Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றவர்களின் ஜெய பேரிகை! சுமந்திரன் - சத்தியலிங்கம்

Vhg ஜனவரி 27, 2025
1000429250.jpg

-மட்டுநேசன்

 

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் தலையைச் சுற்றும் விதமாக உள்ளன. தற்போதைய பதில் தலைவர் அல்லது எஞ்சிய காலத்துக்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுமந்திரனே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுமந்திரனின் கூற்றுக்களை ஜனாதிபதித் தேர்தலின் பின் ஒவ்வொன்றாக ஆராய்வோம். 

முதலாவது அரியநேத்திரன் தொடர்பானது.  இவர் யாழ். - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்றார். இவரை மக்கள் நிராகரித்து விட்டனர் என்று எள்ளிநகையாடினார் சுமந்திரன். தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதே யாழ். - கிளிநொச்சி மாவட்டத்தில் சுமந்திரன் பெற்ற வாக்குகளோ 15,039. தமிழ்த் தேசியத்தின் பக்கமே நிற்கிறோம் என்று காட்டத்தான் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அரியநேத்திரனுக்கு சுமந்திரனை விட ஏழே முக்கால் மடங்கு மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்ற கசப்பான உண்மை 4,033 வாக்குகளை மட்டுமே பெற்று தேசியப் பட்டியல் என்ற பின் கதவால் பாராளுமன்றம் சென்ற பதில் செயலாளர் ப. சத்தியலிங்கத்துக்கும் புரியவில்லை. இன்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேரில் நான்கு பேர் (ச. குகதாசன், சிறீதரன், கோடீஸ்வரன், ஸ்ரீநேசன்) அரியநேத்திரனை ஆதரித்தவர்கள் என்ற உண்மையும் 116,688  பேர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் வாக்களித்தனர் என்ற யதார்த்தமும் புரியாமலா ப. சத்தியலிங்கம் இருக்கிறார்? அப்படியானால் தமிழரசுக் கட்சிக்குத் தேவை ஒரு கணக்கு வாத்தியார். அரியநேத்திரன் கடந்த பொதுத் தேர்தலில் எப்படியோ தமிழரசுக் கட்சிக்குத்தானே வாக்குச் சேகரித்தார்? அவரது முயற்சியும் துணைபோனதால்தானே மட்டக்களப்பில் மூன்று ஆவணங்களைக் கைப்பற்ற முடிந்தது? சிறீதரனைத் தவிர, ஏனைய  வேட்பாளர்கள் அனைவரும் தமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் சுமந்திரனுக்கு ஒரு வாக்குப் போடவேண்டும் என்று கூற வேண்டும் என எழுதப்படாத நிபந்தனையின் பின்னர்தானே களமிறக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் எவ்வளவு வாக்குகள் பெற்றார் சுமந்திரன். உண்மை  இப்படி இருக்க அரியநேத்திரன் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு?

இப்போது கட்சியின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், எதிராகப் போட்டியிட்டவர்கள் தொடர்பாக உள்ளூராட்சி தேர்தலின்போது கவனமெடுக்கப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன். யார் யாரைக் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் அதீத கவனமெடுக்கிறார். ஒவ்வொரு நோயாளிகளும் எப்படி நடக்க வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தும் டாக்டர் ப. சத்தியலிங்கம் வல்லாரை சாப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது நினைவாற்றலுக்கு நல்லது. ஏற்கனவே நடக்கவிருந்து பிற்போடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சை அணி களமிறக்கப்பட்டது. அவர்கள் தாமும் தமிழரசுக் கட்சியினரே என்றார்கள். தமது வழிகாட்டி சுமந்திரன் எனவும் தெரிவித்தார்கள். இவர்களின் கூற்றுக்களை சுமந்திரன் மறுதலித்ததாக நினைவில்லை. ஆனால், இந்த விடயம் கட்சியின் செயலர் பொறுப்பை வகிக்கும் சத்தியலிங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது உண்மை. இந்த சுயேச்சைக் குழுவும் சமத்துவக் கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதே நோக்கம். இதற்காக சுமந்திரனின் தீவிர பக்தரான சுப்பிரமணியம் பிரபா அக்கட்சிக்குள் அனுப்பப்பட்டார். சந்திரகுமார், சுமந்திரன் கூட்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பலமாகியது. ஆகவே, செயலருக்கு இப்போது வல்லாரை தேவைதான்.

