Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன?

Shyamsundar IUpdated: Monday, October 13, 2025, 12:12 [IST]

Who is retired judge Ajay Rastogi who will lead the CBI investigation in TVK Vijay Karur Incident

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

Also Read

ஏமாற்றிவிட்டனர்.. நான் CBI கேட்கவில்லை! கரூர் சிறுவனின் தந்தை ட்விஸ்ட்! கோர்ட்டில் வாக்குமூலம்

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தீர்ப்புகளை வழங்கிய சஞ்சய் ரஸ்தோகி

2014ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த பதவி உயர்வு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

நீதிபதி அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கான தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றவர், உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

விஜய் தரப்பு வாதம் ஏற்பு.. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு இனி சிபிஐ கையில்! உச்சநீதிமன்றம் அதிரடி!

வழக்கு பின்னணி

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு கடந்த வாரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. அவரின் பெயரில் வழக்கு பதியப்பட்டது.

சிபிஐ விசாரணை வேண்டும் என்று இவர்கள் மனுதாக்கல் செய்தனர். இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு வாதம் வைத்தது. அதாவது அரசு நியமித்த SIT மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் SITஐ கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் இன்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/who-is-retired-judge-ajay-rastogi-who-will-lead-the-cbi-investigation-in-tvk-vijay-karur-incident-742699.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

  • கருத்துக்கள உறவுகள்

'கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

கரூர் கூட்ட நெரிசல், உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், Getty Images

13 அக்டோபர் 2025, 05:29 GMT

புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.

"இந்தப் பிரச்னைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானது. எனவே, இடைக்கால நடவடிக்கையாக விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்." என்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.

3 பேர் அடங்கிய குழு கண்காணிக்கும்

சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி, மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள்.

கரூர் கூட்ட நெரிசல், உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், Getty Images

சென்னை உயர் நீதிமன்ற செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

அரசியல் பேரணிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மட்டுமே கோரும் மனுவில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் ரிட் மனு, குற்றவியல் ரிட் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் மேற்படி மனுவை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் அதிகார வரம்பிற்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதியின் எந்த குறிப்பிட்ட அங்கீகாரமும் இல்லாமல், சென்னை உயர் நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஏற்றுக்கொண்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சென்னை அமர்வு அந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

தமிழக அரசுக்கு 8 வாரம் அவகாசம்

தவெக மற்றும் பிற தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுக்களிலும் மனுதாரர்கள் தங்களுக்குத் தெரியாமல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக அரசு சார்பில் வாதாடிய ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் அமர்விடம் தெரிவித்தனர். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய எட்டு வார கால அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மனுக்கள் விவரம்

கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது. தவெக மற்றும் விஜய் மீது உயர் நீதிமன்றம் தெரிவித்த பாதகமான கருத்துகளுக்கும் அந்த மனுவில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரியது.

விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அக்டோபர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு மற்ற மனுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

கரூர் கூட்ட நெரிசல், உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், TVK IT Wing Official/X

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த விதம் குறித்து வாய்மொழியாக உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. அரசியல் பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. கரூர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குள் வரும்போது சென்னையில் உள்ள முதன்மை அமர்வு எவ்வாறு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டது.

அதே இடத்தில் பாதை மிகவும் குறுகலானது என்று கூறி மற்றொரு கட்சியான அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 30-40 உடல்களின் பிரேத பரிசோதனை நள்ளிரவில் எப்படி செய்யப்பட்டது? அதிகாலை 4 மணிக்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கரூரில் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் இரவு சுமார் 7 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்தது.

('லைவ் லா' இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg43yk4ve0xo

  • கருத்துக்கள உறவுகள்

சி.பி.ஐ. விசாரணையில் கரூர் சம்பவம்: திமுகவுக்கு பின்னடைவா?

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படக்குறிப்பு, கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 27 நிமிடங்களுக்கு முன்னர்

கரூர் நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்குமென்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இது தவிர, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துவந்தது.

இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார்.

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடந்தபோது, மிகப் பெரிய நெரிசல் ஏற்பட்டு 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர நிகழ்வு விரைவிலேயே ஒரு அரசியல் புயலாக உருவெடுத்தது.

இந்த மக்கள் சந்திப்பில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த தகவல் வெளியாகிவந்த நிலையிலும் த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் இருந்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் சென்னைக்குச் சென்றதும் பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ஆனால், இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டவுடன் தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் உடனடியாக அங்கே வந்தது எப்படி என த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் கேள்வியெழுப்பினர்.

அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் வெவ்வேறு பரிமாணங்களை எடுத்தது. இந்த நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று த.வெ.கவினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதுசெய்யப்பட்டார்.

வருவாய்த் துறை செயலர் பி. அமுதா தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விவகாரம் நடந்த விதம் குறித்து விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் சாலைகளில் ரோட் ஷோக்களை நடத்துவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பதால், இதுபோன்ற கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டுமென உத்தரவிட்டது.

இதையடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அவர்கள் தலைமறைவாக இருந்தனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சென்றுவிட்டார்.

இதன் காரணமாக, இந்த சம்பவத்தை ஒட்டி விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்றைத் தவிர, த.வெ.க. தரப்பின் சார்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை வலுவாக முன்வைக்க ஆட்களே இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. தரப்பின் கோரிக்கையையும் உள்ளடக்கி வெளியாகியிருக்கும் தீர்ப்பு, அக்கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்

பட மூலாதாரம், CONSTANDINE RAVINDRAN

படக்குறிப்பு,"அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம்" - கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்

ஆனால், இந்த தீர்ப்பினால் எந்தவிதத்திலும் தமிழ்நாடு அரசுக்கோ, தி.மு.கவிற்கோ பின்னடைவு இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்.

"இந்தத் தீர்ப்பை ஒரு அரசியல் பின்னடைவாக பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் துவக்கத்திலிருந்தே இந்த விவகாரத்தை நாங்கள் அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. அப்படி அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம். கட்சியே முடங்கிப்போயிருக்கும்.

மாறாக நாங்கள் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்தே அணுகினோம். 41 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு அந்த அரசியல் கட்சியின் பொறுப்பின்மை காரணமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்தோம்.

ஒரு விசாரணை அமைப்பிடமிருந்து இன்னொரு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்ற வேண்டுமென்றால் அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். காலதாமதம், வழக்கு தடம்புரள்வது, அரசியல் ஆதாயத்திற்காக துணை போவதாக வழக்கு கொண்டுசெல்லப்படுவது போன்ற காரணங்கள் இருந்தால்தான் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்படும்.

ஆனால், இந்த வழக்கில் அப்படிக் காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. மேலும், கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இருக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், எல்லா தமிழ் அதிகாரிகளும் அறம் இல்லாதவர்களா? இதில் எந்த வகையிலும் தி.மு.கவுக்கு பின்னடைவு இல்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

ஆனால், அரசியல் கருத்துருவாக்கத்தில் இந்தத் தீர்ப்பு தி.மு.கவுக்கு ஒரு பின்னடைவாக அமையாதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக இல்லை. இந்த விவகாரத்தின் எந்தத் தருணத்திலும் முதலமைச்சர் துவங்கி, யாருமே இந்த வழக்கை அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. ஒரு தருணத்திலும் தனிப்பட்ட முறையில் விஜய்யையோ, அந்தக் கட்சியையோ விமர்சித்துப் பேசியதில்லை. எங்களைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் நீதி வழங்கும் மன்றங்களாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் மன்றங்களாக இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.

ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு என்கிறார் விஜயன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு என்கிறார் விஜயன்.

மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவசரப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்கிறார். "இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்றோ, விஜய் தரப்பு தவறு செய்துவிட்டது என்றோ சொல்லவரவில்லை. ஆனால், ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு.

