Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 13 பேர் உயிரிழப்பு.

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சூழலிலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. உயிரிழப்பு ஏற்பட்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்" எனக் கூறினார்.

உள்ளூர் நிர்வாகம் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்களை Gen Z தலைமுறை என குறிப்பிடும் போராட்டக்காரர்கள் ஊழல் குறித்தும் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.

இளைஞர்களின் போராட்டம்

இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் உள்ள சிங்கா துர்பாரில் இன்று (திங்கட்கிழமை) காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். பின் நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர்.

"சில போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முயன்றதாகவும், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்" என பிபிசி செய்தியாளர் கேஷவ் கொய்ரலா கூறுகிறார்.

ராஷ்டிரபதி பவன், ஷீதல் நிவாஸ், நாராயண் தர்பார் அருங்காட்சியகம், பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளில் இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காமல், தடை உத்தரவுகளை மீறுவதாக செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதும், தெருக்களில் நேபாள ராணுவம் குவிக்கப்பட்டது. நேபாள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரான துணை ஜெனரல் ராஜாராம் பேட்னெட், "எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், அமைதியை நிலைநாட்டுவதற்காக சிறிய ராணுவ படை அனுப்பப்பட்டது" எனக் கூறினார்.

சில போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டதாகவும் அதில் காயமடைந்த பலரும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

நேபாளத்தில் இருந்து கிடைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் திரளான போராட்டக்காரர்கள் காணப்படுகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ஒருவர், "இங்கு நிலநடுக்கத்திற்கான அவசியம் இல்லை. தினமும் ஊழலால் நேபாளம் நடுங்கிக்கொண்டுதான் உள்ளது" என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தியிருந்தார்.

இளைஞர்கள் பலரும் ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாளத்தில் அரசாட்சியை நிலைநாட்ட ஓர் போராட்டம் நடந்தது. அப்போதும் போராட்டக்காரர்கள் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.

சமூக வலைதளம் மீதான தடை

நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது.

கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்களும் இதில் அடங்கும்.

நாட்டின் சட்டத்திற்கு இணங்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

சீனாவைச் சேர்ந்த டிக்-டாக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நிபந்தனைகளை பூர்த்தி செய்துகொண்டதால் அதற்கு தடை விதிக்கப்படவில்லை.

நேபாளத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அளவிலான மக்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இந்த சமூக வலைதளங்களின் தடையால் வெளிநாட்டில் வசிக்கும் நேபாள குடிமக்கள் தங்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிக் டாக் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள்

நோபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சமூக வலைதளங்களின் தடைக்குப் பிறகு இளைஞர்கள் போராட்டத்திற்கு ஒன்று திரண்டுள்ளனர்.

தற்போது நேபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் டிக் டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்களை போராட்டத்திற்கு அழைத்துள்ளனர்.

டிக் டாக்கில் 'நெப்போ பேபி' என்ற வார்தையும் ட்ரண்டில் உள்ளது. அதில் அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதில் அரசியல்வாதிகளால் அவர்களின் குழந்தைகள்தான் பயனடைகிறார்கள் ஆனால் நாட்டிற்கு அவர்கள் வேலை செய்வதில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது.

பல வீடியோக்களில் நோபாளத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வசதியாக வாழும் தலைவர்களையும் ஒப்பிட்டுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று நேபாள அரசு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. அப்போதில் இருந்து இளைஞர்கள் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு.

காத்மாண்டு மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை முதலே காத்மாண்டு மற்றும் பல்வேறு நகரில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக போலீசாரின் செய்தித் தொடர்பாளர் பினோத் கிமிரே தெரிவித்தார்.

"காத்மாண்டு மட்டுமல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் போராடி வருகின்றனர். காவல்துறை இவர்களை கண்காணித்து வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திட்டமிட்டு அனைத்து இடங்களிலும் படைகளை குவித்துள்ளோம்" என கிமிரே பிபிசி நேபாளத்திடம் கூறியுள்ளார்.

