Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாய் சுதர்சன், தமிழ்நாடு, ஐபிஎல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், எஸ்.தினேஷ் குமார்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 12 நிமிடங்களுக்கு முன்னர்

2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது.

இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமாகவுள்ளார்.

எப்படி சாதித்தார் சாய் சுதர்சன்?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் பிற கிரிக்கெட் உச்ச நட்சத்திரங்கள் போல பி.ஆர். ஏஜென்சி வைத்து தன் புகழை பரப்புவதில் சாய் சுதர்சன் கவனம் செலுத்துவதில்லை. கடந்த 2 வருடங்களில் எவ்வளவோ சாதனைகள் செய்தும் கூட அவை பேசுபொருளாக மாறாததற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், கவனச்சிதறல் இல்லாமல் தன் ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு இந்த மீடியா வெளிச்சமின்மை சுதர்சனுக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.

சிறந்த பேட்டருக்கான 5 அம்சங்களும் ஒருங்கே பெற்றர் சாய் சுதர்சன்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒரு பேட்டர் உண்மையான குணம் அவருடைய பேட்டிங்கில் வெளிப்பட்டுவிடும். ஒரு பேட்டர் தன் முழு திறமையையும் வெளிக்கொணர விரும்பினால், தன் இயல்புக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பேட்டிங்கின் அடிப்படை லட்சணம், கட்டுக்கோப்பாக இருப்பது. வாழ்க்கையை மனம்போன போக்கில் வாழும் ஒருவர் நல்ல பேட்டராக இருக்க முடியாது" என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் சைமன் ஹியூஸ்.

சாய் சுதர்சன் தன் இயல்புக்கு நேர்மையாக இருப்பதால்தான் அவருடைய ஆட்டத்தை போலவே அவருடைய பேச்சிலும் அமைதியும் வசீகரமும் ஒருசேர இழையோடுகின்றன.

ஒரு சிறந்த பேட்டருக்கான அடிப்படை என ஐந்து லட்சணங்களை கிரிக்கெட் எழுத்தாளர் மார்க் நிக்கோலஸ் வரையறுத்துள்ளார். உயர் இடது முன்கை (high left elbow), அசைவற்ற தலை (A still Head), நேரான பேட் (Gun-barrel straight bat), ஷாட் விளையாடும் போது அலைபாயாத உடல் (Body Shape), ஆதிக்கம் செலுத்தும் உடலின் இடது பாகம் (dominant left side of the body).

இவை அனைத்தும் இயல்பாகவே சாய் சுதர்சனுக்கு வாய்த்துள்ளன. கூடவே ரேஞ்ச் ஹிட்டிங் (Range Hitting) பயிற்சியின் மூலம், T20-க்கு அவசியமான வலுவையும் கூட்டிக் கொண்டார். சுதர்சனின் பேட்டிங் டெக்னிக்கை கவாஸ்கருடன் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஒப்பிடுகிறார். ஆனால், கவாஸ்கர் போல சுதர்சனை ஒரு முழுமையான கிளாசிக்கல் பேட்டர் என்று சொல்லிவிட முடியாது.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி அவதானிப்பது போல மைக் ஹஸ்ஸி பாணியிலான ஒரு வீரர் இவர். கட்டுக்கோப்பான டெக்னிக், கடுமையான உழைப்பு, நேர்மறையான சிந்தனை. இதுதான் சுதர்சனின் தாரக மந்திரம். அவருடைய பேட்டை உயர்த்திப் பிடிக்கும் பாணி, சில சமயம் லாராவை நினைவூட்டுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய் சுதர்சன்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2023-ல் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாய் சுதர்சன் பங்கேற்றிருந்தார்.

இந்தியாவில் திறமையான பேட்டர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், உச்சபட்ச கிரிக்கெட்டில் எல்லாரும் சாதிப்பதில்லை. பிரித்வி ஷா தொடங்கி ரஜத் படிதார் வரை நிறைய உதாரணங்களை சொல்லலாம். சாய் சுதர்சன் மற்ற பேட்டர்களிடம் இருந்து எவ்வாறு தனித்து நிற்கிறார்?

ஒரு நல்ல வீரருக்கு அழகு, கிடைத்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்வது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த முதல் 10 பேட்டர்களில் பெரும்பான்மையினர் தங்களுடைய முதல் 3 ஆட்டங்களுக்குள் சதமோ அரைசதமோ அடித்தவர்கள். சாய் சுதர்சன் தனது அறிமுக ஒருநாள் ஆட்டத்தில் அரை சதமும் அறிமுக ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சதமும் அடித்தவர்.

ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நிலையான இடமின்றி இருந்த அவர், 2023 சீசனில் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். உள்ளூர் லிஸ்ட் ஏ, டி20 அறிமுக ஆட்டங்களில் கூட சுதர்சன் சோடை போகவில்லை என்பது அவருடைய மனத்திட்பத்துக்கு (Temperement) சான்று.

சாய் சுதர்சன் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அம்சம், அவருடைய ஃபுட் ஒர்க். கிரிக்கெட்டில் ஒருவர் சாதிப்பதற்கு நல்ல லென்த்தில் (good length) வீசப்படும் பந்துகளை விளையாடுவதில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வகையான பந்துகளே அதிகம் வீசப்படுகின்றன. இந்த ஐபிஎல் சீசனிலேயே ஷமி, பும்ரா போன்றவர்களின் அத்தகைய பந்துகளை சுதர்சன் அநாயசமாக எதிர்கொண்டதை பார்த்தோம்.

