Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியலில்13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் …..?(பகுதி 1)

 — வி.சிவலிங்கம் —

சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்கள் ’13வது திருத்தத்தினை தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ எனக் கேள்வி எழுப்பி  கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இக் கட்டுரை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னதான நிகழ்வுகளின் பின்னணியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டிருந்தது. குறிப்பாக, 13வது திருத்தம் தொடர்பாக வழமையாக இந்திய தரப்பினர் அதனை நடைமுறைப்படுத்துவதை வற்புறுத்துவது வழக்கம். ஆனால் இம்முறை வழக்கிற்கு மாறாக தற்போதைய அரசியல் யாப்பின் உள்ளடக்கத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருப்பதும் அது தொடர்பாக அரசியல்வாதிகள் வெவ்வேறு விளக்கங்களை வழங்குவதுமாக நிலமைகள் மாற்றமடைந்துள்ளன.

இவரது கட்டுரையின் சாராம்சம் இந்திய தரப்பில் காணப்படும் அணுகுமுறை மாற்றங்களையும், தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள பலவீன நிலமைகளின் பின்னணியில் காத்திரமான மாற்றங்களை மேற்கொள்ளும் தகுதி தமிழ் தலைமைகள் மத்தியில் உள்ளதா? என்ற கேள்விகளையும் எழுப்பி ‘தற்போதைய நிலவரம் வேண்டி நிற்பதற்கிணங்க நிதானமாகச் சிந்தித்து செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால் இறுதியில் இலங்கைத் தமிழ் மக்கள் எதையுமே பெற முடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து உண்டு’ என்ற எச்சரிக்கையுடன் முடித்திருந்தார்.

இதன் அடிப்படைச் சாராம்சங்களைப் படித்த வேளையில் இரு அம்சங்கள் தெளிவாகப் புலப்பட்டன. அதாவது மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் உள்ளதா? என்பதும், அவ்வாறு இல்லையெனில் தமிழ் மக்கள் மத்தியில் அதற்கான புதிய சக்திகள் தோற்றம் பெறும் வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வியும் எழுகிறது. தற்போதைய அரசியல் அடிப்படை மாற்றங்களை அவதானிக்கும் போது இவ்வாறான இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பான சந்தேகங்கள் கடந்த காலத்தில் பிரேமதாஸ அரசு விடுதலைப்புலிகளுடன் இணைந்து இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினைப் பலவீனப்படுத்திய வேளையில் அதற்குப் பதிலாக புதிய இலங்கை- இந்திய நட்புறவு ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்திருந்தார்.  அவ்வாறான ஒரு அரசியல் சூழல் இன்றும் உருவாகிறதா? என்ற கேள்விக்கான பதிலைத் தேடுவதாகவே இக் கட்டுரை எழுந்தது.

அறகலய

=======

இலங்கையின் இன்றைய அரசியல் அடிப்படை மாற்றங்களுக்கான உந்து சக்தி என்பது 2022ம் ஆண்டு மே மாதவாக்கில் இலங்கையில் ஏற்பட்ட ‘அறகலய’ என்ற எழுச்சிகளே காரணமாக அமைந்தன என்பதும், அப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கும் சக்தியை எந்த அரசியல் கட்சிகளோ, சக்திகளோ அவ் வேளையில் வழங்கத் தயாராக இருக்கவில்லை என்பதும், இருப்பினும் காலப் போக்கில் அப் போராட்டங்களின் மைய இயக்குவிசை என்பது ஜனநாயக மறுப்பு, ஊழல், குழு ஆட்சி, இனவாதத்தை உக்கிரப்படுத்தி சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மேற்கொள்ளும் சட்ட விரோத ஆட்சி, குழு மற்றும் குடும்ப மற்றும் இராணுவ ஆதிக்க வழிமுறை போன்றவற்றின் ஒட்டு மொத்த தோல்வியின் விளைவு என்பதை ஜே வி பி /தே ம சக்தி (JVP/NPP) என்பன இணைந்து புரிந்து கொண்டதன் விளைவாக 2024ம் ஆண்டு தேர்தலின் முடிவுகளை அவர்கள் அறுவடை செய்தனர்.

இத் தேர்தல் முடிவுகள் என்பது  தேசிய மக்கள் சக்தியின் மீதான நம்பிக்கை என்பதை விட மாற்று அரசியல் தெரிவாக வேறெதுவும் இல்லாத நிலையிலும், இப் பிரிவினரே நாடு தழுவிய அடிப்படையில் கட்சிக் கட்டுமானங்களை வைத்திருந்த நிலையிலும் மக்கள் மனங்களில் ஏற்பட்டிருந்த அரசியல், சமூக, பொருளாதார விரக்தி நிலமைகளை வாக்குகளாக மாற்ற முடிந்துள்ளது. அது மட்டுமல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒரே சக்திகள் என அவர்களை மக்கள் ஏற்கெனவே அறிந்துள்ள போதிலும் இடதுசாரிக் கொள்கைகள் தொடர்பாக வலதுசாரிக் கட்சிகள் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பிரமைகள் குறிப்பாக மத நம்பிக்கைகள், சொத்துகளை வைத்திருப்போருக்கிருந்த அச்சங்கள் போன்றன அவர்களை அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வதற்கான தடைகளாக இருந்தன.

ஆனால் 2020 களில் தோற்றம் பெற்ற தேசிய மக்கள் சக்தி அமைப்பும், அதில் செயற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மத்திய தர வர்க்க சிந்தனையாளர்களின் இணைப்பும் ஜே வி பி இன் கவனத்தில் பட்டதன் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் 2022 இல் தோற்றம்  பெற்ற ‘அறகலய’ நிகழ்வுகளும் மக்கள் மத்தியில் JVP/NPP இணைப்பினை புதிய வெளிச்சத்தில் மூன்றாவது பெரும் அரசியல் சக்தியாக அடையாளம் காட்டின.

இந்த விளக்கங்களை முன்வைப்பதற்கான காரணம் எதுவெனில் தற்போதைய அரசியலை நாம் பழைய அரசியல் அடிப்படைகளை முன்வைத்து விபரிக்க முடியாது என்பதை விளக்கவேயாகும். குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவி வரும் திறந்த பொருளாதாரத்தின் விளைவுகளும், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறை நாட்டின் ஜனநாயக கட்டுமானத்தைப் பலவீனப்படுத்தியதன் விளைவே என்பதையும் சாமான்ய மக்களும் உணரும் நிலை இம் மாற்றத்தின் தாக்கங்களால் ஏற்பட்டது. உதாரணமாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, இறக்குமதிக் கட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, பணவீக்கம், பண நோட்டுகளை அளவிற்கு அதிகமாக அச்சடித்து புழக்கத்திற்கு விட்டமையால் ஏற்பட்ட பொருட்களின் விலையேற்றம், வர்த்தகர்களால் ஏற்படுத்தப்பட்ட பதுக்கல்களும், செயற்கைத் தட்டுப்பாடுகளும், அரசு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்கத் தவறியதன் காரணமாகவும், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வரிச் சலுகைகளை அறிவித்து பணக்காரர்களின் சேமிப்பை அல்லது வருமானத்தை அதிகரித்தமை, அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்குமிடையேயான ஊழல் நிறைந்த உறவு, இனவாதத்தை உக்கிரப்படுத்தி தேசிய இனங்களிடையே பகை நிலமைகளைத் தோற்றுவித்தமை எனப் பல்வேறு செயல்கள் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் உட்கூறுகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக சிங்கள பௌத்த மக்களின் பாதுகாப்பை உச்சரித்தவாறே, அதே சமூகப் பிரிவினருக்குள் உள்ள பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் அதிகாரத்தில் குறியாக மேற்கொண்ட செயல்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்தன. அத்துடன் நாட்டைப் பெருமளவில் வெளிநாட்டுக் கடனுக்குள் தள்ளிய ஆட்சியாளர்கள் அக் கடன்களின் மூலம் பாரிய கமிஷன்களைப் பெற்று அவற்றை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததினால் டொலருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவை யாவும் தற்போது ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக சாதாரண மக்களுக்கு அறிவூட்டியுள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் என்பது ஒரு காலத்தில் மத்தியதர வர்க்கத்தின் அல்லது அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களிலிருந்து மத்தியதர வர்க்கத்தினரால் மட்டுமே படிக்க அல்லது புரிந்து கொள்ள அல்லது அப் பிரிவினரின் நலன்களை மேம்படுத்த உதவிய நிலமைகளிலிருந்து மாறி சாமான்யனின் கைகளுக்குள் செய்திகள் சென்றுள்ளதன் விளைவாக அடிப்படை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை அதாவது உண்மைகளின் தாற்பரியங்களை அறிந்து கொள்ளவும், சிந்திக்கவும், மாற்று யோசனைகளைப் பிரயோகிக்கவும் சாத்தியமானது.

புதிய நிலைமைகளில் இருந்து மாற்றத்தை புரிதல்

===============

இந்த நிலைமைகளின் பின்னணியில்தான் நாம் இன்றைய மாற்றங்களை அணுகுதல் வேண்டும். பழைய நிலைமைகளிலிருந்து நாம் இவற்றை அணுக முடியாது. ஏனெனில் அடுத்த 5 ஆண்டுகளில் வேறொரு அரசியல் சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டிருப்போம். ஆனால் தற்போதைய அரசியல்வாதிகள் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களை குறிப்பாக தகவல் பரிமாற்றங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்களை, விழிப்புணர்வினை அடையாளம் காணத் தவறியுள்ளனர். இன்னமும் பழைய பாணியில் இனவாதம், இனங்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்து வாக்குகளைக் கொள்ளையிடுதல் போன்ற செயல்களால் மீளவும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தில் செயற்படுகின்றனர்.

