Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-65.jpg?resize=750%2C375&ssl=

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!

ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜப்பானில் புதன்கிழமை (06) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, உலகம் முழுவதிலுமிருந்து வந்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார்.

மேற்கு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா 1945 ஆகஸ்ட் 6, அன்று தரைமட்டமாக்கப்பட்டது.

அப்போது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற செல்லப்பெயர் கொண்ட யுரேனியம் குண்டை வீசியது.

இந்த குண்டுவெடிப்புகளில் 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் – சிலர் உடனடியாகவும், ஏனையவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்களாலும் மரணித்தனர்.

American bomber drops atomic bomb on Hiroshima | August 6, 1945 | HISTORY

இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா சில இராணுவப் பிரிவுகளின் தலைமையகமாகவும், ஒரு முக்கிய விநியோகத் தளமாகவும் இருந்தது.

இந்த நிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் சரணடைந்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, இது பல நாட்கள் இடைவெளியில் நடந்தது.

அணுசக்தி வல்லரசான அமெரிக்கா மற்றும் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாத இஸ்ரேல் உட்பட 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள், இந்த மைல்கல் ஆண்டிற்கான ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர விழாவில் கலந்து கொண்டனர்.

குண்டுவெடிப்பு நடந்த சரியான நேரமான உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://athavannews.com/2025/1442012

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானின் ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி இன்றுடன் 80 வருடங்கள் - "உக்ரைன் மத்திய கிழக்கு மோதல்கள் அணுகுண்டினால் ஏற்படக்கூடிய பெரும் துன்பியல் நிகழ்வுகளை உலகம் புறக்கணிப்பதை காண்பிக்கின்றது"

Published By: RAJEEBAN

06 AUG, 2025 | 03:42 PM

image

உக்ரைன் மத்திய கிழக்கு நெருக்கடிகள் உலகம் அணுவாயுதத்தினால் ஏற்படக்கூடிய பெரும் துன்பியல் நிகழ்வுகளை புறக்கணிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் அணுகுண்டுவீச்சிற்கு உள்ளான ஹிரோசிமாவின் மேயர் தெரிவித்துள்ளார்.

hiroshima_804.jpg

ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டுவீச்சினை மேற்கொண்டு இன்றுடன் 80 வருடங்களாகின்ற நிலையில் அது தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஹிரோசிமாவின் அமைதிப்பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள் உயிர் பிழைத்தவர்கள்  மற்றும் 120 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஹிரோசிமாவின் மேயர்  கசுமீ மட்சுய் உக்ரைனிலும் மத்தியகிழக்கிலும் இடம்பெற்ற மோதல்கள் அணுவாயுதங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்கள் வரலாற்றின் துயரங்களில் இருந்து சர்வதேச சமூகம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களை புறக்கணிக்கின்றன என ஹிரோசிமா மேயர் தெரிவித்துள்ளார்.

பலர் மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கிய அமைதி கட்டமைப்பை கவிழ்த்துவிடுவோம் என  அவர்கள் அச்சுறுத்துகின்றனர் என மேயர் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதங்களை ஏற்றுக்கொள்வது எதிர்காலத்தில் முற்றிலும் மனிதாபிமானமற்ற விளைவுகளை  ஏற்படுத்தும் என்பதை இளம் தலைமுறை உணரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் மக்களாகிய நாங்கள் ஒருபோதும் கைவிடக்கூடாது நேர்மையான அமைதியான உலகிற்காக அணுவாயுதங்களை அழிக்கவேண்டும் என்ற கருத்தொருமைப்பாடுடைய சிவில் சமூகத்தை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைதட்டல்கள் முழங்க வெள்ளைப் புறாக்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. அதே நேரத்தில் உலகின் முதல் அணு ஆயுதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னத்தின் முன் ஒரு நித்திய "அமைதிச் சுடர்" ஏற்றப்பட்டது.

