Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது இலக்கியம் அரசியல் சார்ந்ததுதான்

March 2, 2025 ஷோபாசக்தி

உயிர்மை பிப்ரவரி 2025 இதழில் வெளியாகிய எனது நேர்காணல்.
சந்திப்பு: சோ.விஜயகுமார்

ஒரு நீண்ட புலம்பெயர் வாழ்வில் இருக்கிறீர்கள். இதில் ஈழத்தோடும் தமிழகத்தோடும் உங்களுக்கு இருக்கக்கூடிய இன்றைய உணர்வுகளை எப்படிக் காண்கிறீர்கள்?

இலங்கையில் யுத்தம் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர ஆரம்பித்துவிட்டால் கூட, 1983-ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமான பொழுதில்தான் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பங்களாக இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் அகதிகளாகச் சென்றனர். அந்தச் சூழலில்கூட எக்காரணம் கொண்டும் தாய்நாட்டை விட்டு வெளியேறுவது இல்லை என்ற தீர்க்கமான முடிவோடு இருந்தவன் நான். நமது தாய்நாட்டில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, புலம்பெயர்ந்து செல்வது நமது தாய்நாட்டிற்கு நாம் செய்யும் துரோகம், அநீதி என நினைத்து ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தில் சேர்ந்தேன். புலிகள் இயக்கத்தில் மூன்றரை ஆண்டுகள் தீவிரமாகப் பணியாற்றிய பின்னால் கருத்து வேறுபாடுகள், நடைமுறை முரண்கள், தலைமையிடம் குவிக்கப்பட்டிருந்த எல்லையற்ற அதிகாரம் காரணமாக நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன். அதன்பின்பு எனக்கு ஈழத்திலே இருக்க முடியாத சூழல் உருவாகியது. அதற்கு முக்கியமான காரணம், இந்திய அமைதிப்படையின் வருகை. நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய பின்பு புலிகளுடைய அழுத்தங்களையும் புலிகளை எதிர்த்த மற்றைய தமிழ் இயக்கங்களின் அழுத்தங்களையும் சமாளித்து வாழ்ந்துகொண்டிருந்த என்னால் இந்திய ராணுவம் ஒரு பேரலையென இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதிக்குள் நுழைந்து செய்த அட்டூழியங்களாலும் அது புலிகளை மட்டுமல்லாமல் முன்னாள் புலிகளையும் தேடி நடத்திய கடுமையான வேட்டையாலுமே நான் என் தாய்நிலத்தை நீங்க வேண்டியிருந்தது. இந்திய ராணுவத்தின் கைகளில் சிக்கினால் சிறை, சித்திரவதை, மரணம் என்ற நிலையிருந்தது. இந்திய ராணுவம் இரண்டு முறை என்னைத் தேடி வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அவர்களின் கைகளுக்குச் சிக்காமல் நான் தப்பித்துக் கொழும்பு சென்றபோது, அங்கே இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சிறையில் தள்ளப்பட்டேன்.

1990-இல் சிறையிலிருந்து வெளியானதும் என்னுடைய 23-ஆவது வயதில் இலங்கையை விட்டு வெளியேறினேன். ஆனால், நான் புலம்பெயர்ந்தபோது எப்படியும் ஓரிரு வருடங்களில் இலங்கைக்குத் திரும்பி வந்துவிடுவேன் என்ற எண்ணத்தோடுதான் புலம்பெயர்ந்தேன். ஒரு வருடத்தில் திரும்பிவிடுவேன், இரண்டு வருடத்தில் திரும்பிவிடுவேன், நான்கு வருடத்தில் திரும்பிவிடுவேன் என சிந்தித்துச் சிந்தித்துக் காலம் கடந்து 33 வருடங்கள் கழித்துதான் எனது தாய் நாட்டிற்குத் திரும்பிச் சென்றேன். இந்தப் புலம்பெயர் வாழ்வின் ஆரம்பத்தில் 3 வருடங்கள் நான் தாய்லாந்தில் வாழ்ந்தேன். 1993-இல் ஒரு போலி பாஸ்போர்ட்டுடன் பிரான்ஸ் சென்றேன். அங்கே 31 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். ஒரு அகதி, பிரெஞ்சுக் குடிமகனாக மாறுவதற்கு ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடாது, நிலையான வதிவிடம் வேண்டும் என்றெல்லாம் சட்ட நிபந்தனைகள் உண்டு. எனவே முதலில் 25 வருடங்கள் குடியுரிமையே இல்லாமல் அங்கே அகதியாகவே இருந்தேன். எப்போதுமே என்னால் குடியுரிமையைப் பெற முடியாது என்றே நினைத்திருந்தேன். ஆனால் இப்போது 6 வருடங்களாகப் பிரெஞ்சுக் குடிமகனாக இருக்கிறேன். என்னுடைய எழுத்தும் சினிமாவும் என்னைப் பிரெஞ்சுக் குடிமகன் ஆக்கின.

ஆனாலும், நான் இப்போதும்கூட பிரெஞ்சு நாட்டுச் சூழலோடு ஒன்றிப் போகவில்லை. அந்நாட்டின் கலாச்சாரத்தோடும் மொழியோடும் மக்களோடும் நான் கரைந்து போகவில்லை. நான் பிரான்ஸில் இருந்தாலும், ஈழ அரசியலிலும் தமிழ் மொழியிலும் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ஒரு ஈழத்தவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் இலங்கையிலிருந்து பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும் எனது சிந்தனையும் செயலும் எழுத்தும் எல்லாம் இலங்கையைக் குறித்தே உள்ளன. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எனக்கு இலங்கையோடு எப்போதும் ஆழமான தொடர்புகள் இருக்கின்றன. என்னுடைய 83 வயதுத் தாயார் அங்கே இருக்கிறார். எனது உறவினர்களும் நண்பர்களும் முன்னாள் இயக்கத் தோழர்களும் எழுத்தாள நண்பர்களும் அங்குதான் இருக்கிறார்கள். நான் எப்போதுமே என்னை ஈழத்தோடு பிணைத்துத்தான் வைத்துள்ளேன். இது தேசியவாதம் என்றோ தாய்நாட்டுப் பற்று என்றோ நீங்கள் கருதவேண்டியதில்லை. கொடிய யுத்தத்தில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். நான் சார்ந்திருந்த இயக்கம் செய்த மனிதவுரிமை மீறல்களுக்கு நானும் பொறுப்பேற்றே ஆகவேண்டும். அந்தக் குற்றவுணர்வு என்னிடம் எப்போதுமேயுண்டு. எனவே ஈழ யுத்தத்திற்குள் வாழ்ந்தவர்களோடும் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களோடும் சேர்ந்திருப்பது ஒரு மனிதனாக எனது அறம். அவர்களைக் குறித்து எழுதுவது ஓர் எழுத்தாளனாக எனது கடமை.

1998-இல் இருந்து எனக்கு இந்தியாவில் இலக்கியத் தொடர்புகள் அறிமுகமாகின. 98-லிருந்து 2009 வரையிலான அந்தப் பத்து வருட காலத்தை என் வாழ்வின் மிக முக்கியமான காலமாக நான் கருதுகிறேன். ஏனென்றால் அந்தக் காலங்களில் நான் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கக்கூடிய எழுத்தாளனாகவும் சனநாயகம் குறித்துக் குரல் எழுப்புபவனாகவும் போர் எதிர்ப்புப் பேசுபவனாகவும் ஈழத்தில் தலித்தியம் குறித்துப் பேசுபவனாகவும் இருந்தேன்.

புலிகளைப் பல்வேறு தோழர்கள் அப்போது விமர்சித்து வந்தாலும், புலிகள் இயக்கத்திலேயே இருந்து அதிலிருந்து வெளியேறி இலக்கியத்திலே முதல் முறையாகப் புலிகளை விமர்சிப்பவன் நானாக இருந்தேன். என்னுடைய ‘கொரில்லா’ நாவல் 2001-ஆம் ஆண்டு வெளிவந்தது. அன்றிலிருந்து நான் பல்வேறு எதிர்ப்புகளை ஈழத்திலும் சரி, புலம்பெயர் நாட்டிலும் சரி, தமிழகத்திலும் சரி தொடர்ந்து எதிர்கொண்டு வந்தேன். ஷோபாசக்தி என்பவன் இனத்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி, இந்திய அரசின் கைக்கூலி என்றெல்லாம் ஏகப்பட்ட கட்டுரைகள் பல்வேறு தரப்புகளால் என்மீது வைக்கப்பட்டன. ‘கீற்று’, ‘இனியொரு’, தேசம்’ போன்ற இணையங்களிலும் முகநூலிலும் இந்த வகை அவதூறுகள் கொட்டிக்கொண்டே இருந்தன. பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் அந்த அவதூறாளர்கள் யாருமே இப்போது ஈழப் பிரச்சினை குறித்துப் பேசுவதே கிடையாது. ஈழத்தில் இப்போதும்தான் அரசியல் பிரச்சினைகள் உள்ளன. அவதூறாளர்களைப் போல என்னால் மவுனியாக முடியாது. உங்களுக்கு இந்த நேர்காணலைத் தரும் நிமிடத்திலும் நான் ஈழப் பிரச்சினை குறித்துப் பேசிக்கொண்டுதான் உள்ளேன். அதை இலக்கியத்தில் எழுதியவாறே இருக்கிறேன்.

இதில் மிகவும் வருத்தம் தரும் விஷயம் ம.க.இ.க-வின் ‘வினவு’ இணையத்தளமும் இத்தகைய அவதூறை என்மீது செய்ததுதான். ஷோபாசக்தி தமிழகத்தில் கால் வைத்தால் அவனது காலை அடித்து முறிப்போம், அவனது கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்றெல்லாம் ‘வினவு’ இணையத்தின் பின்னூட்டப் பகுதியில் எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஆனால் இந்தச் சூழலில்கூட தமிழ்நாட்டில் என்னுடைய இலக்கிய நண்பர்களும் தோழர்களும் நான் செயற்படக் களத்தை அமைத்துக் கொடுத்தார்கள். நான் தமிழ்நாட்டில் கூட்டங்களில் பேசாத மாவட்டங்களே கிடையாது. தமிழகத்தில் புலிகள் ஆதரவு அலை தீவிரமாக அடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் புலிகளைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தேன். நான் இலங்கை அரசையும் இந்திய அரசையும் விமர்சித்துக் கொண்டிருந்தாலும்கூட புலி ஆதரவாளர்களுக்கு நான் புலிகளை விமர்சித்ததுதான் வெகுவாக எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது.

இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். நான் தமிழ்நாட்டில் ஈரோட்டிலோ சேலத்திலோ கோயம்புத்தூரிலோ ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசுகிறேன் என்றால் இலக்கிய கூட்டத்திற்கு ஓரளவு இலக்கிய வாசிப்பாளர்கள் அல்லது அரசியல் ஆர்வமுள்ளவர்கள்தான் வருவார்கள். அவர்களுக்கு இலங்கை அரசு என்ன கொடுமைகளைத் தமிழர்கள்மீது செய்கிறது எனத் தெரியும். இலங்கை அரசு ஒரு இனவாத அரசு, இனப்படுகொலை செய்கிற அரசு என நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் இலங்கை அரசை எதிர்த்து இங்கே போராடினார்கள், அணி திரட்டினார்கள், கருத்தரங்குகளை நடத்தினார்கள். ஆனால், இவர்களுக்குப் புலிகளைப் பற்றியோ பிற தமிழ் விடுதலை இயக்கங்களைப் பற்றியோ போதியளவு தெரியவில்லை. இந்த இயக்கங்கள் தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யும் கொடும் செயல்கள் இவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கவில்லை. ஏனென்றால் யாராவது அவை குறித்து எழுதினால்தானே தெரியும். இவை குறித்தெல்லாம் எழுத இலங்கையில் தடைகள் இருந்தன. புலிகளை விமர்சித்து எழுதிய பலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள். ராஜினி திரணகம, கவிஞர் செல்வி என ஒரு நீண்ட பட்டியலே சொல்லிக்கொண்டு போகலாம். ஆக, ஈழத்தில் இருந்து இந்தக் குரல்கள் பரவலாகத் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லாமலிருந்தது. புலம்பெயர் சிறுபத்திரிகைகளில் புலிகள் குறித்துக் கடும் விமர்சனங்கள் தொடர்ச்சியாக வைக்கப்பட்ட போதும் அந்தப் பத்திரிகைகள் தமிழகத்தில் பரவலாக விநியோகிக்கப்படுவதில் பல சிக்கல்கள் இருந்தன. எனவே தமிழகத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் புலிகளை நான் உக்கிரமாக விமர்சித்தேன். அந்த விமர்சனத்தை இங்கே வைக்க வேண்டிய தேவை இருந்தது, இருக்கிறது. விமர்சனத்தை வைத்துவிட்டு நான் ஒளிந்து திரிவதிவல்லை. எந்தச் சபையிலும் எவரோடும் விவாதிக்கத் தயாராகவே இருந்தேன். அப்போது தோழர் தியாகுவோடு நான் நிகழ்த்திய முரண் உரையாடல் ‘கொலைநிலம்’ என்ற நூலாகவும் வந்திருக்கிறது.