இதை எப்படி சுதர்சன் சாதிக்கிறார்?

ஒன்று, இறங்கிவந்து விளையாடி பவுலரின் திட்டத்தை கெடுத்து, தனக்கு வேண்டிய இடங்களில் பந்துவீச மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார். இல்லையென்றால், தனக்கு இருக்கும் அற்புதமான டைமிங்கை (Timing) பயன்படுத்தி, பந்தின் பாதையை கணித்து நன்றாக உள்வாங்கி கடைசி நொடியில் ஆளில்லாத பகுதிக்கு விரட்டுகிறார்.

சாய் சுதர்சன்

சாய் சுதர்சனின் பலவீனங்கள்

ஒரு சிறந்த பேட்டர் சரியாக கால்களை நகர்த்தினால் மட்டும் போதாது; தலையையும் சரியாக நகர்த்த வேண்டும் என்கிறார் இங்கிலாந்து பேட்டிங் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன். குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள, இந்த தலை நகர்வு மிகவும் அவசியம். 6 அடி உயரம் என்பதால் கால்களுடன் தலையையும் முன்னகர்த்தி விளையாடும் போது சுதர்சனால் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளருக்கும் நெருக்கடி கொடுக்க முடிகிறது. தலை முன்செல்ல அதனைத் தொடர்ந்து காந்தம் போல உடலும் கால்களும் பின்னே செல்கின்றன. கோலி தன்னுடைய பேட்டிங்கில் உச்சத்தில் இருந்தபோது இதே பாணியில் தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டார்.

சாய் சுதர்சன் ஆட்டத்தில் பலவீனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்போது கூட சில சமயங்களில் பவுன்சர் பந்துகளுக்கு அவர் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம், பவுன்சர் வீசினால் அவர் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று பந்துவீச்சாளர்கள் நம்பும் நிலை இல்லை.

இந்திய இடக்கை பேட்டர்கள் பவுன்சர் பந்துகளுக்கு தடுமாறுவது புதிதல்ல. கங்குலி, யுவராஜ், ரெய்னா என ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஆனால், இவர்கள் அளவுக்கு பவுன்சரை எதிர்கொள்வதில் சுதர்சன் பலவீனமானவர் அல்ல. முடிந்தவரை மைதானத்தின் கோணங்களை பயன்படுத்தி அதன் வீரியத்தை மட்டுப்படுத்தி விடுகிறார். கோலிக்கும் ஆரம்ப காலத்தில் இந்த பிரச்னை இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சாய் சுதர்சனின் டெக்னிக் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் செல்லுபடியாகாது என தமிழ்நாடு அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கூறிருந்தார். இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முயற்சியாகத்தான் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று சுதர்சன் விளையாடினார். இந்த ஐபிஎல் சீசனில் அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது, அந்த குறைபாடு பெரிதாக வெளிப்படவில்லை. கடந்த காலங்களில் இந்த பலவீனத்தை வைத்துக் கொண்டே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் அவர் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான போது, தாறுமாறான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவர் ரன் குவித்துள்ளார். இந்தியா ஏ அணி சார்பில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்துள்ளார். கவுண்டி கிரிக்கெட் அனுபவம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு கைகொடுக்கும் என நம்பலாம். பவுன்சர் விளையாடுவதில் குறைபாடுள்ள பிராட்மேன்தான் 99.94 என்ற சராசரியில் ரன் குவித்தார் என்பதை எப்படி புரிந்துகொள்வது?

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஆடினார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சன் அவ்வளவு எளிதாக தனது பேட்டிங்கில் திருப்தியடைந்து விடமாட்டார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு, "டி20 ஆட்டங்களில் தன்னுடைய ஆட்டம் இன்னும் முழுமைபெறவில்லை; இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது" என கூறியுள்ளார். உலகமே பார்த்த ஐபிஎல் தொடரில் 759 குவித்த ஒருவர் இப்படி பேசினார் என்பதை நம்ப முடிகிறதா?

சுதர்சன் மட்டுமல்ல எந்தவொரு உச்சபட்ச பேட்டரும் தங்களுடைய ஆட்டத்தில் நிறைவு பெற்றுவிட மாட்டார்கள். சச்சின், சங்ககாரா போன்றோர் கடைசி ஆட்டம் வரை தங்கள் பேட்டிங் நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ளவே முயன்றார்கள்.

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாய் சுதர்சனிடம் உள்ள பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சம், விமர்சனங்களை அவர் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் பாங்கு. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள மாட்டார் என்றார்கள். கவுண்டி போட்டியில் கலந்துகொண்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டின் அடிப்படைகளை மெருகேற்றிக்கொண்டார். டி20-க்கு ஏற்ற வீரர் இல்லை என்றார்கள். ஆஸ்திரேலியாவின் பிரபல பவர் ஹிட்டிங் பயிற்சியாளர் ஷனான் யங் (Shanon young) பயிற்சியின் கீழ் தன் ஆட்டத்தின் வேகத்தை கூட்டிக்கொண்டார்.

இப்போது அவர் டெஸ்டில் தாக்குப்பிடிப்பாரா என விமர்சகர்கள் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்சன் அதற்கும் தனது பேட்டால் பதில் கொடுப்பார் என நம்புவோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1j5yl4dr68o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.