போராட்டம் ஏன்?

அந்நாட்டு அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் பதிவு செய்யாததால் X, யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இதனையடுத்து டிக் டாக் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் ஒன்று திரண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். இதனால் இதனை Gen-Z போராட்டம் எனக் குறிப்பிடுகின்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c70183j4l53o

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-113.jpg?resize=750%2C375&ssl

19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்!

19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

ஊழலை எதிர்த்துப் போராடவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

நிலைமையைக் கருத்திற் கொண்டு திங்கள்கிழமை (08) இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், சமூக ஊடகத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந் நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களிலும் நடந்த போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேபாளத்தில் மில்லியன் கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை நம்பியுள்ளனர்.

அவர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் வணிகத்திற்காக அவற்றை அணுகுகின்றனர்.

ஆனால், அரசாங்கம் கடந்த வாரம், போலி செய்திகள், வெறுப்புப் பேச்சு மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தொடர்பான தடையை அமுல்படுத்தியது.

இதற்கு எதிராக திங்களன்று வீதிகளில் இறங்கிய இளைஞர்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்துப் போராடுவதாகக் கூறினர்.

சில போராட்டக்காரர்கள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாக்கில் உள்ள அவரது வீட்டின் மீதும் கற்களை வீசினர்.

காத்மாண்டுவில் பொலிஸார் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி தடியடி பயன்படுத்தியதுடன் இறப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

பிரதமர் கே.பி. சர்மா ஒலி, வன்முறை மற்றும் உயிரிழப்புகளால் “மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார்.

அத்துடன், போராட்டங்களை விசாரிக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிதி நிவாரணம் வழங்கும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

இதனிடையே, போராட்டங்களின் போது தனது நிர்வாகம் பலத்தைப் பயன்படுத்தியது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தமையினால், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மாலையில் தனது இராஜினாமாவை வழங்கினார்.

கடந்த வாரம், நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மீறுவதற்காக 26 சமூக ஊடக தளங்களைத் தடை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

சமூக ஊடகங்களைத் தடை செய்யவில்லை, ஆனால் அவற்றை நேபாள சட்டத்தின்படி கொண்டு வர முயற்சிப்பதாக நேபாள அரசாங்கம் வாதிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446466

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கம்

Published By: Digital Desk 1

09 Sep, 2025 | 09:27 AM

image

நேபாளத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால், சுமார் 19 பேர் கொல்லப்பட்டதையடுத்து, சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நேற்றையதினம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நுழைந்து, பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, அங்கு இடம்பெறும் ஊழலை எதிர்த்துப் போராடவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜெனரல் இசட்டின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக நேற்று இரவு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தடையை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கருத்து வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேபாளத்தின் தலைநகரிலும், தலைநகருக்கு வெளியிலுள்ள நகரங்களிலும் இடம்பெற்ற போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/224590

  • கருத்துக்கள உறவுகள்

546513434_1233761302100059_7203396383253

546162593_1233761308766725_5922937829060

546386425_1233761342100055_8100689848376

🔴 கொழுத்தி எரிக்கப்பட்டது நேபாள பாராளுமன்றம்!
சமூக ஊடக தடையை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் போராட்டமானது வன்முறையாக வெடித்து தொடர்வதுடன், பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதுடன் பாராளுமன்றமும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டடத்துக்கும் பிரதமர் வீட்டுக்கும் தீ வைப்பு - 12 மணி நேரத்தில் என்ன நடந்தது?

நேபாளம், நேபாள போராட்டம், நேபாளம் போராட்டம்

பட மூலாதாரம், EPA

நாடாளுமன்ற கட்டடம் மற்றும் சிங் தர்பார் எனும் அரண்மனைக்கு போராட்டக்காரர்கள் செவ்வாய்கிழமை தீ வைத்தனர். சிங் தர்பாரில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன

9 செப்டெம்பர் 2025, 13:41 GMT

புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்

நேபாளத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்கும், ராஜினாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் வீட்டுக்கும் தீ வைத்துள்ளனர்.

