Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 18 அக்டோபர் 2025

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை சமாளித்து இந்தியா இந்தத் தொடரை வெல்வதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் என்னென்ன?

1. ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய கோலி மற்றும் ரோஹித் அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை.

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது இந்தத் தொடர் மீது வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் இந்திய ஜெர்ஸியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதேசமயம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்கள் மண்ணில் சமாளிக்க இந்த இரண்டு சீனியர் வீரர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படியிருக்கும்போது பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் அடங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு கூட்டணி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

அந்த சவால்களை சமாளிக்க கோலி மற்றும் ரோஹித் இருவரின் அனுபவமும் முக்கியம். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியில் இருவரும் ஆடியிருக்கிறார்கள். அதை அவர்கள் தொடரும்பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கும்.

அதேசமயம் கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. கடைசி 4 போட்டிகளில் கோலி 85 ரன்கள் மட்டும் அடித்திருக்க, விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரோஹித். அந்த செயல்பாட்டை மறக்கடிக்கும் வகையில் கோலியும், ரோஹித்தும் விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

2. புதிய கேப்டன் ஷுப்மன் கில்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பு கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையில் ஓர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 2027 உலகக் கோப்பையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவர் மீது நிச்சயம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அதேசமயம் டெஸ்ட் கேப்டனாக அவரது பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கில் தலைமையில் சமன் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த செயல்பாடுகள் அவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

மறுபக்கம் கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பும் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் இளம் கேப்டனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால், தான் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார் கில்.

ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். வீரர்களின் ஸ்லெட்ஜிங் மட்டுமல்லாமல், ரசிகர்களை சமாளிப்பதும்கூட ஒரு பெரிய சவால் தான். அதுபோன்ற தருணங்களில் கேப்டனாக கில் எடுக்கும் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்‌ஷர் படேல், "ஷுப்மன் கில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் நெருக்கடியை தனக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு தலைவருக்கான மிக முக்கிய குணம் அது" என்று கூறியிருந்தார். அதை இந்தத் தொடர் முழுவதும் கில் வெளிப்படுத்துவது அவசியம்.

3. பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு குழு

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும்.

வேலைப்பளுவை சரியாகக் கையாள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பௌலரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடியிருந்தார்.

2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடர் நாயகனான பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். அதனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகரிக்கும். அதிரடி காட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு எதிராக இந்த பௌலர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

முகமது சிராஜ் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மூவரில் இருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம். அவர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும்.

குறிப்பாக ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் மீது அனைவரின் கவனமும் இருக்கும். பயிற்சியாளர் கம்பீரின் தயவால் தான் அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார் என்று சமீபத்தில் பேசப்பட, அதை சில தினங்கள் முன் கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். அப்படியிருக்கும்போது ஹர்ஷித் ராணாவின் ஒவ்வொரு அசைவுமே பேசுபொருளாக்கப்படும். இதுவும் அந்த இளம் வீரருக்குக் கூடுதல் நெருக்கடி கொடுப்பதாக அமையலாம்.

பிரசித், அர்ஷ்தீப் ஆகியோருக்கும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்ற தேவை இருப்பதால், அதுவும் உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம்.

இந்த அனைத்து சவால்களையும் சமாளித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கவேண்டும்.

4. துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான்.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றுவது பற்றித்தான் டீம் மீட்டிங்கில் விவாதித்தோம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவரது விக்கெட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த இறுதிப் போட்டியில் அவர் டக் அவுட் ஆனதில் இருந்துதான் இந்தியா பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் சீரான செயல்பாட்டை அவர் கொடுத்துக்கொண்டிருப்பதும், எந்தவித பந்துவீச்சையும் அவர் நன்றாக எதிர்கொள்வதும் அதற்கான முக்கியக் காரணங்கள். கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் சிறப்பு வியூகம் வகுப்பார்கள். அதனால் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இப்போது துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் அது ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு நிச்சயம் தலைவலியாக அமையும்.

5. நித்திஷ் குமார் ரெட்டியின் இன்னொரு அறிமுகம்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ்.

மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்துக்கு நித்திஷ் ரெட்டியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் நித்திஷை அனைத்து ஃபார்மட் வீரராக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதனால் இப்போது ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

காரணம் 2023 உலகக் கோப்பையின் பிற்பகுதியில் ஹர்திக் இல்லாததால் அந்த ஒரு இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என இரண்டு வீரர்களை இந்தியா பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை மறுபடியும் வராமல் இருக்க அதேபோல் இன்னொரு வீரரையும் வளர்த்தி வைத்திருப்பது அவசியமாகிறது.

இந்த வாய்ப்பை நித்திஷ் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கும் மிகவும் அவசியம். அந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடம் சரியாக நிரப்பப்பட்டால் அணியின் காம்பினேஷனில் தேவையான மாற்றங்களை செய்ய கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒரு கூடுதல் ஸ்பின்னரை பயன்படுத்தவும் அது உதவலாம். அதனால் அவரது அறிமுகம் மீதும் அதிக கவனம் இருக்கும்.

தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். இப்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் அறிமுகத்திலும் அவர் ஜொலித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly4g8jzwqgo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா Vs இந்தியா: பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி - தோல்விக்கான முக்கிய காரணங்கள்

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா.

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைப்படி மாற்றப்பட்ட 131 என்ற இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அடைந்தது ஆஸ்திரேலியா.

பெர்த் நகரிலுள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இது இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ஷுப்மன் கில்லுக்கு முதல் போட்டி.

சொற்ப ரன்களில் அவுட்டான கில், ரோஹித்

கில் 10 ரன்களும், ரோஹித் 8 ரன்களும் சேர்த்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கில் 10 ரன்களும், ரோஹித் 8 ரன்களும் சேர்த்தனர்.

ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா இருவரும் ஓப்பனர்களாகக் களமிறங்கினார்கள். முதல் பந்திலேயே தன் ரன் கணக்கைத் தொடங்கிய ரோஹித், சில பெரிய ஷாட்கள் அடிக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தார். மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் இருவரின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவரால் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஹேசல்வுட் வீசிய பந்தை சரியாகக் கணிக்க முடியாத ரோஹித், இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முந்தைய பந்துகளை வெளியே வீசிக்கொண்டிருந்த ஹேசல்வுட், நான்காவது பந்தை கொஞ்சம் பின்னால் பிட்ச் செய்ததோடு மட்டுமல்லாமல், லைனையும் சற்று உள்ளே கொண்டுவந்தார். ஹேசல்வுட்டின் வழக்கமான பௌன்ஸ் ரோஹித்துக்கு அதிர்ச்சியளித்தது. அவர் தன்னுடைய பேட்டை விலக்க முடியாமல் போக, பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றிந்த மேட் ரென்ஷா கையில் தஞ்சமடைந்தது. 14 பந்துகளை சந்தித்த ரோஹித் 8 ரன்கள் எடுத்தார்.

கோலி டக்-அவுட்

8 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆனார் விராட் கோலி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 8 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆனார் விராட் கோலி.

ரோஹித்துக்கு அடுத்து களமிறங்கிய கோலியாலும் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. முதல் 7 பந்துகளிலும் ரன் எடுக்க முடியாத அவர், எட்டாவது பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார். ஸ்டார்க் வீசிய பந்து ஸ்டம்ப் லைனுக்கு வெளியே நன்கு சென்றது. அதைத் துரத்திச் சென்று கோலி அடிக்க, பாயின்ட் திசையில் நின்றிருந்த கூப்பர் கானலி பாய்ந்து கேட்ச் செய்தார். 8 பந்துகளை சந்தித்து ரன்னே எடுக்க முடியாமல் வெளியேறினார் விராட் கோலி.

இரண்டு சீனியர் வீரர்கள் வெளியேறிய அதிர்ச்சியில் இருந்த இந்திய அணிக்கு 9வது ஓவரில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நாதன் எல்லிஸ் வீசிய முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார் புதிய கேப்டன் ஷுப்மன் கில். அவர் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களில் அவுட் ஆக, 45/4 என மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி.

மழையால் பாதித்த ஆட்டம்

போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது.

பெர்த் நகரில் மழை அடிக்கடி ஆட்டத்தை பாதித்தது. அதனால் போட்டி அடிக்கடி நிறுத்தப்படுவதும், மீண்டும் தொடங்குவதும், மீண்டும் நிறுத்தப்படுவதுமாகவே சென்றது. இதனால் ஓவர்களும் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. ஆரம்ப கட்ட தடைகளுக்குப் பின் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டம், மேலும் தொடர்ந்த மழையில் கடைசியில் 26 ஓவர் ஆட்டமாக மாறியது.

மழை ஒருபக்கம் தன் வேலையைக் காட்டிக்கொண்டிருக்க, ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்கள். சரியான இடத்தில் பந்துவீசி ரன் எடுப்பதை கடினமாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல், கேப்டன் மிட்செல் மார்ஷ் எடுத்த சில முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தன.

உதாரணமாக, 12வது ஓவரில் ஏற்பட்ட மழை தடங்கலுக்குப் பிறகே ஆட்டம் 35 ஓவர் கொண்டதாக மாறிவிட்டது. அதனால் ஒரு பௌலர் அதிகபட்சமாக 7 ஓவர்கள் தான் பந்துவீச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் ஸ்பெல்லில் ஓரேயடியாக 6 ஓவர்கள் பந்துவீசியிருந்த ஹேசல்வுட்டை 14வது ஓவரும் எடுத்து வந்தார் மார்ஷ். அதுவே இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட்டின் கடைசி ஓவராக அமைந்திருக்கும். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயரைக் குறிவைத்து, அவர் விக்கெட்டை எடுக்க மிகவும் தைரியமான அந்த முடிவை எடுத்தார். அதற்குப் பலனாக அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேசல்வுட்.

அதேவேகத்தில் மிட்செல் ஸ்டார்க்கையும் விடாமல் பயன்படுத்தினார் அவர். தடுமாறிக்கொண்டிருந்த இந்திய பேட்டர்களை தன்னுடைய பௌலர்கள் மூலம் மேலும் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தார். மிகவும் அட்டாகிங் கேப்டன்சியாகக் கருதப்பட்டாலும், ஆட்டத்தின் சூழ்நிலை உணர்ந்து அவர் செய்த செயலுக்கு தொடர்ந்து பலன் கிடைத்தது. வல்லுநர்களும் அவருடைய முடிவுகளை வெகுவாகப் பாராட்டினார்கள்.

ராகுல் - அக்‌ஷர் பார்ட்னர்ஷிப்

அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் சேர்த்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் சேர்த்தார்.

அந்த 4 விக்கெட்டுகள் வேகமாக போனதால், ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல், அக்‌ஷர் பட்டேல் இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே அடித்தார்கள். போட்டி 26 ஓவர்களாகக் குறைந்த பின்னர், ரன் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடித்து ஆடத் தொடங்கினார்கள். அதன் விளைவாக, 31 ரன்கள் எடுத்திருந்த அக்‌ஷர் பட்டேல் மேத்யூ கூனமென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் கே.எல்.ராகுல் மற்றும் நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் அடித்த சில பௌண்டரிகளால் இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தன் அறிமுக போட்டியில் ஆடிய நித்திஷ் குமார் ரெட்டி 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசல்வுட், கூனமென், மிட்செல் ஓவன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இலக்கு மாற்றம்

டிஎல்எஸ் முறைப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிஎல்எஸ் முறைப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. 26 ஓவர்களில் 131 என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எப்போதுமே சவால் கொடுப்பவரான டிராவிஸ் ஹெட்டை இரண்டாவது ஓவரிலேயே வெளியேற்றி நம்பிக்கை கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். ஆனால், அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.

