தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள்
January 30, 2026
— கருணாகரன் —
சென்னைப் புத்தகக் காட்சிக்குச்சென்று திரும்பியவுடன் இலங்கையில் சந்தித்த ஊடகத்துறை நண்பர்கள் கேட்ட முதற்கேள்வி, “தமிழ் நாட்டின் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது? வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு அல்லது எந்தத் தரப்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?” என்பதே. தமிழ்நாட்டுக்குச்சென்று வந்த ஒருவருடன் பேசுவது, அங்குள்ள களநிலவரத்தை அறிவதற்குக் கூடுதலாக உதவக் கூடும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.
நான் சென்றது புத்தகக்காட்சிக்காக. அங்கே என்னுடைய நான்கு நூல்களின் வெளியீடு. சக எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளிலும் உரையாடல் அரங்குகளிலும் கலந்து கொண்டேன். இவை முடிய இலக்கிய, பதிப்புத் துறையைச் சேர்ந்த சில நண்பர்களைச் சந்தித்தேன். அடுத்துச் செய்தது, வீட்டுக்கு(இலங்கைக்கு) எடுத்து வருவதற்கு சில பொருட்களை வாங்குவதற்காக நண்பர்களோடு கடைக்குச்சென்றது. இந்தச் சிறிய நிகழ்ச்சி நிரலில் எந்த அரசியல் சந்திப்புகளும் இல்லை. முந்திய சென்னைப் பயணங்களில் தவறாமல், சில அரசியல் தலைவர்களையும் அரசியற் செயற்பாட்டாளர்களையும் ஊடகர்களையும் சந்தித்துப் பேசுதுண்டு. இந்தத் தடவை அதற்கான அவகாசம் இருக்கவில்லை. மட்டுமல்ல, அதற்கான உந்துதலும் இல்லை. காரணங்கள் –
1. தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் அரசியற்தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். அதற்கிடையில் எமக்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளக் கேட்பது அவ்வளவு பொருத்தமானதல்ல.
2. ஈழத்திலே நம்முடைய அரசியலையே ஈடேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கிறோம். ஈழப்போராட்டம் சிதைந்து தெருவிலே நாறிக்கிடக்கிறது. அறுபது ஆண்டுகாலப் போராட்டத்தில் எதையுமே பெறாதிருப்பது மட்டுமல்ல, அதிலிருந்து எந்தப்பாடத்தையும் படிக்க விருப்பமின்றிய மக்கள் கூட்டமாக இருக்கிறோம். அதாவது நம்முடைய அரசியலையே கொண்டு நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் – தேர்தல் பற்றி நாம் என்ன அவர்களுக்குச்சொல்ல முடியும்?
3. தேர்தல் வெற்றி – தோல்விகள், தேர்தற்கூட்டுகள் பற்றிய செய்திகளும் பேச்சுகளுமே சென்னைத் தெருக்களையும் ஊடகங்களையும் நிறைத்திருந்தன. ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், கடற்கரையில் காற்று வாங்கிக் களிப்பவர்கள் தொடக்கம் சந்திப்போரில் பெரும்பாலானோரும் தேர்தல் நிலவரத்தைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர். அதை அறிவதில் இந்தப் பயணத்தில் ஆர்வம் காட்டினேன்.
இதுதான் என்னுடைய பயணத்தில் நடந்தவைகளும் நான் கவனித்தவையும் என்றேன். அவர்கள் விடுவதாயில்லை. ஊடகத்துறையினரின் குணமே இதுதான். தாம் எதிர்பார்க்கின்ற விடயத்தில் ஒரு சிறு துரும்பாவது தமக்குக் கிடைத்து விடாதா? என்ற தீவிரத்தில் விடாப்பிடியாக முயன்று கொண்டேயிருப்பார்கள்.