காத்மாண்டுவில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். கட்டடத்தின் ஒரு பகுதியிலிருந்து புகை தொடர்ந்து எழுகிறது.

கட்டட வளாகத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிள்கள் சுற்றி வருகின்றன. சிலர் தோட்டத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட செடிகளையும், கட்டடத்தின் உட்புறத்திலிருந்து ஓவியங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.

கட்டடத்தின் நுழைவாயிலில் உள்ள நெருப்பைச் சுற்றி போராட்டக்காரர்கள் நடனமாடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர், பலர் நேபாளக் கொடியை ஏந்தியுள்ளனர்.

சிலர் கட்டடத்தின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அனைத்து ஜன்னல்களும் உடைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் வெளிப்புறத்தில் அரசாங்க எதிர்ப்பு படங்கள் வரையப்பட்டுள்ளன.

நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டடத்துக்கும் பிரதமர் வீட்டுக்கும் தீ வைப்பு - 12 மணி நேரத்தில் என்ன நடந்தது?

இதற்கிடையே நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி தன் பதவியை செவ்வாய்கிழமை மதியம் ராஜினாமா செய்தார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 'ஜென் Z' இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் உயிரிழந்ததையடுத்து, கேபி சர்மா ஒலி மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்த இளைஞர்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்தும் ஊழலை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.

Play video, "நேபாளம்: இளைஞர்களின் போராட்டம் அரசை ஆட்டம் காண வைத்தது எப்படி?", கால அளவு 4,36

04:36

p0m1s07y.jpg.webp

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி?

கேபி சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றாக இருந்தது.

இளைஞர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்தியதில் 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் இருவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.

கேபி சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ததை பிரதமர் செயலகம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

கேபி சர்மா ஒலி நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக பதவி வகித்துவந்தார்.

ஷார்ட் வீடியோ

Play video, "காணொளி: தீவிரமடையும் போராட்டம் - பற்றி எரியும் நேபாளம்", கால அளவு 0,26

00:26

p0m1rcpf.jpg.webp

காணொளிக் குறிப்பு, காணொளி: தீவிரமடையும் போராட்டம் - பற்றி எரியும் நேபாளம்

கே.பி. சர்மா ஒலியின் வீடு எரிந்து நாசமானது

காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் மோதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக் குழுக்களால் பல்வேறு தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் நாசமாக்கப்பட்டதாகவும், தீ வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

பக்தபூரில் உள்ள பாலகோட்டில் உள்ள தற்போது ராஜினாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் வீடு தீ பற்றி எரிவதையும், சேதப்பட்டிருப்பதையும் காட்டும் காணொளிகள் வெளியாகின.

தீக்கிரையாக்கப்பட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீக்கிரையாக்கப்பட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம்

இதனுடன், புத்தனில்காந்தாவில் உள்ள நேபாளி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேர் பகதூர் தியூபாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தங்கடியில் உள்ள தியூபாவின் இல்லமும் போராட்டக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் சென்டர்) செய்தித் தொடர்பாளர் அக்னி பிரசாத் சப்கோடா கூறுகையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹாலின் குமல்தாரில் அமைந்துள்ள இல்லத்தில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தகவல் தெரிவித்தார்.

முன்னதாக, தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோரின் இல்லங்களும் சூறையாடப்பட்டன.

நேபாளம், நேபாள போராட்டம், நேபாளம் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டங்களின் போது, பல இடங்களில் தீ வைக்கப்பட்டன, பல தலைவர்களின் வீடுகள் நாசப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜினாமா கடிதம்

ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள சமாஜ் கட்சிகளின் அமைச்சர்கள் பலர் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி உடனடியாகப் பதவி விலகினார்.