தமிழகத்தில் எனக்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் ஏற்பட்டபோதும் என்னுடைய நூல்களைப் பதிப்பித்த, அந்நூல்கள் குறித்து எழுதிய அனைத்துத் தமிழக இலக்கியத் தோழர்களுக்கும் நான் நன்றியுடையவனாக இருப்பேன். சிறுபத்திரிகைகள் மட்டுமல்ல… குறிப்பாக வெகுசன ஊடகங்களான ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், இந்தியா டுடே போன்ற பல பத்திரிகைகளும் என்னுடைய நேர்காணல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. அந்தவகையில் அந்தப் பத்து வருடங்கள் என்னுடைய எழுத்தைப் பாதுகாத்ததும் பரப்பியதும் தமிழகத்தில் சிறு பத்திரிகைகளும் வெகுசன ஊடகங்களும்தான். தமிழகத்துச் சிறுபத்திரிகைகளும் வெகுசன ஊடகங்களும் உலகத் தமிழர்களைப் பரவலாக சென்றடைந்ததால் என்னுடைய குரலை உலகெங்கும் எடுத்துச் சென்றது தமிழகத்து தோழர்கள்தான். அந்தவகையில் நான் அவர்களோடு எப்போதும் உணர்வுபூர்வமான ஈடுபாட்டோடு இருக்கிறேன். தமிழகத்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், தலித் இயக்கங்கள், ‘நீலம்’ போன்ற பண்பாட்டு இயக்கங்கள், சிறுபத்திரிகைகள் போன்ற அனைவரோடும் எனக்கு இன்றுவரை நெருங்கிய தொடர்பும் ஆத்தமார்த்தமான தோழமையும் உள்ளன.

உங்களுடைய பிரான்ஸ் வாழ்க்கையை நீங்கள் ஏன் இன்னும் கதைகளாகப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி உங்களிடம் தொடர்ந்து கேட்கப்படுகிறது. அதாவது பிரான்ஸ் குறித்து ஏன் குறைவாக எழுதினீர்கள் என. அது ஏன்?

அந்தக் கேள்வியே ஒரு தவறான கேள்வி. நான் நவீன தமிழ் இலக்கியத்திற்குள் வந்து முதல் முதலாக 1997-இல் எழுதிய ‘எலிவேட்டை’ கதை எதைப் பற்றியது? பிரான்சிலிருந்து துரத்தி அடிக்கப்படும் ஒரு அகதி இளைஞனைப் பற்றியது. அதுபோலவே எத்தனையோ கதைகளில் நான் பிரான்ஸைக் குறித்து எழுதி இருக்கிறேன். இவர்களுக்கு பிரான்ஸைக் குறித்து எழுதுவதென்றால் பிரான்ஸில் இருக்கும் வெள்ளையர்களை பற்றி எழுதுவது!
அல்ல… நான் பிரான்ஸில் இருக்கும் எங்களைப் பற்றி எழுதுகிறேன். என்னுடைய எல்லா நாவல்களிலும் ஒரு பகுதியாவது பிரான்ஸ் குறித்தும் அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் குறித்தும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பிரான்ஸை எழுதுவது என்பது பிரான்ஸில் இருக்கும் என்னுடைய அகதிச் சமூகத்தை எழுதுவது. இவர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. பிரான்ஸ் குறித்து எழுதுவது என இவர்கள் எதைத்தான் குறிப்பிடுகிறார்கள்? அ. முத்துலிங்கம் அவர்கள் பல்வேறு நாடுகளின் மனிதர்களை, பண்பாடுகளை, உணவுகளை தன்னுடைய கதைகளில் எழுதுகிறார். அப்படியா நான் எழுதவேண்டும்? பிரான்ஸின் ஒயினையும் ரொட்டியையும் நானா எழுத வேண்டும்?

என்னுடைய அகதிப் பயணத்தில் தற்செயலாக நான் பிரான்ஸில் தரித்தவன். அகதி வாழ்வினை, விளிம்பு நிலை வாழ்வினை அவற்றின் பரிமாணங்களை நான் நிறையவே எழுதிவிட்டேன்.

இந்த விமர்சனத்தின் பின்னால் இருக்கும் குரல் வேறொன்று என எனக்குத் தெரியும். ஈழப் போரைக் குறித்து நான் தொடர்ச்சியாக எழுதுவதால் அதிருப்தியுற்றவர்களே ‘ஏன் பிரான்ஸை எழுதவில்லை?’ எனக் கேட்கிறார்கள். நான் பிரான்ஸைக் குறித்து மட்டுமல்ல… எத்தனையோ உலகநாடுகளின் பின்னணியில் கதைகளை எழுதியுள்ளேன். அவை வெறும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் அறிமுகப்படுத்தும் சுவாரசியக் கதைகள் அல்ல. ‘மரச்சிற்பம்’,‘ரம்ழான்’, ‘சித்திரப்பேழை’ போன்று என் அரசியல் குரலை ஒலிக்கும் கதைகள்.

உங்களுடைய முழு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அவற்றிலுள்ள கதைகள் வெளிவந்த காலத்திலேயே பரவலான கவனத்தையும் பெற்றிருக்கின்றன. உங்கள் புனைவு மொழியை உருவாக்கிக் கொண்டதில் முக்கியமான முன்னோடிகள் தமிழிலும் பிற மொழிகளிலும் யார்?

என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது அரசியல் சார்ந்ததுதான். இரண்டையும் வெவ்வேறாக நான் பிரித்துப் பார்ப்பதில்லை. இலக்கியத்தில் அரசியல்ரீதியாக இயங்குவதற்கு எனக்கு சொல்லித் தந்த நிறைய முன்னோடிகள் இருக்கிறார்கள். முதன்மையாக யாரையாவது சொல்ல வேண்டுமானால் கே. டானியல், ஜெயகாந்தன் இருவரையும் சொல்வேன். மக்கள் இலக்கியத்தைப் படைத்த மகத்தான எழுத்தாளர்கள் இவர்கள்.

தஸ்தயொவ்ஸ்க்கி, டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ் ஆகியோரின் படைப்புகளிலுள்ள விரிவும் ஆழமும் செய்நேர்த்தியும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. மொழியால் என்னை வசியப்படுத்திவர்களில் முதன்மையானவராக எஸ்.பொ. இருக்கிறார். வட்டார வழக்கில் எழுதுவதற்கு எனக்குத் தெரிந்து அவரைவிட இன்னொரு விண்ணன் கிடையாது. என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் பலவும் வட்டார வழக்கில் எழுதப்பட்டதற்குக் காரணம் எஸ்.பொவின் எழுத்தின் பாதிப்பே. எனினும் சீக்கிரமே அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட்டு எனக்கென ஒரு புனைவுமொழியை உருவாக்கிக்கொண்டேன் என்றே நினைக்கிறேன்.

அதைப்போலவே, எனக்கு எழுத்தில் இன்னொரு ஆசான் என்றால் அது சாரு நிவேதிதா. அவருடைய ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’, ‘ஜீரோ டிகிரி’ ஆகிய இரு நூல்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சாருவை வாசிக்கும்வரை நான் நாவல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் அத்தியாயம் பிரிக்க வேண்டும், இப்படியாகக் கதை மாந்தர்கள் வரவேண்டும் என ஒரு கற்பிதத்தோடு இருந்தேன். ஆனால் சாருவின் நாவல்கள் அது அப்படி அல்ல, நீ எங்கு வேண்டுமானாலும் கதையை உடை, எங்கு வேண்டுமானாலும் கதையைத் தொடங்கு, எங்கு வேண்டுமானாலும் வரிசையை கலைத்துப் போடு என எனக்கு ஊக்கமூட்டின.

மொழியில் தவளைப் பாய்ச்சல் என சொல்லுவார்கள். அதை புதுமைப்பித்தனுக்குத்தான் சொல்லுவார்கள். ஆனால், புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் நான் அந்தப் பாய்ச்சலைக் கண்டதில்லை. சாருவின் எழுத்தைத் தவளைப் பாய்ச்சல் என்றுகூட அல்ல, அதைவிட வேகமான விலங்கு என்ன? ம்… புலிப் பாய்ச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே நாவல்மீது எனக்கு இருந்த தயக்கங்களை உடைத்தது சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவல்தான். அந்நாவலை வாசித்திருக்காவிட்டால் நான் ‘கொரில்லா’ நாவலை எழுதியிருக்க மாட்டேன். கொரில்லா நாவலில் பார்த்தீர்கள் என்றால் ஒரே நாவலில் மூன்று மொழிநடை வரும். அத்தியாயம் அத்தியாயமாகக் குறுக்கும் நெடுக்குமாக வரும். இவை அனைத்தும் சாருவிடமிருந்து கற்றுக் கொண்டவை.

சாருவும் நானும் நாட்கணக்காக இலக்கியம் பேசிச் சுற்றிய காலம் எனக்குப் பொற்காலம். சாரு கற்காலத்திற்குத் திடீரெனத் திரும்பி மஹா பெரியவா, ஹிந்து தர்மம், பாபா , துக்ளக், மோடி என்றெல்லாம் பேசத் தொடங்கியதற்குப் பின்பாகத்தான் அவரிடமிருந்து நான் விலக நேரிட்டது. சாருவின் இத்தகையை பிற்போக்கு உருமாற்றம் குறித்த விமர்சனங்கனை சாருவிடமும் அவரது வாசகர் வட்டத் தோழர்களிடமும் பொதுவெளிகளிலும் நான் நேரடியாகவே கடுமையாக வைத்ததுண்டு. ஆனாலும், சாரு எனது ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர் என்ற மரியாதை எனக்கு எப்போதுமுண்டு. அதேபோன்றுதான் எனது இன்னொரு ஆசிரியரான ஜெயகாந்தன் தனது பிற்காலங்களில் இந்து மதத்திற்கும் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கும் மனிதராக மாறிச் சீரழிந்தார் என்பதற்காக என்னால் ஜெயகாந்தனின் இலக்கியச் சாதனைகளைப் புறக்கணித்துவிட முடிவதில்லை.

பின்நவீனத்துவ அறிதல் – வாசிப்பு என்ற வகையில் ரமேஷ் – பிரேம் இருவருடைய தனித்துவமான எழுத்துக்களும் அவர்கள் கையாண்ட மொழியும் படிமங்களும் என்னை மிகவும் ஈர்த்தன. அவர்களுடனான உரையாடல் எனக்குப் புதிய புதிய சாளரங்களைத் திறந்துவைத்தது. அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர், ராஜன்குறை, தொ.பரமசிவன், வீ.அரசு என எனது ஆசிரியர்களின் வரிசை நீண்டது.

நீங்கள் முன்பே குறிப்பிட்டது போல அரசியல் இல்லாத எந்த எழுத்தையும் நீங்கள் நிராகரிப்பீர்கள். அந்நிலையில் எஸ்.பொ அவர்களுடைய ‘மாயினி’ நாவலை எந்த இடத்தில் இருந்து நீங்கள் நிராகரிக்கிறீர்கள்?

அரசியல் இல்லாத பிரதிகளே இங்கு கிடையாது. எழுத்தாளருக்குக் கட்சி அரசியலோடு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ அவர் இலக்கியம் எழுதும்போது, அவரிடமுள்ள அரசியல் – சமூகம் – பண்பாடு சார்ந்த பார்வை பிரதியில் பொதிந்திருக்கும். கட்டவிழ்ப்பு விமர்சனம் எழுத்தாளரின் அந்தவகைப் பார்வைகளை நமக்கு அடையாளம் காட்டிவிடும் இலக்கிய ஆயுதம்.

எஸ்.பொ. இடதுசாரிப் பின்னணியில் உருவாகிவந்த எழுத்தாளர். அவருடைய அக்காவின் கணவர் எம்.சி. சுப்பிரமணியம் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். தனது மாணவப் பருவத்தில் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையைப் பாடசாலையில் விநியோகித்ததற்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட வரலாறு எஸ்.பொ. அவர்களுக்குண்டு. எம்.சி. சுப்பிரமணியம் தலித்துகளைத் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, தனது கோரிக்கைக்கைப் பரப்புரை செய்ய ‘உதயம்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பு எஸ்.பொ. அவர்களிடமே கொடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டங்களில்தான் எஸ்.பொ. தனது படைப்பின் உச்சபட்ச ஆற்றலை வெளிப்படுத்தினார் என்றே நான் கருதுகிறேன்.

80-களின் நடுப்பகுதியில் எஸ்.பொ. தமிழ்த் தேசிய நிலைப்பாடு எடுத்தார். அந்த நிலைப்பாடு புலிகளின் அனைத்து அராஜங்களையும் நியாயப்படுத்துமளவுக்குச் சென்றது. புலிகளை விமர்சித்தவர்களை மாற்று இயக்கம் என்றும் துரோகிகள் என்றும் அவர் வசைக்க ஆரைம்பித்தார். ‘சனதருபோதினி’ தொகுப்புக்காக அவர் எனக்கு வழங்கிய நேர்காணல் அவரின் இந்த வீழ்ச்சிக்குச் சாட்சியம்.