hiroshima_801.jpg

ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அணுகுண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பிய வயதான ஹிபாகுஷாக்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் அணு ஆயுதப் போரின் பயங்கரம் குறித்த நேரடி எச்சரிக்கைகளை அனுப்புவதற்கான கடைசி வாய்ப்பாக இந்த நிகழ்வை கருதுகின்றனர்

hiroshima803.jpg

சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி 100000 க்கும் குறைவான உயிர் பிழைத்தவர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர் சராசரி வயது 86 க்கு மேல். புதன்கிழமை கடந்த ஆண்டில் இறந்த 4940 க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட உயிர் பிழைத்தவர்களின் பெயர்கள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் சேர்க்கப்பட்டன. இதனால் ஹிரோஷிமா குண்டுவெடிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 350000 ஆக உயர்ந்துள்ளது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் திகதி அமெரிக்காவின் யுஎஸ் பி29 குண்டுவீச்சு விமானம் 15கிலோதொன் யுரேனியம் குண்டை ஹிரோசிமா மீது வீசியதில் - அந்த வருட இறுதிக்குள் 150000 பேர் உயிரிழந்தனர்.

நகரம் முழுவதும் தீ பற்றி எரிந்தபோது ஒரு பெண் தண்ணீருக்காக கெஞ்சியதை மாட்சுய் தனது அமைதிப் பிரகடனத்தில் நினைவு கூர்ந்தார்.

பல தசாப்தங்களுக்குப் பிறகும் அந்த வேண்டுகோளைக் கேட்ட ஒரு பெண் அந்த இளம் பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்காததற்கு இன்னும் வருத்தப்படுகிறார்" என்று அவர் கூறினார். "அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காகப் போராடுவதுதான் இறந்தவர்களுக்குத் தன்னால் செய்யக்கூடிய சிறந்தது என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்."

ஹிரோஷிமா பேரழிவிற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா நாகசாகி நகரத்தின் மீது புளூட்டோனியம் குண்டை வீசி 74000 பேரைக் கொன்றது. இந்தத் தாக்குதல்கள் தார்மீக ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் நியாயமானவையா என்பது குறித்து விவாதம் தொடர்ந்தாலும் ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானை சரணடைய கட்டாயப்படுத்தியதாக பல அமெரிக்கர்கள் தொடர்ந்து நம்புகின்றனர்.

கடந்த ஆண்டு நோபல் பரிசு வென்ற குண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களின் நாடு தழுவிய வலையமைப்பான நிகோன் ஹிடயன்கோ 90 வீத அணுவாயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யாவையும் - மற்றும் பிற அணுசக்தி நாடுகளையும் சவால் செய்ய மனிதகுலம் காலத்திற்கு எதிரான போட்டியில் உள்ளது என்றார்.

"நமக்கு அதிக நேரம் இல்லை அதே நேரத்தில் நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம்" என்று அது ஒரு அறிக்கையில் கூறியது. "இப்போது நமது மிகப்பெரிய சவால் அணு ஆயுத நாடுகளை மாற்றுவதுதான்... கொஞ்சம் கூட."

குண்டு வெடித்த சரியான நேரத்தில் காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தியது. பலர் தலை குனிந்து கண்களை மூடிக்கொண்டனர் சிலர் கைகளை ஒன்றாக இணைத்து பிரார்த்தனை செய்தனர்.

hiroshima_80.jpg

தனது பேரனுடன் அதிகாலையில் பூங்காவிற்குச் சென்ற சக்கர நாற்காலி பயனாளியான 96 வயதான யோஷி யோகோயாமா ஹிரோஷிமா தாக்குதலின் விளைவாக தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இறந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

“குண்டுவெடிப்புக்குப் பிறகு எனது தாத்தா இறந்துவிட்டார், அதே நேரத்தில் எனது தந்தை மற்றும் தாய் இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்” என்று அவர் கூறினார். “எனது மாமியாரும் இறந்துவிட்டார், எனவே எனது கணவர் போருக்குப் பிறகு போர்க்களங்களிலிருந்து திரும்பி வந்தபோது அவர்களை மீண்டும் பார்க்க முடியவில்லை. மக்கள் இன்னும் அவதிப்படுகிறார்கள்.”

