Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

09 AUG, 2025 | 12:38 PM

image

மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில்  மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.  

nagamuthu.jpg

ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை  ஏற்படுத்தியிருக்கின்றது.  

இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். 

528795216_10232518407408004_892553811042

இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்தினுடைய தொடர்ச்சியாக மன்னார் தீவு காணப்படுகின்ற அதே வேளை இராமர் பாலத்தில் ஊடாக இலங்கைக்கு வந்த இராம சேனை மன்னார் தீவினூடாகவே முதன் முதலில் இலங்கைக்கு வந்தது இந்துக்களிடையே உள்ள மிகப்பெரிய நம்பிக்கையாகும். புவியியல் அடிப்படையில் மிகவும் தனித்துவமான அமைவிடத்தினை மன்னார் தீவு கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு மிக அண்மித்து இலங்கையில் உள்ள பகுதியாக மன்னார் காணப்படுகின்றது.

மன்னார் தீவு அமைந்திருக்கின்ற புவியியல் மற்றும் புவிச்சரிதவியல்  நிலைமைகள் என்பது மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்தது. மன்னார் தீவினுடைய தாய்ப்பாறை கடல் மட்டத்திலிருந்து மிக ஆழத்தில் காணப்படுகின்றது. இந்த தாய்ப்பாறை அமைந்துள்ள புவிச்சரிதவியலை காவேரி வடிநிலம் (C1) என அழைக்கப்படும். ஆனால் இதன் தடிப்பு இதனைச் சூழ உள்ள பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இது 12- 35 கி.மீ. தடிப்பிலேயே காணப்படுகின்றது. இதற்கு மேலாக மயோசின் காலச்சுண்ணக்கற் படிவகள் காணப்படுகின்றன. இதற்கு மேல் அண்மைக்கால மணற் படிவுகள் உள்ளன. இவை அலைகளால் கொண்டு வந்து படிய விடப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு வரப்பட்டு படிய விடப்பட்ட மணல் படிவுகளே  இன்று மன்னார் மாவட்டத்தின் இருப்பிற்கே சவால் விடுகின்ற அளவுக்கு மாறியுள்ளது. 

528325323_10232518407808014_838115400889

மன்னாரில் இயல்பாகவே கடலலைகளினால் கொண்டுவரப்பட்டு படிய விடப்பட்டிருக்கின்ற இல்மனைற்  மணற்படிவுகள் பற்றிய ஆய்வுகள் 2004ம்  ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கூட 2009 ஆம் ஆண்டிலிருந்து அதாவது குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதாவது 2009 இல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியிலேயே மிக ஆழமான ஆராய்ச்சிகள் ஊடாக மன்னார் மாவட்டத்தில் பொருளாதார பெறுமதி மிக்க இல்மனைற் படிவுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்த இல்மனைற் படிவுகள் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் மொத்த பார உலோகங்களின் சதவீதம் கூடிய, சுத்திகரிப்பு செலவு குறைந்த குறிப்பாக இல்மனைற் செறிவு கூடிய கனிய மணற்படிவுகள், மிகப் பெரிய அளவில் மன்னாரில் அமைவு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

தென்னாசியாவில் மிகப்பெரிய அளவிலான செறிவு மிக்க இல்மனைற் படிவுகளுடன் கூடிய மணற்படிவுகள்  மன்னரில் அமைவு பெற்றுள்ளது. பொருளாதார அடிப்படையில் மிக பெறுமதியான மணற்படிவுகள் மன்னாரில் உள்ளமை பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. ஆனால் மறு வகையில் மன்னாரின் அழிவுக்கும் அதுவே காரணமாக அமையக்கூடும் என்பது துன்பமானது. 

