Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் கைது, தள்ளுமுள்ளு - சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் எங்கே?

தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

14 ஆகஸ்ட் 2025, 02:31 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர்களை கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள்

கைது நடவடிக்கையின்போது இளைஞர்கள் இருவரை பேருந்துக்குள் போலீஸார் தாக்கும் வீடியோவும் வெளியானது. மேலும், பெண் ஒருவர் பேருந்துக்குள் மயங்கி விழுந்திருப்பதையும் அவருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என மற்ற தூய்மை பணியாளர்கள் போலீஸாரிடம் கோருவதையும் காண முடிந்தது. எனினும் இந்த காணொளிகளை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுரேஷ் எனும் தூய்மை பணியாளர் பிபிசியிடம் பேசுகையில், "பெண்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண்களுக்கு இதில் காயம் ஏற்பட்டது. எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதை கூட போலீஸார் கூறவில்லை. எங்களுக்கு உணவு கொடுப்பதாக கூறினர், ஆனால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்" என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

கைதாக மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி, "பலரும் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.

கைது செய்யப்படும்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர், குறிப்பாக பெண்கள் மயக்கமடைந்ததை காணொளிகள் வாயிலாக பார்க்க முடிந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் கைது நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டும் என காவல்துறை நினைத்ததாக" அவர் கூறினார்.

தூய்மைப் பணிகளை தனியார் மயத்துக்கு அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் என அவர் கூறினார்.

முன்னதாக, தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சென்னை மாநகராட்சி, லேபர் யூனியன், ராம்கி நிறுவனம் என 3 தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் வரும் 31ஆம் தேதி வரை பணியில் வந்து சேரும் தூய்மை பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது ராம்கி நிறுவனம்.

தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்?

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வந்தனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

"ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றபோது, 'ஒப்பந்த வேலையில் இருப்பதாக இருந்தால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை' என தங்களிடம் கூறப்பட்டதாக" தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.

தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இரு மண்டலங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது, தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 31(1) படி (Industrial disputes act) தண்டனைக்குரிய குற்றம் என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணிமறுப்பு, அவுட்சோர்ஸிங் (பணிகளை கையாளும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு அளிப்பது) செய்வது தண்டனைக்குரிய குற்றம்" என்றார்.

தூய்மை பணியாளர்களின் 3 கோரிக்கைகள் என்ன?

தூய்மை பணியாளர்கள் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

  • தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது.

  • கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

  • தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது.

போராட்டக்காரர்கள் குறிப்பாக, "தாங்கள் தற்போது பெறும் சம்பளத்தையே கொடுத்தாலும், தனியார் நிறுவனத்திடம் தங்கள் பணிகளை ஒப்படைக்கக் கூடாது " என்பதையே பிரதானமாக வலியுறுத்துகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx27yw684gko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இரவு முழுக்க அடித்தனர்': பெண் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக புகார் - என்ன நடந்தது?

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி.

படக்குறிப்பு, வழக்கறிஞர் ஆர்த்தி.

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"இரவு முழுக்க பெண் காவலர்கள் அடித்தனர். ஒருவர் கூட சீருடையில் இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா எனக் கேட்டு அடித்தனர்" என வீடியோ பதிவு ஒன்றில் பேசுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை ஆதரித்ததற்காக சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, வழக்கறிஞர் ஆர்த்தி மீது ஆகஸ்ட் 14 அன்று காவல்துறை தாக்குதல் நடத்தியதாக, வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பான வழக்கில், 'நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மாநகராட்சி நுழைவு வாயில் முன்பாக ஆகஸ்ட் 1 முதல் 13-ஆம் தேதி வரை இரவு பகலாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று மாலை முதலே மாநகராட்சி வளாகம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறை கூறியது. ஆனால், 'முடிவு தெரியும் வரை கலைந்து செல்ல மாட்டோம்' என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இரவு சுமார் 11.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டனர். அவர்களை சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை இரவு பகலாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீடித்தது.

படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை இரவு பகலாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீடித்தது.

இந்தநிலையில், வேளச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை காவல்துறை கைது செய்துள்ளது.

"வேளச்சேரியில் தன்னைக் காவல்துறை வளைத்துவிட்டதாக வளர்மதி கூறியுள்ளார். அதைக் கேட்டு வழக்கறிஞர் என்ற முறையில் உதவி செய்வதற்காக ஆர்த்தி சென்றுள்ளார். அவர் போராட்டத்தில் இல்லை. ஆனால், அவரையும் காவல்துறை அழைத்துச் சென்றது" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இருவரையும் இரவு 2 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு கூட்டி வந்துள்ளனர். அங்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்" என்கிறார்.

"கையை உடைத்துவிட்டனர்" - வழக்கறிஞர் ஆர்த்தி

ஆகஸ்ட் 14 அன்று காலை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் தங்களை சந்திக்க வந்த சமூக ஆர்வலர்களிடம் வழக்கறிஞர் ஆர்த்தியும் வளர்மதியும் பேசியுள்ளனர்.