https://www.virakesari.lk/article/221960

  • கருத்துக்கள உறவுகள்

ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசியதும் வீரர்கள் கீழே கண்ட காட்சி என்ன? விமானக் குழுவின் அனுபவம்

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது எனோலா கே விமானம் அணுகுண்டு வீசியதை சித்தரிக்கும் படம்

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி இந்தி

  • 12 ஆகஸ்ட் 2025, 01:59 GMT

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் முதல் அணுகுண்டு சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த விஷயம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அப்போதைய அமெரிக்க துணை அதிபர் ஹாரி ட்ரூமனுக்கு கூட இது குறித்து தெரியாது.

அமெரிக்க அதிபராக பதவி வகித்த ரூஸ்வெல்ட் இறந்த 24 மணி நேரத்துக்குப் பிறகுதான், அமெரிக்கா மிகவும் அழிவுகரமான அணுகுண்டை உருவாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வரும் தகவல் ஹாரி ட்ரூமனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

1945 ஜூலை 15ஆம் நாளன்று, அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் மன்ஹாட்டன் திட்ட இயக்குநர் லெஸ்லி க்ரோவ்ஸ் இருவரும், பதுங்கு குழியில் அணுகுண்டு சோதனை செய்வதற்கான அனுமதிக்காகக் காத்திருந்தனர். அன்று, அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் உள்ள பகுதியில் கடுமையான புயல் வீசியது.

இயன் மெக்கிரேகர் தனது 'தி ஹிரோஷிமா மென்' என்ற புத்தகத்தில், "1945 ஜூலை 16 அன்று, அதிகாலை 5:30 மணிக்கு, முதல் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டது. அந்த அதிகாலை வேளையில், நியூ மெக்ஸிகோவின் பாலைவனம் நண்பகல் போல பிரகாசித்தது."

"லெஸ்லி க்ரோவ்ஸ் தனது சகாக்களான வன்னேவர் புஷ் மற்றும் ஜேம்ஸ் கோனன்ட் ஆகியோருடன் கைகுலுக்கினார். 'உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று ஓப்பன்ஹெய்மரை வாழ்த்திய அவர், அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அணுகுண்டு இறுதியாக நமக்கு கிடைத்துவிட்டது."

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 1945 ஜூலை 16-ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டை பரிசோதித்து பார்த்தது

அதேநேரத்தில், க்ரோவ்ஸ் தனது அறிக்கையை போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சனுக்கு சங்கேத மொழியில் அனுப்பினார். ஸ்டிம்சன் அதை அதிபர் ட்ரூமனுக்கு வாசித்துக் காட்டினார். 24 மணி நேரத்துக்குள், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை எந்த நேரத்திலும் அணுகுண்டு பயன்படுத்தப்படலாம் என்ற செய்தி இருவருக்கும் கிடைத்தது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி அணுகுண்டை வீசலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

1945 ஜூலை 26-ஆம் நாளன்று ஜப்பானை எச்சரித்த ஹாரி ட்ரூமன், நிபந்தனையின்றி சரணடையவில்லை என்றால், கற்பனைகூட செய்ய முடியாத அழிவுக்கு ஜப்பான் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கைக்கு ஜப்பான் செவிசாய்க்கவில்லை என்பதால், அந்நாட்டின் மீது அணுகுண்டு வீச முடிவு செய்யப்பட்டது.

அணுகுண்டு வீசும் பணிக்கு 'மிஷன் எண்-13' என்று பெயரிடப்பட்டது. ஆகஸ்ட் 6ஆம் தேதி குண்டுவீச்சுக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான தலைவர் பால் டிபெட்ஸ் உடன் கலந்தாலோசித்த பிறகு, ஜெனரல் கர்டிஸ் லீமே, ஹிரோஷிமா, கோகுரா மற்றும் நாகசாகி ஆகிய மூன்று நகரங்களின் மீது குண்டு வீசலாம் என்று திட்டத்தை இறுதி செய்தார்.

