Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவு

- சோம.அழகு

காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும்,

சக்தி என்பான்!

குலசாமி என்பான்!

தாயே துணை என்பான்!

மனைவியே தெய்வம் என்பான்!

மகளே உலகம் என்பான்!

கோவிலுக்குள் நுழைந்தால்

தீட்டு என்பான்…!

என்ற தோழர் மதியின் கவிதையுடன் கதிரவனும் தகிக்கத் தொடங்கியிருந்தது. இதை வாசித்ததும்தான் உவளுக்குத் திடீரென நினைவிற்கு வந்தது. தேநீர் மேசையில் நீட்டியிருந்த கால்களைச் சட்டென மடக்கிக் கீழே தொங்க விட்டுச் சிறு பதற்றத்திற்குள்ளானாள். இந்த மாதம் உவளுக்கு மாதவிடாய் வரவில்லை. அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து நாள்காட்டியில் நாட்களைக் கணக்கிட்டாள். பத்து நாட்கள் தள்ளிப் போயிருந்தது. இது முற்றிலும் வழக்கமற்ற ஒன்று. உவன் எழுந்துவிட்டதைக் கூட பொருட்படுத்தாத அளவிற்கு மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஈர முகத்தைத் துடைத்தவாறே உவள் அருகில் வந்து அமர்ந்தான். “காபி எடுத்துட்டு வரேன்” என்றாவறே அடுப்படிக்குச் சென்றாள். கூறாமை நோக்கக் குறிப்பறியும் உவனிடம் இருந்து தற்காலிகமாகத் தப்பிச் சென்றாள்.

காபி கொண்டு வந்தவளிடம், “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான். “ஒண்ணுமில்லையே” என்று சமாளிக்க முயன்றவளை “வழக்கமான புன்னகையைக் காணோமே” என்று மடக்கினான். நெஞ்சம் கடுத்தது காட்டும் தன் முகத்தில் செயற்கையாக முகமலர்ச்சியைக் கொண்டு வர முனைந்தவளிடம் “Good try! ஆனா ஒட்டவே இல்ல. இப்ப என்னன்னு சொல்லப் போறியா? இல்லையா?” என்று காபியின் ஒரு மிடறை உள்ளிறக்கியவாறே கேட்டான். சொன்னாள். “வாவ்” என்று விளையாட்டாகச் சிரித்தான். உவளது இதயத்துடிப்பை அது இன்னும் அதிகரித்தது.

மேலும் பேச்சைத் தொடர விரும்பாமல் காலை உணவைத் தயார் செய்யச் சென்றாள். “பாத்து… மெதுவா நட” என்று அக்கறையான தொனியில் உவன் கிண்டலாகக் கூற செல்லமான கோபத்துடன் உவனைத் திரும்பிப் பார்த்தாள். அடுப்படி அலமாரியில் கொஞ்சம் உயரத்தில் இருந்த சட்டியை எட்டி எடுக்க முற்பட்ட உவளிடம், “தள்ளு… நான் எடுத்துத் தர்றேன். இந்த நேரத்துல இப்பிடில்லாம் எக்கக் கூடாது” என்று கண்களைச் சிமிட்டியவாறே சட்டியை எடுத்துக் கொடுத்தான். உவளும் பதிலுக்கு விளையாட்டாக உவனது வயிற்றில் லேசாகக் குத்தினாள்.