எஸ்.பொ. அவர்கள் புலித் தமிழ்த் தேசியத்திற்குள் வீழ்ந்த பின்பாக அவரது இலக்கிய எழுத்துகள் சோபிக்கவில்லை. குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும் என்பார்கள். தனது புலித் தமிழ்த் தேசியத்தை நியாயப்படுத்த அவர் எழுதிய நாவல்தான் மாயினி. உண்மையில் அதுவொரு தமிழ் இனவாத நாவல். வெறும் வதந்திகளையும் பொய்களையும் தொகுத்து எழுதப்பட்ட பிரதியது. எனவேதான் அந்நாவல் தமிழ் வாசகர்களால் கண்டுகொள்ளப்படாமல் செத்துப் போயிற்று. ‘தீ’, ‘சடங்கு’ போன்ற அற்புதமான நாவல்களைப் படைத்த எஸ்.பொ. அவர்களா ‘மாயினி’யை எழுதியது என்ற திகைப்பெல்லாம் எனக்கு ஏற்படவில்லை என்பதும் உண்மை. ஏனெனில் ஒருவர் பிரதியில் பொய்களை உயிர்ப்பிக்கும்போது, அங்கே இலக்கியம் செத்துவிடும். பிற்கால கி.பி. அரவிந்தனுக்கும் சேரனுக்கும் தற்காலத் தமிழ்நதிக்கும் தீபச்செல்வனுக்கும் அகரமுதல்வனுக்கும் இதுவே நேர்ந்தது. இந்துத்துவாவையோ அல்லது சாதிப் பெருமிதத்தையோ தூக்கிப் பிடிக்கும் ஒரு பிரதி எப்படி இலக்கியம் ஆகாதோ அதேபோன்றுதான் புலிகளின் கொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் வெள்ளையடிக்க முயலும் பிரதிகளும் இலக்கியம் ஆகாது என்றே நான் நம்புகிறேன்.

பொதுவாக நவீன தமிழிலக்கியம் குறித்த விமர்சனங்களில் கலை, அழகியல் என்ற இரண்டு வார்த்தைகளும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் பொருள் என்பது என்ன? நவீன தமிழிலக்கிய சூழலில் இந்தப் பதங்கள் எத்தகைய நோக்கத்தில் வழங்கப்படுகின்றன?

கலையும் அழகியலும் ஒரே சொல்தான். அழகியல் இல்லாவிட்டால் அது இலக்கியப் பிரதியே கிடையாது. எது அழகியல் என்பதில் வேண்டுமானால் இலக்கியர்களிடையே முரண்கள் இருக்கலாம். ஆனால் இலக்கியம் என்பது கலை – அழகியல் செயற்பாடு என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றே கருதுகிறேன். அழகியல் இல்லாத பிரதியொன்றை நுட்பமான வாசகர்கள் எளிதில் இனம் கண்டுகொள்வார்கள். அத்தகைய பிரதியொன்றை வெளியிட்டு, திரைப்படப் பிரபலங்களை அழைத்து வெளியீட்டு விழா வைத்தோ அல்லது கடற்கரைகளுக்குச் சென்று மதுவிருந்துடன் வெளியிட்டுக் கொண்டாடினாலோகூட அந்தப் பிரதியின் ஆயுள் ஒருநாள்தான். நவீன தமிழ் இலக்கிய வாசகர்கள் மிகவும் கூர்மையான உணர்வுடையவர்கள். போலிகளை நம்பி அவர்கள் ஒருபோதும் ஏமாந்ததில்லை.

என்னுடைய இலக்கியம் அரசியல் சார்ந்தது என்று நான் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் பிரதியில் அழகியலை மறுப்பதாகாது. மகாகவி பாரதியின் உக்கிரமான உரத்த அரசியல் கவிதைகளைப் படித்திருக்கிறோம். அவற்றில் இல்லாத அழகியல் வேறெந்த இலக்கியப் பிரதியிலுண்டு, சொல்லுங்கள்!

ஈழப் போராட்டத்தில் பல்வேறு துயரமான கசப்பான நினைவுகளை உங்கள் கதைகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அவற்றிற்கான எதிர்வினைகளையும் சந்தித்திருக்கிறீர்கள். ஈழத்திலிருந்தோ அல்லது புலம்பெயர்ந்தோ வந்தவர்களின் எழுத்துகளில் முற்றிலுமாகப் போராட்டத்தையோ அரசியலையோ எழுதுவது முன்நிபந்தனையாக சொல்ல முடியுமா?

போர் நிலத்திலே பிறந்திருக்காத ஒருவர் அல்லது அந்த நிலத்தையே பார்த்திராத ஒருவர் அந்த நிலத்தின் பிரச்சினையை பற்றி நல்ல ஒரு நாவலை எழுதி விட முடியும், ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும். இதெல்லாம் படைப்பாளியின் அறியும், வாசிக்கும், உணரும் ஆற்றலைச் சார்ந்தது. மிகச் சிறந்த உதாரணம், பிரசன்ன விதானகே. அவர் போர் நிகழ்ந்த வடக்கு – கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் அல்ல. தமிழர் அல்ல. தமிழ் மொழி அறியாதவர். ஆனால் அவர் ‘ஆகஸ்ட் சன்’ எனும் ஒரு சிறந்த திரைப்படத்தை எடுத்தார். யுத்த நிலத்தின் அவலங்களை ஆழமான திரைமொழியில் நம்மிடம் சொன்னார். அசோக ஹந்தகமவின் ‘இனி அவன்’ திரைப்படமும் அத்தகையதுதான்.

யுத்தத்திற்குள் வாழ்ந்ததால் மட்டுமே ஒரு சிறந்த நாவலையோ திரைப்படத்தையோ நிகழ்த்திவிட முடியாது. கலையமைதியும் சொல்வதில் அழகியலும் உள்ள படைப்பாளியால் மட்டுமே அதைச் சாதிக்க முடியும்.

இல்லை… நான் கேட்டது போர் நிகழ்ந்த ஊரில் இருந்து எழுத வரும் ஒருவனுக்கு போர் குறித்துதான் எழுத வேண்டும் எனும் முன் நிபந்தனை இருக்கிறதா?

கிடையாது. அவன் போர் குறித்த நினைவுகளை மீட்டிப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம். போரின் வடுக்கள் பலரையும் உளவியல்ரீதியாகக் கொன்றுள்ளன. எனவே அந்த நினைவுகளிலிருந்து விலகியிருக்க விரும்பலாம். அல்லது போர் நினைவுகளை எழுதுவதற்கான காலம் அவனளவில் கனியும்வரை காத்திருக்கலாம். எப்போதுமே அது குறித்து எழுதாமலும் போகலாம். இதெல்லாம் படைப்பாளியின் தேர்வும் சுதந்திரமும். இலக்கிய விமர்சகர் ஆகட்டும், சக எழுத்தாளராகட்டும், அரசியல்வாதியாகட்டும் அல்லது யார் ஆகட்டும் ஒரு இலக்கியவாதிக்கு நிபந்தனை விதிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

இளம் எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளர்கள் இதை எழுதலாமே என்று ஒரு நிபந்தனை மறைமுகமாக வைக்கிறார்களா?

இல்லை தம்பி… நான் சொல்கிறேனே, போரால் பாதிக்கப்பட்டுப் போர்ச் சூழலில் நேரில் இருந்து வந்து எழுதுபவர்கள்கூட போர் குறித்த சித்திரங்களை பொய்யும் புரட்டுமாக எழுதியதை நான் பார்த்து இருக்கிறேன். என்னுடைய இணையதளத்தில் அது குறித்துப் பல்வேறு கட்டுரைகளைப் பதிவேற்றி இருக்கிறேன். ஒவ்வொரு படைப்புமே அந்த எழுத்தாளருடைய அறத்தோடும் அவரது கலைத்திறனோடும் சம்பந்தப்பட்டது. கலை பிழைத்தால் அது செத்த பிரதி. அறம் பிழைத்தாலோ நச்சுப் பிரதி.

2009 இறுதி யுத்தத்திற்குப் பிந்தைய ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

ஆயுதப் போராட்டம் இனி ஈழத்தில் நிகழ வாய்ப்பில்லை. நான் சமீபத்தில் ஈழத்திற்கு சென்று வந்த வகையில், நண்பர்களோடு உரையாடிய வகையில் ,தொடர்ந்து கவனித்து வரும் வகையில் இலங்கையின் அரசியல் தலைவர்களோ அல்லது எந்த அறிவுஜீவிகளோ அல்லது தனி மனிதர்களோ யாருமே ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்தது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள அனைத்து இனங்களுக்குமே நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. ஏனெனில் போரால் எல்லா இனங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன. நாடு கடனில் மூழ்கிப் பஞ்சம் பெருகியது. இலங்கை வரலாற்றில் இல்லாத அளவு ஊழலை யுத்தத்தின் பெயரால் இலங்கை ஆட்சியாளர்கள் நிகழ்த்தினார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்ததும் மாற்று அரசியலுக்கான களங்கள் திறக்கப்பட்டன. இதனுடைய விளைவுதான் 2022-இல் நிகழ்ந்த ‘அரகலய’ போராட்டம். இந்தப் போராட்டத்தின் பின்னால் வெவ்வேறு அரசியல் சக்திகளின் கரங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இந்தப் போராட்டத்தில் பரந்துபட்ட மக்கள் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டார்கள். யுத்தத்தின் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்பட்ட ராஜபக்சேக்கள் அதிகாரத்திலிருந்தும் நாட்டிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்டார்கள். இந்தப் போராட்டத்தின் இறுதி விளைவுதான் இப்போது நடந்துள்ள ஆட்சிமாற்றம். மக்களின் எழுச்சியை ‘தேசிய மக்கள் சக்தி’ அமைப்பு சாமர்த்தியமாகக் கையாண்டு இப்போது பெரும்பான்மை பலத்துடன் இலங்கையின் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

தமிழர்களும் சரி ஏனைய சிறுபான்மை இனங்களும் சரி தங்களது அரசியல் – சமத்துவ உரிமைகளுக்காக இலங்கைத் தீவில் நீண்டகாலமாகப் பல்வேறு வழிகளில் போராடுகிறார்கள். இப்போது அமைந்துள்ள ‘தேசிய மக்கள் சக்தி’ அரசு சிங்கள இனவாதத்தை இதுவரை பேசவில்லை. நாட்டின் ஆட்சித்துறையிலும் அதிகாரிகள் மட்டங்களிலும் ஊழலை ஒழிப்பதில் இந்த அரசு இதுவரை முனைப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. ராணுவம் ஆக்கிரமித்திருந்த மக்கள் குடியிருப்புகளின் சில பகுதிகளில் ராணுவம் விலக்கிக்கொள்பட்டிருக்கிறது. எனினும் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் -குறிப்பாக முழுமையான அதிகாரங்களைக்கொண்ட மாகாண சுயாட்சி முறை – பற்றியெல்லாம் இந்த அரசும் மெத்தனமாகவே இருக்கிறது. அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருப்பது எல்லா வழிகளிலுமே ஆபத்தானது. முழுமையான மாகாண சுயாட்சி முறையை அமல்படுத்தவேண்டும் என்பதுவே இப்போது பெரும்பாலான தமிழ் அரசியல் தரப்புகளின் விருப்பமாக உள்ளது. ஆனால் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அமைப்புப் பலமில்லாதவர்களாகத் தமிழர்கள் அரசியல் கட்சிகள்ரீதியாகப் பிரிந்து கிடக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. சிங்களப் பகுதிகளில் நிகழ்ந்தது போலவே தமிழ்ப் பகுதிகளிலும் பழம் பெருஞ்சாளி அரசியல்வாதிகளுக்கு மக்கள் விடைகொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதிய திசை நோக்கி நகர வேண்டும். சிறுபான்மைத் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் – அவர்கள் நாட்டின் ஏனைய சிறுபான்மை இனங்களான முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களோடு இணைந்து செயற்படாவிட்டால் – முழு இலங்கைத் தீவுமே காலப் போக்கில் சிங்களமயமாகிவிடும். அதற்கான அறிகுறிகள் இப்போதே புலப்படத் தொடங்கிவிட்டன.

ஆனால், ஈழத் தமிழ் அரசியலை அதன் திசையைத் தீர்மானிக்கும் வலுவான அரசியல் சக்தி ஈழத்தில் தற்போது இல்லை. இந்த தவறு எங்கு நிகழ ஆரம்பித்தது என்றால்; யுத்தம் நடந்த 30 ஆண்டுகளில் ஜனநாயக வழி தேர்தல் முறை இங்கு இல்லாமல் போனது. குறிப்பாக வடக்கு -கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியங்களில் தேர்தல்கள் முறையாக நடைபெறவே இல்லை. அப்படி தேர்தல் நடந்தால்கூட புலிகள் சொல்பவர்கள்தான் வேட்பாளர்களாக இருந்தார்கள். புலிகள் சொல்பவர்களுக்குத்தான் மக்கள் பற்றினால் அல்லது அச்சத்தினால் ஓட்டளித்தார்கள். புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னால் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். மக்கள் அதை விருப்பப்பட்டு செய்ததும் உண்டு. ஆயுதமுனைக்கு அஞ்சியும் செய்ததுண்டு.