“அரசியற் தலைவர்களையும் கட்சிகளின் பிரமுகர்களையும்விட மக்கள்தான் முக்கியமானவர்கள். அதுவும் தேர்தல் காலத்தில் அவர்களுடைய அபிப்பிராயங்களுக்கே பெறுமதி அதிகம். அவர்கள்தான் வாக்களிப்பவர்கள். மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய வல்லமை உடையவர்கள். ஆகவே அங்கே மக்கள் என்ன சொல்கிறார்கள்? அதைச் சொல்லுங்கள்” என்று பிடித்துக் கொண்டார்கள்.
என்னுடைய அவதானிப்பைச் சொன்னேன்.
சென்னையில் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் தி.மு.கவின் ஆட்சி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ”தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் சாதிய ஒடுக்குமுறையை மட்டுப்படுத்தியதிலும் மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் காப்பாற்றி, வளர்க்கும் முயற்சிகளிலும் தி.மு.க அளித்த வரலாற்றுப் பங்களிப்புகள் முக்கியமானைவை. அண்ணாத்துரை, கருணாநிதி எனத் தொடர்ந்த உறுதியான இந்த வழிமுறையை இப்பொழுது ஸ்டாலின் தொடருகிறார். இதனை மேலும் வளர்த்து முன்னெடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் உள்ளது. என்பதால் நாம் மிக நிதானமாக இந்தத் தேர்தலையும் கையாள வேண்டும். தி.மு.க இல்லை என்றால், தமிழ் நாட்டில் பா.ஜ.கவின் கைதான் மேலோங்கும். அது மாநிலத்தின் சுயாதீனத்தையே அடியோடு அளித்து விடும். இப்போதே மத்திய அரசின் ஏவலாளைப் போல ஆளுநர் செயற்படுகிறார். தி.மு. க இல்லை என்றால் மாநிலத்தின் அதிகாரம் மத்திய அரசிடமே குவியும். பா.ஜ.க வின் வேலையே அதுதான். அதற்கு நாம் இடமளிக்க முடியாது….”என்றவாறு சொல்கிறார்கள்.
இன்னொரு நிலையில் இவர்களிற் பலருக்கும் தி. மு.கவில் தொடருக்கின்ற குடும்ப ஆட்சி உவப்பானதாக இல்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை ஏற்றுக்கொள்கின்றவர்கள், உதயநிதியின் இடையீட்டையும் ஆதிக்கத்தையும் விரும்பவே இல்லை. பலரும் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ”தி.மு.க என்ற பகுத்தறிவுக் கட்சியில் இப்படிக் குடும்ப ஆட்சிக் கட்டமைப்புத் தொடருவது முரண். பிரபுத்துவ அம்சங்கள் தி.மு.க வுக்குள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு வழிகோலியவர் கருணாநிதி. இது தி.மு.கவைப் பலவீனப்படுத்துகிறது. அதாவது எதிர்காலத்தில் கட்சியையும் இது பலவீனப்படுத்தும். மாநிலத்தில் தி.மு.க வின் செல்வாக்கையும் ஆட்சித் தகுதியையும் கேள்விக்குள்ளாக்கும்”என்கிறார்கள். இதனை அவர்கள் விமர்சனமாக முன்வைப்பதைவிடக் கவலையோடு சொல்கிறார்கள்.