அதற்கு முன்னதாக டிபெட்ஸ் குழுவினர் அணுகுண்டை வீசுவதற்கான ஒத்திகையை ஜூலை 31-ஆம் தேதி மேற்கொண்டனர்.

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

ரிச்சர்ட் ரோட்ஸ் தனது 'The Making of the Atomic Bomb' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "டினியன் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 15 பி-29 போர் விமானங்களில் மூன்று, போலி அணுகுண்டுகளுடன் புறப்பட்டன. அவை இவோ ஜிமா தீவைச் சுற்றி வந்து, போலி அணுகுண்டை கடலில் வீசிவிட்டு விமானத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதைப் பயிற்சி செய்தன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜப்பானை வலுவான புயல் தாக்காமல் இருந்திருந்தால், அன்றைய தினமே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டிருக்கும்."

ஜப்பானில் அணுகுண்டை வீசுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவின் 32 பிரதிகள் தயார் செய்யப்பட்டன.

பால் டிபெட்ஸ் பின்னொரு சமயம் 'கிளாஸ்கோ ஹெரால்டு' பத்திரிகையின் வில்லியம் லாவுடர் உடனான நேர்காணலின்போது அணுகுண்டு வீசிய அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்.

"எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் நகலை அலுவலகப் பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு, தொழில்நுட்பப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 'எனோலா கே' குண்டுவீச்சு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஜெனரல் லெமேயுடன் சென்றேன். அந்த விமானம் தார்பாலினால் மூடப்பட்டு யாரும் பார்க்க முடியாதபடி வைக்கப்பட்டிருந்தது. தளத்தில் பணியில் இருந்த ஒரு சிப்பாய், உள்ளே செல்வதற்கு முன்பு சுருட்டு மற்றும் தீப்பெட்டியை ஒப்படைக்குமாறு அந்த இடத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் லெமேயை அறிவுறுத்தியதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்."

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம் எனோலா கே

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், SIMON & SCHUSTER

படக்குறிப்பு, அணுகுண்டை வீசுவதற்கு முன்பு இறுதி விளக்கத்தை அளித்த பால் டிபெட்ஸ்

விமானப் பணிக்குழு கூட்டத்தை கூட்டிய டிபெட்ஸ்

டிபெட்ஸின் கண்ணெதிரே 'எனோலா கே' குண்டுவீச்சு விமானத்தின் வெடிகுண்டு வைக்கும் இடத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள் மிகவும் கவனமாக அணுகுண்டை வைத்தனர். அன்று மாலை, டிபெட்ஸ் அந்த பணியுடன் தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.

இந்தப் பணியுடன் தொடர்புடைய தியோடர் வான் கிர்க், பின்னொரு சமயம் நியூ ஆர்லியன்ஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு அளித்த பேட்டியில், "அது ஒரு முக்கியமான கூட்டம், அந்தக் கூட்டத்தில் யார் எந்தப் பணியில் ஈடுபடுவது, எந்த கட்டத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது போன்ற பல விஷயங்களை முடிவு செய்ய வேண்டியிருந்தது" என்று கூறினார்.

"பயன்படுத்தப் போகும் ஆயுதம் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக டிபெட்ஸ் சொன்னார். தற்போது அந்த ஆயுதத்தை எதிரிக்கு எதிராகப் பயன்படுத்துவோம் என்று சொன்ன அவர், எங்கள் அனைவரையும் சற்று நேரம் உறங்கச் சொன்னார். இரவு 10 மணிக்குப் பிறகு இறுதியான விளக்கக் கூட்டத்துக்கு அழைப்பதாக அவர் சொன்னார். ஆனால், அணுகுண்டை வீசப் போகிறவர்களால் எப்படி தூங்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தியோடர் வான் கிர்க் தெரிவித்தார்.