528802265_10232518408368028_315392947936

மன்னாரில் காணப்படும் கனிய மணலில் Ilmenite (இல்மனைற், Leucoxene: (லியூகோக்சீன்), Zirconium: (சிர்க்கோனியம்), Rutile (ரூடைல்),Titanium oxide(டைட்டானியம் ஒக்சைடு),Granite (கருங்கல்),Sillimanite (சிலிமனைட்) மற்றும் Orthoclase(ஓர்த்தோகிளாஸ்) போன்ற கனிமங்கள் உள்ளன. அதனால் தான் மன்னாரில் உள்ள கனிய மணல் பொருளாதார பெறுமதிமிக்கதாக உள்ளது. 

மன்னார் தீவு  26 கிலோ மீற்றர் நீளமும் 6 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 140 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட ஒரு தீவாகும்.  இந்த தீவினுடைய சராசரி உயரமாக 7.8 மீற்றர் காணப்படுகின்றது.  இருந்தாலும்  இந்த சராசரி உயரம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை.  சில பிரதேசங்களில் மிகக் குறைவான உயரமும் கொண்டதாக அதாவது கடல் மட்டத்தை விட உயரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.  தாழ்வுப்பாடு எழுத்தூர்,  சவுத் பார், தோட்ட வெளி, எருக்கலம்பிட்டி, கொன்னையன் குடியிருப்பு, தாராபுரம், செல்வா நகர் போன்ற பிரதேசங்களின் சராசரி உயரம் கடல் மட்டத்தை விட குறைவாக அல்லது அதற்கு அண்மித்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  அதேவேளை சில பிரதேசங்களில் கடல் மட்டத்தை விட 12 மீட்டர் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 

528050773_10232518409088046_193034873169

மிக சிறப்பான பொருளாதார பெறுமதிமிக்க இந்த இல்மனைற் மணல்  அகழ்வினை மேற்கொள்வதற்காக இலங்கையில் ஐந்து நிறுவனங்கள்( உள்ளூர் நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள்)  விண்ணப்பித்து ஐந்து நிறுவனங்களுக்குமே மன்னார் தீவின்  கனியமணல்  அகழ்வுக்கான அனுமதியினை கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில்  தேசிய கனிய வளங்கள் ஆய்வு மற்றும் மற்றும் சுரங்கமறுத்தல் பிரிவு (NGSMB) அனுமதியை வழங்கி இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அனுமதி தொடர்பாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய கனிய வளங்கள் மற்றும் சுரங்கமறுத்தல் பிராந்திய காரியலத்திலிருந்து ஒப்புக்காகவேனும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. 

527906453_10232518409648060_484444920780

இந்த அனுமதி பெற்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் கில்சித் எக்ஸ்ப்ளோரேஷன் (Kilsythe Exploration) (செப்டம்பர் 2015 இல் 1 அனுமதிப்பத்திரம்), ஹேமர்ஸ்மித் சிலோன் (Hammersmith Ceylon)(செப்டம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சுப்ரீம் சொல்யூஷன் (Supreme Solution) (நவம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சனூர் மினரல்ஸ் (Sanur Minerals) (செப்டம்பர் 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) மற்றும் ஓரியன் மினரல்ஸ் (Orion Minerals) (ஜூலை 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) ஆகியவை அடங்கும்.

அனுமதி வழங்கப்பட்ட இந்த ஐந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மணல் அகழ்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன. அவர்கள் இந்த கனிய மணலை அகழ்ந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளன. 

528584789_10232518410888091_675349576032

மன்னாரின் கனிய மணல் அகழ்விற்காக விண்ணப்பித்திருக்கின்ற அனைத்து நிறுவனங்களுமே கடல் மட்டத்திலிருந்து 12 மீற்றர் ஆழம் வரைக்கும் மணல்  அகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அகழப்பட்ட மணலில் கனிமங்கள் மட்டும் தனித்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் மிஞ்சிய மணல்கள் மீண்டும் அகழப்பட்ட  இடத்திலே கொட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

