'பூமியின் நரகம்': அமெரிக்காவில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images கட்டுரை தகவல் ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பிபிசி நியூஸ் முண்டோ 7 ஜனவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 7 ஜனவரி 2026, 03:44 GMT நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு திடீரென அழைத்து வரப்பட்ட ஒரு பதவி நீக்கப்பட்ட அதிபரை எங்கு அடைத்து வைப்பார்கள்? வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ள புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தை, அமெரிக்காவிலுள்ள ஒரு வழக்கறிஞர் "பூமியின் நரகம்" என்று விவரித்துள்ளார். அந்த இடத்திற்கு குற்றவாளிகளை அனுப்புவதற்கு கூட சில நீதிபதிகள் மறுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கைவிலங்கு இடப்பட்டு, இரண்டு போதைப்பொருள் தடுப்பு முகவர்களால் அழைத்து வரப்பட்ட மதுரோ, நியூயார்க் வந்தடைந்தவுடன் நகைச்சுவையாகப் பேசினார். குட் நைட் என்பதை பியூனாஸ் நோச்சஸ் என்று நீங்கள் சொல்வது சரியா? குட் நைட்! புத்தாண்டு வாழ்த்துகள்!"என்று அவர் கூறினார். அவர் உடனடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (டிஈஏ) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் (எம்டிசி) உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் வரை, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அங்கேயே இருப்பார்கள் (அக்குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் மறுக்கிறார்கள்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Adam Gray/Getty Images படக்குறிப்பு,வழக்கறிஞர்கள் "பூமியின் நரகம்" என்று விவரிக்கும் ஒரு தடுப்புக் காவல் மையத்தில் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ளார். எஃகு தடுப்புகள் மற்றும் கேமராக்கள் புரூக்ளின் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்.டி.சி என்பது பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கான்கிரீட் மற்றும் எஃகு சிறையாகும். இது துறைமுகத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலும், ஐந்தாவது அவென்யூ, சென்ட்ரல் பார்க் மற்றும் பிற பிரபலமான சுற்றுலா மையங்களில் இருந்து சுமார் 5 கி.மீ (3 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நகரச் சிறைச்சாலைகளில் நிலவிய அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக 1990-களின் தொடக்கத்தில் இந்த மையம் திறக்கப்பட்டது. துறைமுகத்தில் வந்து இறங்கும் அல்லது கப்பல்களில் ஏற்றி அனுப்பப்படும் பொருட்களைச் சேமித்து விநியோகிக்கும் கிடங்குகள் இருந்த இடத்தில் தான் இந்த மையம் தற்போது அமைந்துள்ளது. மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகளை அடைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றாலும், குறுகிய கால தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை அடைக்கவும் இந்த தடுப்புக்காவல் மையம் பயன்படுத்தப்படுகிறது என்று ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் (பிஓபி) வலைத்தளம் தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸால் இயக்கப்படும் ஒரே ஒரு தடுப்புக் காவல் மையம் இதுதான். 2021-ஆம் ஆண்டில் மன்ஹாட்டனில் இருந்த இதுபோன்றதொரு மையத்தை ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் மூடிவிட்டது. பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019-இல் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடுப்புக்காவல் மையம் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் இரண்டு ஃபெடரல் நீதிமன்றங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது எஃகு தடுப்புகளாலும், நீண்ட தூரத்திலிருந்தே படம்பிடிக்கும் திறன் கொண்ட கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. மதுரோ வருகைக்குப் பிறகு, வெளிப்புறப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பலத்து பாதுகாப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு விளையாடுவதற்கான வசதி, மருத்துவப் பிரிவுகள் மற்றும் நூலகம் போன்றவை உள்ளன என, பொது ஒளிபரப்பு சேவை (பிபிஎஸ்) செய்தி தெரிவித்துள்ளது. அங்குள்ள கைதிகள் நாளின் பெரும் பகுதியை மிகக் குறுகிய அறையிலேயே கழிக்கிறார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது விளக்கமோ இதுவரை வழங்கப்படவில்லை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, சிலியா ஃபுளோரஸ் மற்றும் நிக்கோலஸ் மதுரோ ஆகியோர் அமெரிக்க முகவர்களால் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். 'மனிதாபிமானமற்ற சூழல்' ஊடக அறிக்கைகளின் படி, 1,000 பேரை அடைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த மையத்தில், 2019-ஆம் ஆண்டில் 1,600 பேர் இருந்தனர். பிஓபி இணையதளத்தின்படி, தற்போது அங்கு 1,330-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். நவம்பர் 2024-இல் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த மையமானது, பரிந்துரைக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது எனத் தெரிய வருகிறது. அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான், எம்.டி.சியில் அடிக்கடி நடக்கும் வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டடத்தின் உள்கட்டமைப்பும் கவலைக்குரியதாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் தடையின் போது, கடுங்குளிரில் வெப்பமூட்டும் வசதி இன்றி அங்கிருந்தவர்கள் பல நாட்களாக தவித்தபோது அது குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. "எம்.