Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு காஷ்மீரில் யாத்திரை பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு:

பட மூலாதாரம், DEEPAK SHARMA

58 நிமிடங்களுக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 38 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மா பிபிசி நிருபர் மஜித் ஜஹாங்கிரிடம் தெரிவித்தார்.

குறைந்தது 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி அந்தப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிதான் மசைல் மாதா யாத்திரை தொடங்கும் இடமாகும்.

கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மாவை மேற்கோள் காட்டும் ஏஎன்ஐ நிறுவனம், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

"ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வெற்றிபெற பிரார்த்திக்கிறேன்" என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் .

இயற்கைப் பேரழிவு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த இயற்கைப் பேரழிவு குறித்து பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் வலைதளத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

"கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்குள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்."

இந்த இயற்கைப் பேரிடரால் பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அலுவலகம், உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரிடமிருந்து அறிக்கைகள் வந்துள்ளன.

வெள்ளப்பெருக்கு, மேகவெடிப்பு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்த இயற்கைப் பேரிடர் குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ சுனில் குமார் சர்மா கூறுகையில் , "பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பான முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. யாத்திரை இன்னும் நடந்து கொண்டிருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில், கனமழை காரணமாக, மெந்தர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சாலைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கு தொடர்பான சில காணொளிகளை PTI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"இன்று காலை 11.30 மணியளவில் கிஷ்த்வாரின் சஷோதி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன" என்று ஜம்மு பிரிவு ஆணையர் ரமேஷ் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் .

"மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முழு தயார் நிலையில் பணியாற்றி வருகிறோம். உதவிக்காக ஹெல்ப்லைன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கூடுதல் மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த இடத்தை அடைவதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

"சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியாது. நான் மத்திய அரசுடன் பேசி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்து வருகிறேன்.'' என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா

'புவி வெப்பமடைதலை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்'

மலைப்பகுதிகளில் மேக வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வது சர்வசாதாரணமாகிவிட்டன என்றும், இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

மேக வெடிப்பு குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா, "புவி வெப்பமடைதல் பிரச்னையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். மலைப்பகுதிகளில் இது மிகவும் பொதுவானதாகிவிட்டது. அதைச் சமாளிக்க ஏதாவது ஒரு முறையைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த துயரமான நேரத்தில் இதற்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைப் பற்றி சிந்திக்குமாறு நான் அவரை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நமது மலைப்பகுதிகளில் மேக வெடிப்பு ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. உத்தரகண்டிலும் அங்கு ஏற்பட்ட சேதத்தையும் நாம் பார்த்தோம். கடந்த ஆண்டு இந்த சம்பவம் ராம்பனில் நடந்தது. இந்த முறை மசைல் மாதா யாத்திரை செல்லும் பாதையில் நடந்துள்ளது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்" என்று அவர் கூறினார் .

"விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து மீட்டு வருவார்கள் என்று நம்புகிறோம். கிராமங்கள் மற்றும் கோவில் பகுதிகள் சேதமடைந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்காது என்று நம்புகிறோம்."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd7yryg8n5zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

15 AUG, 2025 | 10:23 AM

image

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக தீடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம், உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் என்டிஆர்எப்-ன் இரண்டு புதிய குழுக்கள் உட்பட மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த பேரழிவு நிகழ்ந்தது. ஜூலை 25-ம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சைல் மாதா யாத்திரை செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கான 8.5 கிலோமீட்டர் பாதயாத்திரை சோசிட்டி கிராமத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த கிராமம் கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சமூக சமையலறை (லங்கர்) மேகவெடிப்பால் பெரிதும் பாதிப்படைந்தது. திடீர் வெள்ளம் காரணமாக கடைகள் மற்றும் பாதுகாப்பு புறக்காவல் நிலையம் உட்பட பல கட்டமைப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பேரிடர் ஏற்பட்ட உடன் கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மா, மூத்த காவல்துறை கண்காணிப்பாளருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இந்த மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனேஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கிஷ்த்வார் மாவட்டத்தில் தொலைதூர கிராமத்தில் பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கினார்.

https://www.virakesari.lk/article/222593

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'முழு மலையே கீழே இடிந்து வந்தது' - ஜம்மு காஷ்மீர் திடீர் வெள்ளத்தில் தப்பியவர்கள் கண்டது என்ன?

