோற்றுவிட்டது. தமிழ் மக்களையும் தோற்கடித்துவிட்டது. சம்பந்தர் இறக்கும்பொழுது தோல்வியுற்ற தலைவராகவே இறந்தார். யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அவருடைய பூதவுடலுக்கு கிடைத்த இறுதி மரியாதை அதற்குச் சான்று. ஆனால் அதிலிருந்தும்கூட கட்சியின் மூத்த தலைவர்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

கடந்த 15 ஆண்டுகாலம் என்பது தமிழரசுக் கட்சி மட்டுமல்ல பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்ளாத ஒரு காலம்தான். அவர்கள் தங்கள் கட்சிகளையும் தோற்கடித்திருக்கிறார்கள்; தமிழ் மக்களையும் தோற்கடித்து விட்டார்கள். தேசத்தைத் திரட்டாவிட்டால் கட்சிகளையும் திரட்டமுடியாது என்பதனை நடந்துமுடிந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது.

இப்படிப்பட்டதோர் தோல்விகரமான அரசியல் பின்னணியில், தமிழரசுக் கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு என்பது அது தன் இறுதி இலட்சியமாகிய சமஸ்டியை வெல்லத்தவறிய மற்றொரு ஆண்டுதான். அதாவது,சமஸ்ரியை அடையாத 75ஆவது ஆண்டு. கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒராண்டு. தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் மேலும் சுருங்கிப்போயிருக்கும் ஒராண்டு. நிச்சயமாக அது கொண்டாடப்படத்தக்க பவள விழா ஆண்டு அல்ல.
 

https://www.nillanthan.com/7026/

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.