Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ? - நிலாந்தன்

539394761_826681347184919_27494863222342

ரணில் வெளியில் வந்துவிட்டார். வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் போது கையில் அவர் வைத்திருந்த புத்தகம் தற்செயலானதா? அல்லது அவருடைய வழமையான பாணியா? அது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜெல்சின் எழுதிய Unleashed-கட்டவிழ்த்து விடுதல் என்ற புத்தகம். அதன் மூலம் ரணில் அரசாங்கத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறாரா? அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்தார். பாலசிங்கம் சொன்ன பல விடயங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ரணிலைப்பற்றி அவர் சொன்னதை  மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

ரணிலைக் கைது செய்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியானது பின்வாங்க முடியாத ஒரு இடத்துக்கு வந்திருக்கிறது என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறுகிறார். அவர் ஆங்கிலத்தில் “Crossing the Rubicon” என்ற சொற்றொடரைப் பாவித்துள்ளார். அது ஜூலியஸ் சீசரின் துணிகரமான, ஆனால் பின்வாங்க முடியாத ஒரு யுத்த நகர்வைக் குறிக்கும் சொற்றொடர். பின்வாங்க முடியாத ஒர் இடத்துக்கு  என்பிபி முன்நகர்ந்திருக்கிறது என்று பொருள்.

தொடர்ச்சியாக நிகழும் கைது நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தல் என்பிபி அதை நன்கு விளங்கி வைத்திருக்கிறது என்றே தெரிகிறது. தமிழ்த் தேசிய அரசியல் நோக்குநிலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி மீது விமர்சனங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அது சில மாற்றங்களைக் காட்டுகிறது என்பதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். குறிப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதுவரை 70 க்கும் குறையாதவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களில் அரசியல்வாதிகள், உயர் நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் படைப்பிரதானிகள், அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாக பாதாள உலகக் குற்றவாளிகள் போன்றவர்கள் அடங்குவர்.

ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்த பின் அதிலிருந்து பின் வாங்கினால், இப்பொழுது சீண்டப்பட்டிருக்கும், தற்காப்பு நிலைக்குத்-defensive-தள்ளப்பட்டிருக்கும் சிங்கள மேட்டுக்குடியும் எதிர்க் கட்சிகளும்  பழிவாங்கும் உணர்ச்சியோடு அனுரமீது பாயும். அதாவது தாக்கும் நிலைக்கு-offensive- வளரக்கூடும். எனவே என்பிபி திரும்பிப்போக முடியாது. அப்படிப் போனால் அது எல்லாவிதத்திலும் தோல்வி. அதனால் ரணிலைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய தலைகளைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த மேட்டுக்குடியை ஒருவித அச்சச் சூழலில், தற்காப்பு நிலையில் வைத்திருக்கலாம்.

ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதோடு சிங்கள பௌத்த உயர் குழாம் ஒன்று திரண்டு விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பின்வருமாறு கூறினார்…”கட்சி பேதமின்றி நாம் ஒன்றிணைய வேண்டும். இவை அனைத்தும் இணைந்து இறுதியில் எமது வீட்டுக் கதவைத் தட்டும். நாம் தற்பொழுது ஒன்றிணைந்து எதிர்கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”

இது சிங்கள பௌத்த உயர் குழாத்தின் அச்சத்தை பிரதிபலிக்கும் கருத்தாகும். ரணிலைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க்கட்சிகளும் உஷார் ஆகிவிட்டன. இந்த அரசாங்கம் இப்படியே தொடர்ந்து முன் சென்றால் தங்கள் எல்லாரிலும் கைவைக்கக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

