Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல்

July 6, 2025

புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல்

— கருணாகரன் —

சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்”  என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற பாத்திரம், தன்னுடைய பொறுப்பை, தான் விரும்புகின்ற அல்லது தான் சார்கின்ற அரசியல் ரீதியாக அணுக முற்படுகிறதே ஒழிய, அறிவியல் ரீதியான அறத்துடன் இல்லை என்பதைக் குறியீடாக்கியிருந்தார் நிலங்க. 

நிலங்கவின் ஏனைய கதைகளும் கூட இதே பண்புடையவையாகவே உள்ளன. அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாகமக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக நிலந்தவின் கதைகள் இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதைபரந்த சிந்தனையைஅவர் விளையும் புதிய அரசியலைசெழுமையான பண்பாட்டுச் சூழலைபுதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகிறது‘ என்று  எழுதினேன். 

கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளும் எத்தகைய சேதிகளைச் சிங்களச் சமூகத்திற்கு சொல்ல வேண்டும்? என்பதில் நிலந்தவுக்குத் தெளிவான பார்வையுண்டு. அந்தப் பார்வைக்கு நிகரான இன்னொரு வலுவான சான்று, அந்த மனிதப்புதைகுழிகளை சிங்கள புத்திஜீவிகளில் ஒருதரப்பினரும் அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அதிகார வர்க்கமும் எப்படிச் சூதான முறையில் மாற்றியமைக்க முற்படுகின்றன; அதற்கான தருக்கங்களை எப்படி உருவாக்குகின்றன  என்பதைத் துணிச்சலோடும் நிதானத்தோடும் நிலங்க கையாண்டிருக்கும் விதம். 

இப்படி எழுதும்போது சிங்களப் பெருந்திரள் சமூகத்தில் அல்லது சிங்கள அதிகாரத் தரப்பிலிருந்து எதிர்ப்போ குறைந்த பட்சம் ஒரு அதிர்வலையோ தனக்கு எதிராக ஏற்படும் என்று நிலந்தவுக்குத் தெரியும். அதைக்குறித்தெல்லாம் நிலந்த கவலைப்படவுமில்லை. தயங்கவுமில்லை. நிலந்தவின் அகத்தில் சுடரும் உண்மையின் ஒளியும் அவருடைய இயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையும் நேர்மையும் (அறமும்) அவரை வரலாற்றில் முன்கொண்டு செல்கின்றன. அதற்காக அவர் கொடுக்கக் கூடிய விலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். அதந்தப் புரிதல்தான் அவருக்கான பலமும் மகிழ்ச்சியும் நிறைவுமாகும். 

இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்கின்றேன் என்றால், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளும் அங்கே மீட்கப்படும் எலும்புக்கூடுகளும் உண்டாக்கியிருக்கும் அரசியற் குழப்பங்களுக்காகவும் அறவீழ்ச்சிக்காகவுமே. 

செம்மணிப் புதைகுழிகளுக்கு சமாந்தரமாகவோ அல்லது வேறொரு கோணத்திலோ துணுக்காய்ப்புதைகுழி விவகாரமும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அங்கே மனிதப் புதைகுழி எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் துணுக்காயில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம். அல்லது எரியூட்டப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.  

இரண்டின் பக்கமாகவும் நின்று கன்னைபிரித்து அடிபடுகிறார்கள் சமூகவலைத்தளப்போராளர்கள். 

இன்னொரு பக்கத்தில் வெருகல் படுகொலை என்றொரு குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகிறது. 

எல்லாமே துயரத்தினால் நிரம்பியதே. எல்லாம் அநீதிகளால் நிரம்பியதே. எல்லாமே அறவீழ்ச்சியினால் ஏற்பட்டவையே. எல்லாவற்றிலும் நிரம்பிக் கிடப்பது வற்றாத கண்ணீர்…

இப்படிச் சொல்லி, எல்லாவற்றையும் சமப்படுத்தவில்லை. அது என்னுடைய நோக்கமும் இல்லை. அப்படிச் சமப்படுத்தி விடவும் முடியாது. 

அவரவர் தமது துயரங்களை ஆற்றுவதற்கும் தமக்கான நீதியைக் கோருவதற்கும் நிதானமான முறையில் சிந்திப்பதே பொருத்தம் என எண்ணுகிறேன். அந்த நிதானமே நிவாரணத்தையோ,  நீதியையோ, ஆறுதலையோ தரக்கூடியது.

ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு நிச்சயமாகத் தீர்வைத் தரமுடியாது. கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களே! அவர்களுடைய உயிர் இனித்திரும்பாது. உடலும் உயிரும் எலும்புக்கூடாகி விட்டது. 

ஆனால், அதையாவது காணக்கூடியதாக – பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் செம்மணியில். துணுக்காயிலோ வேறு எங்குமே இதைப்போல மீண்டால்தான், கண்டறியப்பட்டால்தான் அவற்றையும் காணலாம். 

இந்தக் கொடிய யதார்த்தத்திலிருந்துதான் நாம் இந்த விடயங்களைப் பார்க்கவும் அணுகவும் வேண்டும் எனக் கருதுகிறேன்.

செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. 

ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது.

என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. 

இல்லையெனில் நாம் நீதியைப் பற்றிப் பேச முடியாது. அதை மீறிப் பேசினால் – பேச முற்பட்டால் அது நீதியாகவோ, நீதிக்கானதாகவோ இருக்காது. மட்டுமல்ல, அநீதியின் பக்கமாகவே நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். 

ஆகவே பாதிக்கப்பட்டோரின் உளவியலில் – உளநிலையில் – நின்று இதனை அணுகுவதே பொருத்தமானது. 

நிலங்க அலெக்ஸாண்டர், பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்நிலையில் நின்று அந்தக் கதைகளை எழுதியபடியால்தான் அவருடைய நீதியுணர்வைக் குறித்து நாம் மகிழ்ந்து, பாராட்டி, நன்றி கூறிப் பேசக்கூடியதாக உள்ளது. 

ஆனால், இங்கே நமது சமூக வலைத்தளப் பதிவர்களிற் பலரும் அப்படியான நீதியுணர்சியைக் கொண்டிருக்காமல், சார்பு நிலைப்பட்ட – தமக்கு இசைவான நீதியைக் குறித்தே சிந்திக்கின்றனர். 

அப்படியொரு நீதி இல்லை. அப்படியொரு நீதியை அவர்கள் எதிர்பார்த்தால், அது நீதியாக இருக்கப்போவதுமில்லை. அதைக் கோருகின்றவர்கள் ஒருபோதும் நீதிக்காகவோ நியாயத்துக்காகவோ எந்தப் பங்களிப்பைச் செய்யவும் முடியாது. அவர்கள் வரலாற்றின் முன் தலைகுனியவே முடியும்.

“நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று கூறப்படும் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களாகச் சொல்லப்படும் சமூகத்தினராகிய நாமே நெற்றிக் கண்ணை (மூன்றாவது கண்ணான அறிவுக் கண்ணை) இழந்து நிற்க முடியுமா? 

குற்றமாக நடந்தவை அனைத்தும் குற்றங்களே! அதில் எந்தச் சமரசங்களும் வேண்டாம். ஒன்றை ஒன்றினால் மறைப்பதும் மறைக்க முற்படுவதும் தவறு. அந்த உள் நோக்கம் இன்னொரு குற்றமாகும். அது இந்தப் புதைகுழிகளை உருவாக்கிய குற்றத்துக்கு நிகர். 

இந்தப் புதைகுழிகளில் மட்டுமல்ல, சுதந்திர இலங்கையில் நாடுமுழுவதிலும் உள்ள புதைகுளிகளில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே! நிராயுதபாணிகளே! இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தப் பேதமும் இல்லை. சிங்களவர்களைச் சிங்களவர்களும் தமிழர்களைத் தமிழர்களும் கூடக் கொன்று புதைத்திருக்கிறார்கள். 

இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். 

யாரும் இதில் பெருமைப்படவோ, நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, நம்முடைய கை சுத்தமானது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லவோ முடியாது. நேரடியாக எந்தக் கொலையோடும் எந்தப் புதைகுழியோடும் பலருக்கும் தொடர்பில்லை என்றாலும் அவரவர் சார்ந்த சமூகம், அவரவர் கொண்டிருந்த அரசியல் அல்லது ஆதரவளித்த தரப்புகள் என்பதற்காக இந்தக் கொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் எல்லோரும் பொறுப்பாளிகளே! 

இந்தப் புதைகுழிகளைக் குறித்து வெளியாரின் பார்வை எப்படியானது?

‘இலங்கையில் மனிதப்புதைகுழிகள்‘, ‘பல தரப்புகளாலும் உருவாக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விளைச்சல்கள்‘ என்ற செய்திகள் (தகவல்கள்), இலங்கை பற்றிய – இலங்கையர்களைப் பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையையே அவர்களுக்கு உருவாக்கும். 

