Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? -  நிலாந்தன்.

adminFebruary 9, 2025
spacer.png

தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் குறுக்குவது தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது அல்ல. அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அதைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். இன ஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய வெளிப்பாடுகளில் ஒன்று. அது ஓர் ஆக்கிரமிப்பு.  ஒரு மரபுரிமைப் போர். இலங்கைத் தீவின் சட்டங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு அது ஒரு சான்று.   2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்பதற்கு அது ஒரு சான்று.

சம்பந்தப்பட்ட சில தமிழர்களின் காணி உரிமை பற்றிய ஒரு சட்டப் பிரச்சினையாக அதை அணுகி, தனி நபர்களுக்குத் தீர்வு காண்பதன்மூலம் அதைத் தீர்த்து விட முடியாது. சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு காணியைக் கொடுத்தோ அல்லது காசைக் கொடுத்தோ அதைத்தீர்த்துவிட முடியாது.  அது 2009க்கு பின்னரான இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளில் ஒன்று. எனவே அதற்குரிய தீர்வும் கூட்டுரிமைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.

எனவே அந்த விடயத்தை அதற்குள்ள பல்பரிமாணத்தின் அடிப்படையில்தான் அணுக வேண்டும்;முன் வைக்க வேண்டும். அதற்கு அரசியல் தீர்வுதான் தேவை.

spacer.png

தையிட்டி விகாரை வடக்கில் உள்ள மிகப்பெரிய கூட்டுப் படைத்தளத்தின் எல்லைக்குள் காணப்படுகிறது. படையினரால் கட்டப்படுகிறது; படையினரால் பாதுகாக்கப்படுகிறது. இலங்கைத் தீவில், தமிழ்ப் பகுதிகளில் அரச படைகளால் பாதுகாக்கப்படாத ஒரு பௌத்த விகாரையாவது உண்டா? அரச போகங்களைத் துறந்து பரிநிர்வாணம் அடைந்த அஹிம்சா மூர்த்தியான புத்த பகவானை இதைவிடக் கேவலமாக அவமதிக்க முடியாது.

தமிழ் மக்கள் புத்த பகவானைப் புறத்தியாகப் பார்க்கவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்கனவே பௌத்தம் இருந்திருக்கிறது. தமிழ் மொழியின் காப்பிய காலம் எனப்படுவது பௌத்த, சமண மதங்களின் காலம்தான். ஐம்பெரும் காப்பியங்களும் பௌத்த சமணக் காப்பியங்கள்தான். எனவே தமிழ் மக்கள் பௌத்தத்தை எப்பொழுதும் ஒரு பகை மதமாகக் கருதியது இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் எப்பொழுதும் மதப் பல்வகைமை உண்டு. தமிழ்த் தேசிய வாதம் என்பது மதப் பல்வகைமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட வேண்டும். எனவே தமிழ் மக்கள் மதப் பல்வகைமைக்கு எதிரில்லை. ஆனால் ஒரு மதத்தை ஆக்கிரமிப்பின் கருவியாக பயன்படுத்தும் பொழுதுதான் அது ஓர் அரசியல் விவகாரமாக மேல் எழுகிறது. இங்கு பிரச்சனை மதப் பல்வகைமை அல்ல. மத மேலாண்மைதான். தையிட்டி விகாரை என்பது மத மேலாண்மையின் ஆகப் பிந்திய குறியீடு. கிண்ணியாவில் ஒரு புத்தர் சிலையானது விவகாரமாக மேலெழுந்த பொழுது, முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதுபோல,“புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நகர்த்தும்”ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை அது.

spacer.png

உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் படை மைய நோக்கு நிலையிலிருந்து படையினரால் கட்டப்பட்ட ஒரு விகாரை அது. ஒரு விதத்தில் இராணுவ மயமாக்கலின் குறியீடும் தான். எனவே அந்த விடயத்தில் ஆக்கிரமிப்பு ஒன்றை எப்படிக் கையாள்வது என்றுதான் சிந்திக்கலாம். ஒரு வணக்கத் தலத்தை அகற்றலாமா என்ற கேள்வி வரும். அது மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்ற வாதம் முன்வைக்கப்படும். ஆனால் அதற்கு மதப்பரிமாணம் மட்டும் கிடையாது. அதைவிட ஆழமாக அதற்கு ஒரு படைப் பரிமாணம் உண்டு. படையினரால் வெற்றி கொள்ளப்பட்ட ஒரு நிலத்தில் அது கட்டப்படுகிறது. அதற்குள்ள படைப் பரிமாணம்தான் இங்கு பிரச்சனை. அது கட்டப்படும் பிரதேசம் பலாலி காங்கேசன் துறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப் படைத்தளப் பகுதி ஆகும். அப்பெருங் கூட்டுப் படைத்தளம் உருவாக்கப்பட்ட பொழுது அங்கே ஏற்கனவே இருந்த இந்து, கிறிஸ்தவ மத வழிபாட்டிடங்கள் சுவடின்றி அழிக்கப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. அக்கூட்டுப் படைத்தளம் பெருப்பிக்கப்படுகையில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதப் பிரிவினரின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை.

