Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

“தங்கம்மா என்றால் தொண்டு தங்கம்மா என்றாற் பண்பு

தங்கம்மா என்றாற் சக்தி தங்கம்மா என்றாற் பக்தி

தங்கம்மா என்றாற் சைவம் என்றெல்லாந் தரணி காணும்

தங்கம்மா தமிழர் பெற்ற தனிப்பெருஞ் செல்வி வாழி.” 

என்ற கவிஞர் வி.கந்தவனம் ஐயாவின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைவு கூர்கின்றேன். ஆம் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்தமாக இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். அன்னை சைவசமயத்துக்கும் தமிழ்மொழிக்கும், சமுதாயத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவத்தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்று மிளிர்கின்றார் என்றால் மிகையில்லை. அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்வு தமிழுக்காகவும் சைவசமயத்துக்காகவும் அமைந்தது. 

தனது பத்தொன்பது வயதில் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் பண்டிதர், சைவப்புலவர் போன்ற பயிற்சி அனுபவத்தையும் பெற்றவராகவும் விளங்கிய இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் அவதரித்து தனது முயற்சியினாலும் கடின உழைப்பினாலும், ஆழ்ந்த அறிவினாலும். பக்தியினாலும், தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவியாக மிளிர்ந்தார். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்து இறக்கும் வரை தனது உடல்இ பொருள், ஆவி அனைத்தையும் ஆலயத்துக்கே அர்ப்பணமாக்கி ஆலயத்தினூடாகப் பல அறப்பணிகளை ஆற்ற முடியுமென நிரூபித்துக் காட்டினார்.

அம்மையாரின் பன்னூல், அறிவு, சொல்லாற்றல், ஆழ்ந்த பக்தி, நிர்வாகத்திறன், தலைமைத்துவப் பண்பு, பண்டைத்தமிழ், இலக்கியப்புலமை, சைவசித்தாந்த சாஸ்திர அறிவு, பன்னிரு திருமுறைப்பாராயணம், வேத ஆகம விளக்கம், இதிகாச புராண அறிவு போன்ற பன்முக ஆளுமை கொண்டவராக இவர் விளங்கினார்.

“சொந்த சுகதுக்கங்களையும் எல்லாவித இச்சைகளையும் மூட்டை கட்டிக் கடலில் எறிந்துவிட்ட பின்னரே தொண்டில் நாட்டங்கொள்ள வேண்டும்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்று இவ்விடத்தில் அம்மையாருக்குப் பொருந்தும்.

இத்தகைய தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் என்னும் உருவாக்க ஆளுமையில் அம்மாவின் பங்கு மிகவும் காத்திரமானது. அவரது வழிகாட்டலும் ஆளுமைத்திறனும் சமூகம் சார் சிந்தனையில் உலக வரலாற்றில் பேசப்படும் ஆலயமாக உயர்த்தியது. ஒரு சைவப் பெண்மணியாக ஆலயத்தை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நல்ல முகாமையாளராக இவர் பணியாற்றியுள்ளார்.

ஆலயத்தை மக்கள் நேசிக்கும் இடமாக, அருளை வழங்கும் இடமாக, நம்பிக்கைக்குரிய இடமாக மாற்றியவர் இவர். சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆலயத்தை இணைத்து ஒப்பற்ற சமூகக் கருவியாக்கி வழிநடத்தி ஆலயமும் வளர்ச்சி கண்டது. இதனைச் சார்ந்த மக்களும் வளர்ச்சி அடைய வழிகாட்டியவர் அன்னை.

பக்தியை வளர்க்கும் மூலமாகவும் கல்வியை வழங்கும் கல்விச்சாலையாகவும், மருத்துவத்தை வழங்கும் மருத்துவச் சாலையாகவும், அல்லற்பட்டோரை வாழ்விக்கும் சமுதாய நிலையமாகவும், கலைகளை வளர்க்கும் கலைக்கோயிலாகவும், தமிழை வளர்க்கும் சங்கமாகவும், இவ்வாலயம் அம்மையாரால் மாற்றப்பட்டது என்பதே உண்மை ஆகும்.