உதாரணமாக, 2024ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் பாரிய அரசியல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இம் மாற்றத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாத சில சக்திகள் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படவில்லை எனவும், அவ் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை எனவும், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் ஏற்கெனவே அரச சார்பு சக்திகளுக்கு வாக்களித்த அதே மக்களே எனவும் எதுவித புள்ளி விபர ஆதாரங்களும் இல்லாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

ஆனால் நிலமைகள் அவ்வாறிருக்கவில்லை. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த இனவாதம் எவ்வாறு சிங்கள மக்களின் வாக்குகளைக் கொள்ளை அடித்து அதிகாரத்தை ஜனநாயக விரோத நிலைக்குத் தள்ளி அதனால் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்தின் பின்னணிகளைப் புரிந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்களோ, அதே போலவே தமிழ்க் குறும் தேசியவாதத்தை முன்வைத்து தமிழ் மக்களில் பெரும்பகுதி மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்த நிலையை சிங்கள மக்கள் உணர்ந்தது போலவே தமிழ் மக்களில் பெரும்பான்மை பிரிவினரும் சரியான தருணத்தில் விழித்துக் கொண்டார்கள்.

இந்த வரலாற்றின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடம் எதுவெனில் சிங்கள மக்கள் இன்று இனவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்தவும், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கவும் புதிய பாதையைத் தெரிந்தெடுத்தார்களோ அதே போலவே தமிழ் மக்களும் ஜனநாயகம், தேசிய ஒருமைப்பாடு, இனவாதத்திற்கு எதிராக அணி திரள்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குதல், சகவாழ்வின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல் போன்ற அம்சங்களில் ஒன்றிணைந்து செயற்படும் புதிய அரசியலை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இதுவரை குறிப்பிட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தின் பின்னணியிலேயே இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 13வது திருத்தத்தின் எதிர்காலம் குறித்த பார்வை அமைதல் அவசியமானது. தமிழ் அரசியலின் கடந்தகால அணுகுமுறை என்பது அச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சமூகப் பிரிவினர் அம் மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக இருந்த பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற மக்களின் தேவைகளைப் பின்தள்ளி வெறும் தேசியவாத அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து தமது அரசியல் அதிகார இருப்பைப் பாதுகாத்தனர். அதே போலவே அரசாங்கத்துடன் இணக்க அரசியலை நடத்தி அரச உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவென நடத்திய அணுகுமுறைகளும் தமிழ் சமூகத்திலுள்ள உயர்மட்ட பிரிவினர்களின் தேவைகளையே பூர்த்தி செய்தனர். இதன் காரணமாகவே 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் குறும் தேசியவாத சக்திகளும், இணக்க அரசியல் செய்தவர்களும் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்ல, புதிய அரசியல் அணுகுமுறைகளுக்கான ஆரம்ப அடிப்படைகளும் கீழ் மட்டத்திலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன.

இம் மாற்றங்கள் தமிழ் அரசியலில் புதிய அரசியல் வழிமுறைக்கான பாதைகளைத் தோற்றுவித்துள்ளன. அதாவது கடந்த 75 ஆண்டுகால அரசியல் அடிப்படைகளை விட்டுக் கொடுக்காத வகையில் புதிய அரசியல் அடிப்படைகளைத் தோற்றுவிப்பது, அடுத்தது மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் தவிர்க்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறைகளைத் தோற்றுவிப்பது என்பனவாகும். எனவே எதிர்கால தமிழ் அரசியல் என்பது மேற்குறித்த இரண்டு அம்சங்களையும் சமாந்தரமாகவும், தேசிய அளவிலான ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்தல், இனவாத அரசியலுக்கான அடிப்படைகளை இல்லாதொழித்தல், ஊழலற்ற, சம வாய்ப்புகளைத் தோற்றுவிக்கும் வகையிலான நிர்வாகக் கட்டுமானங்களைப் பரிபாலித்தல் என இன்னோரன்ன செயற்பாடுகளை நோக்கி நாடு திருப்பப்படுகிறது.

மாற்றங்கள் குறித்த சந்தேகம்

================

இம் மாற்றங்கள் குறித்து பலருக்குச் சந்தேகங்கள் எழ வாய்ப்பு உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. நாட்டில் சட்டப்படியான ஊழலற்ற ஆட்சி, தேசிய இனங்களது அடையாளங்களை வளர்த்தல், பாதுகாத்தல் என்பவற்றுடன் நாட்டின் பல்லினத் தன்மையை வளர்க்கும் விதத்திலான புதிய தேசிய கட்டுமானத்தை உருவாக்குதல் என்ற அடிப்படையில் புதிய அரசியல் யாப்பிற்கான விவாதங்களை நகர்த்தல் ஆரம்பமாகின்றன. இவ்வாறான மாற்றங்களுக்கான தயார்ப்படுத்தல்களின் போது கடந்தகால சிந்தனைகளிலிருந்து விடுபட முடியாது சிக்கித் தவிக்கும் அரசியல் சக்திகள் இந்த அரசின் வீழ்ச்சியை எதிர்பார்த்திருப்பது எதுவும் புதிய சங்கதிகள் அல்ல. உதாரணமாக தமிழர் தரப்பில் 13வது திருத்தம் புதிய அரசியல் யாப்பில் இல்லாதொழிந்தால் என்ன செய்வது? என்பது குறித்து தெளிவான பார்வை இல்லாத நிலையில் இந்திய அரசின் பொறுப்புகளை அடிக்கடி வலியுறுத்தி தமது பொறுப்புகள் என்ன? என்பதை மறைத்துச் செல்லும் விவாதங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் 13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுகளைத் தரவில்லை என்ற விவாதங்களை தொடர்ச்சியாக முன்வைத்துள்ள போதிலும், இவ்வாறான விவாதங்கள் இனவாத அடிப்படையிலானது என தமிழர் தரப்பில் இன்னமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரலாற்றினைப் பின்னோக்கி ஆராய்ந்தால் குறிப்பாக பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மீள நோக்கினால் தமிழர் தரப்பின் மத்தியிலும் 13வது திருத்தத்திற்கு எதிரான சதிகள் அன்றும் மிக அதிகமாக இருந்திருப்பதை நாம் காணலாம். இவை குறித்து பின்னர் விரிவாக பார்க்கலாம்.  

ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ் அரசியல் என்பது தனது பொருளாதாரத் தேவைகளை எந்த அடிப்படையில் அணுகுவது? அரசியல் அடிப்படைகளை எவ்வாறு அணுகுவது? என்பது குறித்த சில கருத்துக்களை இனி நாம் பார்க்கலாம்.

இன்றைய தமிழ் அரசியல் மாற்றம் என்பது பாரம்பரிய தேசியவாத சக்திகளினதும், அதற்குச் சேவகம் செய்த இதர பிரிவினரும் தமிழ் பிரதேசங்களில் வாழும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் அபிலாஷைகளைக் கைவிட்டதன் விளைவாக எழுந்த புதிய நிலமைகளே காரணம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். குறிப்பாக, தமிழ் தேசியவாதம் என்பது அச் சமூகத்திலுள்ள உயர் பிரிவினரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அவர்களால் ஒட்டு மொத்த சமூகத்தின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்க முடியவில்லை. குறிப்பாக அச் சமூகத்தின் கீழ்மட்ட பிரிவினரை அவை சென்றடையவில்லை. அதன் கோட்பாட்டு அடிப்படைகளில் காணப்பட்ட இறுக்கமான நிலைமைகளும், புதிய மாற்றங்களை உள்வாங்க முடியாத உள்ளார்ந்த நிலமைகளும் அத் தலைமைகளால் தொடர்ச்சியாக தலைமைத்துவத்தை அனைத்து மக்களுக்கும் வழங்க முடியவில்லை. குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் அன்றாட வாழ்வுப் பிரச்சனைகள் அதாவது பொருளாதார வலுவாக்கம், கல்வி, சுகாதாரம், சமூக முன்னேற்றம் போன்றன இம் மக்களுக்குக் கிடைக்காத ஒன்றாக வெகு தூரத்தில் அமைந்திருந்தன. அத்துடன் இக் குறும் தேசியவாத சக்திகள் மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் பிரதான அம்சங்கள் குறித்து எவ்வித பார்வையும் கொண்டிராதது மட்டுமல்ல, அம் மக்களுடனான உறவுகளையும் படிப்படியாக இழந்திருந்தனர்.

