Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1972-க்கு பிறகு நிலவுக்கு மனிதனை அனுப்பாத நாசா, இப்போது மீண்டும் அதற்கு திட்டமிடுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன்.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன்.

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • அறிவியல் செய்தியாளர்

  • 25 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது.

50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்லை. நாசா நான்கு விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி, அமைப்புகளைச் சோதிக்க உள்ளது.

ஆர்டெமிஸ் II திட்டம் என்பது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். இந்த திட்டத்தின் நோக்கம் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க வைப்பதும், இறுதியில் நிலவின் மேற்பரப்பில் நீண்ட கால இருப்பை ஏற்படுத்துவதுமாகும்.

வரைபடம்: ஆர்டெமிஸ் II

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்: ஆர்டெமிஸ் II, பல ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் செல்லும் முதல் நிலவுப் பயணமாக இருக்கும்.

நாசாவின் (பொறுப்பு) துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், இது மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று கூறினார்.

"வரலாற்று நிகழ்வுக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தில் நாம் உள்ளோம்," என்று அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"ஏவுதலுக்கான வாய்ப்பு பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே ஏற்படலாம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்."

விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS), "ஏறக்குறைய ஏவுவதற்குத் தயாராக உள்ளது" என்று ஆர்டெமிஸ் ஏவுதல் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் விளக்கினார்.

எஸ்எல்எஸ் உடன் இணைக்கப்படும் ஓரியன் (Orion) எனப்படும் விண்வெளி வீரர் காப்ஸ்யூல் தயாரிப்பு மற்றும் தரைவழி சோதனைகளை நிறைவு செய்வது மட்டுமே மீதமுள்ளது.

ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பணி 25 நாட்கள் நீடித்தது. அது 2022 நவம்பர் மாதம் ஆட்கள் இல்லாத விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம் நிலவைச் சுற்றி பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.

அந்தப் பணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வெப்பக் கவசத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது சரி செய்யப்பட்டுள்ளன.

ஆர்டெமிஸ் 2 திட்டம்

ஆர்டெமிஸ் II ஏவுதலில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுவர பத்து நாள் பயணம் மேற்கொள்வார்கள். நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த ஜெரெமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17-க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கும் முதல் குழுவினர் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆர்டெமிஸ் II இன் தலைமைப் பயண இயக்குநர் ஜெஃப் ரடிகன், விண்வெளி வீரர்கள் இதுவரை யாரும் சென்றிராத அளவு தொலைவுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று விளக்கினார்.

"அவர்கள் நிலவுக்கு அப்பால் குறைந்தது 5,000 கடல் மைல்கள் (9,200 கி.மீ) பயணம் செய்வார்கள், இது முந்தைய பயணங்களைவிட மிக அதிகம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திட்டத்தின் நோக்கம்

நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ராக்கெட் மற்றும் விண்கலத்தின் அமைப்புகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

விண்வெளி வீரர்கள் ஓரியன் காப்ஸ்யூலில் நுழைவார்கள். இது அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு வீடாக இருக்கும். இது எஸ்எல்எஸ்-இன் உச்சியில் அமர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இது, இரண்டு திட ராக்கெட் பூஸ்டர்களின் உதவியுடன் புவி சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படும். அவை கனமான உந்துவிசையை அளித்த பின் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்துவிடும்.

ஏவப்பட்ட உடன் என்ன நடக்கும்?

ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டின் பிரமாண்டமான கோர் ஸ்டேஜ், இடைக்கால க்ரையோஜெனிக் உந்துவிசை அமைப்பு (Interim Cryogenic Propulsion System - ICPS) மற்றும் ஓரியன் விண்வெளி வீரர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும். ஓரியனின் சூரிய மின் தகடுகள் விரிந்து விண்கலத்தின் பேட்டரிகளுக்குச் சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் வழங்கத் தொடங்கும்.

தொண்ணூறு நிமிடங்களுக்குப் பிறகு ஐசிபிஎஸ் தனது என்ஜின்களை இயக்கி வாகனத்தை ஒரு உயர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும். அடுத்த 25 மணி நேரத்துக்கு ஒரு முழு அமைப்புகள் சரிபார்ப்பு நடைபெறும்.

எல்லாம் சரியாக இருந்தால், ஓரியன் ஐசிபிஎஸ்-இலிருந்து பிரிந்து செல்லும்.

விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு வாகனத்துடன் இணைக்கும் செயல்முறைகளை ஒத்திகை பார்க்க, ஓரியனின் நகர்வுக்கான உந்துகருவியை (Manoeuvring thruster) கட்டுப்படுத்தி ஐசிபிஎஸ்-ஐ நோக்கிச் செல்வார்கள்.