இதற்குள் உவர்களது மூன்று வயது மகள் “அம்மா…” என்று கண்களைக் கசக்கியவாறே படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள். தூங்கி விழித்ததில் காலைக் கதிரொளியினால் அக்குட்டிக் கண்கள் இன்னும் கூசிக் கொண்டிருந்தன போலும். சுருங்கியிருந்த கண்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்குப் பழகிக் கொண்டிருந்தன. ஓடிச் சென்று மகளை வாரி அணைத்தவள், “நல்ல தூங்குனியாடா ராஜாத்தீ? முகம் கழுவிக்கிறீங்களா, தங்கம்? அப்புறம் பால் குடிக்கலாம்” என்றவாறே கொஞ்சியபடி குழந்தையைத் தூக்கினாள். “ஹே! இந்த மாதிரி நேரத்துல வெயிட்லாம் தூக்கக் கூடாது” என்று மீண்டும் உவளைச் சீண்டினான். “ப்பா..” என்று அழுவதைப் போல் முகத்தைச் சுளித்தவாறே சிரித்தாள். “ஓ! அதான் கொஞ்ச நாளா முகம் பளிச்சுன்னு இருக்கா? அப்பவே சந்தேகப்பட்டேன்” என்று வம்பிழுத்தான். “சும்மாதான் இருங்களேன் ப்பா” என்றவாறே குழந்தைக்குப் பல் தேய்த்துவிட அழைத்துச் சென்றாள்.

அனைவரும் குளித்துக் கிளம்பி காலை சிற்றுண்டி நடந்து கொண்டிருந்தது. “நல்லா சாப்பிடுடா… இப்போதான் நல்லா சாப்பிடணும். தெம்பு வேணுமில்ல?” – உதட்டின் ஓரம் நெளிந்த சிரிப்பை அடக்கி உவளிடம் சொன்னான். இருந்த அவசரத்தில் குழந்தைக்கு ஊட்டிவிட்டபடியே உவனை லேசாக முறைத்தாள். குழந்தையைப் பள்ளியில் விட்ட பின் உவளை நூலகத்தில் விடும் வழியில் வழக்கத்திற்கு மாறாக வேண்டுமென்றே நல்ல குத்துப்பாட்டாக மகிழுந்தினுள் ஒலிக்க விட்டு குஷியான மனநிலையில் ஆடியபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். நூலகம் வரை உவன் மீது படர்ந்திருந்த உவளது உக்கிரமான பார்வையைக் கண்டு கொள்ளாதது போலவே பாடல் வரிகளை உரத்துப் பாடித் தன் மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தினான். “பாத்து… பத்திரம். எதுவும்னா கூப்பிடு” உவனது வார்த்தைகள் காதில் விழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல் இறங்கிச் சென்று விட்டாள்.

அன்று மதியம் பள்ளி முடிந்து குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. குழந்தைக்கு விளையாட்டு காட்டியவாறே சோறூட்ட முயன்றாள். முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. பல வகையான யோசனைகள் உவளை இயங்கவே விடவில்லை. இத்தலைமுறையினருக்கே உண்டான கூகுள் வியாதி உவளையும் அன்று பீடித்தது. என்னவெல்லாமோ தேடினாள். பப்பாளி பழச் சாறு, அன்னாசிப் பழச் சாறு எனத் தொடங்கி தாம் வசிக்கும் மாகாணத்தில் பன்னிரண்டு வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டப்படி பிரச்சனை இல்லை என்பது வரை கன்னா பின்னாவென தேடினாள். திடீரென, “அய்யோ! என்ன செய்து கொண்டிருக்கிறேன்? உவன் எவ்வளவு ஆசையாக இருக்கிறான் இன்னொரு குழந்தைக்கு? நான் ஏன் இப்படி….? ச்சை” என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னை நினைத்து கொஞ்சம் அருவருப்பு கூட மேலிட்டது.

“உடன்பிறப்புன்னு கூட ஒண்ணு இருந்தா நாள பின்ன ஒண்ணுக்கொன்னு ஒத்தாசையா ஆதரவா இருக்கும்ல” – இதைச் சொல்பவர்கள் அனைவரும் தங்களது உடன்பிறப்புக்களுடன் ஒட்டும் உறவுமாகவா இருக்கிறார்கள்? எனவே வருங்காலத்தில் இதற்குப் பெரிய அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. நல்ல உடன்பிறப்பு அமைவது உறுதியல்லவே! ஆனால் நமது தெரிவு நல்லதொரு கேண்மையை நிச்சயம் கொண்டு வரும். அது உடன்பிறப்பின் இடத்தை மிக அழகாகச் சமன் செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

