Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார்.

பட மூலாதாரம்,ANUSH KOTTARY

படக்குறிப்பு, புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார்.

கட்டுரை தகவல்

  • இம்ரான் குரேஷி

  • பிபிசி ஹிந்திக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இந்த செய்தியில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார்.

புகார்தாரரான இவர் இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் தாம் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார்.

தன்னால் "குற்ற உணர்வோடு இதற்கு மேலும் உயிரோடு இருக்கமுடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டு வெளியே வந்தபின்னர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு பெண்ணின் தாயும் முன்வந்துள்ளார். உடல்கள் அடையாளம் காணப்பட்டால் தாம் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருப்பதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வழக்கில், விசாரணையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதை காவல்துறையினர் இன்னமும் முடிவு செய்யவில்லை. இதற்கிடையில், இந்த விசாரணை குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

"உடல்கள் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும், இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், பெயர்கள் வெளிவரக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும் ஒரு யுக்தி கடைப்பிடிக்கப்படுவதாக தெரிகிறது," என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கேவி தனஞ்செய் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடகா அரசு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை ஞாயிறன்று அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு டிஜிபி அந்தஸ்து உள்ள காவல் அதிகாரி பிரணாப் மொஹாந்தி தலைமை வகிக்கிறார்.

இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, " அரசு எந்த அழுத்தத்தின் மீதும் பணி செய்யாது. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். காவல்துறையினர் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என கோரினால் நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்போம்," என தெரிவித்திருந்தார்.

புகார்தாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த தூய்மைப் பணியாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் ஶ்ரீ ஷேத்ர தர்மஸ்தாலா மஞ்சுநாதா ஸ்வாமி கோயிலில் பணியாற்றினார். இந்த கோயில் தர்மஸ்தாலா கோயில் என்றும் அறியப்படுகிறது.

இந்தக் கோயில் தென்னிந்தியாவின் முக்கியமான மத தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது ஒரு சைவ கோயில், ஆனால் பூசாரிகள் வைஷ்ணவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ஜெயின் வம்சத்தினரிடம் உள்ளது.

புகார்தாரர், 1995 முதல் 2014 வரை நேத்ராவதி ஆற்றங்கரையை தவறாமல் சுத்தம் செய்து வந்ததாகக் கூறினார். பின்னர், அவரது பணியின் தன்மை மாறியது மற்றும் "கடுமையான குற்றங்களின் ஆதாரங்களை மறைப்பது" என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் பல பெண்களின் உடல்களை பார்த்ததாகவும், அவை "ஆடைகள் இல்லாமல், பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலின் தெளிவான அடையாளங்களுடன்" இருந்ததாகவும் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்க முயன்றபோது, அவரது மேலதிகாரிகள் மறுத்துவிட்டனர். உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தபோது, அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறுகிறார். "உன்னை துண்டு துண்டாக வெட்டுவோம்," "உன் உடலை மற்றவர்களைப் போல புதைப்போம்," "உன் குடும்பத்தையே கொன்றுவிடுவோம்" என்று கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணை தடுப்பு கோடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"2010-ல் நடந்த ஒரு சம்பவம் இன்னும் என்னை அடியோடு உலுக்குகிறது. கலையரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், காவலர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியின் உடலைப் பார்த்தேன். அவரது உடலில் ஆடைகள் குறைவாக இருந்தன, பாலியல் வன்முறையின் தெளிவான அடையாளங்கள் இருந்தன. அவரது கழுத்தில் கட்டிப்போடப்பட்ட தழும்புகள் இருந்தன. அவரையும் அவரது பள்ளி பையையும் புதைக்க ஒரு குழியை தோண்டுமாறு என்னிடம் கூறப்பட்டது. அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது," என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"என்னால் மறக்கமுடியாத மற்றொரு சம்பவம் 20 வயது பெண் ஒருவரின் முகம் ஆசிடால் எரிக்கப்பட்டதுதான்."

முதல் தகவல் அறிக்கையின் கூற்றுப்படி, ஆண்கள் கொல்லப்பட்ட விதம் "மிகவும் கொடூரமானதாக" இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு அறையில் நாற்காலியில் கட்டிப் போடப்பட்டு துண்டு ஒன்றால் அவர்கள் வாயைப் பொத்தி மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. புகார்தாரரின் கூற்றுப்படி இந்த சம்பவங்கள் அவர் கண்முன்னே நிகழ்ந்துள்ளன. "நான் பணியாற்றிய காலத்தில் நான் தர்மஸ்தாலா பகுதியில் பல இடங்களில் உடல்களை புதைத்துள்ளேன்," என அவர் தெரிவித்துள்ளார்.

"சில சமயம் அவர்களது உடல்கள் மேல் டீசலை ஊற்றும்படி சொல்வார்கள். பின்னர் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க அவர்களை எரிக்கும்படி உத்தரவு வரும். இந்த வகையில் நூற்றுக்கணக்கான உடல்கள் அழிக்கப்பட்டன."

