Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

8 Feb 2025, 3:24 PM
FotoJet-28-4.jpg

புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 08) தோல்வியடைந்தார். 

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

பாஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.

புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவை சந்தித்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதும், பின்னடைவை சந்திப்பதுமாக இருந்தார்.

இறுதியில், 14-வது சுற்று முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், தோல்வி அடைந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் தோல்வி தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

 

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்!

தோல்வியை அடுத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜகவை வாழ்த்துகிறேன். மேலும் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்புத் துறையில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், மக்களிடையே இருந்து அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்” என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/arvind-kejriwal-lost-delhi-assembly-election/

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஜ்ரிவால் ஃபார்முலாவை கையிலெடுத்த மோடி… ஆம் ஆத்மி தோல்விக்கு என்ன காரணம்?

8 Feb 2025, 6:35 PM
What is the reason for AAP's defeat

கடந்த 2013ல் மகா கும்பமேளா நடந்தபோது, டெல்லியில் காங்கிரஸை தூக்கி எறிந்து ஆம் ஆத்மி ஆட்சியில் அமர்ந்தது.

ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஆம் ஆத்மிஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்த பத்து ஆண்டுகாலம் வேகமாக நகர்ந்து, இப்போது மீண்டும் கும்பமேளா நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றிருக்கிறது.

2013ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தபோதிலும் 48 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஒரு அமைப்பை உருவாக்கும் ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 2015ல் நடைபெற்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. மீண்டும் முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால். 2020ல் நடந்த தேர்தலிலும் 62 இடங்களில் வெற்றி பெற்று முதல்வரானார்.

இருமுறை அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும், இந்த முறை தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்?

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்…

What is the reason for AAP's defeat

இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும், டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தோல்வி மற்றும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஆகியவை ஆம் ஆத்மியின் தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

‘டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து’ என்ற வாக்குறுதியைப் போலவே, அனைவருக்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்படும். பாரிசுக்கு இணையாக யமுனை நதி சுத்தம் செய்யப்படும். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தது ஆம் ஆத்மி. ஆனால் அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இது ஆட்சிக்கு எதிரான உணர்வை மக்களிடத்தில் தூண்டியது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பாஜகவின் பிரச்சார உத்தி!

What is the reason for AAP's defeat

காங்கிரஸை எதிர்த்ததைக் காட்டிலும் பாஜக ஆம் ஆத்மியை எதிர்த்தே அதிக பிரச்சாரம் செய்தது. காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுப் பாதுகாப்பு போன்ற டெல்லி மக்களை நேரடியாகப் பாதிக்கும் ஹைப்பர்-லோக்கல் பிரச்சினைகளில் பாஜக கவனம் செலுத்தியது.

டெல்லியின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை கொண்ட பூர்வாஞ்சலி சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து பாஜக தேர்தல் பணிகளை செய்தது. இது பாஜகவின் வெற்றிக்கும், ஆம் ஆத்மியின் தோல்விக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடிசைவாசிகளின் வாக்குகள் மீதும் பாஜக கவனம் செலுத்தியது.

அந்தவகையில் தேர்தலுக்கு முன்னதாக, நகரத்தில் ஜேஜே கிளஸ்டர்களில் வசிப்பவர்களுக்கான 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இரண்டு நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

ஊழல் குற்றச்சாட்டுகள்!

What is the reason for AAP's defeat

2013ல் ஆட்சிக்கு வர காங்கிரஸை வீழ்த்தி ஆம் ஆத்மி என்ன உத்தியை பயன்படுத்தியதோ, அதையே தற்போது பாஜக ஆம் ஆத்மிக்கு எதிராக செய்திருக்கிறது.

2013ல் கெஜ்ரிவால், யுபிஏ கால ஊழல்கள் மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்த நிர்பயா வழக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கெஜ்ரிவால் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சிறைக்கும் சென்று வந்திருக்கிறார்.

கெஜ்ரிவால் மட்டுமல்ல டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர். இது ஆம் ஆத்மியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.

அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் உள்கட்டமைப்புக்காகவும், மக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை. மாறாக தன்னுடைய வீட்டை ஷீஷ் மகால் போல், அதாவது கண்ணாடி அரண்மனை போல் மாற்றியிருக்கிறார். சுமார் 40 கோடிக்கு தனது வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியது பாஜக. உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி மாநில பாஜக தலைவர் வரை பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஏன்… காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இதையே சுட்டிக்காட்டி ஆம் ஆத்மிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இது கெஜ்ரிவால் மீது இருந்த நம்பிக்கையை மக்களிடையே குறையச் செய்துள்ளது.

பட்ஜெட் அறிவிப்பு!

டெல்லி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, வெளியான மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வாக்காளர்களை கவரும் வகையில் வருமான வரிச் சலுகையை பாஜக அரசு அறிவித்தது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது தனது உரையில் அடிக்கடி இதை சுட்டிக்காட்டி பேசினார். மிகவும் நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட் என்று அவர் கூறியது ஆம் ஆத்மியின் வீழ்ச்சிக்கும், பாஜகவின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

காங்கிரஸ் vs ஆம் ஆத்மி

இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் மாநில சட்டப்பேரவையில் தனி தனியே போட்டியிட்டு ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக இக்கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி மீது நம்பிக்கையை இழந்ததால் முக்கிய எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்ததும், ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருப்பது குறித்து முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து பேசியதும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

 

https://minnambalam.com/political-news/what-is-the-reason-for-aaps-defeat/

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக - ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன?

டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக - ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 பிப்ரவரி 2025, 01:49 GMT
புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளின்படி, பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2025

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 36
 
 
 
 
 
  • ஆம் ஆத்மி22Seat count of ஆம் ஆத்மி22
  • பாஜக+48Seat count of பாஜக+48
  • காங்கிரஸ்0Seat count of காங்கிரஸ்0
  • மற்ற கட்சிகள்0Seat count of மற்ற கட்சிகள்0
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 9:00 pm
சமீபத்திய முடிவுகளைக் காண இந்த பக்கத்தை புதுப்பிக்கவும்.
 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2025

ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர்.

பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதன் முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோதி பேசியது என்ன?

டெல்லி சட்டமன்றத்தில், 27 ஆண்டுகளுக்குப் பிறகூ பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக" கூறினார்.

"இன்று, டெல்லி மக்களிடையே டெல்லியை பேரழிவில் இருந்து விடுவித்த உற்சாகமும் அமைதியும் நிலவுகிறது. 21ஆம் நூற்றாண்டில் டெல்லியில் பணியாற்ற பாஜகவுக்கு வாய்ப்பளிக்குமாறு நான் ஒவ்வொரு டெல்லிவாசிக்கும் ஒரு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டேன்" என்று பிரதமர் மோதி கூறினார்.

"மோதியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நான் தலை வணங்குகிறேன். டெல்லி திறந்த மனதுடன் எங்கள் மீது அன்பைப் பொழிந்துள்ளது."

பாஜக பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தை அடைந்தார்.

அங்கு பேசிய பிரதமர் மோதி, "டபுள் எஞ்சின் அரசாங்கம் டெல்லியை விரைவாக மேம்படுத்துவதன் மூலம் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்தும். இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது சாதாரண வெற்றி அல்ல. டெல்லி மக்கள் பேரழிவை விரட்டியடித்துள்ளனர் " என்று கூறினார்.

அதோடு, "இன்று, டெல்லியில் வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வை மற்றும் நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளன. இன்று, அராஜகம், ஆணவம் மற்றும் டெல்லியை சூழ்ந்திருந்த பேரழிவு தோற்கடிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் பேசினார்.

முக்கிய தலைவர்களின் நிலை என்ன?