தனக்குள் முன்னும் பின்னுமாக முட்டி மோதிக் கொண்டிருந்த எண்ணவோட்டங்களினால் பொழுது மாலையைச் சூடிக் கொண்டதை உவள் உணரவே இல்லை. உவனால் எழுந்த கதவு தட்டலின் ஒலிதான் உவளை உசுப்பியது. கதவைத் திறந்ததும், “தூங்கிட்டு இருந்தியா?” என்று கேட்டான். இல்லை என்பதாகத் தலை ஆட்டினாள். “நல்லா ஓய்வெடுக்க வேண்டியதுதான? அதான் உடம்புக்கு நல்லது” – மறுபடியும் துவக்கினான். “ப்ச்” என்றபடியே திரும்பிச் சென்று தேநீர் தயாரிக்கலானாள். உவன் உடை மாற்றிக் கொண்டு வரவும் தேநீர் கோப்பையை உவன் கைகளில் தந்தாள்.

“நீ பால் குடிச்சியா? இங்க வா… வந்து உக்காரு. நான் போட்டுத் தரேன்” – இப்போது உவளுக்கு நிஜமாகவே உதறத் துவங்கியது. அதை மறைத்துக் கொண்டு, “இப்போ எதுக்கு திடீர்னு இவ்ளோ அக்கறை?” என்றாள். “திடீர்னு ஒண்ணும் இல்லையே. எப்பவும் உள்ளதுதான்” என்றான். “ஒருவேளை…” – அதற்கு மேல் தொடர சரியான வார்த்தைகளின்றி உணர்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். “ஹ்ம்ம்?” என்று கோப்பையிலிருந்து பார்வையை அகற்றி நிமிர்ந்து பார்த்தான்.

“உங்களுக்கு நிஜமாவே இப்போ இன்னொரு குழந்தை வேணுமா?” – என்னத்தைப் போட்டு பூசி மெழுகி…? பளிச்செனக் கேட்டு விட்டாள்.

“இருந்தா நல்லாதான் இருக்கும். ஏன்? உனக்கு வேண்டாமா?”

“‘இப்போதைக்கு’ வேண்டாம்” – ‘இப்போ’வில் உவள் தந்த அழுத்தம் உவனைச் சென்றடைந்ததா என உவனது கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்ம்… சரிடா” என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி முடித்துவிட்டான்.

மேற்கொண்டு அதைப் பற்றி உவன் பேச விரும்பவில்லையா அல்லது பேச ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டானா என உவளுக்குப் புரியவில்லை. “ஒருவேளை நான் இப்போ உண்டாயிருந்தா என்ன பண்றது?” – தயங்கியபடியே கேட்டாள்.

“அத நீதான் சொல்லணும்” – தேநீரைக் காலி செய்தபடியே மிகவும் நிதானமாகச் சொன்னான். எப்படி இவனால் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது?

“அது வந்து…. இப்போதான் பாப்பா அவளோட வேலைய கொஞ்சம் தன்னால செய்யப் பழகுற பருவத்துக்கு வந்துருக்குறா… அதுக்குள்ள இன்னும் ரெண்டு மூணு வருஷம் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க கொஞ்சம்….. அதுவும் நான் இன்னும் வேலைக்கும் போகல…” - ஆங்காங்கே நிறுத்தியும் வார்த்தைகளை விழுங்கியும் கூறினாள்.

“அததான் சொன்னேன்… உன் முடிவுதான்னு. ஒருவேளை நீ இப்போ மாசமாயிருந்து, கலைக்குறது உன் உடம்புக்கு நல்லதில்ல, அதனால இப்போ பெத்துக்குறத தவிர வேற வழி இல்லன்னு மருத்துவர் சொல்லும் அளவிற்கான சூழல் இருந்தாலும் கவலைப்படாத. உன்னையும் ரெண்டு பிள்ளைகளையும் நான் பாத்துக்குறேன். உனக்கு பிடிச்சதைச் செய்ய எந்தத் தடையும் இல்லாம ஏற்பாடு பண்ணித் தரேன். மருத்துவப் பரிசோதனைகள் அப்படி சொல்லாத பட்சத்துல எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னு ஆசை இருக்குங்குறதுக்காகவெல்லாம் நீ பெத்துக்கணும்னு அவசியம் இல்லை. உன் உடம்புதான் முக்கியம்.” என அதீத புரிதலுடன் பேசினான்.