‘ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் இத்தனை மனிதப் புதைகுழிகளா? அதுவும் நாடு முழுவதிலும்! அதுவும் சுதந்திர இலங்கையில்!! 

ஆக இலங்கை என்பது எலும்புக்கூடுகளின் தேசமா?‘ என்று அவர்கள் கருதினால் அதில் என்ன தவறு?   

ஆகவே இதொரு கூட்டுத் துக்கம். கூட்டு அவமானம். கூட்டுத் தலைகுனிவு. கூட்டு அநீதி. இதையும் கூட ஒரு வகையான சமப்படுத்தல் அல்லது சதியான – சூதான தர்க்கம் என்றோ யாரும் சொல்ல முற்படலாம். 

நிச்சயமாக அப்படியில்லை. 

இதுதான் உண்மை. மறுக்க முடியாத உண்மை. 

ஆகவே நாம் நாறி மணக்கும் புழுப்பிடித்த இந்தச் சீழான யதார்த்தத்திலிருந்துதான் உண்மையை நோக்கியும் நீதியை நோக்கியும் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே நமது குற்றங்களுக்கான தண்டனையைப் பெறுவதோடு, இனிமேலும் இந்தகைய குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  

புதிய (NPP) அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள் தடைகள், அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் தோண்டப்படுகின்றன. இதொரு நல்ல – நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழல். இந்த அரசாங்கம் விடயங்களை முன்னோக்கியதாகக் கையாள முற்படுகிறது. சமூக நல்லிணக்கம், நீதிக்கான முன்னாயத்தம் போன்றவற்றிற்கான தொடக்க வாய்ப்புச் சூழல் என்று இதைக் கருதலாம். 

இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப்போன்ற (பட்டலந்த, சூரியகந்த என்ற) துயரம் மிக்க, கசப்பான ஒரு வரலாற்று அனுபவச் சூழல் உள்ளதால், அவர்கள் இதனை மேலும் மென்னிலையில் – பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலையில் அணுக முற்படுவதாகவே தெரிகிறது. 

ஆக பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான நற்தருணமாக இதை மாற்றுவதற்கான பொறுமையும் நிதானமும் விவேகமும் நமக்கு வேண்டும். கன்னை பிரித்து அடிபட்டால் எல்லாருக்கும் சினமும் எரிச்சலும்தான் ஏற்படும். அது பாதிக்கப்பட்டோருடைய துக்கத்தையும் அவர்களுக்கான நீதியையும் அவமதிப்பதாகவே அமையும். 

இங்கே பலரும் தமக்குச் சார்ப்பான தரப்புக்கு தாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னொரு தரப்பைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவதே அதிகமாக உள்ளது. நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும். தெரியாமல் இருப்போர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அவை கசப்பானவை என்பதற்காகக் கடந்து செல்லக் கூடாது. 

சுதந்திர இலங்கையில்தான் எத்தனை துயரக் கதைகளும் துன்பியல் நாடகங்களும்? 1505 – 1948 க்கு இடைப்பட்ட 443 ஆண்டுகளில் இலங்கையில் அரசியலுக்காகக் கொல்லப்பட்டோரை அல்லது கொலையுண்டோரையும் விட 1948 க்குப் பிந்திய 75 ஆண்டு  காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கொலையுண்டோரின் தொகை அதிகமாகும். 

அதாவது சுதந்திர இலங்கையில்தான் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டோரும் கொலையுண்டோரும் கூடுதல். இதைச் சரியாகச் சொன்னால், வெளியாரினால் – பிறத்தியாரினால் – கொல்லப்பட்டதை விட – கொலையுண்டதை விட நமக்குள் நாமே கொன்று குவித்ததும் கொல்லப்பட்டதுமே அதிகம். விடுதலையின் பேராலும் நாட்டின் பாதுகாப்பின் பேராலும் நடந்த அக்கிரமம், அநீதி, முட்டாள்தனம், நாகரீகக் கேடு இது. 

 இனியாவது நம்முடைய அகவிழிகள் திறக்கட்டும்.  இனியாவது நாம் நிதானமும் நீதியுணர்ச்சி உள்ளவர்களாகவும் வாழ முற்படுவோம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவது – பொறுப்பேற்பது அவசியம். அதைச்செய்வோம்..

புதைகுழிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படுகொலைகளுக்காகவும் அனைத்து நீதியின்மைகளுக்காகவும்தான்.

https://arangamnews.com/?p=12141

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.