மேத்யூ ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தைக் காட்டினார். ஷார்ட் வெளியேறியதும் மார்ஷ் உடன் இணைந்து சிறப்பாக ஆடி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் ஜாஷ் ஃபிலிப். அவருக்கு அடுத்து வந்த அறிமுக வீரர் ரென்ஷாவும் எளிதாக பேட்டிங் செய்து ரன் சேர்த்தார். இந்திய தரப்பில் அவர்களுக்கு பெரிய சவால்களைக் கொடுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியாவின் ஆட்டம்

மிட்செல் மார்ஷ் 48 ரன்கள் விளாசினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிட்செல் மார்ஷ் 48 ரன்கள் விளாசினார்.

இந்திய பௌலர்களில் மொஹம்மது சிராஜ், அக்‌ஷர் பட்டேல் இருவரும் மட்டுமே ஓரளவு சிக்கனமாகப் பந்துவீசினார்கள். மற்ற வீரர்கள் அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் வாரி வழங்கினார்கள். அதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் 21.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா.

மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடனும், ரென்ஷா 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய பௌலர்களில் அர்ஷ்தீப், அக்‌ஷர், வாஷிங்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங், கேப்டன்சி இரண்டிலும் அசத்திய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கேப்டன் கில் பேசியது என்ன?

ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது என்றார் கேப்டன் கில்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது" என்றார் கேப்டன் கில்.

தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கில், "ஆஸ்திரேலியாவில் ஆடுவது எப்போதுமே கடினமானது. பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழக்கும்போது நீங்கள் எப்போதுமே பின்தங்கிவிடுவீர்கள். இந்தப் போட்டியில் சில சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன, சில படிப்பினைகளும் கிடைத்திருக்கின்றன. 26 ஓவர்களில் 130 ரன்களை டிஃபண்ட் செய்யும்போது ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது" என்று கூறினார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் அக்டோபர் 23ம் தேதி நடக்கிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clygkjnezz9o

  • கருத்துக்கள உறவுகள்

கோலின்ட‌ விளையாட்டு ச‌ரியே இல்லை

இர‌ண்டு விளையாட்டிலும் ப‌டு சுத‌ப்ப‌ல் , இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி வெளிய‌ போனார்..............................

  • கருத்துக்கள உறவுகள்

😁.................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ரை அவுஸ்ரேலியா வென்று விட்ட‌து

தொட‌க்க‌ம் ந‌ல்லா இருந்தா தான்

விளையாட்டில் வெற்றி பெற‌ முடியும் , அனுப‌வ‌ வீர‌ர் கோலி தொட‌ர்ந்து சுத‌ப்பின‌தால் இந்தியா தோல்வி..........................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியணியின் மும்மூர்த்திகளுக்கு (ரோகித், கோலி, கில்) அவுஸ்ரேலியாவின் உயிர்ப்பான ஆடுகளம் சவாலக இருக்கிறது (ரோகித இந்த போட்டியில் ஒரு மாதிரி சமாளித்து விட்டார் அதிர்ஸ்ரமும் இருந்தது).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவுக்கு தொடர்ச்சியான வெற்றி

Published By: Vishnu

23 Oct, 2025 | 08:30 PM

image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, தொடரை தனதாக்கிக் கொண்டுள்ளது.

2410_rohit_sharma_ind_vs_aus.png

பேர்த் விளையாட்டரங்கில் சில தினங்களுக்கு முன்னர் மழை காரணமாக அணிக்கு 26 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் வெற்றியீட்டி இருந்தது.

2410_mathew_short__aus_vs_ind.png

அடிலெய்ட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றியீட்டி ஒரு போட்டி மீதம் இருக்க தொடரைக் கைப்பற்றியது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் சிரேஷ்ட நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராத் கோஹ்லி பூஜ்ஜியத்துடன் ஆட்டம் இழந்தார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 73 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 61 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பின்வரிசையில் ஹர்ஷித் ரானா ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்க்ளைப் பெற்றார்.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சேவியர் பாட்லட் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 46.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதில் மெத்யூ ஷோட் 74 ஓட்டங்களையும் கூப்பர் கொனொலி 61 ஓட்டங்களையும் மிச்செல் ஒவென் 36 ஓட்டங்களையும் மெட் ரென்ஷோ 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/228499

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவோமா?' - புதிய மைல்கற்களை எட்டிய கோலி, ரோஹித் பேசியது என்ன?

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 121 மற்றும் 74 ரன்கள் எடுத்து 168 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணியை வெற்றிபெற உதவினர்.

25 அக்டோபர் 2025

புதுப்பிக்கப்பட்டது 26 அக்டோபர் 2025

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இருப்பினும், இத்தொடரின் முந்தைய இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றதால், தொடரை அந்த அணி வென்றுள்ளது.

இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 69 பந்துகள் மீதமிருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் ஷர்மா சதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா- விராட் கோலி அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் குவித்தது.

தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள்

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிட்செல் மார்ஷ்

இந்த ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்த குல்தீப் யாதவ் இம்முறை அணியில் இடம்பெற்றார். நித்திஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இப்போட்டியில் ஆடவில்லை. அந்த இடத்தில் குல்தீப் களமிறங்கினார். அதேசமயம் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதில் பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்களாகக் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். முதல் 3 ஓவர்களில் 9 ரன்கள் எடுத்திருந்தவர்கள், அதன்பின் மெல்ல ரன் வேகத்தை அதிகரித்தார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய 7வது ஓவரில் மார்ஷ் சிக்ஸரும், ஹெட் பௌண்டரியும் அடித்து ரன் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள்.

