Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்!

14 Jun 2025, 4:46 PM

gaurdiannewdfjfj.jpg

சாக் பியூசாம்ப் 

வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை.

ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலின் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி நடந்தது. இந்த எதிர்த் தாக்குதலின் முழுமையான தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தப் போரில் மற்ற எந்தப் போரிலும் போலவே—ஆரம்ப நாட்களில் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்று இப்போதே உறுதியாகக் கணிப்பது கடினம்.

இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தத் தாக்குதல்கள் பல நாட்கள் அல்லது சில வாரங்கள் நீடிக்கும் என்று கூறுகிறார்கள். இது எதிர்காலத்தில் ஒரு முடிவில்லாத பிராந்தியப் போருக்கான அறிகுறியாகும். இந்த நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

image-2502.png

கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் ஈரான் நிபுணர் கரீம் சட்ஜாத்பூர் இவ்வாறு எழுதுகிறார்: “இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலின் முழுமையான தாக்கம் வெளிப்படப் பல ஆண்டுகள் ஆகும் என்று வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது ஈரான் அணு குண்டு தயாரிப்பதைத் தடுக்கலாம் அல்லது அணு குண்டை உருவாக்குவதை உறுதி செய்யலாம். இது [ஈரானிய] ஆட்சியைச் சீர்குலைக்கலாம் அல்லது அதை வலுப்படுத்தலாம்.”

இந்த மோதலின் விளைவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் குறைந்தது மூன்று முக்கிய கேள்விகள் இருக்கின்றன.

  • இஸ்ரேலின் நோக்கம், அவர்கள் கூறியது போல, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டதா, அல்லது இது ஆட்சி மாற்ற நடவடிக்கையா?

  • ஈரான் எந்த அளவிற்குப் பதிலடி கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது?

  • இது அணு குண்டு பெறுவது குறித்த ஈரானின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது?

இந்தக் கேள்விகள் அனைத்தும் இப்போதைக்கு பதிலளிக்க முடியாதவை. ஆனால் நமக்குத் தெரிந்தவற்றை மதிப்பிட முயற்சிப்பது, கடந்த ஒரு நாள் நிகழ்வுகளின் தாக்கங்களைக் கண்டறியும் போது எதைத் தேட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த உதவும்.

இஸ்ரேலின் உண்மையான நோக்கம் என்ன?

பல பதிற்றாண்டுகளாக, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தன் இருப்புக்கான அச்சுறுத்தலாகவே கருதிவருகிறது.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதில் உறுதியாக இருந்ததா அல்லது அச்சுறுத்தலாக உணர்ந்தால் விரைவாக ஒன்றைப் பெறுவதற்கான திறனை மட்டுமே விரும்பியதா என்பது ஒருபோதும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், அணுசக்தி திட்ட நடவடிக்கைகள் —உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய மையவிலக்குகளை உருவாக்குவது போன்றவை — கடைசி நிமிடம்வரை ஒரே மாதிரியாக இருக்கும். அப்போது தாக்குதலால் அதைத் தடுப்பது சாத்தியமற்றதாகிவிடும். இஸ்ரேலியக் கண்ணோட்டத்தில், இஸ்ரேலியர்களைக் கொல்லும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கும் மதகுருமார்களின் ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது.

இந்தக் காரணத்திற்காக, இஸ்ரேல் பல பதிற்றாண்டுகளாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதாக அச்சுறுத்தி வருகிறது.

நேற்று இரவு, இஸ்ரேல் அந்த அச்சுறுத்தலை நிறைவேற்றியது. ஈரானிய அணுசக்தி வளர்ச்சியின் “உடனடி” அச்சுறுத்தலால் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் விவரித்துள்ளனர். அணு குண்டுகளை “சில நாட்களுக்குள்” தயாரித்திருக்க முடியும் என்று ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இப்போதே தாக்குவதா அல்லது எதிர்காலத்தில் அணு ஆயுதம் தாங்கிய ஈரானை எதிர்கொள்வதா என்ற ஒரு தேர்வை எதிர்கொண்டதாக இஸ்ரேலின் நிலைப்பாடு உள்ளது.

இந்தக் கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்று நமக்கு இன்னும் தெரியவில்லை (ஒருவேளை ஒருபோதும் தெரியாமல் போகலாம்). ஆனால் நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கான நியாயப்படுத்தலுக்கும், அவர்கள் உண்மையில் தாக்கிய இலக்குகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் உள்ளன.

image-2503.png

தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள ஈரானின் நதான்ஸ் அணுசக்தி நிலையத்தின் காட்சி

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்கும் எந்த ஒரு முயற்சியும் இரண்டு இலக்குகளில் அதிக கவனம் செலுத்தும்: நதான்ஸிலும் ஃபோர்டோவிலும் உள்ள அணு செறிவூட்டல் வசதிகள். இஸ்ரேல் ஈரானிய அணு விஞ்ஞானிகளை இலக்காகக் கொண்டாலும், இயற்பியல் ஆராய்ச்சிப் பணிகள் சார்ந்த ஏற்பாடுகள் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்ரேல் நதான்ஸைத் தாக்கியது, ஆனால் ஆரம்பகால நிபுணர் மதிப்பீடுகள் குறைந்த அளவிலான சேதத்தையே சுட்டிக்காட்டுகின்றன. ஃபோர்டோ ஆரம்ப சுற்றில் தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும், குறைந்தபட்சம் பகிரங்கமாக இல்லை.

