இயந்திர மனிதர்கள், நிலவில் தளம்; 2050-ல் உலகம் எப்படி இருக்கும்?
பட மூலாதாரம்,CBS Photo Archive
படக்குறிப்பு,எதிர்காலத்தில் 2054ஆம் ஆண்டில் நடப்பதாக அமைக்கப்பட்ட 2000ஆம் ஆண்டு திரைப்படமான 'மைனாரிட்டி ரிப்போர்ட்', கைகளால் சைகைகள் செய்வதன் மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை கற்பனை செய்து காட்டியது
கட்டுரை தகவல்
லாரா கிரெஸ்
தொழில்நுட்ப செய்தியாளர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
கடந்த 25 ஆண்டுகளில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பாலான கணினிகள் சத்தமான டயல்-அப் இணைப்புகள் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டன. நெட்ஃபிளிக்ஸ் ஓர் ஆன்லைன் டிவிடி வாடகை நிறுவனமாக இருந்தது. மேலும், பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்ஃபோன் என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூட இல்லை.
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் பலவற்றில் புதுமைகள் நம்ப முடியாத வேகத்தில் வெளிவருகின்றன.
எனவே, அடுத்த 25 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்களிடம் கேட்க முடிவு செய்தோம்.
எதிர்காலத்தில் 2050ஆம் ஆண்டளவில் நாம் பயன்படுத்தப் போகும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவை நம் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கக்கூடும் என்பவை குறித்த நிபுணர்களின் கணிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
மனிதர்களை இயந்திரங்களுடன் இணைக்கும் இயந்திர-மனிதர்கள்
எதிர்காலத்தில் 2050களில் நடப்பதாகக் கற்பனை செய்யப்படும் அறிவியல் புனைகதைகள், மனிதர்கள் அதிக தகுதியுடனும், மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் உணர தங்கள் உடலிலேயே தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான உதாரணங்களால் நிரம்பியுள்ளன.
கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான டியூஸ் எக்ஸ் என்ற பிரபலமான வீடியோ கேம் 2052ஆம் ஆண்டில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் விளையாடுபவர் 'நானைட்ஸ்' எனப்படும் மிக நுண்ணிய ரோபோக்களை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ள முடியும்.
இந்த நுண்ணிய ரோபோக்கள் செல்கள் அளவில் விஷயங்களை கையாள்வதன் மூலம், மேம்படுத்தப்பட்ட வேகம், இருட்டில் பார்க்கும் திறன் போன்ற மனித இனத்திற்கு அப்பாற்பட்ட திறன்களை அவை வழங்குகின்றன.
இது ஏதோ மிகவும் முன்னோக்கிய எதிர்காலத்தில் இருந்து வந்த ஒன்று போலத் தோன்றலாம். ஆனால், நானோ தொழில்நுட்பம், அதாவது ஒரு மில்லிமீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு அளவிலான பொறியியல் பணிகள், ஏற்கெனவே பல அன்றாட நிஜ உலக தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில், நீங்கள் இப்போது இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கே கூட அதுதான் ஆற்றல் அளிக்கிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோன் அல்லது கண்னி கருவிகள் பில்லியன் கணக்கான சிறிய டிரான்சிஸ்டர்களால் ஆன ஒரு மைய சிப்பால் இயக்கப்படுகிறது. இவை தரவு செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்காக நானோ அளவில் உருவாக்கப்பட்ட மின் கூறுகளாகும்.
பட மூலாதாரம்,Eidos
படக்குறிப்பு,டியூஸ் எக்ஸ் என்ற வீடியோ கேமில், தனது திறன்களை, மேம்படுத்தும் கருவிகள் மூலம் அதிகரித்துக்கொள்ளும் கதாநாயகன், ஆயுதக் குழு மற்றும் ரகசிய சமூகங்கள் சம்பந்தப்பட்ட உலகளாவிய சதியை விசாரிக்கிறார்
லண்டன் நானோ தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் ஸ்டீவன் பிராம்வெல் பிபிசியிடம் பேசியபோது, "2050ஆம் ஆண்டுக்குள் இயந்திரங்கள், மின்னணுவியல், உயிரியல் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகள் கணிசமான அளவில் மங்கிவிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்" என்று கூறினார்.