கிஷ்த்வார் மேகவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்

படக்குறிப்பு, கிஷ்த்வார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி

5 மணி நேரங்களுக்கு முன்னர்

(எச்சரிக்கை: சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் சாஷோட்டி பகுதியில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தபட்சம் 45 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) பிரதீப் சிங் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் பேசிய கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் ஷர்மாவும் 45 உயிரிழப்புகளை உறுதி செய்தார்.

மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், இருப்பினும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்பு சேவைகள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சிங் தெரிவித்தார்.

பல தன்னார்வலர்களும் மீட்புக் குழுவுக்கு உதவி செய்து வருவதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்பட்டவர்கள் தங்கள் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். திடீரென சிதிலங்கள் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றதாக அவர்கள் விவரித்தனர்.

காயமடைந்தவர்கள் சொன்னது என்ன?

கிஷ்த்வார் மேகவெடிப்பு சம்பவத்தின் நேரடி சாட்சிகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கிஷ்த்வார் திடீர் வெள்ள சம்பவத்தின் நேரடி சாட்சிகள்

பிபிசி குழு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையை அடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து விரிவாக விவரித்தனர்.

"என் மகளின் வாயில் மண் நிரம்பியிருந்தது. மூச்சுத் திணறி அவள் இறந்துவிட்டாள்," என அழுதுகொண்டே ஒரு பெண் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் கூறினார்,

"என் மகள் படித்து மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டாள். மருத்துவப் படிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். யாராவது என் மகளைத் திருப்பிக் கொடுங்கள், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்," என்று அவர் வேதனையுடன் கூறினார்.

"என்ன இருந்தாலும் சரி, எங்களை இப்போது வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். எட்டு மணி நேரத்துக்கு பிறகு அவளை இடிபாடுகளில் இருந்து மீட்டோம். எங்கள் மகளை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்," என அந்த சிறுமியின் தந்தை சொல்கிறார்.

மேகவெடிப்பில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம்

படக்குறிப்பு, கிஷ்த்வாரின் சாஷோட்டி பகுதியில் வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

ஒரு நபர், தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்தார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும், பலர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

"நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்கள் 'ஓடுங்கள், ஓடுங்கள்' என்று கத்தினர். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. எழுந்தவுடன் எல்லாம் தகர்ந்து போனது," என்று அவர் கூறினார்.

"பாலத்தைக் கடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர்," என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் அவரது சகோதரியும் உயிரிழந்தார்.

"நான் வீட்டுக்குச் சென்று என்ன சொல்வேன்? இது அவள் எனக்கு கட்டிய கடைசி ராக்கி. எனக்கு ஒரே ஒரு சகோதரி இருந்தாள், இப்போது நான் தனியாக இருக்கிறேன்." என பிபிசி-யிடம் தனது ராக்கியைக் காண்பித்தவாறு அவர் கூறினார்

அங்கு இலவச உணவு வழங்கப்பட்ட கூடாரத்தின் கீழ் பலர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அவர்களை மீட்பது கடினமாக இருந்ததாகவும் ஒரு பெண் தெரிவித்தார்.

' வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம்கேட்டது, எல்லோரும் 'ஓடு' என கத்தினர் '

கிஷ்த்வார் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட போத்ராஜ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கிஷ்த்வார் சம்பவத்தின் நேரடி சாட்சியான போத்ராஜ், தனது குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக கூறினார்

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தங்களது கஷ்டத்தை பகிர்ந்துள்ளனர்.