சத்தியலிங்கம் செயலர் பதவியை ஏற்பதற்கு முன் நடந்த விடயம் ஒன்றையும் அவருக்குச் சுட்டிக்காட்டுகிறோம். யாழ். மாநகர சபை தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது, “மேயர் யார் என்பது தொடர்பாக முடிவெடுக்க முடியவில்லை. எனவே, தேர்தலின் பின்னர் முடிவெடுப்போம்”, எனத் தீர்மானித்தனர். ஆனால், அங்கிருந்து வெளியேறிய சுமந்திரன் ஊடகவியலாளர்களிடம் ஆர்னோல்ட்தான் மேயர் என அறிவித்தார். குறைந்தபட்சம் தலைவரிடமோ, செயலரிடமோகூடத் தனிப்பட்ட முறையில்கூடச் சொன்னதாகத் தெரியவில்லை. ஏனெனில், வெளியே வந்த தலைவரிடமும் செயலரிடமும் ஊடகவியலாளர்கள் ஆர்னோல்ட்தான் மேயர் என சுமந்திரன் சொல்கிறாரே எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனப் பதிலளித்தனர். இதனால், குழப்பமடைந்த ஊடகவியலாளர்கள் பின்னர் வந்த சுமந்திரனிடம் தலைவர், செயலரின் கூற்றைச் சுட்டிக்காட்டினர். அதற்கு அலட்சியமாக, “அவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். ஆனால், ஆர்னோல்ட்தான் மேயர்”, எனப் பதிலளித்தார் சுமந்திரன். 

எனவே, கட்சியின் முடிவுக்கு மாறாகச் சுமந்திரன் செயற்பட்டமை தொடர்பாக இவரைத் தேசியப் பட்டியலுக்குச் சிபாரிசு செய்த துரைராஜசிங்கம் மற்றும் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு கட்சிக்குள் இடமில்லை என்றால் மகிந்தவின் கட்சியில் போட்டியிட்டு தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவன் தான் எனக் காட்ட முயன்ற சாணக்கியன் எப்படிக் கட்சியின்சார்பில் போட்டியிடலாம்?

பாராளுமன்றத்துக்கான ஒரு மரபு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக யார் முதலில் பிரவேசிக்கிறார்களோ அந்த மூப்பின் அடிப்படையிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்படும். இன்றுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களில் கோடீஸ்வரனே மூத்தவர் (சிறீதரனையும்விட) சிறீதரனுக்கு அடுத்ததாக ஸ்ரீநேசன் உள்ளார். இந்த யதார்த்தம் புரியாமல் சாணக்கியனுக்கு முன்னுரிமை வழங்கும்படி செயலர் சத்தியலிங்கம் பாராளுமன்ற செயலரை வேண்டிக்கொண்டதாகச் செய்திகள் கசிந்தன. இக்கோளாறு பின்னர், சிறீதரன் எழுதிய கடிதத்தால் சரி செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தன்னைப் பாராளுமன்ற உறுப்பினராக்க சாணக்கியன் உதவியிருக்கலாம். அவர் சுமந்திரன் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை என்பது பரகசியம்தான். அதற்காக பாராளுமன்ற செயலருக்கு வேண்டுகோள் விடுக்குமளவுக்குத் திரு. சத்தியலிங்கம் போய் மூக்குடைபட்டிருக்கத் தேவையில்லை. 

