Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா?

April 22, 2025

பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா?

— கருணாகரன் —

“புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியையா பிடித்து வீரம் பேசுகிறது NPP?” என்று கேட்கிறார்கள் பலரும். அவர்களுடைய கேள்வி நியாயமானதே! ஏனென்றால், தங்களிடம் “400 கோவைகள் உண்டு. நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்களும் ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் தப்பவே முடியாது. அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தவறுகளுக்கும் ஆதாரம் உண்டு. நிச்சயமாக தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தனைபேரும் தண்டிக்கப்படுவார்கள்..” என்று முழங்கியவர்கள் NPP யினர். அப்படி முழக்கமிட்டுத்தான் (நம்பிக்கையூட்டித்தான்) ஆட்சியைக் கைப்பற்றியது NPP. 

ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் சொன்னமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அத்தனை பெருச்சாளிகளும் (பெருந்தலைகளும்) கால்மேல் கால் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்குப் பதிலாக சிறு எலிகளைப் பிடித்துச் சிறையிலடைத்து வீரம் பேசுகிறது NPP. இதனால்தான் “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியைப் பிடித்து வீரம் பேசுகிறது NPP” பகடி செய்கிறார்கள் மக்கள். 

அநுர குமாரதிசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று, NPP அரசாங்கம் ஆட்சியமைத்தபோது மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பிருந்தது. NPP ஒரு மாற்றுச் சக்தி என்ற வகையில் மாற்று ஆட்சியொன்றை வழங்கப்போகிறது. நாட்டில் நிச்சயமாக மாற்றம் நிகழப்போகிறது என. இரண்டாவது, நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளிய, ஊழல் செய்த முன்னாள் ஆட்சியாளர்களின் மீது, அவர்களுடைய தவறான செயல்களின் மீது NPP நடவடிக்கை எடுக்கும் என. 

NPP  ஆட்சியில் ஆறுமாதங்கள் கடந்த விட்டது. மக்கள் எதிர்பார்த்ததைப்போல அல்லது NPP  கூறியதைப்போல இவை இரண்டுமே நடக்கவில்லை. பதிலாக மக்களைத் திசைதிருப்பும் விதமாக அல்லது மக்களுக்கு ஏதோ செய்திருப்பதாகக் காட்டுவதற்காக வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன, மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ, பிள்ளையான், வியாழேந்திரன் என எலிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

இதில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அண்மைய கைது பல வகையான அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று இன்னும் சரியாகச் சொல்லப்படவில்லை. ஆனாலும் வெளியே வந்துள்ள செய்திகள் இரண்டு விதமாக உள்ளன. 

1.      கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பரில் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் பிள்ளையானுக்குத் தொடர்பிருந்ததான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக. இது அவர்கைது செய்யப்பட்டபோது வெளியான செய்தி.

2.      2019 ஏப்ரல் 21 இல் நடந்த ஈஸ்டர் ஞாயிறுக் குண்டுத்தாக்குதல்களோடு பிள்ளையானுக்குத் தொடர்புள்ளதாகவும் அதைப்பற்றிய விசாரணைகளை நடத்த வேண்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பிந்திய செய்தி. இப்போது பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் பிள்ளையான் தரப்பிலிருந்து மேலும் சிலர் கைதாகக் கூடும்.

இதை விட “பிள்ளையான் மிகப் பெரிய குற்றவாளி. அவர் இலகுவில் தப்ப முடியாது. அவரைத் தேசப்பற்றாளர் என்று கம்மன்பில சொல்வது வெட்கக் கேடானது” என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அரசாங்கத் தரப்பிலிருந்து பிள்ளையானைப் பற்றி வருகின்ற சேதிகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. 

பிள்ளையானின் இந்தக் கைது NPP அரசாங்கத்தின் அரசியல் ரீதியான நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. காரணம், 

1.      வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில்  செல்வாக்குள்ள தரப்புகளை இலக்கு  வைக்கும் NPP அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கை இது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். ஏனென்றால், பிள்ளையான் கிழக்கு மாகாணத்தை (கிழக்குப் பிராந்தியத்தை) பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு கட்சியின் தலைவர். கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். 2020 இல் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்.  இராஜாங்க அமைச்சராக இருந்தவர். 2024 தேர்தலில் அவர் வெற்றியீட்ட முடியவில்லை என்றாலும் கிழக்கின் வலுவான அரசியற் சக்தியாக பிள்ளையான் இருக்கிறார். குறிப்பாக வரவுள்ள உள்ளுராட்சித் தேர்தலையொட்டி கிழக்கிற்கான ஒரு வலுமிக்க அரசியற் கூட்டணியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனையும் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனையும் இணைத்து உருவாக்கியிருக்கிறார்.