“நீங்க வேற காலைல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… அதான்”

“அடேய்! அது சும்மா உங்கிட்ட ஒரண்ட இழுத்துட்டு இருந்தேன். அதெல்லாம் பெருசு பண்ணாத” என்று உவளுக்குச் சாதகமாக ஆறுதலளித்தான்.

தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களை எடுத்துரைப்பது அத்தனை எளிதல்ல என உணர்ந்தாள். இன்னொரு குழந்தை பெற்றும் கொள்ளும் எண்ணம் உவளுக்குப் பெரிதாக இல்லை. அதிலும் இப்போதைக்குக் கண்டிப்பாக இல்லை. இருந்திருந்து இப்போதுதான் சிறிது மூச்சு விட நேரம் கிடைத்தாற்போல் இருக்கிறது. பிள்ளை பெறுவதைப் பற்றி நினைத்தாலே…. வயிற்றைத் தள்ளிக் கொண்டு மூச்சு வாங்கியபடியே ஒன்பது மாதத்தையும் கழித்தது; நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, குமட்டல், குறுக்கு வலி; சுறுசுறுப்பு என்ற சொல்லே மறந்தாற்போல் எப்போதும் மந்தமாகவே இருந்தது; தூங்கித் தூங்கி விழுந்தாலும் சரியான தூக்கம் இன்மையால் அவதிப்பட்டது; பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம்; அகச்சுரப்பிகள், இசைமங்கள்(hormones) என எதுவுமே தன் கட்டுக்குள் இல்லாது தாறுமாறாக இயங்கியது; கர்ப்பப்பை கட்டிகளினால் ஏற்பட்ட அளவிற்கு அதிகமான இரத்தப்போக்கு; அதீத சோர்வு; தன் உடலைக் கவனிக்கக் கூட நேரம் இல்லாமல் போனது; தற்போது வரை குழந்தையின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பது; கருவுற்றதில் இருந்து தற்போது வரை உடல்நிலையாலோ நேரமின்மையாலோ வாசிக்கவும் படிக்கவும் இயலாமல் போனது - என எல்லாமே ஒரு கணம் அகக்கண்ணில் வந்து பயமுறுத்தின.

தன் ஆசைக்கும், நீளமான நாக்குகள் பலவற்றைக் கொண்ட ஊர் வாயை அடைக்கவும் என கண்மணியாக ஒரு பிள்ளை பெத்தாயிற்று. இவளை நன்கு படிக்க வைத்து ஆளாக்கினாலே போதும்தான். தான் வேலைக்குச் சென்று ஓரளவு சொந்தக் காலில் ஊன்றி நின்று தனக்கான அடையாளத்தை உருவாக்கிய பின், பொருளாதாரச் சூழலோடு உடலும் மனதும் தயாரான பின் உவனது ஆசைக்காக வேண்டுமானால் பின்னர் இன்னொன்று பெற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என நினைத்தாள். அதை விடுத்துச் சும்மா சும்மா குட்டி போட்டுக் கொண்டு அம்மா மற்றும் தங்கையின் உதவியை நாடுவது கொஞ்சம் வெக்கங்கெட்டத்தனமாகவே தோன்றியது உவளுக்கு.

வழக்கம்போல் மனக்குழப்பத்தின் போது தன்னுடனேயே பேசுவதைப் போன்ற உணர்வைத் தரும் தங்கையை நாடினாள். அவள் இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு தெளிவான மனநிலையை எட்டவும் உதவுவாள்.

“வாந்தி, தலைசுத்தல் மாதிரி ஏதாவது இருக்கா?” எனக் கேட்டாள் தங்கை.