6.3 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ஹெட், சிராஜ் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் அளித்து அவுட் ஆனார். 25 பந்துகளை சந்தித்த அவர் 29 ரன்கள் எடுத்தார்.

ஹெட் வெளியேறியபிறகு மிட்செல் மார்ஷ் அதிரடியைத் தொடர்ந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே பந்துவீசிய குல்தீப் ஓவரிலும் ஓவருக்கு ஒரு பௌண்டரி அடித்தார். அவரை சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அக்‌சர் வீசிய பந்தை சரியாகக் கணிக்க முடியாமல் மார்ஷ் போல்டானார். அவர் 50 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்களை கடந்தது.

டாப் ஆர்டர் பேட்டர்கள் ஆரம்பத்தில் நன்கு ரன் சேர்த்தனர். அனைவருக்குமே ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும், அவர்களால் அதைப் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. மேட் ரென்ஷா மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடி அரைசதம் (56 ரன்கள்) அடித்தார்.

மிடில் ஆர்டரும், லோயர் மிடில் ஆர்டரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாததால் 46.4 ஓவர்களிலேயே 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா.

அக்‌ஷர் பட்டேல்- வாஷிங்டன் சுந்தரின் 'ஸ்பெல்'

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்‌ஷர் பட்டேல்

இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தாலும் இந்திய அணியை இந்தப் போட்டியில் நல்ல நிலைக்குக் கொண்டுவந்தது அக்‌சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் இணைந்து வீசிய ஸ்பெல் தான்.

ஆரம்பத்தில் மிகவும் நம்பிக்கையாகவும் அதிரடியாகவும் ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முட்டுக்கட்டை போட்டது இந்த இரு ஸ்பின்னர்களும் தான். இவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியால் தான் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 6 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து மிட்செல் மார்ஷின் மிக முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார் அக்‌சர் .

மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா என நன்கு ஆடிக்கொண்டிருந்த இரண்டு பேட்டர்களை வெளியேற்றினார் வாஷிங்டன் சுந்தர். பிரசித், சிராஜ், குல்தீப் ஆகியோரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

முதலிரு போட்டிகளிலும் தோற்றிருந்த இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய 237 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ரோஹித்- கோலி பார்ட்னர்ஷிப்

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் ஷர்மாவுக்கு இது 33வது ஒருநாள் சதமாகும்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில்லும், ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ஆடி வந்த நிலையில், 10வது ஓவரில் அலெக்ஸ் கேரி வீசிய பந்தில், ஹேசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுப்மன் கில்.

அவர் 26 பந்துகளில், 1 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என 24 ரன்கள் எடுத்திருந்தார். முதல் விக்கெட்டுக்கு சுப்மன் கில்- ரோஹித் ஜோடி 69 ரன்களை எடுத்திருந்தது.

அதன் பின், விராட் கோலி களமிறங்கினார். முந்தைய இரு போட்டிகளிலும் கோலி ரன் ஏதும் எடுக்காமல் 'டக்- அவுட்' ஆகியிருந்தார்.

முதலில் தடுமாறிய கோலி, விரைவாக மூன்று பவுண்டரிகளை அடித்து, நிலைத்து நின்று ஆட தொடங்கினார். மறுபுறம், ரோஹித்தும் அதிரடியாக விளையாடிய நிலையில், இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் தடுமாறினர்.

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 121 மற்றும் 74 ரன்கள் எடுத்து 168 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணியை வெற்றிபெற உதவினர்.

இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், 38.3 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் ஷர்மாவுக்கு இது 33வது ஒருநாள் சதமாகும். தொடர்ச்சியாக டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றிவந்த கோலி, அதிலிருந்து மீண்டு தனது 75வது ஒருநாள் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் இந்தப் போட்டியில் 7 பவுண்டரிகள் அடித்திருந்தார்.

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலி, தனது 75வது ஒருநாள் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இந்தியா- ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் விளையாடப் போகிறார்கள் என்ற செய்தி வெளியானதும், அது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த எதிர்பார்ப்பை இந்தப் போட்டியில் தான் ரோஹித்- கோலி ஜோடி பூர்த்தி செய்துள்ளது.

ஆஸ்திரேலியே அணி 2-1 என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை வெல்ல, இந்திய அணி இந்த போட்டி மூலம் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

முதலிரு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்யும்போது தடுமாறிய அவர், சேஸிங் என்று வந்ததும் தன் சிறந்த செயல்பாட்டைக் காட்டிவிட்டார். சிட்னி போட்டியில் அரைசதம் கடந்த கோலி, ரன் சேஸ்களில் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்தவர் பட்டியலில் சச்சினை முந்தி முதலிடம் பிடித்தார் கோலி. ரன் சேஸ்களில் இதுவரை 70 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்திருக்கிறார் விராட்.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் குமார் சங்கக்காராவை முந்தினார் கோலி. இப்போது 14255 ரன்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் ரோஹித் அடித்த சதம், சர்வதேச போட்டிகளில் அவரது 50வது அரைசதமாக அமைந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இருவருமே இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து (168 ரன் பார்ட்னர்ஷிப்) இந்த ரன்களை அடித்தார்கள். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இருவரும் இணைந்து 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

"எப்போதும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவதை விரும்புகிறேன். 2008ஆம் ஆண்டின் இனிமையான நினைவுகளை மறக்க முடியாது. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவோமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் எந்தமாதிரியான பாராட்டுகளைப் பெற்றாலும், கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்," என்று போட்டிக்குப் பிறகு ரோஹித் கூறினார்.

