Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்!

4 Jul 2025, 4:17 PM

WhatsApp-Image-2025-07-04-at-2.02.41-PM.

தமிழக வெற்றிக் கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு காவல் நிலைய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1. பரந்தூர் விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத தமிழக அரசுக்குக் கடும் கண்டனம்:

வாழ்வாதாரங்களாக விளங்கும் விவசாய நிலங்கள், மக்கள் வாழும் வீடுகள், இயற்கை நீர்நிலைகளை அழித்து உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருடக் கணக்கில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை. ஆனால், விவசாயிகளுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு என்பது உலகறிந்த உண்மை.

WhatsApp-Image-2025-07-04-at-12.04.05-PM

ஆனால், பா.ஜ.க.வின் மறைமுக உறவுக்காரர்களான கபட நாடகத் தி.மு.க.வும் விவசாயிகளுக்கு எதிரானதுதான் என்பதைப் பரந்தூர் விமான நிலைய விவகாரம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகமாடிக்கொண்டே விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்து தருவதில் இருந்து, இதோ இப்போது விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது வரை வந்துவிட்டது மாநில அரசு.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு ஆகும். விவசாயிகள் பக்கம் அவர்களின் தோழனாகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் சமரசமின்றி நிற்கும். இந்த விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் தி.மு.க. அரசின் இரட்டை வேடப் போக்கை, தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கடுமையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 2. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாதச் சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றைக்கும் கூட்டணி இல்லை:

ஒன்றிய அளவில், மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, அவர்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய, பா.ஜ.க. நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. கொள்கைவழி நடப்பதில் உறுதியாக இருக்கும் இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்.

எனவே, சுயநல அரசியல் லாபங்களுக்காகப் பா.ஜ.க.வுடன் கூடிக் குழைந்து கூட்டணியில் சேர, நம் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ இல்லை. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரானதாகத்தான் இருக்கும் என்பதையும் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் இச்செயற்குழு வாயிலாக உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தீர்மானம் 3. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம்!

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட மேல்மாவில் 11 கிராமங்கள் மற்றும் 2800 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து மேற்கொள்ள முயலும் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விவசாய நிலங்களைப் பாழாக்கும் கெடுநோக்குக் கொண்ட இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அரசே தவறான தகவல்களை வெளியிடுவது, கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மக்களைப் பங்கேற்க விடாமல் தடுத்தது, ஜனநாயக் வழியில் போராடும் விவசாயிகள் மீது வன்முறையை ஏவியது, எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவியது போன்ற அக்கிரமங்களை இங்குதான் காண்கிறோம்.

முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிய விவசாயிகளைக்கூட இதுவரை முதலமைச்சர் சந்திக்கவில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது, விவசாயிகளை எந்த அளவிற்குத் தவறாகச் சித்திரித்து, அவர்களின் போராட்டத்திற்குக் காது கொடுக்காமல் ஒன்றிய அரசு இருந்ததோ, அதே பாணியை, பா.ஜ.க.வைப் பின்பற்றும் இங்குள்ள மாநில அரசும் செய்து வருகிறது.

போராடும் மக்களை, விவரம் தெரியாமல் போராடுகிறார்கள், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க, தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்’ என்று முதலமைச்சரின் செய்திக் குறிப்பு, அவர்களைக் குற்றவாளியாகச் சித்திரித்தது. எனவே, இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்திற்கு எதிரான அரசு அதிகார மீறலின் உச்சபட்சமாக இருக்கும் மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4. நெல் கொள்முதல் செய்வதில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது.

காலநிலை மாற்றம், மோசமான சூழலியல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற சவால்களை எல்லாம் கடந்து விவசாயிகள் நெல்லை உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால், அந்த நெல்லை உரிய விதத்தில் கொள்முதல் செய்யவோ, கொள்முதல் செய்யப்பட்டவற்றை முறையான தானியக் கிடங்குகளில் சேமித்து வைக்கவோ இதுவரை நல்ல கட்டமைப்பை வெற்று விளம்பர மாடல் திமுக அரசு ஏற்படுத்தவில்லை.

