Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"விழிமூடித் துயில்கின்ற வேங்கைகள்"

 

இன்று கார்த்திகைத் திங்கள் இரண்டாம் கிழமை, முல்லைச்செல்வி தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு, தனது வீட்டில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். வானம் இருண்டுபோய் இருந்தது. குளிர் காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவள் வாய் "தீபங்கள் அணையாலாம் தீ அழிவதில்லை தேசத்தை காத்த உயிர் ஓய்ந்து அழிவதில்லை" என்று முணுமுணுத்தபடி, காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை நோக்கிச் சென்றாள். அவள் பேருந்துவால் இறங்கி, நடக்கத் தொடங்கிய போது, அவளுடைய ஊன்றுகோல் சீரற்ற மண் பாதையில் உறுதியாக அழுத்தியது. ஒரு காலத்தில் மாவீரர் விழிமூடித் துயில் கொண்ட  அமைதியான அந்த இடம், இப்போது, உடைத்து எறியப்பட்டு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. அன்று பல உயிர்களைப் பறித்த அதே கைகளால், கல்லறைகள் எல்லாம், மண்ணுடன் மண்ணாக நொறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதுவும் அவளைத் தடுக்க முடியவில்லை. இது தமிழ் பாரம்பரியத்தின் புனிதமான நினைவேந்தல் மாதமான கார்த்திகைத் திங்கள், தெய்வங்கள் மற்றும் மறைந்தவர்கள் ஆகிய இருவரையும் போற்றும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டது. இன்று, அவள் வெறும் விளக்கை மட்டும் சுமக்கவில்லை, ஆனால் கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த அவளுடைய முகிலன் மற்றும் எண்ணற்ற மக்களின் நினைவுகளின் கனத்தையும்  சுமந்து, அவர்கள் எல்லோரையும் நினைவுகூர, கௌரவிக்க அங்கு, மயானத்திற்குள் அடி எடுத்து வைத்தாள்.  

துயிலுமில்ல மைதான நடுவில், பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டு இருந்தது. உணர்வுக் கொந்தளிப்போடு, மக்கள் அங்கு குவிந்து, பின்னர் ஒரு ஒழுங்கில் நின்றனர். அவள் அங்கு மூலைமுடுக்கெல்லாம் தேடி, ஒருமுறை தன்னவனின் பெயரைக் கொண்ட, உடைந்த கல் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, அதன் முன்னால் அவள் மண்டியிட்டாள். அவளுக்கு அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் இறப்பைக் கூறும் புறநானூறு 229 ஞாபகம் வந்தது.     
இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது. காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ?

"மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், 
கால் இயல் கலி மாக் கதி இன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறு துணை ஆகித்
தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ,"

தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற மருத்துவம் அளித்த முகிலனும் இன்று விண்ணுலகம் அடைந்தான். தன் காதலிக்கு  உறுதுணையாக இருந்தவன் அவளை மறந்தனனோ? என்று ஒரு தரம் கண்ணீருடன் அவனை நினைத்தவள் மனதில் முன்னைய காலத்தின் நினைவுகள் நிரம்பி வழிந்தன.

முல்லைச்செல்வி ஒரு வன்னிக் கிராமத்தில் ஒரு தற்காலிக மருத்துவமனையில் பணிபுரியும் இளம் செவிலியர். அங்கு அரசின் தடைகளாலும் மற்றும் பல காரணிகளாலும் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தன, ஆனால் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உறுதிப்பாடு ஏராளமாக இருந்தது. அங்குதான் முகிலன் என்ற கருணையுள்ள இளம் மருத்துவரைச் சந்தித்தாள், அவனுடைய கண்கள் எண்ணற்ற துயரங்களின் பாரத்தைச் சுமந்து கொண்டிருந்தாலும், நல்ல நாளைய நம்பிக்கையில் மின்னியது.