மேலும், தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ள முயன்ற சிறீதரனின் பயணத்தைத் தடுத்து நிறுத்த முயன்ற சம்பவம் கவனத்துக்குரியது. இது தொடர்பாக ஊடகமொன்று கட்சியின் ஊடகப் பேச்சாளராக தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சுமந்திரனிடம் கேட்டது. இதற்கான சரியான பதிலாக “சிறீதரனின் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமை மீறப்பட்டமை கண்டனத்துக்குரியது. இச்சம்பவம் தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்பதே அமைந்திருக்க வேண்டும். இதனைச் சொல்லாதவருக்கு ஏன் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவி? என்பதுக்கு தலைவரும் செயலரும் பதிலளிக்க வேண்டும். இதனைவிட, சிறீதரனுக்கு ஆங்கிலமோ, சிங்களமோ தெரியாது. கூடவே சென்ற ரவூப் ஹக்கீமின் முயற்சியால்தான் அவரது பயணத்தைத் தொடர முடிந்தது என்று அர்த்தம் தொனிக்கக்கூடியதாக கிண்டலாகக் கூறியதாக உணரமுடிந்தது. அத்துடன், தனது காலில் விழாதமைக்கான கோபத்தை மறைமுகமாக அவர் உணர்த்தியதைக் காண முடிந்தது. முன்பெல்லாம் தானேதான் இவருக்கு நேர்ந்த நெருக்கடிகளை தீர்த்து வைத்ததாக ஜம்பமும் அடித்துக் கொண்டார். தற்போது சுமந்திரன் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியைத் தொடர எப்படி அனுமதிப்பது என்று மத்திய குழுவினரிடம் பொதுச் சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்க இயலாமல் போயிற்று. தற்போதும் 28 உறுப்பினர்களைத் துரத்துவதற்காக விளக்கம் கேட்டு உடும்புப்பிடியாக நிற்கிறார் செயலர். இதனைவிட, அம்பாறை, திருமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் பலரை நீக்க பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாம் பாராளுமன்றத்தில் சாணக்கியனுக்கு முன்வரிசை இடம் கேட்டு மூக்குடைபட்டதன் விளைவு. கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றில் முடிந்து மீண்டும் தலைவர் தேர்தல் நடைபெற்றால் தன்னை எம். பியாக்கிய சுமந்திரனுக்கு எதிராக முன்னர் வாக்களித்தவர்களை ஒரு கைபார்க்காமல் விடமாட்டார் என்பது திண்ணம். 

சஜித்தோ, ரணிலோ, மகிந்தவோ, அநுரகுமாரவோ ஒரு நிலைப்பாட்டை தலைவர் என்ற ரீதியில் எடுத்தால் உறுப்பினர்கள் அந்த வழியில்தானே செல்வர். மாகாண சபையில். இனப் படுகொலை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அப்போதைய முதலமைச்சர். இதனைத் தொடர்ந்து சுமந்திரனின் ஏற்பாட்டில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தற்போதைய தலைவரே ஆளுநரிடம் கையளித்தார். ஆனால், பெருந்தலைவர் சம்பந்தன் எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து தன்னிடம் கையளித்த மகஜரை திரு. சீ. வீ. கேயிடம் மீளக் கையளித்தார் ஆளுநர். அப்போது அவர், “முதலமைச்சருக்கான நியமனம்” என வேடிக்கையாகச் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. முதலில் தனது கையில் திணித்துவிட்டார்கள் அதனால்தான் ஆளுநரிடம் கையளித்தேன் என்றார் சீ. வீ. கே. இந்தக் கட்சியிலேயே இது போன்ற முன்னுதாரணங்கள் உண்டு. கட்சித் தலைவர் மாவை அரியத்தை ஆதரித்து கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பணிமனைக்கும் சென்று அரியத்தை ஆசிர்வதித்தார். அப்படியிருக்க கட்சி உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பானேன்?