அப்போது பேசிய இருவரும், "இரவு முழுக்க அடித்துக் கொண்டே இருந்தனர். ஒருவர் கூட காவல்துறை சீருடையில் இல்லை. 'தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா?' எனக் கேட்டு அடித்தனர்" என்றனர்.

"ஆய்வாளர் எங்கே, உதவி ஆணையர் எங்கே எனக் கேட்டோம். இருவரும் வந்துவிட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு 15 முதல் 20 பெண் காவலர்கள் வந்தனர். அவர்கள் சுடிதார் மற்றும் புடவை அணிந்திருந்தனர். யார் எனக் கூறாமல் தொடர்ந்து அடித்தனர்" எனவும் அவர்கள் கூறினர்.

இதில், தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாகவும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவில்லை எனவும் பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் பரவியது.

தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாக பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு, தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாக பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

"இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் கூறி காவலர்கள் அழைத்துச் சென்றனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி எனப் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால், சிச்சைக்காக உள்ளே அழைத்துச் செல்லவில்லை" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

"தாக்குதல் சம்பவத்தில் ஆர்த்தியின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

காணாமல் போன 13 பேர்?

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இவர்கள் தொடர்பான விவரம் எதுவும் வெளிவராததால், வழக்கறிஞர் ஆர்த்தி உள்பட 13 பேர் காணாமல் போய்விட்டதாகக் கூறி வழக்கறிஞர் எஸ்.விஜய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தூய்மைப் பணியாளர் போராட்டத்தை ஒருங்கிணைத்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கே.பாரதி, வழக்கறிஞர்கள் சுரேஷ், மோகன்பாபு, ராஜ்குமார், ஆர்த்தி, சட்டக்கல்லூரி மாணவி வளர்மதி உள்பட 13 பேரின் பெயர்களையும் அவர் மனுவில் பட்டியலிட்டிருந்தார்.

இவர்கள் அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களை விடுவிப்பதற்கு காவல்துறை உத்தரவிடுமாறும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு வந்தது.

"காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதைகள் குறித்து பெண் வழக்கறிஞர் ஆர்த்தி பேசிய வீடியோ பதிவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இதைப் பார்த்துவிட்டு நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர்" என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.

'அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை இருந்தாலும் பாதைகள், நடைபாதைகள் மற்றும் சாலைகளில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை இல்லை' என உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.

மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாடு அரசு சொன்னது என்ன?

13 பேர் காணாமல் போனதாக கூறப்படுவது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

" வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெரியமேடு காவல்நிலையத்திலும் அண்ணா சாலை காவல்நிலையத்திலும் பதிவாகியுள்ளன" என, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் கூறினார்.

கு.பாரதி, சுரேஷ், மோகன்பாபு மற்றும் ராஜ்குமார் ஆகிய நான்கு வழக்கறிஞர்கள் மீதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முத்துசெல்வன் மற்றும் வளர்மதி என ஆறு பேர் மீதும் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற ஏழு பேரை காவல்துறை விசாரித்துவிட்டு வெளியே செல்ல அனுமதித்ததாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்தது.

6 பேர்... 9 பிரிவுகளில் வழக்கு

கைதான ஆறு பேர் மீதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்பட ஒன்பது பிரிவுகளில் (191, 191(3), 125, 121(1), 126(2), 132, 324(4), 351(3) of Bharatiya Nyaya Sanhita (BNS), 2023 r/w Section 3(1) of The Tamil Nadu Public Property (Prevention of Damage and Loss) Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக சில வீடியோ பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கைது சம்பவத்தின்போது பெண் காவலர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர் வளர்மதி

படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் வளர்மதி

ஆகவே, நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது சட்டவிரோதமாக இருக்கலாம் எனக் கருதுவதால் அவர்களை உடனே விடுவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"இவர்கள் ஆறு பேரும் அடுத்த விசாரணை தேதி வரும் வரை ஊடக நேர்காணல்கள், அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள் என எதையும் மேற்கொள்ளக் கூடாது" எனக் கூறி ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

"சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை கைது செய்ததை அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டனர். ஆனால் ஆர்த்தி கைது செய்யப்படவில்லை எனக் கூறியது. ஆனால், அனைத்து வீடியோ பதிவுகளிலும் இருவரும் ஒரேநேரத்தில் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்" என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தாக்கப்பட்டது தொடர்பாக திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காவல்துறை கூறுவது என்ன?

சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. வாட்ஸ்ஆப் உள்பட அவரிடம் விளக்கம் பெறும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

"சீருடை அணியாத பெண் காவலர்கள் தாக்கியது உண்மையா?" எழும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சமயா சுல்தானாவிடம் பிபிசி தமிழ் பேசியது. " எனக்குத் தெரியவில்லை. நான் அப்போது வேறு ஓர் இடத்தில் பணியில் இருந்தேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgqnlq2vnnpo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.