விராத் கோலி பேசுகையில், "தொடர்ச்சியான டக் அவுட்களில் இருந்து மீண்டு வந்தது நல்லது. ரோஹித்துடன் பேட்டிங் செய்வது எளிது, இது போட்டியை வெற்றியோடு முடிக்கும் ஒரு ஆட்டமாக அமைந்ததில் மகிழ்ச்சி. ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டோம். அப்படித்தான் வெற்றி பெற முடியும். இந்த நாட்டிற்கு வருவதை நாங்கள் எப்போதும் விரும்புவோம்." என்று கூறினார்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், "நாங்கள் மிகச்சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். மிடில் ஓவர்களில் நிலைமையை சரிசெய்தோம். நமது அணியின் 'சேஸ்' (Chase) பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. மிடில் ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர், வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்ஷித் மிடில் ஓவர்களில் வேகமாக பந்து வீசினார், அது தான் எங்களுக்குத் தேவை. ரோஹித், கோலி இத்தகைய ஆட்டத்தை பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வருகின்றனர். மீண்டும் ஒருமுறை அதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி." என்று கூறினார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 202 ரன்கள் எடுத்து, 'தொடரின் நாயகன்' பட்டமும், மூன்றாவது போட்டியில் அடித்த சதத்திற்காக 'ஆட்ட நாயகன்' விருதையும் வென்றார் ரோஹித் சர்மா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp3xne62xyqo

  • கருத்துக்கள உறவுகள்

கோலி இர‌ண்டு மைச்சில் சுத‌ப்பி மூன்றாவ‌து விளையாட்டில் ந‌ல்லா விளையாடி இருந்தார்.............ரோகித் மற்றும் கோலி அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை வ‌ரை விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம் தான்...............அதுவ‌ரை விளையாடினால் ம‌கிழ்ச்சி..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

Nov 2, 2025 - 06:28 PM

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

Hobartயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக Tim David 74 ஓட்டங்களையும், Marcus Stoinis 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Arshdeep Singh 03 விக்கெட்டுக்களையும், Varun Chakravarthy 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

பின்னர் 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Washington Sundar ஆட்டமிக்காமல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

இதன்படி 05 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் இந்திய அணியும் அவுஸ்திரேலிய அணியும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.

https://adaderanatamil.lk/news/cmhhpw39u01cwqplpcv76i4ty

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்திய இந்திய அணி; அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர் அபாரம்

ஆஸ்திரேலியா - இந்தியா டி20

பட மூலாதாரம், Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் சர்வதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) ஹோபர்ட் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எட்டியது இந்திய அணி. இதன்மூலம் இந்தத் தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் ஆடியிருந்த சஞ்ச சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஜித்தேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டியில் இடம்பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட்டுக்குப் பதிலாக ஷான் அபாட் இடம்பெற்றார்.

முதலில் டேவிட் அதிரடி

முதல் முறையாக இந்தத் தொடரில் வாய்ப்பு பெற்ற அர்ஷ்தீப் சிங் நான்காவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். 6 ரன்கள் எடுத்திருந்த அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் ஓவரிலேயே பெரிய விக்கெட்டை வீழ்த்திய அர்ஷ்தீப், அவர் வீசிய அடுத்த ஓவரில் ஜாஷ் இங்லிஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதனால் 14/2 என ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

இந்நிலையில் கேப்டன் மிட்செல் மார்ஷ் உடன் கைகோர்த்தார் டிம் டேவிட். தான் சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசிய அவர், அந்த அணுகுமுறையையே தொடர்ந்தார். மறுபக்கம் மிட்செல் மார்ஷ் நிதானமாக விளையாடினார். டேவிட் ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது அடித்துக்கொண்டிருந்ததால் ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது. அதோடு அவர்களின் ரன்ரேட்டும் முன்னேற்றம் கண்டது.

ஆஸ்திரேலியா - இந்தியா டி20

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 38 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார் டிம் டேவிட்

ஸ்பின், வேகம் என அனைத்து விதமான பந்துவீச்சையும் சிறப்பாக எதிர்கொண்ட டிம் டேவிட், 23 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதேசமயம் 9வது ஓவர் வீசவந்த தமிழ்நாட்டு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்செல் மார்ஷை வெளியேற்றிய அவர், அடுத்த பந்திலேயே மிட்செல் ஓவனை போல்டாக்கினார். ஆஸ்திரேலியா 73/4 என்ற நிலைக்குச் செல்ல அது அவர்களுக்குப் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டேவிட் உடன் இணைந்து அந்த எண்ணத்தை மாற்றினார் அடுத்து களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்.

அடுத்ததாக ஸ்டாய்னிஸ் அதிரடி

ஷிவம் துபே வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி தன் அதிரடியைத் தொடங்கினார் ஸ்டாய்னிஸ். முதலில் 'ஷார்ட் லென்த்தில்' வீசப்பட்ட பந்தை சிக்ஸராக்கிய அவர், ஃபுல் டாஸாக வீசப்பட்ட அடுத்த பந்தையும் எல்லைக்கோட்டு வெளியே அனுப்பினார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக சென்றுகொண்டிருந்த அந்த ஓவரின் கடைசிப் பந்தில் எதிர்பாராத விதமாக டேவிட் அவுட் ஆனார். பெரிய ஷாட் அடிக்க அவர் முற்பட, லாங் ஆஃப் திசையில் நின்றிருந்த திலக் வர்மாவிடம் கேட்சானார். ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய அவர், 38 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் அவர் 8 ஃபோர்களும், 5 சிக்ஸர்களும் அடித்தார்.