"மன அழுத்தத்தை" தம்மால் அதற்கு மேலும் தாங்கமுடியவில்லை என்றும் குடும்பத்துடன் மாநிலத்தைவிட்டே வெளியேறியதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

"நான் குறிப்பிடும் நபர்கள் தர்மஸ்தாலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள். தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது, ஏனெனில் சிலர் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் எதிர்ப்பவர்களை அழிக்கக் கூடியவர்கள். எனக்கும் என் குடும்பத்திற்கும் சட்ட பாதுகாப்பு கிடைத்தவுடன், அனைவரின் பெயர்களையும் அவர்களின் பங்கையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன்," என முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

தனது புகாரை நிரூபிக்கவும் ஆதாரங்களை வழங்கவும், தூய்மைப் பணியாளர் தானே ஒரு கல்லறையை தோண்டினார். பின்னர் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

அவரது வாக்குமூலம் இந்திய பொது பாதுகாப்பு சட்டம் (BNSS) பிரிவு 183-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

நீதிபதியின் முன் ஆஜரானபோது புகார்தாரர் தலை முதல் கால்வரை முழுமையாக கருமையான துணியால் மூடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

விசாரணை மந்தகதியில் நடைபெறுகிறதா?

மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.வி. தனஞ்ஜய், விசாரணையின் மந்தமான வேகம் கவலையளிக்கிறது என்று கருதுகிறார்.

"புகார் ஜூலை 4-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. புகார்தாரர், BNSS பிரிவு 183-ன் கீழ் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, தான் புதைத்த ஒரு உடலின் எச்சங்களையும் சமர்ப்பித்தார். ஆனால், எட்டு நாட்களுக்கு மேலாகியும், புகார்தாரரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்ய எந்த முயற்சியையும் காவல்துறை எடுக்கவில்லை," என அவர் தெரிவித்தார்.

"இதுபோன்ற அலட்சியத்தை புரிந்துக் கொள்ளமுடியவில்லை, இது காவல்துறை செல்வாக்கு மிக்க நபர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்பதற்கான முக்கியமான தீவிர அறிகுறியாகும், அல்லது முறையான விசாரணை அல்லது இடங்களை சீல் வைப்பதற்கு முன்பு எந்தவொரு ஆதாரங்களை அகற்றுவதில் அல்லது சேதப்படுத்துவதில் வெற்றிபெற அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், தக்ஷிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் வேறு கருத்து தெரிவிக்கிறார்.

"பொதுவாக, 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் இது, வழக்கு என்னவென்பதை பொறுத்து, விசாரணை அதிகாரியின் (IO) பொறுப்பில் உள்ளது. அதன் பின், விசாரணை நடைமுறையின்படி நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், இப்போது மேலும் தகவல்களை பகிர முடியாது," என அவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

கல்லறையை தோண்டி எச்சங்களை எடுத்த இடத்திற்கு கூட புகார்தாரர் அழைத்து செல்லப்படவில்லை என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருண், "முதலாவதாக அவரது புகாரில் இருக்கும் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதி செய்யவேண்டும். அவரே குழியை தோண்டியுள்ளார். அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமா என்பதை பார்க்கவேண்டும். அடுத்த கட்டம் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை செய்வதுதான் என்பதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் புகார்தாரர் ஒரு கல்லறையை தோண்டுவதும் குற்றம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று உள்ளது. விசாரணை செய்து உறுதி செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் தேவை, " என கூறினார்.

மீண்டும் திறக்கப்பட்ட பழைய காயங்கள்

தூய்மைப் பணியாளரின் புகார் வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஒரு பெண்மணி, 22 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன தனது மகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார்.

அப்பெண் மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவியாக இருந்தார். தாயின் கூற்றுப்படி, அவரது மகள் கடைசியாக கோயிலில் காணப்பட்டார்.

அவரது வழக்கறிஞர் மஞ்சுநாத், "அவர் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. இந்த தூய்மைப் பணியாளரின் புகாரின் அடிப்படையில் உடல்கள் தோண்டப்பட்டால், அவற்றின் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே அவரது விருப்பம். மகளின் மரணத்தை ஏற்றுக்கொண்டு, இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம்," என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

"நான் அந்த மதத் தலத்திற்கு சென்றேன். அங்கு அதிகாரிகளிடம் பேச முயன்றேன்,ஆனால் அங்கிருந்து விரட்டப்பட்டேன். அதன் பின்னர் நான் காவல்நிலையத்திறுல் சென்றேன், அங்கும் நான் திருப்பி அனுப்பப்பட்டேன்," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அப்பெண்ணின் தாய்.

இது ஒரு தனி வழக்காக பார்க்கப்படுவதாக அருண் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். "இதை அந்த வழக்குடன் இணைக்கமுடியாது. ஆனால் அதுவும் விசாரிக்கப்படுகிறது," என அவர் சொல்கிறார்.

தூய்மைப் பணியாளரின் குற்றச்சாட்டுகள் நம்பகமானவையா?

தூய்மைப் பணியாளார் 100-க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருப்பதாக கூறியுள்ளார். இது கவனத்தை கவர்வது மட்டுமல்லாது, மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாகும்.