அதேவேளை, போர் வன்னி மண்ணை உலுப்பி எடுத்துக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் மாறி மாறிப் போர்முனைச் சத்தங்கள் தினமும் கேட்டுக்கொண்டிருந்தன.  ஆவேசம் கொண்டு கிளம்பும் படையினரும் அவர்களின் முன்னேற்றத்தை முறியடிக்கும் போராளிகளும் ஊடகங்களில் நாளாந்தச் செய்தியாகினர். தடுப்போம் விடமாட்டோம் என்ற கூக்குரல்களில் களமுனைகள் எரிந்து கருஞ் சாம்பலாகிக் கொண்டிருந்தன. நாலாபுறமும் அனல்பறக்கும் போர்கள் அடிக்கடி நடந்தன. எந்த முறியடிப்புத் தாக்குதலிலும் போராளிகள் மும்மரமாக ஈடுபட்டு தம்மை தாரைவார்த்து தடுத்துநிறுத்தினாலும் அவை, மீண்டும் மீண்டும் ஓயாமல் தொடர்ந்தவண்ணம் இருந்தன. கல்லறை வரிசைகள் வேகமாக நிறையத்தொடங்கின. கல்லறையில் விதைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் களமுனையில் எதோ ஒருவகையில் மடிந்தவர்கள். 

அந்தச் சோகமான அழுகுரலுக்கும் மற்றும் குண்டுச் சத்தங்களுக்கும் இடையில், போரின் நடுவே, தரிசு நிலப்பரப்பில் வாழ்வில் ஒட்டிக்கொண்டிருக்கும் மல்லிகைக் கொடியைப் போல அவர்களது காதல் மெல்ல மெல்ல மலர்ந்தது. அவர்கள் குழப்பங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியின் தருணங்களைக் கண்டனர் - கட்டப்பட்ட காயங்களின் மீது இருவரும் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்திய அதே தருணத்தில், அவர்களின் அன்பும் பாசமும் அதனுடன் ஒட்டிய புன்னகையும் பரிமாறிக்கொண்டனர், பல வேளைகளில், நட்சத்திரங்களின் கீழ், குண்டுகளின் வெடிச்ச சத்தங்களுக்கிடையில்,  அவர்கள் அவசர உணவைப் பகிர்ந்து கொண்டனர், அதேவேளை வன்முறையின் நிழல்களிலிருந்து விடுபடக்கூடிய எதிர்காலத்தைக்  கனவு கண்டனர்.

முகிலன் ஒரு மருத்துவரை  விட அதிகமாகத்  தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அவன் வலிமையின் ஆதாரமாக இருந்தான். குண்டுவெடிப்புகளின் போது அவனது அமைதியான, நிதானமான  நடத்தை, காயமடைந்தவர்களை அவனது மென்மையான தொடுதல், அரவணைப்பு மற்றும் தளராத அர்ப்பணிப்பு அவனை அனைவருக்கும் ஒரு தோழனாக மாற்றியது. முல்லைச்செல்விக்கு கூட இந்த புயலில் அவளது நங்கூரமாக அவன் இருந்தான்.

அவள், முகிலனின் உடைந்த கல்லறைத்துண்டுகள் முன் தன் கண்களை மூடிக்கொண்டாள், அவள் மனம் அவளது வாழ்க்கையின் இருண்ட நாளை மீண்டும் மறுபரிசீலனை செய்தது.

எத்தனைதான் வீரத்தோடு உறுதியோடு மக்கள் நின்றாலும் இலங்கை  வான்படையின் குண்டு வீச்சுக்கள் தமிழ் மக்களால் என்றும் மறக்க முடியாதவை. உலக நாடுகளால் கொடுக்கப்பட்ட பலவகைப்பட்ட போர்விமானங்கள் ஆலயங்களையும் குடியிருப்புகளையும் சிதறடித்துச் சென்றன. போர்விமானங்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் எண்ணிறைந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். கிபிர்கள், மிக் விமானங்கள் போன்றவை வீசிய பலநூறு குண்டுகளால் கட்டிடங்கள் அழிந்தன. உடல்கள் எரிந்து  கருகின. விமானத் தாக்குதல்கள் பற்றிய செய்தி வராத ஒரு நாளும் அன்று இருக்கவில்லை.  