டி.சியின் சூழல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானமற்றது," என்று அப்போதைய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் அறிவித்தார். தடுப்புக்காவல் மையத்தின் மோசமான நிலை குறித்து அவர் அரசாங்கத்தின் மீது வழக்கும் தொடர்ந்தார். "சிறையில் அடைக்கப்படுவதால் மனித உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு,மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அடைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் மையம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதோடு, சுவர்களாலும் கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஆண்ட்ரூ டாலக் போன்றவர்கள் நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், இந்தச் சிறை "பூமியின் நரகம்" என்று குறிப்பிட்டனர். 2024-ஆம் ஆண்டில், எட்வின் கார்டெரோ என்பவர் சக கைதிகளால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருக்காக வாதாடிய டாலக் இவ்வாறு கூறினார். 2021 முதல் 2024 வரை பல கைதிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மையத்தின் மோசமான சூழலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அங்கு கைதிகளை அனுப்பவே தயங்குகின்றனர். மாவட்ட நீதிபதி கேரி பிரவுன் ஆகஸ்ட் 2024-இல், வரி ஏய்ப்பு செய்த 75 வயது முதியவருக்கு தான் விதித்த ஒன்பது மாத சிறைத்தண்டனையை ரத்து செய்வதாகவும், பிஓபி அவரை புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பினால், அதற்குப் பதிலாக அவரை வீட்டுக் காவலில் வைப்பதாகவும் கூறினார். "இங்கு நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மேற்பார்வை குறைபாட்டையும், அமைதி சீர்குலைந்திருப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்க மற்றும் உயிருக்கு ஆபத்தான நிர்வாகத்தை கொண்டுள்ள ஒரு குழப்பமான சூழலையும் வெளிப்படுத்துகின்றன" என்று பிரவுன் கூறியதாக தி இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளும் இதனை செய்திகளில் இடம்பிடிக்கச் செய்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க நீதித்துறை 25 பேர் மீது (கைதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட) வன்முறை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தது தொடர்பான 12 வெவ்வேறு வழக்குகளில் விசாரணை அறிவித்தது. பி.ஓ.பி முன்பு வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட நபர்களைப் பாதுகாப்பதையும், சிறைப் பணியாளர்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பேணுவதையும் நாங்கள் ஒரு கடமையாகக் கருதுகிறோம்," என்று தெரிவித்தது. எம்.டி.சி.யில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒரு அவசர நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், நிலுவையில் உள்ள பராமரிப்புப் பணிகளை முடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கார்டெரோ மற்றும் பிறரின் மரணங்களைத் தொடர்ந்து சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Hollywood To You/Star Max/GC Images படக்குறிப்பு,ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ், தனக்கு தண்டனை விதிக்கப்படும் வரை இந்த மையத்தில் சில மாதங்களை கழித்தார். இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்த மற்ற முக்கிய நபர்கள் புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் உள்ள மோசமான சூழலுக்கு மத்தியிலும், அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முக்கியமான நபர்களை அங்கு அனுப்பி வருகின்றனர். உதாரணமாக, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள முதல் லத்தீன் அமெரிக்க அரசியல் தலைவர் மதுரோ அல்ல. ஹோண்டுராஸின் முன்னாள் அதிபர் ஜுவான் ஓர்லாண்டோ ஹெர்னாண்டஸ் கடந்த ஜூன் மாதம் வரை இந்த மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் வேறொரு சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். மெக்சிகோவின் முன்னாள் பொதுப் பாதுகாப்புச் செயலர் ஜெனாரோ கார்சியா லூனா என்பவரும் இந்த தடுப்புக் காவல் மையத்தின் ஓர் அறையில் அடைபட்டுள்ளார். மிகவும் பிரபலமான மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஜோவாக்வின் "எல் சாப்போ" குஸ்மான் இங்கு அடைக்கப்பட்டிருந்தார். சினலோவா கார்டெல் தலைவர்களில் ஒருவரான மெக்சிகோவைச் சேர்ந்த இஸ்மாயில் "எல் மாயோ" சம்பாடா, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக இப்போதும் அதே கட்டடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அல் கொய்தா உறுப்பினர்களும் இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பிரபல ராப் பாடகரும் இசையமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ் சில மாதங்கள் இந்த தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். பெண்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நியூ ஜெர்ஸியில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார். எப்ஸ்டீனின் கூட்டாளியும், முன்னாள் துணைவருமான கிஸ்லேன் மேக்ஸ்வெல், திவாலான எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ தளத்தின் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் மற்றும் நிதி மோசடிகளுக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ஆகியோரும் புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தில் அடைபட்டிருந்த முன்னாள் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04170dd9x5o
By
ஏராளன் · 1 minute ago 1 min