Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?

 
குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? வேட்டைக்குப் பழக்குவது எப்படி?

Getty Images

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு, ஒரு குட்டையை நெருங்கியிருந்தோம். அதற்கு முந்தைய நாள்தான், பேறுகாலத்தில் இருந்த யானையை நடுவில் விட்டு, முன்னும் பின்னுமாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற யானை மந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்றைய தினம், மதிய வெயில் சுளீரெனச் சுட்ட வேளையில் நிழலுக்காக அருகிலிருந்த ஒரு குட்டையை நெருங்கினோம். ஆனால், ஓசையின்றிப் பொறுமையாக வருமாறு உடனிருந்த வனக்காவலர் சைகை காட்டினார். அங்குள்ளது யார் என்பது எனக்கு முன்பாக அவருக்குப் புரிந்துவிட்டது.

சுற்றியும் மூங்கில் மரங்கள் புதராய் வளர்ந்திருக்க, நடுவில் கிட்டத்தட்ட வட்டவடிவில் குட்டை. அங்கிருந்து சில அடிகள் வெளியே வந்தால் வெப்பம், உள்ளே சென்றால் மூங்கில் மற்றும் குட்டைநீரின் குளிர்ச்சி. இதமான அந்தக் குட்டையின் ஓர் ஓரத்தில் பாதி நீரிலும் பாதி நிலத்திலும் என இருந்த ஒரு பெரும் பாறையில், அதேபோல, பாதி உடல் நீரிலும், மீதி உடல் மேலேயுமாகப் படுத்திருந்தது அந்தப் பெண் புலி.

சிறிதளவு ஓசைக்கே, எங்கள் வருகையுணர்ந்து கனநேரத்தில் அங்கிருந்து பாய்ந்து மறைந்தது. உடனே நாங்கள் அங்கிருந்து வேகமெடுத்தோம். பார்த்தது சில நொடிகளே என்றாலும், அதுவே காட்டில் புலியைப் பார்த்த எனது முதல் மற்றும் கடைசி அனுபவம்.

சமீபத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு பெண் புலி உயிரிழந்த செய்தி அறிந்ததும், அந்தப் பழைய அனுபவம் நினைவுக்கு வந்தது. அதேவேளையில், பெண் புலிகளின் வாழ்வியல் குறித்த சில கேள்விகள் தொடர்ச்சியாக எழுவதையும் காண முடிந்தது.

உண்மையில், பெண் புலிகளின் வாழ்வியல் எப்படிப்பட்டது? இனப்பெருக்க காலத்தில் அவற்றின் செயல்பாடுகள் யாவை? அவை தம் குட்டிகளைப் பராமரிப்பதில் இருக்கும் தனித்துவம் என்ன?

 

 

எல்லை வகுத்து தனிமையில் வாழும் புலிகள்

 

புலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்க காலம் தவிர பிற நேரங்களில் புலிகள் தனிமையிலேயே வாழ்கின்றன.

ஒரு குறிப்பிட்ட புலியின் எல்லைப் பரப்பு, 10 சதுர கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 100 சதுர கி.மீ வரை இருக்கக்கூடும். வாழ்விடம், இரை உயிரினங்களின் எண்ணிக்கை, காட்டிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை எனப் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இது மாறுபடும்.

புலிகள் தங்கள் எல்லைகளை சிறுநீர் கழிப்பதன் மூலம் வரையறுக்கின்றன என்கிறார் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயிர் உயிரியலாளராக இருக்கும் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி.

அதோடு, அவ்வப்போது உருமுவதன் மூலம் தனது இருப்பை உணர்த்திக் கொள்ளும் பழக்கத்தையும் அவை கொண்டிருக்கின்றன

 

 

புலிகள் இனப்பெருக்கம் செய்வது எப்படி?

 

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? வேட்டைக்குப் பழக்குவது எப்படி?

Getty Images

மகாராஷ்டிராவில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் புலிகள்

பெண் புலிகளைப் பொறுத்தவரை, இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருக்கும் காலங்களில், சிறுநீரில் வெளிப்படும் மணம், ஆண் புலிகளுக்கு ஓர் அழைப்பாகச் செயல்படுகிறது.