பால் டிபெட்ஸ் உரை

இதற்கிடையில், 'எனோலா கே' விமானத்துக்கான ரகசிய குறியீடு 'விக்டர்' என்பதற்குப் பதிலாக 'டிம்பிள்ஸ்' என்று இருக்கும் என்று டிபெட்ஸ் முடிவு செய்தார்.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் விமானத்தை ஐந்தாயிரம் அடி உயரத்தில் வைத்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், 'எனோலா கே' செல்லும் வழியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஏதேனும் காரணத்தால் அணுகுண்டை சுமந்து செல்லும் 'எனோலா கே' விமானம் கடலில் விழுந்தால், அதை உடனடியாக அங்கிருந்து மீட்பதற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

11 மணிக்கு குழு உறுப்பினர்கள் அனைவரும் இறுதி விளக்கத்துக்காக கூடியிருந்தனர். தனது 'Mission: Hiroshima' என்ற புத்தகத்தில் பால் டிபெட்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "நான் அவர்களிடம் உரையாற்றினேன், இவ்வளவு நாளாக இந்த இரவுக்காகத் தான் நாம் காத்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன்."

"கடந்த மாதங்களில் நாம் பெற்ற அனைத்து பயிற்சிகளையும் இப்போது பயன்படுத்துவோம். நமது பணியில் வெற்றி பெற்றோமா அல்லது தோல்வியடைந்தோமா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். நீங்கள் இதுவரை பார்த்த மற்றும் செய்த பணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பணியான அணுகுண்டை வீசும் பணியை மேற்கொள்கிறோம். இந்த அணுகுண்டு 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான டிஎன்டி ஆற்றல் கொண்டது."

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், BETTMANN ARCHIVE/GETTY IMAGES

எனோலா கே-வுக்கு முன்னர் அனுப்பப்பட்ட 3 விமானங்கள்

இதன் பிறகு, அனைவருக்கும் போலராய்டு லென்ஸ்கள் கொண்ட சிறப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அவை வெல்டர்கள் அணியும் கண்ணாடிகளைப் போலவே இருந்தன.

"அணுகுண்டு வீசப்பட்டதும் எழும் வெளிச்சத்தால் கண் பார்வை பறிபோகாமல் இருக்க இந்தக் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும் என்று மன்ஹாட்டன் திட்டத்தின் பேராசிரியர் ராம்சே கூறினார். கூட்டம் முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உணவகத்துக்குச் சென்ற அனைவரும் காலை உணவாக முட்டை, இறைச்சி, வெண்ணெய், ரொட்டியை உண்டனர், காபியும் பருகினார்கள். குழுவினர் அனைவரும் காலை உணவு உட்கொண்டபோது, குழுவின் தலைவர் பால் டிபெட்ஸ், யாருக்கும் தெரியாமல் தனது சட்டைப் பையில் பொட்டாசியம் சயனைடு மாத்திரைகளை பத்திரமாக வைத்தார்" என்று இயன் மெக்கிரெகர் எழுதினார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, 'Straight Flush', 'Jabbit Third', 'Full House' ஆகிய மூன்று விமானங்கள் வானிலை பற்றிய தகவல்களைச் சேகரிக்க புறப்படும் ஓசை கேட்டது.

ஜப்பான் மீது அணுகுண்டு வீசும் பணி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, முக்கிய இலக்கில் தற்போதைய வானிலை நிலைமைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக இவை இலக்கை நோக்கி பறந்தன.

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், CONSTABLE

படக்குறிப்பு, இயன் மெக்கிரேகர் எழுதிய 'The Hiroshima Men' புத்தகம்

அதிகாலை 2:45 மணிக்கு புறப்பட்ட 'எனோலா கே'

'எனோலா கே'வில் பயணித்தவர்கள், அதிகாலை 1:45 மணிக்கு காபி குடித்த பிறகு ஜீப்பில் ஏறி ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை நோக்கிச் சென்றனர். அந்த இடம் பகல் போல வெளிச்சமாக இருந்தது. விமானத்தளத்தில் இருந்த பிற பணியாளர்கள், எனோலா கே விமானத்தில் பயணிக்கும் குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மன்ஹாட்டன் திட்டத்தின் அனைத்து மூத்த உறுப்பினர்களும் அங்கு இருந்தனர்.

