Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன்

image_298e2c97ab-111111.jpg

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன. அதனால் விலையை ஏற்றி விட்டார்கள்” என்று வியாபாரி சொன்னார். “மேற்காசியாவில் இருந்தா எங்களுக்கு இஞ்சி வருகிறது?” என்று கேட்டேன். ”எங்கிருந்து வருகிறதோ தெரியாது. ஆனால் சண்டை தொடங்கியதால் விலை கூடிவிட்டது என்று மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்” என்று அவர் சொன்னார்.

அதே நாளில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நின்றார்கள். மேற்காசியாவில் போர் தொடங்கியதால் எரிபொருள் தட்டுப்பாடு வரலாம் என்ற ஊகம்;பயம்; தற்காப்பு உணர்வு போன்றவைகள் காரணமாக எரிபொருளை நிரப்புவதற்குச் சனங்கள் முண்டியடித்தார்கள். கடந்த திங்கட்கிழமை மட்டுமல்ல இதற்கு முன்னரும்  மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் ஏற்படும்  போது யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இவ்வாறு நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது.

யாழ்ப்பாணத்தவரின் முன்னெச்சரிக்கை உணர்வும் ரத்தத்தில் ஊறிய சேமிப்புக் கலாச்சாரமும்தான் அதற்குக் காரணமா? முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு சமூகம் அவ்வாறு முன்னெச்சரிக்கையோடு சில விடயங்களை ஊகித்து-அந்த ஊகங்கள் பிழையாக இருந்தாலும் பரவாயில்லை- தற்காப்பு உணர்வோடு சிந்திப்பது நல்லது. யாழ்ப்பாணத்தின் சேமிப்புக் கலாச்சாரம் என்பது தற்காப்பு உணர்வின் அடிப்படையானது. அரசற்ற ஒரு மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வின் அடிப்படையில் சிந்திப்பது நல்லது.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால், இவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வுடைய;தற்காப்பு உணர்வுடைய ஒரு மக்கள்கூட்டம் தமது பிரதிநிதிகளைத் தெரியும் பொழுது எந்த அடிப்படையில் முடிவெடுக்கின்றது?

படித்த பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர்களைக் கேட்டால், கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைத்தான் உயர்வான பாடங்கள் என்று கூறுவார்கள். ஆனால் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்கள் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்தித்து முடிவெடுக்கின்றார்களா?

லண்டனைச் சேர்ந்த ஒரு மருத்துவர்  சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். மேற்காசியாவில் நிகழும் போர் தொடர்பான காணொளிகளைப் பற்றிய குறிப்பு அது. “படிச்ச பெரிய மனிதர்கள் என்கிறார்கள். டொக்டர், எஞ்சினியர்கள் என்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை ,சொப்ட்வெயார் எஞ்சினியர் என்று புரொபைலில் போட்டு வச்சிருக்கானுகள். ஆனால் இப்படியான AIபடங்கள் (செயற்கை நுண்ணறிவின் மூலம் தயாரிக்கப்பட்ட படங்கள்) அதுவும் AI படங்கள் என்று இலகுவாக கண்டு பிடிக்கக்கூடிய படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறார்கள்….என்னதான் படித்தாலும் பொதுப்புத்தி இல்லை. அடுத்தது  தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை.”

அவர் கூறுவதுபோல தமது  பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்களில் எத்தனை பேர் பொதுப் புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள்? ஒரு பக்கம் கணித,விஞ்ஞான ஒழுக்கங்களைப் போற்றும் ஒரு சமூகம், பூகோள அரசியலில் நிகழும் மாற்றங்களை வைத்து தற்காப்பு உணர்வுடன் சிந்திக்கும் ஒரு சமூகம்,ஆனால் உள்நாட்டில் தனது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது  அவ்வாறு அறிவுபூர்வமாக,தீர்க்கதரிசனமாகச் சிந்தித்து முடிவெடுக்கின்றதா?

509348876_24889420893979933_663493669303

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை எந்த அடிப்படையில் தெரிவு செய்தார்கள்? கடந்த மாதம் நடுப்பகுதியளவில் மானிப்பாய் அந்தோணியார் கோவிலில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பில் இந்த கேள்வியை வளவாளர் அங்கு வந்திருந்தவர்களிடம் கேட்டார். பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்,உள்ளூர் உணர்வுகளை மதித்து வாக்களித்ததாக.”எமது ஊரவர்; எமக்கு வேண்டியவர்; எமது இனசனம்;எமதுசமயம்;எமது சாதி; எமக்கு உதவுபவர்”…போன்ற உள்ளூர்  உணர்வுகளின் அடிப்படையில்தான் தமிழ்மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

அதேசமயம் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது எந்த அடிப்படையில் அதைச் செய்தன? முக்கியமாக மூன்று அளவுகோல்கள் அங்கே இருந்தன. முதலாவது அளவுகோல், அவர் உள்ளூரில் வெல்லக்கூடியவராக இருக்க வேண்டும். இரண்டாவது அளவுகோல், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்க வேண்டும். கட்சித் தலைமையின் சொல் கேட்டு நடப்பவராக இருக்க வேண்டும். மூன்றாவது அளவுகோல்-இது ஒரு விதத்தில் ஒரு சட்ட ஏற்பாடும் கூட-ஒரு தொகுதி வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று அளவுகோள்களிலும் எனது கட்டுரைகளில் நான் திரும்ப திரும்ப கூறுவதுபோல,கீழிருந்து மேல் நோக்கிய தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளை வார்த்தெடுக்க வேண்டும் என்ற கட்சிகடந்த தமிழ்த் தேசியத் தரிசனம் எத்தனை கட்சிகளிடம் இருந்தது?

