Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்?

16 Jun 2025, 9:33 AM

war-2.jpg

ராஜன் குறை

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் உலகப் போர் மூளக்கூடிய சூழல் உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், இஸ்ரேல் நாட்டின் மனிதாபிமானமற்ற போக்கையும், அத்துமீறும் ராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தலைவராக அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது, வரவேற்கத்தக்கது.

காரணம், ஈரான் நாட்டின் அணு ஆற்றல் உற்பத்தி கேந்திரங்களின் மீது இஸ்ரேல் இரு தின ங்களுக்கு முன்பு தாக்குதல் நட த்தியுள்ளது. தொடர்ந்து அவற்றை முற்றிலும் தாக்கி அழிக்கும் திட்டமும் வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலின் மீது டிரோன் தாக்குதல்கள் நட த்த த் துவங்கியுள்ளது. இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்புக் கவசங்களைக் கடந்து அந்த டிரோன்கள் இஸ்ரேலில் சேதங்களை விளைவித்துள்ளன. பதிலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரான் பற்றியெறியும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் சீனா ஈரானுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தால், இது உலகப் போராக மாறும் சூழ்நிலை மிகத் தூலமாக நிலவுகிறது.

இஸ்ரேலின் பிரதமர் நெதான்யாஹு பாரதப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். பிரதமர் மோடி போர்ச் சூழல் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலைக் கண்டித்துக் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. உலக நாடுகளில் பெரும்பாலானவை, 142 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆனால் இந்தியா வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுவதுடன், இந்திய வெளி உறவுக் கொள்கை அறம் சார்ந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா கடைபிடித்துவந்த வெளியுறக் கொள்கைக்கு மாறானதாக, முரணானதாக இன்றைய வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளது. இந்த பிரச்சினையை சற்றே ஆழமாக புரிந்து கொண்டால்தான் பாஜக அரசாங்கம் செய்யும் தவறு என்ன என்பதையும் பரிசீலிக்க முடியும்.

இஸ்ரேலின் உருவாக்கம்

இஸ்ரேல் என்பது இயற்கையாக வரலாற்றின் போக்கில் உருவான தேசமல்ல. அது புராண கதைகளின் அடிப்படையில் யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலம் (promised land) என்ற மத நம்பிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களும் பாலஸ்தீனம் “திரும்பி வர”, குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நிலத்தில் வசித்த வந்த பாலஸ்தீனியர்கள் திடீரென அந்நியப்படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கென்று தனி நாடும் அமைத்துத் தரப்படவில்லை. அவர்கள் இஸ்ரேலின் முழுமையான குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்படவில்லை. 

பல்வேறு நாடுகளில் வசித்துவந்த யூதர்களின் மூதாதையர்கள் பாலஸ்தீனத்தலிருந்துதான் சென்றார்கள் என்று நிறுவுவது சாத்தியமில்லை. கடவுள் யூதர்களுக்கு பாலஸ்தீன நிலத்தை வாக்களித்ததையும் நிரூபிக்க முடியாது. என்றாலும் அது மத நம்பிக்கை அல்லவா என்று கேட்கலாம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால் கடவுள் வாக்களித்தாரே தவிர கையளிக்கவில்லை என்பதுதான். யூதர்கள் கடவுள் சொற்படி கேட்டு நடக்காததால் கோபமடைந்த கடவுள் அவர்களை சொந்த நாடற்றவர்களாக வாழும்படி சபித்துவிட்டார் என்பதுதான் யூதர்களின் உண்மையான மத நம்பிக்கை. அதனால் தீவிர மத நம்பிக்கையாளர்களான யூதர்கள், Orthodox Jews, இஸ்ரேல் நாட்டு உருவாக்கத்தையோ, அங்கே அனைத்து யூதர்களுக்கும் குடியேறும் உரிமை இருக்கிறது என்பதையோ ஏற்பதில்லை. எனவே இஸ்ரேலின் உருவாக்கம் உண்மையான யூத மத நம்பிக்கைக்கும் எதிரானது எனலாம்.