அதாவது ஜனநாயக கலாச்சாரத்தை யுத்தம் அழித்துவிட்டது. இதிலிருந்து மீண்டு வர எத்தனை வருடங்கள் ஆகும் என தெரியவில்லை. ஆனால் இதுவரை அதிலிருந்து மீண்டு வரவில்லை. என்னுடைய சிறு பிராயத்தில் நான் யாழ்ப்பாண நகரம் செல்லும்போது ஒருபுறம் சிறிய மேடையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருபுறம் கம்பன் கழகம் மேடை போட்டுப் பேசிக்கொண்டு இருப்பார்கள். நான்கு புறமும் நான்கு கட்சிகள் பேசிக்கொண்டிருக்கும். இங்கு தமிழகத்தில் இருந்து ‘திராவிட இயக்கப் பத்திரிகைகள்’ வரும். சீன அரசு வெளியிட்ட பரப்புரை வண்ணப் பத்திரிகைகள் வரும். வாசிப்புக்கு எண்ணற்ற வாசல்கள் திறந்து கிடந்தன. ஆனால், யுத்த காலத்தில் இவை யாவுமே தடைபட்டன. குமுதம், ஆனந்த விகடன்கூடக் கிடைக்காத சூழல் அது. திரைப்படங்கள்கூட வர முடியாத காலம் இருந்தது. உங்களுக்குத் தெரியும்… மனித சமுதாயம் உருவாகி எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஜனநாயகக் கலாச்சாரம் உருவானது. ஈழத்தில் மீண்டும் எப்போது ஜனநாயகக் கலாச்சாரம் தோன்றும் எனத் தெரியாது.

அரசியல் உரிமை, பண்பாட்டு உரிமை, சாதிய விடுதலை, பாலின விடுதலை குறித்தெல்லாம் நாம் இயங்கவேண்டுமெனில் அங்கே ஜனநாயகக் கலாச்சாரம் வலுவாகத் தோன்ற வேண்டும். அரசியலாளர்களும் அறிவாளர்களும் வெகுசனங்களும் ஜனநாயகக் கலாச்சாரத்தைப் பயில வேண்டும். ஜனநாயகம் இல்லாத எந்தப் போராட்டமும் தானும் அழிந்து தன்னுடன் உள்ளவர்களையும் அதலபாதாளத்தில் தள்ளிவிட்டதே இலங்கையின் வரலாறாக மட்டுமல்லாமல் உலக வரலாறாகவும் இருக்கிறது.

சமீபத்தில் இலங்கை மண் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஒன்றை சந்தித்தது. இந்தியா ‘சீனா’ வட அமெரிக்கா உட்பட இலங்கைக்கு ஆதரவு தருவதாக சொன்ன அனைத்து நாடுகளுமே மௌனம்தான் காத்தன. எனில் இவர்கள் போர்க்காலங்களில் ஆதரவு அளித்தது என்பது பாசாங்குதானா அல்லது அவர்களுக்கு வன்முறையின்மீது இருக்கும் குரூர குதூகலமா?

இதற்கான பதில் மிக நீண்டது. முதலில் வரலாற்றுச் சூழலை நாம் கசடறப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை சுதந்திரத்திற்குப் பின்பாக இந்தியாவின் ஒரு தொங்கு தசையாகவே இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை உண்மையிலேயே இந்தியாவின் மறைமுகக் காலனியே. இலங்கை மட்டுமல்லாமல் நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளின் நிலையும் அதுதான். இந்திய அரசின் வல்லாதிக்கக் கரங்கள் இந்தச் சின்னஞ்சிறிய நாடுகளின் மீது படர்ந்தேயிருக்கின்றன. பனிப்போர் காலத்தில் இந்திய நாடு ரஷ்ய முகாமில் இருந்தது. இலங்கையும் இந்தியாவைப் பின்பற்றி ரஷ்ய முகாமிலேயே இருந்தது. இவர்கள் ‘அணிசேரா நாடுகள்’ எனத் தங்களை அழைத்துக்கொண்டாலும் அது உண்மையல்ல. ரஷ்யாவின் கொள்கையைப் பின்பற்றிதான் இந்தியாவிலும் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இலங்கையும் இந்தியாவைப் பின்பற்றி அடக்கவொடுக்கமாக நடந்துகொண்டிருந்தது. 1971-இல் இலங்கையில் ஜே.வி.பி. இயக்கம் ஆயுதப் புரட்சி செய்தபோது, இலங்கை அரசைக் காப்பாற்ற இந்தியப் படைகளே நேரடியாக இலங்கையில் இறங்கி ஆயிரக்கணக்கான ஜே.வி.பி. உறுப்பினர்களைக் கொன்றுபோட்டன.

1988-இல் மாலத்தீவில் ஆயுதமுனையில் அரசைக் கவிழ்க்க முயற்சி நடந்தபோதும் மாலத்தீவு அரசைக் காப்பாற்ற இந்தியப் படைகளே விரைந்து சென்றன. சுருங்கச் சொன்னால் எல்லாவிதத்திலும் இலங்கை அரசு இந்திய வல்லாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டே இருந்தது.

இதை 1977-இல் இலங்கை அரசாங்கத்தின் தலைமைப் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன உடைத்துப்போட்டார். கடைந்தெடுத்த வலதுசாரி அரசியல்வாதியான அவர் இந்தியாவையும் மீறி அமெரிக்கச் சார்பு நிலை எடுத்தார். ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’விற்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டது. அதுவரையிருந்த சுயபொருளாதாரக் கொள்ளைக்கு முடிவு கட்டிய ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டார். இலங்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டன. சீனாவுடனான நல்லுறவையும் ஜே.ஆர். ஜெயவர்த்தன வலுப்படுத்திக்கொண்டார்.

இலங்கை அரசியலில் நிகழ்ந்த இந்தப் புதிய மாற்றங்கள் இந்திய அரசாங்கத்தையும் அதன் தலைவர் இந்திரா காந்தி அம்மையாரையும் ஆத்திரமூட்டின. இலங்கை அரசுக்குக்குக் குடைச்சலைக் கொடுத்து மீண்டும் இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென இந்திய ஆட்சியாளர்கள் முடிவெடுத்தார்கள். அவர்கள் அப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருந்த தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுத இயக்கங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்குத் தொந்தரவளிக்கத் திட்டமிட்டார்கள்.

1983- இல் இலங்கையில் நடந்த தமிழர்கள் மீதான இனவழிப்பைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கங்கள் எவ்வளவு முனைப்படைந்தனவோ அதேயளவுக்கு இந்திய அரசும் முனைப்படைந்தது. இந்திய அரசு நம்முடைய ஈழத்து இயக்கங்களை இந்தியாவுக்கு அழைத்து ராணுவப் பயிற்சியும் பணமும் வழங்கினார்கள். இலங்கை அதிபரோ ஒவ்வொரு பத்திரிகை அறிக்கையிலும் ‘இந்தியா தமிழ்ப் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறது’ என அழுது புலம்பினார். இந்திரா காந்தி அம்மையாரோ ‘இந்தியாவில் ஒரேயொரு ஈழத்துப் போராளி கூட இல்லை’ என்று சர்வதேச ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார். ஆனால் அப்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசம் போன்ற வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஈழத்துப் போராளிகளுக்கு இந்திய ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. போராளி இயக்கங்கள் இந்திய உளவுத்துறையினரின் நேரடிக் கண்காணிப்புக்குள் இருந்தனர். உண்மையில் நமது போராளிகளைச் சண்டைச் சேவல்களாக வளர்த்தெடுத்து இலங்கை அரசாங்கத்துக்குத் தொல்லை கொடுப்பதே இந்தியாவின் நோக்கமே தவிர ‘தமிழீழம்’ என்ற தனிநாட்டுக் கோரிக்கையை இந்திய அரசு ஒருபோதுமே ஆதரித்ததில்லை. இது ஈழப் போராளிகளுக்கும் தெரிந்தேயிருந்தது. புளொட் இயக்கம் ‘வங்கம் தந்த பாடம்’ என்றொரு சிறு பிரசுரத்தையும் வெளியிட்டிருந்தது. இந்தியா ஒருநாள் நம்மைக் கைவிடும் என்பதைப் புலிகளும் ஆரம்பம் முதலே உணர்ந்திருந்தார்கள். எதிர்பார்த்திருந்தது விரைவிலேயே நிகழ்ந்தது.

இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்ற ஈழப் போராளிகள் இலங்கையில் இறங்கி மும்முரமாகத் தாக்குதல்களைத் தொடங்கியதும் இலங்கை அரசு கதிகலங்கிவிட்டது. போராளிகளைச் சமாளிக்க முடியாத நிலையில் இலங்கை அரசு இந்தியாவிடம் சரண்புகுந்தது. இந்திய அரசாங்கத்தின் திட்டம் இவ்விதம் நிறைவேறியவுடன் இந்திய அரசு போராளிகளை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு நிர்ப்பந்தித்தது. அதுதான் 1985-இல் நிகழ்ந்த ‘திம்பு’ பேச்சுவார்த்தை.

உண்மையில், அப்போது எந்த ஈழ விடுதலை இயக்கமுமே பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. தனித் தமிழீழம் என்ற முடிவோடுதான் இருந்தார்கள். இலங்கை அரசும் பேச்சுவார்தையில் உளச்சுத்தியோடு இறங்கவில்லை. எனவே பேச்சுவார்த்தைகள் முறிந்துபோயின. பேச்சுவார்த்தைக்கு எதிராக ஈழத்திலே பரவலாகப் புலிகள் பரப்புரை செய்தார்கள். பரப்புரையின் ஒரு பகுதியாக வீதிதோறும் ‘விடுதலைக் காளி’ என்ற நாடகம் புலிகளால் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் நானும் நடித்துள்ளேன்.

திம்பு பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததும் மீண்டும் யுத்தம் உக்கிரமாக வெடித்தது. இந்திய அரசு இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசின் பாதுகாவலன் -பெரியண்ணன்- பாத்திரத்தை ஏற்றுக்கொண்டது. அது இப்போதுவரை தொடர்கிறது. 1987-இல் ஈழ விடுதலை இயக்கங்களின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய – இலங்கை உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. போராளிகள் ஆயுதங்களை ஒப்படைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஒப்பந்தத்தைக் கண்காணிக்க இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் மோதல் வெடித்தது. அமைதி காக்க வந்த படையைப் போல இந்திய ராணுவம் ஒருபோதும் நடந்துகொள்ளவே இல்லை. அது எங்களது மக்களை வகைதொகையின்றிக் கொன்றுதள்ளியது. பாலியல் வல்லுறவுகளும் கொள்ளைகளும் இந்திய அமைதிப்படையால் தமிழர் நிலம் முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்ற இயக்கங்கள் இந்தியாவின் துணைப்படைகளாக மாறி அவர்களும் தமிழர்களின் ரத்தத்தில் கைகளை நனைத்துக்கொண்டார்கள். அந்தக் காலப்பகுதியை நினைத்தால் இப்போதும் எனக்கு ரத்தம் உறைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளாக இந்திய அமைதிப்படையால் நடத்தப்பட்ட காலமது.