தமிழ் அரசியலில் பிரிவினை என்பது மிகவும் மறைமுகமாக செயற்படுவதால் தேசிய அளவிலான பொருளாதார கட்டுமானங்களில் இணைய முடிவதில்லை. அவ்வாறு இணைந்தால் பிரிவினைக்கான அடிப்படைகள் பலவீனமடைந்துவிடும் என்ற அச்சம் உள்ளுரக் காணப்படுகிறது. முதலில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி நிர்வாக கட்டுமானங்களை கட்டுப்படுத்தினால் தம்மால் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தின் விளைவானதாகும். ஆனால் பொருளாதாரக் கட்டுமானமே அரசியல் கட்டுமானத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்ற அடிப்படை சமூக விஞ்ஞான விதியை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவிய திறந்த பொருளாதார அமுலாக்கத்திற்கு மிகவும் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஆட்சிப் பொறிமுறை அவசியமாகியது. இதன் காரணமாகவே தமிழர் தரப்பில் தெளிவான பொருளாதாரக் கொள்கையும் இல்லாமல் போயிற்று. 75 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பொருளாதாரக் கொள்கைகளும் இல்லாமல் வெறுமனே தமிழ் குறும் தேசியவாதத்தை மட்டும் நம்பிய தமிழ் அரசியல் தனது பிளவுபட்டுள்ள சமூகத்தைத் தொடர்ந்து வைத்திருந்தது. அத்துடன் படிப்படியாகவே தமிழ் பேசும் சமூகத்தின் முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தமது பொருளாதார நலன் கருதி தேசிய பொருளாதார கட்டுமானத்தின் பங்குதாரர்களாக மாறிச் சென்ற அதே வேளை வடக்கு, கிழக்கில் வாழும் பாரம்பரிய தமிழ் மக்களில் ஒரு பிரிவினரும் படிப்படியாக தேசிய பொருளாதாரக் கட்டுமானத்தின் பங்காளிகளாக மாறினர். எனவே தமிழ் அரசியல் தனது அழிவுக்கான பாதையைத் தானே தேடிக் கொண்டதன் விளைவுகளே எமது அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணிகளாகும்.

(தொடரும்…….)

https://arangamnews.com/?p=11734

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 2)

தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 2)

 — வி.சிவலிங்கம் —

‘அறகலய’ எழுச்சியும் அதன் விளைவுகளும்

===============

தமிழ் சமூகத்தின் மத்தியில் படிப்படியாக பல்வேறு காரணங்களின் அடிப்படையில்   ஒதுக்கப்பட்ட இம் மக்கள் தமது தேவைகளுக்காக பரந்த முன்னேற்றகரமான சமூக இயக்கத்திற்காக வெகு காலம் காத்திருந்தனர். ‘அறகலய’ எழுச்சியும், அதன் விளைவாக ஏற்பட்ட பல்லின மக்கள் மத்தியிலான ஜனநாயக உணர்வுகளும் தமக்கான பிரதிநிதித்துவத்தைக் கோரும் அதாவது பொருளாதார சமத்துவம், உரிமைகளின் அடிப்படையிலான ஆட்சிப் பொறிமுறை, குறும் தேசியவாதத்திற்கெதிரான தேசிய இன சகவாழ்வைக் கோரும் மாற்றங்களாக அவை மாற்றமடைந்தன. பொருளாதார அடிப்படையில் மிகவும் நலிவடைந்த பிரிவினரிடையே ஏற்பட்டிருந்த இவ் விழிப்புணர்ச்சி என்பது பெரும்பான்மைவாத அரசியலுக்குள் சிக்குண்டிருந்த தமிழ் – சிங்கள அரசியல் சக்திகளுக்கெதிரானதாகவும், இந்த சக்திகள் சுயாதீனத்தையும். சமத்துவத்தையும் கடந்த காலத்தில் கோரியது போலவே ஜனநாயக விழுமியங்களை இணைத்த கோரிக்கைகளாக தற்போது முன்வைக்கின்றனர். குறிப்பாக, 2024ம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு தேர்தல்களிலும் தமிழ் குறும் தேசியவாதம் மிகவும் உக்கிரமாக செயற்பட்ட போதிலும் மக்களில் ஒரு பிரிவினர் தேசிய சகவாழ்வு அரசியலை நோக்கிச் சென்றுள்ளனர். இங்குள்ள முக்கிய அம்சம் எதுவெனில் தமிழர் தரப்பிலுள்ள அரசியல் சக்திகளால் இம் மாற்றத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு மக்களிடமிருந்து மிகவும் அந்நியமாகியிருந்தனர். தமிழ் குறும் தேசியவாத சக்திகள் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து வெகு தூரம் விலகி வெறும் குறும் தேசியவாத கூச்சல்களையே அரசியலாக்கியிருந்தனர்.

இன்று இலங்கை அரசியலில் முன்னேற்றகரமான அரசியல் கோரிக்கைகளை வற்புறுத்திச் செல்லும் ஜே வி பி – தேசிய மக்கள் சக்தி இணைந்த பிரிவினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தமிழ் மக்களினதும், இதர தேசிய சிறுபான்மை இனங்களினதும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அரசியல் கட்டுமானங்களில் மாற்றத்தைக் கோரி வருவதும் குறிப்பாக 13வது திருத்த அமுலாக்கத்தை ஆதரிப்பதும் அதாவது சிங்கள அரசியல் தரப்பில் ஏற்பட்டு வரும் கணிசமான மாற்றங்கள் என்பது தற்போதைய முற்போக்கான அம்சங்களாகும். குறிப்பாக, 13வது திருத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஜே வி பி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகள் மிகவும் வெளிப்படையாகவே தயங்கித் தயங்கி எடுத்திருந்தன. இம் மாற்றங்கள் என்பது சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளை நோக்கிய மாற்றங்களே என சிங்கள ஊடகங்கள் மத்தியில் இன்று விவாதிக்கப்படுகின்றன. பிரதான அரசியல் கட்சிகளிடையே இம் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் தமிழ் அரசியல் என்பது இம் மாற்றங்களை ஆய்வு அடிப்படையில் அணுகாமல் ஒற்றை ஆட்சிக் கட்டுமானத்திற்குள் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு சாத்தியமில்லை எனவும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளே தேவை எனவும் விவாதங்களை தற்போது நகர்த்தும்போது சிங்கள அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இவர்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? பிரதான அரசியல் கட்சிகள் மிகவும் வெளிப்படையாகவே மாற்றத்தை நோக்கிச் செல்லும்போது தமிழ் அரசியல் ஒரு வகை இறுக்கமான போக்கை நோக்கி ஏன் செல்கிறது? தமிழ் அரசியலில் பிரிவினைவாத அரசியல் என்பது அதன் உட் பொறிமுறைகளில் ஆதிக்கம் செலுத்துவதால் இக் கட்சிகளால் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்த முடியாது. பதிலாக இப் பிரிவினரின் அரசியல் என்பது இவற்றிற்கு எதிராக செயற்படும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கே மறைமுகமாக உதவுவதை மிகவும் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது.

தேர்தல் முடிவுகளிலும், அதற்குப் பின்னதான நிகழ்வுகளிலும் தமிழ் சமூகத்திலுள்ள பின்தங்கிய பிரிவினரின் உறுதியான செயற்பாடுகள் அரசியலில் உள்ளார்ந்த மாற்றங்களையும். சமூக- பொருளாதார செயற்பாடுகளில் உள்ளீட்டு முன்னேற்றங்களையும் அவதானிக்க முடிகிறது. இந்த சக்திகளே நாட்டின் அடுத்த கட்ட நகர்வைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

தமிழ் பிரதேசங்களில் செயற்படும் இப் பின்தங்கிய பிரிவினரின் செயற்பாடுகள் தேசிய முற்போக்கு சக்திகளுடனான உறவுகளை மேலும் ஆழமாக்கும்போது அவை தேசிய அளவில் பொருளாதார சமத்துவத்தையும், கல்வி மற்றும் அதிகார பரவலாக்க பிரச்சனைகளில் போதுமான புரிதல்களையும் ஏற்படுத்தும். இம் மாற்றங்கள் கடந்த காலங்களில் தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சக்திகளின் அரசியல் கோட்பாடுகளுக்கு மாற்றான உரிமைகளின் அடிப்படையிலான ஆட்சித் தத்துவம், ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் பலப்படுத்தும் வகையிலான உள்ளக சுயநிர்ணய உரிமை, பொருளாதார வலுப்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயங்களை வழங்குதல், தேசிய ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் இனவாத சக்திகளுக்கெதிரான போராட்டம் என அவை நீண்டு, குவிந்து செல்லும்.

தற்போதைய ஜனாதிபதியின் முதலாவது ஆரம்ப உரை புதிய மாற்றத்தின் அடிப்படைகளைத் தெளிவாக வரையறுத்துள்ளது. இதுவரை பதவியேற்ற ஜனாதிபதிகள் ஆட்சிக் கட்டுமானத்திலுள்ள பலவீனங்கள் அதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தோல்விகள் என்பவற்றை அடையாளப்படுத்தவில்லை. ஏனெனில் அப் பலவீனங்களே அவர்களின் அதிகார இருப்பிற்கு வாய்ப்புகளை வழங்கின. ஜனாதிபதி அநுரவின் உரையில் மிக நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த ஆட்சிப் பொறிமுறை நாட்டில் இன்று காணப்படும் பிரதேசவாத, இனக் குழும முரண்பாடுகளாக, மத விரோதங்களாக மாற்றம் பெறுவதற்கான காரணியாகவும் அதன் பெறுபேறாக, சமூகங்களிடையே பிளவுகள், பரஸ்பர அவநம்பிக்கைகள், சந்தேகங்கள் வளர்ந்து அவை முரண்பட்ட முகாம்களாக மாற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவரது இனவாதம் சம்பந்தமான கருத்துக்கள் மிகவும் கவனத்திற்குரியன. இனவாதம் என்பது அரசியல் கோட்பாட்டின் மூலைக் கல்லாக அமைந்தமையால் அதன் தவிர்க்க முடியாத நிலமைகள் மாற்று இனவாதத்திற்கான எதிர் முகாம்களைத் தோற்றுவித்தது. இனவாதம் என்பது ஒரு பிரிவினரால் உக்கிரப்படுத்தப்படும் போது அது இன்னொரு பிரிவினரின் தேசியவாதத்திற்கு உணவாக மாறுகிறது. இதுவே எமது நாட்டின் அரசியல் சமூக இயக்கத்தின் அனுபவமாக உள்ளது என்கிறார்.