அதாவது, எதிர்காலத்தில் நாம் நானோ தொழில்நுட்ப உள்வைப்புகளைக் காணக்கூடும். ஆனால், 'டியூஸ் எக்ஸ்' வீடியோ கேமில் வருவது போல கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்குப் பதிலாக, "உங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்க, தகவல்தொடர்புக்கு உதவ" அவை பயன்படுத்தப்படும்.
மருத்துவத் துறையும் நானோமீட்டர் அளவிலான இயந்திரங்களை "மருந்துகளை அவை செல்ல வேண்டிய இடத்திற்குத் துல்லியமாக அனுப்புவதற்கு" பரவலாகப் பயன்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் பிராம்வெல் கூறினார்.
சைபர்நெட்டிக்ஸ் பேராசிரியர் கெவின் வார்விக் மேம்பாடுகளை ஆய்வு செய்வதில் சமமான ஆர்வம் கொண்டவர், பெரும்பாலானோரை விட ஒரு படி மேலே செல்கிறார்.
அவர் கடந்த 1998ஆம் ஆண்டில், தனது நரம்பு மண்டலத்தில் ஒரு மைக்ரோசிப்பை பொருத்திக்கொண்ட முதல் மனிதர் ஆனார். இது அவருக்கு "கேப்டன் சைபோர்க்" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
இயற்கை மற்றும் இயந்திர அமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் அறிவியல் துறையான சைபர்நெட்டிக்ஸ், 2050ஆம் ஆண்டுக்குள் ஏற்படும் முன்னேற்றங்கள், நோய்களுக்கான முன்னோடி சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று பேராசிரியர் வார்விக் நம்புகிறார்.
மருந்துகளுக்குப் பதிலாக, ஸ்கிஸோஃப்ரினியா போன்ற சில நிலைகளுக்குப் பகுதி சிகிச்சையாக 'மூளை மின்னணு தூண்டுதல்' முறையைப் பயன்படுத்தலாம் என்று அவர் கணிக்கிறார்.
மேலும் அவர் இன்னும் பல சைபர்நெட்டிக் மேம்பாடுகளை நாம் அதிகமாகக் காண்போம் என்றும், அதன் மூலம் "மூளையும் உடலும் வெவ்வேறு இடங்களில் இருக்க முடியும்" என்றும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம்,Kevin Warwick
படக்குறிப்பு,பேராசிரியர் வார்விக் இந்த சிப்பை கொண்டு பல முன்னோடி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று, தனது மூளையை மட்டும் பயன்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள ஒரு ரோபோ கரத்தைக் கட்டுப்படுத்துவதாகும்
டிஜிட்டல் இரட்டையர்கள்
ஒருவேளை, புதிய மேம்பாடு அல்லது ஒரு புதிய உணவுமுறை நம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை, பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இல்லாமல் சோதித்துப் பார்க்க விரும்பினால் என்ன செய்வது?
அறிவியல் அருங்காட்சியகத்தின் அறிவியல் இயக்குநரான பேராசிரியர் ரோஜர் ஹைஃபீல்ட், 'டிஜிட்டல் இரட்டையர்கள்', அதாவது ஒரு நிஜ உலக பொருளின் மெய்நிகர் வடிவங்கள், நிகழ்நேர தரவை பயன்படுத்திப் புதுப்பிக்கப்படுபவை, நமது வாழ்க்கையில் ஒரு வழக்கமான அம்சமாக மாறக்கூடும் என்று நம்புகிறார்.
"வெவ்வேறு மருந்துகள் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்கள் தனித்துவமான உடலின் உயிரியலை எவ்வாறு பாதிக்கின்றன" என்பதை ஆராய்வதற்காக நம்மில் ஒவ்வொருவருக்கும் "ஆயிரக்கணக்கான எளிமைப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இரட்டையர்கள்" இருக்கும் ஓர் உலகத்தை அவர் கற்பனை செய்கிறார்.
இதை வேறுவிதமாகக் கூறுவதெனில், நாம் நமது எதிர்காலத்தை வாழ்வதற்கு முன்பே அது செலுத்தும் தாக்கத்தை நாம் முன்கூட்டியே பார்க்க முடியும்.