2012-ல் 17 வயது மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மாநிலத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. அப்போது, வி.எஸ். உக்ரப்பா தலைமையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை விசாரிக்க ஒரு எம்எல்ஏக்கள் குழு அமைக்கப்பட்டது.

"ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 100 பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன என்று ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி குழுவின் முன் கூறினார். அதே மாவட்டத்தில், 402 பெண்கள் மாயமான வழக்குகளும், 106 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன." என உக்ரப்பா, பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

இந்த குழுவின் அறிக்கை சில வாரங்களுக்கு முன்பு மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

1983-ல் தர்மஸ்தாலாவில் நான்கு பெண்கள் காணாமல் போன விவகாரம் கர்நாடக சட்டமன்றத்தில் பெல்தங்கடி எம்எல்ஏ கே. வசந்த பங்கேடாவால், எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c24vjjzqeq1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

22 JUL, 2025 | 10:24 AM

image

கர்நாடகா தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊழியர் கொடுத்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த புகாரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

"2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார்.

அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள்.இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன்.இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை'.

இப்படி கடந்த 15-ம் தேதி, தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

என்ன நடந்தது?

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.

அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது.

கடந்த ஜூலை 11-ம் தேதி, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்" என்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவர் ஜூன் மாதமே இது குறித்து புகார் அளித்துள்ளார்.

கோரிக்கைஅந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். மேலும், இவர் எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் சமர்பித்துள்ளார்.

இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போதும் கூட, சில எலும்புகளை கொண்டு வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர், அந்த உடல்கள் தற்கொலை செய்துகொண்டவர்களுடையது என்று நினைத்துள்ளார். அதன் பின் தான், தர்மஸ்தலாவை சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட உடல்கள் என்று அறிந்திருக்கிறார்.

இதே நிலை, அவர் சொந்தகாரர்களுக்கே நடந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து நின்றிருக்கிறார்.

இவர் இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கவே, மேலே கூறிய பெண்மணி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழு

இதனையடுத்து, கர்நாடகா பெண்கள் அமைப்பு, கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர், 'இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்' என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தட்சின கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண், "புகார் அளித்த மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் ஊழியர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அவர் சொல்லும் இடத்தில் குழி தோண்டி உடல்களை எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது.

இது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு சில சட்ட நடைமுறைகள் தேவை. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/220598

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தர்மஸ்தலா: நூற்றுக்கணக்கான மரணங்களும் நீடிக்கும் மர்மமும் -1979 முதல் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு

தர்மஸ்தலா மரணங்கள்

படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமியின் சிலைக்கு அருகே அமர்ந்துள்ள அவரது தாய்

கட்டுரை தகவல்

  • சதிஷ்

  • பிபிசி

  • 5 ஆகஸ்ட் 2025

(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)

ஜூலை 29ம் தேதி முதல் கர்நாடகாவின் தக்‌ஷிண கன்னட மாவட்டத்தில், நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் எலும்பு கூடுகள் புதையுண்டு கிடக்கின்றவா என்று தேடும் பணி நடைபெறுகிறது. காவல்துறை மேற்பார்வையில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிலப் பகுதிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை தான் புதைத்துள்ளதாக ஒருவர் கூறினார். அவர் தர்மஸ்தலா என்ற புனித தலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றியதாகவும், ஒரு அதிகாரம் மிக்க குடும்பம் கூறியதன் அடிப்படையில் அதை செய்ததாகவும் தெரிவிக்கிறார்.

1998 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் புதைக்கப்பட்ட அந்த உடல்களில் பலவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் உடையது என்று ஜூலை 3ம் தேதி செய்தியை வெளிக்கொண்டு வந்த அந்த அடையாளம் தெரியாத தலித் நபர் தெரிவித்தார்.

தர்மஸ்தலா மரணங்கள்

படக்குறிப்பு, நேத்ராவதி ஆறு

சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை

இந்த விவகாரத்தை விசாரிக்க, ஜூலை 19ம் தேதி கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. புகார் அளித்தவர் அடையாளம் காட்டிய இடங்களில் தோண்டி ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வுப் பணி முடிந்துள்ள எட்டு இடங்களில் ஒன்றில், எலும்பு கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தடயவியல் பகுப்பாய்வுக்கு பிறகே, ஒரு முடிவுக்கு வர முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தர்மஸ்தலா கோயில் பொறுப்பாளரின் சகோதரர், மத தலத்தை நடத்தி வரும் குடும்பத்துக்கு எதிராக "அவதூறு" செய்திகளை வெளியிடுவதற்கு தடை உத்தரவு பெற்றிருந்தார். அந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளது.

ஜூலை 20ம் தேதி, கோயில் அதிகாரிகள் "வெளிப்படையான மற்றும் நியாயமான" விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

"ஒரு சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் விழுமியங்களுக்கு உண்மையும் நம்பிக்கையுமே ஆதாரமாக விளங்குகின்றன. சிறப்பு புலனாய்வுக் குழு முழுமையான பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், நம்புகிறோம்" என்று அந்த அறிக்கை கூறியது.