எனவே, உண்மையான இலக்கு அணுசக்தித் திட்டம் என்றால், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன்கள்மீதும் இராணுவத் தலைமைமீதும் இவ்வளவு தாக்குதல் நடத்தி, அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் குறைந்த சேதத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியது ஏன் ?

இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன.

முதலாவது, போர் தொடரும்போது அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் மேலும் கடுமையாகத் தாக்கக்கூடும். ஈரானின் இராணுவத் தலைமையை – அதன் கிட்டத்தட்ட முழு விமானப் படையின் தலைமையையும் சேர்த்து – கொல்வதன் மூலம், இஸ்ரேல் ஈரானின் வான்பரப்பைப் பாதுகாக்கும் திறனையும் பதிலடி கொடுக்கும் திறனையும் பலவீனப்படுத்தியுள்ளது. இந்த முதல் தாக்குதல்கள், பின்னர் அணுசக்தி அமைப்புகளின் மீது அதிக கவனம் செலுத்தும் தாக்குதல்களுக்கு அடித்தளமாக அமையக்கூடும்.

அமெரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதர் மைக்கேல் லீட்டர், வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், “முழு நடவடிக்கையும் ஃபோர்டோவை அகற்றுவதன் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இஸ்ரேலுக்கு இன்னும் பெரிய திட்டங்கள் உள்ளன. இது அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பது உறுதி. ஆனால் ஈரானிய ஆட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துவதற்கான முயற்சியிலும் இது ஈடுபடும். முக்கியத் தலைவர்களை அகற்றுவதன் மூலம், இஸ்ரேல் ஈரானிய அரசாங்கத்தின் திறனை பலவீனப்படுத்துகிறது.

இஸ்ரேலின் இறுதி நம்பிக்கை என்னவென்றால், இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் பேரழிவுத் தாக்குதல்களைப் போலவே ஈரானிலும் ஒரு விளைவை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் திறனைக் கடுமையாகச் சேதப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் அதைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

வெளியுறவு உறவுகள் கவுன்சிலின் மத்திய கிழக்கு நிபுணர் ஸ்டீவன் குக், “ஃபாரீன் பாலிசி”யில் இவ்வாறு எழுதுகிறார்: “தாக்கப்பட்ட இலக்குகள், இஸ்ரேலின் நோக்கம் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதைவிடவும் விரிவானது என்பதைத் தெளிவுபடுத்தின. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதில் இஸ்ரேலியர்கள் திருப்தி அடையவில்லை என்பது தெளிவாகிறது, ஆனால் ஆட்சி மாற்றத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது.”

சுருக்கமாகச் சொன்னால், வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேல் அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 

அணுசக்தி அழிப்பு, ஆட்சி மாற்றம் என்பதாக இஸ்ரேலின் லட்சியங்கள் விரிவானதாக இருந்தால் நீண்ட, ஆபத்தான மோதல் நிகழ்வதற்கான சாத்தியக்கூறை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்.

ஈரானால் பதிலடி கொடுக்க முடியுமா?

image-2504.png

பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கு ஆய்வாளர்களிடையே இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தது.

ஈரான் பெரிய நாடு – ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளைவிட அதிக மக்கள் தொகை கொண்டது. அது இராணுவத்தில் பெரும் முதலீடு செய்துள்ளது. பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தையும், மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள பினாமி போராளிகளின் விரிவான வலையமைப்பையும் கொண்டுள்ளது, இவை அனைத்தும் இஸ்ரேலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த ஈரானின் ஏவுகணைத் தாக்குதல், அது குறைந்தபட்சம் சில பதிலடி கொடுக்கும் திறனைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் எந்த அளவுக்கு அந்தத் திறன் உள்ளது?