டெல்லி சட்டமன்றத் தேர்தல்
  • டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார்.
  • கால்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் ஆதிஷி, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
  • ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய், பாபர்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவின் அனில் குமார் வஷிஷ்தை எதிர்த்து போட்டியிட்டார்.
  • ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவரான சௌரப் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சிக்கா ராய் வெற்றி பெற்றுள்ளார்.
  • பத்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் ஆவாத் ஓஜா தேர்தலில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட ரவீந்திர் சிங் நெகி வெற்றி பெற்றுள்ளார்.
வெறிச்சோடிய ஆம் ஆத்மி கட்சி அலுவலகம்
படக்குறிப்பு, வெறிச்சோடிய ஆம் ஆத்மி கட்சி அலுவலகம்

ஜங்பூராவில் தோல்வி அடைந்த சிசோடியா

 
Play video, "டெல்லி சட்டமன்றத் தேர்தல்: கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்", கால அளவு 0,22
00:22
p0kpzt8h.jpg.webp
காணொளிக் குறிப்பு, டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்

ஜங்பூரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல் அமைச்சருமான மணீஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியுற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

"ஜங்பூரா தொகுதியில் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். 600 வாக்குகள் வித்யாசத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்," என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்பு போட்டியிட்ட தொகுதியில் இருந்து மாறி முதல்முறையாக ஜங்பூராவில் போட்டியிட்டார் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா. அவரை எதிர்த்து பாஜக சார்பில் தர்விந்தர் சிங் களம் இறக்கப்பட்டார். பாஜக தற்போது வெற்றியை உறுதி செய்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் 4089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் 4089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

ஆம் ஆத்மியின் தோல்வி பற்றி ஸ்வாதி மாலிவால் கூறுவது என்ன?

மணீஷ் சிசோடியா ஜங்பூராவில் 675 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி
படக்குறிப்பு, மணீஷ் சிசோடியா ஜங்பூராவில் 675 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "பெருமையும் ஆணவமும் நீண்ட காலம் நீடிக்காது. ராவணனின் பெருமைகூட உடைக்கப்பட்டது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அதே நிலைதான்," என்றார்.

"வரலாற்றைப் பார்த்தால், ஒரு பெண்ணுக்கு எதிராக ஏதேனும் தவறு நடந்த போதெல்லாம், கடவுள் தண்டித்துள்ளார். மோசமான, சேதமடைந்த சாலைகள், மாசடைந்த குடிநீர் என டெல்லி முற்றிலும் குப்பைக் கிடங்காக மாறிவிட்டது" என்று ஸ்வாதி மாலிவால் கூறினார்.

"டெல்லி மக்கள் அனைத்துப் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவால் தனது இடத்தை இழந்துள்ளார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மியின் தோல்வி பற்றி ஸ்வாதி மாலிவால் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,ANI

ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன?

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜக-வுக்கு எனது வாழ்த்துகள். எங்களுக்கு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்," என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

"கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் எங்களுக்கு வழங்கிய வாய்ப்பில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். கல்வி, சுகாதாரம், நீர்வளத் துறை மற்றும் டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கல் பணியாற்றினோம்.

இப்போது மக்கள் எங்களுக்கு இந்த முடிவை வழங்கியுள்ளனர். நாங்கள் ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவது மட்டுமின்றி, சமூக சேவையையும் செய்வோம்," என்று தனது வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதோடு, "மக்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் உதவுவோம். நாங்கள் யாருக்கெல்லாம் தேவைப்படுகிறோமோ அவர்கள் அனைவருக்கும் உதவுவோம். ஏனெனில், நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களி சுக, துக்கங்களில் உதவவும் பயன்படும் ஓர் ஊடகமாகக் கருதுகிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,ANI

டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி பிரதமர் மோதி கூறுவது என்ன?

முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இதை வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் வெற்றி என்று கூறியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில், "நல்லாட்சி வென்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ள அவர், "பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய டெல்லியின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என வாழ்த்துகள். நீங்கள் அளித்த ஏராளமான ஆசீர்வாதங்களுக்கும் அன்புக்கும் மிக நன்றியுள்ளனவனாக இருக்கிறேன்.

டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இருக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்

ஊழலே தோல்விக்கு காரணம் - அன்னா ஹசாரே

சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளே இந்த தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடும் இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய அவர், "ஆரம்ப காலம் தொட்டே நான் இதைக் கூறி வருகிறேன். தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுத்தமானவராக இருக்க வேண்டும். சுத்தமான எண்ணங்களும், கறைபடாத வாழ்க்கையையும், அவமானங்களை தாங்கிக் கொள்ளக் கூடியவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே, அந்த வேட்பாளர் நமக்கு ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கை வாக்காளர்கள் மத்தியில் கிடைக்கும்," என்று கூறினார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளே இந்த தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்

மேற்கொண்டு பேசிய அவர், "இதை நான் கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் அது அவர்களின் மனதில் ஏறவில்லை. பிறகு ஒரு நாள் மதுபானம் தொடர்பான பேச்சு அடிபட்டது. மதுபானக் கொள்கைகள் காரணமாகவே கேஜ்ரிவாலுக்கு மோசமான பெயர் கிடைத்தது," என்றும் குறிப்பிட்டார்.

அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பக்கம் குணாம்சம் குறித்து பேசுகிறார். மற்றொரு பக்கம் மதுபான ஊழலில் அவருடைய பெயர் அடிபடுகிறது என்பதை மக்கள் பார்த்தனர். அரசியலில் குற்றச்சாட்டுகள் எழுவது நிதர்சனம். ஒருவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் உண்மை என்றும் உண்மையாகவே இருக்கும். ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது, நான் கட்சியின் ஒரு அங்கமாக இருக்கமாட்டேன் என்பதை தெளிவுபடுத்தினேன். அதையே நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன், என்று அவர் தெரிவித்தார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்

ஆம் ஆத்மியிடம் இருந்து மக்கள் டெல்லியை விடுவித்துள்ளனர் - அமித் ஷா

முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பொய்யான வாக்குறுதிகளின் மூலம் தங்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்த முடியாது என்பதை டெல்லி மக்கள் காட்டியுள்ளனர்," என்று கூறியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, "அசுத்தமான யமுனை, மாசுபட்ட குடிநீர், சேதமடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள், தெருவுக்குத் தெரு திறந்திருக்கும் மதுபானக் கடைகள் ஆகியவற்றுக்கு" பொதுமக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் பதிலளித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

டெல்லி மக்கள் பொய்கள், வஞ்சகம், ஊழல் நிறைந்த கண்ணாடி மாளிகையை அழித்து ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து டெல்லியை விடுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, "வாக்குறுதிகளை மீறுவோருக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளது. இது நாடு முழுவதும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்போருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இது டெல்லியில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,ANI

மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி மீது அதிருப்தியில் இருந்தனர் - காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் உதித் ராஜ் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, "தற்போது வெளியாகி வரும் முடிவுகள் பாஜகவே டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும் மோசமானதாகவே இருந்தது. அதனால் தான் ஆம் ஆத்மியின் வாக்குகள் எங்களுக்கு வந்து சேருவதற்கு பதிலாக பாஜகவின் வாக்குகளாக மாறிவிட்டன," என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர் மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். ஏன் என்றால் அவர் பொய்யை பரப்புகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவரை ஒரு ஏமாற்றுக்காரராக மக்கள் பார்க்கின்றனர்," என்று கூறினார்.

"ஆம் ஆத்மி கொண்டு வந்த திட்டங்களுக்காகவே அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளதே தவிர அவரின் கொள்கைகளுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. தொழில்முனைவோர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மேட்டுக்குடியினர், தலித்கள் உட்பட பலரும் அந்த கொள்கைகளை நிராகரித்துவிட்டனர்," என்று ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து பேசினார்.