தர்மஸ்தலா மரணங்கள் குறித்த மர்மமும் கோபமும்

சமீபத்திய நிகழ்வுகள் தர்மஸ்தலா மீது கவனத்தை ஈர்த்திருந்தாலும், இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல.

2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 452 சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் தர்மஸ்தலா மற்றும் அருகில் உள்ள உஜ்ரே கிராமத்தில் நடைபெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு காவல்துறையினர் பதில் அளித்திருந்தனர்.

இவை தற்கொலைகளாகவோ, விபத்துகளாகவோ இருக்கலாம். மேலும், இந்த 452 மரணங்கள் தற்போது புதையுண்டிருக்கலாம் என்று முன்னாள் துப்புரவு ஊழியர் கூறும் உடல்களுடன் சம்பந்தப்பட்டவை அல்ல, ஏனென்றால் இவை காவல்துறையால் விசாரிக்கப்படாத வழக்குகளாகும்.

எனினும், இரண்டு கிராமங்களிலும் நடைபெற்ற சந்தேகத்துக்கு இடமான மரணங்களின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறானது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய நாகரிக சேவா அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பு பிபிசியிடம் கூறியது.

காவல்துறை பதிவு செய்த மரணங்களை விட மேலும் பல சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் குறித்த புகார்கள் கடந்த ஆண்டுகளில் எழுந்துள்ளன.

தர்மஸ்தலா மரணங்கள்

படக்குறிப்பு, மகேஷ் ஷெட்டி தனது இல்லத்தில் உயிரிழந்தவரின் புகைப்படத்தை, தனது விருப்பமான தலைவர்களின் படத்துடன் வைத்துள்ளார்.

1979-ல் பள்ளி ஆசிரியர் உயிருடன் எரிக்கப்பட்டதாக வழக்கு

தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்காக 1979-ல் வேதவள்ளி என்ற பள்ளி ஆசிரியர் எரித்து கொல்லப்பட்டார் என்று அப்பகுதியில் உள்ள மகேஷ் ஷெட்டி திமரோடி மற்றும் கிரீஷ் மட்டேனவர் குற்றம் சாட்டுகின்றனர்.

தர்மஸ்தலா மற்றும் உஜ்ரேவில் உள்ள பலர் 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தை நினைவு கூறுகின்றனர்.

கல்லூரியிலிருந்து காணாமல் போன 17 வயது மாணவி, 56 நாட்கள் கழித்து நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று கூறுகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அந்த மாணவியின் தந்தை முடிவு செய்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று அவரது குடும்பமும் உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று பிபிசியிடம் பேசும் போது அவர்கள் புகார் தெரிவித்தனர்.

"எனது சகோதரியின் உடல் கைகள் மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் எங்கள் வழக்கப்படி எரிக்காமல் அவரது உடலை புதைத்துவிட்டோம். அவரது முன் வரிசை பற்கள் காணவில்லை என்று உடலை பார்த்த எனது அத்தை கூறினார். கிராமத்தில் உள்ள அதிகாரம் மிக்கவர்கள் எங்கள் தந்தையின் மீது கோபம் கொண்டிருந்தனர்" என்று அவரது சகோதரி கூறினார்.

இதே போன்ற மற்றொரு சம்பவம் குறித்த புகார் 2003-ம் ஆண்டு எழுந்தது. முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி, தனது நண்பர்களை காண வந்த போது தர்மஸ்தலாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.

இது குறித்தான புகாரை கூட காவல்துறை ஏற்க மறுத்துவிட்டனர் என்று அவரது தாய் குற்றம் சாட்டுகிறார். கிராமத்தின் பெரியவர்களும் அவரை கடிந்துக் கொண்டதாக பிபிசியிடம் கூறுகிறார்.

"இது தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வேலையா? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அவரிடம் கூறப்பட்டதாக தெரிவிக்கிறார்.

"நான் கோயிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த போது என்னை யாரோ சிலர் கடத்தி சென்றனர். அவர்களிடம் எனது மகள் குறித்து கேட்ட போது, தலையின் பின் பக்கத்தில் அடித்து தாக்கினர். மூன்று மாதங்கள் கழித்து பெங்களூரூவில் ஒரு மருத்துவமனையில் நான் கண் விழித்தேன்" என்கிறார்.

மங்களூரூ திரும்பிய போது, அவரது வீடு எரிக்கப்பட்டது தெரிய வந்தது. "எனது துணி, ஆவணங்கள் மற்றும் எனது மகளின் துணி மற்றும் ஆவணங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்தன" என்று கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் தோண்டும் பணிகளின் போது தனது மகளின் உடல் கிடைத்தால், அதை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தர்மஸ்தலா மரணங்கள்

படக்குறிப்பு, 1986-ம் ஆண்டு உயிரிழந்த 17 வயது மாணவியின் உடலை, எதிர்கால விசாரணைக்காக குடும்ப வழக்கப்படி எரிக்காமல் புதைத்துள்ளார் அவரது தந்தை

திருப்பத்தை ஏற்படுத்திய சிறுமி வழக்கு

இந்த சம்பவங்களுக்கு இடையில் ஒரு சம்பவம் 2012-ம் ஆண்டு நடைபெற்றது.