சிறிய மழை வந்தாலும் பெரும் பாதிப்புகளுக்கு நெல் மூட்டைகள் இலக்காவதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதற்கிடையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (National Co-Operative Consumer’s Federation of India Private Limited) என்ற பெயரில் தனியாரை நெல் கொள்முதலுக்குப் புகுத்துவது, அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒருசிலர் தீர்மானிக்கும்படி கேள்விக்கு உள்ளாக்குவது போன்ற மோசமான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மோசடி செய்யும் தனியார் நிறுவனங்களை நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்தச் செயற்குழு வற்புறுத்துகிறது.

WhatsApp-Image-2025-07-04-at-6.02.29-PM-

தீர்மானம் 5. பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை

தர்மபுரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கண்டுள்ள கூடுதல் விளைச்சலின் விளைவாக, தமிழ்நாட்டில் சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் நம் விவசாயிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகள், மிகச் சொற்ப விலைக்குக் கொள்முதல் விலையை நிர்ணயித்துள்ளன. அண்டை மாநிலங்கள் நம் மாம்பழக் கொள்முதலுக்குத் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், நம் விவசாயிகளின் வாழ்வைக் காக்க வேண்டிய பொறுப்பு, நமது அரசுக்கே உள்ளது. ‘மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பன போன்றவற்றை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. விற்பனைக் காலத்தை எதிர்பார்த்து, இன்று பெரும் துயரில் இருக்கும் நம் விவசாயிகளுக்கு உடனடி இழப்பீட்டை முன்னின்று வழங்க வேண்டும் என்று இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6. மலைக்கோட்டை மாநகரில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும்:

தமிழ்நாட்டின் மத்திய மாநகரான திருச்சி, மணல் கொள்ளையாலும், அது தொடர்பான முறைகேடுகளாலும் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றுப்படுகை முழுவதும் இடைவிடாது நடக்கும் மணல் கொள்ளையால், அந்த ஆற்றுப் படுகையில் தீவிர மணல் அரிப்பு ஏற்பட்டு, நீர் வளத்திற்கும் சூழலியல் கேட்டிற்கும் காரணமாகியுள்ளது.

இதனால் ஏற்கெனவே, கொள்ளிடம் ஆற்றுப் படுகையிலிருந்த முக்கியப் பாலங்கள் பாதிப்புக்குள்ளாகி, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன. இப்பகுதியில் நடக்கும் தொடர்ச்சியான இயற்கைவளச் சுரண்டலை அரசும் உள்ளூர் நிர்வாகமும், தங்கள் ஆதாயத்திற்காகத் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கண்டனத்திற்கு உரியது.

மேலும், மணல் கொள்ளைக்கு எதிராக, நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பான அரசு அதிகாரிகள் கொலை மிரட்டலுக்கும் கொலை முயற்சிக்கும் ஆளாகும் போக்கு தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளே கண்டித்து வருகின்றன.

எனவே, திருச்சி மண்டலத்தின் வளத்தையும் வரலாற்றுச் செழிப்பையும், குறுகிய நலனுக்காக அழியவிட்டு வேடிக்கை பார்க்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசை இந்தச் செயற்குழு கண்டிப்பதோடு, அனைத்து முறைகேடுகளையும் உடனே தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7. என்.எல்.சி.-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க வேண்டும். மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும்:

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், சுரங்க விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. நிலம் கையகப்படுத்தப்படும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மும்முடிச்சோழகன் கிராமத்தினர் 2002ஆம் ஆண்டு தங்கள் நிலத்தைக் கொடுத்தபோதிலும், அதற்கு இழப்பீடும் அவர்களுக்கு வேலையும் வழங்கப்படவில்லை. வாழ்வாதாரத்துக்கும் எந்த உதவியும் செய்யப்படவில்லை.

