Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

June 13, 2025

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

— கருணாகரன் —

சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். 

இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது.  

அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்தது. இரண்டுக்கும் காரணம், நட்புச் சக்திகள் யார், எதிர்ச் சக்திகள் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இந்த மாதிரி வீறாப்புப் பேசுவதால் எதிர்விளைவுகளே ஏற்படும் என்பது. கடந்த காலத்திலும் இதுவே நடந்தது. நட்புச் சக்திகளை எதிர்தரப்பாகக் கருதி வசைபாடுவதும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் துரோகியாக்கி விலக்குவதும் ஒரு நோயாகும். இது உச்சமடைந்தே சக போராளி இயக்கங்களை நோக்கி விடுதலைப்புலிகள் துப்பாக்கி ஏந்தியது. இறுதியில் சிங்களப் பேரினவாதத் தரப்புக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழிவைச் சந்தித்ததே மிச்சமாகும். 

இதிலிருந்தெல்லாம் யாரும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் சுமந்திரன் சற்று யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள். துணிச்சலாகச் சில விடயங்களையேனும் பேசக் கூடியவர்கள். கொஞ்சமாவது ஜனநாயகத் தன்மையைப் புரிந்து கொண்டவர். தமிழரசுக் கட்சியில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய ஓர் ஆளுமை. அவரே இப்படிப் பேசுகிறார் என்றால்… துக்கப்படாமல் என்ன செய்ய முடியும்?  

இதையிட்டு ஏன் சிரிப்பு வந்தது என்றால், இந்த மாதிரிப் பேச்சுகளும் எச்சரிக்கைகளும் சவால்களும் சிலருக்கு உளக் கிளர்ச்சியை அளிக்கலாம். ஆனால், மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் தரப்போவதில்லை. ஆகவே இதனால் பயனில்லை. மட்டுமல்ல, இதெல்லாம் வானத்தை நோக்கித் தீர்க்கப்படும் வெற்று வேட்டுகளுக்கு நிகரானவை. இப்படி எத்தனை வெற்று வேட்டுகளைப் பார்த்து விட்டோம் என்பதால் உண்டான சிரிப்பு. 

அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நன்மையைத் தருவதாக அமைய வேண்டும். அப்படியிருந்தால்தான் அந்த அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு முன்னேற்றம் கிட்டும். அந்த அரசியலும் முன்னகர்வதோடு அதுமுன்னேற்றகரமானதாகவும் அமையும். அதற்கே பெறுமானமும் வரலாற்று மதிப்பும் ஏற்படும். 

இதற்கு நிதானமும் கூர்மையான நுண்மதியும் விரிந்த மனப்பாங்கும் அவசியம். முக்கியமாக ஜனநாயகப் பண்பு வேண்டும். அப்படியாயின், அந்த அரசியலை முன்னெடுப்போர்  வெளிப்படுத்தும் வார்த்தைகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஜனநாயகப் பண்புடனிருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும். இல்லையெனில் அனைத்தும் சிதைந்து விடும். 

ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் சிதைந்து பின்னடைந்து, தோல்வி கண்டதற்குப் பிரதான காரணம், ஜனநாயக அடித்தளம் சிதைந்ததும் சிதைக்கப்பட்டதுமாகும். ஜனநாயகத்தைச் சிதைத்துக் கொண்டு எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஈடேற்றத்தையும் எவராலும் எந்தச் சக்தியாலும் செய்ய முடியாது. 

என்பதால்தான் உலகம் ஜனநாயகத்தை முதன்மையாக வலியுறுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிச்சட்டமே ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பெற்ற வெற்றிதான். 

ஆகவே ஜனநாயகச் சட்டத்திலிருந்துதான் நீங்கள் அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும். எதையும் வலப்படுத்த இயலும். ஜனநாயகச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும்போதும் அதைப் புறக்கணிக்கும்போதும் நீங்களே சிதைக்கப்படுகிறீர்கள். சூழலும் சிதைக்கப்படுகிறது. 

இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மிக உணர்ச்சி வசப்பட்டுச் சுமந்திரன் அந்த உரையை ஆற்றியிருந்தார். அந்த உரை, தற்போதைய நிலையில் கட்சியின் உறுப்பினர்களை மகிழ்வித்திருக்கலாம். ஆனால், அதற்கு வரலாற்றில் எந்தப் பெறுமானமும் இல்லை. வரலாற்றில் மட்டுமல்ல, சமகாலச் சூழலிலும்தான். 

ஏனென்றால், அது அவருடைய அலைவரிசையில் சேர்ந்தியங்க வேண்டிய இன்னொரு தமிழ்த்தேசியவாதத் தரப்பான தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சாடியது; எதிர்நிலைக்குத் தள்ளியது. 