செயற்கை நுண்ணறிவின் அடுத்த தலைமுறை
கூகுள், ஐபிஎம் உள்படப் பல தொழில்நுட்ப நிறுவனங்கள், குவான்டம் கம்ப்யூட்டிங் வடிவில், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளை நாம் மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக, தற்போது பல பில்லியன் டாலர் மதிப்பிலான போட்டியில் ஈடுபட்டுள்ளன.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
நம்ப முடியாத வேகத்தில் மிகவும் சிக்கலான கணக்கீடுகளைச் செய்யக்கூடிய இயந்திரங்களே குவான்டம் கணினிகள். எடுத்துக்காட்டாக, புதிய மருந்துகளை வேகமாக வடிவமைப்பதற்காக மூலக்கூறு இடைவினைகளை உருவகப்படுத்துவது போன்றவற்றை வேகமாகச் செய்ய உதவுகின்றன.
ஜனவரி 2025இல் முன்னணி சிப் நிறுவனமான என்விடியாவின் தலைவர் ஜென்சன் ஹுவாங், "மிகவும் பயனுள்ள" குவான்டம் கம்ப்யூட்டிங் 20 ஆண்டுகளில் வரும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
நாம் அரை நூற்றாண்டு இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது, செயற்கை நுண்ணறிவானது நமது சமூகத்தில் சந்தேகத்திற்கு இடமின்றித் தொடர்ந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.
2050இல் பிரிட்டன் கல்வி குறித்த ஒரு வெள்ளை அறிக்கை என்ற அறிக்கையை எழுத உதவிய எதிர்காலவியலாளரும் எழுத்தாளருமான டிரேசி ஃபாலோஸ், "நிகழ்நேரத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும்" செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களைப் பயன்படுத்தி, "மெய்நிகர் மற்றும் இயற்பியல் எதார்த்தங்கள்" நிரம்பிய கற்றல் நடைபெறும் என்று நம்புகிறார்.
பாடப் புத்தகங்களுக்கு பதிலாக, குழந்தைகள் "ஆழ்நிலை உருவகப்படுத்துதல்களை" பயன்படுத்துவார்கள் என்று அவர் கணிக்கிறார்.
இதற்கிடையில், கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட டி.என்.ஏ அல்லது பயோமெட்ரிக் தரவுகள், அவர்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக ஆய்வு செய்யப்படும்.
பட மூலாதாரம்,Bloomberg
படக்குறிப்பு,வேமோ என்பது தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும்
போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள்
எழுத்தாளர் பில் டக்ளஸ், ஈர்க்கவல்ல கணிப்புகளைச் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். கடந்த 2000ஆம் ஆண்டில், "2050இல் உலகம்" என்ற தலைப்பில் நடைபெற்ற 20,000 டாலர் மதிப்பிலான உலகளாவிய எதிர்காலவியல் கட்டுரைப் போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.
அவரது அசல் கணிப்புகளில் ஒன்றான, விமானிகளற்ற விமானங்கள், 2050க்குள் நிஜமாகும் என்பதை அவர் இன்னமும் கூறி வருகிறார். அதேவேளையில், ஓட்டுநர் இல்லாத கார்களில் நாம் முதலில் அதிக முன்னேற்றங்களைக் காண்போம் என்றும், இது போக்குவரத்து நெரிசலை "பெரும்பாலும் கடந்த கால விஷயமாக" மாற்றிவிடும் எனவும் அவர் நம்புகிறார்.
"இப்போது இருப்பதைவிட கார்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகச் செல்லும். மேலும் ஒரு கார் பிரேக் போட்டால், அனைத்து கார்களும் பிரேக் போடும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"தானியங்கி வாகனங்களுக்கான தனியார் சுங்கச் சாலைகளில், போக்குவரத்து மணிக்கு 100 மைல்களுக்கு மேல் இருக்கும். அவற்றின் துல்லியத்தால், போக்குவரத்து விபத்துகளால் நிகழும் இறப்பு விகிதம் பெருமளவில் குறைவதைக் காண்பீர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
விண்வெளியில் நடக்கும் விந்தைகள்
பூமிக்கு அப்பால், விண்வெளிப் போட்டியும் அதே வேகத்தில் தொடரும் என்று பத்திரிகையாளரும் 'ஸ்பேஸ் போஃபின்ஸ்' பாட்காஸ்டின் இணை தொகுப்பாளருமான சூ நெல்சன் பிபிசிடயிம் தெரிவித்தார்.