"அதன்மூலம், பெண் புலி இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருப்பதை உணரும் ஆண் புலி அதன் எல்லைக்குள் செல்லும். அங்கு இருவரும் சில நாட்களுக்கு இணைந்து வேட்டையாடுவது, இரையைச் சேர்ந்து சாப்பிடுவது, ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது எனத் தங்கள் பொழுதைக் கழிக்கின்றன."

ஒரு காதல் ஜோடியை போல சில நாட்களுக்கு இணைந்திருக்கும் ஆண், பெண் புலிகள், இனப்பெருக்க செயல்முறை முடிந்த பிறகு பிரிந்து விடுகின்றன. "அதற்குப் பிறகு குட்டிகளை ஈணுவது, அவற்றைப் பராமரிப்பது என்று அனைத்துமே பெண் புலியின் பொறுப்புதான்," என்று விளக்குகிறார் பீட்டர்.

 

குட்டிகளுக்காக தாய்ப்புலி செய்யும் தியாகம்

 

ஒரு தாய்ப் புலி, தனது அன்றாடப் பணிகளான வேட்டை, எல்லைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றுடன் குட்டிகளைப் பராமரித்து, உணவூட்டி வளர்க்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.

இதுவரையிலான ஆய்வுகளின்படி, தனது அன்றாட வேலைகளையும் குட்டிகளுக்கான நேரத்தையும் சமநிலையில் கொண்டு செல்ல, அவை தொடர்ந்து ஓய்வின்றிச் செயல்படுகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டில், சைபீரிய தாய்ப்புலிகளின் நடத்தைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இதர அபாயங்களில் இருந்து பாதுகாக்க ஒரு தாய்ப்புலி, தனது அதிகபட்ச நேரத்தைக் குட்டிகளுடனேயே செலவிடுகின்றன. அதாவது தனது நேரத்தில் 80 சதவீதத்தை அவைதம் குட்டிகளுடன் கழிக்கின்றன.

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? வேட்டைக்குப் பழக்குவது எப்படி?

Getty Images

தனது தாயுடன் கொஞ்சி விளையாடும் சைபீரிய புலிக்குட்டி  

புலிக்குட்டிகளுக்கு, கழுதைப்புலி போன்ற உயிரினங்களால் ஆபத்துகள் இருக்கும். ஆகவே தேவைப்பட்டால், சில புலிகள் வாழ்விட எல்லையைக்கூட குறைத்துக் கொள்வதாகக் கூறுகிறார் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு.

"தாய்ப் புலிகள், குட்டிகளை ஈன்ற பிறகு மிகவும் பலவீனமாக இருக்கும். அந்தச் சூழலில், தன் பாதுகாப்பும் குட்டிகளின் பாதுகாப்புமே முதன்மைக் குறிக்கோளாக இருக்கும். ஆகவே, அது எல்லை முழுவதையுமே கட்டுப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, தனது பரப்பைச் சுருக்கிக் கொள்ளும்," என்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, ஒரு தாய்ப்புலி குட்டிகள் பிறந்த புதிதில், அளவில் பெரிதாக இருக்கும் கடமான், காட்டெருது போன்ற இரைகளை வேட்டையாடாது. மாறாக, சிறிய மற்றும் இடைப்பட்ட அளவில் உள்ள இரைகள் மீதே அதிக கவனம் செலுத்தும்.

"இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தான் பலவீனமாக இருப்பதால் பெரிய இரைகளை வேட்டையாடுவது சவாலாக இருக்கும், அந்த முயற்சி தனக்கே ஆபத்தாக முடியலாம்.

இரண்டாவது, குட்டிகளால் கடினமான உணவுகளை உட்கொள்ள முடியாது. இரை மிருதுவாக, எளிதில் செறிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். ஆகையால், அதற்கேற்ப வெளிமான், புள்ளிமான் குட்டிகள், காட்டு முயல் ஆகியவற்றை வேட்டையாடும்," என்று முனைவர் குமரகுரு விவரித்தார்.