“மொதல்ல உண்டாயிருந்தப்பவே அதெல்லாம் பெருசா இல்லையே. குமட்டல் மட்டும்தான இருந்துச்சு? நேத்து ராத்திரி சாப்பிட்டு முடிச்சவுடனே அப்போ மாதிரியே குமட்டுச்சு”

“Pseudocyesis, maybe”

“அப்பிடீன்னா?”

“Phantom pregnancyயா கூட இருக்கலாம். சோர்வா இருக்கா?”

“இல்ல. ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு pregnancyயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதெல்லாம் வச்சு சொல்ல முடியாதுல்ல?”

அதன் பிறகு உவளது மனக்கலக்கம் குறித்து எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டுத் தங்கை சொன்னாள் – “இங்க பாரு. இப்போ மறுபடியும் நீ உண்டானா அது எங்களுக்கு சந்தோஷமான விஷயம்தான். சந்தோஷம் மட்டும்தான் எங்களுடையது. உன் வலியை எங்களால வாங்கிக்க முடியாது. உனக்கான எல்லா உதவியை மட்டும்தான் நாங்க செய்ய முடியும். மேலும் குழந்தைங்குறது ரொம்பப் பெரிய பொறுப்பு. அதுக்கு நீ தயாரான்னு யோசிச்சுக்கோ. உன்னை மட்டும் வச்சி யோசி. இதுல சரி தப்புன்னு ஒண்ணுமே கிடையாது. நீ உன்னையும் உன் வளர்ச்சியையும் தேர்ந்தெடுக்குறது சுயநலம் கிடையாது. ஒரு பொண்ணோட உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவளைத் தவிர சுற்றியிருக்கும் வேறு ‘யாருக்கும்’ கருத்து சொல்லவோ முடிவு எடுக்கவோ உரிமை கிடையாது… கணவனே ஆயினும் கிடையாது! உன் விஷயத்துல அத்தானே உன் பக்கம்தான் நிக்குறாங்க. தைரியமா முடிவு எடு. புரிஞ்சுப்பாங்க”

எல்லோருக்கும் எப்படி இவ்வளவு லேசான விஷயமாகத் தோன்றுகிறது இது? இருவரும் உவளது மூளைக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களைத் தான் கூறிக்கொண்டிருந்தார்கள். அதை மனதிற்குக் கடத்துவதுதானே பெரும்பாடு! Pregnancy Kit வாங்கிப் பரிசோதித்துப் பார்க்கும் மனத்திடம் சுத்தமாக இல்லை. இரண்டு நாட்களாக உழன்று கொண்டே வந்தவள் மிகவும் தயங்கியபடியே அலுவலகத்தில் இருக்கும் உவனை அலைபேசியில் அழைத்தாள்.

“ப்பா!”

“ம்ம். சொல்லுடா…” – மறு முனையில் பரபரப்பான சூழ்நிலையிலும் அழைப்பிற்குப் பதில் தந்தான் உவன்.

“கொஞ்சம் வரும்போது பப்பாளி வாங்கிட்டு வர்றீங்களா?”

“ஹ்ம்ம். சரி டா. நான் கடைக்குப் போய்ட்டு வீடியோ கால் பண்றேன். எதுன்னு நீயே பாத்துச் சொல்லு” – எவ்விதத் தடுமாற்றமும் இன்றி மிக இயல்பாகக் கூறினான். அது உவளுக்கு இன்னும் வயிற்றைப் பிசைந்து கொண்டு வந்தது.