வெளியே உள்ள அச்சுறுத்தல் மிகுந்த அபாய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்புடன் – வரலாற்றுக் கடமையுடன் கருணாநிதியின் குடும்பம் நடந்து கொள்ளவேண்டும். கட்சியில் மூப்பு, திறமை, பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஜனநாயக ரீதியில் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், இதுவரையில் அவர்கள் (கருணாநிதி தரப்பினர்) ஆற்றிய பங்களிப்புகளும் பணிகளும் பெறுமதியற்றுப்போய் விடும். நேரு குடும்பத்தின் செல்வாக்கு எப்படி அழிந்து மங்கி மறைந்து போய்க்கொண்டிருக்கிறதோ, அதைப்போல கருணாநிதி குடும்பத்தின் வரலாறும் அமையக்கூடாது. காங்கிரஸை நேரு குடும்பத்தின் சொத்துப் போலாக்கியதன் விளைவே, இப்போதும் காங்கிரஸ் மீள எழு முடியாதிருக்கிறது. மட்டுமல்ல, அந்த இடத்தில் பா.ஜ.க என்ற தீய சக்தி வந்து வலுப்பெற்றுள்ளது. அதே நிலை தமிழ் நாட்டிற்கும் தி.மு.கவுக்கும் வரக்கூடாது. தி.மு.க வை ஆதரிப்பது என்பது நியாயமான ஒரு ஆட்சித் தரப்பை வலுப்படுத்துவதற்கே அன்றி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக இல்லை. ஆகவே இந்த அடிப்படையை ஸ்டாலினும் உதயநிதியும் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதே எங்களுடைய விருப்பம் என்று சொன்னார்கள்.
மேலும் அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள் – இந்தத் தேர்தல், தி. மு. க வுக்குச் சவாலானதுதான். இந்தச்சவாலுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஊழல் குற்றச்சாட்டு. தி. மு.க வுக்கும் ஊழலுக்கும் தொடர்பு உள்ளது. நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என்றாலும் மக்களின் மனதில் தி.மு. க ஊழலுடன் சம்மந்தப்பட்டே உள்ளது என்ற நம்பிக்கை பலரிடத்திலும் உள்ளது. அதை யாருமே மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஊழல் இருப்பதால்தான் கட்சிக்குள் ஜனநாயகத்தைப் பேணமுடியவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் தமது அடையாளம், தமது பதவி, தமக்கான அங்கீகாரம் போன்றவற்றை விடவும் தாம் உழைத்துக் கொள்வதற்கான இடமிருந்தால் போதும் என்றே சிந்திக்கிறார்கள். ஆகவேதான், கட்சிக்குள் அதற்கான வாய்ப்பை மட்டும் தேடிக்கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் உதயநிதியின் மகன் வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. தமது வருவாய்க்கான வாய்ப்பிருந்தால்போதும் என்றே பார்க்கிறார்கள். ஊழல் இல்லாத ஆட்சியொன்றை வழங்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் போய் விட்டது. ஊழல்பற்றி மக்களிடம் உள்ள நியாயமான உணர்வை மதிப்பதற்கு முடியாமல் இருக்கிறார்கள்.
இரண்டாவது காரணம், தி.மு.க வில் தொடரும் குடும்ப ஆட்சியும் அதிகாரமும். ஐம்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு பெரிய பகுத்தறிவுக் கட்சிக்குள்ளே பெருந்தலைவர்கள் இல்லை. அல்லது அவர்களைக் கட்சி அங்கீகரிக்கத் தயாரில்லை என்பது அதனுடைய பகுத்தறிவுச்சிந்தனைக்கும் கோட்பாட்டுக்கும் எதிரானது என்று தலையைக் குனிகிறார்கள். கட்சிக்குள் அடிமைத்தனம் வளர்ந்துள்ளதன் அடையாளமே இதுவாகும்.
இதையெல்லாம் நீங்கள் தி.மு. கவின் உயர் மட்டக் கவனத்துக்குக்கொண்டு செல்ல்லாம் அல்லவா என்று கேட்டேன்.
”தி,மு.க வின் உயர் மட்டத்தில் நம்முடைய பேச்சைக் கேட்கக்கூடியவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களுக்குக் காதுகளில்லை” என்றார் ஒரு மூத்த எழுத்தாளர்.
“அப்படியென்றால் என்னதான் முடிவு?” என்று கேட்டேன்.
”நெருக்கடிதான். ஆனால் எதையும் மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். அதுதானே வரலாறு” என்று சொல்லி மெதுவாகப் பலரும் நகர்ந்துவிட்டனர்.