இருபத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஓரியனின் சேவை அமைப்பு ஒரு 'நிலவு நோக்கி உந்துதல் (TLI) எரியூட்டலை' நடத்தும் - இது விண்கலத்தை நிலவை நோக்கி குறிவைக்கும் ஒரு உந்துவிசையாகும். அதற்குப் பிறகு ஓரியன் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 2,30,000 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லும்.

பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அமைப்புகள் சரிபார்ப்புகளை மேற்கொள்வார்கள்.

ஆர்டெமிஸ் 2 திட்டம்

ஒரு வகையில், குழுவினர் சோதனை எலிகளாக இருப்பார்கள்.

அவர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் சோதனைகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் ரத்தத்திலிருந்து அவர்களின் பயணத்துக்கு முன்னும் பின்னும் பெறப்பட்ட திசு மாதிரிகளை அதாவது ஆர்கனோய்ட்ஸை, வளர்ப்பார்கள்.

விண்வெளி வீரர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஆர்கனோய்ட்ஸின் இரண்டு தொகுப்புகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் தெரிவித்தார்.

"எங்களிடம் அந்த விண்வெளி வீரர்களே இருக்கும்போது ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த மாதிரிகளின் மீது புவியீர்ப்பு விசை இல்லாத சூழல் மற்றும் கதிர்வீச்சின் விளைவை ஆழமாக ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். நான் நிச்சயமாக ஒரு விண்வெளி வீரருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை! ஆனால், இந்தச் சிறிய ஆர்கனோய்ட் மாதிரிகளை அறுத்து, வித்தியாசத்தை உண்மையில் பார்க்க முடியும்." என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

விண்கலம் நிலவைத் தாண்டி செலுத்தப்பட்டபின் பூமியின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் நான்கு நாள் பயணத்தைத் தொடங்குவார்கள்.

பூமியை வந்தடைந்ததும், விண்கலத்தின் முதன்மை உந்துவிசையமைப்பைக் கொண்ட சேவை அமைப்பு, குழு அமைப்பிலிருந்து பிரிந்துவிடும். விண்வெளி வீரர்கள் பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, கலிபோர்னியாவின் கடற்கரையில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள். இது பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாகும்.

ஓரியன் விண்கலத்திற்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை விண்வெளி உடைப் பொறியாளர்கள் விளக்குகிறார்கள்.

பட மூலாதாரம், NASA/Robert Markowitz

படக்குறிப்பு, ஓரியன் விண்கலத்துக்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை பொறியாளர்கள் (spacesuit engineers) விளக்குகிறார்கள், இவர்களே விண்வெளி வீரர்களுக்கான உயிர்காக்கும் கருவிகளை வடிவமைக்கின்றனர்.

இந்தப் பயணத்தின் வெற்றி, நாசா எப்போது ஆர்டெமிஸ் III-ஐ ஏவ முடியும் என்பதையும், உண்மையில் நிலவில் தரையிறங்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், இந்தப் பயணம் சரியாக நடந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக இல்லை" என்ற இலக்கு, ஓபன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமியோன் பார்பரின் கூற்றுப்படி, யதார்த்தமற்றது.

"'முன்னதாக இல்லை' என்பது நாசாவுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல்தான், அதற்கு அதுதான் அர்த்தம். அதுதான் மிக விரைவான சாத்தியமாக உள்ளது," என்று அவர் கூறினார். ஆர்டெமிஸ் III-ஐ சரியான பாதையில் வைத்திருப்பதற்கான செலவு காரணமாக அது கூட அதிக நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

"[ஈலோன் மஸ்க்கின்] ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் தேவைப்படும். சமீபத்திய மாதங்களில், பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைப் பயணத்தை அடையவே ஸ்டார்ஷிப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனும் நிலையில் விண்வெளி வீரர்களை அதில் அமர்த்துவது மிகவும் கடினம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czrpkd625m0o

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்டெமிஸ் 2: நாசாவின் நிலவுப் பயணம் எப்போது தொடங்கும்? விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?

ஆர்டெமிஸ் 2: நாசாவின் நிலவுப் பயணம் எப்போது தொடங்கும்? விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்,

  • அறிவியல் செய்தியாளர்

    மற்றும்

  • ஆலிசன் ஃபிரான்சிஸ்,

  • மூத்த அறிவியல் செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

இந்தப் பயணம், 'ஆர்டெமிஸ் 2' என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 10 நாட்கள் நீடிக்கும். இதில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், இதற்கு முன் எந்தவொரு மனிதரும் சென்றிராத அளவுக்கு விண்வெளியின் ஆழத்துக்குப் பயணம் செய்வார்கள்.

அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிக்கு, இந்தப் பயணம் அடித்தளம் அமைக்கும்.

ஆர்டெமிஸ் 2 எப்போது விண்ணில் ஏவப்படும்?

ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாள் இந்தப் பயணம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த பயணங்கள் தாமதமாயின.