"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;"

யானைகள் மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள், மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட புலவன் ஒருவன். ஆனால் இன்று கூற்றுவன், இழுத்துக்கட்டிய கச்சையோடு, கிபிர்கள், மிக் விமானங்களில் அகோரத்தாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டான். 

இப்போது அந்த மக்கள் திரள், இலங்கை அரசு, பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்கட்டு, விசுவமடு வள்ளிபுனம், இரணைப்பாலை ஆகிய போன்ற சில பகுதிகளுக்கு நகரத்தொடங்கியது. என்றாலும்  கணக்கிலடங்கா எறிகணைகள் குண்டுகள் ஊர்மனைகளுக்குள் விழுந்த வண்ணமே இருந்தன. 

அங்கே தொட்டிலில் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்திக் கொண்டிருக்கும் மழலைக்கும் தலை பறக்கும். சோற்றை அள்ளி வாயில் வைக்க போனவரின் கையும்  துண்டாடப்படும். பதுங்கு குழிக்குள் பாயும் சிறுமியின் காலும் அங்கு இருக்காது!  சாவு நடக்காத குடும்பம் எதுவும் இருக்கவில்லை. கதறல் ஒலி கேட்காத நேரமென ஒன்றும் இல்லை. எந்த நேரமும் எல்லோருக்கும் அடி விழுந்தது. அனைவரும் வலியால் துடித்தனர். 

"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"

பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு  செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளைக் கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. ஆனால் வன்னியில் நடந்தது என்ன? 

அப்படியான ஒரு நாளில், அன்று அந்த கொடுமையான போரின் நடுவில், அரசாங்கத்தால் மக்கள் பாதுகாப்பாக ஒதுங்க எனவும், தற்காலிக வைத்தியம் பார்க்கும் இடமாகவும்  அறிவிக்கப்பட்ட, துப்பாக்கிச் சூடு இல்லாத பகுதியென வரையறைக்கப் பட்ட பகுதியில் அவள் கடையாற்றிக் கொண்டு இருந்தாள். அங்கு  காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடைவிடாத ஷெல் தாக்குதலில் இருந்து தஞ்சம் அடைந்தவர்கள் என பலரும் புகலிடம் நாடிப் அங்கு புகுந்து இருந்தனர். ஆனால் பாதுகாப்பு வாக்குறுதிகள் பொய்யானவை என்பது பின்புதான் தெரியவந்தது. அடுத்தநாள் காலை, குண்டுகளின் வீச்சில்  சத்தம் காற்றைத் துளைத்தது, அதைத் தொடர்ந்து காதை துளைக்கும் வெடிப்புச் சத்தங்கள், தற்காலிக பாதுகாப்பான மருத்துவமனையை குழப்பத்தில் மாறியது. வேதனையின் அலறல்களும், உதவிக்கான அழுகைகளும், கண்ணை எரிக்கும் புகையின் கடுமையும் காற்றை நிரப்பியது.

அப்பொழுது முகிலன் அவள் பக்கத்தில் இருந்து, சிறு சிறு காயங்களுடன் ஒரு குழந்தைக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தான். "நாங்கள் இனி எல்லோரையும் இங்கிருந்து நகர்த்த வேண்டும், அரசாங்கம் மீண்டும் பொய்யே கூறியுள்ளது" என்று அவன் அவசரமாகக்  அவளுக்கும் மற்ற உதவியாளருக்கும் கூறினான். ஆனால் அதற்கிடையில், ஒரு ஷெல் மிக அருகில் தரையிறங்கி வெடித்தது. எல்லாம் சின்னாபின்னமாகச்  சிதறின.