இத்தகைய காலகட்டங்களில் ஒரு தாய்ப்புலி தனது ஓய்வு நேரம், எல்லைப் பரப்பு ஆகியவற்றோடு, போதுமான இரை கிடைக்காத நேரங்களில் தன் உணவில் ஒரு பகுதியையும் குட்டிகளுக்காகத் தயங்காமல் தியாகம் செய்வதாக சைபீரிய புலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது.

 

 

அரிதாக குட்டிகளை வளர்க்கும் ஆண் புலி

 

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? வேட்டைக்குப் பழக்குவது எப்படி?

Getty Images

ராந்தம்போர் புலிகள் காப்பகத்தில் காணப்படும் ஆண் புலி

ஒருவேளை குட்டிகளை ஈன்ற ஒன்றிரண்டு மாதங்களிலேயே தாய் இறந்துவிட்டால், அந்தக் குட்டிகள் காட்டில் பிழைப்பது 90% சாத்தியமில்லை என்கிறார் குமரகுரு. 

அதேவேளையில், சில தருணங்களில் குட்டிகளின் தந்தையான ஆண் புலி அவற்றுக்கு உணவூட்டி பரமாரிப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார் பீட்டர்.

ஆனால், அத்தகைய வாய்ப்புகள் 30-40% சந்தர்ப்பங்களில்தான் நடப்பதாகக் கூறுகிறார் முனைவர் குமரகுரு. "ஒருவேளை தாய் இறந்த சில நாட்களிலேயே தந்தையின் கண்ணில் அவை தென்பட்டால், அவற்றுக்குத் தனது இரையில் ஒரு பகுதியைப் பகிர்ந்துவிட்டுச் செல்லும். அப்போது அந்தக் குட்டிகள், ஆண் புலியைப் பின்தொடர்ந்து செல்லும். ஆகவே அவற்றைப் பேணத் தொடங்கும்," என்று விவரிக்கிறார் குமரகுரு.

கடந்த 2021இல் மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெண் புலி குட்டிகளை ஈன்ற ஏழு மாதங்களில் இறந்துவிடுகிறது. 

ஆனால், அந்தக் குட்டிகளின் தந்தை அவை இருக்கும் பகுதியிலேயே சுற்றி வருவதையும், குட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதையும் கண்காணித்த வனத்துறை, அது அவற்றுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

 

 

புலிக்குட்டிகளை வேட்டையாடப் பழக்குவது எப்படி?

 

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? வேட்டைக்குப் பழக்குவது எப்படி?

Getty Images

புலிக்குட்டி 6 முதல் 9 மாதங்களை எட்டும்போது அதற்கான வேட்டைப் பயிற்சிகள் தொடங்கும். அந்தப் பயிற்சி ஆரம்பத்தில் ஒரு விளையாட்டாகவே தொடங்கும் என்று விளக்கினார் குமரகுரு.

குட்டிகள் தாயின் மேற்பார்வையில், வெட்டுக்கிளி, முயல் குட்டிகள், ஓனான் போன்ற சிறிய வகை உயிரினங்களைப் பிடித்து வேட்டையாடி விளையாடும்.

அந்தப் பயிற்சிகளின்போது, "அம்மாவை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, குட்டிகள் அதிகபட்சமாக 200 மீட்டர் வரை சுற்றி விளையாடும். காட்டெருது, கடமான் போன்றவை சுற்றித் திரியும் பகுதிகளுக்கு நடுவில் ஓடிச் சென்று தன் மழலைக் குரலில் உருமுவது போன்ற வேடிக்கைகளும் நடக்கும்," என்று அவர் விவரித்தார்.

இந்தச் செயல்முறைகள் அனைத்தும் குழந்தைத்தனமான விளையாட்டாகத் தெரிந்தாலும், அவை குட்டிகளுக்கு வேட்டையின் மீதான நம்பிக்கையை வழங்குவதற்கான தாயின் முதல்கட்ட முயற்சியே என்றார் குமரகுரு.