தையிட்டி விகாரை அமைந்துள்ள பலாலி, காங்கேசன்துறை கூட்டுப் படைத்தளப் பகுதிக்குள் மட்டும் சிறாப்பர் மடம்,வைத்திலிங்கம் மடம்,சடையம்மா மடம், சுக்கிரதார திரிகோண சத்திரம் ஆகிய இந்து கட்டுமானங்கள் ஒரு காலத்தில் இருந்தன. சுக்கிரதார திருகோண சத்திரம் எனப்படுவது 1800களில் ஒரு சித்தரால் கட்டப்பட்டது. சூரிய உதயத்தை தரிசிக்கும் ஒரு வழிபாட்டு மையமாக அது இருந்தது. அப்பகுதி இப்பொழுது படையினரால் நிர்வகிக்கப்படும் தல்செவன சுற்றுலா விடுதிக்குள் விழுங்கப்பட்டு விட்டது. கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ஆதிச் சிவன் கோவில் காணப்பட்டது. அந்த மாளிகைக்கு பின்பக்கம் உச்சிப் பிள்ளையார் கோயில் இருந்தது. அந்தச் சூழலில் பாதாள கங்கை என்று அழைக்கப்படும் வழிபாட்டு முக்கியத்துவம் மிக்க ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. அங்குள்ள கடற்படையினரின் படைத்தளப் பிரதேசத்துக்குள் முன்பு கதிரவெளி முருகன் கோவில் இருந்தது. அப்பகுதி மக்கள் கதிர்காம யாத்திரையை அங்கிருந்துதான் தொடங்குவதுண்டு. இவை இந்து மத வழிபாட்டிடங்கள்.

இவை போல கிறிஸ்தவ மத வணக்கத் தலங்களும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பலாலியில் இருந்த சென் செபஸ்டியன் தேவாலயம்,மயிலிட்டியில் காணிக்கை மாதா தேவாலயம்,அந்தத் தேவாலயத்திற்கு அருகே இருந்த திருக்குடும்பக் கன்னிர் மடம்,மயிலிட்டி கடற்கரையில் வேளாங்கண்ணி மாதா ஆலயம். போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தையிட்டி விகாரை கட்டப்பட்டுவரும் கூட்டுப் படைத்தளப் பிரதேசத்துக்குள் காணப்பட்ட ஏனைய மதக் கட்டுமானங்கள் இவை. இவை தொடர்பாக மதப் பெரியார்களும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இவ்வாறு போர்க்காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு பெரும் படைத்தளத்துக்குள் ஏற்கனவே இருந்த பௌத்தம் அல்லாத மத வழிபாட்டு நிலையங்களை அழித்துவிட்டு, அல்லது சிதைத்து விட்டு,அல்லது அப்பகுதிக்குள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதியை மறுத்துவிட்டு, ஒரு விகாரையை அங்கே கட்டுவதுதான் இங்கு பிரச்சனை.

சிங்கள பௌத்தம் அல்லாத ஏனைய வழிபாட்டிடங்களை தடயமும் இல்லாமல் அழிப்பது என்பது இலங்கைத் தீவின் நவீன அரசியல் வரலாற்றின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும். புழக்கத்தில் உள்ள வழிபாட்டிடங்கள் மட்டுமல்ல,தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பிரதேசங்களில் உள்ள வழிபாட்டிடங்களையும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் விட்டு வைக்கவில்லை.

அமெரிக்காவில் வசிக்கும் கலாநிதி சுஜாதா அருந்ததி மீகம என்ற புலமையாளர் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பிரதேசங்களில் எவ்வாறு இந்து மத மரபுரிமைச் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். காலனித்துவ ஆட்சிக் காலத்தில்-19ஆம் நூற்றாண்டில்-பொலநறுவையில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிக்கைகளில் பல சிவாலயங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு என்றும் ஆனால் பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை விடுபட்ட பின் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சி அறிக்கைகளில் மேற்படி சிவனாலயங்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை என்றும் சுஜாதா அருந்ததி மீகம கூறுகிறார். இது முழுக்க முழுக்க ஒரு பண்பாட்டு இன அழிப்பு. இலங்கைத் தீவின் நவீன அரசியலின் ஒரு பகுதி அது.

