Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்லீரல் முறைகேடு

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 5 பேரிடம் முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டதாக சமீபத்தில் எழுந்த புகாரின்பேரில், அரசு சார்பில் சிறப்புக்குழு ஆய்வு செய்து, திருச்சி மற்றும் பெரம்பலுார் நகரங்களில் உள்ள 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சில பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது இதே பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னிடம் விலை பேசி கல்லீரல் தானத்திற்காக கல்லீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தரப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கல்லீரல் முறைகேடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சிறுநீரகம் 8 லட்ச ரூபாய்; கல்லீரலுக்கு நாலரை லட்ச ரூபாய்!

இதில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பிபிசி தமிழ் பேசியது. அந்த பெண்ணின் தனியுரிமை கருதி அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிபாளையம் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

தனது கணவர் தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணை மணந்து விட்ட காரணத்தால் தன் மகன் மற்றும் மகளுடன் அவர் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் ஏற்பட்ட கடன் பிரச்னையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் வேறு வழியின்றி ஒரு பெண் முகவரிடம் சிக்கி கல்லீரலைக் கொடுத்ததாகவும் அவர் விளக்கினார்.

''வீட்டு வாடகை, பிள்ளைகளை வளர்ப்பதற்கு வெவ்வேறு இடங்களில் கடன் வாங்கினேன். வட்டி அதிகமாகி மூன்றரை லட்சம் கடனாகிவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் எனக்குக் கடன் கொடுத்த ஒருவர் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து என்னை கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கலா என்ற ஒரு பெண் என்னிடம் அறிமுகமானார். உன் கடனைத் தீர்க்க ஒரு ோசனை யோசனை தருகிறேன் என்று அவர்தான் சிறுநீரகத்தைக் கொடுத்தால் 8 லட்ச ரூபாய் வாங்கித்தருவதாகக் கூறினார்.'' என்றார் அப்பெண்.

அதைப்பற்றி மேலும் விளக்கிய அவர், ''ஈரோடு, சேலம் என சில இடங்களில் எனக்கு மருத்துவப்பரிசோதனை செய்தார்கள். அதன்பின் சென்னைக்கு என்னை அந்தப் பெண் அழைத்துச் சென்றார். அங்கே எனது சிறுநீரகத்தை எடுப்பதாகத்தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறியவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதனால் சிறுநீரகத்தை எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். அதனால் நான் நிம்மதியடைந்தேன்.'' என்றார்.

அதன்பின்பு, வீட்டிற்குச் செல்லலாம் என்று இவர் புறப்பட நினைத்துள்ளார். அப்போது இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு செலவிட்ட 50 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுப் போகச்சொன்னதாக தன்னை அங்கிருந்தவர்கள் மிரட்டியதாகக் கூறும் அந்த பெண், அதனால் சிறுநீரகத்துக்குப் பதிலாக கல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் எடுப்பதாகவும் அது மீண்டும் வளர்ந்து விடும் என்றும் கூறினர் என்கிறார்.

''அங்கே என் பெயரை மாற்றி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள். அந்த மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்தேன். நான்காம் நாள் எனக்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் அப்போதே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்க்கவே இல்லை. போனிலும் பேசமுடியவில்லை. அங்கே என்னிடம் எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. எனக்குப் பேசியதைப் போல 8 லட்ச ரூபாய் கொடுக்காமல் நாலரை லட்சம்தான் கொடுத்தார்கள்.'' என்று மேலும் விளக்கினார் அந்தப் பெண்.

கல்லீரல் முறைகேடு

பட மூலாதாரம், GETTY IMAGES

நாமக்கல்லில் லட்சங்களில் விற்கப்படும் சிறுநீரகம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏழை மக்களின் வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவர்கள் சிறுநீரகத்தை முறைகேடாக எடுப்பதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன.

சமீபத்தில் இப்பகுதியில் சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோ வெளியானது.

அதைத்தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் பலரிடம் சிறுநீரகம் முறைகேடாக எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதால், அதுபற்றி விசாரிப்பதற்காக தமிழக அரசால் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டது.