இதெல்லாம் அரசாங்கத்தின் ‘இலங்கையர்களாக ஒன்றிணைவோம்‘ என்ற பொது அடையாளத்தின் கீழ் அனைத்துத் தரப்பினரையும் கரைக்கும் திட்டத்துக்கு பொருந்தாத, பிராந்திய அடையாளத்தை வலுவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் என்பதால், பிள்ளையான் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

2.       பிள்ளையானின் கைது, முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்,  அதற்கான விசாரணைகள் எல்லாம் ஏனைய தமிழ் அரசியற் சக்திகளுக்கு உள்ளுர விடுக்கப்பட்டதொரு எச்சரிக்கையாகும். குறிப்பாக வடக்கிலுள்ள முன்னாள் ஆயுதம் தாங்கிய தரப்புகளுக்கு. 

தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி போன்றவற்றுக்கு அப்பால் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு காலகட்டத்தில், பலவிதமான குற்றச் செயல்களோடு (குற்றப்பின்னணிகளோடு) சம்மந்தப்பட்டவை. ஆகவே அவற்றையும் குறிவைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அரசாங்கம் உள்ளுர உணர்த்துகிறது. ஏனென்றால் 18 ஆண்டுகளுக்கு முன் காணாமலாக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்தின் விடயத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றால், அதையும் விடப் பாரதூரமான கொலைகள், கடத்தல்கள், குற்றச்சாட்டுகளோடு சம்மந்தப்பட்ட ஏனைய அரசியற் தரப்பினர்களும் (முன்னாள் இயக்கத்தினரும்) தப்ப முடியாது என்றுதானே அர்த்தமாகும். 

3.      இவ்வாறு உள்ளுர அச்சத்தை உண்டாக்குவதன் மூலம் அவை அரசாங்கத்தை மூர்க்கமாக எதிர்ப்பதை விடுத்து, இரகசிய உடன்படிக்கைகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படும். அல்லது தணிவு நிலையில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலையை உருவாக்கும். இது பிராந்திய அரசியலின் கூர்முனையை மழுங்கடிக்கச் செய்வதற்கான ஓர் உபாயமாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே ஆட்சிலிருந்த ஐ. தே. க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பெரமுன போன்றவையெல்லாம் போட்டிக்கு இனவாதத்தை  வளர்க்கும் அரசியல் உபாயத்தைக் கொண்டவை. இதற்காக அவை தமிழ் மக்களைச் சீண்டும் விதமாக அல்லது தமிழ் மக்களுக்கு நேரடிப் பாதிப்பை உண்டாக்கும் விதமாக அரசியலை முன்னெடுத்தவை. இவ்வாறு செய்வதன் மூலமாக தமிழ் மக்களை தமிழ்த்தேசியத்தின் பக்கமாகத் திரள வைப்பதும் அதற்கு எதிராக சிங்களத் தேசியவாத்தை வலுப்படுத்தி, அதனுடைய பக்கமாக சிங்கள மக்களை அணி திரள வைப்பதுமே அந்தக் கட்சிகளின் அரசியல் உபாயமாக – உத்தியாக இருந்தது. இனவாதத்துக்கு இனவாதம் – போட்டியான இனவாதத்தை வளர்த்துக் கொள்வது. அதாவது உனக்கு நான். எனக்கு நீ என்ற விதமாக. 

இந்த அடிப்படையில்தான் கடந்த காலத்தில் நாய்களின் தலையை வெட்டி தமிழ் வேட்பாளர்களின் வீடுகளுக்கு முன்பாக வைக்கப்பட்டதும் தமிழ்ப்பகுதிகளில் கிறிஸ் பூதத்தை நடமாட விட்டதும் கூட நடந்தது. ஏனைய சிங்களக் கட்சிகளுக்கு இனவாதம் ஒரு முதலீடு மட்டுமல்ல, அதற்குப் பிராந்திய அரசியலும் தேவையாக இருந்தது. பிராந்திய அரசியல்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாத அரசியலுக்கான முதலீடாகும். 

ஆனால், NPP யின் அணுகுமுறையோ வேறாக இருக்கிறது. அது, எதிர்முனையைப் பலப்படுத்துவதை விடப் பலவீனப்படுத்தவே விரும்புகிறது. அதனுடைய நோக்கம் பிராந்திய அரசியலை இல்லாதொழிப்பதாகும். அதனால்தான் அது ஏனைய பிரதேசங்களையும் விட வடக்குக் கிழக்கை மையப்படுத்தித் தன்னுடைய வலுவைக் கூடுதலாகச் செலவழிக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் இலங்கையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிராந்திய அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, முழு இலங்கையை மையப்படுத்திய அரசியலொன்றை ஸ்தாபிப்பதுமாகும். 