ஆஸ்திரேலியா - இந்தியா டி20

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் அதிரடியால் கடைசி கட்டத்தில் ரன் விகிதத்தை அதிகப்படுத்தினார் ஸ்டாய்னிஸ்

அவர் அவுட்டானாலும், ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார் ஸ்டாய்னிஸ். டேவிட்டைப் போல் ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது வரும் வகையில் அவர் ஆடினார்.

அபிஷேக் ஷர்மா வீசிய 16வது ஓவரில், ஒரு ஃபோரும் ஒரு சிக்ஸரும் அடித்து மேத்யூ ஷார்ட்டும் தன் அதிரடியைத் தொடங்கினார்.

அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் 3 ஃபோர்கள் அடித்த ஸ்டாய்னிஸ், 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த அவர், கடைசி ஓவரில் அர்ஷ்தீப் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச கொடுக்கப்படவில்லை.

சிறிய அதிரடி இன்னிங்ஸ்கள்

187 என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள்.

தன் வழக்கமான அதிரடி பாணியையே கடைபிடித்த அபிஷேக் மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கினார். ஷான் அபாட் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் 4, 6, 4 என 14 ரன்கள் எடுத்தார் அவர். தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தியவர் நாதன் எல்லிஸ் வீசிய நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். 16 பந்திகளில் 25 ரன்கள் எடுத்த அவர் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியா - இந்தியா டி20

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அபிஷேக், கில், அக்‌ஷர் என 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் எல்லிஸ்

அவர் மட்டுமல்லாது இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவருமே அதே பாணியில் சிறிது நேரம் அதிரடியாக ஆடி அவுட் ஆகிச் சென்றனர்.

துணைக் கேப்டன் சுப்மன் கில் 15 ரன்களில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில், அக்‌ஷர் பட்டேல் 17 ரன்களில் வெளியேறினர். 11.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அந்த நான்கில் 3 விக்கெட்டுகளை நாதன் எல்லிஸே கைப்பற்றியிருந்தார். எல்லோரும் பெரிய இன்னிங்ஸைக் கட்டமைக்க முடியாமல் வெளியேறியிருக்க, அடுத்து வந்த தமிழ்நாட்டு வீரர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடினார்.

'பேட்டிங்கில்' கலக்கிய வாஷிங்டன் சுந்தர்

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங்கில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஷிவம் துபே, ஜித்தேஷ் ஷர்மா ஆகியோருக்கு முன்பாக ஆறாவது வீரராகவே அவர் களமிறக்கப்பட்டார். அந்த வாய்ப்பையும் அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் வாஷிங்டன். ஸ்பின்னர் கூனமன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ஃபோர் அடித்தார். ஷான் அபாட் வீசிய 14வது ஓவரில் தன் அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் அவர். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஃபோர் அடித்த அவர், அடுத்த இரு பந்துகளிலுமே சிக்ஸர் விளாசினார். அதனால் இந்திய அணி இலக்கை நோக்கி விரைந்தது.

ஆஸ்திரேலியா - இந்தியா டி20

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பந்துவீச வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பேட்டிங்கில் கலக்கினார் வாஷிங்டன் சுந்தர்

திலக் வெளியேறிய பின்னர் (29 ரன்கள்) களமிறங்கிய ஜித்தேஷ் வாஷிங்டன் உடன் இணைந்து சிறப்பாக விளையாட, இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. 23 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடன் (3 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அர்ஷ்தீப் ஆட்ட நாயகன்

இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பௌலர் அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த செயல்பாடு பற்றிப் பேசிய அவர், "நான் என் திறன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து உழைக்கிறேன். உங்களை ஒரு பேட்டர் அட்டாக் செய்து ஆடும்போது விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றொரு முணையில் இருந்து ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீசியதும் எனக்கு உதவிகரமாக இருந்தது. நான் என்னவெல்லாம் பயிற்சி செய்தேனோ அதை நடைமுறைப்படுத்த நினைக்கிறேன் அவ்வளவுதான்" என்று கூறினார்.

ஆஸ்திரேலியா - இந்தியா டி20

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் தொடரில் கிடைத்த முதல் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார் அர்ஷ்தீப் சிங்

இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என சமநிலையை எட்டியிருக்கிறது. முதல் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்தத் தொடரின் நான்காவது போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் வரும் ஆறாம் தேதி நடக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpd26vj43lxo

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ஸ்ச்சின்ட‌ன் சுந்த‌ரின் அதிர‌டி ஆட்ட‌த்தால் இந்தியா வெற்றி

குல்டிப்பை விளையாட‌ விட்டு இருந்தால் இந்தியா மீண்டும் தோத்து இருக்க‌ கூடும்

மூன்று கிரிக்கேட் விளையாட்டிலும் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு வாய்ப்பு கொடுக்க‌னும்👍........................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரின் ப‌ந்து வீச்சும் அருமை

ம‌ட்டைய‌டியும் அருமை.................ம‌ன‌துக்கு பிடிச்ச‌ வீர‌ர் ந‌ல்லா விளையாடும் போது அது பெருத்த‌ ச‌ந்தோச‌த்தை த‌ருது ம‌ன‌துக்கு..............................

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் க‌ட‌சி போட்டி கைவிட‌ப் ப‌ட்ட‌ இந்தியா தொட‌ர‌ஒ 2-1 என‌ வென்று விட்டின‌ம்

ஒரு நாள் தொட‌ரில் தோல்வி

20ஓவ‌ர் போட்டியில் வெற்றி..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலிய டி20 தொடர்: இந்தியாவின் சோதனை முயற்சிகளுக்கு கிடைத்த பலன் என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மற்றும் கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட, 2-1 என தொடரை வென்றது சூர்யகுமார் யாதவின் அணி.