இரண்டு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு கள விசாரணை நடத்தி, இரண்டு கட்டமாக அறிக்கை அளித்தது. அப்பகுதியில் 5 பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அவர்கள் ஒப்புதலின்பேரில் தரப்பட்டதால் இது சிறுநீரக திருட்டு அல்ல, சிறுநீரக முறைகேடு என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குழுவின் இறுதி அறிக்கையின்படி, திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர் இருவர் மீது போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி, அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதாக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் ''மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994ன் படி. உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக்குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும் ஆணை வெளியிடப்படும்.'' என்றும் கூறப்பட்டிருந்தது.

கல்லீரல் முறைகேடு

படக்குறிப்பு, கல்லீரல் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கருமுட்டையும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு

இந்த பகுதிகளில் சிறுநீரக விற்பனை முறைகேடு மட்டுமின்றி, கல்லீரல், கருமுட்டை போன்றவையும் முறைகேடாக எடுக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கட்சியின் சார்பில் பள்ளிபாளையத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு மாவட்டச்செயலாளர் அசோகன், ''நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட காலமாக சிறுநீரக விற்பனை முறைகேடு நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கல்லீரல், கருமுட்டை விற்பனையும் அதிகளவில் நடக்கிறது. இதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்று வலியுறுத்தினார்.

கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆனது?

கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு கல்லீரல் தானம் வழங்கப்பட்ட ஒரு வாரத்தில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2022 நவம்பர் 16 ஆம் தேதியன்று சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருடைய கல்லீரல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான மருத்துவக் குறிப்பையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

ஆனால், கல்லீரல் கொடுத்த மருத்துவமனையின் ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார். அந்த ஒரே ஒரு முறை மட்டுமே சென்னை சென்றிருப்பதாலும், ஆட்டோவில் தன்னை பல குறுகலான வீதிகள் வழியாக அழைத்துச் சென்றதாலும் அந்த மருத்துவமனை எங்கு இருந்தது என்பதும் நினைவில் இல்லை என்றும் கூறிய அவர், அந்த மருத்துவமனையின் பெயர் 3 ஆங்கில எழுத்துகளில் இருந்தது என்கிறார்.

''அந்தத் தொகையை வாங்கிக் கடனைக் கட்டிவிட்டேன். ஆனால் இப்போது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சாப்பிடவே முடியவில்லை. சாப்பிட்டாலும் ஜீரணம் ஆவதேயில்லை. கடுமையான வேதனையை அனுபவிக்கிறேன். அதனால் என் மகன் ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறான். என் மகள் எட்டாம் வகுப்புப் படித்து விட்டு, என்னைப் பார்த்துக் கொள்வதற்காக என்னுடன் வீட்டில் இருக்கிறாள்.'' என்று அந்தப்பெண் கண்ணீருடன் வேதனையைப் பகிர்ந்தார்.

சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணைக் குழு

இந்த பெண் தெரிவித்த தகவல், ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ''எங்களுக்கு இதுபற்றி எந்தப் புகாரும் வரவில்லை. ஊடகத்தில் பார்த்து விஷயம் தெரிந்ததும், துறை இயக்குநருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து விட்டோம்.'' என்றார்.

சம்பந்தப்பட்ட பெண் பிபிசி தமிழிடம், ''செல்போனில் சிலர் என்னை தொடர்பு கொண்டு அதிகாரிகள் என்று கூறி சிலர் பேசினர். சில விபரங்களை என்னிடம் கேட்டனர். நான் இப்போது படுகின்ற வேதனையை வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் இப்போது இதை வெளிப்படையாகக் கூறுகிறேன். அரசு எடுக்கும் நடவடிக்கை எனக்கு ஏதாவது ஒரு நிவாரணத்தையும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வையும் ஏற்படுத்தினால் நல்லது.'' என்றார்.