"விமானத்தில் சமநிலையை பராமரிக்க பின்புறத்தில் பெட்ரோல் பீப்பாய்கள் ஏற்றப்பட்டன. அதிகாலை 2:45 மணிக்கு விமானம் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் பில் லாரன்ஸ் உட்பட சுமார் 100 பேர் பார்த்துக் கொண்டிருந்த அந்த இரவு வேளையில், டிபெட்ஸ்-இன் மேற்பார்வையில் குழுவினர் விமானத்தில் ஏறினார்கள்" என்று இயன் மெக்கிரெகர் தனது 'The Hiroshima Men' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"துணை விமானி ராபர்ட் லூயிஸ் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதும், 'உன் கைகளை கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து விலக்கி வை. நான் விமானத்தை ஓட்டுகிறேன்'" என்று டிபெட்ஸ் கூறிவிட்டார்.

"தனக்கு முன்னால் இருந்த எட்டாயிரத்து ஐநூறு அடி நீள ஓடுபாதையைப் பார்த்த டிபெட்ஸ், அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்வதற்காக தனது குழுவினரிடம் பேசினார்" என்று இயன் மெக்கிரேகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்ட டிபெட்ஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு, "'டிம்பிள்ஸ் 82 டு நார்த் டினியன் டவர். புறப்படத் தயாராகிவிட்டோம்" என்றார். அதற்கு ஒரு வினாடிக்குள் பதில் வந்தது, டிம்பிள்ஸ் 82, டிம்பிள்ஸ் 82. புறப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது."

"ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசும் பணி தொடங்கிவிட்டது. எனோலா கே வானில் பறந்தபோது, கண்காணிப்பு உபகரணங்களை ஏந்திய மேலும் மூன்று B-29 விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதனைப் பின்தொடர்ந்தன. அதில் 'Necessary Evil' என்ற விமானத்தின் கேப்டன் ஜார்ஜ் மார்குவார்ட்டுக்கு அணுகுண்டு வீசுவது மற்றும் அதன் தாக்கங்களை புகைப்படம் எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது," என்று இயன் மெக்கிரேகர் 'The Hiroshima Men' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய குழுவினர்

ஜப்பான் மீது முதல் அணுகுண்டு வீச்சு

குறித்த இலக்கை அடைய ஆறு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். தாங்கள் நீண்ட நேர பயணம் செய்யவேண்டும் என்பதை 'எனோலா கே' விமானத்தில் பயணித்தவர்கள் அறிந்திருந்தனர். விமானம் இவோ ஜிமாவை அடைந்ததும், விமானத்தில் வைக்கப்பட்டிருந்த 'லிட்டில் பாய்' அணுகுண்டை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விமானத்தில் இருந்த வில்லியம் பார்சன்ஸ் மற்றும் மோரிஸ் ஜெப்சன் தெரிவித்தனர்.

பச்சை நிற பிளக்கை அகற்றி சிவப்பு வண்ண பிளக்கைப் போடுவதை அவர்கள் பலமுறை பயிற்சி செய்திருந்தாலும், அதைச் செய்ய வேண்டிய உண்மையான நேரம் வந்த போது, அவர்களுக்கு வியர்த்துப் போனது.

கன்சோலுக்கு வந்த பார்சன்ஸ், குண்டு செயல்படுத்தப்பட்டதாக டிபெட்ஸிடம் தெரிவித்தார். "இதைக் கேட்டதும், டிபெட்ஸ் 'எனோலா கே'வை 30 ஆயிரம் அடி உயரத்துக்கு எடுத்துச் சென்றார். அங்கிருந்து 100 மைல் தொலைவில் ஜப்பானின் கடற்கரையை பார்க்க முடிந்தது. ஹிரோஷிமா நகரத்தையும் 75 மைல் தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது" என்று பின்னர் ஒரு சமயம் வான் கிர்க் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார்.