2007ஆம் ஆண்டு வளையமாதேவி, கரிவெட்டி, காத்தளை ஆகிய கிராமங்களில் குடியிருந்தவர்களுக்குப் பரிவுத் தொகை (Ex-Gratia Pay- ments) வழங்கியது போலவே, நிலத்தை வழங்கிய மும்முடிச்சோழகன் கிராமத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கரிவெட்டி கிராமத்தில் இன்னமும் இழப்பீடும் வேலையும் வழங்கப்படாமல் இருப்போருக்கு, உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் இழப்பீடாகக் கொடுக்கப்பட்ட மாற்று நிலத்துக்கான பட்டா வழங்கப்படாமல் இருப்போருக்கு காலம் தாழ்த்தாமல் பட்டா வழங்க வேண்டும் எனவும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 8. விசைத்தறித் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக் கோரித் தீர்மானம்:

கோவை, திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறித் தொழிலாளர்கள் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 33 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியமே வழங்கப்பட்டு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஊதியம் மறுவரையறை செய்யப்பட்ட போதிலும் அந்த ஊதியம் வழங்கப்படவில்லை.

சமீபத்திய போராட்டத்தின் விளைவாகச் சோமனூர் ரகங்களுக்கு 15% ஊதிய உயர்வும் மற்ற ரகங்களுக்கு 10% ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்றும் விசைத்தறி உரிமையாளர்கள் வாக்குறுதி கொடுத்தனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாகச் சுமார் 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊதிய உயர்வுக் கோரிக்கையில் தீர்வு காணப்பட வேண்டும்.

வாக்குறுதி அளிக்கப்பட்ட ஊதிய உயர்வு நடைமுறையில் வருவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நெசவாளர்களின் கோரிக்கைகளையும் முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் மூலம் காலம் தாழ்த்தாமல் தீர்க்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

WhatsApp-Image-2025-07-04-at-6.02.39-PM-

தீர்மானம் 9. திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்க வேண்டும்:

திண்டுக்கல் மாவட்டம், மல்லிகை உற்பத்தியில் உயர்ந்து விளங்குகிறது. தினமும் ஐந்து டன் மல்லிகைப் பூக்கள் திண்டுக்கல் பூச் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் மல்லிகைப் பூக்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வசதி எதுவும் இம்மாவட்டத்தில் இல்லை. எனவே, மல்லிகைப் பூக்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும், வாசனைத் திரவிய ஆலை ஒன்றை நிறுவிடவும் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10. கனிம வளக் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்:

தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுப்பதற்காக உரிமம் பெற்ற 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக, கதிரியக்கத் தன்மை கொண்ட, அணுசக்திக்குத் தேவையான அரிய கனிமம் உள்ளிட்டவற்றை எடுத்து ஏற்றுமதி செய்தனர்.

பல லட்சம் கோடி மதிப்பு வாய்ந்த இந்தக் கொள்ளை குறித்து ஊடகங்கள் அம்பலப்படுத்தின. கனிமவளக் கொள்ளை குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடக கவனத்தை ஈர்த்து, விவாதத்துக்கு உள்ளான போதும், நீதிமன்ற கவனத்துக்கு வந்த பின்னரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தக் கனிம வளக் கொள்ளைப் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் மெத்தனமாகச் செயல்படும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், கனிம வளக் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11. ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு:

அரசு எந்திரத்தின் அச்சாணியாக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைக் கைவிட்டனர். அப்போது, ஆட்சிக்கு வருவதற்காக, ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு மனசாட்சி இல்லாமல் அவர்களைக் கைகழுவி விட்டது.

முன்பு ஆட்சியில் இருந்தோருக்கும் இப்போது ஆட்சியில் இருப்போருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றியவர்கள்தான். ஆட்சித் தலைமையின் குடும்ப நலனை மட்டுமே முக்கியமாகக் கருதும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க.