ஹோபர்ட்டில் மூன்றாவது போட்டியில் 186 ரன்களை சிரமம் இல்லாமல் சேஸ் செய்த இந்தியா, கோல்ட் கோஸ்ட்டில் நடந்த நான்காவது போட்டியில் 49 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிகளில் பேட்டிங், பௌலிங் இரண்டு பிரிவும் சிறப்பாக செயல்பட்டிருந்தன. மெல்போர்னில் இந்தியா தோற்றபோது, பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது.

இந்தத் தொடரில் நிறைய வீரர்களை, நிறைய காம்பினேஷன்களை இந்திய அணி முயற்சி செய்து பார்த்தது. பலதரப்பட்ட திறன் கொண்ட வீரர்கள் நல்ல பங்களிப்பைக் கொடுத்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

"வெவ்வேறு திறமைகள் கொண்ட வீரர்களை அணியில் கொண்டிருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். எல்லோரும் ஒவ்வொரு திறனை அணிக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் அணிக்கு நல்ல உத்வேகத்தைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் ஒன்றாக மைதானத்துக்குள் போவதை மக்கள் ரசிக்கிறார்கள்" என்றார் சூர்யா.

திருப்தியளிக்கும் பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங் தனக்கு ரொம்பவும் திருப்தியளிப்பதாகக் கூறினார் சூர்யகுமார் யாதவ்.

"பேட்டிங்கைப் பொறுத்தவரை கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம். எதையும் மாற்றவில்லை. வீரர்கள் அதை மிகவும் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். டாப் ஆர்டரில் அவர்கள் பேட்டிங் செய்யும் விதம் அனைவருக்கும் சந்தோஷம் கொடுக்கிறது" என்றார் சூர்யா.

டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியாக ஆடும் அனுகுமுறையைக் கையில் எடுத்திருந்தது இந்திய அணி. அதை அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணிலும் தொடர்ந்தனர். அதனால் அது ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இந்திய பெரிய ரன்கள் எடுப்பதில் டாப் ஆர்டர் கொடுக்கும் நல்ல தொடக்கம் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.

இந்தியா - ஆஸ்திரேலியா - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடர் நாயகன் விருது வென்றார் அபிஷேக் ஷர்மா

குறிப்பாக இடது கை பேட்டர் அபிஷேக் ஷர்மா தன் அதிரடியை ஆஸ்திரேலியாவிலும் அப்படியே தொடர்ந்து நல்ல தாக்கம் ஏற்படுத்தினார்.

இந்தத் தொடரில் 163 ரன்கள் எடுத்து அவர் தொடர் நாயகன் விருதும் வென்றார். ஒவ்வொரு போட்டியிலும் எந்த ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும், பந்தை பௌண்டரிக்கு அடிப்பதையே உறுதியாகக் கொண்டிருந்தார் அபிஷேக். இந்தத் தொடரில் 161.38 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார் அவர்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அவருக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்பட்டிருந்த நிலையில், அவர் அதை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இதுபற்றி தொடர் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அபிஷேக், "இங்கு கூடுதல் வேகம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால், அணியின் பக்கமிருந்து யோசித்தபோது நான் என்னுடைய ஆட்டத்தை அப்படியே தொடரவேண்டும் என்று திட்டமிட்டேன். ஏனெனில், ஒரு ஓப்பனராக உங்களின் பங்கு என்ன என்பது உங்களுக்கு எளிதாகப் புரிந்துவிடும்" என்று கூறினார்.

மேலும், தன் அணுகுமுறைக்கு கேப்டனும், பயிற்சியாளரும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணம் என்றும் அவர் சொன்னார்.

"அதேசமயம் நீங்கள் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைத்தால், அதற்கான திறனும் நம்பிக்கையும் இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் கேப்டனும் பயிற்சியாளரும் எனக்கு தொடர்ந்து ஆறுதல் கொடுத்திருக்கிறார்கள். நான் இதற்காக தீவிரமான பயிற்சி மேற்கொண்டேன். ஏனெ`னில், ஆஸ்திரேலியாவுக்கு வந்து அவர்களை வைட் பால் போட்டிகளில் வீழ்த்துவது என்பது எளிதல்ல. ஆசிய கோப்பைக்கு முன்பிருந்து என்ன மாதிரி ஆடினோமோ அதே வகையான ஆட்டத்தையே நான் விளையாட நினைத்தேன்" என்றார் அவர்.

கில் மீதான கேள்விகளும் பதில்களும்

அபிஷேக் ஒருபக்கம் அதிரடியாக ஆடியபோது அவருடைய சக ஓப்பனரான கில்லின் ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமாக இருந்தது. சில போட்டிகளில் ரன் எடுக்க நேரம் எடுத்துகொண்ட அவர், ஓரிரு போட்டிகளில் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். அவர் மெதுவாக ஆடிய போட்டிகளில் அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதை முன்வைத்து கேப்டன் சூர்யாவிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "அவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பு சிறப்பாக இருக்கிறது. நன்றாக விக்கெட்டுக்கு இடையே ஓடுகிறார்கள். ஆம், ஆட்டத்தில் மொத்தம் 120 பந்துகள்தான். ஆனால், சில நேரங்களில் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் இருக்கும். சில சமயங்களில் அவர்கள் சூழ்நிலைகளை அறிந்துகொள்ள கூடுதலாக நான்கைந்து பந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், பின்னால் அதற்கு ஈடுகட்டும் திறன் அவர்களுக்கு இருக்கிறது" என்று கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில போட்டிகளில் அதிரடி காட்டிய கில், ஒருசில ஆட்டங்களில் நிதானமாக ஆடியிருக்கிறார்

கில்லுடைய ஆட்டத்தைப் பற்றி தன் யூ-டியூப் சேனலில் பேசிய இந்திய முன்னாள் ஓப்பனர் ஆகாஷ் சோப்ரா, "கில் நன்றாக விளையாடிய 2 போட்டிகளிலுமே துருதிருஷ்டவசமாக மழை வந்துவிட்டது. கான்பெராவில் நடந்த முதல் போட்டியில் நன்றாக ஆடினார், இந்த ஐந்தாவது போட்டியிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், மழையால் அவரால் அதை பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியவில்லை" என்று குறிப்பிட்டார்.

