Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை சத்யா, துரை வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

'மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி, அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடன் மோதல் போக்கைத் தொடர்வதால் சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, 'மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும்' என்ற குரல்கள் எழுந்தன.

ஆனால், 'துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதை தான் ஏற்கவில்லை' என செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் முதன்மைச் செயலாளராக உள்ளார்.

துரை வைகோவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு

வைகோ, மல்லை சத்யா, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 106 பேர் பங்கேற்றனர். இதில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. 'இவ்வாறு தேர்வு செய்யப்பட்டது வாரிசு அரசியல் இல்லை' என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார்.

'ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படி அவருக்குப் பதவி வழங்கப்பட்டது' என்றும் அவர் தெரிவித்தார்.

வைகோவின் முடிவை எதிர்த்து மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன் பதவி விலகினார்.

மதிமுக அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, தனது விலகலுக்கு துரை வைகோவின் வருகையை ஒரு காரணமாக முன்வைத்திருந்தார்.

மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம்

மல்லை சத்யா, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

படக்குறிப்பு,மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது

இதன் தொடர்ச்சியாக, தற்போது மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

கடந்த 12-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிலர் வாக்குவாதம் செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார்.

பொதுக்குழுவில் பேசிய வைகோ, "குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. ராமதாஸ் குடும்பத்துக்குள்ளேயே மோதல் வந்துவிட்டது. கண்ணாடியில் விரிசல் விழுந்தால் ஒட்ட வைக்க முடியாது. தண்ணீரில் விரிசல் விழுந்தால் தானாக சேர்ந்துவிடும்" எனக் கூறினார்.

"நானும் சத்யாவும் கண்ணாடியல்ல, ஓடும் தண்ணீர்" எனவும் வைகோ குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், 'கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

சர்ச்சையை கிளப்பிய பதிவு

இந்தநிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக ம.தி.மு.க-வின் முன்னாள் மாணவரணி துணைச் செயலாளர் சத்தியகுமரனின் முகநூல் பதிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

'ம.தி.மு.கவில் வைகோவுக்கு அடுத்தபடியாக துரை வைகோ மட்டுமே அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் உடனே வெளியேறலாம்' எனக் கூறியிருந்தார்.

துரை வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,DURAI VAIKO

'ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும் இதனை ஏற்க வேண்டும். இது துரை வைகோ காலம்' எனவும் அவர் பதிவிட்டிருந்தார். மல்லை சத்யாவை மையமாக வைத்து இவ்வாறு கூறியுள்ளதாக ம.தி.மு.க வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்தநிலையில், தனது முகநூல் பக்கத்தில் ''ம.தி.மு.க-வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு நம்பிக்கை துரோகி உள்பட பல விருதுகளை எனக்குத் தந்துள்ளனர்'' எனப் பதிவிட்டுள்ளார் மல்லை சத்யா.

'வைகோவின் இதயத்தில் இருந்து நீக்க முடியாது'

திருச்சி ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துப் பதில் அளித்துள்ள மல்லை சத்யா, 'எனக்கு எதிராக சிலர் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது' எனக் பதிவிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் சுவர் விளம்பரங்கள் மற்றும் அழைப்பிதழ்களில் மல்லை சத்யாவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாகவும் ம.தி.மு.க-வை விட்டு சீனியர்கள் சிலர் வெளியேறியது போல சத்யாவும் வெளியேற வேண்டும் என துரை வைகோ தரப்பினர் விரும்புவதாகவும் சத்யாவின் ஆதரவாளர் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"கட்சியில் தகுதி அடிப்படையில் பொறுப்புக்கு வருவதை சிலர் விரும்பவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் மல்லை சத்யா சிரித்தால் கூட அதைக் குற்ற நிகழ்வாக கருதுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

வைகோவின் கண்டனம்

திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

''சில மாவட்டக் கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்களை நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது போன்றவை கூடாது'' என அறிவுறுத்தப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

வரும் 20 ஆம் தேதியன்று ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் வைகோ அறிவித்துள்ளார்.

மல்லை சத்யா, வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

படக்குறிப்பு,'வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது' என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்

"மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?" என அக்கட்சியின் மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் சத்தியகுமாரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"மல்லை சத்யாவின் கட்சிப் பணியை யாரும் மறுக்கவில்லை. அதேநேரம், தொண்டர்கள் அறிவுறுத்தியதால்தான் கட்சிப் பணிக்கு துரை வைகோ வந்தார். கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கு எதிராகவும் மல்லை சத்யா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்" எனக் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவு தொடர்பான நிகழ்வில் கட்சிக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

"திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் சென்று குமரி அனந்தனுக்கு வைகோ இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது வைகோவுடன் செல்லாமல் மல்லை சத்யா தனியாக சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்" என சத்தியகுமாரன் தெரிவித்தார்.