வாக்களித்த  மக்களும் தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கருதி வாக்களிக்கவில்லை.  வேட்பாளர்களைத் தெரிவு செய்த கட்சிகளும் கீழிருந்து மேல் நோக்கிய உள்ளூர் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனத்தோடு அதைச் செய்யவில்லை.

மிகச் குறைந்தளவு விதிவிலக்குகளைத்தவிர இப்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் எத்தனை பேர் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல தமிழ் மக்களின் புத்திக் கூர்மையை; தற்காப்பு உணர்வை; எதிர்காலத்தை நோக்கிய முன்னெச்சரிக்கை உணர்வைப் பிரதிபலிக்கிறார்கள்?

அண்மை நாட்களாக புதிய சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதல்களும் ரகசியப் பேரங்களும் ரகசிய வாக்கெடுப்புகளும் எதைக் காட்டுகின்றன ?அது தேசத்தைத்  திரட்டும் அரசியலா?அல்லது கட்சி அரசியல் போட்டியா? மிகக்குறிப்பாக அவை தமிழரசுக் கட்சிக்குள் உள்ள  முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. கட்சியின் மத்திய குழுவுக்கு விசுவாசமாக இருப்பதா? அல்லது தேசத் திரட்சிக்கு விசுவாசமாக இருப்பதா ? என்ற  கேள்வி எழும் பொழுது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் சிறு தொகையினர் தமது கட்சித் தலைமைக்கு விசுவாசமாக முடிவெடுக்கவில்லை. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியப் பேரவை தந்திரமாகக் காய்களை நகர்த்தி சில சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது. அதேசமயம் இந்த நகர்வுகள் தமிழ்த் தேசிய பேரவைக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் ஆழமாக்கக் கூடியவை. சுமந்திரன் அணி எதிர் காலத்தில் பழிவாங்கும் உணர்வோடு சபைகளைக் கையாளும். அது பிரதேச சபைகளை நிர்வகிப்பதில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும். பிரதேச சபைகளை ஸ்திரமாக நிர்வகிப்பது சவால்களுக்கு உள்ளாகலாம். வென்ற கட்சிகளும் வெல்லாத கட்சிகளும் முகநூலில் மோதிக்  கொள்ளும் காட்சிகளைப் பார்த்தல் அப்படித்தான் சிந்திக்க வேண்டியுள்ளது. நாடு பிடிக்கப் புறப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் பிரதேச சபைகளைப் பிடிப்பதற்கு அடிபடும் காட்சி ரசிக்கத்தக்கதாக இல்லை.

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான பிடுங்குப்பாடு தனக்குச் சாதகமானது என்று தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பகுதிகளில் இறுதி வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்ததாகக் கூறுகிறது. ஆனால் அவர்கள் வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்தமை என்பது தந்திரமானது. தனக்குத் தேவை என்று கருதிய சபையில், குறிப்பாக தையிட்டி விகாரை அமைந்திருக்கும் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ரகசிய வாக்கெடுப்பைக் கேட்டது.

மேலும், ஏனைய சபைகளில் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் குழப்பம் ஏற்பட்டால் தமிழ்க் கட்சிகள் அதை இனமுரண்பாட்டுக்கூடாக வியாக்கியானப்படுத்தும். மாறாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டால் தமிழ்க் கட்சிகள் தாங்களே தங்களுக்குள் மோதி சபைகளைக் கொட்டிக் குலைக்கும். அதைவிட முக்கியமாக இதுவரை காலமும் யாரோடு கூட்டுச்சேர மாட்டோம் என்று கூறி வந்தார்களோ அவர்களோடு கூட்டுச்சேர அல்லது அவர்களுடைய ஆதரவை மறைமுகமாகப் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவ்வாறு இதுவரை காலமும் தாங்கள் துரோகிகள் என்று பழித்தவர்களின் ஆதரவைக் கேட்கும் கட்சிகளை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் விதத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கருத்துத் தெரிவித்து வருகிறார்.

ஒருபுறம் அரசாங்கம் தமிழ்க் கட்சிகளை குறிப்பாக தமிழரசுக் கட்சியை வாக்காளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்னொருபுறம் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதி உள்ளூராட்சி சபைகளை போட்டுடைக்கும்போது தமிழ்மக்கள் அக்கட்சிகளின் மீது வெறுப்படைந்து, சலிப்படைந்து தேசிய மக்கள் சக்தியை நோக்கித் திரும்புவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்ததுபோல்.ஏன், உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திதானே இரண்டாம் இடத்தில் நிற்கின்றது?

தேசிய மக்கள் சக்தி அப்படியொரு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஒரு பின்னணிக்குள் தமிழ்க் கட்சிகள் எல்லா விதமான முரண்பாடுகளுக்கும் அப்பால் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய நிர்வாகத்தை பலப்படுத்துவது என்ற அடிப்படையில் முடிவெடுத்தால் மட்டும்தான் உள்ளூர்ப் பொருளாதாரத்தை தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்பலாம்; உள்ளூர்த் தலைமைகளை தேசியப் பண்புமிக்கவர்களாக வார்த்து எடுக்கலாம். இல்லையென்றால் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான, மறைந்த பசுபதிப்பிள்ளை ஒருமுறை மாகாண சபையில் கூறியதுபோல “நந்தவனத்து ஆண்டிகள் போட்டுடைத்த தோண்டிகளாக”உள்ளூராட்சி சபைகள் மாறக்கூடுமா?

https://www.nillanthan.com/7466/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.