"இதற்கிடையில், விமானக் குழுவினர் பேசுவதை நிறுத்திவிட்டு, அனைவரும் அமைதியாகிவிட்டனர். அங்கு நிலவிய கனத்த மௌனத்தைக் கலைத்த டிபெட்ஸ், அனைவரும் கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறினார். இதற்குப் பிறகு, விமானம் 360 டிகிரி திருப்பத்தை எடுத்தது, 6 நிமிடங்கள் 15 வினாடிகளில் விமானம் திருப்பப்பட்டது, நாங்கள் நேராக ஹிரோஷிமா நோக்கிச் சென்றோம்."

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம்

குண்டுவெடிப்பும் ரேடியோ சிக்னலும்

T-வடிவ அயோய் பாலத்தைப் பார்க்க முடிவதாக தாமஸ் ஃபேர்பி கூச்சலிட்ட போது, விமானம் இலக்கிலிருந்து 10 நிமிட தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் திபெட்ஸ் விமானத்தை இயக்கும் பொறுப்பை ஃபேர்பியிடம் ஒப்படைத்தார்.

அணுகுண்டை வீசுவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்த நிலையில், 'Necessary Evil' என்ற விமானத்தில் அமர்ந்திருந்தவர்கள், அணுகுண்டு கீழே வீசப்படுவதை எதிர்பார்த்துத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

குழு உறுப்பினர் ரஸ்ஸல் கைகன்பாக் பின்னர் அளித்த ஒரு நேர்காணலில், "நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிக்னல் கிடைத்தது. அனைத்து ரேடியோ சிக்னல்களும் செயலிழக்கும் சமயத்தில் நாங்கள் அணுகுண்டை வீசவிருந்தோம். அதுதான் எங்கள் திட்டம்" என்று ரஸ்ஸல் கேக்கன்பாக் கூறினார்.

மேலும், "ரேடியோ சிக்னல் செயலிழந்தவுடன், அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த பகுதியின் கதவு திறக்கப்பட்டது, அணுகுண்டு கீழே செல்லத் தொடங்கியது. அந்த சமயத்தில் எங்கள் விமானத்தில் இருந்த விஞ்ஞானிகள் 'ஸ்டாப் வாட்ச்' கடிகார பொத்தானை அழுத்தினார்கள். சில விநாடிகளில் எங்கள் கேமராக்கள் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கின."

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பால் டிபெட்ஸ், எனோலா கே விமானத்தின் தலைமை விமானி

தரையிலிருந்து 1890 அடி உயரத்தில் வெடித்த அணுகுண்டு

இந்த விஷயத்தை பின்னர் ஒரு நேர்காணலில் வைன் கர்க் நினைவு கூர்ந்தார், "அணுகுண்டு விழுந்தவுடன், 'எனோலா கே' விமானம் முன்னோக்கி சாய்ந்தது. உடனடியாக விமானத்தை தானியங்கி நிலைக்குக் கொண்டு சென்ற பால், வெகுதொலைவுக்கு விமானத்தை கொண்டு செல்ல விரும்பினார். எனவே, விமானத்தை 160 டிகிரி வலப் புறமாகத் திருப்பத் தொடங்கினார். 43 வினாடிகளில் குண்டு வெடித்துவிடும், அங்கிருந்து தப்பிக்க எங்களிடம் இருந்த கால அவகாசமும் அவ்வளவுதான்."

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

பிரகாசமான வெளிச்சம் மற்றும் விமானத்தில் தடுமாற்றம்

"எங்கள் விமானத்தில் இருந்த அனைவரிடமும் கடிகாரம் இல்லை. நேரத்தை கணக்கிட, நாங்கள் 1001, 1002, 1003 என எண்ணத் தொடங்கினோம். அப்போது திடீரென பிரகாசமான ஒளி தோன்றியது, சில நொடிகளில் விமானம் குலுங்குவதை அதற்குள் இருந்த நாங்கள் உணர்ந்தோம். உலோகத் தாள் ஒன்று கிழிந்து போவது போன்ற விசித்திரமான சத்தமும் கேட்டது" என அணுகுண்டு வெடித்த சந்தர்பத்தை வைன் கர்க் நினைவு கூர்ந்தார்.