மேற்குறித்த கருத்து நிலை என்பது கற்றறிந்த அறிஞர்களின் நூல்களில் வெளிவந்திருந்தால் அது ஒரு அறிவுரை எனக் கொள்ள முடியும். ஜனநாயகம் குறித்த அவரது கருத்தை அவதானிக்கும் போது நாட்டில் வாழும் சகல மாகாணங்களிலும் வாழும் சமூகங்கள் தம்மில் நம்பிக்கை வைத்து ஆதரவைத் தந்துள்ளதாகவும், அதே வேளை சமூகத்தின் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தியலில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதுவே பன்மைத்துவ ஜனநாயகத்தின் அடிப்படை என்கிறார். ஜனநாயகம் என்பது ஒரு தனிக் கட்சியின் அல்லது ஒரு கருத்தியலின் அடிப்படையில் மக்களை ஐக்கியப்படுத்துவது அல்ல எனவும், ஜனநாயகத்தின் சாராம்சம் என்பது பல்வேறு அரசியல் கோட்பாடுகளும், குழுக்களும் சகவாழ்வு அடிப்படையில் செயற்படுவதேயாகும். வெவ்வேறு அரசியல், சமூக, பொருளாதாரக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் அரசியல் குழுக்கள் செயற்படும் போதே ஜனநாயகம் செழிப்பதற்கான விளை நிலமாக அது அமையும். 

ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனிக் கட்சி ஆட்சிக்குப் பதிலாக பன்மைத்துவ கட்சிகள் செயற்படுவதே நாம் நம்பும் ஜனநாயக கட்டுமானத்தின் அடிப்படை விழுமியங்கள் என வரையறுத்தார்.

நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தனது தேசத்தின் அரசுப் பொறிமுறையில் உள்ள சிக்கலான நிலமைகளை அடையாளம் காட்டியதும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசு குறிப்பாக. நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி இவற்றின் மோசமான பக்கங்களை அடையாளம் காட்டுவதாக இருந்தால் அவரே அதற்கான மாற்றங்களைக் கொடுக்கும் நிலையிலும் இருப்பதால்தான் இன்றைய மாற்றங்கள் என்பது வரலாற்றுத் திருப்புமுனை என்ற முடிவை நோக்கிச்சிந்திக்க வைக்கிறது.    

இந்த அடித்தளங்களுடன் செல்லும் புதிய தமிழ் அரசியல் சக்திகள் ஜே வி பி – தே ம சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினருடன் தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான பரந்த புரிதலை கூட்டு அடிப்படையில் குறிப்பாக 13வது திருத்த அமுலாக்கத்தினை அல்லது புதிய அரசியல் யாப்பிற்கான அடிப்படை அம்சங்கள் குறித்த விவாதங்களை மேற்கொள்வதற்கான புறச் சூழலை ஏற்படுத்தும்.

இவ்வாறான இணைந்த நிலமைகள் புதிய அரசியல் உரையாடல் தளங்களை குறிப்பாக பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் குரல்கள் உரக்க ஒலிக்க உதவும். இம் மாற்றங்களே முற்போக்குத் தேசியவாதம், சமூக ஜனநாயகம் மற்றும் சமூக கீழ் மட்டங்களில் அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்த உதவும். கீழ் மட்ட மக்களிடமிருந்து வரும் மாற்றத்திற்கான குரல்களை ஒடுக்க பல சவால்கள் ஏற்படும். குறிப்பாக கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தை அனுபவித்த சக்திகள் தீவிரவாதத்தை முன்னெடுத்து இன முறுகலை அதிகரித்து இம் முற்போக்கு முயற்சிகளை முறியடிக்க முயற்சிப்பார்கள். கடந்த 75 ஆண்டு காலமாக சமூகங்கள் மத்தியிலும், இனங்கள் மத்தியிலும் சமச்சீரற்ற நிர்வாக மற்றும் பல புற நிலமைகளைப் பயன்படுத்தி பயன் பெற்றவர்கள் தமது பொருளாதார ஆதிக்கத்தின் மூலம் நெருக்கடிகளைத் தோற்றுவிக்க முயற்சிப்பார்கள். இவ்வாறான நெருக்கடிகள் பல நாடுகளில் குறிப்பாக சிலி நாட்டில் முதலாளிகள், போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், ராணுவத்தினர் என சில பிரிவினர் ஒன்றிணைந்து பொருட்கள், சேவைகளின் விநியோகத்தை தடுத்து மக்கள் மத்தியில் அரச விரோத நிலமைகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்தார்கள். இதற்கான ஆரம்ப அறிகுறிகள் இங்கும் காணப்படுகின்றன. குறிப்பாக அரச அதிகாரிகள் உத்தரவுகளைப் புறக்கணிப்பது அல்லது காலம் கடத்துவது அல்லது வெவ்வேறு சாக்குப் போக்குகளை முன் வைப்பது போன்றன இன்றைய ஆரம்ப அடையாளங்களாக உள்ளன.

அரச திணைக்களங்களின் இவ்வாறான ஜனநாயக விரோத செயல்களை மக்களால்தான் அடையாளம் காண முடியும். ஊழல், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கீழ் மட்ட மக்கள் விழிப்போடு செயற்பட்டு பகிரங்கமாக விமர்ச்சிக்க வேண்டும். இங்கு அரச அதிகாரிகளின் வினைத் திறனற்ற செயற்பாடு மட்டுமல்ல, அரசின் முறைகேடுகளும் அம்பலமாகின்றன.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் என்பது மூலவளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான கொள்கைகளை வகுக்கும்போது அத் தருணங்களில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உள்ளடக்கத்தினை எப்போதும் உறுதி செய்தல் அவசியமானது. உதாரணமாக, 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதாயின் அதிகார பரவலாக்கம் என்பது வினைத்திறன் மிக்கதாக அமைவதை உறுதி செய்வதும், அதில் அப் பிரதேசத்தின் சகல சமூகங்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். பதிலாக புதிய அரசியல் யாப்பு வரைவதாயின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டு ஏற்பாடுகளை இப்போதிருந்தே சகல முற்போக்கு சக்திகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமக்கான கூட்டு ஏற்பாடுகளைத் தோற்றுவித்து புதிய அரசியல் யாப்பிற்கான விதந்துரைகளைத் தயாரிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் அரசியல் யாப்பு விவகாரங்களின்போது மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் மக்களின் பங்களிப்புத் தவிர்க்கப்பட்டு ஆதிக்க சக்திகளின் நலன்களே முதன்மை பெற்றது. அவ்வாறான நிலமைகளைத் தவிர்க்க வேண்டுமாயின் மிகவும் சக்தி வாய்ந்த சிவில் சமூகம் கட்டப்பட வேண்டும். இச் சமூகம் அரசியல் கோரிக்கைகள் மட்டுமல்ல, பொருளாதார ஏற்றத்தாழ்வினை அகற்றும் ஜனநாயக கட்டுமானங்களை வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் உட் கட்டுமானங்களின் உருவாக்கத்தின்போது பின்தங்கிய பிரிவினரின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஆனால் தற்போது தமிழ் அரசியலில் எழுந்துள்ள அரசியல் கூட்டணிகளும், அரசியல் கருத்துகளும் மிகவும் கற்பனை மிக்கதாக அமைகின்றன. உதாரணமாக, அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றினைக் கொண்டு வருவதாகவும், அதுவரை 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. அவ்வாறான நிலையில் தற்போதைய விவாதம் மாகாண சபையை எவ்வாறு வினைத் திறன் மிக்கதாக மாற்றுவது? என்ற விவாதம் அவசியமானது. ஆனால் அவ்வாறான விவாதம் இதுவரை இல்லை. பதிலாக போட்டியிடுவதில் மும்முரம் காட்டப்படுகிறது. ஒரு சாரார் மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பதால் 13வது திருத்தம் தேவையில்லை என்கின்றனர். அடுத்து புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் வெளிவராத நிலையில் ஒற்றை ஆட்;சியின் கீழ் எந்தத் தீர்வும் சாத்தியமில்லை. இந்த அரசு ஒற்றை ஆட்சிக்குள் தீர்வைத் தருவதால் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு வரைபு விவகாரங்களில் தாம் பங்கு கொள்வதில்லை என இப்போதிருந்தே தமிழ் அரசியலைப் பிளவுபடுத்த அணி சேர்கின்றனர்.