ஷாலு மெஹ்ரா மீட்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "எங்களுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது, எல்லாம் புகைமூட்டமாக மாறியது. எல்லோரும் 'ஓடு, ஓடு, ஓடு' என்று கத்தினர்," என அந்த சம்பவம் குறித்து சொல்கிறார்.

"நான் ஓட முயன்றபோது, ஒரு பெண் என் மீது விழுந்தார். ஒரு மின்கம்பம் என் தலையில் விழுந்து மின்சாரம் தாக்கியது," என்று அவர் கூறினார்.

போத்ராஜ் தனது குடும்பத்தின் மற்ற 10 உறுப்பினர்களுடன் கிஷ்த்வாருக்கு வந்திருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் உட்பட மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கியதாக அவர் கூறினார்.

"திடீரென வெடிப்பு போன்ற ஏதோ ஒன்று நடந்து எல்லாம் பனிமூட்டமாக மாறியது. ஆனால் இரண்டு நிமிடங்களுக்குள் நான்கு அடி உயரத்தில் இடிபாடுகள் பரவிவிட்டன," என்று அந்த சம்பவம் குறித்து போத்ராஜ் தெரிவித்தார்.

"நிகழ்விடத்தில் உடல்கள் கிடந்தன. புதிய பாலம் கட்டப்படும் இடத்தில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மேலே இருந்த எஞ்சிய 100 முதல் 150 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்," என சாஷோட்டியின் நிலைமை குறித்து அவர் விவரித்தார்.

"சில விநாடிகளில் சிதிலங்கள் வந்தன. அவற்றில் பெரிய மரங்களும் கற்களும் அடங்கும்," என அவர் தெரிவித்தார்.

"மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர்"

தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்த ஒரு பெண், இந்தப் பேரழிவின் வேதனையான காட்சியை விவரித்தார்.

"நான் ஒரு வாகனத்தின் கீழ் சிக்கிக் கொண்டேன். உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். பின்னர் என் தந்தையைப் பார்த்து, தைரியத்துடன் வெளியேறினேன்," என்று அவர் தெரிவித்தார்.

"என் தாயார் ஒரு மின்கம்பத்தின் கீழ் சிக்கியிருந்தார், அவர்கள் மீது பலர் இருந்தனர். நான் எப்படியோ வெளியேறினேன், ஆனால் என் தாயார் மிகவும் காயமடைந்துள்ளார்," என்று அந்தப் பெண் மேலும் கூறினார்.

சாஷோட்டியில் ஏற்பட்ட அழிவு குறித்து அவர் கூறுகையில்: "அங்கு ஏராளமான மக்கள் இருந்தனர். எங்கள் கண்முன் மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர். நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை ."

"மண், கற்கள், மரங்கள் உட்பட முழு மலையே கீழே இடிந்து வந்தது. எங்கும் சேறும் சகதியும் பரவியது," என இடிபாடுகளைப் பற்றி அவர் விவரித்தார்.

"குழந்தைகள் பலர் இருந்தனர். அவர்கள் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. என் தந்தை சிலரை மீட்டார், ஆனால் பலர் அங்கேயே உயிரிழந்தனர். சுற்றிலும் உடல்கள் கிடந்தன. நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை," என்று அவர் கூறினார்.

நிர்வாகம் விரைவாக அனைவருக்கும் உதவியதாகவும், ராணுவம், சிஆர்பிஎஃப், காவல்துறை ஆகியவை ஒன்றிணைந்து மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கையின்போது ஒரு சிறுமி மீட்கப்பட்டார்.

"மேலிருந்து வெள்ளம் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றது. அங்கு பலர் உயிரிழந்தனர், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

"நானும் நடுவில் சிக்கியிருந்தேன். ஒரு காவலர் எனக்கு உதவினார். அவர் என்னை மீட்டார். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள், ஆனால் என்னால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5e1dddwv3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.