Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துமஸ் மரம்

---------------------------

large.ChristmasTree_W.jpg

ஒரு ஒழுங்கான கூம்பு வடிவில் இருக்கும் சின்ன சவுக்கு மரமே கிறிஸ்துமஸ் மரம் என்று தான் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஊரில் இருந்த நாட்களில் இதை எங்காவது நேருக்கு நேரே பார்த்ததாக ஞாபகம் இல்லை. படங்களில் அல்லது கதைகளில் மட்டுமே நான் இதை பார்த்திருக்கவேண்டும். அப்படியே வெள்ளைப் போர்வையாக அந்த வீடுகளைச் சுற்றி பனி கொட்டிக் கொண்டிருப்பதாகவும் மனதில் பதிந்து இருந்தது. ஆகவே நிச்சயம் இது படமோ அல்லது கதையோ உண்டாக்கிய தோற்றம் மட்டுமே. ஊரில் கிறிஸ்தவ மக்கள் இருந்தார்கள். மற்றைய ஊர்களை விட என்னுடைய ஊரில் அதிகமாகவே இருந்தார்கள். அதில் ஒரு சிலர் என்னுடைய வயது உடையவர்களாவும், தெரிந்தவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்தப் பண்டிகை நாட்களில் அவர்களின் எவர் வீடுகளுக்குள்ளும் போனதாக ஞாபகம் இல்லை. உண்மையில் அவர்களின் ஒருவரின் வீடுகளுக்குள்ளும் ஒரு தடவையும் போனதில்லை.

பின்னர் அவர்களில் ஒருவன் நெருங்கிய நண்பன் ஆனான். அப்பொழுதும் கூட அவன் வீட்டின் வெளிக்கதவில் நின்றே அவனைக் கூப்பிடுவோம். அவன் அதற்கு முன்னர் அவ்வளவாக ஊர் சுற்ற எங்களுடன் வெளியில் வந்ததில்லை. அவர்கள் ஒரு உயர்குடி என்ற அபிப்பிராயம் எங்கள் மனதுகளில் பொதுவாக இருந்தது. மார்கழி மாதங்களில் அவன் வீட்டின் கண்ணாடி யன்னல்களில் சின்ன சின்ன மின்விளக்குகள் நின்று நின்று எரிந்து கொண்டிருக்கும். அவனின் வீடே அந்த நாட்களில் இன்னும் அழகானதாக மாறி இருக்கும். நண்பனின் வீட்டுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் மரம் இருந்திருக்கும். அந்த மரத்திற்கு சோடனைகள் செய்திருப்பார்கள். அதன் உச்சியில் ஒரு நட்சத்திரமும் வைத்திருப்பார்கள். ஆனால் நான் இவை எதையும் பார்க்கவில்லை. அவன் சில நாட்களில் சில தின்பண்டங்களை எடுத்து வருவான். அவை வித்தியாசமானதாக இருந்தன, நன்றாகவும் இருந்தன.

பின்னர் அவனுடன் ஒன்றாக நான்கு வருடங்கள் தங்க வேண்டியிருந்தது. அது படிக்கும் காலம். இவ்வளவு நல்ல மனிதர்களும் இருக்கின்றார்களா என்று ஆச்சரியப்படவைத்தான். அதை நான் அவனுக்கு சில தடவைகள் நேரடியாகவே சொல்லியிருக்கின்றேன். ஒரு விதமாக சிரிப்பான். நீ தான் அடுத்த தேவமைந்தன் என்று பகிடி போல சொல்லியும் இருக்கின்றேன். சில மனிதர்கள் எப்படி அப்பாவிகளாகவும், மிகவும் நல்லவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது பெரிய ஆச்சரியமாகவே இருக்கின்றது. இவ்வாறு இருப்பவர்களின் உலகத்தில் மிகச் சில விடயங்களே இருக்கின்றன.  அவர்களின் உலகத்தில் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இறைவன் ஒருவரும் இருக்கின்றார் போல.

பின்னர் எங்கள் வாழ்க்கையில் நானும் மனைவியும் சேர்ந்து வருடாவருடம் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்க வேண்டியதாகியது. இரு குழந்தைகளின் எதிர்பார்ப்பை ஏமாற்ற முடியவில்லை. அந்த நாட்களில் கிறிஸ்துமஸ் மரத்துடன் சேர்ந்து வீடும் அழகாகவே இருந்தது. எதற்கு இருக்கின்றது தெரியாமல் இருக்கும் புகைபோக்கியினூடாக ஒரு தாத்தா வருவார் என்று அங்கு கொஞ்சம் இடம் ஒதுக்கி வைக்க வேண்டியதாகியது. வருடத்தில் ஒரு நாள் தாத்தாவிற்கு பிஸ்கட்டும், பாலும் வைக்கும் ஒரு வழக்கத்தையும் கற்றுக்கொண்டோம்.

