Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

June 7, 2025 10:26 am

மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சோ.சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தமிழினப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும் 2001.11.28 ஆம் திகதி நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்ததையும், மாவை.சோ.சேனாதிராஜா கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும், வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு நினைவிழக்குமளவு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி, அவரது நினைவுகளைப் பதிவு செய்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் பிறந்து, யாழ்.வீமன்காமம் வித்தியாலயத்திலும், யாழ்.நடேஸ்வராக் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக இளங்கலைமாணி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட மாவை.சோ.சேனாதிராஜா, ஈழத்தமிழினத்தின் மீதான அடக்குமுறைகளின் எதிர்க்குரல்களுள் ஒருவராக பதின்மங்களிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டவர்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை என்ற அரசியல் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்துகொண்ட மாவை அண்ணரின் அரசியல் பிரவேசத்துக்கான காலவெளி அப்போதுதான் மெல்லக் கருக்கொள்ளத் தொடங்கியது.

இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளை உச்சம் பெறச் செய்த தனிச்சிங்களச் சட்டம் 1956 இல் அறிமுகம் செய்யப்பட்டு கிடப்பிலிருந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு அதனை வடக்கு, கிழக்கிலும் நடைமுறைப்படுத்த முனைந்தமைக்கு எதிராக, 1961 ஜனவரி 21 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 7 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, 1961 பெப்ரவரி 20 இல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மாவை சேனாதிராஜாவின் போராட்ட வாழ்வு ஆரம்பித்தது எனலாம்.

பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக, ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகக் காலப்பெறுமதி மிக்க அரசியல் பணியாற்றிய இவர், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, மகசின், வெலிக்கடை உள்ளிட்ட எட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழரசின் மூத்த தலைவரும் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி, ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தின் உள்ளும், வெளியும் ஒலிக்கத் தொடங்கினார்.

ஈழ விடுதலைப் போராட்ட எழுச்சியின் போதும், அதன் வீழ்ச்சியின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலும் மாவை சேனாதிராஜாவின் பணிகளின் கனதி மிகப்பெரியது.

ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட ஓர் இனத்தின் அரசியல் குரலாக இருந்து, பன்னாட்டு அரசியல் ஒழுங்கிலும், ஜெனிவா அரங்கிலும் தன்னாட்சி உரிமை கோரும் ஈழத்தமிழரின் அரசியல் பயணத்துக்கு அங்கீகாரம் தேடும் வரலாற்றுப் பணியையே அவர் தன் வாழ்வாக்கிக் கொண்டவர்.

மென்வலுப் போக்கில் நம்பிக்கை கொண்ட செயற்பாட்டு அரசியல்வாதியாக இருந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கத்தின் ஒரு தசாப்பத கால தலைவராக, கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த அவர்தான், இன்று தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இருக்கும் என் போன்ற பலருக்கும் அரசியல் வழிகாட்டி.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியல் தளம்பல் மிகுந்திருந்த 2014 செப் டெம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல், தன் அந்திமத்தின் போதான இறுதிக் கணம் வரை எமது கட்சியின் தலைவராக, தெளிவார்ந்த அரசியல் செயற்பாடுகளே அவரது தெரிவுகளாயிருந்தன.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடக்கம் இன்றைய நாள் வரையும் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் தீர்க்கம்மிகு அரசியல் தீர்வை, எமக்குக் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது இனம் ஒருமித்து வெளிப்படுத்தியே வந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பிற்பாடு, பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யக் கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் உலகத்தின் எதிர்பார்ப்பை அங்கீகரித்து, இலங்கை அரசின் போருக்குப் பிந்திய நிலைப்பாட்டாலும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையினாலும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அமரர். மாவை.சோ.சேனாதிராஜா எல்லா வகை சமாதான முன் முயற்சிகளுக்காகவும் மிகக் கடுமையாக உழைத்திருந்தார்.

போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசு என்ற அரசியல் ஆலமரம், கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே விரவியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர் அரசியல் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்க வேண்டுமெனில், அது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாக, மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த மாவை அண்ணன், ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளாகிய இளைஞர்களையும், மகளிரையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் எல்லா வகைப் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செற்பாடுகளின் பயன் விளைவினால்தான், தமிழ்த் தேசியம் அதன் கொள்கை இறுக்கமும், கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், நீடித்த செழுமைமிகு இருப்புக்காகவும், தொலைநோக்கான வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பை ஏற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், மக்களையும் கொள்கைப் பற்றுறுதியோடு தீர்க்கமான வழிமுறைகளில் முன்னேற்றிச் சென்ற ஒரு பெருந்தலைவராகவே அவரது மறைவின் பின்னும் மாவை அண்ணருக்கான அடையாளம் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கிறது.

நாங்கள் ஒரு சுதந்திர அரசியல் இயக்கமாக – மக்கள் திரட்சி நிறைந்த தேசமாக எம்மை உருவாக்கிக் கொள்ளாதவரை, பலவீனமான அரசியல் கோரிக்கையாளர்களாகவே இருக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, தமிழரசுக் கட்சியை மக்கள் பேரியக்கமாக வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற நேர்த்திமிகு சிந்தனையில் பின்வாங்காத பெருந்தலைவராக இருந்த, எனது அரசியல் வழிகாட்டியும், எமது கட்சியின் மறைந்த பெருந்தலைவருமாகிய அண்ணன் மாவை.சோ.சேனாதிராஜாவின் தடங்களை இறுகப்பற்றியபடி, சரிந்துபோயிருக்கக் கூடிய தமிழரசின் செயலூக்கத்தினை மீள நிலைநிறுத்துவதற்காக தமிழ்த்தேசிய ஆர்வலர்களோடும், தொண்டர்களோடும் இணைந்து ஒழுகி எமது அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்துவதன் வழி, ஈழத்தமிழினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தை இதயசுத்தியோடு முன்கொண்டுசெல்ல உழைப்பதுவே அன்னாருக்கான உயரிய அஞ்சலி என்பதை உணர்ந்த ஒருவனாக, அத்தகையதோர் மன உறுதியோடு அவரது மறைவுக்கான எனது அஞ்சலிகளையும், அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.” – என்றார்.

https://oruvan.com/douglas-is-the-one-who-tried-to-assassinate-mavai-sridharan-mp-statement/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.