2024 டிசம்பரில், அந்த மாத இறுதிக்குள் ஏவ வேண்டும் என்று நாசா காலக்கெடு நிர்ணயித்தது.

'வெட் டிரஸ் ஒத்திகை' எனப்படும் ஒரு சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பிப்ரவரி மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஏவுதல் ரத்து செய்யப்பட்டது.

ஏவுதள கோபுரத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான இணைப்பில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் கசிந்ததே இதற்குக் காரணமாக அமைந்தது.

அதேபோல, ஹீலியம் வாயுக் கசிவு கண்டறியப்பட்டதால், மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த முயற்சியும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, இந்தக் கோளாறுகளைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாமதத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு ஏற்ற வகையில், நிலவு விண்வெளியில் சரியான இடத்தில் அமைந்திருக்க வேண்டும்.

அதன் காரணமாக, ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சுமார் ஒரு வாரம் மட்டுமே ராக்கெட்டை ஏவுவதற்கான வாய்ப்பு அமைகிறது. அந்த ஒரு வார காலத்திற்குப் பிறகு, சுமார் மூன்று வாரங்களுக்கு ராக்கெட்டை ஏவுவதற்கான வாய்ப்புகள் ஏதும் அமைவதில்லை.

ஆர்டெமிஸ் -2: நாசாவின் நிலவுத் திட்டம் எப்போது ஏவப்படும்? அதில் யாரெல்லாம் செல்கிறார்கள்?

ஆர்டெமிஸ் குழு நிலவுப் பயணத்தின்போது என்ன செய்வார்கள்?

ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் பயணிக்கப் போகும் குழுவில் நான்கு பேர் உள்ளனர். அந்தக் குழுவில் நாசா தளபதி ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் ஆகியோரும், கனேடிய விண்வெளி மையத்தைச் சேர்ந்த இரண்டாவது திட்ட நிபுணரான ஜெரிமி ஹன்செனும் இருப்பார்கள்.

நாசாவின் பிரமாண்டமான எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தில் மனிதர்கள் பயணிக்கும் முதல் பயணமாக இது அமைகிறது.

விண்கலம் பாதுகாப்பாக சுற்றுப்பாதையை அடைந்தவுடன், ஓரியன் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். எதிர்கால நிலவு தரையிறக்கங்களுக்காக விண்கலத்தை வழிநடத்துவதற்கும் சீரமைப்பதற்கும் பயிற்சி செய்ய, விண்கலத்தை புவியின் சுற்றுப்பாதையில் குழுவினரே சுயமாக இயக்குவதும் இதில் அடங்கும்.

பின்னர் அவர்கள் ஓரியன் விண்கலத்தை பரிசோதிப்பதற்காக, நிலவையும் தாண்டி, விண்வெளியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு புள்ளிக்குப் பயணிப்பார்கள்.

எளிதாகக் கூறுவதெனில், விண்கலத்தில் உள்ள காற்றையும் நீரையும் வழங்கும் உயிர் ஆதரவு அமைப்பு, உந்துவிசை, மின்சாரத்தை வழங்கும் ஆற்றல் அமைப்பு, திசையை அறிந்து பாதுகாப்பாகப் பயணிக்க உதவும் வழிசெலுத்தல் அமைப்பு ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பதைச் சோதிப்பார்கள்.

விண்வெளி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுபவர்களாகவும் செயல்பட்டு, விண்வெளியின் நெடுந்தூரப் பகுதியில் இருந்து தரவுகளையும் படங்களையும் பூமிக்கு அனுப்புவார்கள்.

மேலும் ஈர்ப்பு விசையற்ற நிலையில் ஒரு சிறிய அறையில் அவர்கள் பணிபுரிவார்கள். பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இருக்கும் பகுதியைவிட கதிர்வீச்சு அளவுகள் அதிகமாக இருந்தாலும், பாதுகாப்பான அளவிலேயே இருக்கும்.

பூமிக்குத் திரும்பும்போது, விண்வெளி வீரர்கள் வளிமண்டலத்தின் வழியே ஒரு சீரற்ற பயணத்தை மேற்கொண்டு, பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் தரையிறங்குவார்கள்.

ஆர்டெமிஸ் 2 நிலவில் தரையிறங்குமா?

இல்லை. 2028இல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் 4 திட்டத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

அதற்கு முன்னதாக, நாசா 2027இல் ஆர்டெமிஸ் 3 என்ற மற்றொரு மனிதர்கள் பயணிக்கும் சோதனைப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம், ஓரியன் விண்கலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலவுத் தரையிறங்கிகளுடன் இணைவதை ஒத்திகை பார்க்கவும், புதிய விண்வெளி உடைகள் சரியான நேரத்தில் தயாராக இருந்தால் அவற்றைச் சோதித்துப் பார்க்கவும் முடியும்.