ISRAEL.jpg

ஹாலுகாஸ்ட் (Holocaust)

இந்த நிலையில் எப்படி இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க நேர்ந்தது, முடிந்தது என்றால் அதற்குக் காரணம் ஹிட்லர் நட த்திய ஹாலுகாஸ்ட் என்று குறிப்பிடப்படும் யூத இனப்படுகொலை (1933-1945). ஜெர்மானிய தேசம் ஆரியர்களுக்கு சொந்தமானது, அதில் யூதர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூறிய ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்தான். பின்னர் காஸ் சேம்பர்களில் அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்தான். இந்த கொடூர நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த உலகம் யூதர்களுக்கு தனி நாடு இருப்பது நல்லது என நினைத்ததால்தான் இஸ்ரேலின் உருவாக்கம் சாத்தியமானது.

அடுத்து மற்றொரு கேள்வி எழ வேண்டும். ஹாலூகாஸ்ட் எப்படி சாத்தியமானது? ஹிடலர் ஏன் தன்னை ஆரிய இனம் என்று அழைத்துக்கொண்டான்? யூத  மதத்தின் வளர்ந்த நிலைதான் கிறிஸ்துவம் எனலாம். ஆனால் யூத மதம் தன்னை கிறிஸ்துவத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்வதில் தீவிர முனைப்புக் காட்டியது. கார்ல் மார்க்ஸ் 1843-ஆம் ஆண்டு எழுதிய “யூதர்கள் பிரச்சினை குறித்து” (On Jewish Question) என்ற சிறிய கட்டுரையைப் படித்தால் எப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த புதிய குடியாட்சி அரசாங்கங்களில் யூதர்களின் தனித்துவம் குறித்த கேள்விகள் எழுந்தன என்பதைக் காணலாம்.

holocast-1024x681.jpg

யூதர்கள் மத ரீதியாக, சமூக ரீதியாக விலகியிருந்த து மட்டுமல்லாமல், பெருமளவு பண த்தை வட்டிக்குத் தருபவர்களாக, வர்த்தக நிதியாதாரமாக இருந்தார்கள். யூதர்களின் சுயநலமும், பணப்பற்றும் அவர்களின் தனித்த அடையாளங்கள் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். கார்ல் மார்க்ஸும் ஒரு யூதர்தான் என்பதுடன், ராபை எனப்படும் யூத மதகுருவின் பெயரனும் ஆவார். அந்த கட்டுரையின் இறுதியில் யூதர்களின் சமூக விடுதலை என்பது சமூகமே யூத மத த்திலிருந்து விடுதலை அடைவதுதான் என்று கூறுகிறார் (the social emancipation of the Jew is the emancipation of the society from Judaism). பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானுடவாத சிந்தனை அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் மதச்சார்பற்ற அரசியலே இன்னமும் காலூன்றவில்லை என்பதைக் காண வேண்டும்.

யூத, கிறிஸ்துவ மதங்களின் மீது ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு இருந்த அதிருப்தியின் பின்னணியில்தான், ஐரோப்பியர்கள் சமஸ்கிருத மொழியை பயின்றபோது உருவாக்கிய ஆரிய இனக் கோட்பாடு பலரையும் கவர்ந்தது. சமஸ்கிருத மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இருந்த ஒற்றுமைகளை ஆராய்ந்தபோது சமஸ்கிருதம் பேசிய ஆரியர்களின் மத்திய ஆசியாவிலிருந்து வந்த மூதாதையர்களின் ஒரு பிரிவினர்தான் ஐரோப்பாவிற்கும் சென்றனர் என்ற கருதுகோள் உருவானது. அதனடிப்படையில்தான் ஜெர்மானியர்கள் தூய ஆரிய இனத்தவர் என்ற ஹிடலரின் இனவாதாக் கோட்பாடு உருவானது. அது யூத இனப் படுகொலைக்கு வழி வகுத்தது. அது ஏற்படுத்திய அதிர்ச்சியில் யூதர்களுக்கென்று பாலஸ்தீனத்தில் ஒரு நாடு உருவாவதற்கு ஆதரவு பெருகியது.