ஓற்றை ஆட்சிக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை எனவும், சமஷ்டியே பொருத்தமான தீர்வு எனவும் கூறும் இவர்கள் அவ்வாறான தீர்வை எவ்வாறு சென்றடைவது? வெறுமனே தமிழர்களில் ஒரு பிரிவினரால் இம் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா? நாட்டின் பெரும்பான்மை மக்களின் சம்மதமில்லாமல் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வர முடியுமா? பெரும்பான்மை மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தும் எவ்வித முயற்சிகளையும் எடுக்காமல் தமிழ் தரப்பிலிருந்து வெறுமனே இவ்வாறு பேசுவது என்பது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டும் அணுகுமுறையா? அல்லது தமிழ் அரசியலை முன்னேறவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியா? தேர்தல் வரும்போது மட்டும் ஒற்றுமை பற்றிப் பேசுவது? ஏனைய காலங்களில் போட்டி அரசியல் நடத்துவது போன்ற செயல்களை எவ்வாறு புரிந்து கொள்வது?    

இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட 13வது திருத்த அமுலாக்கம், புதிய அரசியல் யாப்பு வரைபு தொடர்பாக தமிழ் அரசியல் பரப்பில் எழுந்துள்ள நிலமைகளை நாம் ஆராய்வது அவசியமானது. ஏனெனில் இன்றைய அரசு 13வது திருத்த அமுலாக்கம் தொடர்பாக கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடுகள், புதிய அரசியல் யாப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பலவிதமான எதிர்மறை விவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றில் பல இந்த ஆட்சியாளரின் குறிப்பாக, ஜே வி பி இனரின் கடந்தகால நிலைப்பாடுகளை முன்னிறுத்தியே விவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இக் கட்டுரையின் பல்வேறு இடங்களில் ஜே வி பி – தே ம சக்தி ஆகியவற்றின் அரசியல் பண்பாட்டு மாற்றம் குறித்து விபரிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தே நமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

13வது திருத்த அமுலாக்கம் குறித்து சிங்கள அரசியல் தரப்பில் மட்டுமல்ல தமிழர் தரப்பிலும் எதிரான கருத்து நிலை உண்டு என்பது மட்டுமல்ல அவ்வாறான சக்திகளுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். குறிப்பாக 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 13வது திருத்தத்திற்கு எதிராகவே கருத்துகளை முன்வைத்தார். அவருக்கு கணிசமான தொகையினர் வாக்களித்தனர். அதே போலவே தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டவர்களும் 13வது திருத்தத்தில் எதுவுமில்லை எனக் கூறிய நிலையில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதே போலவே தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் வடக்கு மாகாண சபையின் முதல்வராக பதவி வகித்த விக்னேஸ்வரனும் 13வது திருத்தத்தில் எதுவுமில்லை என்பதை உறுதி செய்யும் பணியையே அதனால் கிடைத்த சகல சௌகரியங்களையும் அனுபவித்தபடி செயற்பட்டார். இதே போன்றே மாகாண சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கை அற்ற கருத்துகளை விதைத்தபடியே அதற்கான தேர்தல்களில் போட்டியிடுவதும் சுகபோகங்களை அனுபவிக்கும் உள் நோக்கங்களை உடையது என்ற முடிவையே முன்னைய அனுபவங்கள் உணர்த்துகின்றன.

தற்போதைய அரசின் செயற்பாடுகள் ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழலை நோக்கி நகர்வதாகவே தற்போது உணர முடிகிறது. உதாரணமாக, அடுத்த மூன்று வருட காலத்தில் புதிய அரசியல் யாப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதாகக் கூறும் அரசு இந்த இடைக்காலம் வரை மாகாண சபைகளைச் செயற்படுத்தும் விதத்தில் தேர்தல்களை நடத்தப் போவதாகவும் கூறுகிறது. இதே வேளை புதிய அரசியல் யாப்பில் 13வது திருத்தம் நீக்கப்படலாம் என்ற செய்தியையும் கசிய விடுகிறது.

இச் செய்திகள் குறித்து நாம் ஆழமாக அவதானித்தால் அடுத்த 3 வருட காலத்தில் மாகாண சபை நிர்வாகம் ஒழிக்கப்படுமாயின் அதன் செயற்பாடுகளை இன்னொரு நிர்வாகம் பொறுப்பேற்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதனையும், புதிய அரசியல் யாப்பின் மூலம் அமையும் நிர்வாக கட்டுமானத்திற்கு அமைவாகவே அடுத்த 3 வருடகால மாகாண சபைகளின் நிர்வாகம் மாற்றமடைந்து செல்லலாம் என்பதாகவும் கருத முடிகிறது. அது மட்டுமல்ல, தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்றாக அமைதலின் அவசியம் குறித்தும், இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது திணிக்கப்பட்ட ஒன்று என்ற கருத்து சிங்கள அரசியலில் பலமாக உள்ளது என்பதாலும், தமிழ் அரசியலில் 2009ம் ஆண்டின் பின்னர் 13வது திருத்தம் குறித்து காத்திரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் நாம் புதிய அடிப்படைகளில் பிரச்சனைகளை அணுகுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே அடுத்த 3 வருட காலங்கள் என்பது தற்போதைய மாகாண சபைகளின் நிர்வாக மாற்றங்கள் குறித்தும், புதிய அரசியல் யாப்பில் அவற்றின் வகிபாகம் குறித்த விவாதங்களாகவும் குறிப்பாக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைகள் புதிய அரசியல் யாப்பில் தொடர்ச்சியாக பேணப்படுமா? அல்லது மாற்றங்கள் உண்டா? என்ற மிக ஆழமான விவாதங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

2025ம் ஆண்டு என்பது தேசிய அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் மிக சிக்கலான, தீர்க்கமான காலப் பகுதி என நாம் கருத முடியும். 

இங்குதான் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்கள் எழுப்பிய தமிழ் அரசியல் தலைமை அதற்கான தயார் நிலையில் உள்ளதா? அல்லது உள் முரண்பாடுகளால் உழுத்துப் போய் இயற்கை மரணத்தை எட்டுமா? என்ற  கேள்விக்கான பதில் என்ன? என்ற நிலை ஏற்படுகிறது.

இன்றைய அரசியல் மாற்றங்களின் பின்னணியில் அவதானிக்கையில் 13வது திருத்தத்தின் பின்னால் உள்ள அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற ஜனநாயக அடிப்படைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்படும் விதத்திலும். அவை தேசிய ஜனநாயகக் கட்டுமானங்களை பலப்படுத்தவும், தேசிய இனங்களின் ஜனநாயக கோரிக்கைகளை வலுப்படுத்தும் விதத்திலும் குறிப்பாக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு அமைவாகவே புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் அமையும் என எதிர்பார்க்கலாம். இவை இனவாதத்திற்கு எதிரான அரசியல் பின்புலத்தின் தாக்கங்களின் பின்னணியில் அவதானிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பிரிவினைவாத அரசியல் முன்னெடுப்புகள் தமிழ் அரசியலிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்னும் சமஷ்டி அடிப்படையிலான அணுகுமுறையை நோக்கி தமிழ் அரசியல் செல்ல வேண்டும். ஆனால் தமிழ் அரசியலிலுள்ள சில பிற்போக்கு சக்திகள் 2024ம் ஆண்டு தமிழ் மக்களிலுள்ள பலமான பிரிவினர் தேசிய சகவாழ்வு அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செல்வதாக எடுத்துள்ள ஜனநாயகத் தேர்வை மறுதலிக்கும் வகையில் தடைகளை ஏற்படுத்த தயாராகி வருவதை மக்கள் அவதானிக்க வேண்டும்.  

புதிய அரசியல் யாப்பில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாகிய 13வது திருத்தம் கைவிடப்படுமாயின் அந்த சர்வதேச ஒப்பந்தத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையலாம்? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இவ்வாறான ஒரு நிலை பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது. நாம் பல்வேறு ஊகங்களுக்குச் செல்லாமல் இதே போன்ற நெருக்கடியான காலகட்டத்தின் வரலாற்றினை ஆராயலாம்.

உதாரணமாக, பிரேமதாஸ அரசு விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை நட்புறவு ஒப்பந்தமாக மாற்ற முனைந்தது. மாகாணசபை நிர்வாகத்தினைப் புலிகளிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தது. அன்றைய வரதராஜப் பெருமாள் அரசைக் கலைக்கவும், வடக்கு. கிழக்கு இணப்பைக் குலைக்கவும் திட்டமிட்டு இயங்கியது. அன்றைய அரசியல் சூழலும், அரசியல் தலைமைகளும் வேறாக இருக்கலாம். ஆனால் அன்றும், இன்றும் பின்பற்றும் கொள்கைகள் ஒன்றாக உள்ளனவா? போன்ற பல வினாக்களுக்கான பதிலை வரலாறு விட்டுச் சென்ற பாடங்களை மீட்டுவது அவசியமாகியுள்ளது.