ஆனால், நான் இப்போது நிதானித்துப் பார்க்கும்போது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் புலிகள் ஏற்றுக்கொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்த மனிதப் பேரழிவுகள் நிகழ்ந்திருக்காது என்றே கருதுகிறேன். எடுத்துக்காட்டாக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பட்டினிப்போர் நடத்தி மரணித்த திலீபன் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் மரணித்த 650ஆவது போராளி. அதன் பின்பு முள்ளிவாய்க்கால்வரை ஏறக்குறைய 50 000 புலிகள் மரணித்திருப்பார்கள் என்றே கணிக்கிறேன். 1987-வரை பொது மக்கள் இழப்பு 3000 மற்றும் பிற விடுதலை இயக்கப் போராளிகளின் இழப்பு மொத்தமாக 1000வரை இருக்கும். இவ்வளவு அழிவோடு இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கலாம். முள்ளிவாய்க்கால் வரை நடந்த லட்சக்கணக்கான மனித இழப்பும் சொத்து அழிவும் இடப்பெயர்வும் புலப் பெயர்வும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அப்போது தமிழர்கள் – முஸ்லிம்களிடையே முரண்பாடு பெரிதாக ஏற்பட்டிருக்கவில்லை. வடக்கு – கிழக்கு அரசியல் என்ற பிரிவினையும் தோன்றியிருக்கவில்லை. மற்றைய ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் நடுவில் இவ்வளவு பகை தோன்றியிருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்திருக்கவில்லை. இந்தியா ஈழத் தமிழர்களுக்கு இந்தளவுக்குப் பகை நாடாக மாறவில்லை. தமிழகத்திலேயே இலங்கைத் தமிழர்கள்மீது சந்தேகமும் கசப்பும் தோன்றியிருக்கவில்லை. 80-களில் ஈழத்தவர்கள் தமிழகம் வரும்போது, தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக வரவேற்றார்கள். இப்போதோ தமிழகத்தில் ஈழத்தவர்களுக்கு ஒரு வாடகை வீடு எடுப்பதே பெரும் பிரச்சினையாக மாறிவிட்டிருக்கிறது. 1987 ஒப்பந்தத்தைப் புலிகள் ஏற்றிருந்தால் அரசியல் நிலைமைகள் ஈழத் தமிழ்களுக்குச் சாதகமாக மாறியிருக்கும். இன்றைக்கு வரைக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் அசைக்க முடியாத அரசியல் தலைவராக உயிரோடு இருந்து தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருப்பார். வடக்கு – கிழக்கு பிரிந்திருக்காது. புலிகள் சனநாயகத் தேர்தல் முறைகளிலேயே பெரும் வெற்றிகளைச் சாதித்திருப்பார்கள். மக்களைத் திரட்டக்கூடிய அளப்பெரும் சக்தி புலிகளுக்கு இருந்தது. மக்கள் போராட்டங்கள் மூலம் பல்வேறு அரசியல் வெற்றிகளைச் சாதித்திருப்பார்கள். அவ்வாறான ஒரு மக்கள் போராட்டத்தின் வழியாகத்தானே ராஜபக்சேக்கள் பதவிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

ஆனால், புலிகள் யுத்தம் ஒன்றே போராட்ட வழியென வரித்திருந்தார்கள். தமிழீழத்துக்கும் குறைவான எந்தத் தீர்வையும் உளசுத்தியாகப் பரிசீலிக்கக்கூடப் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. பேச்சுவார்த்தைக் காலங்களை யுத்தத்திற்கான தயாரிப்புக் காலங்களாகவும் தமிழர்களிலுள்ள தமது எதிரிகளைக் கொன்றொழிக்கும் வாய்ப்பாகவுமே புலிகள் பயன்படுத்தினார்கள். 2002 -2006 பேச்சுவார்த்தைக் காலத்தில் மட்டுமே புலிகள் நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கொன்றொழித்தார்கள்.

எல்லாப் பக்கங்களும் தவறுகள் நிகழ்ந்தன. இலங்கை அரசு – புலிகள் இருதரப்புக்குமே சமாதானத்தின்மீது நாட்டமிருக்கவில்லை. இந்தியாவோ சீனாவோ அல்லது மேற்கு நாடுகளோ இலங்கையில் தலையிட்டது அவர்களது நலன் சார்ந்த விஷயங்களே.

உங்களின் கேள்விக்கு வருகிறேன்….இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படத் தொடங்கி வெகுநாட்களாகின்றன. இலங்கை திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டது, போர், அரசியல்வாதிகளின் ஊழல் எனப் பல்வேறு காரணங்களால் இலங்கை பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும் எந்த ஆப்ரிக்க – ஆசியா நாட்டை வளர்ச்சியடைந்த நாடுகள் காப்பாற்றியிருக்கின்றன? ‘தவித்த முயல் அடிப்பது’ என்றொரு சொலவடை உண்டு. இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் தவிக்கும் போது, நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் இலங்கையை மேலும் கொள்ளையடிக்கவே திட்டமிட்டன. உலக நாணய நிதியம் இலங்கை மீது மேலும் பல அழுத்தங்களைச் சுமத்தியிருக்கிறது. மக்களுக்கான மானியங்களையும் இலவசங்களையும் வெட்டச் சொல்கிறது. அரசியல்வாதிகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்குமான விலையைச் செலுத்துமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

போருக்குப் பிந்தைய முன்னாள் போராளிகளின் வாழ்க்கை குறித்த பல தகவல்கள் சொல்லப்படுகின்றன. படுகொலைகளிலிருந்து மீண்டவர்களின் இன்றைய நிலை என்னவாக இருக்கிறது?

முன்னாள் போராளிகள் அனைவரையும் ஈழத் தமிழ்ச் சமூகமும் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் கைவிட்டிருக்கிறது. தனிநபர்களாகச் சிலர் முன்னாள் போராளிகளில் கரிசனம் கொண்டு சில உதவிகளைச் செய்துவருகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அரசியல்ரீதியாக முன்னாள் போராளிகள் முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்த அரசியல் கட்சியான ‘ஜனநாயக போராளிகள் கட்சி’க்குப் பொதுச் சமூகத்திடம் எள்ளளவும் ஆதரவில்லை. முன்னாள் போராளிகளில் பலர் ஏழ்மையில் செத்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவ உதவியோ சரியான செயற்கை அவயங்களோ கிடைக்காமல் பரிதவிக்கிறார்கள் என்பதை நீங்கள் ஏற்கனவே பல்வேறு ஊடகங்கள் வழியாக அறிந்திருக்கலாம். இந்தக் கொடுமைகளை நான் நேரிலேயே கண்டுள்ளேன்.

1998-இல் நான் ‘தேவதை சொன்ன கதை’ என்றொரு சிறுகதையை எழுதினேன். கதையில் 17 வயதான ஒரு வியட்நாம் பெண்ணைத் தாய்லாந்துப் பின்புலத்தில் சித்திரித்திருப்பேன். வியட்நாமில் வசிக்கும் அவளுடைய அம்மாவிற்கு இரண்டு கைகளும் கிடையாது. அந்தத் தாய் வியட்நாம் போரில் ஒரு விடுதலைப் போராளியாக இருந்து தன் கைகளை இழந்து இருப்பவர். களத்தில் இருக்கும் பெண் போராளிகள் கைகளில் ஆயுதம் ஏந்துவதால் மட்டும் பெண்விடுதலை சாத்தியம் கிடையாது, அரசியல்ரீதியான பாலின விடுதலை குறித்த அறிவு அவர்களுக்குக் கிடைக்காத பட்சத்தில் போர் முடிந்து ஆயுதங்கள் களையப்படும்போது, பெண் மீண்டும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் அடிமைப்படுத்தப்படுவாள், கொடுமைப்படுத்தப்படுவாள் எனச் சொல்லியிருப்பேன். அதுதான் இன்று ஈழத்தில் முன்னாள் பெண் போராளிகளுக்கு நிகழ்கிறது.

ஒரு பெண்ணிடமோ ஒரு இளைஞனிடமோ சரியான அரசியல் -சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் கையில் ஆயுதத்தைத் தருவது மூலமாக மட்டும் எதைத்தான் நிகழ்த்தி விட முடியும்? அவர்களுக்கு முறையான அரசியல் வழிகாட்டுதல் இல்லாமல் ஆயுதம் வழங்கப்படும்போது அவர்கள் தைரியமாக உணர்வார்கள், வீரமாக உணர்வார்கள். ஆனால், அவர்களிடமிருந்து ஆயுதம் பறிக்கப்பட்டால் அவர்கள் நிலை என்ன ஆகிறது?

புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ தன்வரலாற்று நூல் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது. சரியான அரசியலற்ற ஆயுதம் எத்தகைய வீழ்ச்சிக்குத் தமிழினியையும் அவரைப் போன்றவர்களையும் இட்டுச்சென்றது என்பதை அந்த நூலில் நாங்கள் வாசித்து அறிந்துகொள்ளலாம். இந்தவகையில் முன்னாள் போராளியான தமிழ்க்கவி அம்மாவின் எழுத்துகளும் இந்த அவல நிலையை எடுத்துக் கூறியுள்ளன என்பதையும் குறித்துக்கொள்ளலாம். பெண்களை ஆயுதம் ஏந்த வைப்பதால் மட்டுமே அவர்களுக்கான சமூக விடுதலை சாத்தியப்படுவதில்லை.

இன்னொரு கொடுமையான நெஞ்சம் பதைபதைக்க வைக்கும் செய்தியுமுண்டு. இறுதி யுத்தத்தின் போது, ராணுவத்திடம் சரணடைந்த போராளிகளை அல்லது ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட போராளிகளை இன்றைக்கும் தமிழ்த் தேசியவாதிகளில் பல தரப்புகள் ‘துரோகி’ என்றே தீர்ப்பிடுகின்றன. குறிப்பாகச் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட முன்னாள் பெண் புலிப்போராளிகளை ‘சோரம் போனவர்கள்’, ‘ராணுவத்தின் குறியைச் சப்பியவர்கள்’ என்றெல்லாம் வசைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அகரமுதல்வன் எழுதிய ‘சாகாள்’ என்ற கதையில் புலிகளின் மகளிரணித் தலைவியான – புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகிச் சில காலங்களிலேயே புற்றுநோய்க்குப் பலியாகி மறைந்த தமிழினியை இவ்விதமே சித்திரிக்கிறார். தமிழினி இந்தப் போரில் நீண்ட காலம் களத்தில் நின்றவர். அவர் கைது செய்யப்பட்டார். ஒளிவுமறைவில்லாமல் தனது வரலாறைப் புத்தகமாக எழுதினார். அதிலே புலிகள் அமைப்புக் குறித்த விமர்சனங்களையும் வைத்திருப்பதால் அகரமுதல்வனுக்கு ஏற்பட்ட வன்மமே இவ்விதம் வக்கிரமாக வடிந்திருக்கிறது. தமிழினி போன்ற போராளியை இவ்விதம் சித்திரிக்க அகரமுதல்வனுக்கு என்ன நியாயமிருக்கிறது? இந்தப் போராட்டத்தில் ஒரு துரும்பையாவது அகரமுதல்வன் கிள்ளிப் போட்டிருப்பாரா? பட்டையும் கொட்டையும் போட்டுக்கொண்டு இலக்கியத் தரகு செய்பவருக்கு இத்தகைய நெஞ்சழுத்தத்தை எது கொடுத்திருக்கிறது? அது தமிழ்த் தேசியவாதத்தின் சீரழிந்த புத்தியிலிருந்து பிறக்கிறது.

கைது செய்யப்பட்ட ஒவ்வொரு முன்னாள் போராளியிடமும் ‘நீ ஏன் சயனைடு சாப்பிடவில்லை?’ என்றொரு வன்மக் கேள்வி தமிழ்த் தேசியத் தரகர்களால் கேட்கப்படுகிறது. இந்த கேள்விக்கு ஒரு முன்னாள் போராளி பதிலளித்திருந்ததை எங்கேயோ படித்தேன். ‘நான் உயிருக்குத் துணிந்துதான் போராட வந்தேன். அதற்காகத்தான் கழுத்தில் சயனைடைக் கட்டி இருந்தேன். ஒரு லட்சியத்திற்காக உயிர் நீக்கத் தயாராகவே இருந்தேன். ஆனால், அந்த லட்சியமே இல்லாது போனபின்பு நான் ஏன் என் உயிரை விட வேண்டும்?’ இது எவ்வளவு எளிமையான அதேவேளையில் நேர்மையான ஒரு பதில். இது கூடவா இவர்களுக்குப் புரியவில்லை. இவர்களுக்கெல்லாம் அவர்கள் ஏன் சாகவில்லை என்னும் கேவலமான கோபம் இருக்கிறது. இதுவா தமிழ் தேசியம்? இதுவா ஒரு எழுத்தாளன் செய்யும் வேலை? நீங்கள் அந்த நிலத்திலிருந்து வந்ததால் மட்டுமே நல்ல இலக்கியத்தை எழுதிவிட முடியாது.

தமிழ்நாட்டின் சீமான் போன்றவர்கள் ஈழத் தமிழர்களை வைத்து முன்னெடுத்த அரசியல் அதற்கு புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு இவற்றை எப்படி பார்க்கிறீர்கள்?

2006-ஆம் ஆண்டிலேயே ‘நாம் தமிழர் கட்சி’ ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே சீமானின் ‘தம்பி’ திரைப்படத்தை முன்வைத்து நான் நீண்டதொரு கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தேன். அந்தக் கட்டுரையின் இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன்:

“ஆம்ஸ்ரர்டாமில் கஞ்சா விற்கும் கோப்பிக் கடைகளின் முகப்பில் பொப் மார்லியின் உருவத்தை வணிக இலச்சினையாகப் பொறித்திருப்பார்கள். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பெனியன்களில் சே குவேராவின் உருவத்தை அச்சிட்டுச் சந்தைப்படுத்துவார்கள். அதே போல் இயக்குநர் சீமானுக்குப் பிரபாகரன் ஒரு வியாபார இலச்சினை. இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆதாயம் அடைபவர்கள் பலர். ஆயுத வியாபாரிகள், அரசுத் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் ஒரு புறம் யுத்தத்தின் பெயரால் நிதியைச் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ்த் தேசியத்தை முழக்கமிடும் பத்திரிகைகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அறிவுஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டமிடலாளர்கள், தமிழ்த் தேசியத்தின் வெளிநாட்டு முகவர்கள், கோயில் முதலாளிகள் போன்றவர்களும் ஈழப் போரட்டத்தின் பெயரால் பெரும் பொருளியல் ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இயக்குனர் சீமானும் தன் பங்குக்கு வாய் நனைக்க வந்துள்ளார்.” இந்தக் கட்டுரை எனது ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ என்ற நூலிலும் எனது வலைத்தளத்திலும் உள்ளது.