சிலரோ ‘தி.மு.க வே இந்தத் தடவையும் வெற்றியைப் பெறும்‘ என்று அடித்துச் சொல்கிறார்கள். ஆனால் ‘அந்த வெற்றி சவாலானதாக இருக்கும். சிலவேளை தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்படலாம். அப்படித்தோற்கடிக்கப்பட்டாலும் அதுவும் சவாலான – கடினமான தோல்வியாகவே இருக்கும்‘ என்றனர்.
இதையெல்லாம் விலகியதாகவே ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், விடுதிக் காப்பாளர்கள், விடுதிகளில் பணி செய்வோர் போன்ற சாதாரணர்களின் அபிப்பிராயம் உள்ளது. அவர்களிடம் தி.மு.க மீதான கோபமே உள்ளது. இவர்கள்தான் பொது மக்களின் உளநிலையைப் பிரதிபலிப்பவர்கள். தினமும் பல ஆயிரக்கணக்கானோருடன் உறவாடுகின்றவர்கள். இவர்களில் ஒரு சாரார் தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெற்றியடைவார் என்று சொல்கிறார்கள். அப்படி அவருக்கு வெற்றி கிடைக்காதுவிட்டாலும் தங்களுடைய வாக்குகள் விஜய்க்குத்தான் என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.
‘எதற்காக இப்படியொரு தீர்மானத்துக்கு வந்தீர்கள்?‘ என்று கேட்டேன்.
‘விலைவாசி ஏறியிருக்கு. வருமானத்தில் உயர்வில்லை. எந்தப் பிரச்சினையும் தீர்ந்தமாதிரித் தெரியவில்லை. கிராமங்களில் வளர்ச்சியே இல்லை. நகரத்தில் சும்மா “ஷோ” காட்டுகிறார்கள். அவ்வளவுதான். கிராமங்கள் அப்படியே பாழடைந்து கிடக்கின்றன. எனவே ஒரு மாற்றம் வருவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்‘ என்கின்றனர்.
‘நீங்கள் விரும்புகிற மாற்றத்தை விஜய் தருவார், செய்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவருக்கு அதற்கான அனுபவமும் ஆற்றலும் உண்டா? வெறும் சினிமா கவர்ச்சி மட்டும்போதுமா?‘ என்று சில கேள்விகளைப்போட்டேன்.
தமிழ் நாட்டில் சினிமாக்காரன்கள்தானே ஆட்சியை நடத்துகிறார்கள். கலைஞர், எம். ஜி. ஆர், ஜெயல்லிதா, விஜயகாந் எல்லோரும் சினிமாக்காரர்கள்தானே! இப்ப உதயநிதி எத்தகைய அனுபவங்களோடு, துணைமுதல்வராக இருக்கிறார்? அவர் சினிமாக்காரர் இல்லையா? உதயநிதியை விட விஜய் திறமையாளர் இல்லையா? உதயநிதியை விட விஜய்க்கு மக்கள் ஆதரவு உண்டா இல்லையா?‘ என்று என்னை மடக்க முயற்சிக்கிறார்கள்.
இன்னொரு சாரார் பா.ஜ.க வை விரும்புகிறார்கள். ”ஒரு தடவை மாற்றத்துக்கு இடமளித்துப் பார்ப்போமே. எப்போதும் ஒரேதரப்பு ஆட்சியிலிருந்தால் அது தப்பாகி விடும். மாற்றிப்பார்த்தால்தான் நன்மைகள் தீமைகள் என்ன என்று விளங்கும். சில ஊடகங்களும் சில ஆய்வாளர்களும் பயங்காட்டுகிறார்கள். அது உண்மையா இல்லையா என்பதை நாம் நேரில் அறிய வேண்டாமா?”என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு, பா.ஜ.கவின் நோக்கத்தையும் அது பிற மாநிலங்களில் செய்து வரும் அத்துமீறல்களையும் ஆட்சித்தவறுகளையும் சொன்னேன்.