facebook_1756267725267_73663207451612873

இது ஒரு ஒத்திகைதான். இப்போதுள்ள சிங்கள பௌத்த உயர் குழாத்தில் ஒப்பீட்டளவில் மென் இலக்காக ரணில்தான் காணப்படுகிறார். அவருடைய  தாய்க் கட்சி உடைந்துவிட்டது. அவர் ஒரு பலமான அணியாக இல்லை. உள்நாட்டில் அவர் அனேகமாக பலவீனமான ஒரு தலைவர்தான். அவர் தண்டு சமத்தாக, மிடுக்காக நிமிர்ந்து காட்சி தருபவர் அல்ல. தன்னை ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக சிங்கள பௌத்த இனவாதத்தின் தீவிர நிலைகளுக்கு தலைமை தாங்குபவர் அல்ல. அல்லது சிங்கள பௌத்த கூட்டு உளவியலைக் கவரும் விதத்தில் ஆடை அணிகலன்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர் அல்ல. மாறாக அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுவதிலும் மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்பட்டார். மேற்கத்திய அறிவுவாதத்தின் வாரிசாகவும் தன்னை காட்டிக்கொள்ள முற்பட்டார். ராஜபக்சக்களை போலன்றி ஏன் அனுரவை போலன்றி எல்லா பேரரசுகளையும் சமதூரத்தில் வைத்திருக்கக்கூடிய தந்திரசாலியாகவும் கெட்டிக்காரராகவும் அவர் காணப்பட்டார்.

ஆனால் அவருடைய கெட்டித்தனங்கள் சிங்கள மக்களைக் கவரவில்லை. சிங்கள மக்களைக் கவர்வதற்கு ராஜபக்சக்களிடம் நிறைய இருந்தது. ரணிலிடம் குறைவாகவே இருந்தது. அதனால்தான் அவர் அநேகமாக தேர்தல்களில் தோற்கடிக்கப்படும் ஒரு தலைவராக காணப்பட்டார். எனினும் உள்நாட்டில் அவர் பலவீனமாக தலைவராக இருந்த பொழுதும், அனைத்துலக அளவில் அவர் ஒரு  பலமான ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி வைத்திருந்தார். மேற்கத்திய தலைநகரங்களிலும் சரி ஐநா, ஐஎம்எஃப் போன்ற உலகப்பொது நிறுவனங்களிலும் சரி அவருக்கு கவர்ச்சி அதிகம்.

இவ்வாறு உள்நாட்டில் கவர்ச்சி குறைந்த ஒருவரை ஒரு மென் இலக்கை முதலில் கைது செய்ததன்மூலம் அனுர  ஒத்திகை ஒன்றைச் செய்தார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நிகழப்போகும் கைது நடவடிக்கைகளுக்கான ஒத்திகை. அதேசமயம்,ஏற்கனவே இளைய ராஜபக்சவாகிய சசீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார். நேற்று அவருடைய விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருக்கிறது. மூத்த ராஜபக்சங்களில் கையை வைத்தால் எதிர்ப்பு பலமாக இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தி சிந்திக்கின்றது. மூத்த ராஜபக்ஷக்களில் கைவைத்தால் அது இனவாதத்தை மேலும் முன்னிலைக்கு கொண்டு வரும். யுத்த வெற்றி வாதம் மீண்டும் பலமடையக்கூடும். அதனால்தான் பரீட்ச்சார்த்தமாக சஷீந்திரவில், ரணிலில் கை வைத்திருக்கிறார்கள்.

அது இன்னொரு வகையில் பழைய பகையை, கணக்கைத் தீர்ப்பது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் பிமல் ரட்டநாயக்க கூறினார் ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்று. அது 40ஆண்டுகளுக்கு முந்திய ஜேவிபியின் கணக்கு. ஜேவிபியின் இரண்டாவது போராட்டத்தை கொடூரமாக நசுக்கியது யுஎன்பி. அப்பொழுது ரணில் அரசாங்கத்தில் ஒரு பிரதானி. எனவே அந்தக் கணக்கைத் தீர்க்க வேண்டிய தேவை ஜேவிபிக்கு இருந்தது.

ஆனால் இந்த இடத்தில் மேலும் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஜேவிபிக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை. அது ஒரு குற்றச்சாட்டாகவே இல்லை. பிமல் ரட்டநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டிக்காட்டிய, தமிழ் மக்களுக்கு எதிரான நூலக எரிப்பு போன்ற குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்படவில்லை. அரச வளங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதற்காகத்தான் அவர் மீது வழக்கு. போர்க்குற்ற வழக்கு அல்ல.