'ஜென் Z' போராட்டங்களின் போது ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர் இறந்ததால் கே.பி. ஷர்மா ஒலிக்கு பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

பிபிசி நேபாளி சேவையின்படி, சில நாளிதழ்கள் ஒலியின் பதவி விலகலைக் வலியுறுத்தி சிறப்பு தலையங்கங்களை வெளியிட்டிருந்தன.

நேபாளம், நேபாள போராட்டம், நேபாளம் போராட்டம்

படக்குறிப்பு, பிரதமர் கேபி சர்மா ஒலியின் இல்லமும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

நேபாளம், நேபாள போராட்டம், நேபாளம் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது

பிபிசி நேபாளி சேவையின்படி, செவ்வாய்க்கிழமை கோபமடைந்த போராட்டக்காரர்கள் நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தைத் தாக்கி தீ வைத்தனர்.

திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி புகை எழுவதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விமானங்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, ஆனால் இப்போது சர்வதேச விமானங்களும் பாதிக்கப்படும்.

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg2xngqz48o

  • கருத்துக்கள உறவுகள்

545735252_1206895498142087_3012231575463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தின் 'ஜென் Z' போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இப்போது வருந்துவது ஏன் - கள ஆய்வு

ஜென் z போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது – கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை.

கட்டுரை தகவல்

  • ரஜ்னீஷ் குமார்

  • பிபிசி செய்தியாளர்

  • 17 நிமிடங்களுக்கு முன்னர்

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது.

மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது போல் தோன்றியது.

ஜென் Z போராட்டங்களின் போது சேதமடையாமல் இருந்த ஒரே அரசு நிறுவனம், இந்த விமான நிலையம்தான் என்று சொல்லலாம்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், ஒரு பெரிய புயல் கடந்த பின்பு நிலவும் அமைதியையைத்தான் உணர்ந்தோம்.

இடையில், எல்லாம் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லும் விதமாக ராணுவ வாகனங்கள் சாலையில் தென்பட்டன.

முழு நகரத்திலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இரண்டு நாட்கள் நடந்த போராட்டங்களில் நேபாள அரசாங்கம் சரணடைந்துள்ளது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தலைவர்கள் ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல், நேபாளம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் பல இடங்களில் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டது. அப்போது நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று சொன்னபோது, அவர்கள் எங்களை அனுமதித்தனர்.

என் அருகில் அமர்ந்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், "ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நேபாளத்திற்கு வருக" என்றார்.

நேபாள நாடாளுமன்றம் .

செவ்வாய்க்கிழமை நேபாள நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது.

குறிவைக்கப்பட்டுள்ள ஊடகங்கள்

'ஜென் Z' போராட்டத்தின் போது ஊடகங்களும் குறிவைக்கப்பட்டன. நேபாளத்தின் முன்னணி நாளிதழான காந்திபூரின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

போராட்டத்தின் போது, ரபி லாமிச்சானேவின் ஆதரவாளர்கள் அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். காத்மாண்டுவில் உள்ள நக்ஹூ சிறையிலிருந்து அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த பல கைதிகளும் வெளியே வந்தனர். நேபாளத்தின் பல சிறைகளிலிருந்தும் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து இன்னும் எரிந்த வாசனை வருகிறது.

இந்த நாடாளுமன்றம், நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்ததற்கான அடையாளமாகவும், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் கதையைச் சொல்லும் சின்னமாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று, அந்தக் கட்டடத்திலிருந்து புகை மட்டுமே எழுகிறது.

2008-ஆம் ஆண்டு நேபாள மக்கள் முடியாட்சியை ஒழித்தபோதும், நாராயண்ஹிட்டி அரச அரண்மனை தீக்கிரையாக்கப்படவில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, வளாகத்தில் குடியரசு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது.

ஆனால் அதே நேபாள மக்கள், வெறும் 17 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தின் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு சிதைத்தனர்.