(தொடரும்…)

https://arangamnews.com/?p=11739

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 3)

தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 3)

‘இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு பதிலாக நட்பறவு ஒப்பந்தம்’ – பிரேமதாஸ முயற்சி  

==============

      — வி.சிவலிங்கம் —

இலங்கைக்கான இந்தியத் தூதுவராக 1985ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை இந்திய முன்னாள் வெளிநாட்டுச் செயலர் ஜே என் தீக்ஷித் செயலாற்றினார். இவரே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவராக இருந்தார்.  இவர் தனது அனுபவங்களை ‘கொழும்பில் பணி’ (Assignment Colombo) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவரது நூலின் அட்டைப் படத்தில் ‘ஈழம் அல்லது மடிவோம்’ எனக் கூறியபடி புலியும், ‘சிங்களம் மட்டும்’ எனக் கூறியபடி சிங்கமும் முட்டி மோதுவதாக வரையப்பட்டிருந்தது. இந் நூலில் ‘இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை பக்கமாக ஒதுக்கி வைத்து’ (The Setting Aside of the Indo-Sri Lanka Agreement) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் தரப்பட்ட தகவல்கள் இன்று மிகவும் பொருத்தமானவை எனக் கருத முடிகிறது. ஏனெனில் அன்று இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலைப்பாட்டினை எடுத்து இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயற்பாட்டில் இயங்கியது. அதனால் இலங்கை உள் விவகாரங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி இந்தியா உள்ளே நுழைந்தது. உள் நாட்டில் ஜே வி பி இனரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் போன்றன பல்முனை அழுத்தங்களாக அமைந்திருந்தன. ஆனால் தற்போது இலங்கை- இந்திய உறவுகள் மிகவும் நெருக்கமான இடத்தில் உள்ளன. கடந்த காலத்தில் இவற்றை எதிர்த்தவர்கள் அதிகாரத்தில் மட்டுமல்ல, இலங்கை – இந்திய உறவுகளுக்கான புதிய அத்தியாயத்தையும் ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் பிரேமதாஸ இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை நட்புறவு ஒப்பந்தமாக மாற்ற எண்ணியது போல இன்றைய அரசும் அவ்வாறான புதிய யோசனைகளோடு பிரேமதாஸ அரசின் அன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான புதிய பாதையை இன்று ஏன் வகுக்க முடியாது?

இலங்கைக்கான இந்தியாவின்  முன்னாள் தூதுவர் காலம் சென்ற ஜே என் தீக்ஷித் தந்த விபரங்களைப் பார்க்கலாம்.  

ஜனாதிபதி பிரேமதாஸ ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைகளை படிப்படியாக அகற்றுவதற்கான தளம் இந்திய சமாதானப் படையினரை அகற்றவும், மீண்டும் தமிழர்களுக்கெதிரான பூனை-எலி ஆட்டத்தைத் தொடரவும் உருவாக்கப்பட்டது. அப்போதைய வேளையில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வவுனியா காட்டிற்குள் சுருங்கிய நிலையிலும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை காத்திரமான விதத்தில் ஒடுக்கிய இறுதி கட்டத்தை அடைந்திருந்தது.

இத்தகைய பின் புலத்தில் பிரேமதாஸவிற்கு மூன்று பிரதான இலக்குகள் இருந்தன. அதாவது

1. ஏதாவது ஒரு வகையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை முறியடிப்பது.

2. இந்திய சமாதானப் படையினரின் செயற்பாடுகளுக்கு முடிந்தவரை தடைகளை ஏற்படுத்துவதுடன் விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆயுதங்களை வழங்குவது.

3. வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் வடக்கு- கிழக்கில் அமைந்த தமிழ் மாகாண சபை அரசை அகற்றுவது.

என்பதே நோக்கமாக அமைந்தது.

இவ்வாறு பிரேமதாஸ அரசின் உள் நோக்கங்களை அடையாளப்படுத்திய அவர் தனது இலக்குகளை அடைய மேற்கொண்ட உத்திகளைக் கூறுகையில்

– 1989ம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தனது அரசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதன் மூலம் இந்தியப் படைகளுடனான முரண்பாடுகளை அகற்ற விரும்புவதாகவும் செய்தி அனுப்பினார்.

– இவற்றைத் தொடரும் வகையில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நிலைமைகளிலிருந்து பின்வாங்கத் தயார் எனவும், அரசியல் தீர்வு குறித்து அவர்களுடன் பேசவும் விருப்பம் தெரிவித்தார்.

இந்த இரகசியச் செய்தியின்படி 1989ம் ஆண்டு மார்ச் முதல் 1989ம் ஆண்டு யூலை மாத இடைக் காலத்தில் இந்தியப் படைகள் வெளியேறுவதற்கு ஏதுவாகவே திட்டங்கள் வரையப்பட்டன. இந்த இடைக் காலத்தில் இந்தியப் படைகளின் தாக்குதல்களை முறியடிக்க போதுமான ஆயுதங்களையும். உளவுத் தகவல்களையும் பரிமாறவும் செய்தி வழங்கப்பட்டது. அத்துடன் அப்போதிருந்த ஈ பி ஆர் எல் எவ் தலைமையிலான வடக்கு- கிழக்கு இணைந்த வரதராஜப் பெருமாள் தலைமையிலான அரசைக் கலைத்து விடுதலைப் புலிகள் தலைமையிலான நிர்வாகத்தை உருவாக்குவதும் பேசப்பட்டிருந்தது.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தோற்றுவிக்கப்பட்ட மாகாண அரசைக் கலைப்பது தொடர்பான விவாதங்கள் இன்று ஆரம்பித்துள்ளதைப் போலவே அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் இவ்வாறாக இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த பிரேமதாஸ அரசு,  இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பதிலாக இலங்கை – இந்திய நட்புறவு ஒப்பந்தம் ஒன்றை புதிய நிலமைகளின் பின்னணியில் உருவாக்கத் தாம் தயாராக இருப்பதாகச் செய்தி அனுப்பினார். இப் புதிய நிலமை என்பது இந்திய ஆதரவில்லாத இலங்கை அரசின் ஆதரவுடன் செயற்படும் ஓர் நிர்வாக அலகை வழங்குவதாகவே நாம் கொள்ளலாம். அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வு எனலாம்.

இவ் வரலாற்றினைப் படிக்கும் ஒவ்வொருவரும் இலங்கையின் இனவாத அரசியலோடு, தமிழ் பிரிவினைவாத அரசியல் இணையும் பின்புலங்களையும், இவ் இணைவின் பின்னால் உள்ள அரசியல் தீர்வு ஏற்பாடுகளையும் இன்றுள்ள நிலமைகளோடு பொருத்தி நோக்குதல் பயனளிக்கும். தேசிய இனப் பிரச்சனைக்;கான தீர்வுகளில் இடையூறினை சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல தமிழர் தரப்பிலும் அவ்வாறான விரோத சக்திகள் தொடர்ந்து செயற்படுகின்றன. இவை வரலாறு என்பதை விட பாடங்கள் என்பது பொருத்தமாக அமையும்.

பிரேமதாஸ அரசு விடுதலைப்புலிகளுடன் ஏற்படுத்திய உறவுகள் வரதராஜப் பெருமாள் அரசுக்கு மிகவும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அரசு வரதராஜப் பெருமாள் அரசுடன் படிப்படியாக உறவுகளைத் துண்டித்தது. மாகாண ஆளுனர் தனது அதிகாரத் தலையீட்டினைப் படிப்படியாக அதிகரித்தார்.

ஒரு புறத்தில் இந்த மாகாண அரசைப் புறக்கணித்த பிரேமதாஸ மறு பறத்தில் இந்த மாகாண அரசில் செயற்பட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் உறுப்பினர்களுக்கு இன்னொரு செய்தியை வழங்கினார். அதாவது வடக்கு, கிழக்கு மாகாணசபை இணைப்பு இனிமேல் தொடராது எனவும், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நலன்கள் தமிழர்களால் தலையீடு ஏற்படாத வகையில் புதிய அதிகார பரவலாக்கத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற செய்தியையும் பகிர்ந்தார். இச் செய்தியின் மூலம் மாகாணசபையின் செயற்பாடு மிகவும் திட்டமிட்ட வகையில் முடக்கப்பட்டது. இவ்வாறான ஒரு மாற்று ஏற்பாடு இனியும் சாத்தியப்படுவதற்கான பின்புலங்கள் உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

இதன் விளைவாக இந்திய சமாதானப்படையின் செயற்பாடுகளும் நெருக்கடியான கட்டத்தை அடைந்தன. இருப்பினும் இலங்கை – இந்திய உறவுகள் குறித்து இரண்டு அரசுகளும் பேசி முடிவுகளை எட்டும் வரை இந்தியப் படைகள் வரதராஜப் பெருமாளின் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயற்படுவது என இந்தியா தீர்மானித்தது. இந்த இடைக் காலத்தில் அதாவது 1989ம் ஆண்டு யூலை 2 முதல் 11ம் திகதி வரையான காலப் பகுதியில் 7 கடிதங்கள் பரிமாறப்பட்டன. இக் கடிதங்களின் சாராம்சம் என்பது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகளிலுள்ள விரிசல்களை உணர்த்தியது.

பிரேமதாஸ இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளைப் பற்றிய கரிசனையை விட குறிப்பாக, இலங்கை இனப்பிரச்சனைகளுக்கான தீர்வை விட இந்திய ஆதிக்கத்தை முறியடித்துள்ளதாக செய்தியை வெளிவிடுவதில் கவனம் செலுத்தினார்.    