‘தம்பி’ திரைப்படத்தைப் பெரியாருக்குச் சமர்ப்பிக்கிறேன் என்று சீமான் சொல்லியிருந்தார். சீமானுக்குப் பெரியாரியம் குறித்த அறிவே கிடையாது எனச் சொன்னேன். அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை? இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர் மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே… இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார் ? என்று கேட்டிருந்தேன். அந்தக் கட்டுரைதான் தமிழகத் தமிழ்த் தேசியர்கள் என் மீது பெருமளவு கடுப்புக்கொள்ளக் காரணமாகவும் இருந்தது. எனினும் இருபது வருடங்கள் கழித்தாவது அவர்கள் சீமானைப் பற்றிப் புரிந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

ஈழத்திலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழும் தமிழர்கள் தமிழ்த் தேசியவாதத்தையும் அதனால் நிகழ்ந்த உக்கிரமான போரையும் உயிரைத் துச்சமென மதித்துக் களமாடிய ஈழ விடுதலை இயக்கங்களையும் பார்த்தவர்கள். இந்தச் சுக துக்கங்களில் பங்கெடுத்தெவர்கள். சீமானின் ஆமைக்கறி அரசியலின் யோக்கியதை அவர்களுக்குப் புரியாதா என்ன? எனவே ஈழத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் சீமானுக்கோ வேறெந்தத் தமிழகத் தமிழ்த் தேசியம் பேசும் நபர்களுக்கோ எந்தவித ஆதரவும் கிடையாது. விதிவிலக்காக ஒருசில தனிநபர்கள் சீமான் போன்றவர்களை ஆதரிக்கலாம். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எல்லாச் சமூகங்களிலும் இவ்விதக் கிறுக்குகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், இவர்களால் ஈழத்து அரசியலில் ஒரு துரும்பையும் அசைத்துப்போட முடியாது. அது சீமானாலும் முடியாது!

தமிழகத் தமிழ்த் தேசியர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, சில நாட்களுக்கு முன்பு திருமுருகன் காந்தி என்னைச் சாடி எழுதிய முகநூல் பதிவொன்று என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் தீபச்செல்வன், குணா கவியழகன், தமிழ்நதி, வாசு முருகவேல், சயந்தன் என்றொரு ஈழ எழுத்தாளர் பட்டியலைக் குறிப்பிட்டு, அவர்களுக்குத் தமிழகத்தில் கிடைக்காத கவனமும் மேடைகளும் ஷோபாசக்திக்குக் கிடைக்கிறது எனப் பொருமியிருந்தார். என்னுடைய எழுத்து இந்தியப் பார்ப்பனிய ஆளும் வர்க்கத்திற்கு உவப்பானதாலேயே இதுவெல்லாம் நடக்கிறது எனச் சொல்லியிருந்தார். திருமுருகன் காந்தி சின்னச் சீமான் போன்று பேசுவது உண்மையிலேயே எனக்குக் கவலையளிக்கிறது. எங்கே போகிறார்கள் இந்தத் தமிழ்த் தேசியவாதிகள்? திருமுருகன் காந்தியைத் தமிழ்த் தேசியர் என்று சொல்லலாமா என்றுகூட எனக்குத் தயக்கமாயிருக்கிறது. சீமானாவது நெய்தல் படை கட்டும் திட்டம் வாயில் வைத்திருக்கிறார். ஆனால், திருமுருகன் காந்தியின் தமிழ்த் தேசியம் எதை நோக்கியது? தனித் தமிழ்நாடா? இல்லாமல் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைப் பெற்றுக்கொள்வதுதான் அவரது அரசியல் வேலைத் திட்டமென்றால் அதற்குத் தமிழ்த் தேசிய அரசியல் என்றா பெயர்? இவ்வாறாக அவதூறுகளைப் பரப்புவது ஒன்றேதான் தமிழகத் தமிழ்த் தேசியத்தின் வேலையாகக் குறுகிவிட்டதோ என்று அய்யப்படுவதில் தவறொன்றுமில்லை.

திருமுருகன் சொன்ன பட்டியலில் உள்ள எந்த எழுத்தாளர்கள் தங்களது நேர்காணல்களில், மேடை உரைகளில் இந்திய அரசை எதிர்த்துப் பேசியுள்ளார்கள்? தமிழ்நாட்டில் நடக்கும் அல்லது இந்தியாவில் நடக்கும் மதவாத அரசியல் – சாதிய அரசியல் குறித்தெல்லாம் இவர்கள் எங்காவது வாயைத் திறந்து முனகியாவது உள்ளார்களா? நான் கால் நூற்றாண்டாக இவை குறித்தெல்லாம் தமிழ் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் ஆங்கில ஊடகங்களிலும் பேசி வருகிறேன். தீபச்செல்வன் தனது நேர்காணல் ஒன்றில் ‘இந்தியாவுக்கு ஈழத் தமிழர்களே உண்மையான நட்புச் சக்தி ‘ என்றெல்லாம் சொல்லி இந்திய அரசை வெள்ளையடித்தது சில காலங்களுக்கு முன்பு நடந்ததே… சிவசேனை சச்சிதானந்தனும் காசி ஆனந்தனும் முன்வைத்திருக்கும் ஈழத்துக் காவி அரசியலில் இருந்து எங்கு இவர்கள் வேறுபாடுகிறார்கள்? இவர்களெல்லாம் பெரியாரைக் குறித்து, பேரறிஞர் அண்ணாவைக் குறித்து, கலைஞரைக் குறித்து எங்காவது வாய்திறந்து பேசியுள்ளார்களா? திராவிட இயக்க ஒவ்வாமை நோயில் வீழ்ந்திருப்பவர்கள் இவர்கள். கலைஞர் மு. கருணாநிதி மறைந்தபோது ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்புகளைக் குறிப்பிட்டுக் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தித் தமிழ் – ஆங்கில ஊடகங்களில் கட்டுரை எழுதிய ஒரேயொரு ஈழத் தமிழன் நான் மட்டுமே.

அண்மையில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சீமான் கலந்துகொண்ட ‘தமிழ்த் தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட மறுக்கப்பட்டு வேறொரு பாடல் பாடப்பட்டபோது, சீமானுக்கும் இடும்பாவனம் கார்த்திக்குக்கும் இடையில் விறைத்துக்கொண்டு நின்றவர் இதே தீபச்செல்வன்தானே! அந்த மேடையில் திராவிட இயக்கத்தை சீமான் தரம் தாழ்ந்து வசைபாடியபோது, இதழோரப் புன்னகையுடன் அமைதியாக இருந்தவர் இதே தீபச்செல்வன்தானே!

ஆனால், எனது வரலாறு அதுவல்ல. கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் பெரியாரிய இயக்கங்களுடனும் த.மு.எ.க.ச. போன்ற இடது அமைப்புகளுடனும் தலித் அரசியல் – பண்பாட்டு இயக்கங்களுடனும் சேர்ந்து பயணித்துக்கொண்டிருப்பவன் நான். அவர்களது மேடைகள்தோறும், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்துப் பேசுபவன் நான். நேற்றுக்கூட தஞ்சையில் ‘மக்கள் அதிகாரம்’ தோழர் காளியப்பனுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ஆருடன் ஒரே மேடையில் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

இந்தியப் பார்ப்பனிய அரசு அவர் குறிப்பிட்ட பட்டியலிலுள்ள எழுத்தாளர்களுக்குக் கெடுபிடிகள் விதிக்கிறதாம். ஆனால், என்னைத் தங்கு தடையின்றி இந்தியாவுக்கு வர அனுமதிக்கிறதாம் என்று இன்னொரு புரளியையும் திருமுருகன் காந்தி தனது பதிவில் கிளப்பிவிட்டிருக்கிறார். இந்தியா வருவதற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் எனக்கு என்னென்ன சிக்கல்கள், கண்காணிப்புகள் இருக்கின்றன என்பதை திருமுருகன் காந்தி அறியமாட்டார். அறிய வேண்டுமென்றால் நேற்று என்னை வைத்துத் தஞ்சையில் கூட்டம் நடத்திய த.மு.எ.க.ச. தோழர்களிடமும் எனது நூல்களைப் பதிப்பிப்பவர்களிடமும் அவர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இல்லாவிட்டால் அவரது பட்டியலிலுள்ள சயந்தனிடம் கேட்டால் கூட விரிவாகச் சொல்வார்.

திராவிட இயக்க அரசியல் ஆதரவில் மட்டுமல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலிலும் நான் திருமுருகன் காந்திக்கு மூத்தவன். தமிழ்த் தேசியம் என்று எச்சில் தெறிக்க வாயால் முழக்கமிட்டது மட்டுமல்ல என் வரலாறு. கையில் கருவியுடன் களத்தில் நின்று எல்லாம் பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். என்மீது பார்ப்பனியச் சாய்வு, இந்திய அரசு சாய்வு என்றேல்லாம் பழி சொல்ல திருமுருகன் காந்திக்கு எந்த நியாயமுமில்லை. மொத்தத்தில் ஒன்றேயொன்றுதான்… இலக்கு எதுவெனத் தெரியாமல் தமிழ்த் தேசியம் எனப் பிதற்றிக்கொண்டிருந்தால் அது அவதூறு அரசியலில்தான் கொண்டு வந்து நிறுத்தும். பெரிய சீமான் பெரிய உதாரணம்.

இலங்கை அரசின்மீதான போர்க்குற்ற விசாரணைக்கான நிர்ப்பந்தங்கள் ஏன் நீர்த்துப்போயின?

இலங்கை அரசின்மீது சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடக்காது, தமிழ்த் தேசிய வாயாடிகள் சொல்லியது போன்று ராஜபக்சேக்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுதப்படமாட்டார்கள் என்பதையெல்லாம் நான் 2009- தொடக்கமே சொல்லிவருகிறேன்.

ஈழத்தில் எத்தனை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உங்களுக்கும் எனக்கும் சரியான கணக்குத் தெரியாது. இதைத்தான் ‘Still Counting the Dead’ என நூலாக பிரான்ஸிஸ் ஹாரிசன் எழுதியிருந்தார். அந்த நூலின் மலையாளப் பதிப்புக்கு நான்தான் முன்னுரை எழுதியிருக்கிறேன்.

ஆனால், எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது ஐ.நா.விற்குத் தெரியும். அமெரிக்காவிற்குத் தெரியும். மேற்கு நாடுகளுக்குத் தெரியும். இந்த இனவழிப்பைத் தடுநிறுத்த இவர்கள் யாருமே முயற்சி எடுக்கவில்லையே. புலிகளை அழித்தொழிப்பது என்ற இந்த நாடுகளது கூட்டுத்திட்டத்தில் மக்கள் அழிந்துபோனதை இந்த நாடுகள் பொருட்படுத்தவேயில்லை. இந்த மேற்கு நாடுகள் நியாயவாதிகளா என்ன? ஐ.நா. அமைப்புப் போன்ற சில மனிதவுரிமை அமைப்புகள் நியாயமாகச் செயற்பட முயன்றாலும் இந்த அமைப்புகளால் அமெரிக்க – மேற்கு வல்லாதிக்க நாடுகளை மீறிச் செயற்படமுடியாது. இதனால்தான் ஹியூகோ சாவேஸ் ஐ.நா மன்றத்தில் உரையாற்றியபோது ஐ.நாவின் இருப்பிடத்தை லத்தின் அமெரிக்க நாடொன்றுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

மேற்கு வல்லாதிக்க நாடுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பணியாத அரசியல் தலைவர்களும் போராளிகளும் வேண்டுமானால் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படலாம். இலங்கையின் ராஜபக்சேக்கள் வல்லாதிக்க சக்திகளின் ஏவலாளிகள். அடிவருடிகள். அவர்களைப் பாதுகாக்க இந்தியா, சீனா மட்டுமல்லாமல் பல மேற்கு நாடுகளும் தயாராக உள்ளன.

எனவே போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச அளவில் நடைபெற வாய்ப்பேயில்லை. இலங்கை அரசே போர்க்குற்ற உள்ளக விசாரணையைச் செய்துகொள்ளலாம் என்றுதான் வல்லாதிக்க நாடுகள் சொல்லியுள்ளன. அந்த விசாரணை எவ்வாறு அநீதியாக நடக்கும் என்பதை எனது ‘மிக உள்ளக விசாரணை’ கதையில் எழுதியுள்ளேன். இந்தக் கதை சிங்களத்திலும் வெளியாகியிருக்கிறது.

வரலாற்றில் ஆயுதப் போராட்டங்களின் காலம் முடிந்துவிட்டன என்றும் இனி ஜனநாயகப்பூர்வமான பேச்சுவார்த்தைகளே தீர்வு என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளீர்கள், அதன் காரணம் என்ன?

நான் இலங்கையில் நடைபெற்ற ஜே.வி.பி-யின் ஆயுத எழுச்சியைப் பார்த்தவன். தமிழ் விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தவன்.