இதற்கு அடுத்தகட்டமாக ஒரு வயது முடிந்த பிறகு, "தாய்ப்புலி ஒரு மானை வேட்டையாடினால், இரையைச் சுற்றி வளைத்து அம்மாவுக்கு உதவும் பணியில் குட்டிகள் ஈடுபடும். அப்போது தன் இரையை ஒரே அடியில் வீழ்த்தாமல், கால்களை உடைத்துவிட்டு, குட்டிகளே அதை வீழ்த்தும் வரை காத்திருக்கும்."

இதிலும் பழக்கப்பட்ட பிறகு இறுதியாக, சுமார் ஒன்றரை அல்லது இரண்டு வயதை எட்டும்போது, ஓர் இளம் புலி சுயமாக அதன் வேட்டையைத் தொடங்கும் என்று விளக்கினார் முனைவர் குமரகுரு.

இதில் ஆண், பெண் புலிக்குட்டிகள் இடையே இருக்கும் ஒரு வேறுபாட்டை எடுத்துரைத்தார் பீட்டர்.

அவரது கூற்றுப்படி, ஆண் குட்டிகள் அளவில் பெரிதாக இருப்பதால், ஆதிக்கம் செலுத்தி, சண்டையிட்டு தாயின் இரையில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ள்ளும். அதனால், விரைவில் வேட்டையாடிச் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் பெண் குட்டிகளுக்கு ஏற்படும். ஆகவே தேவை கருதி ஆண் குட்டிகளைவிட, பெண் குட்டிகள் முன்கூட்டியே வேட்டையாடுவதில் தேர்ந்துவிடுகின்றன.

 

 

வேட்டைக்குப் பழக குட்டிகளைப் பட்டினி போட்ட 'ராஜமாதா'

 

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? வேட்டைக்குப் பழக்குவது எப்படி?

Getty Images

புலிகள் குட்டிகளை வேட்டைக்குப் பழக்குவது எப்படி என்பதற்கு கடந்த 2022ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில் வயதாகி உயிரிழந்த காலர்வாலி என்ற புலியை உதாரணமாகக் கூறலாம்.

தனது வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்றுள்ள இந்தப் புலியை ஆய்வாளர்கள் 'ராஜமாதா' என்று அழைக்கின்றனர். ராஜமாதா, தனது குட்டிகளை வேட்டையாடப் பழக்குவதற்குப் பயன்படுத்திய அணுகுமுறை குறித்த அவதானிப்புகள் கடந்த 2013ஆம் ஆண்டு சான்ச்சுவரி ஏசியா (Sanctuary Asia) இதழில் வெளியானது.

அதன்படி, ராஜமாதாவுக்கு 2008ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்று ஆண் உள்பட நான்கு குட்டிகள் பிறக்கின்றன. ஒருநாள் அந்தக் குட்டிகளை ராஜமாதா பிரிந்து செல்கிறாள். நாட்கள் உருண்டோடுகின்றன.

அவள் குட்டிகளிடம் இருந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு கி.மீ தொலைவிலேயே இருக்கிறாள். ஆனால், குட்டிகளை அழைக்க குரல் கொடுக்கவோ, அவற்றை நெருங்கவோ இல்லை. அவள் தன்போக்கில் வேட்டையாடுவதும் ரோந்து செல்வதுமாக நாட்கள் செல்கின்றன.

சுமார் 10 நாட்கள் பசியில் வாடிய குட்டிகளில் ஒரு ஆண் புலி இறுதியாக புள்ளி மான் குட்டி ஒன்றை வேட்டையாடுகிறது. பல நாட்கள் பட்டினியில் கிடந்தாலும், அவை சண்டையின்றி தமக்குள் அமைதியாக உணவைப் பகிர்ந்து உண்கின்றன. ஆனால், இப்போதும் தாய்ப்புலியான ராஜமாதா அவர்களை நெருங்கவில்லை. நாட்கள் செல்கின்றன. அடுத்த சில நாட்களில் அந்தக் குட்டிகள் மேலும் இரண்டு புள்ளிமான்களை வேட்டையாடின.

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?