அந்தப் பெண் கூறியுள்ள தகவல் பற்றியும், அமைச்சர் கூறியுள்ள விசாரணை பற்றியும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இந்த கல்லீரல் முறைகேடு புகார் பற்றி சார்பு ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்து விசாரணை நடத்துகிறோம். விசாரணையின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78zxq2deneo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களே அதிகம்: நாமக்கல்லில் சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு

நாமக்கல், சிறுநீரக விற்பனை, வறுமை, குற்றம், வாழ்க்கை, சிறுநீரகத் திருட்டு

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

''எனக்கு 19 வயதாக இருந்த போதே என் கணவரின் கடனுக்காக, நான் கிட்னியை (சிறுநீரகம்) விற்றுவிட்டேன். அவர் குடித்தே இறந்து விட்டார். ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்துவிட்டதால் எனது உடலில் சக்தியே இல்லை. வேலைக்கும் போக முடியவில்லை. சத்தான உணவை சாப்பிடச் சொல்கிறார்கள். அதற்கு வசதியும் இல்லை. இந்த வேதனைக்கு இறந்துவிடலாம் என்று தோன்றி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கிறேன்!''

வார்த்தைகளை முடிக்க முடியாமல் குமுறி அழுதார் 45 வயது பெண், குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.60 ஆயிரத்துக்கு விற்றதாகக் கூறுகிறார்.

''எனக்கு 17 வயதில் திருமணமானது. ஓராண்டில் எனது மகன் பிறந்தான். அடுத்த வருஷமே நான் என் கிட்னியைக் கொடுத்துவிட்டேன். அப்போது எனக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதை வாங்கி கடனை அடைத்தோம். ஒரு ரூபாய் கூட மிஞ்சவில்லை. அடுத்த ஒரு வருடத்திலேயே எனது கணவரும் கிட்னி கொடுத்தார். அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இப்போதும் நாங்கள் கடனில்தான் இருக்கிறோம். உடல் வலி தாங்காமல் உயிரைவிட முயன்றேன். எனது பேரன்தான் காப்பாற்றினான்.''

பேசப்பேச கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார் 55 வயது பட்டம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இந்த இருவர் மட்டுமல்ல; நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் தாங்கள் வாங்கிய கடனுக்காக பலரும் சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளனர் என்பதும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து நடந்திருப்பதும் பிபிசி தமிழ் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நடந்த சிறுநீரக விற்பனை தொடர்பாக, தமிழக அரசின் சிறப்புக்குழு ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், நமது களஆய்வில் தெரியவந்த உண்மைகளை கேட்டறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இதற்குத் தீர்வு காண குழுக்கள் அமைப்பது, விழிப்புணர்வு மேற்கொள்வது ஆகியவற்றுடன் குறிப்பிட்ட பகுதியிலிருந்து அடிக்கடி சிறுநீரக கொடையாளர் விண்ணப்பங்கள் வந்தால் அதைத் தீவிரமாகப் பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போலி ஆவணங்களைக் கொண்டு முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டது தொடர்பாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதன்பேரில், தமிழக அரசின் சுகாதாரத்திட்ட இயக்குநர் வினித் தலைமையில் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

குழு அளித்த அறிக்கையின் பேரில் திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இவை தவிர, வேறு சில நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அந்த குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழ்நாடு மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை பரிந்துரைத்ததை எதிர்த்து தனலட்சுமி மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'கடனுக்காக சிறுநீரக விற்பனை'

நாமக்கல், சிறுநீரக விற்பனை, வறுமை, குற்றம், வாழ்க்கை, சிறுநீரகத் திருட்டு

படக்குறிப்பு, சிறுநீரகத்தை விற்க, இவர்களுக்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் இந்த சிறுநீரகத் திருட்டு விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்துள்ளது. இக்கட்சியின் சார்பில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி பள்ளிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சிஐடியூ தொழிற்சங்கம், சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் நகராட்சிகள், ஆலாம்பாளையம் பேரூராட்சி, வெப்படை, தேவனாங்குறிச்சி கிராமப்பகுதிகளில் தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.

அதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சிஐடியூ நாமக்கல் மாவட்டச்செயலாளர் அசோகன், ''இந்த பகுதிகளில் சிறுநீரகம் கொடுத்த 90 பேரை நாங்கள் அடையாளம் கண்டறிந்தோம். சிறுநீரகம் கொடுத்தவர்கள் பட்டியலில் விசைத்தறித் தொழிலாளர்கள், குடும்பத் தலைவிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், விவசாயக்கூலிகள், பஞ்சாலைத் தொழிலாளர்கள், பாரம் துாக்குபவர், காகிதம், சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் இருந்தனர்.'' என்றார்.

இவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் திரட்டும் முயற்சியாக, கடந்த ஜூலை 31 அன்று, காவிரி ரயில் நிலைய பகுதியிலிருக்கும் சிஐடியூ அலுவலகத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுநீரகம் கொடுத்து பாதிக்கப்பட்ட 54 பேர் அதில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தாங்கள் எதற்காக, எப்போது, எங்கே, எவ்வளவு தொகைக்கு சிறுநீரகத்தை விற்றனர் என்பதை வெளிப்படையாகக் கூறினர். தங்கள் குடும்பங்களில் மற்றவர்கள் சிறுநீரகம் கொடுத்த தகவலையும் பலர் அங்கு பதிவு செய்தனர்.

அவர்களில் பலரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. நேரில் சந்திக்க தயங்கிய அல்லது சந்திக்க இயலாத 50க்கும் மேற்பட்டோரிடம் அலைபேசியில் கலந்துரையாடியது. அவர்கள் அனைவருமே தாங்கள் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்ததாக கூறினர். சிறுநீரகத்தை விற்க, இவர்களுக்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

"சிறுநீரக மோசடியில் சிக்கியவர்களில் பெண்களே அதிகம்"

நாமக்கல், சிறுநீரக விற்பனை, வறுமை, குற்றம், வாழ்க்கை, சிறுநீரகத் திருட்டு

படக்குறிப்பு, ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரகங்களை விற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டில், தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்துதலுக்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய மனித உறுப்பு மாற்று சட்டம் கடந்த 1994 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டங்களின் அடிப்படையில், வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரக திருட்டு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த 2015- ஆம் ஆண்டுக்குப் பின், கடுமையான விதிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை கொண்டு வந்துள்ளது.

இதன்படி, ரத்த உறவு உள்ளவர்கள் மட்டுமே சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய முடியும்; அதுவும் அதற்கென உரிமம் பெற்ற மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாநில அளவில் உள்ள குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவத்துறை, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் கொண்ட குழுவுக்கு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பும், வந்த பின்பும் பெரும்பாலும் போலி ஆவணங்களைக் கொண்டே, இவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழைத்தொழிலாளர்களை குறிப்பாக விசைத்தறித் தொழிலாளர்களை குறிவைத்து இந்த சிறுநீரக முறைகேடு அதிகளவில் நடந்திருப்பது பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரகங்களை விற்றுள்ளனர்.

ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த பட்டம்மாள் (வயது 55), விசைத்தறித் தொழிலாளி. அவருக்கு 17 வயதில் திருமணம் நடந்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு அடுத்த வருடமே, கணவரின் கடனை அடைப்பதற்காக அவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாகத் தெரிவித்தார். பெங்களூரு சென்று சிறுநீரகம் கொடுத்த அவருக்கு அப்போது கிடைத்த தொகை ரூ.30 ஆயிரம் எனத் தெரிவித்தார்.

காவிரி ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த குமாரி (வயது 45), தனது 18 வயதிலேயே சிறுநீரகத்தைக் கொடுத்துள்ளார்.

கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதைக் கொடுத்ததற்கு அவருக்குக் கிடைத்த தொகை ரூ.60 ஆயிரம் என்று தெரிவித்தார்.

பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் 35 ஆயிரம் ரூபாய்க்கு தன்னுடைய சிறுநீரகத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய செல்வி, ''கடனை அடைக்க பெண்கள் சிறுநீரகத்தைக் கொடுத்துவிட்டால், ஆண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் கொடுக்கிறோம். ஆனால் அந்த ஆண்கள் வேலைக்குச் செல்வதில் பாதிக்கும் மேல் குடித்துவிட்டு, மீதியைத்தான் வீட்டுக்குக் கொடுக்கின்றனர். அதனால் மீண்டும் கடன் அதிகமாகிறது.'' என்றார்.