இந்த முறுகல் நிலையை விடுதலைப்புலிகள் நன்கு பயன்படுத்தினர். முடிந்தவரை வன்முறைகளை ஆழப்படுத்தினர். வரதராஜப் பெருமாள் மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நிலையில் ‘தமிழர் தொண்டர் படை அல்லது தமிழ் தேசிய இராணுவம்’ ஒன்றினைத் தோற்றுவித்து மக்களையும், மாகாண அரசையும் பாதுகாக்கப் போவதாக அறிவித்தார். அத்துடன் இலங்கை அரசு இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுமாயின் மாற்று ஏற்பாடாக அந்த ஒப்பநதத்தின் பிரகாரம் வடக்கு – கிழக்கு மாகாணம் சுயாதீன நாடாக ‘ஈழம்’ எனப் பிரகடனம் செய்யும் வழிமுறையைத் தவிர மாற்று வழியில்லை என அறிவித்தார். இவை விடுதலைப்புலிகள் – இலங்கை அரசின் புதிய உறவின் பின்னணியை உணர்த்தின.

இவை யாவும் 1989 ம் ஆண்டு யூலை முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில் நடந்தேறின. இந்தியப் படைகள் யூலை 31ம் திகதிக்கு முன்னர் திரும்பாவிடில் இந்தியப் படைகளுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்யப் போவதாக பிரேமதாஸ தெரிவித்தார். அத்துடன் இந்தியப் படைகள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் படைகளை விலக்கிக் கொள்ளாவிடில் தாமே இந்திய சமாதானப் படையின் தளபதியாகவும் அறிவிக்கப் போவதாகப் பயமுறுத்தினார். இந்தியப் படைகள் விலகுவதற்கு ஏற்கெனவே ஏற்றுக் கொண்ட நிலையில் அப் படைகளின் தளபதியாக அறிவிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும், விடுதலைப்புலிகளுடன் பகிரங்கமாக பேச்சவார்த்தைகளை நடத்திய நிலையில், அதற்குப் போதுமான ஆதரவு வழங்கிய நிலையில் இந்திய சமாதானப் படையின் தளபதி என அறிவிப்பதில் எவ்வித நியாயப்பாடும் இல்லை என இந்தியா தெரிவித்தது.

ஜனாதிபதி பிரேமதாஸ இவ்வாறு செயற்படுகையில் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதன் பின்னணியை நாம் தற்போது புரிந்து கொண்டால் இன்றைய அரசியலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உய்த்துணர முடியும். ஏனெனில் இரு நாடுகளிலும் ஏற்படும் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த வல்லன. 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் ராஜிவ் காந்தி தேர்தலை எதிர் நோக்கினார். இருந்த போதிலும் இலங்கைக்கும், இலங்கைத் தமிழருக்கும் முடிந்த வரையில் எதுவித திணிப்பும் இல்லாத தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ராஜிவ் காந்தி இருந்ததாக குறிப்பிடும் தூதுவர், பதிலாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் வழங்கிய வாய்ப்புகளைக் கைவிட்டு, இந்திய சமாதானப் படையின் உதவிகளை உதறித் தள்ளி இவர்கள் தொடர்ந்தும் இக் குழப்பத்தில் தொடர்ந்தும் வாழவேண்டும் என எண்ணுவார்களாயின் இன்னும் பல குழப்பங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் கருதினார்.

பிரேமதாஸ- விடுதலைப்புலிகளின் தற்காலிக உறவு ஜே வி பி இன் அச்சுறுத்தலை ஒழிக்கவும் பின்னர் விடுதலைப்புலிகளைக் கையாளலாம் என்ற அடிப்படையிலேயே ஆரம்பித்தது. ஜே வி பி இன் அச்சுறுத்தலை ரஞ்சன் விஜேரத்ன திறமையாகக் கையாண்டு சிங்களப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்திய போதிலும் பௌத்த பிக்குகள் பிரேமதாஸ அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வை மிகவும் சந்தேகக் கண்கொண்டே நோக்கினர். அதே போலவே தமிழர்களும் பிரேமதாஸவின் அணுகு முறைகளில் சந்தேகம் கொண்டிருந்தனர்.

தாம் பாகிஸ்தானில் தூதுவராக செயற்பட்டபோதும் ஜே ஆர் அரசின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தன்னுடன் தொடர்பு கொண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் முற்றாக அமுல்படுத்தப்படும் வரை படைகளை விலக்க வேண்டாமென தன்னிடம் கூறியதாக தூதுவர் தெரிவிக்கிறார். இவை பற்றி ராஜிவ் காந்தியுடன் உரையாடிய வேளையில் பிரேமதாஸ ஓர் குழப்பமான நிலையில் உள்ளதாகவும் இருப்பினும் இந்தியப் படைகள் 1990 இன் இறுதியில் முழுமையாக விலகுவார்கள் எனவும், இந்தியப் படைகள் முழுமையாக தடைகள் எதுவும் இல்லாமல் செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், பிரேமதாஸ அரசு மாகாண அரசின் சுமுகமான செயற்பாட்டை உறுதி செய்திருந்தால் நிலமைகள் மாறியிருக்கலாம் எனவும் தெரிவித்து தாம் இலங்கை – இந்திய  ஒப்பந்தத்தை முடிந்தவரை அமுல்படுத்த எண்ணியிருப்பதாகவும், பிரேமதாஸ அரசு தொடர்ந்து தடைகளைப் போடுமாயின் பிரேமதாஸவும், இலங்கைத் தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளட்டும் எனக் கூறியதாக தீக்ஷித் கூறுகிறார்.

நாம் இவ்வாறான ஒரு கட்டத்தை தற்போது நெருங்கியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. பிரச்சனைகளின் பின்புலங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் நிலமைகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் முடிவு என்பது இந்தியா இப் பிரச்சனையைக் கைவிடவும் தயாராக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளலாம். இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையில் இந்தியா தலையிடுவதற்கு அதன் பூகோள அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்தலாம். ஆனால் இத் தேவைகள் என்பது இலங்கையில் நிலையான இந்திய நலன்களுக்கு விரோதமில்லாத அரசு ஒன்று இலங்கையில் அமைவதையும் அது உறுதி செய்தல் வேண்டும். அது இலங்கைத் தமிழர்களின் நல்லெண்ணத்துடன் தோற்றம் பெறுவதும் விரும்பத்தக்கது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் என்பது தெளிவற்றதாகத் தொடருமானால் அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் பார்வை இனவாத அரசியலிற்கு அப்பால், இந்திய நலன்களை அனுசரித்துச் செல்லுமானால், இந்திய முதலீடுகள் இலங்கையில் அதிகரித்து பொருளாதார தங்குநிலை மேலும் அதிகரிக்குமானால் தமிழர் பிரச்சனையை மட்டும் வைத்து இந்திய பூகோள அரசியல் நலன்கள் செல்லும் எனக் கருத முடியாது.

தமிழர் தரப்பின் அரசியல் கருத்தோட்டம் என்பது வெறும் உணர்வுகளால் கட்டமைக்கப்படுகின்றன. உள் நாட்டில் தமிழர் பிரதேசங்களில் நிலவும் அரசியல் என்பது மாறிவரும் உலக அரசியல் பார்வைகளின் பெறுபேறுகளிலிருந்து உருவானதாக இல்லை. குறிப்பாக, தமிழ் அரசியல் என்பது சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதத்தின் எதிர்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றே. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஜனாதிபதி அநுரவின் கருத்துப்படி இனவாதமே தமிழ் அரசியலின் போக்கையும் கட்டமைக்கிறது. இனவாதம் என்பது தேர்தல் அரசியலின் ஒரு குணாம்சமாக மாறிய நிலையில் அதுவே தமிழ் அரசியலின் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. இங்கு தேர்தல் அரசியலின் அடிப்படைகளில் மாற்றங்கள் தேவையாகிறது.

இங்கு பிரேமதாஸ அரசின் இன்னொரு வரலாற்று அம்சத்தை நோக்கலாம். இதுவும் 13வது திருத்தம், மாகாணசபை நிர்வாகம் என்பனவற்றின் எதிர்காலம் குறித்த இன்றைய விவாதங்களுக்குப் பொருத்தமாக அமையலாம். ஏனெனில் தமிழர் தரப்பில் காணப்பட்ட இந்திய சமாதானப் படைகளுக்கெதிரான கருத்துக்கள் என்பது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கண்ணோட்டத்தில் அணுகப்படவில்லை என்பதை தீக்ஷித் இன் பின்வரும் கருத்துக்கள் உணர்த்துகின்றன. அவை அப்போதைய சூழலில் வெளிவராமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று வரை இந்திய சமாதானப் படைகளின் வருகை, அதன் சாதக, பாதகம் குறித்த தெளிவான கருத்துகள் இன்னமும் தமிழ் அரசியலில் இல்லை.

1989ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தியத் தேர்தலில் ராஜிவ் அரசு தோல்வி அடைந்தது. ஆட்சிக்கு வந்த வி பி சிங் தலைமையிலான அரசு தமது முதலாவது வெளி விவகார கொள்கைப் பிரகடனத்தில் சமாதானப்படையினரை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வதாகவும், அதுவும் 1990 ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி விலகல் முடிவடையும் எனவும் அறிவித்தது. இந்த அறிவித்தலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாஸ அரசுக்குமிடையேயான உறவு உச்ச நிலையை எட்டியது.