2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காயங்கள் நிறைந்த ஆடைகளற்ற ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

"அவளது உடலை பார்த்தால், அவள் பல பேரால் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானவள் என்று யார் வேண்டுமானாலும் கூறிவிட முடியும்" என்கிறார் பிபிசியிடம் பேசிய அந்த சிறுமியின் தாய்.

சிறுமியின் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் காவல்துறை விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். உள்ளூர் மக்களும் உரிமை கோரும் அமைப்புகளும் நீதி கேட்க தொடங்கிய போது கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

சந்தோஷ் ராவ் என்பவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். சிறுமியின் குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்ட தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்க அந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்

ஒன்பது ஆண்டு காலம் சிறையில் கழித்த சந்தோஷ் ராவை சிறப்பு சி பி ஐ நீதிமன்றம் விடுவித்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

மேற்கூறிய வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினரின் பதிலை கேட்க பிபிசி தொடர்ந்து முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

தர்மஸ்தலா மரணங்கள்

படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமிக்கு வைக்கப்பட்டுள்ள சிலை.

தர்மஸ்தலாவின் "செல்வாக்கு மிக்கவர்கள்"

மேற்குறிப்பிட்டுள்ள வழக்குகள் மற்றும் தலித் நபர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்திலும் பொதுவாக இருப்பது தர்மஸ்தலா கோயிலை நடத்தும் குடும்பம் தான். அவர்களை நோக்கியே புகார் சொல்லும் கைகள் நீள்கின்றன.

"குற்றவாளி யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று 2012-ம் ஆண்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் தாத்தா கூறுகிறார்.

"அவர்கள் கொலை செய்து விட்டு, காவல்துறை குறித்த எந்த பயமும் இன்றி, உடல்களை சாலைக்கு அருகில் புதைத்துவிடுவார்கள். கழிவறை வசதி இல்லாததால் அந்த காலத்தில் நாங்கள் காடுகளுக்கு செல்வோம். அப்போது காட்டுப் பன்றிகளால் தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் உடல்களை பார்ப்போம்" என்றார்.

இதே கருத்தை நாகரிக சேவா அறக்கட்டளையின் நிர்வாகி சோமநாதாவும் தெரிவிக்கிறார். "இங்கு ஒரு கும்பல் உள்ளது. 'டி' (D) கும்பல் என்றழைக்கப்படும் அவர்களுக்கு தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவு உள்ளது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

உயிருடன் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வழக்கை நடத்தி வரும் மகேஷ் ஷெட்டி திமரொடி, கடந்த 13 ஆண்டுகளில் தனக்கு எதிராக 25 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறுகிறார்.

தர்மஸ்தலாவில் நடைபெற்றதாக புகார் எழுப்பப்படும் குற்றங்கள் குறித்து, " நான் எனது சிறு வயதிலிருந்து இதை பார்த்து வருகிறேன். காடுகளில் அழுகிய உடல்கள் எத்தனை என்று தெரியுமா? சாலைகளில் புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தெரியுமா?" என்கிறார் அவர்.

இந்த சட்டப் போராட்டத்தில் அவருக்கு துணை நிற்கும் முன்னாள் காவல் அதிகாரியும் முன்னாள் பாஜக தலைவருமான கிரிஷ் மட்டேனவர், நூற்றுக்கணக்கான பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படவே இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

"குற்றவாளிகள் மதம் மற்றும் கடவுள் என்ற போர்வையை பயன்படுத்தி வருகின்றனர்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

சமீப காலங்களில் எழுப்பப்படும் புகார்கள்

சமீப காலங்களிலும் செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும் கோயிலை நடத்தி வரும் குடும்பம் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவர் தலைவர் தனுஷ் ஷெட்டி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் தர்மஸ்தலா குடும்பம் குறித்து தான் எழுத ஆரம்பித்த பிறகு, "உனக்கு விரைவில் ஒரு விபத்து நிகழப் போகிறது" என்று தனது செல்போனில் குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்தார்.

சுமார் இரண்டு மாதங்கள் முன்பு, அவர் ஆட்டோ ஒன்றினால் மோதப்பட்டதாக கூறுகிறார். அதன் பின், "நான் உனது விபத்தை நேரில் பார்த்தேன். அது கடவுளின் ஆசை" என்று மற்றொரு குறுஞ்செய்தி வந்ததாகவும் கூறுகிறார்.

காவல்துறை முதலில் புகாரை பெற மறுத்ததாகவும், காவல் கண்காணிப்பாளரை அணுகிய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று ஷெட்டி மேலும் கூறுகிறார். "எனினும் விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது. தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்து யார் போராடினாலும் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.