DgvWopK8-Gandhi.jpg

சையனிசமும் இந்திய எதிர்ப்பும்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கான நிலத்தை கையளிக்கும் சையனிச (Zionist) வேலைத்திட்ட த்தை காந்தி கடுமையாக எதிர்த்தார். “இங்கிலாந்து எப்படி இங்கிலீஸ்காரர்களுக்கு சொந்தமோ, ஃபிரான்ஸ் எப்படி ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமோ அப்படி பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அதில் யூதர்களை குடியேற்றி இஸ்ரேலை உருவாக்குவது தவறு” என்று காந்தி திட்டவட்டமாகக் கூறினார். அதிலிருந்தே பாலஸ்தீனியர்களின் உரிமைகளை இந்தியா ஆதரித்து வந்தது. உள்ளபடி சொல்லப்போனால் 1948 முதல் 1992 வரை இந்தியா இஸ்ரேல் என்ற நாட்டுடன் அரசுமுறை உறவு வைத்துக்கொள்ளவில்லை.

இந்தியாவின் உருவாக்கத்தில் மத ரீதியான தேசியத்திற்கு இடமளிக்க க் கூடாது என்பதே காங்கிரசின் நிலைபாடாக இருந்தது. முஸ்லீம் லீக்கும், ஜின்னாவும் மத அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டைக் கோரினாலும், இந்தியா மத அடிப்படையிலான தேசியத்தை ஏற்கவில்லை. மக்களின் மதநல்லிணக்க அடிப்படையில் காந்தியும், அரசின் மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் நேருவும் மத அடையாள தேசியத்தினை முழுமையாக எதிர்த்து நின்றனர். அதனால் மத அடையாளத்தின் பேரில், புராணக் கற்பனையின் பேரில் உருவான இஸ்ரேலை அவர்களும், அவர்கள் வழி வந்த காங்கிரசும் முழுமையாக ஏற்கவில்லை எனலாம். குறிப்பாக அங்கே பன்னெடுங்காலமாக வசித்த வந்த பாலஸ்தீனியர்களின் உரிமைக் கோரிக்கைகளை ஆதரித்தனர். அதனால் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (PLO) துவங்கப்பட்டபோது அதனை அரபு நாடுகள் தவிர்த்து முதலில் அங்கீகரித்த நாடு இந்தியாவாகத்தான் இருந்தது.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் நெடுநாள் தலைவர் யாசர் அராஃபத் (1929 – 2004) இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். குறிப்பாக பிரதமர் இந்திரா காந்தியை (1917-1984) அவர் தன் மூத்த சகோதரி என்றே கூறினார். தலைநகர் டில்லியில் PLO அலுவலகம் 1974-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பாலஸ்தீனிய மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். முஸ்லீம் நாடான பாகிஸ்தான் இஸ்ரேலின் ஆதரவு சக்தியான அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருந்ததும், இந்தியா அணி சேராத நாடாக விளங்கினாலும் ரஷ்யாவின் சோஷலிச கொள்கைகளுக்கும், மக்கள் விடுதலை இயக்கங்களுக்கும் ஆதரவாக விளங்கியதும் குறிப்பிடத் தக்கது. இவ்வாறான கொள்கை சார்ந்த நிலைபாடு இந்தியாவிற்கு நம்பகத்தன்மையை, மரியாதையைப் பெற்றுத் தந்தது.  

India-3.jpg

இஸ்ரேலுடனான பாஜக அரசாங்கத்தின் நெருக்கம்

சோவியத் ரஷ்யா 1991-ஆம் ஆண்டு உடைந்த சிதறிய பிறகு, இரு துருவ உலகம் முடிவுக்கு வந்து, உலகில் அமெரிக்காவே ஒற்றைத் துருவமாக விளங்குவதாக க் கருதப்பட்டது. சுதந்திரவாத முதலீட்டிய பொருளாதாரம், சுதந்திர சந்தை பொருளாதரம், உலகமயமான வர்த்தகம் என புதிய உலகளாவிய உலக பொருளாதார அமைப்பு உருவானது. இந்தியாவில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பதவியேற்ற நரசிம்ம ராவ் அரசு இந்திய வர்த்தக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, உலகமயமாதலை தொடங்கி வைத்தது. அத்தகைய சூழலில்தான் இஸ்ரேலையும் இந்தியா 1992-ஆம் அங்கீகரித்து அரசுமுறை உறவுகளைத் துவங்கியது.