ஆனால் மன்னார் தீவினுடைய சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 7.8 மீற்றர். ஆனால் 12 மீற்றர் அகழப்பட்டால் அது அகழப்படும் இடம் முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 10 அடி ஆழத்தில் தோண்டியதற்கு சமமாகவே அமையும். அகழ்வுக்காக முன்மொழியப்பட்ட மூன்று பிரதானமான இடங்களிலும் பல சதுர கிலோமீற்றர் பரப்பிற்கு 10 அடி ஆழத்திற்கு தோண்டியதற்கு சமனாகும்.  இந்த 10 அடி ஆழத்திற்கும் கடல்நீர் உள்வந்து நிறைந்து விடும். இதனை சாதாரண மக்களும் விளங்கும் வகையில் சொல்வதானால் மணல் அகழப்படும் இடங்கள் முழுவதும் 10 அடி ஆழ கடலாக மாறிவிடும். 

பொதுவாக ஒரு இடத்தில் இயற்கையாக படிந்த மணலை அல்லது மண்ணை அகழ்ந்து அதே மண்/ மணல் முழுவதையும் மீண்டும் அதே இடத்தில் கொட்டினால் கூட அந்த பிரதேசம் ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின்னர் பள்ளமாகவே மாறிவிடும்.  ஆகவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் குறிப்பிடுவது போல அந்த பிரதேசத்தில் அகழப்பட்ட மண்ணைக் கொண்டே அந்த அகழ்வுக் குழி மூடப்படும் என்பது மக்களை ஏமாற்றும் தந்திரம். சில நாட்களில் அந்த இடம் மீண்டும் பள்ளமாகும். 

528563700_10232518436248725_196803809683

இந்த கனிய மணல் அகழ்விற்காக அனுமதி பெற்ற நிறுவனங்கள் அகழ்வுச் செயற்பாட்டுக்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. பல வழிகளிலும் முயன்று வருகின்றனர். 

இந்த நிறுவனங்களில் சில உள்ளூர் மக்களிடம் காணிகளைக் கொள்வனவும் செய்துள்ளார்கள். உள்ளூரின் சந்தைப்பெறுமதியை விட பல மடங்கு விலை கொடுத்து காணிகளை வாங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக 10000/- பெறுமதியான காணி ஒன்றை அந்த நிறுவனங்கள் 100000/- கொடுத்து வாங்குகிறார்கள் எனில் அகழ்விற்கு பின்னாலுள்ள பொருளாதாரப் பெறுமதி எத்தகையது என்பது நோக்கற்பாலது. 

மன்னார் தீவின் கனிய மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு பல மட்டங்களில், பல தரப்புக்களினாலும், பல வகைகளான  தந்திரங்களும் பாவிக்கப்படும் என அறியக் கிடைக்கின்றது. 

ஆனால் மன்னார் தீவில் கனிய மணலகழ்வு என்பது;

1. மன்னார் தீவு முழுவதும் 10 அடி பள்ளமாக மாறி கடல் நீரால் நிரப்பப்படும். 

2. அகழ்வுக்காக மன்னார் தீவிலுள்ள பனை வளங்களில் குறைந்து 10000 பனைகளாவது அழிக்கப்படும். 

3. தரைக்கீழ் நீர்வளம் முழுமையாக பாதிக்கப்படும்.

4. மன்னார் தீவின் உருவவியல் மாறிவிடும். 

எனவே என் அன்புக்குரிய மன்னார் உறவுகளே............ நீங்கள் இப்பொழுது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் மன்னார் தீவைக் காப்பற்ற முடியாது.  அகழ்வை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மன்னார் ஒரு கனிய மணல் அகழ்வு மையம். ஆனால் எங்களுக்கு மன்னார் எங்கள் தாய் நிலம். 

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே, இது மன்னார் தீவுக்கு மட்டுமேயுரித்தான பிரச்சினையல்ல. எங்கள் எல்லோருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினை.

https://www.virakesari.lk/article/222153

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.