கர்நாடகாவில் உள்ள பிரபல யூடியூபர் எம் டி சமீர், தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களுக்கு எதிராக பேசியதற்காக தானும் குறிவைக்கப்பட்டதாக கூறுகிறார். 2012ம் ஆண்டு சிறுமியின் மரணத்துக்கு பிறகு இந்த விவகாரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்கு சமீர் போன்ற உள்ளூர் சமூக ஊடகவியலாளர்கள் காரணமாக இருந்தனர்.

தற்போது மூன்று வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும் யூ டியூப் சேனலிலிருந்து உள்ளடகத்தை நீக்குமாறு பல சட்ட உத்தரவுகள் வந்துள்ளதாகவும் சமீர் பிபிசியிடம் தெரிவித்தார்

புகார் கொடுத்த முன்னாள் துப்புரவு ஊழியர் தனது வாக்குமூலத்தில், "பெயர்களை சொல்லும் முன் மாயமாவது அல்லது கொல்லப்படுவது" குறித்த கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலை பெற தர்மஸ்தலா கோயில் பிரதிநிதிகளை பிபிசி அவர்களை தொடர்பு கொண்ட முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொண்டு பதில் பெற இயலவில்லை.

தர்மஸ்தலா மரணங்கள்

படக்குறிப்பு, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் புகார் அளித்த முன்னாள் துப்புரவு ஊழியர்

கர்நாடக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

கர்நாடகாவில் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் – பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் கோயிலை நடத்தும் குடும்பத்தினரை பாதுகாப்பதே அவர்கள் தைரியமாக செயல்பட காரணம் என்று மகேஷ் ஷெட்டி திமரொடி கூறுகிறார்.

"மாநில மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் அவர்களை வந்து பார்க்கின்றனர்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் மூன்று கட்சிகளும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.

தனது பெயரை குறிப்பிட விரும்பாத பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர், "சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்து, விசாரணை அறிக்கை பொது வெளிக்கு வரட்டும்" என்றார்.

கர்நாடக காங்கிரஸ் ஊடக கமிட்டியின் துணைத் தலைவர் சத்ய பிரகாஷ், காங்கிரஸ் தலைமையிலான அரசே சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது என்று சுட்டிக்காட்டினார்.

"குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. அதோடு, உண்மையை பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு" என்றார்.

அதே நேரம் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அறிவழகன் தங்கள் கட்சிக்கும் கோயிலை நடத்தும் குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார். "சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடியும் வரை காத்திருப்போம்" என்றார்.

முன்னாள் துப்புரவு ஊழியரின் புகாரை எடுத்து வாதாடி வரும் வழக்கறிஞர் கே வி தனுஞ்சயா இந்த விவகாரத்தின் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து பேசினார். "தனது கட்சிக்காரரின் புகார்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது காவல்துறையினரின் வேலை" என்று பிபிசியிடம் கூறினார்.

"அவரது குற்றச்சாட்டுகள் கடந்த கால புகார்கள் அல்லது நிலுவையில் உள்ள விசாரணைகளுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. இது முற்றிலும் புதிய புகார். எனக்கு தெரிந்த வரையில் இது இந்திய நீதித்துறையில் ஒரு அரிய வழக்காகும்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy98d9vl511o

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தர்மஸ்தலா: 100க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை, கொலை என புகார் அளித்தவர் கைது - காரணம் என்ன?

பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு வட்டாரங்கள் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தன.

பட மூலாதாரம், ANUSH KOTTARY/BBC

படக்குறிப்பு, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, புகார்தாரரை அவர் உடலை அடக்கம் செய்ததாகக் கூறும் 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது.

கட்டுரை தகவல்

  • இம்ரான் குரேஷி

  • பிபிசி இந்திக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கர்நாடகாவில் தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, கோவில் நகரமான தர்மஸ்தலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களை சட்டவிரோதமாக அடக்கம் செய்ததாகக் கூறிய முன்னாள் துப்புரவுத் தொழிலாளியை கைது செய்துள்ளது.

பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு வட்டாரங்கள் பிபிசி இந்தியிடம் தெரிவித்தன.

மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், அங்கிருந்து பத்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த முன்னாள் துப்புரவுப் பணியாளர் காவல்துறை முன் புகார்தாரராகவும் சாட்சியாகவும் ஆஜரானார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் சாட்சியம் அளித்த பிறகு, சாட்சி பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த, இந்த முன்னாள் துப்புரவு பணியாளர் ஒரு மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் எச்சங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். இதன் மூலம், துப்புரவு பணியாளர் தனது கூற்றுகளை உண்மை என்று நிரூபிக்க முயன்றார்.

காவல்துறையில் அளித்த புகாரை நியாயப்படுத்த, 1995 முதல் 2014 வரை இறந்த உடல்களை அடக்கம் செய்த இடத்திற்கு தான் சென்றதாக அந்த நபர் கூறியிருந்தார்.

மேலும் தனது மனசாட்சியைத் திருப்திப்படுத்த இதைச் செய்ததாகவும் அவர் கூறினார்.

பொய் சாட்சியம் அளிப்பதற்கு என்ன தண்டனை?