இந்த தகவலை உறுதிப்படுத்திய சிஐடியூ மாவட்டச் செயலாளர் அசோகன், சிறுநீரகம் விற்றவர்கள் என தாங்கள் அடையாளம் கண்ட 90 பேர்களில் 65 பேர் பெண்கள் என்பதைப் பட்டியலுடன் தெரிவித்தார். சிறுநீரகம் விற்ற ஆண்களில் பலரும் வலி தாங்காமலும், கடனை அடைக்க முடியாமலும் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பலரும் தகவல்களைப் பகிர்ந்தனர்.

ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த முனியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ''கடனை அடைக்க வழியின்றி, எனது மகன் சிறுநீரகம் கொடுத்தான். கொடுத்ததிலிருந்தே அவனுக்கு உடலுக்கு முடியவில்லை. வலி காரணமாக வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப்போகாததால் மீண்டும் கடன் அதிகமானது. கடைசியில் விரக்தியடைந்து 37 வயதில் உயிரை விட்டுவிட்டான்!'' என்றார்.

''எனது மகன் பெங்களூருக்குப் போய் தன்னுடைய கிட்னியை விற்று வந்தான். சிறுநீரகம் கொடுத்த இரண்டே ஆண்டுகளில் அவன் உயிரை மாய்த்துக் கொண்டான். எனது மகன், மகள் இருவருமே இறந்து விட்டனர். அவர்களின் குழந்தைகளை வயதான காலத்தில் நான்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.'' என்று கூறி கண்ணீர் விட்டார் 70 வயதான மற்றொரு பெண்

தனது கணவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்று ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தை விற்றதாக வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இவர்களைத் தவிர, பெயர் கூற விரும்பாத பலரும் சிறுநீரகத்தை விற்றதாக பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர்.

கடனை தீர்க்க தானே முகவரை அணுகி, சிறுநீரகத்தை விற்றதை பிபிசி தமிழிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் 55 வயதான பெயிண்டர் ஒருவர்.

''நான் சிறுநீரகத்தை விற்று 25 ஆண்டுகளிருக்கும். எனக்கு கடன் நிறைய இருந்ததால், அப்போதிருந்த ஒரு புரோக்கரிடம் சென்று கேட்டு, எனது சிறுநீரகத்தை விற்றேன். கோவையிலுள்ள ஒரு தனியார் சிறுநீரக மையத்தில்தான் எனக்கு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. எனக்கு படிப்பறிவு கிடையாது. எது எதிலோ கையெழுத்து வாங்கினார்கள். அந்த புரோக்கர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது.'' என்றார் அவர்.

தனியார் மருத்துவமனைகள் கூறுவது என்ன?

நாமக்கல், சிறுநீரக விற்பனை, வறுமை, குற்றம், வாழ்க்கை, சிறுநீரகத் திருட்டு

படக்குறிப்பு, நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை விற்ற சிலர், கோவையிலுள்ள மருத்துவமனைகளில்தான் தங்களுக்கு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில முகவர்கள், சிறுநீரகம் விற்பவர்களைக் கண்டறிந்து, கோவை, சென்னை, மதுரை, திருச்சி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இவர்களை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பல மாதங்கள் இவர்களை தங்க வைத்து, பலகட்ட பரிசோதனைகளுக்குப் பின் சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரகம் பெறுபவரின் உறவினர்கள் பெயர்களில் உள்ள ஆவணங்களில், இவர்களின் புகைப்படங்கள் மட்டும் மாற்றப்படுவதாகவும், அங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு உறவுமுறை சொல்லி பதில் கூற வைத்ததையும் பலர் தெரிவித்தனர். சில ஆதாரங்களையும் இவர்களில் சிலர் வைத்துள்ளனர். தங்களுக்கு சிறுநீரகம் எடுப்பதற்கு முன் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில், அதே காரணத்துக்காக பல பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சிறுநீரகம் கொடுத்த பெண் ஒருவர் தெரிவித்தார். ஆனால் இவர்கள் பகிரும் பல விஷயங்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