அவரைக் கைது செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அவரைப் போன்ற முன்னாள் ஜனாதிபதிகளும் உட்பட ஏனையவர்களைக் கைது செய்வதற்கான ஒரு பரிசோதனையை என்பிபி செய்து பார்த்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பரிசோதனைக்குள் இதுவரை போர்க் குற்றங்கள் அடங்கவில்லை.

உள்நாட்டில் ரணில் தேர்தல் கவர்ச்சி குறைந்த தலைவராக இருந்த காரணத்தால் அவரை ஒரு மென் இலக்கு என்று தீர்மானித்து  கைது செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுவிட்டன. சிங்கள பௌத்த உயர் குழாம் மீண்டும் ஒன்று திரளுகிறது. ”தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது”என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

சாலிய பீரிஸ் கூறியதுபோல திரும்பிவர முடியாத ஒரு இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்திருக்கின்றது. எனவே அவர்கள் தொடர்ந்தும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து ஊழலுக்கு எதிராக முன்போனால் மட்டும்தான் தமையும் காத்துக் கொள்ளலாம் எதிர்த்தரப்பையும் பலவீனப்படுத்தலாம்.

IMG-20250824-WA0009-871x1024.jpg

அதேசமயம் இந்தக் கைது நடவடிக்கையால் தமிழ் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் சாதக பாதக விளைவுகள் என்ன?

ரணில் கைது செய்யப்பட்ட காலம் எதுவென்று பார்க்க வேண்டும். அடுத்த ஜெனீவா கூட்டத்துடருக்கு சில  கிழமைகளுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அனைத்துலக அரங்கில் எடுத்துக் கூறுவதற்கு அது அனுரவுக்கு உதவும்.

ரணில் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அதிகம் இசைவானவர். இலங்கைத் தீவில் மேற்கு நாடுகளின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட இரண்டு சமாதான முயற்சிகளில் அவர்தான் அரச பங்காளி. முதலாவது சமாதான முயற்சி நோர்வையின் அனுசரணையோடு கூடிய சமாதான முயற்சிகள். இரண்டாவது சமாதான முயற்சி, 2015ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். இந்த இரண்டிலும் ரணில்தான் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவருடைய காலத்தில்தான் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக சமாதான முயற்சிகள் அல்லது நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே  மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் ஐ.எம் எப்பிற்கும் வாலாயமான ஒரு தலைவரை  சில நாட்கள் தடுத்து வைத்ததன்  மூலம் அனுர அரசு உள்நாட்டு நீதி தொடர்பில் ஒரு புதிய தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்ப முற்படுகின்றது.

protests-erupt-in-sri-lanka-s-capital-ov

ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன்பின் அவர் வெளியிட்ட திருத்தப்படாத அறிக்கையிலும் அதே கருத்தை பிரதிபலித்திருந்தார். ஐநா புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,உள்நாட்டு  நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு ரணில் கைது அரசாங்கத்துக்கு உதவும். இது தமிழ் தரப்பின் நிலைமையை ஐநாவில் மேலும் பலவீனப்படுத்தும். ஐநாவின் பொறுப்புக்கூறல் செய்முறையின் பங்காளியாக இருந்த ஒருவரே கைது செய்யப்படும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அரசாங்கம் ஜெனிவாவில் கூறப்போகிறது.

இந்த விடயத்தில் அண்மையில், இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணையைக் கேட்டு தமிழ்த்  தேசியக் கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது சமயோசிதமானது; பொருத்தமானது.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலைக் கைது செய்தமை என்பது சிங்கள மக்கள்  மத்தியில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பலப்படுத்துகிறது. அதேசமயம் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டியுள்ளது. உலக அளவிலும் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அது உதவக் கூடும். இந்த விடயத்தில்  அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுதிரளும் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க் கட்சிகளும் எப்படிப்பட்ட சவால்களை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப் போகின்றன என்பதுதான் நாட்டின் எதிர்காலத்தையும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தையும் ஐநாவில் தமிழர் விவகாரம் நீர்த்துப் போவதற்கான வாய்ப்புக்களையும் தீர்மானிக்கும்.

https://www.nillanthan.com/7697

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.