அரசுக்குத் தமிழக மக்களின் குடும்ப நலன்களோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப நலன்களோ முக்கியமில்லை. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை, லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன் சார்ந்த போராட்டமாகத்தான் தமிழக வெற்றிக் கழகம் பார்க்கிறது. சமீபத்தில் நம் வெற்றித் தலைவரைச் சந்தித்த ஆசிரியர் சங்கத்தினரிடம் நம் வெற்றித் தலைவர் கூறியது போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்குத் த.வெ.க. தனது முழு ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறது என்பதைக் கழகத்தின் செயற்குழு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தீர்மானம் 12. மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்:

கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்த்தொற்று ஏற்பட்ட காலங்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து, உயிரை ஒரு பொருட்டாகக் கருதாமல் மக்களைக் காப்பதே தங்களின் தலையாய பணி என அர்ப்பணிப்போடு சேவையாற்றினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கம் போல அனைத்துக் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டது போலவே அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டுள்ளார்.

இந்தியாவிலேயே ஊதியத்திற்காக மருத்துவர்களைத் தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரித்து, அப்பணியிடங்களுக்குப் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. உயிர் காக்கும் உன்னத சேவை புரியும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தர வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 13. மீனவர்களின் நீண்ட காலத் துயர் முடிவுக்கு வர வேண்டும்:

தமிழக மீனவர்களின் வாழ்வும் தொழிலும் போராட்டத்திலேயே தொடர்வதற்கு எப்போது விடிவு பிறக்கும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

கடந்த ஓராண்டில் மட்டும் இராமநாதபுரம் மீனவர்களின் 54 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகு உரிமையாளருக்கு 1.20 கோடி அபராதமும், மற்றொரு படகோட்டிக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. இதர 12 மீனவர்களுக்குத் தலா 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே, நம் மீனவர்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளும் இலங்கை அரசு, தற்போது எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்று கூறி, மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் தமிழக மீனவர்களைச் சிறை வைக்கின்றது. அடிப்படை வாழ்வாதாரம் எப்படிக் குற்றமாகும் என்ற நம் மீனவர்களின் கேள்வி நியாயமானது.

மோசமான விதிகளைக் கையாண்டு வரும் இலங்கை அரசின் அடாவடி நடவடிக்கைகளை நிறுத்திட, மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, எங்கள் தலைவர் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியபடி, இடைக்காலத் தீர்வாக, இழந்த நம் கச்சத்தீவைக் குத்தகை அடிப்படையில் இந்தியா கேட்டுப் பெற வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14. இருமொழிக் கொள்கை தீர்மானம் :

பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே எங்கள் தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை. நம் தமிழக வெற்றிக் கழகமும் அதையே உறுதியாகப் பின்பற்றுகிறது. ஆங்கிலத்தைப் பேசுவோர் அவமானப்படுவார்கள் என்று ஒன்றிய அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் கூறியது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மீது மறைமுகமாக ஏவப்படும் அஸ்திரம். உலகத் தொடர்பிற்காக ஆங்கிலத்தை இரண்டாவதாக ஏற்கும் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஏற்காது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையே இனிவரும் நூற்றாண்டுகளிலும் தொடரும். அதை ஒன்றிய பா.ஜ.க. மட்டுமன்றி, வேறு எவராலும் மாற்ற இயலாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகத்தின் இச்செயற்குழு உறுதிபடத் தெளிவுபடுத்துகிறது.

தீர்மானம் 15. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாகச் சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைக்க முயல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்:

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Spe- cial Intensive Revision) நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, ஜனநாயகத்திற்கு எதிராக, சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைத்து, தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கியை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

இந்தச் சந்தேகம் உண்மையெனில், இந்த நடவடிக்கையை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இது போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும் 18 வயது நிறைவடைந்த, தகுதி உள்ள நபர் எவராக இருந்தாலும், வாக்களிக்கும் முழுமையான உரிமையை அவருக்குச் சட்டப்படி வழங்க வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 16. கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்:

2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர்.

இவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.

இதில் கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17, 2025) உத்தரவிட்டுள்ளது.