புகார்தாரர்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார்.

கடந்த சில நாட்களாக நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு, சிறப்பு விசாரணைக் குழு அந்த நபரைக் கைது செய்துள்ளது.

"அவர் கொண்டு வந்த மண்டை ஓடு மற்றும் எலும்பின் எச்சங்கள், அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல"என்று ஒரு அதிகாரி கூறினார்.

அந்த நபர் பெண்ணுடையது எனக் கூறிய மண்டை ஓடு, உண்மையில் ஒரு ஆணுடையது. துப்புரவுப் பணியாளர்கள் ஆதாரமாக கொண்டு வந்த அந்த மண்டை ஓட்டின் தடயவியல் பரிசோதனையில், அது ஆணுடையது என்பது உறுதியாகியுள்ளது என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டார்.

"நீதித்துறை நடவடிக்கையில் தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளிப்பவர் அல்லது விசாரணையின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் பொய்யான சாட்சியங்களைத் தயாரிப்பவர், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் பெறலாம்" என இந்திய நீதிச் சட்டத்தின் பிரிவு 229 இன் கீழ் உள்ள விதி கூறுகிறது.

"துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்ட வழக்குகளைத் தவிர, வேறு எந்த வழக்கிலும் யாராவது தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளித்தாலோ அல்லது உருவாக்கினாலோ, அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்"

இந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஜூலை 3ஆம் தேதி தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது தலை முதல் கால் வரை மூடப்பட்ட வகையில் அவர் உடை அணிந்திருந்தார்.

பின்னர், அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

புகார்தாரராகவும், சாட்சியாகவும் இருந்த அவரை , அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு எஸ்ஐடி (SIT) குழு அழைத்துச் சென்றது.

அந்த இடங்களில் ஆறாவது மற்றும் பதினொன்றாவது இடங்களுக்கு அருகில் 'சில எலும்புக்கூடு எச்சங்கள்' கண்டுபிடிக்கப்பட்டன. 13வது இடத்தில் நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்ய நிலத்தில் ஊடுருவும் ரேடார் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.

பாஜக என்ன சொல்கிறது?

தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவில்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவில்

கடந்த வாரத்தில், எதிர்க்கட்சியான பாஜக பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலா வரை பேரணி நடத்தி, "இந்து மதத் தலத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம்" எனக் கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, பிற தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, ஸ்ரீ க்ஷேத்ர மஞ்சுநாதசுவாமி கோவிலின் அதிகாரியையும், ராஜ்யசபா எம்பி வீரேந்திர ஹெக்டேயையும் சந்தித்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பிபிசியிடமும் ஒரு செய்தி நிறுவனத்திடமும் பேசிய வீரேந்திர ஹெக்டே, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபரின் குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என்றும், மக்களின் நலனுக்காக பல துறைகளில் சிறப்பான சேவையை வழங்கிய அமைப்பின் நற்பெயரை களங்கப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார்.

அரசாங்கம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது என இந்த வாரம் சட்டமன்றத்தில் பேசியபோது தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா,

"விசாரணைக்குப் பிறகு, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபர் குறிப்பிட்ட இடங்களில் எப்போது தோண்டத் தொடங்குவது என்பதை சிறப்பு புலனாய்வு குழு தான் முடிவு செய்யும்" என்றும் கூறினார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜி. பரமேஸ்வரா, சிறப்பு விசாரணை குழுவின் பணி விசாரணை முடியும் வரை தொடரும் என்றார்.

மேலும், "இது ஒரு சதித்திட்டமாக இருந்தாலும், விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

வழக்கின் பின்னணி

ஜூலை 19-ஆம் தேதி, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலத்தில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்படுவதாகக் கூறி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜூலை 3-ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா என்ற புனிதத் தலத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்தபோது, ஒரு செல்வாக்கு மிக்க குடும்பம் மற்றும் அவர்களது ஊழியர்களின் உத்தரவின்படி நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்ததாகக் கூறினார்.

பல பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல்களைப் புதைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்போது, தனது மேலதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்ததால் தான் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்ததாக புகார் அளித்தவர் கூறினார்.

ஜூலை 19-ஆம் தேதி, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது.

புகார்தாரரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் தோண்டும் பணியை அந்த குழு மேற்கொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg3z032jx4o

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தர்மஸ்தலா வழக்கில் புகார் அளித்தவருக்கு எதிராகவே சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை தாக்கல்

புகார் கூறியவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்துச் சென்ற காட்சி

பட மூலாதாரம், Anush Kottary/BBC

படக்குறிப்பு, வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, புகார்தாரரை அவர் சடலங்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது.