2023, அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ஈரானின் பினாமி வலையமைப்பை முறையாக அழித்துவருகிறது. காசாவில் நடந்த கொடூரமான போர் ஹமாஸைத் தலைமறைவு இயக்கமாகச் செயல்படவைத்துள்ளது, இஸ்ரேலிய நகரங்கள்மீது பெரிய ராக்கெட் தாக்குதல்களை நடத்தக்கூடிய ஒரு மினி-அரசாக அல்லாமல் வெறும் கிளர்ச்சிக் குழுவைப் போல ஹமாஸ் சண்டையிடுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹிஸ்புல்லாவின் தலைமைமீது நடந்த தொடர்ச்சியான திடீர்த் தாக்குதல்களின் விளைவாக ஹிஸ்புல்லா தற்போதைய சண்டையிலிருந்து விலகி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள ஈரானிய இலக்குகளை மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது. இதில் 2024 அக்டோபரில் ஈரானின் வான் பாதுகாப்புமீதான பெரிய தாக்குதலும் அடங்கும். கடந்த ஆண்டு ஏப்ரலில் டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலை இலக்காகக் கொண்ட ஈரானிய ஏவுகணை, டிரோன் தாக்குதல் கிட்டத்தட்ட எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படையில் இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உள்ளன.

முதலாவது, ஈரான் இப்போது ஒரு காகிதப் புலி. அதன் பினாமிகளை அழிப்பதன் மூலமும் அதன் பதிலடி கொடுக்கும் திறன்களைப் பலவீனப்படுத்துவதன் மூலமும் இஸ்ரேல் ஒப்பீட்டளவில் அதிக இழப்பின்றி ஈரானைத் தாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்ததுபோல ஈரானியர்கள் நிச்சயமாக பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அது ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கும். இஸ்ரேலிய இலக்குகளுக்குக் குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

இரண்டாவது விளக்கம், ஈரான் தன் பலத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தது என்பதாகும்.

ஈரான் இஸ்ரேலை வெறுத்தாலும், அது முழு அளவிலான போரை தனது நலன்களுக்கு உகந்ததாகக் கருதவில்லை. இந்தக் காரணத்திற்காக, அது தனது மிகவும் பேரழிவுகரமான ஆயுதங்களையும் – யேமனில் உள்ள ஹவுதிகள் அல்லது ஈராக் போராளிகள் போன்ற அதன் மீதமுள்ள கூட்டாளிகளின் ஆயுதங்களையும் – பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க ஒதுக்கிவைத்திருந்தது.

இப்போது பதற்றம் வெளிப்படையாக வந்துவிட்டதால், ஈரான் தன்னை இனி கட்டுப்படுத்திக்கொள்ளாது. மேலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பேரழிவுகரமான எதிர்வினை வரவிருக்கும் நாட்களில் நடக்கும். அத்தகைய தாக்குதல் இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை மட்டுமின்றி நாட்டின் நகரங்களையும் தாக்கும். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்த முயற்சிக்கும். அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைக் கொல்லவும் வாய்ப்புள்ளது.

image-2505-1024x576.png

இந்த இரண்டு காட்சிகளில் எது மிகவும் சாத்தியம் என்று நமக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இரண்டுக்கும் இடையில் நிறைய சாத்தியமான இடைவெளிகள் உள்ளன. ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக வலுவாக பதிலடி கொடுக்கிறது. ஆனால் போருக்கு முந்தைய மதிப்பீடுகள் அஞ்சியதைப் போல அமெரிக்கா அல்லது போக்குவரத்துக் கப்பல்களுக்கு எதிராக ஆக்ரோஷமான தாக்குதல் ஏதும் இல்லை.

ஆனால் மோதலின் எல்லை, ஈரான் உண்மையில் பலவீனமாக இருக்கிறதா அல்லது அப்படித் தோன்றுகிறதா என்பதைப் பொறுத்தே பெரிய அளவில் தீர்மானிக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்த மோதலுக்குப் பிறகு ஈரான் அணு குண்டு பற்றி எப்படிச் சிந்திக்கும்?

தொழில்நுட்ப ரீதியாக, ஒற்றைத் தாக்குதலில் ஒரு நாடு அணு குண்டு தயாரிப்பதைத் நிரந்தரமாகத் தடுப்பது சாத்தியமற்றது. இலக்கு வைக்கப்பட்ட அரசாங்கம் ஒரு ஆயுதத்தைப் பெற உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அழிக்கப்பட்ட எதுவும் மீண்டும் கட்டியெழுப்பப்படலாம்.

இஸ்ரேல், வன்முறையால் மட்டும், குண்டு தயாரிக்கும் ஈரானின் விருப்பத்தை அகற்ற முடியாது. எனவே இஸ்ரேல் நதான்ஸுக்கும் ஃபோர்டோவுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் மற்றொரு தாக்குதலைத் தொடங்காமல் ஈரானியர்கள் அதை சரிசெய்வதைத் தடுக்க முடியாது. மேலும், வெற்றிகரமான இஸ்ரேலியத் தாக்குதல் அணுசக்தியைப் பெறுவதில் ஈரானின் ஆர்வத்தை வலுப்படுத்தும். அதாவது குண்டுகள் விழுவது நின்றவுடன் ஈரான் அணுசக்தி மறுசீரமைப்புக்காக பெரும் வளங்களில் முதலீடு செய்யும்.