மேசையில் பப்பாளி இருந்த பையைத் திறந்து கூடப் பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் கழிந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் வாங்கி வரச் சொல்லிவிட்டாள். ஆனால் அதன் அருகே செல்வதற்கு மனம் கொஞ்சமும் ஒத்துழைக்காமல் வெதிர் எடுத்தது. ஏதோ கொலை பாதகம் செய்யத் துணிந்து விட்டதைப் போல் மருண்டாள். “ஒருவேளை கர்ப்பப்பை கட்டிகளின் வளர்ச்சியால் சில வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள இயலாமல் போய்விடுமோ? ஒருவேளை இப்போது தவறான முடிவை எடுக்கிறோமோ? ஒருவேளை இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளும் அடுப்படியும்தான் வாழ்க்கை இப்படியே கழிந்து தேக்க நிலையை அடைந்து விட்டால்?” - எல்லாமே தன் கையில்தான் என்பதுதான் ‘ஒருவேளை’களாக உருவெடுத்து உவளைப் பாரமாக அழுத்தியது. ‘இப்போது குழந்தை வேண்டாம்’ என்ற ஆழ்மனதின் பரிதவிப்பை வெளிப்படையாகத் தன்னிடமே கூடச் சொல்ல முடியாமல் தவித்தாள். ஒரு மாதிரி மூச்சு முட்டிக் கொண்டு வந்ததில் உவளுக்கும் சேர்த்து அந்த அறையே பெருமூச்செறிந்தது.

‘பப்பாளியை இன்று உட்கொண்டுவிடுவோமா?’ , ‘மருத்துவரிடம் செல்லலாமா?’ – இவ்விரு கேள்விகளுக்கும் இடையில் நசுங்கி வாடி வதங்கியவாறே மறுநாள் காலை சமைத்துக் கொண்டிருந்தாள். திடீரென…. கால்களுக்கு இடையில் பிசுபிசுப்பாக உணர்ந்தாள். அடுப்பை அப்படியே அணைத்துவிட்டு குளியலறைக்கு ஓடினாள். ஓடி வந்த வேகத்தில் கரண்டைக் கால் வரை வழிந்தது இரத்தம். அப்படியே அங்கிருந்த முக்காலியில் அமர்ந்துவிட்டாள். இரண்டு நிமிடங்கள் உலகமே உறைந்து போய்விட்ட மாதிரி இருந்தது. என்ன நிகழ்கிறது என மூளை மனதிற்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தது.

“ஐயோ! உவன் ஆசையில் மண் விழுந்துவிட்டதே!” என்ற வருத்தம் கலந்த ஏமாற்றம்; “எவ்வளவு கொடூரமாக வறட்டுத்தனமாக சுயநலமாக இருக்க முடிந்தது என்னால்?” என பொதுபுத்தியினால் விளைந்த பயம்; ஆண்டாண்டு காலமாக வழிவழியாகப் பெண்களுக்கு மரபுவழியே கடத்தப்பட்ட ‘பிறர்நலம்’ என்னும் பண்பில் இருந்து விலகியதால் “எப்பேர்பட்ட முடிவை எடுக்கத் தெரிந்தேன்?” என்ற குற்றவுணர்வு; “நல்லவேளை! ஒன்றும் செய்யாமல் தானாக வந்துவிட்டது” என்ற ஆசுவாசம்; “எனக்குப் பிடித்தவற்றையெல்லாம் தங்கு தடையின்றி செய்யலாம். இனி வானமே எல்லை” என்ற மகிழ்ச்சி – அனைத்து உணர்வுகளும் ஒரே பிடியாக ஒன்றாக அழுத்தியதில் என்னவென்று உணர்வது என்றறியாமல் திகைத்தாள். அத்திகைப்பு கண்ணீராக வெளிப்பட்டது உவளுக்கே வியப்பைத் தந்தது. “இப்போது ஏன் அழுகிறோம்?” என்று கூட புரியவில்லை.

குளித்து முடித்து வெளியே வந்தவள் மேசை மேல் பிரிக்காமல் இருந்த பப்பாளியைப் பார்த்தாள். முந்தைய நாள் வரையிலும் அதைத் தன் மனதினுடைய குரூரத்தின் உருவகமாகக் கருதி வந்தவள் தற்போது அவ்வாறாகக் கருத வைத்த பொதுபுத்தியையும், தன் தெரிவு என்ற எண்ணமே துளிர் விட விடாமல் சமூகம் தன்னுள் சாமர்த்தியமாக விதைத்துவிட்டிருந்த அர்த்தமற்ற குற்றவுணர்வையும் மட்டும் குப்பையில் போட்டு விட்டு பப்பாளியைத் தூக்கிப் பழக் கூடையினுள் இட்டாள்.

நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.