"என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்வதற்காக, நாங்கள் கீழே பார்த்தோம். நான் முதலில் கவனித்தது பெரிய வெள்ளை மேகங்கள் நாங்கள் குறி வைத்திருந்த இலக்கை நோக்கி கூடின, அவை மேல்நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தன. அந்த மேகங்களின் கீழ் பகுதியில் அடர்த்தியான புகை போர்வை நகரம் முழுவதையும் சூழ்ந்திருந்தது. அதற்கு கீழே எங்களுக்கு வேறு எதுவுமே தெரியவில்லை."

"எங்கள் விமானம் நகரத்தைச் சுற்றி வரவில்லை. ஹிரோஷிமாவின் தென்கிழக்கே பறந்து, நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினோம்."

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 'லிட்டில் பாய்' அணுகுண்டு

திரும்பிய விமானம்

"82 V 670 Abil, Line, Line 2, Line 6, Line 9. Clear cut. We're heading for base" என்று முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறியீட்டு செய்தி அனுப்பப்பட்டது.

அணுகுண்டு வீசப்பட்ட பிறகு, 'எனோலா கே' விமானம் மிகவும் பலமாக குலுங்கியது, விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவே விமானத்தில் இருந்தவர்களுக்கு தோன்றியது. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்று ஜார்ஜ் கரோன் உறுதியாகக் கூறினார். ஹிரோஷிமா நகரின் மேலே பறந்த அவர்களை தாக்க எந்த ஜப்பானிய விமானமும் வரவில்லை.

"நாங்கள் நிதானமாகவே கடலை நோக்கி விமானத்தைத் திருப்பினோம். திரும்பி வரும் வழியில் ஜப்பானுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றே நாங்கள் பேசிக் கொண்டுவந்தோம். ஏனெனில், அணுகுண்டு போன்ற ஆயுதத்தை எதிர்கொள்ளும் திறன் யாரிடமும் இல்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்" என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் எழுதினார்.

அச்சம் தந்த காட்சி

ஹிரோஷிமா, முதல் அணுகுண்டு வீச்சு, எனோலா கே, அமெரிக்கா, ஜப்பான், இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட பிறகு வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

எனோலா கே விமானத்தைத் தொடர்ந்து பறந்துவந்த விமானத்தில் இருந்த ரஸ்ஸல் கேக்கன்பாக், "வழக்கமாக குண்டுகளை வீசிய பிறகு, நாங்கள் தளத்துக்குத் திரும்பும்போது, மகிழ்ச்சியாக இருப்போம், நகைச்சுவையாக பேசிக் கொண்டிருப்போம், நல்ல மனநிலையில் இருப்போம். ஆனால் அன்று, விமானம் முழுவதும் அமைதி நிலவியது. யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று அன்றைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

"அணுகுண்டை வீசிவிட்டு எனோலா கே விமானத்தை திருப்பும் போது, வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு காட்சியைக் கண்டேன்" என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

"ஊதா நிறத்தில் மாபெரும் காளான் போல் உருவாகி, அது 45,000 அடி உயரத்தை எட்டியது. அதுவொரு பயங்கரமான காட்சி. பல மைல்கள் தொலைவில் நாங்கள் இருந்தாலும், அந்த காளான் எங்களை விழுங்கிவிடும் என்றே நாங்கள் ஒரு கணம் நினைத்துவிட்டோம். அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியவில்லை, ஹிரோஷிமா மக்களும் மறக்கவில்லை."

இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய 3 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9ஆம் நாளன்று, ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது இதேபோன்ற அணுகுண்டு வீசப்பட்டது.

அங்கே சுமார் 80 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y009lnqyxo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.