‘அதெல்லாம் முழுசா உண்மை கிடையாது. வதந்திதான்‘ என்று நம்முடைய கருத்தை ஏற்கமறுக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் நாம் தெளிவூட்டும் விடயங்களைப்பற்றிச் சிறிது சிந்தித்து, தம்முடைய முடிவை மாற்றிக்கொள்ளும் உளநிலையுடன் உள்ளனர். ஆனால், இதற்குக் கடுமையாக வேலை செய்யவேண்டும் என்றேன் ஊடக நண்பர்களிடம்.
‘அப்படியென்றால், அ.தி.மு.க, சீமானைப் பற்றியெல்லாம் பேச்சே இல்லையா?‘ என்று கேட்கிறார்கள் நமது ஊடகர்கள்.
ஈழத் தமிழ் ஊடகர்களுக்கு சீமான் இன்னும் ஒரு கவர்ச்சி முகம்தான்.
அ.தி.மு.க, பா.ஜ.க விற்குள் கரைந்து விட்டது. சீமானை, அவருடைய வாக்குத்தளத்தை விஜய் எடுத்துக் கொள்கிறார். இதுதான் அங்குள்ள நிலவரமாக உள்ளது. இதை நான் ஒரு வெளிப்பார்வையாளராகத்தான்அவதானித்தேன்‘ என்று முடித்துக்கொண்டேன்.
தேர்தல் நிலவரத்தை அறிவதற்கு தி.மு.க உட்பட ஒவ்வொருதரப்பும் தமிழகம் முழுவதிலும் சர்வே (மதிப்பீட்டுக் கணக்கெடுப்பை) நடத்துகின்றன. தி.மு.க வில் செல்வாக்கு மிக்க நபராக, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீஸ்வரன் இருக்கிறார். தி.மு.க வில் கட்சிக்குள்ளே செல்வாக்கும் அதிகாரமும் உள்ள நபர் சபரீஸ்வரன்தான். இலங்கையில் ராஜபக்ஸக்களின் தரப்பில் பஸில் ராஜபக்ஸ இருந்தாரோ அப்படி. பஸில் எம்.பியாகவும் அமைச்சராகவும் கட்சியின் பொறுப்பு மிக்க பதவியிலும் வெளிப்படையாகவும் செயற்பட்டார். சபரீஸ்வரன் அப்படியல்ல. அவர் நிழல் முகம். ஆனால், உள்ளே இருந்து எதையும் தீர்மானிக்கும் கப்டன் அவர்தான். தி.மு.க வின் சார்பாக மேற்கொள்ளப்படும் சர்வே நடவடிக்கை, சபரீஸ்வரன் வேதமூர்த்தியின் தலைமையில்தான் நடக்கிறது.
இதைப்போல வெவ்வேறு கட்சிகளும் சர்வேயை மேற்கொள்கின்றன. அதற்காகப்பெருந்தொகை நிதி செலவழிக்கப்படுகிறது. நிபுணத்துவ நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் என்பது எளிய ஒரு ஏற்பாடு. மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும் ஒரு ஜனநாயக நடவடிக்கை என்ற காலம் போய் விட்டது. இப்பொழுது அது பல்வேறு உத்திகள், தந்திரங்கள், ஏமாற்றுக்கலை எனப் பலவகையான ஏற்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒன்றாகி விட்டது.
மக்களின் உணர்வை நாடிபிடித்து அறிவதில் இருக்கும் ஆர்வமும் பதட்டமும் தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாமல், மக்களுடைய வாழ்க்கையின் நிலைவரம் எப்படி உள்ளது, அதை மாற்றுவதற்கான பொறிமுறைகளின் – நடவடிக்கைகளின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று தொடர்ந்து அறிந்து கொண்டிருப்பதும் அதற்கான தீர்வுகளை வைப்பதுமே உண்மையான சர்வேயாக இருக்கவேண்டும்.
