Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது.

மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

"மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டி போலீஸார் எச்சரித்ததாலேயே" அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார், திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன்.

ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது என்ன?

உதகை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இம்மாநாட்டில், மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என, 34 கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இருப்பதாக ஆளுநர் மாளிகை இணையதளம் கூறுகிறது. ஆனால், அந்த பல்கலைக்கழகங்களின் சார்பாக எந்தவொரு துணைவேந்தரோ அல்லது துணைவேந்தர் பொறுப்புக் குழு பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர்கள் இல்லை, அதற்கு பதிலாக துணைவேந்தர் பொறுப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

மாநில பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த மாநாட்டில் பேசிய ஆர்.என். ரவி, "துரதிருஷ்டவசமாக இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என தங்களுக்கு மாநில அரசிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, அவர்கள் என்னிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்." என்றார்.

தற்போது கூட துணைவேந்தர் ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விதிமுறைகளை மீறி தனியார் அமைப்புகள் தொடங்கி, பல்கலைக்கழக நிதியை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தான் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிடுவதாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

"இது முன்னெப்போதும் நடந்திராதது. நள்ளிரவில் துணைவேந்தர் வீடுகளின் கதவுகளைத் தட்டி காவல்துறை எச்சரித்துள்ளது. 'நீங்கள் மாநாட்டுக்கு சென்றால், வீட்டுக்குச் செல்ல முடியாது. உங்கள் குடும்பத்தைக் காண முடியாது' என எச்சரித்துள்ளனர். நான் அவர்களிடம், 'உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், ஆபத்துக்கு ஆளாகாதீர்கள்,' என்று கூறினேன்" என ஆர்.என். ரவி கூறினார்.

தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சித்த அவர், கல்வி தரத்தை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் மாறாக இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

குற்றச்சாட்டை மறுக்கும் திமுக

ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக புறக்கணித்தது திமுக.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கற்பனையாக பேசுவதில் ஆளுநருக்கு இணையாக இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது. இந்த மாநாடு எதற்காக கூட்டப்படுகிறது, இந்த மாநாட்டின் திட்டம், பேசுபொருள் என்ன என்பதையெல்லாம் ஆளுநர் மாளிகை துணைவேந்தர்களுக்கு அனுப்பியிருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

கல்வி வளர்ச்சிக்கும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசிய குடியரசு துணைத் தலைவரை மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார் ஆளுநர். ஆளுநரும் குடியரசு துணைத் தலைவரும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்துகொள்ளாதவர்கள். தங்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்." என்றார்.

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசு தலைவருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்ததை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்தார். அதையே டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுப் பேசினார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம்,TKS ELANGOVAN / X

படக்குறிப்பு,ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் டி.கே.எஸ். இளங்கோவன்

"ஆளுநர் கல்வி தொடர்பாக ஒரு கூட்டம் நடத்துகிறார் என்றால், மாநில கல்வி அமைச்சரிடம் முதலில் கேட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக எதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை பேசியிருக்க வேண்டும். குடியரசு துணைத் தலைவருக்கு பதிலாக மத்திய கல்வி அமைச்சரை அழைத்து வந்திருக்க வேண்டும். கல்வித்துறை குறித்து குடியரசு துணைத் தலைவருக்கு என்ன தெரியும்? மாநில முதலமைச்சரிடம் இதுகுறித்து கூறினார்களா?" என டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வியெழுப்பினார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றின் பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

"வரும் 27ம் தேதி எங்கள் பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கும் முக்கியமான கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தன. மேலும், இன்று பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதனால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என காவல் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என கேட்டபோது, அப்படியெல்லாம் எதுவும் வரவில்லை என்றார்.

இந்த மாநாட்டில் அரசியல் நோக்கம் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவது குறித்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை.

மாநாட்டில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் சிலர் பங்கேற்கவில்லை என்பது குறித்து ஆளுநர் கவலை கொள்ளத் தேவையில்லை. எந்த சூழ்நிலையால் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வந்தவர்களுக்கு வாழ்த்து கூறுவோம், வராதவர்கள் மாநாட்டின் குறிப்புகளில் இருந்து நடந்தவற்றை கற்றுக் கொள்ளலாம்" என்றார்.

ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

மாநாட்டுக்கு எதிர்ப்பு ஏன்?

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு தடையாகவும் மக்கள் நலனுக்கு எதிராகவும் செயல்படுகிறார் என தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று ஏப். 08 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடுவும் விதித்தது.

இதையடுத்து, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறிவந்த நிலையில், அரசு-ஆளுநர் மோதல் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விரைவிலேயே ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தும் செய்தி மீண்டும் சர்ச்சையை அதிகப்படுத்தியது. முன்னதாக, ஏப். 16 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தியிருந்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதலமைச்சருக்கு வந்துவிட்டதால், அதிகாரமில்லாத வேந்தராக ஆளுநர் தொடர்வதாக முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்வதாகக் கருதி, இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த துணைவேந்தர்கள் மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுவதாக, ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த மாநாட்டுக்கு எதிராகவும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.

ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை கண்டித்து உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1xzkqe0eo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.