1990ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கிடையில் அவை மிகவும் துரிதமடைந்தன. பிரபாகரனின் மனைவி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வர இலங்கை அரசு சகல உதவிகளையும் வழங்கியது. அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையேயான அரசியல் பேச்சுவார்த்தைகள் துரிதமடைந்தன. முன்னாள் அமைச்சர் ஏ சி எஸ் ஹமீட் விடுதலைப்புலிகளுடன் பேசும் முக்கியஸ்தராக நியமிக்கப்பட்டார். புலிகள் தரப்பில் யோகியை உதவியாளராகக் கொண்ட மாத்தையா தலைமையில் குழு தயாராகியது.

இப் பேச்சுவார்த்தைகளில் இந்திய சமாதானப் படைகளின் விலகலின் பின்னர் வடக்கு- கிழக்கில் புதிய தேர்தல் முடிவடையும் வரை சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக கிழக்கில் குறிப்பாக திருகோணமலைப் பகுதியில் இந்திய ராணுவம் அங்கு வெளியேறுவதற்குத் தயாராக இருந்த போதிலும் அங்கு தீவிர பாதுகாப்பில் புலிகள் ஈடுபட்டனர்.

இம் மாற்றங்கள் யாவும் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் நிர்வாகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருந்தன. அவர் பிரதமர் வி பி சிங் அவர்களை நேரில் சந்தித்து நிலமைகளை விளக்கிய போதிலும் அவரின் எதிர்காலத்திற்கு அல்லது இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் குறுகிய ஆயுளே இருந்தது. ஏனெனில் புதிய இந்திய அரசு இப் பிரச்சனை என்பது முற்றிலும் தவறான வகையில் ராஜிவ் அரசு கையாண்டிருந்தது என்பதற்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதன் விளைவாக வராதராஜப் பெருமாளின் அரசு 1989 ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் முற்றாக முடங்கியது. இந்திய தூதரகம்கூட கையை விரித்தது.

குறிப்பிட்ட திகதியில் இந்தியப் படைகள் தமிழ் நாட்டைச் சென்றடைந்த போது அங்கிருந்த தமிழ்நாடு அரசு அப் படையினரை நடத்திய விதம் குறித்து தெரிவிக்கையில் இந்திய அரசின் பாரிய பூகோள அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசின் உத்தரவின் பேரில் சென்ற சமாதானப்படையினரை அதுவும் பல நூறு வீரர்கள் மரணத்தைத் தழுவியும், பாரிய காயங்களோடும் சென்றடைந்த நிலையில் அங்கிருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ‘தமிழரைக் கொல்லும் இந்தியப் படை’ (Indian Tamil Killing Force) என வர்ணித்ததாக தெரிவிக்கிறார். இந்திய அரசாங்கத்தின் உத்தரவை நிறைவேற்றச் சென்ற அதே நாட்டின் படைகளை மிகவும் கீழ்த் தரமாக நடத்தியதாக வருந்துகிறார். இங்கு இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார் அதாவது தமிழ் நாடு அரசின் செயற்பாடு. அடுத்ததாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடு என்பனவாகும்.

தமிழ்நாடு அரசின் இன்றைய நிலை என்ன? மத்திய அரசின் பிரதான பங்காளிக் கட்சியாக, இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிகவும் கணிசமான பாத்திரத்தைத் தற்போது வகிக்கிறது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு எதிர் காலத்தில் எவ்வாறான பாத்திரத்தை வகிக்கும்? போன்ற பல  கேள்விகள் இன்று எழுகின்றன. அத்துடன் தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்நாடு அரசுடன் அல்லது மத்திய அரசுடன் முன்னரைப் போல் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதா?  

இந்திய சமாதானப் படையினரின் விலகலின் பின்னர் ஏற்கெனவே உறுதியளித்தவாறு பிரேமதாஸ அரசு பேச்சுவார்த்தைகளை அர்த்தமுள்ள விதத்தில் தொடரவில்லை. இதன் விளைவாக முறுகல் நிலை மீண்டும் ஆரம்பமானது. பிரேமதாஸ அரசிற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையேயான உறவு நிலை குறித்து சிங்கள அரசியலில் மிகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் பிரேமதாஸ பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்கினார். மாகாண நிர்வாகத்தை அரசு பொறுப்பேற்றது. இதன் மூலம் அவரது பிரதான இலக்குகளில் ஒன்று நிறைவேறியது. இருப்பினும் ஐ தே கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டன. இதனால் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லாதொழிந்தன.

மேற்குறித்த வரலாறு இந்திய, இலங்கை ஆட்சிக் கட்டுமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவேயாகும். குறிப்பாக, வி பி சிங் தலைமையிலான அரசு பின்வரும் முடிவுகளை எடுத்திருந்தது.

– இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டது தவறானது.

– ராஜிவ் காந்தி – ஜே ஆர் தலைமையிலான இலங்கை- இந்திய ஒப்பந்தம் உரிய விதத்தில் தயாரிக்கப்படவில்லை எனவும், அதன் விளைவாகவே இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டன.

– இந்திய சமாதானப் படையினரை இலங்கைக்கு அனுப்பியது அந் நாட்டின் உள் நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாகும்.

– மேற்கூறிய நிலமைகளை அவதானிக்கும் போது இலங்கை விவகாரங்களிலிருந்து வெளியேறுவது, சமாதானப் படையினரை அழைப்பது என்பதே தீர்வாக அமையும்.

இம் முடிவுகளை அன்றைய வி பி சிங் அரசு எடுத்திருந்ததாக தீக்ஷித் தெரிவித்த வரலாற்றினை இன்றைய நிகழ்வுகளோடு பொருத்திப் பார்ப்பது மிக அவசியம். குறிப்பாக அரசு மாற்றங்கள் ஏற்படினும் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு அவதானிக்கையில் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற முடிவு இன்றுள்ள அரசியல் புறச் சூழலில் மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாகிய காலத்தில் காணப்பட்ட பூகோள அரசியல் நிலமைகள் தற்போது மாற்றமடைந்துள்ளன. இந்திய- அமெரிக்க உறவுகள் மிகவும் பலமாக உள்ளன. தனது அயல் நாடுகளுடன் உறுதியான நட்புறவைப் பேணுதல் மற்றும் உதவி வழங்குவதில் முதலிடம் என இந்தியா கூறுகிறது. தமிழ்நாட்டில் ‘தொப்புள் கொடி உறவு’ என்ற பெயரில் நடத்திய அரசியல் இன்று இல்லை. தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மிக முக்கியமான அங்கமாக பல வகைகளில் செயற்படுகிறது. இலங்கையும் சர்வதேச பூகோள அரசியல் போட்டிச் சூழலில் பக்கச்சார்பு இல்லாமல் செயற்படுவது என எண்ணுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்திய – இலங்கை பொருளாதார உறவுகள் மிகவும் பலமடைந்து கப்பல் போக்குவரத்து, பாலம் கட்டுவது, விமானப் போக்குவரத்து, மின்சார பரிமாற்றம், நவீன தொழில்நுட்ப அறிவியல் பங்களிப்பு என வளர்ந்து செல்கையில் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் மாற்றமடைய வாய்ப்பு உண்டு.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்;றம் என்பது மிகவும் ஆரம்ப நிலையில் காணப்படினும், அரசின் கொள்கைப் பிரகடனங்கள், அக் கட்சியின் செயற்பாடுகள் போன்றனவற்றை ஆராயும்போது அடிப்படை மாற்றங்களின் தேவை புரியப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆட்சியாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, நாட்டு மக்கள் மத்தியிலும் அடிப்படை மாற்றத்திற்கான அவா வெளிப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆட்சியாளர் எதிர்பாராத அளவிற்கு மக்கள் தமது நம்பிக்கையை 2024ம் ஆண்டு தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். இதில் தமிழ் மக்களும் கணிசமான பிரிவினர் ஆகும்.

தமிழ் அரசியலில் பாரிய அடிப்படை மாற்றங்களுக்கான ஆர்வம் வெளிப்படா விடினும் கடந்த தேர்தலில் தமிழ் சமூகத்திலுள்ள பின் தங்கிய பிரிவினர் மிகவும் தெளிவாகவே தமது தெரிவுகளை வெளியிட்டுள்ளனர். இம் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதற்கான சமூக கட்டுமானங்களையும், குறிப்பாக சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையும் விதத்திலான பொருளாதார சமூகக் கட்டுமானங்களைப் பலப்படுத்தும் விதத்தில் செயற்படுதல் அவசியம். ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு இனவாதம், ஊழல், சட்டவிரோத செயற்பாடுகள் போன்றன சமூகப் பிளவுகளைத் தோற்றுவிக்க இடமளிக்காமல் விழிப்போடு செயற்பட வேண்டும்.

எனவே இலங்கை அரசியலில் தோற்றம் பெறும் அடிப்படை மாற்றங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் புதிய அணுகுமுறைகளை வேண்டி நிற்கின்றன. தமிழ் மக்கள் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கான வழிமுறைகளை புதிய வழிகளில் படிப்படியான மிகவும் விட்டுக் கொடுக்காத, சாத்தியமான கொள்கைகளை நோக்கிச் செயற்பட வேண்டும். அதேவேளை ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார வளர்ச்சிக் கட்டுமானத் திட்டமிடுதலில் தமக்கான பங்கைச் செலுத்தும் புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை யாவற்றிற்கும் சமாதான சகவாழ்வே அடிநாதமாக அமைதல் அவசியம்.  
 

 

https://arangamnews.com/?p=11744

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.