முன்பக்கம் இருந்த அயல் வீடொன்றில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகன், அவர் வேறு எங்கேயோ இருந்தார். அடிக்கடி வந்து போவார். வெள்ளை இனத்தவரான அவர்கள் எங்களுடன் பேசவில்லை. அவர்கள் பேசுவதற்கு கூட முயலவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சிறிது முயன்றேன், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன். 

அவர் வயதானவர் என்றாலும் மிகவும் சுறுசுறுப்பானவராக இருந்தார். அவர் வீட்டில், வளவில் எல்லா வேலைகளையுமே மிகவும் நேர்த்தியாகச் செய்தார். அவர் வீட்டின் கூரையின் ஒரு பகுதியைக் கூட அவரே புதிதாகப் போட்டார். கூரையில் ஏறி கோழி கூட பிடிக்க முடியாத நான் கூரையை எப்படி மாற்றுவேன் என்று அதிர்ச்சி அடைவதை தவிர வேறொரு மார்க்கமும் எனக்கு இருக்கவில்லை. அவர் எந்த வேலை செய்தாலும் அவருடைய மனைவி எந்த உதவியும் செய்ததில்லை. அவர் வேலை செய்யும் போது வெளியில் வந்து எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர் கூரைக்கு மேல் நின்ற நாட்களில் கூட அவரின் மனைவி வீட்டினுள்ளேயே இருந்தார்.

அவர்களின் வீட்டின் முன் ஒரு மரம் நின்றது. அது நான் சிறு வயதில் கற்பனையில் கண்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஓரளவிற்கு ஒத்தது. அதுவே தான் அவர்களின் கிறிஸ்துமஸ் மரம் என்பது முதல் வருடத்தில் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா சோடனைகளும் அந்த மரத்திற்கே நடந்து கொண்டிருந்தது. பரிசுப் பொதிகள் போன்றவை கூட அந்த மரத்தின் கீழே வைக்கப்பட்டன. அவர்களின் வீட்டினுள் கிறிஸ்துமஸ் மரம் இருக்கவில்லை. வெளியில் உயிருடன் நின்ற கிறிஸ்துமஸ் மரத்தை சோடிப்பதற்காகவே விசேடமாக சின்ன ஏணி, சில தடிகள் என்று அவர் வைத்திருந்தார்.

சில வருடங்களின் பின் அவர் மிகவும் தளர்ந்து போனார். ஒரு நாள் அவராகவே வந்து அவரது ஈரல் பகுதியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். அதன் பின்னர் மிகவும் நட்புடனும், நெருக்கத்துடனும் பேச ஆரம்பித்தார். அந்த வருடமும் அவரே கிறிஸ்துமஸ் மரத்தை சோடித்தார், கொஞ்சம் மெதுமெதுவாக. அவரின் மனைவி உள்ளேயே இருந்தார்.

பின்னர் ஒரு நாள் அவர் வீட்டின் முன் தெருவின் கீழ் போய்க் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இருவர் திருத்திக் கொண்டிருந்தார்கள். அவரின் மகன் அந்த இருவரின் அருகிலே நின்று கொண்டிருந்தார். குழாய் வெடித்து விட்டதா என்று அவரின் மகனிடம் கேட்டேன். ஆமாம், உடைந்து விட்டது, இன்று திருத்தி விடுவார்கள் என்றார் அவரின் மகன். கூரையையே மாத்தியவருக்கு இந்தக் குழாயை மாற்றுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை, ஆனால் இப்பொழுது உடம்புக்கு முடியாமல் போய் விட்டது என்று நினைத்தபடியே அப்பா எங்கே என்று கேட்டேன்.

'அப்பா போன மாதம் இறந்து போனார்..................'

''

வார்த்தை ஒன்றும் வரவில்லை. அந்தக் கணத்தில் உலகமே அப்படியே உறைந்து போனது. எனக்கு ஏன் சொல்லவில்லை என்று உரக்கக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் இது என்ன உலகம், இந்த மனிதர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு கையாலாகாத நிலையிலேயே அங்கே நின்றேன்.