"ஒரு நிகழ்வு தொடர்பாக பொதுச் செயலாளர் பேசிவிட்டால் வேறு யாரும் பேசக் கூடாது. ஆனால், கட்சியின் சட்டவிதிகளுக்கு மாறாக அவரது செயல் உள்ளது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்" எனவும் அவர் தெரிவித்தார்.

துரை வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,DURAI VAIKO

படக்குறிப்பு,துரை வைகோவை கட்சியில் முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் துரைசாமி, கோவை ஈஸ்வரன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகினர்

அதேநேரம், "கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் மல்லை சத்யா போதிய ஆர்வம் காட்டவில்லை" எனக் கூறுகிறார், ம.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வைகோ தொடர்பாக சத்யாவின் ஆதரவாளர் ஒருவர் முகநூலில் அவதூறான கருத்தை வெளியிட்டார். இதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுதான் பிரச்னைக்கு காரணம்" எனக் கூறினார்.

அடுத்ததாக, ஈ.வெ.ரா.பெரியார், அண்ணா, வைகோ வரிசையில் சத்யாவின் படத்தை ஒருவர் பகிர்ந்ததாகக் கூறிய அவர், "இதற்கும் சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவையெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களாக இருந்தன"எனத் தெரிவித்தார்.

"வைகோவுக்கு உடல்நலம் குன்றிப் போன பிறகு கட்சியை வளர்ப்பதற்கு துரை வைகோ உழைத்து வருகிறார். இந்தநிலையில் சிலரின் தூண்டுதலில் சத்யா செயல்படுவதாக தோன்றுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மல்லை சத்யா முற்றிலும் மறுத்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். அதற்கு மேல் கூறுவதற்கு எதுவும் இல்லை" எனக் கூறினார்.

"இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் கருத்தையும் கூறக் கூடாது எனக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துவிட்டார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c807g8l2dvmo

  • கருத்துக்கள உறவுகள்

491352693_713310021379398_90876881971728

ம.தி.மு.க. பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்.

  • கருத்துக்கள உறவுகள்

விலகலுக்கு காரணம் இதுதான்… துரை வைகோ அறிக்கை முழு விவரம்!

19 Apr 2025, 12:55 PM

Screenshot-2025-04-19-125245.jpg

அண்மைக்காலமாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் மோதல் முற்றிய நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ இன்று (ஏப்ரல் 19) விலகியுள்ளார்.

தன்னுடைய விலகலுக்கான காரணத்தை பட்டியலிட்டு துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக துரை வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கட்சியினரின் அன்பு நெகிழச் செய்தது!

அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர்.

2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான், உடனடியாக நாடு திரும்பினேன்.

durai-1741774349.jpg

தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது.

தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன்.

இந்த சூழ்நிலையில் தான் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வைகோ உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர்.

அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். வைகோ இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

தொண்டர்களின் எதிர்பார்ப்பு!

வைகோ மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது.

எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக வைகோ பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மதிமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது.

மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் வைகோ அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை.

Ao0rfN8H-vaiko-1024x576.jpg

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர்.

தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த வைகோ, நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார்.

எந்த பதவியையும் விரும்பியதில்லை!

நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கட்சியில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை.

மதிமுகவில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், வைகோவுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன்.

சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும், அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன்.

அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கட்சியினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன்.

மதிமுகவில் புத்துணர்ச்சி!

அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன். தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக கட்சி தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கட்சி தோழர்கள் நன்கு அறிவார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் மதிமுக நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கனிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்த போது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன்.

ஆனால், நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம்.

வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம்!

எனக்கு வாய்ப்பினை தந்த மதிமுகவிற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் நாடாளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கட்சிக்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன்.

ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு வைகோவை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன்.

அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன்.

வைகோவை நேசிப்பதை போல என்னையும் கட்சியின் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன்.

1200-675-21861738-thumbnail-16x9-delhi-1

வைகோ உருவாக்கிய மதிமுக என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன்.

வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும்” வாழ்நாள் போராளி”என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள்.

வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி ரவி தீக்குளித்த போது எழுந்த மன வேதனையில் இருந்து வைகோ மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது.

அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன்.

எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/durai-vaiko-lists-out-why-he-resigned-from-mdmk-post/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?வருத்தம் தெரிவித்தாரா? மல்லை சத்யா?

துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் முடிவுக்கு வந்ததா ?

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஆ.நந்தகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 20 ஏப்ரல் 2025, 13:34 GMT

சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட தீர்மான அறிக்கையில் ‘கழக முதன்மை செயலாளர்' என துரை வைகோவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ நேற்று அறிவித்திருந்த நிலையில், அவரது பதவி விலகலை மதிமுக தலைமை இன்று ஏற்க மறுத்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தீர்மான அறிக்கை இருந்தது.