அம்மையாரின் சொற்பொழிவுகள், எழுத்துக்கள், என்பன இதற்குக் காரணமாகின. அவரின் நாவசைவின் மூலம் ஆயிரமாயிரம் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி ஈர்த்து சமூகப்பணிகளுக்கு வேண்டிய உதவிகளை அம்மா அவர்கள் பெற்றார். இவ் ஈர்ப்பு என்பது மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக மாறியமையே இவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததென்றால் மிகையில்லை. 

இதன் விளைவே இன்று “துர்க்காபுரம்” என்னும் ஒரு கிராமம் விரிவாகவும் துர்க்காபுரம் மகளிர் இல்லம், அன்னையர் இல்லம், சைவத்தமிழ் ஆய்வு நூலகம், திருமகள் அழுத்தகம், ஆயுள்வேத வைத்தியசாலை, நூல்வெளியீடுகள், பதிப்புக்கள், சமூக உதவிகள் என விரிவடைந்து தனித்துவமான ஆலயமாக உருவாகுவதற்கு வழிசமைத்த வகையில் அம்மாவின் பங்களிப்பு காத்திரமானது. ஏனைய சைவ ஆலயங்களுக்கும், இந்து நிறுவனங்களுக்கும் வழிகாட்டியதன் பெயரில் சைவத்தமிழ் வரலாற்றில் அம்மையாருக்கென்று அழிக்கமுடியாத ஒரு பதிவாகிறது. 

“ஒரு சமூகத்தில் ஒரு பெண்மணி வேலையை மனிதாபிமான ஊழியமாக மாற்றிக் கொண்டுள்ளமை பெருத்த ஆச்சரியத்தை விளைவித்தது.”  என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. 

மேலைத்தேயத்தவர்களின் வருகையினால் வீழ்ச்சி அடைந்த இந்துப் பண்பாட்டு மரபுகள் ஆறுமுகநாவலரினால் மறுமலர்ச்சி பெற்றது என்பதும் இது அன்னையினால் துர்க்காதேவி ஆலயத்தோடு இணைந்து சைவத்தமிழ்ப் பண்பாடு மேலும் ஒருபடி வளர்ச்சியடைந்தது என்றால் மிகையில்லை. துர்க்கையம்மன் ஆலயம் பண்பாட்டு வளர்ச்சியின் இருப்பிடம் என்னும் அளவிற்கு இங்கு நடைபெறும் ஆலய விழாக்கள், கலைகள், சொற்பொழிவுகள் நூலாக்கங்கள், நூலகம், வைத்தியசாலை, பெண்கள் கல்வி, பழக்கவழக்கங்கள், திருமணம், முத்தமிழ் வளர்ச்சி, சரியைத் தொண்டு, கூட்டுவழிபாடுகள் என்ற அனைத்தும் பண்பாடு சார்ந்ததாக அமைய வழிகாட்டியவர் அம்மா.

இத்தகைய பண்பாட்டு நிலைக்கழத்தின் உச்சமாக விளங்கிய ஆலயத்தின் உன்னத பணியாக அம்மாவால் ஆரம்பிக்கப்பட்டதே திக்கற்ற பெண்பிள்ளைகளுக்கான துர்க்காபுரம் மகளிர் இல்லமாகும். வறுமை, யுத்தம், பெற்றோர் இழப்பு, நோய் போன்ற பல்வேறு காரணிகளினால் பாதிக்கப்பட்ட பெண்குழந்தைகளை வளர்த்து கல்வி அளித்து கலை கலாசாரம் பண்பாடு விழுமியம் போன்றவற்றைக் கற்பித்து சமூகத்தில் அவர்களும் தலைநிமிர்ந்து வாழக்கூடியதாக அமைத்த பெருமை அம்மாவுக்கே உண்டு. 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் இவ்வில்லத்தில் இருந்து வளர்ந்து பல்வேறுபட்ட பதவிகளிலும் பணிகளிலும் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். இன்னும் இவ்வில்லம் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் தலைமையில் தர்மகர்த்தா சபை. நிர்வாக சபையினரின் ஒத்துழைப்பில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வியிலும் இணைபாடச் செயற்பாடுகளிலும் இவர்கள் பெருவெற்றியைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வில்லம் ஆரம்பித்த காலம் முதல் அம்மா இறக்கும் வரை பேச்சும் மூச்சும் பிள்ளைகளாகவே இருந்தது. பிள்ளைகளின் கல்வி, உடை, உணவு ஏனைய செயற்பாடுகள் யாவற்றையும் சிந்தித்து செயல்திறன் கொண்ட பணிகளை அம்மையார் தொடர்ந்தார்.