கீழடி ஆய்வு முடிவுகள், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலம் காலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். வைகை நாகரிகம், சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது என்பதும் வெளிவரும்.

இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. கீழடியின் பெருமையை மறைக்க, உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இச்செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 17. த.வெ.க.விற்கு எதிரான கபட நாடகத் தி.மு.க. அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்:

ஜனநாயக அமைப்பில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் அனைவரும் சமம். ஆனால், தற்போதைய ஆளும் கட்சியான கபட நாடகத் தி.மு.க.விற்கு எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரியாகப் பார்ப்பதுதான் வழக்கம். அதிலும் மாபெரும் மக்கள் சக்தியும் மக்கள் ஆதரவும் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்றாலே பயமும் மிரட்சியும்தான் மேலோங்கி இருக்கிறது.

அதன் வெளிப்பாடாகத்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் பொதுக்கூட்டமோ, மக்கள் சந்திப்போ, பொது நிகழ்வோ, பொது வெளியிலும் தனியரங்குகளிலும் தனியார் இடங்களிலும் நடத்த அனுமதி தராமல், இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு தடுக்கிறது. இந்த அதிகாரத் திமிரின் உச்சமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கிளைக் கழகம் முதற்கொண்டு மாவட்டக் கழகம் வரை இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர் தோழர்களையும் மகளிர் அணியினரையும் காவல் துறையை ஏவித் தாக்கவும் பொய்வழக்குப் போட்டு மிரட்டவும் செய்கிறது.

WhatsApp-Image-2025-07-04-at-6.03.03-PM-

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், கபட நாடகத் தி.மு.க.விற்குத் தோல்வியைப் பரிசளிப்பது உறுதி என்பதை உணர்ந்ததால்தான் இவ்வாறு செய்கின்றனர். எங்களுடைய வெற்றித் தலைவர் ஏற்கெனவே தெரிவித்தது போல வேண்டுமானாலும் தடுக்கலாம், ஆனால் இயற்கையையும் மாபெரும் மக்கள் புரட்சியையும் எள்ளளவும் தடுக்க இயலாது. இதை ஜனநாயகத்திற்கு எதிரான போக்குடன் அதிகார மமதையில் ஆட்டம் போடும் தி.மு.க. அரசுக்கு நினைவூட்டுவதோடு, த.வெ.க.வை ஒடுக்க முயலும் தி.மு.க.வைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 18. தொகுதி மறுசீராய்வு – ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம்:

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அதில் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்காய்வு (Caste Survey) நடத்த வேண்டியதில்லை என்றும் சொல்வது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏமாற்று வேலையன்றி வேறென்ன? அனைத்துச் சமுதாய மக்களின் சமூக, கல்வி, பொருளாதாரச் சூழல் குறித்த தெளிவான பார்வை இல்லாத கணக்கெடுப்பை எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கவே ஏற்காது.

இட ஒதுக்கீட்டுக்குக் கேடு விளைவிக்கும் இதுபோன்ற அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபடும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீராய்வு என்ற பெயரில் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்திலும் அநீதி இழைக்க முயல்கிறது. இது மட்டுமல்லாமல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று திட்டமிடுவதன் மூலம் ஜனநாயகமே கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்கைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கான பதிலடியைத் தென்னிந்திய மக்கள், குறிப்பாக, தமிழக மக்கள், வருகிற 2026 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவாகத் தருவார்கள் என்பதையும் எச்சரிக்கையாகத் த.வெ.க.வின் இச்செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 19.காவல் துறை கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத் தேவையான மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்:


கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் துறை விசாரணையின் போது 24 பேர் உயிரிழந்திருப்பதாக, பெரும் அதிருப்தியோடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய மக்கள் விரோதத் திமுக ஆட்சியில், காவல் நிலையத்தில் பலர் மரணம் அடைவதைப் பார்க்கும் போது, அதிகாரத் திமிர் கொண்ட ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கெல்லாம் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

