Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

கட்டுரை தகவல்

  • பாமினி முருகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தினமும் காலை தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது என்ன நினைப்பீர்கள்? இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என்றுதானே. ஆனால், அந்த நாள் அழுகையுடன் தொடங்கினால் எப்படி இருக்கும்?

மனித வாழ்க்கையில் சிரிப்பு எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவிற்கு அழுகையும் முக்கிய பங்கு வகிக்கிறதுதானே. மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

இது சோகமான நிகழ்வுகள், இழப்பு என பல்வேறு காரணங்களால் வெளிப்படும். சில சமயங்களில் காரணமே இன்றியும் இந்த உணர்வு வெளிப்படும். இன்னும் சொல்லப்போனால் நம் மனதில் இருக்கும் நெருடல்கள், பாரங்கள், குமுறல்களை பல சமயங்களில் கண்ணீர் மூலம் வெளியேற்றுகிறோம்.

சிரிப்பு நம்மை எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக்குகிறதோ அதே அளவிற்கு அழுகையும் நம்மை உணர்வுப்பூர்வமாக ஆக்குகிறது. இருப்பினும் இத்தகைய ஓர் உணர்வை நாம் ஏன் எதிர்மறையான உணர்வாக பார்க்கிறோம்? அழுவதால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன?

கண்ணீர் வெளிப்படுவதற்கான காரணம்:

அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

மனித பிறவிக்கு மட்டுமே தனித்துவமான உணர்வு சார்ந்த திரவமாக கண்ணீர் உற்பத்தி ஆகிறது என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் (The neurobiology of human crying) என்ற ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் ஜே.எட்.டிஃபானி, கடந்த 2003ஆம் ஆண்டில் உடல்நலனிலும் நோயிலும் கண்ணீரின் பங்கு (Tears in health and disease) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

"நாம் விழித்திருக்கும் சமயத்தில் கண்ணீர் சுரக்க உதவும் லேக்ரிமல் க்ளாண்ட் தொடர்ச்சியாக கண்ணீரை உற்பத்தி செய்துகொண்டிருக்கும். இது கண்ணின் ஓரங்களிலும், மேல் இமைக்குக் கீழும் இருக்கும். கண்ணை இமைக்கும்போது, கண்ணீரை மெல்லிய பாதுகாப்பு படலமாக கண்ணின் மேல் பரப்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"கண் இமைகளில் உள்ள டார்சல் தகடுகளுக்குள் அமைந்துள்ள மெய்போமியன் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும்போது விளிம்பில் எண்ணெய் போன்ற திரவம் ஏற்படும். இது கண்ணீர் படலத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் வெளிப்படும் கண்ணீர் கார்னியா மற்றும் வெண்படலத்தின் செல்லுலார் மேற்பரப்புகளை சீராக்கும். இது விளித்திரையை மேம்படுத்தி நமது பார்க்கும் திறனை அதிகரிக்கிறது" என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்கள் அழுவது ஏன்?

மனிதர்கள் அழுவது குறித்து 2 நேரெதிர் கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைப்பதாக தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் ஆய்வறிக்கை மேற்கோள்காட்டுகிறது.

ஒன்று துயரத்தால் ஏற்படும் தூண்டுதலால் அழுவது. உதாரணமாக ஒருவர் அதீத சோகமாகவோ, கோபமாகவோ இருக்கும்போது இயற்கையான ஓர் உணர்வாக கண்ணீர் வெளிப்படுகிறது என்பதாகும்.

மற்றொன்று அழுகை ஒரு ஆறுதல் செயலாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் நன்றாக அழுத பின்பு அவர் மிகவும் இலகுவாக உணர்கிறார். மனதின் பாரங்கள் குறைந்து நிதானமாகிறார் என்பது ஆகும்.

மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

'இங்கே அழலாம்'

பெரும்பாலும் பொதுஇடங்களில் நாம் அழுவதில்லை. தனி அறையிலோ, மறைவான பகுதிகளிலோ, ஆள் இல்லாத தனிமையான இடங்களில்தான் இந்த உணர்வை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். ஏனென்றால் இதைவைத்து நம்மை யாரும் மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனால் அழுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சுதந்திரமாக இந்த உணர்வை வெளிப்படுத்த இதற்கென்றே சில மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை சூரத் நகரில் 2017ஆம் ஆண்டு அழுகை கிளப் (Cry Club) ஒன்று தொடங்கப்பட்டது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கிளப்பின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி அழுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அழுகை மன அழுத்தத்தை அகற்றி, மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று இவர்கள் நம்புகின்றனர். இது பின் மும்பையிலும் விரிவுப்படுத்தப்பட்டது.

சமீபத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மும்பையில் 'தி க்ரை கிளப்' எனப்படும் ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'உங்களின் உணர்வுகளை அரணவணைத்துக் கொள்ளுங்கள்' என்ற வாசகத்துடன் இருந்தது.

இது வழக்கமான பார்டியோ, இசைநிகழ்ச்சியோ அல்ல. முன்பின் தெரியாதவர்கள் கூடி, அழுவதற்கு சுதந்தரமான ஒரு சூழலை கொண்ட இடம். 399 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்று உங்களின் மனக்குமுறல்களை கொட்டலாம்.

யாரும் உங்களை எடைபோட மாட்டார்கள். டிஷ்யூ பேப்பர், தேநீர் மற்றும் உங்களின் மனநிலைக்கு ஏற்ற இசையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேண்டுமென்றால் சாய்ந்து அழுவதற்கும், யாரையேனும் கட்டியணைத்து புலம்பி அழுவதற்குமான வசதியும் அங்கு இருந்தது.

இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Small World என்ற நிறுவனத்திடம் கேட்டோம்.

இந்த நிகழ்ச்சிக்கான யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டபோது, ருய்காட்சு (Ruikatsu) என்ற ஜப்பானிய பழக்கத்தில் இருந்து ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சவுரவ். ருய்காட்சு என்பது கண்ணீரை வெளியேற்றும் ஒரு ஜப்பானிய நடைமுறை ஆகும்.

சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம்.

பட மூலாதாரம், Healthy Crying Club Surat

படக்குறிப்பு, சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம்.

"மக்கள் தங்கள் உணர்ச்சிகளை சரிசெய்யவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ வேண்டிய கட்டாயம் இல்லாமல், எவ்வித ஆலோசனைகளும் இல்லாமல், அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதை அப்படியே வெளிப்படுத்த உதவுவதே எங்களின் நோக்கமாக இருந்தது" என்றார் சவுரவ்.

"அழுவது பலவீனமான அறிகுறி அல்ல என்பதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை. இதில் பங்கேற்ற ஒரு விருந்தாளி, என்னை நானே கட்டியணைத்து, எதுவும் சரியாக நடக்காவிட்டாலும் பரவாயில்லை எனத் தேற்றிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாக விவரித்தார்" என சவுரவ் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிரித்தும், புலம்பியும், அழுதும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வெளிப்படையாக அழுவது புத்துணர்சி அளித்ததாக ஒருவர் கூறினார்.

"ஒரு பாதுகாப்பான சூழலில் நாம் புரிந்துகொள்ளப்படுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது மாதிரியான வாய்ப்பு கிடைப்பது அரிதானது" என பலரும் கருத்து தெரிவித்ததாக சவுரவ் கூறினார்.

உளவியல் ரீதியாக என்ன பலன்?

அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிாஷா.

படக்குறிப்பு, அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

"அழும்போது நமது உடலின் நரம்பு மண்டலத்தை சீர்செய்து, நமது உணர்ச்சிகளை மீட்பதுதான் நரம்பியல் அமைப்பின் வேலை. நாம் அழும்போது ஆக்ஸிடோசின், எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியேறும். இந்த ஹார்மோன்கள் நம் உடல் மற்றும் மனரீதியான வலிகளை குறைத்து, நம்மை ஆசுவாசப்படுத்தும் ஹார்மோன்கள் என்பதால் இவை வெளியேறியபின் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்" என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது "அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள் அழும்போது நமக்கு அக்கறை, இரக்கம் ஏற்படும். இந்த இரக்க குணம் சமூகத்திற்கே மிகவும் முக்கியமாக உள்ளது." என்கிறார்.