முல்லைச்செல்வி சுயநினைவு திரும்பியதும் தான் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள். அவளது இடது கை மற்றும் கால் குண்டின் தாக்கத்தால், வெடித்துச்  சிதறி இருந்தது. வலியின் வேதனையோடும், முகிலன் சுவரில் சாய்ந்து, அவன் கீழே இரத்தம் தேங்கிக் கிடப்பதைக் கண்டாள். அவள் எஞ்சியிருந்த வலிமையுடன் அவனிடம் ஊர்ந்து சென்றாள், அவள் இதயம் விரக்தியால் துடித்தது.

“முகிலன்” என்று அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு அழுதாள். அவனது மார்பு மேலோட்டமான அவளின் மூச்சுக் காற்றால் கொஞ்சம் துடித்தது, அவனது கண்கள் திறந்தன. "மன்னிக்கவும்," அவன் கிசுகிசுத்தான், அவனது குரல் மிக குறைவாக  இருந்ததால் அவளுக்கு கேட்கவில்லை. "நான் விரும்பினேன்... இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் ... உனக்கு ஒரு சிறந்த வாழ்வை, உலகத்தைக் கொடுக்க வேண்டும் ..." என்றான்.

"பேசாதே" என்று கெஞ்சினாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தது. "நீ நன்றாக இருப்பாய். நான் - நான் இதை சரிசெய்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்." என்றாள். ஆனால் அங்கு எந்த மருந்தோ, கருவிகளோ, இருக்கவில்லை, எல்லாம் சிதைந்து விட்டது, எரிந்து விட்டது.  நடுங்கும் கைகளும், பிரார்த்தனைகளும் தவிர அவளிடம் வேறொன்றுமில்லை. அவள் கன்னத்தில் இரத்தம் தோய்ந்த தன் கையை வைத்தான். எனக்கு சத்தியம் செய்” என்று மூச்சுத் திணறினான். "நீங்கள் எங்கள் இருவருக்குமாக வாழ்வீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள். ." என்றான். அவள் பதில் சொல்வதற்குள் அவன் கை தளர்ந்தது. அவன் கண்கள் மூடின, முகிலன், அவளுடைய காதலன், அவளுடைய தலைவன், மறைந்தான்.

அப்பொழுது பரந்த வெளியைக்கொண்ட குளக்கரைக்கு அருகில் இருந்த அந்த துயிலுமில்லதில் ஒரு குளிர் காற்று அவளை நிகழ்காலத்திற்குக்  கொண்டு வந்தது. முல்லைச்செல்வி கண்ணீரைத் துடைத்துவிட்டு ஒரு சிறிய தீபச் சுடரை ஏற்றி, அதன் சுடரை காற்றிலிருந்து பாதுகாக்க தன் இருகைகளாலும் பொத்தி பொத்தி மறைத்தாள். முகிலனுக்காக மட்டுமல்ல, இரக்கமற்ற போரில் இழந்த அனைத்து உயிர்களுக்காகவும் அவள் ஒரு பிரார்த்தனையை மனதினுள் வேண்டினாள்.

"மொழியில் ஒரு பற்று கொண்டு 
விழியில் ஒரு ஏக்கம் கவ்வ 
வழியில் வந்த தடை உடைத்து 
சுழியில் மூழ்கிய வீரர்கள் இவர்கள்!"


"ஒன்று இரண்டு ஆயிரம் கொலை 
இன்று நேற்று கண்டு துடித்து 
வென்று ஒரு முடிவு காண 
சென்று மாண்ட வீரர்கள் இவர்கள்!"


"தாயின் தங்கையின் கற்பு காக்க 
சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி 
நாயின் வாலை நிமித்த எண்ணி 
பேயில் சிக்கிய வீரர்கள் இவர்கள்!"