தேர்தல் அரசியலில் போட்டித் தரப்பை எதிரணியாகக் கருதிப் பேசுவதொன்றும் புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. தேர்தல் அரசியலில் போட்டி எந்தளவுக்கு முதன்மை பெற்றிருக்குமோ அந்தளவுக்கு சுழிப்புகளும் தந்திரங்களும் இருக்கும். அதேபோல சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் இடமுண்டு. இதையெல்லாம் மனதிற் கொண்டே எதிரணியின் மீதான விமர்சனங்களையோ கருத்துகளையோ முன்வைக்க வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சுமந்திரன் உட்பட தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒருமுகப்பட்டு அறிவிப்புச் செய்தது, வடக்குக் கிழக்கில் NPP க்கான ஆதரவை வழங்கக் கூடாது. தமிழ்த்தரப்புகளே சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும். இதில் விசேடமாகச் சுமந்திரன் இன்னொன்றையும் சொன்னார், ‘கூட்டாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதை விட தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தலுக்குப்பின்னர் வெற்றியைப் பொறுத்து கூட்டாக ஆட்சியை அமைத்துக் கொள்வோம் என. 

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரன் கூறிய கருத்துகளை பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சபைகளில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பும் விட்டுக் கொடுப்பு – ஏற்றுக் கொள்ளல் – புரிந்துணர்வு போன்றவற்றின் அடிப்படையில் பேசியிருக்க வேண்டும். முதற்சுற்றுடன் முற்றுப் புள்ளியை வைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து நிதானமாகப் பேசியிருந்தால் இந்த மாதிரியெல்லாம் வார்த்தைகள் வெளிப்பட்டிருக்காது. நெஞ்சை நிமிர்த்தியிருக்க வேண்டியதில்லை. நமக்குச் சிரிப்பையும் துக்கத்தையும் வரவழைத்திருக்க வேண்டியிருந்திருக்காது. வேண்டிய அரசியற் சூழலையும் கெடுத்திருக்கத் தேவையில்லை. 

உண்மையில் இங்கே என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோமாளித்தனமும் முட்டாள் வேலைகளும்தானே!

ஏனென்றால், போரினால் தோற்கடிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்றவற்றில் அனைத்துத் தரப்புமாக இணைந்து வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில், ஆளாளுக்கு பகை கொண்டு எதிர்முனைப்படுவது முட்டாள்தனமன்றி வேறென்ன? 

இதற்கு நிதானமாகப் பல பரிமாணங்களில் செயற்பட வேண்டும். அதில் ஒன்றே உள்ளுராட்சி மன்றங்களுமாகும். உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவதென்பது, தமிழீழத்தைக் கைப்பற்றுவதோ அதற்கு நிகரான ஆட்சியை நிகழ்த்துவதோ அல்ல. பதிலாக இந்தச் சபைகளின் மூலம் மக்களுக்கான சேவைகளை செழிப்பான முறையில் வழங்கச் செய்வதே. இது ஒரு  மிகச் சிறிய எல்லைக்குட்பட்ட பணியே. வேண்டுமானால், சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமது கட்சியை வளர்த்துக் கொள்வற்குச் சில வாய்ப்புகள் கிடைக்கலாம். அதற்கு அப்பால் அரசியல் நன்மைகள் இல்லை. 

ஆனால், இங்கே நடப்பதோ தமிழீழத்துக்கான இறுதிப்போரைப் போலவே உள்ளது. 

இதெல்லாம் தமிழ்த் தேசியவாதத் தரப்புகளுக்கிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும். அதாவது யார் 22 மாற்றுத் தங்கம். யார் 24 மாற்று. யார் 18 மாற்று என்ற அடையாளப்படுத்தலின் விளைவு. இதற்கே இந்தப் போர்.

இதற்கு முன்பு, தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கும் அதற்கப்பாலான தரப்புகளுக்குமிடையிலேயே முரண்பாடுகளும் மோதல்களும் இருந்தன. தமிழ்த்தேசியவாதத்  தரப்பு அரசாங்கத்தையும் (ஆட்சியாளர்களையும்) சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பையும் வெளிப்படையாக எதிர்த்தது. மறுதரப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அதை அரசோடும் சிங்களப் பௌத்தத் தரப்போடும் கலந்து பேசியே பெற முடியும் என்று நம்பியது. 

ஆகவே இரண்டினது வழிமுறையும் வேறு வேறாக இருந்ததால் அவற்றின் நடைமுறையும் வேறாகவே இருந்தது. இதனால் இரண்டு வகையான அரசியல் முறைமைகளை மக்களிடையே கொண்டிருந்தன. இதில் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதில் தீராத நெருக்கடியும் போட்டியும் நிலவியது.  