நாடாளுமன்ற சுவர்களில் தேவநாகரி எழுத்தில் கே.பி. ஒலி மற்றும் பிரசண்டாவை அவமதிக்கும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

அந்த சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், 'ராஜா மீதுகூட இத்தனை வெறுப்பு இல்லை' என்றார்.

காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இடைக்கால அரசாங்கம் குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இந்திய ஊடகங்கள் மீது வெளிப்படும் கோபம்

சுமார் 48 வயதான தீபக் ஆச்சார்யா, தனது மகனுடன் எரிந்த நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே நின்றிருந்தார். நாங்கள் சில பெண்களிடம் பேச முயன்றபோது, அவர்கள் இந்தியைக் கேட்டவுடன் கோபமடைந்துவிட்டனர்.

அப்போது தீபக் ஆங்கிலத்தில்,'தயவுசெய்து நிறுத்துங்கள். இந்திய ஊடகங்களும் மோதி பிரசாரத்தின் ஓர் பகுதி' என்று கூறினார்.

அவர் அதை மிக உரத்த குரலில் சொன்னதால், அருகிலிருந்தவர்கள் கூட எங்களை நோக்கிப் பார்க்கத் தொடங்கினர்.

தீபக்கின் கோபத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், அவருடன் நீண்ட உரையாடலும் நடந்தது.

"இந்திய ஊடகங்கள் ஜனநாயகத்தையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு எங்களது ஜனநாயகத்தையும் சிதைக்கின்றன. யார் பிரதமராக வேண்டும் என்பதை நேபாள மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் சுஷிலா கார்கி பிரதமராவார் என்று சொல்கின்றன. மோதியின் ஆட்சி நேபாளத்திலும் இருப்பது போல இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன.

இந்திய அரசாங்கமோ, அங்குள்ள ஊடகங்களோ நேபாளத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாகப் பார்க்கவில்லை. இங்கே உள்ள இந்திய ஊடக செய்தியாளர்களின் பின்னணியைப் பாருங்கள், எல்லோரும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுடன் தொடர்புடையவர்கள்தான்" என்று தீபக் கூறினார்.

இது, தீபக் ஆச்சார்யாவின் கோபம் மட்டும் அல்ல, இந்திய ஊடகங்களுக்கு எதிரான அதிருப்தி நேபாளத்தில் பொதுவாகக் காணப்படும் ஒன்று.

இங்குள்ள மக்கள் வெளிநாட்டு சதித் திட்டங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதில் அமெரிக்காவின் பெயரும் அடிபடுகிறது.

சாலைத் துறை கட்டிடம்

காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டிடமும் எரிந்து நாசமானது.

தீர்வை விட அதிகமாகக் காணப்படும் குழப்பம்

நாங்கள் நாடாளுமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்து அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் வழங்கத் தொடங்கினர்.

ஒருவர் தன்னை கிஷன் ரௌனியர் என்றும், மற்றொருவர் சோமன் தமாங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

'ஏன் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் கொடுக்கிறீர்கள்'? என்று கேட்டபோது, "அவர்கள் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். எங்களிடம் அதிக பணம் இல்லை, ஆனாலும் நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் ஒரு சலூன் நடத்துகிறோம்" என்றார் தமங்.

கிஷன் ரௌனியர் ஒரு மாதேசி இந்து மற்றும் தமாங் ஒரு பஹாடி பௌத்தர். இருவரும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள்.

அதிகமான சேதம் ஏற்பட்டதற்காக கிஷன் இப்போது வருந்துகிறார்.

"ஒவ்வொரு அரசு கட்டடமும் தீக்கிரையாக்கப்பட்டது. இது பெரிதாகிவிட்டது. இப்போது நாங்கள் வருந்துகிறோம். அடுத்து வரும் அரசு, ஊழல் இல்லாததாக இருக்குமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை," என்று கிஷன் கூறினார்.