அண்மையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி சகோதரர் அஜித்குமார் அவர்கள், தமிழ்நாடு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக நேர்மையற்ற முறையில் சாரி கேட்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக, காவல் துறை விசாரணையில் மரணம் அடைந்த 24 பேருக்காகவும் இவர் இதைப் போல சாரி கேட்பாரா? இவரது பொறுப்பற்ற, நிர்வாகத் திறனற்ற (Irresponsible and Inability Administration) தன்மைக்கு அப்பாவி மக்களும் இளைஞர்களும் பலியாகி வருகின்றனர். இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவர் இருக்கக் கூடிய இண்டியா கூட்டணிக் கட்சிகள், ஒன்றிய அரசையும் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-யையும் வன்மையாகக் கண்டிக்கின்றன. ஆனால் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல் துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுகிறார்.

தன் கீழ் இயங்கும் துறை மீது நம்பிக்கை இல்லாமல் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைக்கு வழக்கை மாற்றுகிறாரே, இது அவருக்குப் பெருத்த அவமானம் இல்லையா? தி.மு.க. பேசி வரும் மாநில சுயாட்சி முழக்கம் எங்கே போனது?

மாநில சுயாட்சியையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க முடியாத தமிழ்நாடு உள்துறை அமைச்சர், தன்னை நம்பி வாக்களித்த மக்களைப் படுகுழியில் தள்ளி வருகிறார். இதற்கு அவர்களிடையே பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கத் திறனற்று, கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் உள்துறை அமைச்சர், தமிழ்நாட்டின் இந்த அவல நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பொது மன்னிப்புக் கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 20.பெரியார், அண்ணா ஆகியோரை அவமதிக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலுக்குக் கண்டனம்:

தமிழ்நாடு எப்போதும் மதச்சார்பற்ற பூமி. சமூக நல்லிணக்கம் போற்றும் மண். சகோதரத்துவம் பேணும் மாநிலம். இங்கு விஷத்தையோ விஷமத்தையோ விதைத்தால் அந்த முயற்சி துளியளவுகூடத் துளிர்க்காது. எங்கள் கொள்கைத் தலைவரான தந்தை பெரியார், மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தவாதி. சமூக நீதிக் காவலர்.

இட ஒதுக்கீட்டுக்கான பாதையைச் சமைத்த முன்னோடிகளில் ஒருவர். பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பது எனச் சமூக நலன்சார்ந்த பல்வேறு இலக்குகளுக்காக வாழ்நாள் எல்லாம் உழைத்தவர். அவரைக் கடவுள் மறுப்புக் கொள்கை என்ற ஒற்றை வளையத்துக்குள் மட்டும் அடைக்கும் வேலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியாரைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் இந்த மண்ணில் வெற்றி பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பெரியாரோடு நிற்காமல், கனிவின் திருவுருவான பேரறிஞர் அண்ணாவையும் அவதூறு செய்யும் முயற்சியை மதுரை நிகழ்ச்சியில் பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.

தமிழ், தமிழர், தமிழ்நாட்டிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அரும்பெரும் மனிதர், தலைவர் அறிஞர் அண்ணா. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தாரக மந்திரத்தைச் சமூக நல்லிணக்கத்திற்காக இம்மண்ணிலே ஓங்கி ஒலிக்கச் செய்தவர் அண்ணா என்பதைத் தமிழகம் அறியும். இன்றளவும் தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைக் களங்கப்படுத்தும் முயற்சிக்குத் துரும்பளவு பலன்கூடக் கிடைக்காது.

தமிழ்நாடு சமூக நீதிக்கும் சகோதரத்துவத்திற்கும் பெயர்பெற்ற சமத்துவ பூமி. இங்கே பிளவுவாத அரசியலைப் பா.ஜ.க எந்த வடிவத்தில், எந்த வேடத்தில் செய்தாலும் தமிழக மக்கள் அதை முறியடிப்பர். பா.ஜ.க.வின் இந்தப் பிளவுவாத அரசியலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

https://minnambalam.com/tvk-state-executive-committee-meeting-resolution/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.