வெகுகாலமாகவே இந்திய வலதுசாரி, பார்ப்பனீய மனோபாவக்காரர்களுக்கு இஸ்ரேலின் மீது கவர்ச்சியும், சார்பும் உண்டு. இது அரேபிய முஸ்லீம்களுக்கு எதிரான மன நிலையுடன் இணைந்தது எனலாம். அறுபதுகளில் அரபு-இஸ்ரேல் போர்களில் இஸ்ரேலின் வெற்றியை இவர்கள் கொண்டாடினர். இந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ், பாஜக-வின் இஸ்ரேல் ஆதரவு மன நிலையை புரிந்துகொள்ள வேண்டும். சையனிச சிந்தனைக்கும், இந்துத்துவ சிந்தனைக்கும் உள்ள ஒப்புமைகளையும் புறக்கணிக்க முடியாது. தந்தை நிலம், தாய் நிலம் என்ற சிந்தனைக்குப் பதிலாக “புனித நிலம்” என்ற மத அடையாளவாத தேசியத்தை முன்னிறுத்தபவைதான் இரண்டுமே என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இதெற்கெல்லாம் மேலாக இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்தின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது.  பிரதமர் மோடி 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்ற போது, அந்த நாட்டிற்குச் சென்ற முதல் இந்திய பிரதமராக இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா பல முதலீடுகளைச் செய்தது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் ஹைஃபா துறைமுக நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது.  இதன் மூலம் அரசுமுறை உறவுகள் கடந்து, இஸ்ரேலுடன் வலுவான பொருளாதார உறவும் இந்தியாவிற்கு ஏற்பட பாஜக அரசும், அதானி நிறுவனமும் வழிசெய்துள்ளன எனலாம். இரானின் தாக்குதல்களுக்கு ஹைஃபா துறைமுகம் ஆட்பட்டுள்ள நிலையில் அதானி பங்குகளின் மதிப்பும் சரிந்துள்ளது. சரி செய்துவிடலாம் என்றுதான் கூறுகிறார்கள்.

காஸா இனப்படுகொலையும், ஈரான் மீதான தாக்குதலும்

காஸாவில் இயங்கும் தீவிரவாத ஹமாஸ் இயக்கம்தான் இஸ்ரேலின் மீது தாக்குதல் நட த்தியது. இஸ்ரேல் பிரதமர் நெதான்யாஹுவின் லிகுட் கட்சியும், ஹமாசும் 1993-ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனிய ஆஸ்லோ உடன்படிக்கையை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹாமாஸை காரணமாக க் கொண்டு காஸாவில் பொதுமக்களை, குழந்தைகளை இஸ்ரேல் இரக்கமின்றி கொன்று குவித்து வருவது உலகெங்கும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பெரும் மக்கள் திரள் ஊர்வலங்கள் நடக்கின்றன. சூழலியல் நடவடிக்கையாளர் கிரேடா துன்பர்க் தலைமையில் உணவு பொருட்களுடன் காஸா நோக்கி படகில் சென்ற குழு இஸ்ரேல் அரசால் கைது செய்யப்பட்டது. 

அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தனக்கு ஆதரவாக இருக்கும் துணிவில் இஸ்ரேல் ஈரான் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இரானின் அணு ஆயுத தயாரிப்புக் கேந்திரங்களைத்தான் தாக்கியதாக க் கூறினாலும் இது நிச்சயம் அத்துமீறல் என்பதில் ஐயமிருக்க முடியாது. ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கினால் உலகப் போர் மூளும் சாத்தியம் அதிகரித்து விடும். ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யப் போர் பதட்டமான நிலையில்தான் உள்ளது என்னும்போது மேலும் மற்றொரு பதட்டமான யுத்த முனை உருவாவது ஆபத்தானது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்போ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனம்போன போக்கில் பேசுபவராக இருக்கிறார். அனைத்து நாடுகளையும் மிரட்டி பணியவைக்க முயல்கிறார். உலக அரசியல் நிகழ்வுகளை பின் தொடர்பவர்களுக்கு உறக்கம் வருவதில்லை. உலகின் எந்த பகுதியில் வெடிக்கும் யுத்தமும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கத்தான் செய்யும். தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. அதனை மனதில் கொள்ளும்போது முதல்வர் ஸ்டாலின் இஸ்ரேலைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை முக்கியமானது. இந்திய அரசும் துணிந்து அறம் சார்ந்த நிலைபாட்டினை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

கட்டுரையாளர் குறிப்பு:  

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

https://minnambalam.com/why-india-hesitates-to-condemn-israel/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.