கட்சி சுமந்திரனின் வருகைக்குப் பின்னரே தமிழ்த் தேசிய இலக்கிலிருந்து விலகிச் செல்கிறது என்பது பொதுவாக இலட்சியப்பற்றுள்ள அனைவருக்கும் தெரியும். சர்வதேச விசாரணை தேவை என்றார் கிளிநொச்சியில் வாழ்ந்த சிறீதரன். அந்தச் செய்தி வந்த வலம்புரி நாளிதழிலேயே “உள்ளக விசாரணையே போதும்”, என்று கொழும்பில் வாழ்ந்த சுமந்திரன் கூறியதாக செய்தி வெளியாகிற்று. யாழ். நூலக எரிப்பு மற்றும் பிந்துனுவெவ தடுப்பு முகாம், கொக்கட்டிச்சோலை, திருமலை - குமாரபுரம், மயிலந்தனை போன்ற படுகொலைச் சம்பவங்களின் பின்னரும் வரலாற்றைப் புரியாது இவ்வாறு கூறுகிறார் என்றால் இம்முடிவை கட்சி எடுத்ததா?

கட்சி எடுக்காத தீர்மானத்தை சுயமாக அறிவித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் யாழ். கிளிநொச்சியில் சுமந்திரனைவிட இரட்டிப்பாக சிறீதரனுக்கு வாக்களித்தனர் மக்கள். (சிறீதரன் 32, 833 சுமந்திரன் 15,039) 

தலைவர், செயலாளர், ஊடகப் பேச்சாளர், பொருளாளர், தேசியப் பட்டியல் உறுப்பினர் என அனைத்தையும் வடக்கே குவித்ததன் மூலம் வட, கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் குரல்களை நசுக்கியுள்ளனர். போதாதற்கு அரசியல் தீர்வு தொடர்பாக ஆராயும் குழுவில் நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவில் இருவரே கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரைத் தவிர்த்தது ஏற்கக்கூடியதல்ல. வடக்கில் 93,038  பேரே (யாழ். 63,327, வன்னி 29,711) தமிழரசுக்கு வாக்களித்தனர். இதனைவிட, 71,737 பேர் கிழக்கில் (அதாவது 164,775 பேர்) வாக்களித்தனர். (மட்டக்களப்பு 93,975, அம்பாறை 33,632, திருமலை 34,168) கிழக்கில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரான சாணக்கியன் இறுதி யுத்ததத்தின் பின்னர் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகப் போட்டியிட்டவர் என்பதை மறந்து கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்று பட்டியல் போட்டுக் கடிதம் அனுப்பும் செயலாளருக்கு வல்லாரையை சிபாரிசு செய்கிறோம். சிறீதரன் எதையாவது கூறினால் அதனை வழிமொழிய எவரும் இருக்கக்கூடாது என்ற கவனத்துடனேயே தெரிவு நடத்தப்பட்டதால் தேசியம் என்பது மறக்கப்பட்ட விடயமே. 

இளையவர்களில் இணைத்துக் கொள்வதில் காட்டாத ஆர்வம் இருப்பவர்களை வெளியே அனுப்புவதிலேயே உள்ளது. கஜேந்திரகுமார் மேற்கொள்ளும் முயற்சியை ஏக்கிய ராஜ்ஜிய சுமந்திரன் குழு போட்டுடைக்கவே முயற்சிக்கும். தலைவர் சீ. வீ. கே. கடந்த காலங்களில் தன்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக செயற்படாமலிருந்தால் வரவேற்கத்தக்கது. 

எங்குமே யுத்தத்தில் வென்றவர்களே ஜெயபேரிகை (வெற்றி முழக்கம்) முழங்குவார்கள். தமிழரசுக் கட்சியிலோ தோற்றவர்களே முழங்குகின்றார்கள்.  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தை ஆளும் கட்சியினரிடம் ஒப்படைக்கும்வரை ஓயமாட்டோம் எனச் சபதமெடுத்துள்ளார்கள் போலுள்ளது. இந்த  நிலையைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் துணிச்சல் தற்போதைய தலைவர் சீ. வீ. கே. அவர்களுக்கு வரவேண்டுமென சந்திரசேகரப் பிள்ளையாரிடம் வேண்டுவோம்.

 

 

https://www.battinatham.com/2025/01/blog-post_281.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.