ஒருகாலத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து எழுதி இருக்கிறேன். என்னுடைய ‘தேசத்துரோகி’ சிறுகதைத்தொகுப்பின் முகப்பில் ‘நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி’ என்று எழுதி இருக்கிறேன். ஆனால், என்னுடைய தொடர்ந்த தேடலாலும் அனுபவத்தாலும் ஆயுதப் போராட்டம் எந்தவகையில் நோக்கினாலும் தவறு என இப்போது சொல்கிறேன். வன்முறை அரசியல் தவறு என்பதைத்தான் புத்தரும் காந்தியாரும் பெரியாரும் அம்பேத்கரும் முன்வைத்தார்கள். நம்மில் பலர் இன்னும்கூட அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்து சேரவில்லை.

கடந்த 50 வருடங்களில் உலகெங்கும் நடந்த ஆயுதப் போராட்டங்களில் ஆயுதத்தை ஏந்திய இயக்கங்கள் மட்டுமல்லாமல் அதை ஆதரித்த மக்களும் அந்தப் போராட்டங்கள் நடத்த பிரதேசங்களும் பெருமளவு அழிக்கப்பட்டதுதான் உலக வரலாறாக இருக்கிறது. இன்றைய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிப்பதற்கு உலக அரசுகள் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து நிற்கின்றன. இது குறித்து அந்த நாடுகளிடையே உடன்படிக்கைகளும் உண்டு. எனவே போராடும் இயக்கத்தை அந்த நாட்டு அரசு மட்டும் அழிப்பதில்லாமல் உலக நாடுகளும் சேர்ந்தே அழிப்பதுதான் இப்பொழுது நிலைமையாக இருக்கிறது. ஆயுதம் ஏந்திப் போராடுபவர்கள் எந்த லட்சியத்திற்காகப் போராடுகிறார்களோ அந்த லட்சியமும் சேர்ந்து அழிக்கப்படுகிறது. இலங்கையில் அதுதான் நடந்தது.

நாம் இந்த வரலாற்றுப் பாடங்களின் வழியாகத்தான் இனி நகர்ந்தாக வேண்டும். புலிகள் முப்பது வருடங்களாக உக்கிரமாக ஆயுதமேந்தி போராடியும் இலங்கை அரசாங்கத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. ஜே.வி.பி. இயக்கம் இரண்டு தடவை ஆயுதக் கிளர்ச்சியை நடத்திப் பெரும் இழப்புகளைச் சந்தித்தார்களே ஒழிய இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியவில்லை. ஒவ்வொரு தருணங்களிலும் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் களத்தில் இறங்கின. போராட்ட இயக்கங்களுக்கு உலகில் எந்த நாடுமே ஆதரவாக இருக்கவில்லை.

இதேவேளையில் மக்கள் திரண்டு நடத்தும் ஆயுதவழியற்ற அரசியல் போராட்டங்கள் அண்மைக்காலங்களில் நிறைய வெற்றிகளைச் சாதித்து வருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். எகிப்திலும் துனிசியாவிலும் மட்டுமல்லாமல் இலங்கையில் கூட 2022-இல் நிகழ்ந்த மக்களின் ‘அரகலய’ போராட்டம் வெற்றி பெற்றது. ஆயுதங்களால் துரத்த முடியாத யுத்தத்தின் வெற்றி நாயகர்களான ராஜபக்சேக்களை மக்கள் போராட்டம் அரியணையிலிருந்து துரத்தியது. இந்த மக்கள் போராட்டங்களின் பின்புலத்தில் சில அரசியல்சக்திகள் மறைவாக இருப்பதையும் மறைப்பதற்கில்லை. எனினும் மக்கள் பங்கெடுக்கும் அரசியல் போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வெற்றியின் விளைவாகத்தான் இன்றைக்கு ‘தேசிய மக்கள் சக்தி’ அமைப்பு இலங்கையின் ஆட்சியதிகாரத்தைப் பெரும்பான்மை வலுவுடனும் பல்லின மக்களின் ஆதரவோடும் கைப்பற்றியுள்ளது.

ஆகவே மக்களின் அறப் போராட்டங்கள் இன்றும் வெற்றி பெறுகின்றன. ஆயுதமேந்துவதில் எந்த நன்மையும் எவருக்கும் வாய்க்காது என்பதையே வரலாறு நமக்குத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. இன்றைக்கு ஈழத்தில் இருக்கும் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அறிஞர்களோ ஏன் முன்னாள் புலிப் போராளிகள் கூட ஆயுதப் போராட்டத்தை முன்மொழிவதில்லை. நான்காம் கட்ட ஈழப்போர் – பிரபாகரன் திரும்ப வருவார் – பிரபாகரனின் மகள் துவாரகா திரும்ப வந்திருக்கிறார் என்றெல்லாம் தமிழகத்திலுள்ள சில தமிழ்த் தேசியர்கள் அறைகூவினாலும் ஈழத்து மக்கள் தங்கள் அனுபவங்களினதும் வலிகளினதும் வழியாக ஆயுதமற்ற அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் விலகிக்கொண்டே வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதையே காட்டுகின்றன.

ஈழத் தமிழ் அகதிகள் இன்று உலகம் முழுக்க எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் என்ன? முக்கியமாக, அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரித்திருக்கின்றன. அக்குழந்தைகளுக்காக என்னென்ன சாத்தியங்கள் உள்ளன? என்னென்ன சாத்தியப்படுத்த வேண்டும்?

இன்று இந்தியாவில் பல்வேறு ஈழத்து அகதிகளும் அவர்களது பிள்ளைகளும் எந்தவித அடிப்படை உரிமைகளுமற்று வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமை என்பது எட்ட முடியாத கனவாகவே அவர்களுக்கு இருக்கிறது. தன் சொந்த மக்களிடமே அக்கறை காட்டாமல் அம்பானி -அதானிக்குச் சேவகம் செய்து மக்களை வரிகளிலும் துன்பங்களிலும் ஏழ்மையிலும் மூழ்கடிக்கும் இந்திய அரசு ஈழத்து அகதிகளுக்கா வாழ்வளிக்கப் போகிறது? எனவே இங்கே உள்ள ஈழத்து அகதிகளின் வாழ்க்கை மிக மோசமாகவும் குறிப்பாக இங்கேயே பிறந்த இரண்டாம் தலைமுறை அகதிகளின் வாழ்க்கை எதிர்காலமற்ற கேள்விக்குறியாகவுமே இருக்கிறது.

ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழ அகதிகளின் முதல் தலைமுறை மிகவும் கஷ்டப்பட்டார்கள். மொழி தெரியாது, கலாச்சாரம் தெரியாது. காலநிலை புதிது என்றெல்லாம் சிரமங்களிருந்தன. ஆனால், இரண்டாம் தலைமுறையினர் அங்கே அந்த நாட்டு மொழியில்தான் படிக்கிறார்கள். அவர்களது தாய்மொழி அந்த நாடுகளின் மொழியாகிப் போனது. பிரெஞ்சிலும் ஜெர்மனிலும்தான் சிந்திக்கிறார்கள். தமது பெற்றோரிடம் பேசும்போது சிரமப்பட்டுத் தமிழில் பேசுகிறார்கள். இரண்டாம் தலைமுறை அகதி ஒருவன் தன் தோல் கருப்பாக இருந்தாலும் தன்னை ஒரு பிரெஞ்சுக்காரனாகவோ கனடாக்காரனாகவோதான் உணர்கிறான். அந்த நாடுகளில் அனைவருக்குமே ஏறக்குறைய இலவச கல்விதான். எனவே அங்கு ஈழத்துப் பெற்றோர்கள் ஒரு உணவக ஊழியராக இருந்தாலும் தூய்மைப் பணியாளராக இருந்தால் கூட பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த தடையும் கிடையாது. எனவே அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் கல்வி ரீதியாகவும் சரி, பண்பாட்டு ரீதியாகவும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி நன்றாகத்தான் இருக்கிறது. அவர்கள் தங்களது வேர்களையும் மொழிகளையும் மறக்கிறார்கள் என்றால் அது எல்லா இடத்திலும்தான் இருக்கிறது. இங்கு தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டால் எல்லாத் தமிழ் பிள்ளைகளுமா இலக்கியத்தை நோக்கிப் போகிறார்கள்? எல்லோருமா அரசியல் – மொழி உணர்வோடு சமூகப் பிரச்சனைகளை நோக்கி வருகிறார்கள்? ஒரு குறிப்பிட்ட பிள்ளைகள் மட்டுமே இவற்றில் அக்கறை கொண்டுள்ளார்கள். அதுபோலவேதான் அங்குள்ள பிள்ளைகளில் சிலர் தன் மொழி குறித்த அக்கறை, தன் மரபு குறித்து அக்கறை, தன் தாய்நாடு குறித்த அக்கறையோடு இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்க் கலாச்சாரம் – பண்பாடு என்ற அக்கறையில் சாதியத்திலும் மதவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் வீழ்ந்துவிடாமல் இருக்கவேண்டும் எனப் பெரியார் எச்சரிப்பார். அந்த எச்சரிக்கை உணர்வு நம் அனைவருக்கும் வேண்டும்.

பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இன்னும் சாதி மீதான பற்று இருக்கிறதா?

இதைப் பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்கள் ஒரு கட்டுரையில் விளக்கியிருப்பார். ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து 30 வருடங்கள் ஆனாலும் அந்நாட்டு குடிமக்கள் ஆனாலும் தமிழ்த் தேசியவாதத்தைத் துறக்காமலேயே வாழ்கிறார்கள். புலம் பெயர்ந்ததால் தமிழ்த் தேசியவாதச் சிந்தனை அழியவில்லை. எனவே புலம்பெயர்ந்ததால் மட்டுமே சாதியச் சிந்தனை அழிந்துவிடுமென நாம் கருதலாகாது என்பார் சிவசேகரம். ஆதிக்கசாதி ஈழத்தவர்கள் மட்டுமல்லாமல் இன்று பெருமளவில் புலம் பெயர்ந்து வாழும் ஆதிக்கசாதி இந்தியர்களும் தமது சாதிய அடையாளங்களையும் பெருமிதங்களையும் தொடர்ந்து சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் அங்குள்ள அரசாங்கங்களின் கவனத்திற்கும் சென்றுள்ளன. எனவேதான் சாதிரீதியான ஒடுக்குமுறைகள் சட்டவிரோதமானவை என அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டங்களை நிறைவேற்ற அந்த அரசுகள் முயன்றுகொண்டுள்ளன.

புகலிட நாடுகளில் ஏன் ஈழத்தில் அல்லது இந்தியாவில் கூட இப்போது சாதி ஒடுக்குமுறை கிடையாது எனச் சொல்பவர்களை நாம் நாளும்பொழுதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அறிவாளர்களும் எழுத்தாளர்களும் கூட ‘இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?’ எனக் கேட்பதுண்டு. இல்லாவிட்டால் ‘திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறார்கள்’ எனச் சொல்லி மழுப்புவதுமுண்டு. இவற்றைச் சொல்வது யார் என நீங்கள் கவனிக்க வேண்டும். இவர்கள் ஆதிக்கசாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். மறுபுறத்தில் தலித்துகள் புலம்பெயர் நாடுகளில்கூட சாதியத்திற்கு எதிராகப் பேச வேண்டிய, போரிட வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள்.

குழந்தைப் போராளிகள் மற்றும் போராட்டக் களத்தில் புலிகள், இஸ்லாமியர்கள்மீது நடத்திய தாக்குதல்கள், சகோதர யுத்தம் போன்றவற்றை போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றின் ஒளியில் எப்படி வைத்துப் பார்க்கிறீர்கள்?

போர் நடந்த காலத்திலேயே இவை குறித்தெல்லாம் தீவிரமாகப் பதிவு செய்திருக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, கொள்ளயிடப்பட்டுத் துரத்தப்பட்டது குறித்தும் கிழக்கு மாகாணத்தில் அப்பாவி இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது குறித்தும் பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்தும் எழுதி இருக்கிறேன். புலிகள் இருந்தவரை இஸ்லாமியர்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வர அனுமதிக்கப்படவில்லை. புலிகள் வெறும் வாய் வார்த்தையாக மன்னிப்பு கேட்டார்கள் என்பது உண்மைதான். அது உளச்சுத்தியான மன்னிப்பாக இருந்தால் இஸ்லாமியர்கள் திரும்பியும் யாழ்ப்பாணத்திற்கு வந்து குடியேற எந்தத் தடையும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்ன? 2006-இல் கூட புலிகள் இஸ்லாமியர்களை மூதூர் பிரதேசத்திலிருந்து துரத்தியடித்தார்கள். இது குறித்தெல்லாம் எதுவும் பேசாமலிருந்த எழுத்தாளர்களைக் கடுமையாகச் சாடியுமுள்ளேன்.