இதற்கு முன்பு இதற்கான அரைகுறை முயற்சிகளை ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவை மேற்கொண்டிருந்தாலும் அவற்றுக்குள் நிறையத் தடுமாற்றங்கள் இருந்தன. One Nation One country, ஏக்க ராஜ்ஜிய போன்ற பிரகடனங்கோடு இதற்கான முயற்சிகளை அவை எடுத்தாலும் பிராந்திய அரசியலை முடக்கும் எண்ணம் அவற்றுக்கிருக்கவில்லை. ஏனென்றால், அவற்றினால் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அவற்றின் ஏஜென்டுகள் பிராந்தியத்திலிருந்தாலும் அவற்றினால் பிராந்தியத்திச் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அந்த ஏஜென்டுகளை அவை பலப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. இதனால் மொத்தில் ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பெரமுன வைப் பற்றி எதிர்மறைச் சித்திரமே தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடம் இருந்தது. NPP இதில் ஒரு மாறுதலான பாத்திரத்தை உருவாக்கியது; வகிக்கிறது. அது சத்தமில்லாமல் அல்லது எதிர்பாராத விதமாக வடக்குக்கிழக்கு மலையகப் பிராந்தியத்தில் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இதனால், பிராந்திய அரசியலை இல்லாதொழிக்கும் அதனுடைய (சிங்கள மேலாதிக்க மனோநிலையினுடைய) அடிப்படையில் செயற்பட அதற்கு  வசதிப்பட்டுள்ளது. 

ஆனால், இது எவ்வளவுக்குச் சாத்தியம் என்பது கேள்வியே. ஏனென்றால் இது கத்தியில் நடப்பதற்கு ஒப்பானது. பிராந்திய மக்கள் சிங்கள மக்களையும் விட வேறுவிதமான – பிரத்தியேகப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பவர்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் சிங்கள மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் விட வித்தியாசமானது. இதற்கு பிராந்திய சக்திகளை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது, அச்சமூட்டுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காண முடியாது. எதிர்பார்க்கும் விளைவுகளை எட்டவும் முடியாது. அதற்குள் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோரின் தலைகள்தான் உருளும். பலியாக்கப்படும். இது இதுவரையிலும் சிங்களத் தரப்புடன் ஒத்துழைத்த அல்லது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்த அரசியலுக்கு வழங்கப்படும் தண்டனையாகவும் உள்ளது. அப்படியென்றால் இன்னொரு நிலையில் இது பிராந்திய அரசியலைப் பலப்படுத்துவதாகவும் அமையும். 

https://arangamnews.com/?p=11970

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வடகிழக்கு அரசியல்வாதிகள், மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை, செய்யபோவதுமில்லை. மக்களை பிரதேசவாதத்தால் பிரித்து, தம்மை தலைவர்களாக்கி, இனத்தையும் நிலத்தையும் விற்பவர்கள். உண்மையான குற்றவாளிகளில் நேரடியாக இப்போ கைவைக்க முடியாது. ஒன்று, அரசியல் பழிவாங்கல் என்கிற குற்றச்சாட்டு, அடுத்து காவற்துறையோ, இராணுவமோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பு. தென்னக்கோனை கைது செய்யும் விடையத்தில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே முதல்ல எடுபிடிகளை கைது செய்யும் போது, இவர்கள் அடையும் பரபரப்பு, காட்டும் அவசரம், அவர்களை விடுவிக்க எடுக்கும் முயற்சி, அவர்களுக்கு அளிக்கும் முன்னுரிமை, முடியாதவிடத்து முந்திக்கொண்டு விடும் அறிக்கை, நடக்கும் கொலை, யார் சூத்திரதாரிகள் என்பதை காட்டுகின்றன. சிவநேசதுரை சந்திரகாந்தனோ, வியாழேந்திரனோ மக்களுக்காக செய்த நன்மைக்காக கைது செய்யப்படவில்லையே. அவர்கள் ஏன், யாருக்காக கைது செய்யப்படார்கள்? அவர்கள் பின்னணி என்ன, ஏன் அவர்களின் கைதுக்காக நாம் வருந்தவேண்டும்? எம் இனத்தையே எதிரிக்கு காட்டிக்கொடுத்து அழித்தவர்களல்லவா இவர்கள்? இவர்களின் கைதுகளுக்காக ஏன் சிங்களம் முன்னுரிமை கொடுக்கிறது? இனத்தை காட்டிக்கொடுக்கும் கௌதாரியை, மீனை அழிக்கிறார்கள். அதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை. நான் புலிகளை காட்டிக்கொடுத்து இராணுவத்துக்கு உதவியதாலா எனக்கு இந்த தண்டனை? என்னை உபயோகித்து விட்டு இப்போ கைவிட்டு விட்டார்கள் என்று சிறையிலிருந்து புலம்புகிறாராம். துரோகத்துக்கு பலன் துரோகந்தானே! 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.