தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
By
Kavi arunasalam · 25 minutes ago 25 min