ஜென் Z போராட்டத்தில் பங்கேற்ற பலரும் இப்போது கட்டடங்களை எரிப்பது தவறு என்று நினைக்கிறார்கள்.

திங்களன்று 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலை, செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சற்று தளர்ந்தது போல தெரிகிறது.

இருப்பினும், நேபாளத்தின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டடத்தின் முன் நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.

ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த அந்தக் கட்டடத்தின் ஜன்னல்களிலிருந்து இப்போது புகை மட்டும் வெளியேறுகிறது. புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

9ea19410-8f8f-11f0-9cf6-cbf3e73ce2b9.jpg

நேபாள மாவட்ட அலுவலகம். அங்கிருந்து இன்னும் புகை எழுகிறது.

நேபாள அரசியலின் திருப்புமுனை

நிராஜன் குன்வர், விஷ்ணு சர்மா மற்றும் சுபாஷ் சர்மா ஆகிய மூன்று ஜென் Z போராட்டக்காரர்கள் சோகமான நிலையில் அமர்ந்திருந்தனர்.

மூவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள். போராட்டத்தில் நிராஜன் குன்வர் காயமடைந்திருந்தார்.

"அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தது நாங்கள் அல்ல, வேறு சிலர்தான். நிறைய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால்,இப்போது நாங்கள் வருந்துகிறோம். இந்தக் கட்டடங்களை அமைக்க நேபாளத்துக்குபல ஆண்டுகள் எடுத்தது. அதனால் நாங்கள் மிகவும் சோகமாக உள்ளோம்" என்று நிராஜன் கூறுகிறார்.

அந்த 'மற்றவர்கள்' யார்? என்று கேட்டபோது, நிராஜனும் விஷ்ணுவும், ரவி லாமிச்சானேயின் ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி (RPP) ஆதரவாளர்கள் என்று சொன்னார்கள்.

ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) முடியாட்சி ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. அது நேபாளத்தை ஒரு இந்துத் தேசமாக்க கூறுகிறது.

பின்னர் நிராஜன் மற்றும் விஷ்ணுவிடம் 'ஜனநாயக நேபாளமா வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா? மதச்சார்பற்ற நேபாளமா வேண்டுமா, இந்துத் தேசம் வேண்டுமா?' என்று கேட்கப்பட்டது.

இருவரும் வெளிப்படையாகவே, 'முடியாட்சி முறை, இந்துத் தேசம்' என்றனர்.

ஆனால் அங்கு இருந்த சுபாஷ் சர்மா, தான் ஜனநாயக நேபாளத்தை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகச் சொன்னார்.

மாணவர் விஷ்ணு சர்மா.

காத்மாண்டுவில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு சர்மா. இவர், 'ஜென் z ' போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது–கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. அதனால், யார் என்ன நினைத்தார்களோ அதைச் செய்தார்கள்.

இளைஞர்களுடன் பேசினால், அவர்கள் குழப்பமடைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள்.

நேபாளத்தில் அடுத்த அரசு எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியின் பெயர் அடிபடுகிறது, ஆனால் இளைஞர்களிடையே அதற்கு ஒருமித்த ஆதரவு இல்லை.

வியாழக்கிழமை, 'ஜென் Z' போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சுசிலா கார்க்கியின் பெயரை எதிர்த்து ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

ஜென் Z போராட்டக்காரர்கள் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா முன்வர வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நாடாளுமன்றம் ஏன், எப்படிக் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான பதில் அரசியலமைப்பில் இல்லை.

அடுத்து என்ன?

239 ஆண்டுகளாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்த நேபாள மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அதை இனி எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை.

நிலத்தால் சூழப்பட்ட நாடான நேபாளம், இன்று தனது ஜனநாயகமும் பல பக்கங்களில் இருந்து நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டதைப் போலவே காட்சியளிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy9ndqqyengo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.