அடுத்த 25 ஆண்டுகளில், நிலவில் மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரு தளம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும், சில தொழில்கள் கிட்டத்தட்ட முழுதாக விண்வெளியில் அமைந்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
உதாரணமாக, மருந்து நிறுவனங்கள் அடுத்த தலைமுறை மருந்துகளை நுண்கவர் ஈர்ப்பு விசையின்கீழ், அதாவது ஒரு சுற்றுப்பாதை விண்கலத்தில், தயாரிப்பதை நாம் காணக்கூடும் என்று அவர் நம்புகிறார்.
ஏனெனில், பூமியில் வளர்க்கப்படுவதைவிட இந்த வழியில் வளர்க்கப்படும் படிகங்கள் "பெரும்பாலும் பெரிதாகவும் சிறந்த தரத்துடனும்" இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
அறிவியலுடன் சங்கமிக்கும் அறிவியல் புனைகதைகள்
அறிவியல் புனைகதை எழுத்தாளர் பிலிப் கே டிக் எழுதிய ஒரு குறுநாவலை அடிப்படையாகக் கொண்ட 'மைனாரிட்டி ரிப்போர்ட்' என்ற திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. அதன் கதை 2054இல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
அதன் தயாரிப்பு தொடங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், விர்ச்சுவல் ரியாலிட்டியின் நிறுவனர் ஜரோன் லானியர் உள்பட பதினைந்து நிபுணர்களை, 2050களில் என்னென்ன தொழில்நுட்பங்கள் சாத்தியமாகலாம் என்பது குறித்துச் சிந்திக்க ஒரு மூன்று நாள் உச்சிமாநாட்டுக்கு அழைத்தார்.
அந்த விவாதங்கள், திரைப்படத்தில் இடம்பெற்ற பல கண்டுபிடிப்புகளுக்கு வடிவம் கொடுத்தன.
டாம் குரூஸ் நடித்த இந்த அறிவியல் புனைகதை த்ரில்லர் படத்தின் நிகழ்வுகளை நம்புவதானால், 2050களின் மத்தியில் நாம் அனைவரும் நமது டிரான்ஸ்பரன்ட் திரைகளில் காணொளிகளைப் புரட்ட சைகைகள் மற்றும் ஆடம்பரமான கையுறை தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோம். அதே நேரத்தில், ஜெட்பேக்குகளை அணிந்த காவல்துறையினர் தடிகளுடன் நடக்கவிருக்கும் குற்றங்களை எதிர்த்துப் போராடுவார்கள்.
பல அறிவியல் புனைகதைகளைப் போலவே, இந்தப் படமும் நம் எதிர்கால ஆண்டுகளின் ஓர் இருண்ட காட்சியைக் காட்டுகிறது.
இந்த உணர்வை சில நிபுணர்கள் தற்போதைய காலகட்டத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் அழிவுக்கு வித்திடும் என்றுகூட எச்சரிக்கின்றனர்.
ஒருவேளை, 2050இல் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதைப் பற்றி அதிகம் மனச்சோர்வுக்கு ஆளாவதற்கு முன்பு, பிலிப் கே டிக்கின் வார்த்தைகளுக்கே திரும்புவோம்.
"என்னைப் பொறுத்தவரை, அறிவியல் நமக்கு உதவுமென்று நான் பந்தயமே கட்டுகிறேன்" என்று அவர் தனது 1968ஆம் ஆண்டு சுயசரிதை கட்டுரையான 'செல்ஃப் போர்ட்ரெயிட்'-இல் எழுதினார்.
"அறிவியல் நம்மிடம் இருந்து பறித்ததைவிட அதிக உயிர்களை காப்பாற்றியுள்ளது. நாம் அதை நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c0r4nknkje0o
By
ஏராளன் ·