இந்தத் தர்க்கத்தின்படி, இஸ்ரேலியத் தாக்குதல் இஸ்ரேலை முடிவற்ற போருக்கு இட்டுச் செல்கிறது. அதாவது ஈரான் தன் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பாமல் இருக்க வேண்டுமானால் இஸ்ரேல் ஈரான்மீது குறிப்பிட்ட இடைவெளியில் குண்டுகளை வீசிக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த வாதத்தைச் சற்றே ஆழமாக ஆராய்ந்துபார்க்கலாம். குறைந்தது மூன்று சாத்தியமான விளைவுகளை அலசலாம்.

image-2507.png

முதலாவது, இது சரியானது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு உண்மையான சேதத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்தச் செயல்பாட்டில், எதிர்கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தடுக்க ஒரு குண்டை உருவாக்க வேண்டும் என்று ஈரானை நம்ப வைக்கிறது. 1981 ஆம் ஆண்டில் ஈராக்கின் ஒசிராக் அணுசக்திக் கட்டமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுவே நடந்தது. இது சதாம் உசேனின் அணுசக்தி வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் முடிவுக்குக் காரணமானது (இந்தத் திட்டம் 1992 வளைகுடாப் போரால் மட்டுமே உண்மையாகத் தடைபட்டது; அதைத் தொடர்ந்து அணுசக்தி ஆய்வுகள் நடந்தன).

இரண்டாவது சாத்தியக்கூறு என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்கள் அதன் விமர்சகர்கள் நினைப்பதைவிடவும் மிகவும் அதற்குப் பயனளிப்பதாக இருக்கலாம். ஒருவேளை, ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருப்பதால், அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவது ஆபத்தானது என்றும் செலவு அதிகம் எனவும் ஈரானியர்கள் கருதலாம். அல்லது, ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி வெற்றிபெற்று, ஈரானில் புதிதாக வரும் அரசு அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்காமல், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண முடிவு செய்யலாம்.

மூன்றாவது சாத்தியக்கூறு: போரின்போது ஈரானின் அணுசக்தி வசதிகள் பொதுவாக எதிர்பார்க்கப்படுவதைவிட மிகக் குறைவான சேதத்தையே சந்திக்கின்றன. இஸ்ரேல் தடுப்பதற்குத் தயாராக இருக்கும் முன்பே ஈரான் ஒரு குண்டை உருவாக்க விரைந்து செயல்படுகிறது.

இஸ்ரேல் இதுவரை பெற்ற வெற்றிகளைக் கருத்தில் கொண்டால் இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் நிபுணர் மதிப்பீடுகள், ஈரான் தனது ஆயுதத் திட்டத்தைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகத் தோன்றுவதைவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன.

மத்திய கிழக்கு நிறுவனத்தின் கொள்கை துணைத் தலைவர் கென் பொல்லாக், “ஃபாரீன் அஃபேர்ஸ்” இதழில் எழுதுகிறார்: “ஈரானிடம் ஏற்கனவே பல அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமான அளவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது. இது கொள்கலன்களில் அடைக்கப்பட்டு மூன்று வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் நடந்துகொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களில் இஸ்ரேலால் அவை அனைத்தையும் கைப்பற்ற முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய மற்றும் பிற மேற்கத்திய உளவுத்துறைகள் புதிய, இரகசிய ஈரானிய அணுசக்தி தளங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கலாம். அவை அடையாளம் காணப்பட்டாலும் அந்தத் தளங்களை அழிப்பதிலும் சிக்கல் இருக்கலாம், ஏனெனில் ஈரான் தனது தற்போதைய வசதிகளின் அளவைவிட அவற்றை இன்னும் பலப்படுத்த வாய்ப்புள்ளது.”

எவ்வளவு விரைவாக என்பது சேதத்தின் அளவைப் பொறுத்தது. ஆனால் ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு சிந்தனை மையத்தின் ஃபேபியன் ஹாஃப்மேன், “கணிசமானவை தப்பித்தால்” அது “ஒப்பீட்டளவில் விரைவாக ஆயுத-தர செறிவூட்டல் அளவை அடையலாம்” என்று கூறுகிறார்.

இந்த மூன்று சாத்தியக்கூறுகளில் எது நடக்க வாய்ப்புள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியக்கூறுக்கும் ஈரான் மிக விரைவில் அணு குண்டை உருவாக்கும் சாத்தியக்கூறுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. எனவே, தற்போதைய மோதல்களின் தாக்கங்களை இப்போதே உறுதியுடன் கணிப்பது சாத்தியமல்ல என்பதே தெளிவாக இருக்கிறது.

நன்றி: வோக்ஸ் இணைய தளம்

https://minnambalam.com/israel-iran-war-three-important-questions/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.