இந்தத் தொடரில் கில் ஸ்டிரைக் ரேட் போட்டி வாரியாக: 185, 50, 125, 117.94, 181.25

ஒருநாள் கேப்டனாக கில்லின் அறிமுகம், டி20 பேட்டிங் என அனைத்தையும் குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, "இந்த சுற்றுப்பயணம் அவருடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக நிறைய கேள்விகளைத்தான் எழுப்பியிருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறிகள் எதுவும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்" எனக் கூறினார்.

இந்த டி20 தொடருக்கு முன் கில் தலைமையில் ஒருநாள் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 1-2 என ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

சஞ்சு சாம்சன் இடம் என்ன?

இந்தத் தொடர் எழுப்பியிருக்கும் பெரும் கேள்விகளில் ஒன்று சஞ்சு சாம்சனின் இடம் என்ன என்பது.

"பெரிதாக எழுந்து கொண்டிருக்கும் கேள்வியெனில், சஞ்சு சாம்சனை என்ன செய்யப்போகிறோம் என்பதுதான். அவர் விளையாடாதது மிக மிக மிக பெரிய கேள்வியை எழுப்புகிறது. அவர் அபாரமாக ஆடினார் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நன்றாக ஆடியிருக்கிறார். ஆசிய கோப்பையில் மிடில் ஆர்டரிலிருந்து ஓமனுக்கு எதிராக டாப் ஆர்டரில் அனுப்பினார்கள், அங்கும் அவர் அரைசதம் அடித்தார்" என்று தன் யூ-டியூப் வீடியோவில் கூறியிருந்தார் ஆகாஷ் சோப்ரா.

இந்தியா - ஆஸ்திரேலியா - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் தொடரில் முதலிரு போட்டிகளில் மட்டுமே சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது

ஓப்பனராக ஆடிக்கொண்டிருந்த சாம்சன், சுப்மன் கில் துணைக் கேப்டன் ஆன பிறகு மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். ஆசிய கோப்பையில் ஐந்தாவது வீரராக ஆடினார். இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆக, அடுத்த போட்டிகளில் அவருக்குப் பதிலாக ஜித்தேஷ் ஷர்மாவைக் களமிறக்கியது இந்திய அணி. மூன்றாவது போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்து போட்டியை முடித்துக்கொடுத்ததால், அவரை ஃபினிஷராக இந்திய அணி பிரதானப்படுத்துகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள்.

சாம்சனின் இடம் இப்போது கேள்விக்குறியாகி இருப்பதால் பலரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதுபற்றி தன் யூ-டியூப் சேனலில் பேசிய முன்னாள் இந்திய வீரர் மொஹம்மது கைஃப், "ஜித்தேஷ் ஷர்மாவை இந்திய அணி சாம்சனை விட நல்ல ஃபினிஷராகப் பார்க்கிறது. சுப்மன் கில்லை எதிர்கால கேப்டனாகக் கருதுவதால் ஓப்பனர் இடத்திலும் சாம்சனால் ஆட முடியவில்லை. அவர் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால், பேட்டிங் பொசிஷனைப் பொறுத்து இப்போது வீரர்களைத் தேர்வு செய்வதால் அவருக்குப் பிரச்னை" என்று கூறியிருக்கிறார்.

சாம்சனுக்குப் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதது பலதரப்பட்ட கருத்துகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆல்ரவுண்டராக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர்

இந்தியா - ஆஸ்திரேலியா - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூன்றாவது போட்டியில் பேட்டிங்கிலும், நான்காவது போட்டியில் பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்தார் வாஷிங்டன்

இந்தத் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு 3 போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக ஹோபர்ட்டில் களம் கண்டவருக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை. ஆனால், அடுத்த இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய வந்தவர், அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

நான்காவது போட்டியிலுமே அதே அதிரடி பாணியைக் கடைப்பிடித்து 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 8 பந்துகளே வீசிய அவர், 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.

'அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்'

இந்திய அணியின் பந்துவீச்சை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா எளிதாக எதிர்கொண்டுவிட்டது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியிலும் நல்ல முன்னேற்றம் கண்டது இந்திய அணி. குல்தீப், துபே இருவரும் தாங்கள் பந்துவீசியபோது நிறைய ரன்கள் கொடுத்தனர். ஆனால், அவர்களும் கூட விக்கெட்டுகள் எடுத்துக்கொடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் வருண் சக்ரவர்த்தி

அணியின் பௌலிங் பற்றிப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பந்துவீச்சைப் பொறுத்தவரை எல்லோருமே பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். பும்ரா போன்ற ஒரு அனுபவ பௌலர் இருக்கும்போது, அனைவரும் அவரிடம் பேசுகிறார்கள், நிறைய கற்றுக்கொள்கிறார்கள். அது மிகவும் நல்ல விஷயம். அதனால் அணிக்குள் ஒரு நல்ல நட்பும் உருவாகிறது" என்று கூறினார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தத் தொடரில் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஒருசில கேள்விகளும் எழுந்திருக்கின்றன. கேப்டன் சூர்யா கூட "எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்ற நிலை கிடையாது. நாங்கள் அதை அடைய முயற்சி செய்கிறோம். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலிருந்தும் கற்றுக்கொள்கிறோம். இதுவரை எல்லாம் சிறப்பாகவே செல்கிறது. இது தொடரும் என்று நம்புவோம்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2dr2ljjp2ro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.