‘நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள இயலாமல் கட்சிக்கும் தலைமைக்கும் தீராப் பழியை சுமத்தும் 'ஒருவர்' மத்தியில் பணியாற்றிட இயலாது’ என தனது ராஜினாமா அறிக்கையில் பெயரை குறிப்பிட விரும்பாமல் குற்றஞ்சாட்டியிருந்தார் துரை வைகோ.

அந்த 'ஒருவர்' மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா என்பது இன்று வைகோ மேடையில் பேசியதன் மூலம் உறுதியானது. இன்று நடந்த கூட்டத்தில் அதே மல்லை சத்யா உடன் மேடையை பகிர்ந்துகொண்டார் துரை வைகோ.

துரை வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக மெளனம் காத்துவந்த மல்லை சத்யா, இன்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

சமூக ஊடக பதிவுகள் மற்றும் திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக திர்மானம் போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் குறித்து பல அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் நேற்று (ஏப்ரல் 19) வைகோவிடம் எழுப்பினர். இந்த விவகாரத்தில் எந்த பக்கமும் சாயாததுபோல இருந்தது வைகோவின் பதில்கள். ஒரு கட்டத்தில் கட்சியில் பிரச்னையே இல்லை என்ற தொனியில் அவரது பதில்கள் இருந்தன.

ஆனால், ”மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை” என இன்று காலை கூட துரை வைகோ கூறியதன் மூலம் இந்த விவகாரம் இன்னும் புகைந்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற தோற்றத்தை கொடுத்தது.

'இணைந்த கைகள்'

துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் முடிவுக்கு வந்ததா ?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,மல்லை சத்யா தனது செயல்களுக்கு வருத்தம் கோரியதால் ராஜினாமா முடிவை திரும்ப பெற உள்ளதாக துரை வைகோ கூறினார்

இதற்கிடையே திடீர் திருப்பமாக,''துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டுப் பேசி கட்டித் தழுவினர். இணைந்து பணியற்றுவோம் என்ற சமிக்ஞையை கொடுத்துள்ளனர்'' என இன்றைய நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

''துரை வைகோவும், மல்லை சத்யாவும் இன்று மனம் விட்டுப் பேசினார்கள். தங்கள் உணர்ச்சிகளையும் ஆவேசத்தின் வடியிலாக வந்த வார்த்தைகளையும் இருவரும் நாகரிகமாக கையாண்டனர்,'' எனவும் வைகோ கூறினார்.

அடுத்து பேசிய துரை வைகோ, மல்லை சத்யா தனது செயல்களுக்கு வருத்தம் கோரியதால் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற உள்ளதாக கூறினார். பின்னர் பேசிய மல்லை சத்யாவும் இதே பாணியிலான கருத்தை கூறி இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார்.

குறிப்பாக, மல்லை சத்யா வருத்தம் கோரினார் என செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறினாரே தவிர, வைகோ அப்படி கூறவில்லை. மல்லை சத்யா, துரை வைகோவுக்கு உறுதிமொழி கொடுத்தார் என்ற பதத்தையே அவர் பயன்படுத்தினார்.

இந்தநிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மல்லை சத்யா,''சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டேன். இதனை ஏற்றுக் கொண்டு துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என அறிவித்துள்ளார்'' என கூறியுள்ளார்

துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் முடிவுக்கு வந்ததா ? இன்று என்ன நடந்தது?

பட மூலாதாரம்,MDMK

மதிமுகவில் நடக்கும் இந்த அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்: ''மதிமுகவிற்கு ஏற்கனவே அடிப்படை கட்டமைப்பு பல மாவட்டங்களில் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் இதுபோன்ற குழப்பம் கட்சியை மேலும் சுணக்கம் அடையவைக்கும்'' என்கிறார்.

இன்று காலை தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறிய துரை வைகோ, கூட்டம் முடிந்த பிறகு பதவி விலகலை பின்வாங்குவதாக கூறுவது அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை கட்டுவதாக கூறுகிறார்.

''கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் துரை வைகோ என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று. உயர் பதவிக்கு வர விரும்புபவர் கட்சியின் பிரச்னை என்றால் அதை தற்போதைய பொதுச்செயலாளர் வைகோவிடம் சொல்லி தீர்த்திருக்க வேண்டும். ஆனால், பொதுவெளியில் ராஜினாமாவை அறிவிப்பது பதவிக்கு அழகல்ல, என்கிறார் பிரியன்.

வைகோ தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில், அவரது மகன் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

'' கிட்டதட்ட அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் புகுந்துவிட்டது. அதனால், இரண்டு மூன்று தசாப்தமாக கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். அதுதான் தற்போது மதிமுகவிலும் வந்துள்ளது'' என்கிறார் பிரியன்.

இந்த மோதலுக்கு மத்தியில், வைகோ மல்லை சத்யாவுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மல்லை சத்யா அமைதி காத்து தனது அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2ewp2z2lkko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.