விசாரணையில் பாரபட்சமிருந்தால், வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். காரணம், சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலங்களின் வசம் உள்ள ஒரு விவகாரம். ஆகவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது மிக அரிதாகத்தான் நடக்கும். தவிர, சி.பி.ஐயைப் பொறுத்தவரை நிதி மோசடி போன்ற விவகாரங்களில்தான் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

இதுபோன்ற விவகாரங்களில் அவர்களுக்கு போதிய ஆள் பலமும் கிடையாது, பெரிய வெற்றிகளையும் பெற்றது கிடையாது. நான் தாக்கப்பட்ட வழக்கிலேயே சி.பி.ஐயால் வழக்கை நிரூபிக்க முடியவில்லை. ஒரு விசாரணை அமைப்பு விசாரணையைத் துவங்குவதற்கு முன்பே இப்படி வழக்கை மாற்றுவது அவசரமான செயல்பாடு" என்கிறார் கே.எம். விஜயன்.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

பட மூலாதாரம், Vijayan

படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

ஆனால், இந்த விவகாரம் தி.மு.கவுக்கு பின்னடைவாக இல்லாவிட்டாலும் சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். "இந்த வழக்கில் பல கேள்விகள் இருக்கின்றன. யாரும் கேட்காமலேயே அருணா ஜெகதீசன் ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சி.பி.ஐ. ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றொரு பக்கம் விசாரணைகளை நடத்தியது. காரணம், சி.பி.ஐயின் நோக்கமும் ஆணையத்தின் நோக்கமும் வெவ்வேறு.

அப்படியிருக்கையில் ஏதற்காக இந்த உத்தரவு எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படலாம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென செந்தில் பாலாஜியை அழைக்கலாம். தவிர, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சதியால்தான் நெரிசல் நடந்தது என ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு உதவும்" என்கிறார் ப்ரியன்.

எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார் தவெக கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்.

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார் தவெக கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை இதில் அரசியல் ரீதியாக இதில் எதையும் சொல்லவிரும்பவில்லை. வழக்கின் தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இதில் எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார்.

"கரூர் சம்பவத்தில் நிறைய மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு நீதி விசாரணை வேண்டுமெனக் கேட்டோம். வேறு சிலர் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமெனக் கேட்டார்கள்.

உச்ச நீதிமன்றம் இரு கோரிக்கைகளையும் இணைத்து ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தால் எங்களுக்கு அரசியல் ரீதியாக சாதகம் ஏற்பட்டிருக்கிறதா என்பதெல்லாம் நாங்கள் பேச விரும்பவில்லை. இதை வைத்து எந்த அரசியல் ஆதாயமும் நாங்கள் தேட விரும்பவில்லை" என்கிறார் அவர்.

ஆனால், தமிழ்நாடு அரசும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவைத்தானே அமைத்தது, அதனை எதிர்த்தது என்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண் ராஜ், "அரசியல் கூட்டங்களை நடத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த நெரிசல் விவகாரம் தொடர்பாக வருவாய்த் துறைச் செயலர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்த பிறகு, பணியில் உள்ள ஒரு அதிகாரி அதனைத் தாண்டிச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. அதனால்தான் அந்த விசாரணைக் குழுவை ஏற்க முடியவில்லை" என்கிறார் அருண்ராஜ்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பா.ஜ.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றுள்ளன. ஆனால், நாம் தமிழர் கட்சி இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. "சிபிஐ விசாரணை என்பது ஏற்புடையதல்ல. அது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு காவல் துறை விசாரணையில் என்ன குறை இருக்கிறது?" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2emdj8gx9vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

சி.பி.ஐ. விசாரணையில் கரூர் சம்பவம்: திமுகவுக்கு பின்னடைவா?

இதில் எந்த தவெக ஆட்கள் மீதும் கொலை குற்றம் சுமத்தபட முடியாது.

ஆனால் - சதி என்பது நிருபணமானால் - பல திமுக தலைகள் உருளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ் இட்?🤣

இஸ் தட் இட்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.