சில தமிழ்த் தேசியவாத எழுத்தாளர்கள் ‘இஸ்லாமிய ஊர்காவல்படை தமிழர்கள் மீது நடத்திய வன்முறை மட்டும் சரியா?’ எனக் கேட்பார்கள். அதுவும் தவறுதான். ஆனால், அந்த ஊர்காவல்படை இலங்கை ராணுவத்தின் துணைப்படை. ஆனால், புலிகள் தங்களை விடுதலை இயக்கமாக அறிவித்துக்கொண்டவர்கள். விடுதலை இயக்கத்தின் நடவடிக்கைகளும் துணைப்படைகளின் நடவடிக்கைகளைப் போன்றிருப்பது சரியா? புலிகள் ஊர்காவல் படையோடு மோதிக் கொன்றிருந்தால் அது வேறு. ஆனால், தொழுகையிலிருந்த குழந்தைகளையும் முதியவர்களையும் புலிகள் கொன்றதெல்லாம் என்ன நியாயம்? குறிப்பாக ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். முஸ்லிம் ஊர்காவல் படையை நியாயப்படுத்தி எந்த முஸ்லிம் எழுத்தாளரோ அறிவாளரோ இதுவரை எழுதியதில்லை. ஆனால் புலிகளின் கொலைகளை நியாயப்படுத்தித் தமிழ் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

உங்கள் நாவல்கள் பேரழிவின் துயரக் கதைகளையும் கடக்க முடியாத மரணங்களின் உறைந்த மௌனத்தையும் இடையறாது பேசுகின்றன. இட்லரின் ஆஸ்ட்விட்ச் முகாம் பற்றிய துயரக் கதைகளுக்கு நிகரானவை இவை. இந்தத் துயரங்கள் இன்றைய ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து போதுமான அளவு வெளிப்பட்டு இருக்கிறதா அல்லது அவை கடந்து செல்லப்படுகின்றனவா?

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வந்த சில நூல்களை நான் வாங்கி வைத்திருக்கிறேன் இதோ இங்கே மேசையில் இருக்கின்றன. ‘அன்னா’ இருக்கிறது ‘தீக்குடுக்கை’ இருக்கிறது. ‘தாயைத்தின்னி’ இருக்கிறது. ‘சயனைடு’ இருக்கிறது. இவை அனைத்துமே யுத்தத்தை அதன் விளைவுகளைப் பற்றிய படைப்புகள்தான்.

நான் 90-களிலேயே ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவன். எனக்குப் பின்பாக எழுத வந்திருக்கும் ஈழ எழுத்தாளர்கள் கொடுமையான யுத்தத்தை நேரடியாகச் சந்தித்தவர்கள். அந்த வகையில் அவர்களிடம் என்னைவிட அதிகமான அனுபவங்களும் பாடுகளும் இருக்கின்றன.

ஆனால், போர்ப் பதிவுகளுக்கும் இலக்கியத்திற்கும் வேறுபாடு உண்டு. யுத்த காலத்தில் நிறையப் பத்திரிகைகள் யுத்தத்தைக் குறித்து விரிவான தகவல்களை அளித்திருக்கிறார்கள். போர் குறித்து நிறைய ஆவணங்கள் உள்ளன. அனுபவங்களையும் தகவல்களையும் இலக்கியமாக ஆக்குவது இலக்கியவாதியின் இலக்கியத்திறன் சார்ந்தது. அந்த இலக்கியம் நல்லதாக ஆவதும் நாசமாவதும் எழுத்தாளரின் அரசியல் நோக்கும் பொறுப்புணர்வும் சார்ந்தது. இந்த அடிப்படையில் நோக்கும்போது, இதுவரை வந்த படைப்புகள் போதாமல்தான் உள்ளன. சொல்ல வேண்டிய கதைகளும் வாழ்வும் எங்கள் நிலமெங்கும் சிந்திக் கிடக்கின்றன.

தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வாழ்வும் மரணமும் உங்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளும் மதிப்பீடுகளும் என்ன?

நான் என்னுடைய பதின்ம வயதிலேயே என் தலைவராகப் பிரபாகரனை வரித்துக்கொண்டவன். அரைக் காற்சட்டை தரித்த பையனாகக் கிராமம் கிரமமாகச் சென்று புலிகள் இயக்கத்திற்காகப் பரப்புரை செய்தவன். புலிகளின் நாடகங்களில் நடித்தவன். புலிகள் இயக்கத்தில் மூன்றரை வருடங்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டவன். ஒவ்வொருநாள் காலையிலும் பயிற்சி முகாமில் பிரபாகரனின் பெயரால் உறுதிமொழி ஏற்றவன்.

1986 இறுதியில் புலிகள் இயக்கத்தோடு முரண்பட்டு நான் வெளியேறினேன். அதன் பின்பு பன்னிரண்டு வருடங்கள்வரை அதாவது 1998-வரை நான் புலிகளுக்கு எதிராக எதையும் செய்ததில்லை. புலிகளுக்கு எதிராக ஒரு சொல்கூட எழுதியதில்லை. சொல்லப்போனால் இந்தக் காலப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாகக் கூட நான் சில கவிதைகளையும் கதைகளையும் எழுதியுள்ளேன். அவை பிரசுரமாகியுமுள்ளன.

ஆனால், இந்தப் பன்னிரண்டு வருட கால இடைவெளியில் – நான் புலம் பெயர்ந்து சென்ற பின்பும் கூட- நான் ஈழத்து அரசியலையும் புலிகள் இயக்கத்தையும் தொடர்ச்சியாகக் கவனித்து வந்திருக்கிறேன். இந்தக் கால இடைவெளி தமிழ்த் தேசியவாதத்திலிருந்து நான் மெல்ல மெல்ல வெளியேறுவதற்கான காலமாக இருந்தது. நான் 2009 மே மாதத்திற்குப் பிறகு ஒரே நாளில் மனமாற்றமடைந்து சுடலை ஞானம் பெற்றுப் புலிகளை விமர்சித்துத் தள்ளப் புறப்பட்டவன் அல்ல. அதுவும் முற்றாக அழிக்கப்பட்ட புலிகளோடு, இல்லாத புலிகளோடு கருத்துப் போரிட வந்தவனல்ல. மார்க்ஸியம், பின்நவீனத்துவம், தலித்தியம் போன்ற சிந்தனைகளை உள்வாங்கித் தமிழ்த் தேசியத்திலிருந்து விடுபட்டவன். அதனால்தான் நான் புலிகள் இயக்கத்தின் தனிநபர்களை ஒருபோதுமே விமர்சித்ததில்லை. அவர்கள் இழைத்த அரசியல் தவறுகளையே விமர்சித்து வந்திருக்கிறேன். என்னுடைய விமர்சனம் தனிமனிதப் பாதிப்பிலிருந்தோ பற்றிலிருந்தோ எழுந்ததில்லை. என்னுடைய வாசிப்பாலும் அரசியல் அறிதலாலுமே என்னுடைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

1998 தொடக்கம் 2009 வரை நான் புலிகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். அதேவேளையில் நான் ஒருபோதும் இலங்கை அரசு சார்போ, பிற தமிழ் இயக்கங்களின் சார்புநிலையோ எந்தத் தருணத்திலும் எடுத்ததில்லை. நான் புலிகளை நூறு சதவீதம் எதிர்க்கிறேன் அதேவேளையில் இலங்கை அரசை இருநூறு சதவீதம் எதிர்க்கிறேன் என்று ‘குமுதம்’ இதழில் சொல்லியிருக்கிறேன். புலிகள்மீதான என்னுடைய விமர்சனத்தை புலி எதிர்ப்பு விமர்சனமாகவோ புலி எதிர்ப்பு எழுத்தாகவோ அடையாளப்படுத்தி என்னைக் கரித்துக்கொட்டுபவர்கள் உண்டு. ஆனால், என்னுடைய விமர்சனம் உள்ளிருந்து எழுந்த விமர்சனமாகவே நான் இப்போதும் கருதுவேன். புலிகள் இயக்கத்திலிருந்து வந்த போராளிகளில் இலக்கியத்தளத்தில் புலிகளை விமர்சித்து முதன்முதலில் எழுதியவன் நான்.

புலிகளின் தொடர்ச்சியான பாசிச அரசியலே என்னை இந்த நிலைக்கு இட்டுச்சென்றது. அவர்கள் எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் கொன்றார்கள். மாற்று அரசியல் இயக்கத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் தலித் சமூகத் தலைவர்களையும் கொன்றொழித்தார்கள். கருத்து – எழுத்துச் சுதந்திரத்தை மறுத்தார்கள். அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் வகைதொகையின்றிக் கொன்றொழித்தார்கள். குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து யுத்த முன்னரங்குகளில் தள்ளினார்கள். உலகம் முழுவதும் போதைப்பொருளைக் கடத்திப் பணம் ஈட்டினார்கள். இவற்றையெல்லாம் செய்த ஓர் இயக்கத்தை என்னால் எப்படி விடுதலை இயக்கமென ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த இயக்கத்தின் தலைவர் எப்படி விடுதலைப் போராட்டத் தலைவராவார்?

எனவே 2000 ஆண்டளவில் ‘இந்தியா டுடே’ இதழுக்கு நான் வழங்கிய நேர்காணலில் ‘பிரபாகரன் விடுதலை இயக்கத் தலைவர் அல்ல. இன்றைக்கு அவர் வெறும் யுத்த பிரபு மட்டுமே’ என்று நான் சொன்னேன். அதற்கான என்னுடைய தர்க்கங்களையும் ஆதாரங்களையும் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் எழுதினேன். பல மொழிப் பத்திரிகைகளிலும் இதைச் சொல்லியிருக்கிறேன். அநேகமாகப் பிரபாகரனை ‘War Lord’ என்று வார்த்தையால் முதலில் அழைத்தவன் நானாகத்தான் இருப்பேன்.

பிரபாகரன் நினைத்திருந்தால் ஈழத்திலிருந்து தப்பிச் சென்று எங்காவது ஒரு வெளிநாட்டில் மறைந்து வசதியாக வாழ்ந்திருக்கலாம். அவர் தனது குடும்பத்தை அழியவிடாமல் காப்பாற்றியிருக்கலாம். அவர் தான் நம்பிக் கொண்டிருந்த ‘லட்சியத்திற்காக’ கடைசிவரை போரிட்டு மடிந்தார். ஆனால், இதற்காக அவரைப் பாராட்டும் நிலையில் நான் இல்லை. ஏனெனில் அவர் தன்னுடன் சேர்த்து லட்சக்கணக்கான மக்களையும் அழிவுக்குள் தள்ளிவிட்டார். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரவலத்திற்குப் புலிகளும் பொறுப்பாவார்கள். மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துப் போரிட்டதை மன்னிக்கவே முடியாது. தப்பிச் சென்ற மக்களின் முதுகில் புலிகள் சுட மார்பில் ராணுவம் சுட்ட பேரவலம் நிகழ்ந்தது.

2009 மே 18-க்குப் பின்பு பிரபாகரனின் மரணத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது எனப் பலர் திண்டாடித் தவித்தார்கள். இன்றுவரை பலர் திண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் பேசும் புலி ஆதரவாளர்களுக்கு இதுவரை பிரபாகரனுக்கு ஒரு பொது அஞ்சலி நிகழ்வை நடத்தத் துணிச்சலில்லை. நான் பிரபாகரன் மரணித்தபோது ‘பிரபாகரன் ஜீவிக்கிறார்’ என்றொரு கட்டுரை எழுதினேன். அது ‘தீராநதி’ இதழில் வெளியானது. அக்கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டேன்:

தலை பிளக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலையுண்டிருந்த எனது முன்னாள் தலைவரின் உடலத்தை இணையத்தளத்தில் நான் பார்க்க நேரிட்டபோது எனது கண்கள் தாழ்ந்துபோயின. அந்த உடலம் அவருடையதுதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஏங்கிய கண்களும் ரத்தம் காய்ந்த முகமுமாயிருந்த அந்த உடலத்தைப் பார்க்கும்போது, ஜோன் பெர்க்கின்ஸின் வார்த்தையொன்று ஞாபகத்திற்கு வந்தது. ‘இந்த மனிதர் இரக்கத்திற்குரியவராக இருக்கலாமே தவிர, நாயகனாக கொண்டாடப்படக் கூடியவரோ தலைவராகப் பின்பற்றப்படக் கூடியவரோ அல்ல.’

உங்களுக்கு மிகப்பிடித்த ஒரு திருக்குறளோடு இந்த நேர்காணலை நிறைவு செய்யலாமா?

என்னுடைய ‘பஞ்சத்துக்குப் புலி’ நூலின் முகப்பில் இந்தக் குறளை வைத்துள்ளேன்.

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

போர்க்களத்திலே பகைவருக்கு அஞ்சாமல் போரிடப் பலர் உள்ளனர். ஆனால் அறிவுக்களத்தில் நின்று அச்சமின்றிப் பேசக் கூடியவர்கள் அரிதாகவே உள்ளனர் என்கிறார் வள்ளுவர். இந்தக் குறள் எனக்கு என் இலக்கியச் செல்நெறியை, என் அரசியல் வழியை வகுத்துக்கொடுத்திருக்கிறது.

https://www.shobasakthi.com/shobasakthi/2025/03/02/எனது-இலக்கியம்-அரசியல்-ச/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.