இவர்களில் சிலர் மட்டுமே, தங்களுக்கு சிறுநீரகம் எடுக்கப்பட்ட மருத்துவமனை பெயர்களைத் தெரிவித்தனர். சிலர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் சிறுநீரகம் கொடுத்த தகவலைத் தெரிவித்த பலருக்கும், அந்த மருத்துவமனைகளின் பெயர்கள் கூட தெரியவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை விற்ற சிலர், கோவையிலுள்ள மருத்துவமனைகளில்தான் தங்களுக்கு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவர்கள் பெயர் தெரிவித்த 3 மருத்துவமனை நிர்வாகங்களிடம் பிபிசி தமிழ் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

ஒரு மருத்துவமனையில் 'அதற்கு வாய்ப்பேயில்லை' என்று மறுத்தனர். மற்றொரு மருத்துவமனையில், கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தை எடுக்கும் முன், மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் அடங்கிய குழுவாலும், வெளியில் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவாலும் பல விஷயங்கள் பரிசீலிக்கப்படுவதால் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

சிறுநீரகக் கொடையாளர், அதைப் பெறுபவரின் உண்மையான உறவினர்தான் என்பதை மருத்துவமனை நிர்வாகங்களால் உறுதி செய்ய இயலாது என்று மற்றொரு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த ஆவணங்களைப் பரிசீலித்து, கொடையாளர் பெயரில் தரப்பட்ட ஆவணங்கள் அவரைச் சார்ந்தவைதான் என்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு என்று அவர்கள் கூறினர்.

சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்?

நாமக்கல், சிறுநீரக விற்பனை, வறுமை, குற்றம், வாழ்க்கை, சிறுநீரகத் திருட்டு

படக்குறிப்பு, சிறுநீரகம் கொடுத்த ஆண்களில் பலரும், வலி தாங்காமல் குடிக்கு அடிமையாகி விட்டதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலரும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

சிறுநீரகத்தை விற்பவர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்த சிறுநீரக விற்பனை முறைகேட்டுக்கு உதவும் தரகர்களை சந்திப்பதற்காக பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் சிறுநீரகம் கொடுத்த யாருமே, யார் மூலமாகச் சென்று சிறுநீரகத்தை விற்றோம் என்ற தகவலைச் சொல்ல மறுத்துவிட்டனர். சிலர் தனக்கு உதவிய முகவர் இறந்து விட்டார், இப்போது எங்கேயிருக்கிறார் என்பதே தெரியவில்லை என்று பல காரணங்கள் கூறினர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஆயிரம், 40 ஆயிரம் என்று துவங்கிய சிறுநீரக விலை, தற்போது ரூ.5 லட்சம் வரை சென்றிருப்பதாகவும் பலரும் தகவல் தெரிவித்தனர். பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், 7 மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம் கொடுத்துள்ளார். அவருடைய தந்தை, 25 ஆண்டுகளுக்கு முன்பு, கடனுக்காக ரூ.40 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தை விற்றுள்ளார். தந்தை இப்போதும் நன்றாக இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த இளைஞர் தற்போதுள்ள கடனுக்காக ரூ.5 லட்சத்துக்கு தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார்.

புரோக்கர் கமிஷன் ரூ.50 ஆயிரம் போக, நாலரை லட்ச ரூபாய் இவருக்குத் தரப்பட்டுள்ளது. அதில் 4 லட்ச ரூபாயை கடனை அடைத்து விட்டு, தனது குழந்தை பெயரில் 50 ஆயிரம் ரூபாயை டெபாஸிட் செய்திருக்கிறார்.

சிறுநீரகம் கொடுத்த ஆண்களில் சிலர், வலி தாங்காமல் குடிக்கு அடிமையாகி விட்டதாக இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய பட்டம்மாள், ''விசைத்தறி வேலையில் எனக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய்தான் சம்பளம். எனது கணவருக்கு ஒரு நாளுக்கு 600 ரூபாய் கிடைக்கும். அவர் குடித்து விட்டு, 200–250 ரூபாய்தான் கொடுப்பார். எனது மருமகனும் குடித்துவிட்டு என் மகளை துன்புறுத்தினார். அதனால் என் மகள் உயிரை மாய்த்துக் கொண்டாள். அவளின் மகனையும் நான்தான் வளர்க்கிறேன். '' என்றார்.