ஆர்டெமிஸ் திட்டத்திற்காக, ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு விண்கலம் என இரண்டு வர்த்தகத் தரையிறங்கிகளை நாசா தேர்வு செய்துள்ளது. எந்தெந்த விண்கலங்கள் எந்தெந்த திட்டங்களில் பயன்படுத்தப்படும் என்பது திட்டம் தொடங்கும் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ஆர்டெமிஸ் 4 இறுதியாக ஏவப்படும்போது, விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவத்தை நோக்கிச் செல்வார்கள்.

அதற்குப் பிறகு, நிலவில் மனிதர்கள் தொடர்ந்து தங்குவதற்கான திறனை மேம்படுத்தும் நோக்கில், 2028இன் பிற்பகுதியில் ஆர்டெமிஸ் 5 திட்டத்தின் மூலம் மற்றொரு நிலவுப் பயணத்தையும் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

அதோடு, ஆர்டெமிஸ் பயணங்கள், நிலவைச் சுற்றி வரக்கூடிய ஒரு சிறிய விண்வெளி நிலையமான கேட்வேவை உருவாக்கும். அதைத் தொடர்ந்து, பல நிலவுத் தரையிறக்கங்கள், கேட்வேவில் கூடுதல் தொகுதிகள் சேர்க்கப்படுதல், நிலவின் மேற்பரப்பை ஆராயப் புதிய ரோபோ ரோவர்கள் அனுப்பப்படுதல் ஆகிய செயல்பாடுகள் நடைபெறும்.

மேலும் பல்வேறு நாடுகள் இந்த முயற்சியில் இணையக்கூடும். இதன் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் நிலவிலும் அதைச் சுற்றியும் வாழ்ந்து பணியாற்றுவார்கள்.

ஆர்டெமிஸ் -2: நாசாவின் நிலவுத் திட்டம் எப்போது ஏவப்படும்? அதில் யாரெல்லாம் செல்கிறார்கள்?

கடைசி நிலவுப் பயணம் எப்போது நடைபெற்றது?

மனிதர்கள் கடைசியாக அப்பல்லோ 17 திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணித்தார்கள். அது 1972 டிசம்பரில் நிலவில் தரையிறங்கி, அதே மாதத்தின் பிற்பகுதியில் பூமிக்குத் திரும்பியது.

அப்பல்லோ திட்டத்தின்போது 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 12 பேர் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர். நிலவுக்குச் சென்ற 24 பேரில், ஐந்து பேர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர்.

அமெரிக்கா முதன்முதலில், 1960களில் சோவியத் யூனியனை தோற்கடித்து தனது புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் நிலவுக்குச் சென்றது. அந்த இலக்கு அடையப்பட்டவுடன், எதிர்கால நிலவுப் பயணங்களுக்கான நிதி குறைந்ததோடு, அரசியல் ஆர்வமும் மக்களின் ஈடுபாடும் குறைந்தன.

ஆர்டெமிஸ் திட்டம், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப வேண்டுமென்ற விருப்பத்தில் இருந்து உருவானது. ஆனால் இந்த முறை, புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட கால இருப்புக்கு உகந்த வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப பிற நாடுகள் திட்டமிட்டுள்ளனவா?

நிலவில் 2030களில் மனிதர்களைத் தரையிறக்க வேண்டுமென்ற லட்சியத்தை வேறு பல நாடுகளும் கொண்டுள்ளன.

ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் பிற்கால ஆர்டெமிஸ் திட்டங்களில் இணையவுள்ளனர். அதோடு ஜப்பானும் தனக்கான இடங்களைப் பெற்றுள்ளது.

சீனா நிலவுக்கு வீரர்களை அனுப்பத் தனது சொந்த விண்கலத்தை உருவாக்கி வருகிறது. 2030க்குள் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் நாடாகத் தரையிறங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி, 2030 முதல் 2035ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அங்கு ஒரு சிறிய தளத்தை அமைப்பது குறித்து தொடர்ந்து பேசிவருகிறது.

ஆனால் உண்மையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமாக அமையலாம். ரஷ்யா தற்போது சர்வதேச தடைகள், போதிய நிதியின்மை, தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம்.

இந்தியாவும் ஒரு நாள் தனது சொந்த விண்வெளி வீரர்கள் நிலவில் நடப்பத்கைக் காண வேண்டுமென்ற லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரோ சுமார் 2040ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டுமென்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தியா, பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால், விண்வெளியின் தொலைதூரப் பகுதிகளுக்கு மனிதர்களை அனுப்பி, அதற்கு அடுத்தபடியாக நிலவையும் அடைய விரும்புகிறது.

கூடுதல் தகவல்கள்: கெவின் சர்ச் மற்றும் எமிலி செல்வதுரை

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v6r11yk09o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.