எனவே அந்த வரலாற்றுப் படிப்பினையின் அடிப்படையில்தான் தையிட்டி விகாரை பொறுத்து முடிவெடுக்கலாம்.அதை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். தனியே மதத்துக்கு ஊடாகவோ அல்லது சட்டத்துக்கூடாகவோ மட்டும் அணுகமுடியாது. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இன முரண்பாடுகள் இல்லை என்று கூறுகிறது. ஆனால் அந்த விகாரை இன முரண்பாடுகளின் குறியீடு. 2009 க்குப் பின் இனங்களுக்கிடையே,மதங்களுக்கு இடையே,மொழிகளுக்கிடையே மெய்யான பொருளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் ஏற்படாத ஒரு வெற்றிடத்தில்,சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பால்-அதாவது யாப்பில் ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசுக் கட்டமைப்பால்-தமிழ் மக்களின் ஒப்புதலின்றி தமிழ்ப் பகுதிகளில் கட்டப்படும் பெரும்பாலான பௌத்த வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிப்பு உள்நோக்கமுடையவைகளே. எனவே ஒர் ஆக்கிரமிப்பை எவ்வாறு கையாள வேண்டும் என்றுதான் இங்கு சிந்திக்கலாம். அது ஒரு அரசியல் தீர்மானம்.

spacer.png

இந்த விடயத்தில் தொடர்ச்சியாக விழிப்பை ஏற்படுத்தி வந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். ஆனால் அந்த விழிப்பு ஒரு கவன ஈர்ப்பாகத்தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு முழு நிலா நாளன்றும் விகாரைக்குப் போகும் வழியில் நின்று அந்தக் கட்சியின் விரல் விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. அதை ஒரு மக்கள் மயப்பட்ட போராட்டமாக மாற்ற முன்னணியால் முடியவில்லை. குறைந்தபட்சம் ஏனைய கட்சிகளைக்கூட அதில் இணைத்துக் கொள்ள முடியவில்லை.

அண்மையில் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரையை ஒழுங்குபடுத்திய பொழுது அந்தக் கட்சி அந்த விடயத்தில் கவனம் செலுத்தியது. “மக்கள் மயப்படுத்தப்பட்ட வேண்டிய அரசியல் ”என்பதே நினைவுப் பேருரையின் தலைப்பு. ஆனால் நினைவுப் பேருரை ஆற்றிய பேராசிரியர் அந்த தலைப்பின் கீழ் உரையாற்றவில்லை. தமிழ் மக்களை தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து எப்படி நிறுவனமயப்படுத்துவது என்ற விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடம் பொருத்தமான தரிசனங்கள் எவையும் கிடையாது.  இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால்,தமிழ்த் தேசியவாத அரசியலை எப்படி நிறுவனமயப்படுத்துவது என்று தமிழ்க் கட்சிகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது அரசுடைய தரப்பு. அதனிடம் அரச வளங்கள் உண்டு; திணைக்களங்கள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக திணைக்களங்கள்தான் அரசின் உபகரணங்களாக ஆக்கிரமிப்பை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அதற்கு எதிராக போராடும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களிடம் கட்டமைப்பு சார்ந்த சிந்தனை கிடையாது. அதாவது ஆக்கிரமிப்பு நிறுவனமயப்பட்டுள்ளது. அதற்கு எதிரான போராட்டம் உதிரியாக,சிறு திரளாக,கவனயீர்ப்பாகச் சுருங்கிக் கொண்டே போகிறது. முள்ளுக் கம்பிகளால் பாதுகாக்கப்படும் தையிட்டி விகாரை வான் நோக்கி எழுகிறது.

https://www.nillanthan.com/7148/

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2025 at 15:29, கிருபன் said:

ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது அரசுடைய தரப்பு. அதனிடம் அரச வளங்கள் உண்டு; திணைக்களங்கள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக திணைக்களங்கள்தான் அரசின் உபகரணங்களாக ஆக்கிரமிப்பை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அதற்கு எதிராக போராடும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களிடம் கட்டமைப்பு சார்ந்த சிந்தனை கிடையாது. அதாவது ஆக்கிரமிப்பு நிறுவனமயப்பட்டுள்ளது. அதற்கு எதிரான போராட்டம் உதிரியாக, சிறு திரளாக, கவனயீர்ப்பாகச் சுருங்கிக் கொண்டே போகிறது. முள்ளுக் கம்பிகளால் பாதுகாக்கப்படும் தையிட்டி விகாரை வான் நோக்கி எழுகிறது.

https://www.nillanthan.com/7148/

நிலம், மொழி காக்கப்படவேண்டுமாயின் அரசு இருக்கவேண்டும் எனப் பெரியோர்கள் சொல்வதுண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.