இதனால் பிள்ளைகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் இணைபாடச் செயற்பாடுகளிலும் கலைகளிலும் சிறப்புற்றனர். கல்வி, இசை, யோகாசனம், தொழிற்பயிற்சி, ஆன்மீக நாட்டம், கலையுணர்வு, பிரசங்கமென எவ்வெவ் துறைகளில் அவர்களுக்கு ஈடுபாடு உள்ளதோ அந்தவகையில் அவர்களைப் பயிற்றுவித்தார். 

நோயுற்ற காலத்தில் தாயாகவும், கல்வியளிப்பதில் குருவாகவும், கண்டிப்பில் தந்தையாகவும், சமயத்தில் ஆன்மீகவாதியாகவும், தன்னுடைய சகல ஆளுமைத் திறன்களையும் பிள்ளைகளும் பின்பற்றி நடந்ததற்கான கடமை, நேர்மை, நேரமுகாமைத்துவம் என அனைத்து விடயங்களிலும் அவரைப் பின்பற்றக் கூடியதான ஒழுங்குமுறையுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

யாத்திரைகள், கூட்டுவழிபாடுகள், குருபூசைகள், ஆண்டு விழாக்கள், பரிசில் வழங்கல், போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், மாணவர் மன்றமென அவர் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் பிள்ளைகளை வழிப்படுத்தினார். 

இவ்வாறு இல்லப்பிள்ளைகளை இருபத்துநான்கு மணி நேரமும் அவரது கண்காணிப்பும், வழிகாட்டலும் இடம்பெறுவது வழமையாகும். இடம்பெயர்ந்து இராமநாதன்கல்லூரி, கைதடி சைவச்சிறுவர் இல்லம், உசன்கந்தசாமி ஆலய வளாகம் எனத் தங்கியிருந்த போதும் கோழிகள் தன் குஞ்சுகளைக் காவிக் கொண்டு திரிவது போல அம்மையார் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாது.

தாய் தன் பிள்ளைகளில் எவ்வாறு அன்பு வைப்பாரோ அதற்குச் சற்றும் குறைவுபடாது நோய் வந்த காலத்திலும் சரி, அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுப்பதிலும் சரி அவர்காட்டும் ஈடுபாடும், அன்பும் முன்மாதிரியான செயற்பாடுகள் ஆகும். அவர்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் அன்புத்தாயாகவும், பெரியம்மாவாகவும், அநாதைகளின் இரட்சகியாகவும், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவராகவும் விளங்கினார். 

“கோயில் என்பது நவீன சமூக அமைப்பிலே மானசீக உணர்வுகளைத் தக்கபடி நெறிப்படுத்தும் குறியீடாகவும் அமையும் எனலாம். சமூக மக்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆற்றலையும், ஆக்க சக்தியையும் பூரணமாக வெளிக்கொணர உதவும் வகையில் சமுதாயத்தில் கோயிலின் இடம் அமைகின்றது.” என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றை மெய்ப்பித்தவர் அம்மா. தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம், பெண்கள் தொண்டர் சபையினர், மகளிர் இல்லம், அன்னையர் இல்லம் போன்றவற்றினூடாக சமூகத்தை ஆலயத்தோடு இணைத்து வழிநடத்தியவர் அம்மா. 

அம்மாவின் வழிநடத்தலில் பத்தொன்பது ஆண்டுகள் வளர்ந்து பல்கலைக்கழகம் சென்று ஆசிரியையாகி இன்று புலம் பெயர் தேசத்தில் கடமையாற்றும் என்னைப் போன்ற எத்தனையோ பெண் குழந்கைகளை வளர்த்து ஆளாக்கிய எம் தாயை என்றும் எம் உள்ளத்தில் இருத்தி வணங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

நூற்றாண்டு காணும் இந்நாளில் அம்மா அவர்களின் பணிகளில் ஒரு சிறு பகுதியை நினைவு கூர்ந்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகின்றோம்.

தவனேஸ்வரி சிவகுமார் 

(BA (u;ons) Dip.in.Edu,MA)

https://www.virakesari.lk/article/202776

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.