Getty Images

மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில், தனது ஒரு குட்டியுடன் சேர்ந்து சுமார் 400 கிலோ எடையுள்ள கடமானை வேட்டையாடிச் சாப்பிடும் 'ராஜமாதா'

இறுதியாக 16வது நாளில், ராஜமாதா தனது குட்டிகளை அழைக்க குரல் கொடுத்துவிட்டு, பெஞ்ச் ஆற்றின் கரையோரத்தில், ஒரு பெரிய புள்ளி மான் இரையுடன் அவள் காத்திருந்தாள்.

குட்டிகள் வந்ததும், குடும்பத்துடன் சேர்ந்து அவள் தனது இரையை ருசித்துச் சாப்பிட்டாள். இந்த ஆய்வில் சில அம்சங்கள் கண்டறியப்பட்டன. ராஜமாதா, தனது குட்டிகளை பெஞ்ச் ஆற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் விட்டுச் சென்றிருந்தாள். அவள் விட்டுச் சென்ற பகுதி இரை உயிரினங்கள் அபரிமிதமாக வாழும், அடர்த்தி நிறைந்த மரங்கள் மற்றும் தாவரங்களைக் கொண்ட காடு.

அதாவது, தனது குட்டிகளை வேட்டைக்குப் பழகுவதற்காக இரைகள் நிறைந்த, தண்ணீருக்குப் பஞ்சமில்லாத, மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றிருந்தாள்.

அதோடு, இவற்றின் தந்தையான டி-2 என்ற புலி இறந்த பிறகு, அதன் எல்லைகளைத் தன்வசப்படுத்திய டி-30 என்ற புலி அங்கு சுற்றி வந்ததால், அதன்மூலம் தனது குட்டிகளுக்கு ஆபத்து நேர்வதைத் தவிர்க்க, ஒரு பாதுகாப்பான தொலைவில் அவற்றுக்குப் பாதுகாப்பும் வழங்கி வந்திருக்கிறாள், ராஜமாதா என்று அழைக்கப்படும் அந்தத் தாய்ப்புலி.

 

 

ஆண் குட்டிகளை தாய் அடித்து விரட்டுவது ஏன்?

 

குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? வேட்டைக்குப் பழக்குவது எப்படி?

Getty Images

மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் தேசியப் பூங்காவில் தன் குட்டியுடன் நடந்து செல்லும் தாய்ப்புலி

இப்படியாக, ஈன்ற காலகட்டத்தில் பாதுகாப்பு கருதிப் பல தியாகங்களைச் செய்து வளர்த்து, வேட்டையாடப் பழக்கி, சுயமாக வாழப் பயிற்றுவித்த பிறகு, தமது குட்டிகள் தனித்து வாழும் வயதை எட்டும்போது, அவை தாயைப் பிரிகின்றன.

இதில் "பெண் குட்டிகளைப் பொறுத்தவரை, சிலநேரங்களில் தனது எல்லைப் பரப்பிலேயே ஒரு பகுதியை தாய்ப்புலி வழங்கக்கூடும். அனால், ஆண் குட்டிகளைப் பொறுத்தவரை நெடுந்தூரம் வரை அவை விரட்டியடிக்கப்படும்" என்கிறார் காட்டுயிர் உயிரியலாளர் பீட்டர்.

"ஆண் புலிகள், தாயின் வாழ்விடத்திற்கு அருகிலேயே இருந்தால், ஒருவேளை அவை தமது உடன்பிறப்புகளுடனோ அல்லது சில நேரங்களில் தாயுடனேகூட இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளன" என்று பீட்டர் கூறினார்

''இதனால் மரபணுக் குறைபாடு ஏற்படும், அது எதிர்காலச் சந்ததிகளின் பிறப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலேயே ஆண் புலிகள் விரட்டியடிக்கப்படுகின்றன'' என்கிறார் அவர்.

இவை மட்டுமின்றி, ஒருவேளை தனது குட்டிகளில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால், அவற்றைத் தானே சாப்பிட்டு விடுவதன் மூலம், பலவீனமான சந்ததிகள் பெருகுவதைத் தடுப்பதாகவும் முனைவர் குமரகுரு கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 

https://www.bbc.com/tamil/articles/cx26d17n4qyo?at_campaign=ws_whatsapp

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.