மேலும் பேசிய அவர், "அழுகை என்ற உணர்ச்சி நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் ஒன்று. உடலளவில் நமக்கு ஏற்படும் காயங்களை சரிசெய்ய மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால் நமக்கு கஷ்டம் ஏற்படும்போது நம்மை நாமே தேற்றிக்கொள்வதுதான் இந்த அழுகை" என விளக்குகிறார்.

அடிக்கடி அழுதால் ஆபத்தா?

அதேசமயம் அதீத அழுகையும், மனஅழுத்தம், பயம் போன்ற பிரச்னைக்கான அறிகுறியாக பார்க்கப்படலாம் எனவும் எச்சரிக்கிறார். "ஒருவர் அதிகமாக அழுதுகொண்டே இருப்பது க்ரையிங் ஸ்பெல் (Crying Spell) எனப்படுகிறது. இது ஒருவரை பலவீனமடையச் செய்யும். ஒரு கட்டத்தில் ஏன் அழுகிறோம் என்பதே தெரியாமல் அழுகை ஒரு பழக்கமாக மாறிவிடக் கூடும்" எனக் கூறினார்.

"உணர்ச்சிகள் அடக்கப்படுவது போல தோன்றும்போது, மனதில் பாரம் ஏற்படும்போது அதை குறைப்பதற்கு அழுவது தவறில்லை. ஆனால், சிரிப்பு சிகிச்சை (laughter therapy) போல இதையும் ஒரு பழக்கமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இதுவே மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கும்" எனக் கூறுகிறார்.

ஆண்களுக்கும் பொருந்துமா?

அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா

பெரும்பாலான ஆண்கள் அழுகை என்ற உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது குறித்து கேட்டபோது "காலம் காலமாக வீரத்திற்கு எதிர்ப்பதமாக அழுகை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அழுகைக்கும் வீரத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சங்க கால மன்னர்கள் கூட வலிமையானவர்கள்தான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டால் அவர்களும் அழுதுள்ளனர். இது அவர்களின் இரக்க குணத்தை தான் காட்டுகிறதே தவிர கோழைத்தனம் கிடையாது" என்கிறார்.

"இப்போது பெரும்பாலும் அனைவருக்கும் அதிக மனஉளைச்சல் ஏற்படுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்படும்போது அதை வெளிப்படுத்தாமலேயே இருந்தால் மாரடைப்பு வரை கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது" என எச்சரிக்கிறார்.

மேலும் "ஆண்கள் பலரும் அழக்கூடாது என நினைத்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இழப்போ, மனசோர்வோ, தாங்கிக்கொள்ள முடியாத பிரச்னைகளோ ஏற்படும்போது அழுவது தவறில்லை. மனிதர்கள் அனைவருக்கும் அழுகை வேண்டும் என்பதால்தான் நாம் அனைவருக்கும் பாலின வேறுபாடின்றி Tear Duct எனப்படும் கண்ணீர் சுரபி உள்ளது. அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம்." எனவும் கூறினார்.

"அழும்போது நம் கண்களும் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலில் இருக்கும் தண்ணீர் கண் வழியே வெளியேறும்போது இந்த புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தேவைப்படும்போது அழுவது என்பது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நல்லதே" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c7v1zvpjndeo

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரின் இன்னொரு முக்கியமான நன்மை, அதில் இருக்கும் நுண்ணியிர்களுக்கெதிரான பதார்த்தங்கள். Lysozymes எனப்படும் நொதியங்கள், பல பக்ரீயாக்களின் மேல்படையான கலச்சுவரை அழிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவை. இதனால் தான், உணர்ச்சிகளால் மட்டுமல்லாமல் கண்ணுக்குள் தூசு விழுந்தாலும் உடனடியாக கண்ணீர் சுரந்து கண்களைப் பாதுகாக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.