ஒரு வெளியாளின் பார்வை என்று இதைப் பார்த்தாலும் அடிப்படையில் ஒரு உண்மை உண்டு. மக்கள் இயல்பாகவே மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த உணர்வு அவர்களுடைய நிறைவின்மைகளினால் உருவாகிறது. அதிற் குறிப்பாகப் பொருளாதார நெருக்கடி முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறது. இதில் ஊழல் ஒரு தீர்க்கமான பாத்திரமாகும். ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளைக் கையாள்வதில்தான் எதிர்த்தரப்புகள் கவனம் செலுத்துகின்றன. ஊழலின் பருமன் எவ்வளவு என்பது இங்கே முக்கியமானதல்ல. அந்தச் சொல் ஒரு அழகிய, ஆழமான அரசியல் முதலீடாக உருமாற்றம் பெறுகிறது. இலங்கையின் அனுபவம் கூட அதுதான். போரை முடித்து வைத்தவர்கள், போரிலே வெற்றியடைந்தவர்கள் என்ற கதைகளை எல்லாம் மக்கள் தூக்கி எறிந்து விட்டு, ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஒன்று திரண்டார்கள். அதனுடைய விளைவே எவராலுமே மதிப்பிட முடியாதிருந்த தேசிய மக்கள் சக்தி (NPP) யின் வெற்றியாகும்.
உலகெங்கும் ஊழலுக்கு எதிரான ஆட்சி மாற்றம் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் விஜய் கையில் எடுத்திருப்பதும் இதையே. ஆனால், அதைசினிமாக் சாகஸமாகவே அவர் கையாளர்கிறார். இயல்பான மக்கள் எழுச்சியாக இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படும் அரசியல் கூடுகைகள் வீண் செலவீனத்திலேயே போய்முடிவதுண்டு. எதிர்க்கட்சிகளும் விஜயை ஒரு சினிமாச் சாகஸக்காரராகவே அடையாளப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனாலும் இதை ஆதரிப்பதற்கும் ஒரு குழு உண்டு. அதில் விஜய் ரசிகநிலையில் உள்ள எழுத்தாளர்கள் சிலரும் இருக்கிறார்கள்.
விஜயைப்போல ஊழல் விவகாரத்தை அ.தி.மு.கவோ, பா.ஜ.க வோ இதை எடுக்கமுடியாது. அவற்றின் கைகளில் கறைகள் தாராளமாகவும் ஏராளமாகவும் உண்டு. அவர்களுடைய ஒரே முதலீடு, மோடிதான். மோடியும் அமித்ஸாவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்று கைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.கவினர். இப்படியொரு நிலை அ.தி.மு.கவுக்கு வரும் என்று தாம் நினைக்கவே இல்லை என்று அ.தி.மு.க வின் நெடுங்கால ஆதரவாளர் ஒருவர் கண்ணீர் விட்டார். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்காது சார் என்று கைகளைப் பிடித்தார்.
தமிழ்நாடு வரலாற்று நெருக்கடிகளையும் சோதனைகள் பலவற்றையும் கண்டு வந்திருக்கிறது. அதனிடம் ஒரு அறிவார்ந்த நோக்கு நிலை எப்போதும் உண்டு. பெரியார், அண்ணாத்துரை, காமராஜர், கருணாநிதி எனப் பல ஆளுமைகளும் தலைவர்களும் உருவாக்கி வளர்த்தெடுத்த பாரம்பரியம் இது. இந்தத்தலைமுறை இதை எப்படிக்கையாளப்போகிறது, எப்படித்தொடரப்போகிறது என்பதைப்பார்க்க வேண்டும். தி.மு.ககூட்டணியின் அரசியல் வியூகம் எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் எல்லாமே தங்கியுள்ளது.
https://arangamnews.com/?p=12645
By
கிருபன் ·