சிறுநீரகத்தை விற்ற சிலருடைய வீடுகளுக்குச் சென்றபோது, அந்த குடும்பங்களின் வறுமையை அறியமுடிந்ததுடன் அவர்களின் குடும்பங்களில் ஏராளமான இளவயது மரணங்கள் நிகழ்ந்து இருப்பதும் தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகின்றன. ஜவுளித்தொழில் முழுவீச்சில் நடந்தாலும், இவர்களுக்கு வாரம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை, கிடைக்கும் கூலியும் குறைவு என்கின்றனர்.

பல மாதங்களில் வேலை நிறுத்தத்தால் அந்த வேலையுமின்றி கடன் அதிகரிப்பதாகச் சொல்கின்றனர். இப்பகுதியில் நிலவும் அதீத கந்துவட்டிக் கொடுமையும் இவர்களை கடனில் மூழ்கடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லோக் ஜனசக்தி நிர்வாகிகள் பலரும் பிபிசி தமிழிடம் விளக்கினர்.

நாமக்கல், சிறுநீரக விற்பனை, வறுமை, குற்றம், வாழ்க்கை, சிறுநீரகத் திருட்டு

படக்குறிப்பு, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், 7 மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம் கொடுத்துள்ளார்.

தமிழக அரசின் விளக்கம் என்ன?

''நாங்கள் கடன் வாங்கியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். விசைத்தறியில் 3 அல்லது 4 நாட்கள்தான் வேலை கிடைக்கும். அதில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து வாரந்தோறும் வட்டியையும், கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்குள் வேறு ஒரு தேவை வந்து மீண்டும் கடன் வாங்கவேண்டியிருக்கும்.'' என்கிறார் வித்யா.

''சிறுநீரகம் கொடுத்த அனைவருமே உடல், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்பில் உள்ளனர். சிறுநீரகம் கொடுத்தவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத அளவுக்கு உடல் வேதனையை அனுபவிக்கின்றனர். இந்த சிறுநீரக விற்பனை முறைகேட்டுக்கு அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதுடன் சிறுநீரகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாகக் கருதி, மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு முன்வரவேண்டும்.'' என்றார் சிஐடியூ மாவட்டச் செயலாளர் அசோகன்.

களஆய்வில் கண்டறிந்தது பற்றியும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக விற்பனை முறைகேடு நடப்பது பற்றியும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

''சமீபத்தில் நடந்த சிறுநீரக முறைகேடு குறித்து ஆய்வு செய்த குழு அளித்த அறிக்கையின்படி, 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர்கள் இருவர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதுபற்றி செய்திக்குறிப்பில் விளக்கியதாக அவர் கூறினார். அந்த செய்திக்குறிப்பில், மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994-இன் படி உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக் குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படுமென்றும், மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்க ஆணை வெளியிடப்படுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், சிறுநீரக விற்பனை, வறுமை, குற்றம், வாழ்க்கை, சிறுநீரகத் திருட்டு

படக்குறிப்பு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்.

நாமக்கல் மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் சிறுநீரக விற்பனை குறித்து அமைச்சர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''அதற்காகவே அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து சிறுநீரகக் கொடைக்கு அடிக்கடி விண்ணப்பம் வந்தால் அதை அங்கீகரிக்கும் குழு, தனிக்கவனம் செலுத்தி, அவற்றை தீவிரமாகப் பரிசீலிக்கச் சொல்லியிருக்கிறோம். நாமக்கல் மாவட்டத்தில் இதுபற்றி விசாரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.'' என்றார்.

இதற்கிடையே, சிறுநீரக விற்பனை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

"இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ejxn52qzvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி முறைகேட்டின் அதிர்ச்சி பின்னணி; BBC Ground Report-ல் தெரிய வந்த தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் போலி ஆவணம் மூலம் சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

Reporter : Xavier Selvakumar

Shoot & Edit: Vignesh

சிறுநீரகம் கொடுத்தவர்கள் கூறுவது என்ன?

Producer: Xavier Selvakumar

Shoot & Edit: Vignesh

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.