கட்டுரை தகவல்

  • இம்ரான் குரேஷி

  • பிபிசிக்காக, பெங்களூருவில் இருந்து

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தர்மஸ்தலா வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), முன்னாள் துப்புரவுத் தொழிலாளி சி.என். சின்னையா மற்றும் அவருடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு எதிராக 4,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இவர்கள் மீது, 'பாலியல் வன்முறை மற்றும் கொலைக்குப் பிறகு பெண்களின் சடலங்களை சட்டவிரோதமாகப் புதைத்ததாக' பொய்க் கதைகளை உருவாக்கியது மற்றும் போலி சாட்சிகளை உருவாக்கிய சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நுட்பமாகப் பார்த்தால் இந்த 4,000 பக்க அறிக்கை, ஆதாரமற்ற வழக்குகள் மற்றும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதில் இருந்து நீதிமன்ற நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 215இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகாராகக் கருதப்படுகிறது.

சி.என். சின்னையா தவிர, கிரிஷ் மட்டன்னவர், மகேஷ் ஷெட்டி திமரோடி, டி. ஜெயந்த், விட்டல் கௌடா, சுஜாதா பட் ஆகியோரின் பெயர்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் மீது போலி சாட்சிகளை உருவாக்கியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, மற்றும் பிற சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்குடன் தொடர்பில்லாத பெயர் வெளியிட விரும்பாத கர்நாடகாவின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுப் பொய் சொல்வது சிறிய குற்றம் அல்ல. இது ஒரு தீவிரமான குற்றமாகக் கருதப்படுகிறது" என்றார்.

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த ஜூலை 3ஆம் தேதி, சின்னையா பெல்தங்கடி என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தான் ஒரு செல்வாக்குமிக்க குடும்பம் மற்றும் அவர்களின் ஊழியர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்ததாகக் கூறியிருந்தார்.

கடந்த 1995 முதல் 2014க்கு இடையே புதைக்கப்பட்ட இந்த சடலங்களில், பல பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது.

போலீஸ் புகாரைத் தொடர்ந்து, அவர் ஒரு நீதிபதி(magistrate) முன்னிலையிலும் வாக்குமூலம் அளித்தார். தனது கூற்றை உறுதிப்படுத்த, அவர் ஒரு மண்டை ஓட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தார்.

புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனதின் பாரத்தைக் குறைக்கவே கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

அவர் இந்தக் குற்றச்சாட்டை மதத் தலமான தர்மஸ்தலா குறித்து தெரிவித்ததால் இது தொடர்ந்து தலைப்புச் செய்தியானது.

இந்த இடத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் புகழ்பெற்ற மஞ்சுநாத சுவாமி கோவில் உள்ளது.

விசாரணையில் என்ன நடந்தது?

பெண்களின் சடலங்களைப் புதைத்ததாக சின்னையா கூறிய இடங்களுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அவரை அழைத்துச் சென்றது.

அவர் உறுதிப்படுத்திய 14க்கும் மேற்பட்ட இடங்கள் மேஜிஸ்திரேட்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. சில இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடு எச்சங்களை விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன.

இதையடுத்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டில் சின்னையாவை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது.

தடயவியல் சோதனையில், அவர் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் முன் "ஒரு பெண்ணுடையது" என்று காண்பித்த மண்டை ஓடு உண்மையில் ஒரு பெண்ணுடையது அல்ல என்று தெரிய வந்தது.

இரண்டு மருத்துவமனைகளில் (ஒரு அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை) நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில், அது ஓர் ஆணின் மண்டை ஓடு என்று கண்டறியப்பட்டது. பின்னர், தனக்கு அந்த மண்டை ஓட்டைத் தனது கூட்டாளி ஒருவரே கொடுத்ததாக அவர் கூறினார்.

தர்மஸ்தலா மைல்கல்

படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் சட்டவிரோதமாக சடலங்களைப் புதைத்ததாகக் கூறி ஒரு நபர் ஏற்படுத்தினார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை

வியாழக் கிழமையன்று, சிறப்புப் புலனாய்வுக் குழு கூடுதல் சிவில் நீதிபதி மற்றும் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) சி.எச். விஜேந்திராவின் நீதிமன்றத்தில் ஒரு புகாரைத் தாக்கல் செய்தது.

இப்போது, போலி ஆதாரங்களைச் சமர்ப்பித்தது, ஆதாரங்களைத் திரித்தது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான இந்த அறிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சின்னையா மற்றும் அவரது கூட்டாளிகள், சின்னையாவின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த நோட்டீஸுக்கு எதிராக கிரிஷ் மட்டன்னவர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு ஆரம்பத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குத் தடை விதித்தது, ஆனால் நவம்பர் 12 அன்று அந்தத் தடை நீக்கப்பட்டது.

கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புகார்தாரர் (சின்னையா) அவரது ஐந்து கூட்டாளிகளின் முழு கட்டுப்பாட்டில் இருந்தார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியது.

அரசுத் தரப்பில் வழக்குடன் தொடர்புடைய, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது முதல் அறிக்கைதான் என்றும், மற்ற இடங்களில் விசாரணை முடிந்த பிறகு ஒரு துணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையில் பங்கலேகுட்டே மலைப் பகுதிகளில் தோண்டியபோது, அங்கிருந்து ஐந்து மண்டை ஓடுகளும் மேலும் சில மனித எச்சங்களும் மீட்கப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g9dz29qzdo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.