விளைவாக துரோகி – தியாகி என்று பொதுவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தன இந்தத் தரப்புகள். உண்மையில் இந்த அசிங்கப்படுத்தலை தமிழ்த்தேசியவாதத் தரப்புகளே செய்தன. அதற்கு மறுதலையான தரப்பு அதைச் செய்யவில்லை. அதற்கான தேவையும் அந்தத் தரப்புக்கு இருக்கவில்லை என்பதை நாம் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். 

தமிழ்த்தேசியவாதத் தரப்பினுடைய அரசியல் தடுமாற்றங்களும் அரசியல் குறைபாடுகளும் வரட்சியுமே அது தன்னைத் தியாகியாக – சுத்தமான பேர்வழியாக முன்னிறுத்திக் கொள்ள முனைந்ததற்குக் காரணமாகும். தன்னுடைய பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கும் எதிர்த்தரப்பிற்கு வளர்ந்து வரும் செல்வாக்கை மறுதலிப்பதற்குமே எதிர்த்தரப்பைத் துரோகியாகச் சித்தரித்தது. இது எதிர்கொள்ள முடியாத நிலையின் (Unable to face) வெளிப்பாடாகும். 

ஆனால், மக்கள் இரண்டு தரப்பையும் ஆதரித்தே வந்துள்ளனர். இதுதான் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். அதிலும் தமிழ்த்தேசியவாதத் தரப்புகளுக்கே ஊடக ஆதரவு தாராளமாக இருந்தது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல, சிவில் அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தின் பெருந்திரள், மத நிறுவனங்கள் மற்றும் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர், தமிழ்ப்பரப்பில் இயங்கும் அரசியல் நோக்கர்களும் பத்தியாளர்களும் எனப் பல தரப்புகளின் பேராதரவு தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கே இருந்தது. 

அதற்கு மறுதலையான தரப்புக்கு இவை எதுவுமே இல்லை. ஆனாலும் அவையும் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. செல்வாக்குச் செலுத்தின. அதாவது, ஆதரவுப் பரப்புரை கிடைக்காது விட்டாலும் பரவாயில்லை. மிகக் கடுமையான எதிர்ப்பரப்புரைகளின் மத்தியிலேயே அவை மக்களின் ஆதரவைப் பெற்றன. இது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான ஓரம்சமாகும். 

அதாவது மக்கள் ஜனநாயக அடிப்படையில் அனைத்துச் சிந்தனைக்கும் – மாற்று வழிமுறைகளுக்கும் ஆதரவளித்தனர். சமூகம் என்பது அவ்வாறுதானிருக்கும். அது எப்போதும் ஒற்றைப் படையாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அப்படி ஒற்றைப்படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினால் அது ஜனநாயக அடிப்படையை மறுப்பதாகும். அது எதேச்சாதிகாரமாகும். ஆனால். அத்தகைய எதேச்சாதிகாரத்தையே தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் தொடர விரும்புகின்றன. இதற்கு அவை சொல்லும் நியாயமே – நியாயப்படுத்தலே – ‘ஏகபிரதிநிதிகள்‘, ‘ஏக பிரதிநிதித்துவம்‘ என்பது. 

இத்தகைய சிந்தனையும் அணுகுமுறையும் தவறு. சுமந்திரனின் அன்றைய பேச்சும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் கஜேந்திரன்களின் வெளிப்பாடுகளும் இதையே வெவ்வேறு விதமாகக் காட்டுகின்றன. 

இதைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இல்லை. சிவில் சமூகத்தினரும் இல்லை. மதத் தலைவர்களும் இல்லை. மக்கள் அமைப்புகளும் இல்லை. ஊடகங்களும் இல்லை. பதிலாக கொம்பு சீவி விடுவதற்கே ஆட்கள் அதிகம். அல்லது கனத்த மௌனம்கொள்ளுதல்.

இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன.

அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது. 

2009 க்குப் பிறகு இது மெல்ல உள்ளடங்கிக் கிடந்தது. ஆனாலும் அடுத்த ஆண்டுகளில் மெல்ல மெல்லப் புத்துயிர் பெற்று இப்பொழுது உச்சமடைந்துள்ளது.

ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாவடக்கம், கையடக்கம் (மனம்போன போக்கில் எதையும் எழுதக்கூடாது) வேண்டும். 

இதை ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியம். 

இப்போது ‘துரோகி’ என்ற புனிதச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று அதை உச்சரிப்போர் சொல்ல வேண்டும். ஏனென்றால் எல்லோரும் துரோகிகளாகவே மாறி மாறிச் சித்திரிக்கப்படுகிறது. 

இவ்வளவுக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்கு வலுவான எதிர்ச் சக்தியாக NPP உள்ளபோதும் இந்தக் கூத்துகள் நடப்பதுதான் சிரிப்புக்கிடமானது.

https://arangamnews.com/?p=12082

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.