காங்கிரஸின் தோல்விக் குறித்து பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கேவை தவிர வேறு யாரும் சமூக நீதி குறித்து பேசுவதில்லை. கள அளவில் யாரும் இது குறித்து பேசவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரச்னைகள் இப்போதும் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை - ஆம் ஆத்மி தோல்வி குறித்து திருமா பேச்சு

மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமையாக இல்லை என்றும், பாஜகவின் டெல்லி தேர்தல் வெற்றி தேசத்திற்கான பின்னடைவு என்றும் விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்

"டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகவே கருத வேண்டியதாக உள்ளது.

நியாயமான முறையில் இந்த தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை இது எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை.

இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத்தள்ளி விட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் திசை வழியே சிந்திக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025

முந்தைய தேர்தல்

டெல்லியில் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களையும் வென்றது.

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்தால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும். கடந்த பத்தாண்டுகளில், டெல்லி மற்றும் பஞ்சாபில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததன் மூலம், ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி.

அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

2025 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தன. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவானது 60.4% மட்டுமே. கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான வாக்குப்பதிவு.

2013-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகியிருந்தது. 2015-ம் ஆண்டு தேர்தலில் 67% ஆக வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு தேர்தலில் 63% ஆக வாக்குகள் பதிவாகின. தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் 60.4% வாக்குகளே பதிவாகியுள்ளன.

டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 தொகுதிகளில் 12 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 83.49 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 71.74 லட்சம் வாக்காளர்கள் பெண்களாவார்கள்.

டெல்லி முதல்வர் ஆதிஷி , டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025

பட மூலாதாரம்,SONU MEHTA/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி முதல்வர் ஆதிஷி

கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. அண்ணா ஹசாரேவுடன் அர்விந்த் கேஜ்ரிவாலும் அந்த போராட்டங்களில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸை வெளிப்படையாக அவர் விமர்சனம் செய்தார்.

2013-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்தார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் ஆதரித்தது. முதல்முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் முதல் அமைச்சரானார்.

2013-ஆம் ஆண்டு தேர்தலில் தான் இறுதியாக பாஜக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக அந்த தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் வெகு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

2013-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி 2015 மற்றும் 2020 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

2013-ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி 29% வாக்கு வங்கியை கைப்பற்றியது. காங்கிரஸின் வாக்கு வங்கி அப்போது 25% ஆக இருந்தது. மேலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக டெல்லியில் 30%-க்கும் மேல் வாக்கு வங்கியை வைத்திருந்தது. 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2015-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெறும் மூன்றே தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அதன் வாக்கு வங்கியானது 30%க்கும் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று 50% வாக்கு வங்கியை தன் வசமாக்கியது.

2020-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அதன் வாக்கு வங்கி 50%க்கும் அதிகமாகவே இருந்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கூறிக் கொள்ளும்படியான வெற்றியைக் கூட பெறவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது! -எச்.ராஜா

காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது! -எச்.ராஜா.

டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதாக் கட்சி  ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பா.ஜ.கவின்  வெற்றிக்கு பிரதான  காரணம் பிரதமர் மோடியின்  நலத்திட்டங்களே என பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர்  பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் மக்களின் மனதை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வந்த போதிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதாகவும், பாஜக தற்போது 48 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஆரம்ப கட்டத்தில் மிகவும் எளிமையாக இருந்தவர்கள் எனவும்,  இன்று ஊழல் செய்து ஆடம்பரமாக உள்ளனர் எனவும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை  நாட்டிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி தற்போது துடைத்து எறியப்பட்டுள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெல்லியில் உள்ள தமிழர் பகுதிகளில் தானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்ற போது அங்குள்ள தமிழர்கள் மத்தியிலும், பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை நேரில் பார்க்க முடிந்தது எனவும்  இடைத்தேர்தலில் பொதுவாக ஆளும்கட்சி தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் பணத்தை வழங்கி திமுக வெற்றி பெற்றுள்ளது எனவும் இதனை  பெரும் வெற்றியாக திமுக கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2025/1420411

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.