"உயிரைக் காப்பாற்ற சேவை செய்து
குண்டும் சூட்டுக்கு மத்தியில் வாழ்ந்து   
மருந்தும் சிகிச்சையும் அளித்த இவனும் 
விண்ணில் வாழும் வீரன் தானே!"

"அவர்கள் உன்னை, உன் ஞாபகத்தை அழிக்க முயற்சித்தார்கள், நடுகல்லை உடைத்து எறிந்தார்கள் " அவள் மெதுவாக, உடைந்த கற்களை விரல்களால் தேடித்  தட்டிப் பார்த்தாள். "ஆனால் அவர்களால் முடியாது. என் இதயத்திலிருந்து மட்டும் அல்ல, நம் மக்களின் இதயங்களிலிருந்து மட்டும் அல்ல. நான் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும், நான் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் கூட நீங்கள் வாழ்கிறீர்கள்." என்று முணுமுணுத்தாள். 

சூரியன் மறையும் போது, இடிபாடுகள் மீது ஒரு ஆரஞ்சு ஒளியை வீச, முல்லைச்செல்வி தன் ஊன்றுகோலுடன் இன்னும் அங்கு நின்றாள், அந்தி வெளிச்சத்திற்கு எதிராக தனது நிழற்படத்தை மண்ணில் வடிவமைத்தாள். அது அந்த உடைந்த முகிலனின் கல்லறைத்  துண்டுகளைத் தழுவிக்கொண்டு இருந்தது.  

அவள் அங்கிருந்து விலகிச் செல்லும்போதும், அவள் ஏற்றிய விளக்கின் சுடர் உறுதியாக ஒளிர்ந்துகொண்டு இருந்தது, விழுந்தவர்களின் ஆவிகள் மாலைக் காற்றோடு மேலே சொர்க்கத்துக்கு எழுந்தது போல் தோன்றியது. அவர்களின் கிசுகிசுக்கள் அவளது வாக்குறுதியை வானத்திற்கு எடுத்துச் சென்றன: "நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்."

அவள் கொஞ்ச தூரம் சென்றாள், பின் திரும்பி பார்த்தால், ஒவ்வொரு நடுகல்லும் எதோ அவளிடம் கேட்பது போல் இருந்தது. காதைக்  கூர்மையாக்கி உற்றுக் கேட்டாள், அது அவளின் இதயத்தின் குரல், வன்னி மண்ணின் குரல்: 

"வாருங்கள், வந்து கை கொடுங்கள்- 
இமைகள் மூடி பல நாளாச்சு  


மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- 
வரிசையாய் வருங்கள் பல  சடலங்கள் 
 
 
தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- 
கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன


நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- 
நங்கை இவள் உண்மை உரைத்ததால்  


முலையைச் சீவினான் கொடூர படையோன்- 
வஞ்சி இவள் காமம் சுரக்காததால் 


கண்களுக்குள் புதையாத இவர்களைத் தருகிறேன்- 
அப்பாவிகளை ஒன்று  ஒன்றாய் புதைக்க 


வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- 
இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் 


முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- 
விசாரணை எடு- உண்மையை நிறுத்து 


கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- 
படு கொலையை எதிர்த்த சடலம்  கேட்கிறது" 

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

472100552_10227727955767168_8540498613257156801_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=01WQGlNpEgsQ7kNvgHe4N-F&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Ayed7oAK2mOFZC3V8OMX_xk&oh=00_AYDCsy_ZvWMmmMxHwFyswK6fehd2Z2TQoA5leeum7A0tFQ&oe=678307A5  472589442_10227727955487161_1180745569666236343_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=gW2yh9x_0V4Q7kNvgHE4Oz7&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=Ayed7oAK2mOFZC3V8OMX_xk&oh=00_AYDlpFVvCj_HsgIWXWPJLtF2QePxKbGVVb8QlhOdaq1u6g&oe=6782EA4C


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.