'அம்மா......................' என்றேன்.

'அம்மா உள்ளே இருக்கின்றார்................'.

எதுவும் சொல்லாமலேயே அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். 

அந்த அம்மா அந்த வீட்டுனுள் இருக்கின்றார் என்பதற்கு அடையாளமாக இரவுகளில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உயிருள்ள கிறிஸ்துமஸ் மரம் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மரம் இனி என்னவாகும் என்ற எண்ணம் வந்து கொண்டேயிருந்தது.

அந்த வருட பண்டிகைக்காலம் ஆரம்பித்த ஒரு நாள் வெளியே போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கிறிஸ்துமஸ் மரம் இருக்கும் திசையில் பார்வை அதுவாகப் போனது. அங்கே அதே விசேட சின்ன ஏணி, சில தடிகளை வைத்துக் கொண்டு அந்த அம்மா கிறிஸ்துமஸ் மரத்தை மெதுமெதுவாகச் சோடித்துக் கொண்டிருந்தார்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஊரில் கிரிஸ்மஸ் காலத்தில் "கரோல் " ஆக கூட்டமாய் பாடிக்கொண்டு வருவார்கள் ........ பெரியவர்கள் அவர்களுக்கு பணம் , இனிப்புவகைகள் என்று கொடுப்பார்கள் .......நாங்கள் கூட்டத்துடன் கூடடமாய் நின்று பார்ப்பதோடு சரி . ......... இங்கு வந்ததும் பிள்ளைகளுக்காக வீட்டில் கிரிஸ்மஸ் மரம் வைக்க வேண்டியதாகி விட்டது .........அது இப்ப சுமார் 35 வருடங்களாக தொடர்கின்றது ........ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து அவரவர் வேலைகளைப் பார்க்க வெவ்வேறு இடங்களுக்கு பறந்து விட்டார்கள் ........ நானும் மனிசியும் இன்னும் அந்தக் காலங்களில் கிரிஸ்மஸ் மரம் வைத்து சோடித்துக் கொண்டிருக்கின்றோம் ......... ! 😁

நன்றி ரசோ ........ !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

நானும் மனிசியும் இன்னும் அந்தக் காலங்களில் கிரிஸ்மஸ் மரம் வைத்து சோடித்துக் கொண்டிருக்கின்றோம் ......... ! 😁

❤️................

என்ன ஆனாலும் சிலவற்றை இறுதிவரை தொடர்வோம் போல, சுவி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி @ரசோதரன் .

கிறிஸ்மஸ் மரமாக இருக்கும் pine, spruce மரங்கள் குளிர்காலத்தில் பனியுறைந்த நாடுகளின் வைக்கிங்குகள் தங்கள் மர வீடுகளில் நறுமணம் வீசுவதற்காக வைக்க ஆரம்பித்து, பின்னர் கிறிஸ்தவ மதம் அவர்களிடம் பரப்பப் பட்ட போது, அதுவே உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் மரமாக மாறி விட்டது என்பார்கள். வீட்டில் வைக்க அழகாகத் தான் இருக்கும்.

ஊரில் நாம் வைக்கும் கிறிஸ்மஸ் மரம் Casuarina என்ற சாதியைச் சேர்ந்தது. கசூரினா (Casuarina) பீச் இந்த கசூரினா சாதி சவுக்கு மரங்களால் அழகு பெற்ற ஒரு இடம்.

85, 86 இல் என்று நினைக்கிறேன். மில்க்வைற் கனகராசா அவர்கள் நூறு மில்க்வைற் சவர்க்காரப் பொதிப் பேப்பர்களைச் சேர்த்து அவர்களிடம் மீள ஒப்படைத்தால், ஒரு சவுக்குக் கண்டு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினார். நான் 200 சேர்த்துக் கொடுத்து 2 சவுக்குக் கண்டுகள் பெற்றுக் கொண்டு வந்து ஆஸ்பத்திரி வீதி ஸ்ரேஷன் வீதிச் சந்தியில் நாம் வாடகைக்கு இருந்த வீட்டின் முற்றத்தில் நாட்டினேன். இரண்டும் கிடு கிடுவென வளர்ந்து வந்தன. பின்னர் நாம் 90 இல் வீட்டை மாற்றிக் கொண்டோம். 2002 இல் நான் போய்ப் பார்த்த போது மரங்கள் இருந்தன. 2012 இல் இரண்டு மரங்களும் காணாமல் போய் விட்டன!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.